Originally Posted by
kalnayak
அற்புதமான விவரங்கள், நிகழ்ச்சிகள் என்று எல்லோரும் தந்து கொண்டே இருக்கிறீர்கள். என்னால் அலுவலகப்பணியில், இடையிடையே எப்போதாவது வந்து படித்து செல்ல முடிகிறதேயன்றி பங்களிக்க முடியவில்லை. மன்னிக்கவும். KCSekhar சார் என்னுடைய தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் தங்களுக்கு. பல நாட்கள் கழித்து நீண்ட நேரம் செலவழித்து ....
ஞாயிறு (26/08/12) இரவுக்காட்சியாக 'சன் லைப்' - ல் 'பலே பாண்டியா' பார்க்க நேர்ந்தது. இந்த படத்தைப் பற்றி பலர் அங்குலம் அங்குலமாக பல விதத்தில் அலசிவிட்டார்கள் இங்கே. எண்ணற்ற முறை நான் பார்த்து இருந்தாலும் இம்முறை பார்த்தபின் என் எண்ணத்தில் எழுந்தவைகள் இதோ...
திரு B. R. பந்துலு இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர். குறிப்பாக கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தனது அழுத்தமான முத்திரைப் படங்களை கொடுத்தவர். நடிகர் திலகத்துடன் இணைந்து பிரமாண்டமான, வித்தியாசமான, அற்புதமான பல படங்களை கொடுத்தவர். நடிகர் திலத்தின் முத்திரைப் படங்களாகவும் அவை அமைந்திருந்தன. இருவரும் பிரிந்து சென்றது தமிழ் திரையுலகிற்கே பேரிழப்பு.
பதினோரு நாட்களில் இப்படியொரு உயர்தரமான படத்தை கொடுக்க இப்படியொரு குழுவால் மட்டுமே சாத்தியம். (நடிகர் திலகம், நடிக வேள், தேவிகா, மெல்லிசை மன்னர்கள், கவியரசர், B. R. பந்துலு). நடிகர் திலகத்தின் நடிப்பை இந்த படத்தில் என்று இல்லை, எந்தப் படத்திலும் அற்புதம், அட்டகாசம், பிரமாதம், ஆஹா, ஓஹோ என்று நான் காட்சிவாரியாக சிலாகித்து சொல்வதில்லை. ஏனென்றால் 'சூரியன் கிழக்கில் தோன்றுகிறது. மேற்கில் மறைகிறது' என்ற கூற்றுகளில் எந்த தகவலும் (Information) இல்லையோ அது போல அந்த கூற்றுகளிலும் எந்த தகவலும் இருக்காது. இருந்தாலும் பலரைப்போல் என் மனதை மிகவும் கவர்ந்த சில காட்சிகள்... குறும்பு கொப்பளிக்கும் காதல் காட்சிகள் (தேவிகா அண்ணி ரசிகர் மன்றம் சாட்சி), 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்' பாடல் காட்சிகள், அதுமுடிந்து மாமனாரை கண்டு அஞ்சுவது, அவரும் கபாலியும் வேறு வேறு ஆட்கள் என காணுவது, மற்றும் படத்தின் இறுதி காட்சிகளில் ரவுடி மருதுவும், விஞ்ஞானி சங்கரும் பாண்டியன் போல வேடம் போடுவதும் நகைச்சுவைக்கு உச்சக்கட்டங்கள். ரவுடி மருது, கபாலியிடம் 'பாஸ்', 'பாஸ்' என்றே அழைப்பதுவும், மதராஸ் தமிழிலேயே உரையாட வந்து தவிப்பதுவும், விஞ்ஞானி சங்கர் ஆங்கிலம் கலந்த கீச்சுத்தமிழில் உரையாட வருவதை தவிர்த்து பாண்டியன் போல இயல்பான தமிழ் பேச முயற்சி எடுப்பதையும் பின்னி எடுத்திருப்பார். படம் பார்ப்பவர்களுக்கு எந்த கதாபாத்திரம் எப்படி மாற முயற்சிக்கிறது என்பது தெளிவாக இருக்கும் என்பதால் நகைச்சுவை உற்சாகம் கரைபுரண்டோடும். இதற்கு பின்னர் வந்த பல படங்களில் கூட பலர் செந்தமிழில் உரையாடி இருப்பார்கள். ஆனால் 1962-ல் வந்த இந்தப்படத்தில் எல்லோரும் (ரவுடி மருது - மதராஸ் தமிழிலும், சங்கர் ஆங்கிலம் அதிகம் கலந்த தமிழிலும்) இயல்பான தமிழில் பேசி இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார்கள். உடன் வந்து கலக்கிய நடிகவேளை நான் குறிப்பிடாவிட்டால் எனது எண்ணவோட்டங்கள் முடிவு பெறாது. ஆனால் இவரை சிலாகித்து பேசுவதிலும் தகவல் இராது. ஆமாம் நடிகர் திலகமும், நடிக வேளும் மற்ற சிலரும் தங்கள் திரைப்படங்களில் சரியாக நடிக்கவில்லை என்று சொன்னால்தான் பிரமாண்டமான தகவல் இருக்கும். நகைச்சுவைக்கேற்ற நல்ல கதைதான். Logic-உம் சரியாகவே இருந்தது ஆனால்... பாலாஜி, தேவிகாவிற்கு முறை மாமன்/மாப்பிள்ளை. எனவே பாண்டியனுக்கு அண்ணன்/தம்பி முறை. அவரே பாண்டியனின் தங்கை வசந்தாவை மணப்பது சற்று சிரமமாய் இருந்தது. யாரோ அங்கே என்னை முறைப்பது தெரிகிறது. நிறுத்திகொள்கிறேன்.
