Finished reading, Saradha mdm. Fantastic review.
One question, does it mean that the song (Annan Oru Kovil endral) was composed and shot after they decided to retitle the film?
Printable View
Finished reading, Saradha mdm. Fantastic review.
One question, does it mean that the song (Annan Oru Kovil endral) was composed and shot after they decided to retitle the film?
Thank you Rakesh,
Yes, the title of the movie had been changed as 'Annan oru kOyil' in the very initial stage of production, because many cine personalities suggested that the name 'enga veetu thanga latchumi' looks like old movie, and many fans wrote to Sivaji Productions to change it to an attractive one. After the change only, kavignar wrote the song, starting with movie title.
டியர் பார்த்தசாரதி,
தங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி. அண்னன் ஒரு கோயில் படம் பார்க்கச்சென்ற தங்கள் மலரும் நினைவுகள் சுவையாக இருந்தன. (நல்லவேளை, என் பெற்றோர்கள் அடிக்கக்கூடியவர்களாக இல்லை. மாறாக அவர்களே நடிகர்திலகத்தின் படங்களூக்கு என்னை அழைத்துச் செல்லக் கூடியவர்களாக இருந்தனர்).
டியர் ராகவேந்தர்,
தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. தங்கள் மறுமொழியில் குறிப்பிட்ட விஷயங்கள் மீண்டும் அந்தக்கால நினைவுகளுக்கு என்னை இட்டுச்சென்றன. நடிகர் பிரேம் ஆனந்த், நடிகர்திலகத்தின் சிறந்த அபிமானியாகவும், மிகச்சிறந்த ரசிகராகவும், எந்நாளும் நடிகர்திலகத்துடன் ஒட்டியே இருந்து வந்தவர். அதனால் அன்றைய நாட்களில் நடிகர்திலகத்தின் படங்களில் அவருக்கு ஏதாவது ஒரு ரோல் கண்டிப்பாக இருக்கும். அதுவும் பைலட் பிரேம்நாத் படத்தில், கதாநாயகி ஷ்ரீதேவிக்கு ஜோடியாக, நடிகர்திலகத்தின் மாப்பிள்ளையாக பிரதான ரோல் ஒன்றில் நடித்தார்.
ஜெய்கணேஷைப்பொறுத்தவரை, எனது சிறு வயதில் அவரை நேரிலேயே சந்தித்துப் பேசியிருக்கிறேன். மிட்லண்ட் தியேட்டரில் 'எமனுக்கு எமன்' படத்தின் மேட்னிக்காட்சிக்கு வந்திருந்தவரை (அப்போதைய இளவயது ஜெய்கணேஷை இமேஜின் பண்ணிக்குங்க) இடைவேளையில் வராண்டாவில் நாங்கள் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம். ரொம்ப அழகாக செயற்கைத்தனமில்லாமல் பேசினார். வெள்ளை ஜிப்பாவும் குர்தாவும் அணிந்திருந்தார். அப்போது சுற்றி நின்ற ரசிகர்கள், அவர்மீது கலர்ப்பொடிகளைத்தூவி கிண்டல் செய்ய, அங்கிருந்து தப்பிக்க மடமடவென்று மாடிக்குப்போய் ஆபரேட்டர் அறைக்குள் புகுந்துகொண்டவர், மீண்டும் காட்சி துவங்கியதும்தான் தியேட்டருக்குள் வந்தார்.
பிற்காலத்தில் நல்ல குணசித்திர நடிகராக, குறிப்பாக நகைச்சுவைக்காட்சிகளில் திறம்பட நடித்தவர் ஜெய்கணேஷ். பான்பராக் போடும் பழக்கம் காரணமாக கன்னத்தில் புற்றுநோயால் குழிபறிக்கப்பட்டு வெகுசீக்கிரமாகவே நம்மைவிட்டும் மறைந்து போனார்.
நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இதயங்களில் ஜெய்கணேஷ், பிரேம் ஆனந்த் இருவருக்கும் என்றென்றும் நிரந்தர இடம் உண்டு.
'அண்ணன் ஒரு கோயில்' பட விமர்சனத்தில், சொல்ல மறந்த (ஆனால் என்றும் மனதில் மறவாத) அண்ணனின் பெர்பார்மென்ஸில் சில துளிகள்....
** 'மல்லிகை முல்லை' பாடலின்போது அவர் தரும் கனிவான பார்வைப்பறிமாற்றங்கள், தங்கையின் கையைப்பிடித்துக்கொண்டு, பாடிக்கொண்டே ஸ்டைலாக நடந்துவரும் அழகு, கற்பனையில் தன்னைச்சுற்றி ஓடிவரும் மருமகப்பிள்ளைகளை ஆசீர்வாதம் பண்ணும்போது உண்மையான தாய்மாமனின் உணர்ச்சிப்பெருக்கு...
** தன்னைச்சுற்றிலும் போலீஸ் தேடல் இருந்தும், தான் வந்துதான் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருக்கும் ஒரு பெற்றோருக்காக, வார்டுபாய் போல வேடமிட்டு ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக்கொண்டு வந்து, ஆபரேஷன் முடிந்ததும், ஸ்ட்ரெசருக்குக் கீழே ஒளிந்துகொண்டே வெளியேறும்போது காட்டும் கடமையுணர்ச்சி...
** தங்கைக்கு நேர்ந்த சோகத்தை, தன் வருங்கால மனைவியிடம் சொல்லும்போது காட்டும் உணர்ச்சிப்பிரவாகம்....
** 'அண்ணன் ஒரு கோயிலென்றால்' பாடலின்போது, தன்னைப்பற்றிப்பாடும் தங்கையின் வார்த்தைகளால் கண்கள் கலங்க, அதை தங்கை பார்த்துவிடாமல் மறைக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள்...
** நண்பன் ஆனந்தின் கஸ்டடியில் இருக்கும் தங்கையைக் காண வந்திருக்கும்போது, சுய நினைவின்றி கிடக்கும் தங்கையைப்பார்த்து ஆனந்திடம் அவளது கடந்தகால சூட்டிகையைப்பற்றிக்கூறும்போது ஏற்படும் ஆதங்கம். 'டாக்டர், இப்படி ஒரு இடத்துல படுத்துக்கிடவளா இவ?. என்ன ஆட்டம், என்ன ஓட்டம், என்ன பேச்சு, என்ன சிரிப்பு'.... பேசிக்கொண்டிருக்கும்போதே குரல் உடைந்து கதறும் பாசப்பெருக்கு....
