அவருக்குப்பதிலாக இவர்
கம்பர் மகன் அம்பிகாபதியாக, அவையின் நடுவிலே, இளமையான, பால் வடியும் முகத்துடன் நடிகர் திலகம் அமர்ந்து 'சிந்தனை செய் மனமே' என்றும் 'வடிவேலும் மயிலும் துணை' என்றும் பாடும்போது, TMS நடிகர் திலகத்தின் உடலுக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருந்தார் . அந்தப்பாடலுக்கு நடிகர் திலகத்தின் முகபாவமும் உடல் மொழியும் இருக்கிறதே, அது எந்தவிதமான ரசிகர்களையும் மயங்கவைக்கும். குறிப்பாக 'நினைத்து நினைத்து கவி மழை தொடுத்த தமிழ்மாலை தனை ' என்னும் வரியில், அந்த 'நினைத்து நினைத்து' என்பதற்கு கையை நீட்டித் தலையை சற்றே ஆட்டி .......ஆஹா! கர்நாடக சங்கீத விற்பன்னர்கள் தோற்றுவிடுவார்கள். சிவாஜி மட்டும் கர்நாடக சங்கீத பாடகராயிருந்தால் இன்றைய குத்துபாட்டு ரசிகர்கள் அனைவரும் ஒரே இரவில் கர்நாடக சங்கீத ரசிகர்களாகி விடுவார்கள்.
பின்னர் சுசீலாவின் 'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடலுக்கு TMS வெறும் ஹம்மிங் மட்டுமே செய்வார். அதையும் எமது நடிப்புச் சக்கரவர்த்தி மிகவும் style ஆக 'ம்ம்...' என்று தலையை ஆட்டி அசத்துவார். 'நீயும் நானுமா' வில் 'ஆ?' என்று கேட்டுவிட்டு கோபத்துடன் கண்ணனின் படத்தைப்பார்ப்பது...என்று இப்படி எத்தனையோ பாடல்களுக்கு உயிரூட்டம் கொடுத்திருக்கிறார் எமது நடிகர் திலகம். எதைச் சொல்வது.. எதை விடுவது?
ஆனால் .....பின்வரும் பாடல்களையும் கேளுங்கள்:
வீடுவரை உறவு.....
குத்துவிளக்கெரிய.....
தமிழுக்கும் அமுதென்று.......
செல்லக்கிளியே மெல்லப்பேசு........
TMS இன் இந்த இனிய பாடல்களைக் கண்களை மூடிக்கொண்டு கேட்கும்போது அவை எம்மை வேறு உலகத்துக்கு அழைத்துச்செல்லும். கேட்கும்போது மட்டும் தான். இவற்றைப்பார்க்கும்போதும் பரவசப்படுத்துவதற்கு அதில் நம்மவர் இருந்திருந்தால்????ம்ம்ம்ம்ம்ம்ம்....... பெருமூச்சு விட்டுக்கொள்ளவேண்டியது தான்.
பாதகாணிக்கை படத்தை எப்போதோ தொலைக்காட்சியில் பார்க்கும்வரையில் 'வீடுவரை உறவு' சிவாஜிக்கான பாட்டுத்தான் என்று எண்ணியிருந்தேன். பார்த்ததும் 'சப்'பென்று ஆகிவிட்டது. 'போனால் போகட்டும் போடா' வையும் 'சட்டி சுட்டதடா'வையும் கலக்கியவர் இந்த பாடலையும் எப்படி கலக்கியிருப்பார்?
'குத்துவிளக்கெரிய' என்னவொரு romantic ஆன பாட்டு! அதைப்போய் ........... இதில் மட்டும் சிவாஜி-தேவிகா இருந்திருந்தால்?? எங்கேயோ போயிருக்குமே! குறிப்பாக 'பக்கத்தில் பழமிருக்க' என்ற வரிகளைப்பாடிவிட்டு TMS ஒரு அசைவு கொடுக்கும்போது, நடித்தவர் வாயை என்ன செய்வதென்று தெரியாமல் 'சுயிங்கம்' மெல்லுவது போல அசைப்பார், மனதுக்கு கஷ்டமாகவிருக்கும். சிவாஜியாகவிருந்தால் அப்பாடலை தூக்கிச்சாப்பிட்டிருந்திருப்பார்.
'தமிழுக்கும் அமுதென்று' நடிகர் திலகத்தின் வாயிலிருந்து வந்திருந்தால் எம் தமிழுக்கே இன்னும் பெருமை கூடியிருக்கும். 'செல்லக்கிளியே மெல்லப்பேசு' வின் பாசத்துக்கு வலிமை கூடியிருக்கும்.