மந்திரிகுமாரியின் கதாநாயகனாக யாரைப் போடுவது என்று சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே கருணாநிதி வசனம் எழுதிய ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்ததால், அவருக்கும், கருணாநிதிக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டிருந்தது. எனவே, கதாநாயகன் வேடத்துக்கு எம்.ஜி.ஆரை கருணாநிதி பலமாக சிபாரிசு செய்தார்.
“ராஜகுமாரி” படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்திருந்தாலும், தொடர்ந்து அவருக்கு கதாநாயகன் வேடம் கிடைக்கவில்லை. சுந்தரமும் உடனடியாக அவரை கதாநாயகனாகத் தேர்வு செய்யாமல், “அவருக்கு தாடையில் பெரிய குழி இருக்கிறதே” என்றார். “அங்கு சிறிய தாடியை ஒட்ட வைத்து விட்டால் சரியாகிவிடும். தளபதி வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார். சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடிப்பார்” என்று கருணாநிதி எடுத்துக் கூறினார். அதன்பின் எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்தார் சுந்தரம்.
மந்திரிகுமாரியில் வில்லன் வேடம் முக்கியமானது. அதற்கு நாடக நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். மற்றும் ராஜகுமாரி வேடத்துக்கு ஜி.சகுந்தலா, மந்திரிகுமாரி வேடத்துக்கு மாதுரிதேவி, ராஜகுரு வேடத்துக்கு எம்.என். நம்பியார் ஒப்பந்தமானார்கள்.
“மந்திரி குமாரி”யின் கதை, திருப்பங்கள் நிறைந்தது. முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகவும் (ஜி.சகுந்தலா) மந்திரியின் மகள் அமுதாவும் (மாதுரிதேவி) ஆருயிர் தோழிகள். தளபதி வீரமோகனை ராஜகுமாரி காதலிக்கிறாள்.
மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) கொடூரமானவன். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் பயங்கர கொள்ளைக்காரன். “கொள்ளையடிப்பது ஒரு கலை” என்பது அவன் கொள்கை.
மந்திரிகுமாரி அமுதாவைக் கண்டதும் அவளை அடையத்துடிக்கிறான். அவனுடைய சுயரூபத்தை அறியாத அவள், அவனை மணக்கிறாள். கொள்ளைக் கூட்டத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தளபதி ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனை பிடித்து அரசவையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பழி ராஜமோகன் மீது விழுகிறது.
தன் கணவன் கொடியவன் _ கொள்ளைக்காரன் என்பதை, அமுதா அறிந்து கொள்கிறாள். அவனைத் திருத்த முயல்கிறாள். உண்மையை அறிந்து கொண்டு விட்டாளே என்ற ஆத்திரத்தில், அவளைத் தீர்த்துக்கட்ட பார்த்திபன் முடிவு செய்கிறான்.
“வாராய் நீ வாராய்” என்று பாட்டுப்பாடி, அவளை மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கிருந்து அவளைத் தள்ளிவிட அவன் முயற்சி செய்யும்போது, “சாவதற்கு முன் உங்களை மூன்று முறை சுற்றி வந்து வணங்க அனுமதியுங்கள்” என்று வேண்டுகிறாள், அமுதா.
அதற்கு அவன் சம்மதிக்கிறான். மூன்றாவது முறை சுற்றி வரும் போது, அவனை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விடுகிறாள். அவள் மூலம், உண்மையை அறிகிறார், அரசர். ராஜகுரு சிறைப்படுத்தப்படுகிறார். அரசகுமாரியும், தளபதியும் ஒன்று சேருகின்றனர்.
ஆரம்பத்தில் “மந்திரிகுமாரி”யை எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். அவர் அவசரமாக அமெரிக்கா போக வேண்டி இருந்ததால், டைரக்ஷனை டி.ஆர்.சுந்தரம் தொடர்ந்தார். சென்சார் கெடுபிடியை சமாளித்து, 1950_ல் படத்தை வெளியிட்டார், டி.ஆர்.சுந்தரம். படம் மகத்தான வெற்றி பெற்றது.
கதை, வசனம், நடிப்பு, இசை எல்லாமே இதில் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக, கருணாநிதியின் வசனங்கள் கூர்மையாக அமைந்திருந்தன. “அனல் பறக்கும் வசனம்; கனல் தெறிக்கும் நடிப்பு” என்று விளம்பரம் செய்தார்கள்.
நம்பியாருக்கும், எஸ்.ஏ.நடராஜனுக்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடல்:
“பார்த்திபா! நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக் கூடாதா?”
“கொள்ளை அடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா, கலை!”
“என்ன! கொள்ளையடிப்பது கலையா?”
“ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”
“இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?”
“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.” இத்தகையை வசனங்கள் ஏராளம்.
“கொள்ளை அடிப்பதை கலை என்று கருணாநிதி கூறுகிறார்” என்று மாற்றுக் கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
அதற்குக் கருணாநிதி கூறிய பதில்: “கொள்ளை அடிப்பதும் ஒரு கலை என்று, அப்படத்தில் தீயவன் ஒருவன்தான் கூறுகிறான். கடைசியில் அவன் அழிந்து போகிறான். ராமாயணத்தை எழுதியவர், கூனி பாத்திரத்தையும் படைத்தாரே, கூனியின் சுபாவம் அதை எழுதியவருக்கு சொந்தமானதா? மகாபாரதத்தை எழுதியவர், சகுனி பாத்திரத்தைப் படைத்தாரே. அப்படியானால் அவர் சகுனியின் செய்கைகளை ஆதரிப்பதாக அர்த்தமா?”
_ இவ்வாறு எதிர்ப்பாளர்களுக்குப் பதில் அளித்தார், கருணாநிதி.
எம்.ஜி.ஆர், நம்பியார், மாதுரிதேவி ஆகிய அனைவரும் நன்றாக நடித்திருந்தபோதிலும், புதிய பாணியில் பேசி நடித்த எஸ்.ஏ.நடராஜன் பெரும் புகழ் பெற்றார்.
(மந்திரிகுமாரியைத் தொடர்ந்து, எஸ்.ஏ.நடராஜனுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் அதில் அவர் சோபிக்க முடியவில்லை. மந்திரிகுமாரிக்குப் பிறகு, அவருக்கு பெயர் சொல்லும் படமாக “மனோகரா” மட்டுமே அமைந்தது.)
“மந்திரிகுமாரி”யின் பாடல்களை கா.மு.ஷெரீப், மருதகாசி ஆகியோர் எழுதினர். ஜி.ராமநாதன் இசை அமைத்தார். திருச்சி லோகநாதனும், ஜிக்கியும் பாடிய “வாராய், நீ வாராய்” என்ற பாடல், இன்றைய ரசிகர்கள் கூட விரும்பும் பாடலாக விளங்குகிறது
நன்றி : மாலை மலர்