** கோர்ட்டில் கூண்டில் நிற்கும்போது, எதார்த்தமாக சுற்றிலும் பார்க்கும்போது, அங்கே தன் தங்கை வந்து நிற்பதைப் பார்த்து முகத்தில் காட்டும் அதிர்ச்சி. அரசுத்தரப்பு வக்கீல் வேண்டுமென்றே தன்மீது கொலைக்குற்றம் சுமத்தி அதற்காக ஜோடிக்கப்பட்ட காரணத்தையும் கூறும்போது, மறுபேச்சுப்பேசாமல் அவற்றை ஒப்புகொள்ளும்போது ஏற்படும் பரிதாபம்....
** கொலைசெய்யப்பட்டவனின் நண்பன் கோர்ட்டில் வந்து, நடந்த சம்பவங்களை விளக்கும்போது, 'இவன்தான் தனக்கு போன் செய்தவனா?' என்று முகத்தில் காட்டும் ஆச்சரியம்....
இவரது உணர்ச்சி வேகத்துக்கு ஈடுகொடுத்து நடித்ததன்மூலம் டெம்போ குறையாமல் படத்தை எடுத்துச்செல்ல பெரும் பங்காற்றிய சுமித்ரா, ஜெய்கணேஷ், சுஜாதா. அவற்றைப் பன்மடங்காகப் பெருக்க துணை நிற்கும் மெல்லிசை மன்னரின் பின்னணி இசை... எல்லாம் இணைந்து படத்தை எங்கோ கொண்டு சென்றன.
சாரதா,
நேற்றே படித்து விட்டேன் உங்கள் பதிவை. பதில் மட்டும் இன்று பதியலாம் என்று நினைத்து வந்த போது உங்களிடமிருந்து மீண்டும் ஒரு பதிவு படத்தைப் பற்றி. உங்கள் பதிவு எப்போது சோடை போனது? ஆனால் நேற்று படித்த போது வழக்கம் போல் விலாவரியாக இல்லாமல் சுருக்கி எழுதியது போல் தோன்றியது. அந்த குறையை நிவர்த்தி செய்வது போல படத்தின் ஹைலைட்டான சில பல துளிகளை இன்று எழுதி விட்டீர்கள்.
நம்முடைய சொந்தப் படங்களைப் பொறுத்தவரை தொடர்ந்து படங்களை எடுக்கும் வழக்கம் கிடையாது என்பதும் நீண்ட இடைவேளைக்கு பிறகே படங்களை தயாரிப்பார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. 70-ல் வியட்நாம் வீடு, பிறகு 74-ல் தங்கப்பதக்கம் அதற்கு பிறகு 77-ல் இந்த அண்ணன் ஒரு கோயில். கன்னடப்படத்தின் ரீமேக். [பின்னாளில் இந்த ஒரிஜினல் தோல்விப்படத்தை தான்தான் தன்னுடைய திரைக்கதை மூலமாக தமிழில் வெற்றிப்படமாக்கியதாக இயக்குனர் கே.விஜயன் ஒரு நகைச்சுவை பேட்டி அளித்திருந்தார்].அரசியல் காரணங்களாலும் ஒரு சில படங்களின் கதையும் திரைக்கதையும் சரியாக அமையாத காரணத்தினால் 75 -76 காலக்கட்டத்தில் ஒரு தேக்க நிலையை அடைந்த நடிகர் திலகம் அதன் பிறகு கதையமைப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். அப்படி தேர்வு செய்த படம்தான் அண்ணன் ஒரு கோயில். இது ஒரு குறுகிய கால தயாரிப்பு என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட 1977 மே மாதம் வாக்கில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அந்தமான் காதலி படத்தில் நடிக்கும்போது செல்வி சுஜாதாவாக இருந்தவர் இந்தப் படத்தில் திருமதி சுஜாதா ஜெயகராக மாறினார்.
"மூன்று வருடங்களுக்குப் பிறகு எடுக்கும் சொந்தப்படத்திற்கு எங்க வீட்டு தங்கலட்சுமி-னு பெயராம், விளங்கிடும்" என்று எங்கள் மதுரைக்கே உரித்தான கமண்ட்கள் ரசிகர்கள் மத்தியில் உலா வந்துக் கொண்டிருக்க, வருகிறது பெயர் மாற்றம். ரசிகர்களை சந்தோஷத்தின் உச்சாணிக் கிளைக்கே கொண்டுப் போய்விட்டது. படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்ற செய்தி அதை அதிகப்படுத்தியது. தீபத்திற்கு பிறகு வந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வகையில் அமையாததில் சற்றே சோர்ந்த ரசிகர்கள் இந்தப் படத்தின் வெற்றியில் உறுதியாக இருந்தனர்.
தீபாவளிக்கு பத்து நாட்கள் முன்தான் தமிழகத்தை அச்சுறுத்திய ஒரு கடும் புயல் திசை மாறி ஆந்திராவின் ஒங்கோலை தாக்கியது. ஆனால் தமிழகமும் அந்தப் புயலின் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. தவிரவும் அதே நேரத்தில்தான், இன்னும் சரியாக சொல்லவேண்டுமென்றால் 1977 அக்டோபர் 29,30 தேதிகளில்தான் தமிழக சுற்றுப் பிரயாணம் மேற்கொண்ட அன்னை இந்திரா அவர்களின் மீது மதுரையில் கொலை வெறி தாக்குதல் நடந்தது. அதன் காரணமாக அன்றைய எதிர்க் கட்சி தலைவர் கைது செய்யப்பட தமிழகத்தின் பல நகரங்களில் வன்முறை சம்பவங்கள் அரேங்கேறின. தவிரவும் பல இடங்களில் மாணவர், தொழிலாளர் போராட்டங்கள் நடந்துக் கொண்டிருந்த நேரம். இப்படி இயற்கையாகவும் செயற்கையாகவும் எதிர்மறையான சூழல் நிலவிய நேரத்தில் படம் வெளியாகிறதே என்று ஒரு மனதுக்குள் ஒரு அச்சம் இருந்தது. அதை தவிர கிட்டத்தட்ட 6 படங்கள் வேறு போட்டியாக வெளியாகின. [ஆறு புஷ்பங்கள், சக்ரவர்த்தி, பெண்ணை சொல்லிக் குற்றமில்லை போன்றவை] ஆனால் அனைத்து சோதனைகளையும் கடந்து அண்ணன் ஒரு கோயில் மகத்தான வெற்றிப் பெற்றது.
நவம்பர் 10 அன்று தீபாவளி, ஒரு வியாழக்கிழமை நியூசினிமாவில் ரிலீஸ். ஒரு சில நண்பர்களால் ஓபனிங் ஷோவிற்கு வரமுடியாத சூழல் என்பதால் மாலைக் காட்சிக்கு சென்றோம். படத்தைப் பற்றிய ரிப்போர்ட் நன்றாக இருந்ததால் இன்னும் உற்சாகம் கூடி விட்டது. படமும் எங்களை ஏமாற்றவில்லை. நெகட்டிவில் காட்டப்பட்ட டைட்டில்கள் அமர்க்களம் என்றால் முதல் காட்சியில் அந்த ஓட்டத்தில் எங்களை கட்டிப் போட்ட நடிகர் திலகம் இறுதி வரை அப்படியே வைத்திருந்தார். வெகு நாட்களுக்கு பின் அப்படி ஒரு அலப்பறையோடு ஒரு புது படம் பார்த்தோம்.
