Quote:
கொடுமை செய்யும் சித்தியாக நடிக்கிறேன்! - பாலாம்பிகா
பிரியமானவளே, நாதஸ்வரம், பாசமலர்கள், அக்னிபறவை என பல தொடர்களில் நடித்தவர் பாலாம்பிகா. தற்போது பொன்னூஞ்சல் என்ற தொடரில் சித்தி வேடத்தில் நடித்து வருகிறார். செண்டிமென்ட் அம்மாவாக பல தொடர்களில் நடித்து வந்த எனக்கு இந்த தொடரில் நடிக்கும் கொடுமைக்கார சித்தி வேடம் ஒரு புதிய அனுபவமாக உள்ளது என்கிறார் பாலாம்பிகா.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சினிமாவில் நடித்து வந்த நான் திருமணத்திற்கு பிறகு ஒரு பிரேக் கொடுத்து விட்டு சின்னத்திரைக்கு வந்தபோது அம்மா வேடங்களாக கிடைத்தன. குறிப்பாக, பிரியமானவளே தொடரில் அவந்திகாவின் அம்மாவாக நடித்தேன். அது நல்ல ரீச் ஆனது. அதனால் அடுத்தடுத்து அம்மா வேடங்களே கிடைத்தபோதும், அந்தந்த கதைக்களங்களின் சூழலுக்கேற்ப என்னை மாற்றிக்கொண்டு நடித்தேன். அதனால் தொடர்ந்து அம்மா வேடம் என்றாலும் என்னால் மாறுபட்ட நடிப்பை கொடுக்க முடிந்தது.
அதேசமயம், திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் தொடரில் கேங் லீடர் வேடத்தில் நடித்தேன். முதலில் அந்த கேரக்டர் பற்றி டைரக்டர் சொன்னபோது, ஷாக் ஆகி விட்டேன். நான் போய் எப்படி கேங் லீடராக நடிப்பது. காமெடியாகி விடாதா? என்றேன். டைரக்டர்தான் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார். ஆனால் அந்த வேடம் ஒர்க் அவுட்டானது. அதேபோல் இப்போது பொன்னூஞ்சல் தொடரில் வில்லியாக நடிக்கிறேன். அக்கா பிள்ளைகளின் சொத்தில் வாழ்ந்து கொண்டே அவர்களை கொடுமை செய்யும் சித்தியாக நடிக்கிறேன். என்னைப்பொறுத்தவரை இது ஒரு மாறுபட்ட வேடம் என்பதால் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறேன். மேலும், பெரும்பாலும் வில்லி வேடங்களில் நடிப்பவர்களை கண்டால் நேயர்கள் திட்டுவார்கள். ஆனால் என்னை சந்திக்கும் பெண்கள், இந்த சீரியலில் உங்கள் நடிப்பு வித்தியாசமாக உள்ளது என்று பாராட்டுகிறார்கள். அதனால் இந்த தொடர் என்னை சின்னத்திரையில் பரபரப்பான நடிகையாக்கி விடும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் பாலாம்பிகா.