வீரபாண்டிய கட்டபொம்மனைத் தூக்கிலிடுவத
http://cdnw.vikatan.com/jv/2013/07/m...images/p8a.jpg
வரலாற்று ஆதாரத்தின் அடிப்படையில்தான் அந்தக் காட்சி அமைக்கப்பட்டது. கட்டபொம்மன் மீதான விசாரணையை நடத்தியது பானர்மேன் என்ற பிரிட்டிஷ் அதிகாரி. 1799-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் நாள் இந்த விசாரணை நடந்தது. மறுநாள் பிரிட்டிஷ் அரசுக்கு பானர்மேன் ஒரு கடிதம் அனுப்பினார். அதில், 'குழுமியிருந்த பாளையக்காரர்கள் முன்னிலையில் நேற்று நடத்தப்பட்ட விசாரணை நேரம் முழுவதும் அந்த பாளையக்காரர் (கட்டபொம்மன்) நடந்துகொண்ட விதத்தை இங்கே விவரிப்பதில் தவறில்லை என்று கருதுகிறேன். அஞ்சாநெஞ்சனாக மிகவும் உன்னதமான பெருமிதத்துடன் நடந்துகொண்டார். அவரைச் சிறைப்பிடிப்பதில் முனைப்புடன் செயல்பட்ட எட்டையபுரம் பாளையக்காரரை முறைத்துப் பார்த்தபடி இருந்தார். சிவகிரி பாளையக்காரர் மீது சினங்கொண்ட வெறுப்பை வீசினார். தண்டனையை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்றபோது மன உறுதியுடன் துணிச்சலோடு நடந்து சென்றார். அவ்வாறு நடந்து சென்றபோது தனக்கு இடப் புறமும் வலப் புறமும் கண்ணில்பட்ட பாளையக்காரர்கள் மீது வெறுப்புக் கனலை உமிழ்ந்தார். தண்டனை நிறைவேற்றப்பட இருந்த இடத்துக்குச் செல்லும் வழியில் தனது ஊமைச் சகோதரர் ஊமைத்துரையை எண்ணி வருந்தியதாகவும் அவர் தூக்கிலிடப்பட இருந்த மரத்தடியை அடையும்போது தனது கோட்டையைக் காக்கும் முயற்சியில் அங்கேயே இறந்திருந்தால் சிறப்பாக இருக்குமே என்று மனம் வெம்பியதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது’ என்று அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார் பானர்மேன்.
இந்தக் காட்சிகளுக்கு முன்னால் பேசிய பானர்மேன், 'பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்ப்பவர்கள் அனைவருக்கும் இந்தக் கதிதான் ஏற்படும்’ என்று சொல்லியவர். அவரே இப்படி ஒரு கடிதம் அனுப்பினார் என்றால், கட்டபொம்மன் சினிமாவில் பார்த்தது உண்மையான வரலாற்றுப் பதிவுதான்.