இந்தப்படத்தில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் சில உண்டு. நிறைய காட்சிகள் வெளிப்புறத்தில் படமாக்கப்பட்டிருக்கும். இயல்பான வசனங்கள் படத்திற்கு பிளஸ் பாயிண்ட். வீட்டிற்கு விளக்கேற்ற ஒரு மருமக வேணும் என்று சொல்லும் ஆயாவிடம் விளக்கேற்ற தீப்பெட்டி போதும் என்று நடிகர் திலகம் சொல்ல அய்யோ அறுவை அறுவை என்று சுமித்ரா கேலி செய்ய ஒரு அழகான காட்சி அங்கு விரியும். அது போல காட்சிகளில் லாஜிக் இருக்கும். உறவினரான isr -ஐ மணந்துக் கொள்ள வற்புறுத்தப்படும் சுஜாதா அவருடன் தியேட்டருக்கு சென்று விட்டு இடைவேளையில் தப்பிப்பது, தங்கையை தேடி காரில் புயலென வரும் நடிகர் திலகம் ஒரு இடத்தில் சட்ரென்று ரிவர்ஸ் எடுத்து அங்கேயுள்ள கடையில் அந்த வழியாக சென்ற காரைப் பற்றி விசாரிப்பது,இப்படி நிறைய சொல்லலாம்.
படத்தில் சில பல காட்சிகளில் அன்னை இல்லத்திலே படப்பிடிப்பு நடத்தியிருப்பார்கள். மல்லிகை முல்லை பாடல், கடைசி காட்சி முதலியவை. சாரதா குறிப்பிட்ட ஆஸ்பத்திரியில் யாருக்கும் தெரியாமல் தங்கையை பார்க்க வரும் காட்சியில் பின்னியிருப்பார் நடிகர் திலகம். அதுவும் அந்த வசனம் ஹைலைட். இறுதியில் இன்ன இன்ன மருந்துகள் கொடுக்கிறேன் என்று சொல்லும் ஜெய்கணேஷிடம் "ஒரு டாக்டரா என்னால இப்போ உனக்கு அட்வைஸ் பண்ண முடியாது. உன்கிட்டே ஒப்படைசிருக்கேன், நீ பாத்து என்ன செய்யணுமோ அதை செய்" என்று அண்ணனாக சொல்லிவிட்டு வெளியேறுவது வரை அவரின் தர்பார்தான். ஆறரை வருடங்களுக்கு பிறகு இணைந்தாலும் தேங்காய்க்கு இந்தப் படத்தில் நடிகர் திலகத்துடன் காம்பினேஷன் ஷாட்ஸ் கிடையாது.
பாக்ஸ் ஆபிசில் சக்கை போடு போட்ட படம். மதுரையில் தீபாவளியன்று 5 காட்சிகளில் ஆரம்பித்த ஹவுஸ் புல் காட்சிகள் தொடர்ந்து 30 நாட்களுக்கு தொடர்ந்தது. ஆம் நியூசினிமாவில் வெளியான முதல் முப்பது நாட்களில் நடைபெற்ற 101 காட்சிகளும் ஹவுஸ்புல். இந்தப் படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு பின் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற அந்தமான் காதலியாலும் இந்தப் படம் பாதிக்கப்படாமல் 100 நாட்கள் என்னும் வெற்றிக் கோட்டை கடந்தது. மதுரையில் அண்ணன் ஒரு கோயில், அந்தமான் காதலி, தியாகம் என்று தொடர்ந்து மூன்று நூறு நாள் படங்கள் [அதிலும் தியாகம் வெள்ளி விழா படம்] அமைவதற்கு ஆரம்ப புள்ளியாகவும் அமைந்தது அண்ணன் ஒரு கோயில் என்று சொன்னால் அது மிகையில்லை.
மீண்டும் 1977-ற்கு அழைத்து சென்று அந்த இனிமையான நினைவுகளை அசை போட வாய்பளித்ததற்கு மிக்க நன்றி.
அன்புடன்
டியர் முரளி,
அண்ணன் ஒரு கோயில் பதிவைப் படித்ததும் (வழக்கம்போல) நிச்சயம் அது தொடர்பான வரலாற்றுப்பதிவோடு வருவீர்கள் என்று நினைத்தேன். அதுபோலவே வந்து அசத்திவிட்டீர்கள். வேண்டுமென்றே எனது பதிவைச்சுருக்கவில்லை. கதைச்சுருக்கமே சற்று நீண்டுவிட்டதாலும், அதுதொடர்பான மற்ற சில நிகழ்ச்சிகளை உட்படுத்த வேண்டியிருந்ததாலும், காட்சியமைப்புக்கள் பற்றிய விவரங்கள் சற்று குறைந்துவிட்டன. உங்கள் பதிவு அவற்றைப்போக்க வல்லதாக அமைந்துவிட்டது.
காட்சியமைப்புகளில் ஒளிப்பதிவு சிறப்பாகவும், துல்லியமாகவும் இருந்தது. ஒளிப்பதிவு மேதை ஜி.ஆர்.நாதன் கருப்புவெள்ளைப் படங்களிலேயே வித்தைகள் காட்டுவார். (உதாரணம்: வானம்பாடியில் இடம்பெற்ற 'ஏட்டில் எழுதிவைத்தேன்' பாடல் காட்சி, மற்றும் லட்சுமி கல்யாணத்தில் 'பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்' பாடல் காட்சி). வண்ணப்படமான இதில் சொல்லவே வேண்டாம். பின்னியெடுத்திருப்பார். குறிப்பாக ரயில்வே ஸ்டேஷனில் எடுக்கப்பட்ட இரவுக்காட்சிகள். மற்றும் மல்லிகை முல்லை பாடல் காட்சி.