இந்த படத்தின் பாடல்கள் தொலைக்காட்சி மற்றும் FM ரேடியோ நிகழ்ச்சிகளில் எங்கேயாவது ஒளிபரப்பாகிகொண்டேதான் இருக்கின்றன. பார்த்தால் அல்லது கேட்டால் சற்றே நிறுத்தி கண்டு அல்லது கேட்டு விட்டுத்தான் செல்ல முடியும் 'வாழ நினைத்தால்', 'அத்திக்காய் காய்', 'ஆதிமனிதன் காதலுக்குப்பின்', 'நான் என்ன சொல்லிவிட்டேன்', 'நியே உனக்கு என்றும்', 'யாரை எங்கே வைப்பது' போன்ற சாகா வரம் பெற்ற பாடல்களைப் பற்றி சொல்ல நான் இன்னும் பல கற்றுக்கொள்ளவேண்டும்.
'பலே பாண்டியா' என்ற சொற்றொடர் மஹாகவி பாரதி பிரயோகித்ததாக புதிய 'பலே பாண்டியா' (2010) திரைப்படத்தின் இயக்குனர் சித்தார்த் சந்திரசேகர் சொல்லி இருந்தார். இந்த புதிய படத்திலும் பாண்டியன் என்ற கதாநாயகன் படத்தின் துவக்கத்தில் தற்கொலை செய்ய முயற்சி செய்வது போன்ற காட்சி இருக்கும். அது மட்டுமே இரு படங்களுக்கும் தொடர்பு. மற்றபடி இது மறுவாக்கம் (ரீமேக்) அல்ல. பழைய புகழ் பெற்ற படங்களின் பெயர்களை வைக்காதீர்கள் என்று என்ன சொன்னாலும் தற்போதைய திரைப்படத்துறையினர் கேட்பதாகவே இல்லை. படத்தின் பெயரிலுருந்தே copy துவங்குகிறது. 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்' பாடல் காட்சியை 'உள்ளதை தா' என்று அள்ளி கபளீகரம் செய்திருந்தார்கள். தனது திரைப்படங்களை (தங்கமலை ரகசியம், ஸ்கூல் மாஸ்டர் (கன்னட) ) மாற்று மொழிகளில் அந்த மொழிகளின் பிரதான நடிகர்களை வைத்து இயக்கிய திரு. B. R. பந்துலு இந்த படத்தை மற்ற மொழிகளில் எடுத்தாரா என தெரிந்தவர்கள் யாரேனும் கூறினால் நல்லது.
சமீபத்தில் கூட யாரோ ஒருவர் நடிகர் திலகத்தின் படங்களை அறிமுகம் செய்யுங்கள். அவருடைய 'கனத்த' கதையம்சம் நிரம்பிய படங்களை பின்பு பார்க்கிறேன். அதற்கு முன் 'light-hearted' படங்களை அறிமுகம் செய்யுங்கள் என்றபோது மற்றொருவர் இந்த படத்தைப் பாருங்கள் என்று கூறியது மிகவும் பொருத்தமானது. நடிப்பின் பாடங்களைக் கற்றுகொள்ள நல்லதோர் நகைச்சுவைப் படம்.
அன்புடன்.