கோலாலம்பூரில் குட்டி பாப்பா
இதோ வந்துட்டேன்.. கொஞ்சம் லேட்டாயிடிச்சி.. ஹி ஹி..
இந்த பயணக் கட்டுரை மலேசியா, அதிலும் முக்கியமாக கோலாலம்பூர் செல்பவர்களுக்கு எந்த அளவுக்கு உதவியாக இருக்கும் என்று தெரியவில்லை. ஆனாலும் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் ஒரு சில மட்டுமாவது யாருக்காவது உதவினால் இதை எழுதிய பலன் கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சி அடைவேன்.
இனி கோலாலம்பூருக்கு / மலேஷியாவுக்கு பெட்டியைக் கட்ட ஆரம்பிக்கலாம்.
"எதையும் தள்ளிப் போடாதீங்க. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. செய்ய வேண்டும் என்று நினைத்தால் உடனே செய்து விடுங்கள்"
இது நம்ம NOV anna சொன்னது.
கொஞ்சம் குழப்பத்துடன் நான் இருந்த சமயம். ஜூலை மாதம் எங்கேயாவது வெளியூர் செல்லலாம் என்று நினைத்திருந்தபோது அண்ணனுடன் மூஞ்சி புத்தகத்தில் உரையாடிக் கொண்டு இருந்தேன். அப்போது மலேஷியா பற்றி பேச்சு வந்தப்போ அங்கே வந்து ஊர் சுற்றிப் பார்க்க முடியுமா என்று கேட்டேன். ஏற்கனவே அண்ணனின் அம்மாவும், சகோதரிகளும் போன வருடமே அழைப்பு விடுத்திருந்த போதும் பல காரணங்களால் ( எனக்கு நம்ம பவர் @Prabha மாதிரி பிளேனில் போக பயப்படுகிற மாதிரி எந்த பிரச்சினையும் இல்லை ) அந்த பயணம் தள்ளிப் போடப்பட்டது.
இப்போ அண்ணன் காட்டிய வழியம்மா என்று பாடியபடி மலேசியா பற்றிய மேலதிக விவரங்களை சேகரிக்க ஆரம்பித்தேன்.
நான் சென்னையில் விமானம் ஏறுவதில் இருந்து மீண்டும் வந்து இறங்கும் வரை என்ன செய்ய வேண்டும் என்ற பயண itinerary-யின் பிரதி எனக்கு உடனே மின்னஞ்சலில் வந்து சேர்ந்தது. என் சோம்பலுக்கும், அண்ணனின் வேகத்துக்கும் ஷோபா, சிவகுமார் நடிச்ச படத்தை வச்சா கூட எட்டாது. அவர் பழமையும், செழுமையும் கலந்த முழுமையானவர் என்று புரிந்தது. அந்த விவரங்கள எல்லாம் அப்புறம் பார்க்கலாம்.
சில விஷயங்களில் NOV anna சொன்னதற்கும் உண்மைக்கும் நிறைய தூரம் இருக்குது.
1. கோலாலம்பூரில் இரட்டைக் கோபுரம்தான் உயரமானது.
2. காலை மாலை வேளையில் கோலாலம்பூரில் பயணம் செல்லும்போது கையில் ரொட்டியுடன் போக வேண்டும்
3. சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு ரொம்ப கஷ்டம்.
இது எல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பதை பின்னால் சொல்கிறேன்.
முதலில் மலேசியாவில் பேசப்படும் மொழிகளில் பிரதானமானது மலாய் மொழி. ( ஹி ஹி.. எனக்கு கஷ்டமே இல்லீங்க.. நான் எங்கும் எதிலும் தமிழ் மட்டுமே பேசினேன். கடைகளில் கூட..)
அதிலே சில சின்னச் சின்ன வாக்கியங்களைப் படிச்சு வச்சுக்குங்க.
வருக வருக- Selamat Datang - செலாமாட் டாத்தாங்
காலை வணக்கம்- Selamat Pagi - செலாமாட் பாகி
மதிய வணக்கம்- Selamat Tengah hari - செலாமாட் தெங்காஹாரி
மாலை வணக்கம்- Selamat Petang - செலாமாட் பெத்தாங்
இரவு வணக்கம்- Selamat Malam - செலாமாட் மாலாம்
மீண்டும் சந்திப்போம்- Jumpa Lagi - ஜும்பா லாகி
நன்றி- Terima Kasih - தெரிமா காசே
நன்றிக்கு பதில்- Sama-sama - சமா சமா
மன்னிக்கவும்- Minta Maaf - மிந்தா மா-ஆஃப்
நலமா? - Apa Khabar? - அப்பா காபார்
நலம்- Khabar Baik -காபார் பாயிக்
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பக ஜும்பாலே.. என்ற பாடல் மலாய் மொழியா என்பதை நானறியேன் பராபரமே.