இயக்குனர் கே.விஜயனின் 'சிரிப்பு பேட்டி' படித்ததும் எனக்கும் சிரிப்பு வந்தது. என்.வி.ராமசாமியின் 'புது வெள்லம்', 'மதன மாளிகை' படங்களை இயக்கியிருந்தபோதிலும் அவர் பளிச்சென்று தெரிய ஆரம்பித்தது 'ரோஜாவின் ராஜா'வில் துவங்கி, 'தீபம்' படத்திலிருந்துதான். தீபம், அண்ணன் ஒரு கோயில், தியாகம், திரிசூலம் என்று வெற்றிப்பட இயக்குனராக வலம் வந்தவர், என்ன காரணத்தாலோ 'ரத்தபாசம்' படப்பிடிப்பின்போது திரு வி.சி.சண்முகத்துடன் பிணக்கு ஏற்பட்டு பிரிந்தார். பிரிந்த கையோடு இதுபோன்ற சில 'அதிரடி(???)' பேட்டிகளும் கொடுத்தார். கூடவே 'தூரத்து இடி முழக்கம்' என்ற அருமையான தலைப்புடன் (நடிகர்திலகம் அல்லாத) ஒரு படத்தையும் இயக்கினார். நடிகர்திலகத்தின் எதிர்ப்பு பத்திரிகைகள் வரிந்து கட்டிக்கொண்டு, அந்தப்படத்தைப்பற்றிய செய்திகள் தந்து விளம்பரப்படுத்தின. ஆனால் பாவம், இடிமுழக்கம் வெறும் 'கேப்' சத்தம் போல ஆகிப்போனது. ஆதரவு தருவதுபோல ஏற்றிவிட்டவர்கள் எல்லாம் அவரைவிட்டு ஓடிப்போயினர்.
பாலாஜியாவது தொடர்ந்து ஆதரவு தருவார் என்று அவர் எதிர்பார்த்திருந்தபோது, யதார்த்தமாக சுஜாதா சினி ஆர்ட்ஸில் ப்ரொடக்ஷன் மேனேஜராக இருந்த ஆர்.கிருஷ்ணமூர்த்தியை இயக்குனராகப்போட்டு 'பில்லா' படத்தை தயாரிக்க, பில்லா பெரிய வெற்றியடைந்து கிருஷ்ணமூர்த்திக்கு நட்சத்திர இயக்குனர் அந்தஸ்தை வழங்கியது. செண்டிமெண்ட் பிரியரான பாலாஜி தொடர்ந்து தன் படங்களை ஆர்.கே. தலையில் கட்டினார். சில ஆண்டுகள் கழித்து, ஒருநாள் ஸ்டுடியோ செட்டில் நடிகர்திலகத்தை கே.விஜயன் வலியச்சென்று சந்தித்து நலம் விசாரிக்க, பழைய நண்பனைப்பார்த்து, 'என்ன விஜயா இப்போ என்ன பண்றே?' என்று கேட்க, விஜயன் சோர்ந்த முகத்துடன் பதிலேதும் சொல்லாமல் நிற்க, நிலைமையைப்புரிந்துகொண்ட நடிகர்திலகம், 'சரி, இனிமேல் என் படங்களை நீ டைரக்ட் பண்ணு' என்று ஆசி வழங்கி, விஜயனுக்கு மறுவாழ்வளித்தார். 'பந்தம்' படம் மூலம் அவர்களின் பந்தம் புதுப்பிக்கப்பட்டது.
இச்சம்பவத்தை நினைவுகூர்வது போல, 'பந்தம்' படத்தில் ஒரு காட்சி அமைத்திருப்பார் விஜயன். தன்னுடைய முன்னாள் டிரைவரை சர்ச்சில் சந்திக்கும் நடிகர் திலகம், 'என்ன டேவிட் எப்படியிருக்கே?' என்று கேட்க, வறுமையில் வாடும் டிரைவர் அழத்துவங்க, சட்டென்று கோட் பாக்கெட்டிலிருந்த கார் சாவியை அவரிடம் கொடுத்து 'வண்டியை எடு' என்பார். இந்தக்காட்சியில் நடித்து முடித்த நடிகர்திலகம், 'என்ன விஜயா, இந்த சீன் நம்ம ரெண்டு பேர் சமந்தப்பட்ட விஷய்ம் மாதிரி இருக்கே' என்றாராம் - (கே.விஜயன் முன்னொருமுறை தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த நேர்காணலில் சொன்னது).
சில மாதங்களுக்கு முன், ஜெயா டிவி 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சுமித்ரா, கண்டிப்பாக 'அண்ணன் ஒரு கோயில்' படத்தைப்பற்றிக் குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்தேன். அதுபோலவே, ஒருநாள் எபிசோட் முழுக்க இப்படத்துக்கு மட்டுமே ஒதுக்கி, ரொம்ப பெருமையாகப் பேசினார். நடிகர் திலகத்தை 'ஓகோ'வென்று புகழ்ந்தார். இன்னொரு ஆச்சரியம், நடிகர் திலகத்துடன் நடித்த 'ஜஸ்டிஸ் கோபிநாத்' படத்தைப்பற்றியும் (ஜோடி சூப்பர் ஸ்டார்) குறிப்பிட்டார். பாவம் இயக்குனர் பெயரை மறந்து விட்டு, சற்று யோசித்து 'யாரோ ரங்கநாத் என்பவர் இயக்கினார்' என்றார். (படத்தை இயக்கியவர் டி.யோகானந்த் என்ற பழம்பெரும் இயக்குனர்).
நகைச்சுவைக்காட்சிகளும், அரங்கில் சிரிப்பலையை பரவ விட்டன, சுருளியின் 'கிளி கத்துற ஊரெல்லாம் கிளியனூரா', 'எல்லோரும் பீடி மட்டும்தான்யா வாங்குவாங்க, யாரும் தீப்பெட்டி வாங்குறதில்லை. தீப்பெட்டி என்னய்யா தீப்பெட்டி. இவர் மட்டும் கிடைச்சிட்டாருன்னா ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையே வச்சிடுவேன்' போன்ற வசனங்களூம், மனோரமாவின் ஒரு மாதிரியான அழுகை மற்றும் 'எவர்சில்வர் பாத்திரத்திலேயே சமையலா? அப்போ மொத்த வியாபாரிதான்' என்று தேங்காயை கலாய்ப்பதுமான இடங்களும், காட்டில் யானை துரத்தும்போது, யானைகளைப் பிடிப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் சுருளியும் கருணாநிதியும் விழுந்து அலறுவதும், அதை மேட்டில் நின்று யானை பார்க்கும் இடமும் கலகலப்பான இடங்கள்.
ஒரு வெற்றிப்படத்துக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்த இப்படம் வெற்றிபெற்றதில் வியப்பில்லை, வெற்றிவாய்ப்பை இழந்திருந்தால்தான் அது வியப்பு மற்றும் வேதனை அளித்திருக்கும். தமிழ் ரசிகர்கள் அந்த அளவுக்கு விடவில்லை.
சகோதரி சாரதா அவர்களின் அண்ணன் ஒரு கோயில் திரைப்படத்தினைப் பற்றிய பதிவு மற்றும் முரளி சார் அவர்களின் தொடர் பதிவுகளைக் காணும் புதிய ரசிகர்கள் உடனடியாக அப்படத்தைப் பார்க்க விழைவர் என்பது திண்ணம். அவர்களுக்காகவும் மற்ற ரசிகர் நண்பர்களுக்காகவும் அப்படத்தில் நடிகர் திலகத்தின் தோற்றத்தைக் காணும் வாய்ப்பு இதோ.
http://i872.photobucket.com/albums/a...suda/aok01.jpg
http://i872.photobucket.com/albums/a...suda/aok02.jpg
http://i872.photobucket.com/albums/a...suda/aok03.jpg
அன்புடன்
Saradha madam, you are rocking. I have watched this movie on re-release in Madurai Meenakshi theatre and one of my favourite movie. Thanks for AOK details.
Cheers,
Sathish
திருச்சி மாநகரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலை வெகு விரைவில் திறக்கப் பட உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சி மாவட்ட சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் சார்பில் தயாரிக்கப் பட்டுள்ள ஒளிப்படத்தினை இங்கே காணலாம்.
http://www.youtube.com/watch?v=qQcs55lGjXU
அன்புடன்
Reviews about ANNAN ORU KOVIL are Very good. Thanks Ms.Saradha & Mr.Murali. Thanks Mr.Ragavendran for the Film Stills & Trichy Video Clippings link.
Once again thanks for all.
திருச்சி மாவட்ட அன்பர்கள் தொகுத்துள்ள இந்த ஒளிச்சித்திரம் அருமையிலும் அருமை ..பகிர்வுக்கு நன்றி ராகவேந்திரா சார்!
நன்றி சாரதா.
ராகவேந்தர் சார்,
அண்ணன் ஒரு கோயில் ஸ்டில்கள் அருமை என்றால் நமது திருச்சி பிள்ளைகள் தொகுத்துள்ள ஒளிப்பேழை அருமையிலும் அருமை. நடிகர் திலகத்தின் வித விதமான ஸ்டைல் நடைகள் மட்டும் போதும். நடிகர் திலகத்தைப் பற்றி தெரியாதவர்களுக்கு அவரை ஒரு சின்ன அளவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் இதை அவர்களுக்கு திரையிட்டால் போதும்.
அன்புடன்
ஒளிப்படக் காட்சிக்கும் நிழற்படங்களுக்கும் பாராட்டுக் கூறிய சந்திரசேகர், ஜோ, முரளி, மற்றும் கார்த்திக் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இந்தப் பாராட்டுக்குரியவர்கள், திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றத்தினரேயாவர். இந்தப் பாராட்டுக்கள் அனைத்தும் அவர்களுக்கே சேரும்.
புதிய வானம் திரைப்படம் ராஜ் வீடியோ விஷன் நிறுவனத்தால் நெடுந்தகடாக வெளியிடப்பட்டுள்ளது. அதனுடைய நிழற்படத்தை இங்கே காணலாம்.
http://i872.photobucket.com/albums/a...anamcovers.jpg
அன்புடன்
ராகவேந்திரன்
Part of the text that appears in an article in the Indian Express online edition dt.13.03.2011
Read the article hereQuote:
The message that Tamil Nadu sent out on that 1984 evening — that Sivaji Ganesan was an idol much greater than anyone in the Nehru clan; that cinema is a centrifugal part of Tamil Nadu’s mythology and iconography; that the Dravidian proudly refutes all things Northern and Sanskritised (except of course, salwar kameezes these days) — was lost to the powers in Delhi. And have stayed lost.
Raghavendran
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் உயர்வான பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்!
சென்னை சாந்தி திரையரங்கில் எனது எட்டாவது வயதில் பிப்ரவரி 1980ல் முதன்முதலாக "ரிஷிமூலம்" பார்த்தது நினைவில் நிழலாடுகிறது. எனது தாயார், தாய்மாமன், சிற்றன்னை ஆகியோருடன் அடியேன் ஒரு மாலைக்காட்சியில் நடிப்பின் சிகரத்தை சிகர அரங்கில் தரிசித்தது கண்கொள்ளாக் காட்சி. அதற்குப்பின்னர் சாந்தியில் வீட்டோடு வந்து பல நடிகர் திலகத்தின் திரைப்படங்களை கண்டு களித்திருக்கிறேன். எனது தாயார், தாயாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே நடிகர் திலகத்தின் ரசிகர்கள். வெள்ளித்திரையில் சிவாஜி படங்களை மட்டுமே கண்டு களிப்பார்கள். எனது தாய்மாமன் வெறித்தனமான ரசிகர். வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், கப்பலோட்டிய தமிழன், ராஜபார்ட் ரங்கதுரை, பாசமலர், பாரத விலாஸ், திரிசூலம், மோட்டார் சுந்தரம் பிள்ளை ஆகிய படங்களை எத்தனை முறை பார்த்திருக்கிறார் என்று அவருக்கே தெரியாது. என்னை பல்வேறு சிவாஜி படங்களுக்கு அழைத்துச் சென்று சிவாஜி ரசிகனாக்கியது அவர் தான். அவருக்கு இதற்காகவே நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். 1980களில் எங்களது குடும்பமும் அவர்களது குடும்பமும் திருமயிலையில் பக்கத்து பக்கத்து வீடுகளில் இருந்த போது, 'கபாலி'யிலும், 'காமதேனு'விலும் கலைக்குரிசிலின் காவியங்கள் வரும்போதெல்லாம் என்னை அழைத்துக் கொண்டு போய் காண்பிப்பார். பல ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த அரங்குகளில் மேட்னி பார்த்துவிட்டு, நாங்களிருவரும் அவசர அவசரமாக நடந்தும், ஓடியும், சைக்கிள் ரிக்ஷாவிலும், ஆட்டோ பிடித்தும் எங்கள் வீட்டுக்கு வருவோம். அப்படி நாங்கள் வருவதற்கு ஒரே காரணம் அன்று மாலை சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் நடிகர் திலகத்தின் திரைக்காவியத்தை காண்பதற்காகத்தான். 1980களிலிருந்தே நான் பார்க்கும் நாளிதழ்கள், பத்திரிகைகளில் நடிகர் திலகத்தின் புகைப்படங்கள், தகவல்கள், பட விளம்பரங்கள் வந்தால் அவற்றை கத்தரித்து சேகரித்து வைத்துக் கொள்வேன். பின்னர் அதை ஆல்பங்களாக்குவேன். டீவியில் ஞாயிறு மாலை நடிகர் திலகத்தின் படம் பார்க்கும் போது அந்தப் படத்தினுடைய புகைப்படம் எனது ஆல்பத்தில் இருந்தால் அந்தப் புகைப்படம் சம்பந்தப்பட்ட காட்சி படத்தில் எப்போது வரும் என்று காத்திருப்பேன். அந்தக்காட்சி வரும்போது கையிலிருக்கும் புகைப்படத்துடன் அக்காட்சியை ஒப்பிட்டுப் பார்த்து பரவசப்படுவேன். என் மாமாவும் மருமான் கண்டுபிடித்து விட்டான் என்று சந்தோஷப்படுவார். ஞாயிறு மாலை படத்திற்கு மட்டும் எங்கள் வீட்டு ஹாலில் குறைந்தபட்சம் 10 முதல் அதிகபட்சம் 15 பேராவது படம் பார்ப்போம். எங்கள் குடும்பம், எங்கள் மாமாவின் குடும்பம், அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் என எங்கள் வீட்டு ஹால் ஹவுஸ்ஃபுல் ஆகிவிடும். கார்த்திக் குறிப்பிட்டது போல் காலசக்கரம் பின்னோக்கி நகராதா என்ற ஏக்கமே மேலிடுகிறது.