ஒரு காலத்தில் விசா ஆன் அரைவல் என்று மலேஷியாவிற்கு சென்று இறங்கிய பின் கூட விசா வாங்கிக் கொள்ளும் வசதி இருந்ததாம். காமன்வெல்த் நாடுகள் என்றபோதும் இப்போது அந்த வசதி இல்லை. ஆயினும் இன்னும் ஆறு மாதங்களுக்கான வேலிடிட்டியுடன் இருக்கும் பாஸ்போர்ட்டும், இரண்டு (45mm*35mm) அளவுள்ள சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் கலர் புகைப்படங்களும் மட்டும் இருந்தால் மலேஷியன் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
அனேகமாக மலேசியா செல்லும் அனைவருமே சிங்கப்பூர் செல்லவும் விரும்புவார்கள். ஆனால் சிங்கப்பூர் விசா தேவை எனில் சில எக்ஸ்டிரா டாகுமெண்ட்டுகள் தேவை. அதாவது சிங்கப்பூரில் உங்கள் நண்பர் / உறவினர்களுடன் தங்குவதாக இருந்தால் அவர்களிடம் இருந்து ஒரு அழைப்புக் கடிதம் ( அதில் அவர்களுடைய ஐடெண்டிடி குறிப்பிடப் பட்டு இருக்க வேண்டும்) தேவை.
அல்லது நீங்கள் டிராவல்ஸ் மூலம் செல்வதானால அவர்களே அங்கே தங்கும் இடம் பற்றிய குறிப்புகளைத் தந்து விடுவார்கள். அல்லது நீங்களே தங்கும் இடத்திற்கு ஏற்பாடு செய்திருந்தால் அது பற்றிய விவரங்களையும் விசா விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
மேலும் சிங்கப்பூர் விசா விண்ணப்பத்துடன் நீங்கள் சிங்கப்பூருக்கு சென்று வருவதற்கான விமான டிக்கட்டின் பிரதியை இணைக்க வேண்டும். ஒரு வேளை மலேசியா சென்று அங்கிருந்து பஸ் அல்லது டிரெயின் மூலம் சிங்கப்பூர் செல்வதாக இருந்தாலும் அதற்கான அத்தாட்சியைக் காட்ட வேண்டியிருக்கும்.
அப்பாடா... ஆனால் மலேசிய விசாவுக்கு இவை எதுவும் தேவையில்லை. இன்னிக்கு காலையில் விண்ணப்பத்தைக் கொடுத்தால் நாளை மாலை கையிலே விசா...!! கஷ்டப்படாமல் உங்கள் டிராவல் ஏஜெண்டிடம் சொல்லி வேலையை முடிச்சுக்கிட்டால் அலைச்சல் மிச்சம்.
அடுத்ததாக டிராவல் இன்ஷ்யூரன்ஸ் ஒண்ணு வாங்கிடுங்க. எதற்கும் அது நல்லது. ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரின்னு நெனச்சா அப்புறம் அஸ்க் புஸ்க்னு ஆயிடும். இதுவும் நீங்கள் பயணம் செய்யும் நாட்களைப் பொறுத்தும், நாடுகளைப் பொறுத்தும் மாறும்.
( நான் எழுதுவது எல்லாமே புதுசா வெளி நாடு போகும் என்னைப் போன்றவர்களுக்குத்தான். அடிக்கடி விமானத்தில் பறக்கும் குருவிகளுக்கு இதெல்லாம் தெரிஞ்ச விஷயம்தான் ).
இப்போ அடுத்ததாக தேவை மலேஷியாவில் செலவழிக்கப் பணம். அது அந்த ஊரில் செல்லும் கரன்சியாக இருக்கணும்.
மலேஷியாவின் பணத்துக்கு ரிங்கிட்டு என்று பெயர். சில்லறைக்கு சென் என்று சொல்றாங்க. தமிழில் வெள்ளி என்றும் காசு என்றும் சொல்றாங்க. ஏறக்குறைய ஒரு ரிங்கிட்டுக்கு இந்திய ரூபாயில் பதினெட்டு மற்றும் இருபது நயா பைசா ஆகிறது. இது அப்பப்போ மாறும். தேவைப் படும் அளவுக்கு மாற்றி எடுத்துக் கொண்டு போகலாம்.
கோலாலம்பூரில் பல இடங்களிலும் Money converters இருப்பதால் எப்போதும் நம்ம பணத்தை ரிங்கிட்டாக்கி கொள்ளலாம். ஆனாலும் யாரிடம் அதிக எக்ஸ்சேஞ்ச் ரேட் கிடைக்கும் என்று பார்த்து பிறகு மாற்றிக் கொள்வது நல்லது.
சர்வதேச கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதை பெரிய கடைகளிலும், மால்களிலும் உபயோகித்தல் நல்லது. அடையாளம் இல்லாத சிறிய கடைகளில் உபயோகிக்கப்பட்ட கார்டுகள் பிரதி எடுக்கப்பட்டு தவறான முறையில் பயன்படுத்தப்ப்ட்ட புகார்கள் இன்னும் இங்கே வங்கிகளில் உள்ளன. ( சில வ்ங்கிகளின் கிரெடிட் கார்டு டிபார்ட்மெண்டில் இருந்து கிடைந்த நம்பகமான விவரம் ). எனவே ... கவனம் !!
அடுத்ததாக இங்கிருந்து என்ன கொண்டு போகலாம் ? எப்படி போகணும்.. இதெல்லாம் அடுத்த பாகத்தில் தொடரும்.
ஹா ஹா.. ரொம்ப போரடிக்குதா ? அடிச்சா திருப்பி அடிங்க..
வெட்டியா இருக்குற நேரத்துல அடிச்சுகிட்டு இருந்த பொழுது போகுமில்ல... :kikiki:
( இன்னும் பறக்கவே இல்லீங்க )