மேலும், எனது தந்தையார் மற்றும் தந்தையாரது குடும்பத்தினருள் பெரும்பாலானோர் மக்கள் திலகத்தின் ரசிகர்கள். எனினும், நான் எனது தாயார் மற்றும் தாயார் குடும்பத்தினரின் வழியில் நடிகர் திலகத்தின் ரசிகனானதை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது. எனது தாயார் குடும்பத்திற்கும், தந்தையார் குடும்பத்திற்கும் இடையே சிவாஜி படங்கள்-எம்.ஜி.ஆர் படங்கள் குறித்த சாதாரண விவாதங்களும் சில சமயங்களில் காரசாரமான வாக்குவாதங்களும் நடைபெறுவதுண்டு. இதில் அச்சிறுவயதிலேயே நானும் கலந்து கொண்டு சிவாஜி ஸைடிற்காக (எனது தாயார் அணிக்காக) வாதிட்டிருக்கிறேன். எனது தந்தையார் குடும்பத்தில், எனது தந்தையின் இரண்டாவது அக்காள் மகன் மட்டும் தீவிர சிவாஜி ரசிகர். "ஆண்டவன் கட்டளை" திரைக்காவியத்தை 1964-ல் முதல் வெளியீட்டில் சென்னை 'சயானி'யில் அது ஓடிய 50 நாட்களிலும் மாலைக்காட்சியில் கண்டு களித்த மகா வெறியர். அவருடன் இதே காவியத்தை 1998-ல் சென்னை 'மேகலா'வில் மேட்னி காட்சி பார்த்ததை மறக்கவே முடியாது. 'கலைத்துறையில் சிவாஜியை மிஞ்ச ஆளே கிடையாது' என எல்லோரிடமும் அடித்து-இடித்துக் கூறுவார். அவரும் நானும் சந்திக்கும் போதெல்லாம் நடிகர் திலகம் குறித்துத்தான் அதிகம் பேசுவோம்.
சென்னை சாந்தியில் "சிம்ம சொப்பனம்" பார்ப்பதற்காக அந்த இளம் வயதில் நான் பிடித்த அடம், பிடிவாதம் இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. "சிம்ம சொப்பனம்" [30.6.1984] வெளியான மறுவாரம் வெள்ளியன்று இரவு [6.7.1984] சென்னை தொலைக்காட்சியின் 'ஒளியும் ஒலியும்' நிகழ்ச்சியில் முதல் பாடலாக நடிகர் திலகம்-சரிதா பாடும் [பாட்டுக்குரல்கள் : டி.எம்.எஸ்-வாணி ஜெயராம்] டூயட்டான 'புடவை கட்டிக் கொண்டு பூ ஒன்று ஆடுது' பாடல் ஒளிபரப்பானது. அந்தப்பாடல் என்னை எங்கோ கொண்டு சென்று விட்டது. அந்தப்பாடலைப் பார்த்து முடித்தவுடனேயே படத்தை உடனடியாக பார்த்தாக வேண்டும் என்று மிகுந்த பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டேன். எனது உணர்வுகளை எனது பெற்றோரும், எனது மாமாவும் புரிந்து கொண்டு மறுவாரமே என்னை 'சாந்தி'யில் நடைபெறும் அக்காவியத்தின் மாலைக்காட்சிக்கு அழைத்துச் சென்றார்கள். எனது மாமாதான் மருமானுக்காக படாதபாடுபட்டு டிக்கெட்டுகளை வாங்கி வந்தார். அந்தச் சிறுவயதில் வீட்டில் அவர்களே அழைத்துப் போகும் சிவாஜியின் பழைய-புதிய படங்களை பார்த்ததோடு மட்டுமல்லாமல், இப்படி பிடிவாதம் பிடித்தும் பல கலைக்குரிசிலின் புதிய படங்களைக் கண்டு களித்திருக்கிறேன்.
பின்னாளில், 'சாந்தி' திரையரங்கிற்கு வருகை புரியும் அனைத்து பழைய ரசிகர்களுடனும் அடியேனுக்கு நட்பு ஏற்பட்டதும் அந்த நல்லுறவு இன்று வரை நல்ல முறையில் தொடர்வதும் பெருமைக்குரிய விஷயம். இதற்கெல்லாம் இதயதெய்வத்தின் ஆசிகளும், இறைவனின் அருளுமே மூலகாரணங்கள்.
பசுமை நிறைந்த நினைவுகள் எழுத எழுத வற்றாத ஜீவநதி போல வந்து கொண்டே இருக்கின்றன.
மேலும் ஃப்ளாஷ்பேக் வேறொரு நாளில் வேறொரு பதிவில்...
மகிழ்ச்சியுடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
கலையுலக மகானின் "திருவருட்செல்வர்" திரைக்காவியத்தினுடைய விளம்பர சுவரொட்டிகள் பிரமிக்க வைக்கின்றன. அப்பர் முதற்கொண்ட அனைவரையும் தரிசிக்க இப்பொழுதே ஆவல் மேலிடுகிறது. போஸ்டர்களை போஸ்ட் செய்தமைக்கு பேஷான நன்றிகள்!
இன்றைய நவீன 'சாந்தி சினிமாஸ்' ஆல்பம் பிரமாதம் என்றால் அன்றைய "அண்ணன் ஒரு கோயில்" ஆல்பம் அட்டகாசம்!
திருச்சி மாவட்ட சிவாஜி மன்றத்தினர் என்ன அகத்தியரின் வழித்தோன்றல்களோ?! காவிரியைத் தன் கமண்டலத்தில் கொண்டு வந்த மாமுனி போல், கலைக்கடலை ஒரு குறுந்தகட்டில் கொண்டு வர முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்களே, பாராட்டுக்கள்! மலைக்கோட்டையினர் வடிவமைத்ததை மாநிலத்தினர் பார்த்து பரவசமுற அதனை இணையத்தில் ஏற்றிய தங்களை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும்!
அன்புடன்,
பம்மலார்.
சகோதரி சாரதா,
"அண்ணன் ஒரு கோயில்" குறித்த திறனாய்வுப் பதிவுகள் அனைத்துமே அருமை. அருமை 'அண்ண'னை சிலாகித்து அன்புச்சகோதரி எழுதுவது தானே சாலப்பொருத்தம். நடிகர் திலகம் பாடும் ஸோலோ பாடல்களில் 'மல்லிகை முல்லை' அடியேனுக்கு all-time favourite.
ஜெய்கணேஷும், பிரேம் ஆனந்தும் சிவாஜியின் பிரசார பீரங்கிகளாகத் திகழ்ந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. சிவாஜியின் போர்வாள் சசிகுமாரின் மறைவுக்குப்பின் நம்மவரின் புகழ்பரப்ப வீறுகொண்டு வந்த கலைவீரர்கள் இவர்கள் என்றால் அது மிகையன்று. சிவாஜியின் இன்னொரு போர்வாளாகத் திகழ்ந்தவர் ஸ்ரீகாந்த். 1976-ல் இந்தப் போர்வாள் ஒரு போலிவாள்(அட்டைக்கத்தி) என்ற உண்மை விளங்கியது. நடிகர் திலகத்தை தாக்கிப் பேசியது போல் வேறு எந்த நடிகரையாவது ஸ்ரீகாந்த் தாக்கிப் பேசியிருந்தால் அவரது கதி அதோகதியாகியிருக்கும்.
"வளர்த்த கடா முட்ட வந்தா வச்ச செடி முள்ளானா
போன ஜென்மப் பாவமடி அம்மாளு"
என அவர் பாடியது போல் எதையும் பொருட்படுத்தாமலும், பழி வாங்கும் குணம் துளியும் இல்லாதவராகவும் திகழ்ந்தார் கலைக்குரிசில் என்பதனை நாடறியும். எல்லாக் கடல்களிலும் சுனாமி என்கிற பழியுணர்ச்சி கோரத்தாண்டவமாடும். உலகில் சுனாமி(பழியுணர்ச்சி) வராத ஒரே ஒரு கடல் உண்டென்றால் அது நமது நடிப்புக்கடலில் மட்டும்தான்!
சசிகுமாரைப் போல் நடிகர் திலகத்தை சரியாகப் புரிந்து கொண்டிருந்த ஜெய்கணேஷும், பிரேம் ஆனந்தும் தாங்கள் கூறியது போல் நமது நன்றிக்குரியவர்களே!
அப்பேர்ப்பட்ட அவர்கள் இருவரில் ஒருவரான ஜெய்கணேஷ் "அண்ணன் ஒரு கோயில்" அனுபவங்களைப் பற்றி கூறியவற்றை இங்கே பதிவிடுவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். ['பேசும் படம்' அக்டோபர் 1977 இதழில், 'ஒரு கோயில் உருவாகிறது' என்கின்ற தலைப்பில் வெளியான "அண்ணன் ஒரு கோயில்" படக்கட்டுரையிலிருந்து]
"சிவாஜி சாரும் நானும் டாக்டர்களாக நடிக்கிறோம். சந்தர்ப்ப சூழ்நிலையால் ஜெயிலுக்கு போய்விடும் சிவாஜி அவர்களின் தங்கையை நான் காப்பாற்றுகிறேன். அதன் பிறகு அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதும், வாழ்வு தருவதும் பிரதான அம்சங்கள். நடிகர் திலகம் நடிப்பதைப் பார்க்கும் பொழுதே நாமும் நன்றாக நடிக்க வேண்டுமென்ற ஆசை எழுகிறது. எல்லோரும் நன்றாக நடிக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். என் மீது அவர் வைத்திருக்கும் அன்பை நான் என்றும் மறவேன். அவருடன் நடிக்கும் போது நடுக்கம் ஏற்படத்தான் செய்கிறது. என்றாலும் சிவாஜி அவர்களுடன் நடிப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்."
2009-ல் ஜெயா டீவியில் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் சுமித்ரா கூறியவை உணர்வுபூர்வமானது.
"நான் நடித்த திரைப்படங்களில் "அண்ணன் ஒரு கோயில்" என்னுடைய திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த படம். இந்தப் படத்தில் இடம்பெற்ற 'மல்லிகை முல்லை' பாடலில் நான் ஆண்டாள், மீனாக்ஷி, சீதை ஆகிய தெய்வீக கதாபாத்திரங்களில் அந்தந்த கதாபாத்திரங்களுக்கேற்ப விதவிதமான நகைகளையும், ஆடைகளையும் அணிந்து நடித்ததை என்னால் மறக்க முடியாது. இந்தப்படத்தில் நான் அணிந்த Rich Costumes போல வேறு எந்தப்படத்திலும் அணிந்ததில்லை.
'மல்லிகை முல்லை' பாடலின் வீடியோ:
http://www.dailymotion.com/video/xf7...-killai_school
நான் நடித்த படங்களுள் "அண்ணன் ஒரு கோயில்" மாபெரும் வெற்றி அடைந்த படமாகும். "பாசமலர்" திரைப்படத்திற்குப் பிறகு அண்ணன்-தங்கை பாசத்தை மிக வலுவாக வலியுறுத்திய படம் என அண்ணனின் ரசிகர்களும், பொதுமக்களும் இப்படத்தை ஏகமனதுடன் பாராட்டிய பொழுது என் மனம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தது. இப்படத்தில் என் நடிப்பு பாராட்டப்பட்டதென்றால் அதற்கு நடிகர் திலகம் தந்த ஒத்துழைப்பும், ஊக்கமுமே காரணம். புதுமுக நடிகை என்று அலட்சியப்படுத்தாமல் எனக்கு வசனமும், நடிப்பும் கற்றுக் கொடுத்த சிவாஜி 'அண்ணன் ஒரு கோயில்'."
அந்த சுமித்ராவுக்கு மட்டுமா, இந்த சாரதாவுக்கும் சிவாஜி 'அண்ணன் ஒரு கோயில்' தானே!
[நம் எல்லோருக்குமே நமது 'அண்ணன் ஒரு கோயில்' தான்!]
அன்புடன்,
பம்மலார்.
நாஞ்சில் நகரின் 'பயோனீர்முத்து' திரையரங்கில், கடந்த 7.3.2011 திங்கள் முதல் 10.3.2011 வியாழன் வரை - நான்கு நாட்களுக்கு தினசரி 4 காட்சிகளாக - புரட்சித்திலகத்தின் முழுமுதற்காவியமான "பராசக்தி" வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடியிருக்கிறது.
நமது மாடரேட்டர் திரு.நௌ அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் தமிழகம் வந்திருந்த போது ஸ்ரீவில்லிபுத்தூரில் "பராசக்தி" ஓடுவதை பார்த்து வியந்து அத்தகவலை 'பராசக்தி போஸ்டர்' புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். [பதிவிட்ட தேதி : 10.11.2010]. அந்த சுவரொட்டியில் 'எழுத்தின் சூப்பர் ஸ்டாரும் நடிப்பின் சூப்பர் ஸ்டாரும் இணைந்து படைத்த' போன்ற அருமையான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த வாசகங்களைக் கொண்ட அதே டிசைன் போஸ்டர்கள் தற்பொழுது நாகர்கோவிலின் பிரதான இடங்கள் எங்கும் காணப்படுகிறது.
இனிக்கும் இத்தகைய மிட்டாய் தகவலை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு ஸ்வீட் தேங்க்ஸ் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்தர்,
'அண்ணன் ஒரு கோயில்' பட ஸ்டில்கள் மிகவும் அருமை. இங்கு எல்லோரும் மிகவும் பாராட்டும், மலைக்கோட்டை மாநகராம் திருச்சி ரசிகர்களின் கைவண்ணத்தில் உருவான ஒளிப்பேழையைக்கண்டு இன்புற முடியவில்லையென்பது வருந்த வைக்கிறது. (அதற்கான பிளேயர் என் கணிணியில் வேலை செய்வதில்லை என்பதை ஏற்கெனவே சொல்லியிருந்தேன்.
நடிகர்திலகத்தின் புகழ் மணக்க தாங்கள் பல்வேறு கோணங்களிலும் செய்து வரும் முயற்சிகள் அனைத்துக்கும் வாழ்த்துக்கள், நன்றிகள்.
டியர் பம்மலார்,
சிறிது இடைவெளிக்குப்பின் வந்து, மிக நீண்ட சுவையான பதிவுகளைத்தந்து அசத்திவிட்டீர்கள். தங்களின் மலரும் நினைவுகள் மிகவும் சுவையானவை. தங்கள் குடும்பத்துக்குள்ளேயே இருவேறு ரசிகர்மன்ற மோதல்கள் நடந்தது, மிகவும் சுவையாக இருந்தன. அதிர்ஷ்ட வசமாக எங்கள் குடும்பம் முழுதுமே அண்ணனின் ரசிகப்படையாகிப் போனதால், காரம் சாப்பிட வழியில்லை, எப்போதும் பால் பாயாசம்தான். கல்லூரி நாட்களிலும் மற்ற மாணவிகள் எல்லாம் கமல், ரஜினி ரசிகைகளாக இருந்ததாலும், அவர்களின் ஆதர்ச நாயகர்கள் நடிகர்திலகத்துக்கு அணுசரணையாக அமைந்துபோனதாலும், அங்கும் மோதலுக்கு வழியில்லை. (அதனால்தான் இணையத்தில் சண்டை போட ஆள் கிடைத்தால் ஒரு கை பார்த்துவிடுவது என்பதை வழக்கமாக வைத்திருந்தேன். ஆனால் அப்படி சண்டை போட வந்தவர்களூம் ஒரு கட்டத்தில் நண்பர்களாகி விடுகின்றனர்).
'அண்ணன் ஒரு கோயில்' பதிவுகளுக்கு தாங்கள் அளித்துள்ள பதிலும், மேலதிக விவரங்களூம் சுவையானவை, குறிப்பாக அண்ணனுடன் ஜெய்கணேஷ் இணைந்தபோது கொடுத்த முதல் பேட்டி. ஜெய்கணேஷ் மற்றும் பிரேம் ஆனந்த் பற்றி நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு எப்போதும் உயர்ந்த அபிப்பிராயமே உள்ளது. சாந்தியில் ஒரு காலை நேரத்தில் நடந்த 'விஸ்வரூபம்' பட 100-வது நாள் விழாவுக்கு, பைக்கில் வந்திறங்கிய பிரேம் ஆனந்த், தியேட்டருக்குள் செல்லாமல் நேராக ரசிகர்கள் கூடி நின்ற பகுதியில் வந்து நின்று மன்ற நடவடிக்கைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினர் கலைஞர் (அப்போது எதிர்க்கட்சித்தலைவர்) வரும் நேரம் நெருங்கியதால், இடம் பிடிப்பதற்காக, மன்ற டோக்கன்களைக்காட்டி பால்கனிக்குச் சென்றுவிட்டோம். இன்னும் சற்று நேரம் பிரேம் ஆனந்த் பேசுவதை கிட்டே நின்று கேட்க முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. (அந்த விழாவைப்பற்றி விரிவான ஒரு பதிவு தனியே இடலாம் என்ற எண்ணமுள்ளது).
சுமித்ராவின் பேட்டிபற்றி கோடிட்டுக்காட்டியிருந்தேன். தாங்கள், விரிவாக அவர் சொன்னதை அப்படியே பதித்துவிட்டீர்கள். கூடவே, அடிஷனல் போனஸாக 'மல்லிகை முல்லை' பாடல் இணைப்பையும் தந்து சுவையூட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி. (அண்ணனும், இன்றைய அரசியலில் பரபரப்பாகப்பேசப்படும் கேப்டனும் இணைந்து நடித்த 'வீரபாண்டியன்' படத்தில் அண்ணனின் ஜோடியாக நடித்து, அதிலும் நம் மனதைக் கொள்ளைகொண்டார் சுமித்ரா).
நாஞ்சில் நகரில், பராசக்தியின் மறுவெளியீடு செய்தி மகிழ்ச்சி தந்தது. இவ்வாண்டு தீபாவளியன்று, 'பராசக்தி' காவியத்துக்கு 60-ம் ஆண்டு துவக்கம். கடந்த 59 ஆண்டுகளாக, இப்படம் பெட்டிக்குள் அடங்காமல் எங்காவது திரையில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
Pammalar's Malarum Ninaivugal & Quotes about Annan Oru Kovil are good. Really our Annan (Nadigarthilagam) Oru (Kalai) Kovil-thaan.
Thanks to all for the excellent reviews about Annan Oru Kovil
நண்பர்களே - குறிப்பாக, முரளி, பம்மலார், ராகவேந்தர், kc சேகர் மற்றும் சாரதா அவர்களுக்கு,
நீங்கள் தருகின்ற புள்ளி விவரம் மற்றும் நடிகர் திலகம் தொடர்புடைய செய்திகள் மலைக்க வைக்கின்றன.
அதை விட, நீங்கள் காட்டுகின்ற முனைப்பு, தீவிரம் மற்றும் அர்ப்பணிப்பு - சரியாகச் சொல்லவேண்டுமென்றால், நடிகர் திலகத்தின் குணநலன்கள் உங்களுக்கும் இருக்கின்றது என்று சொல்லலாம். திரு k. சந்திரசேகரன் அவர்கள் இன்னும் பல படிகள் மேலே போய், நடிகர் திலகத்தின் பேரவைக்கே தலைமை வகித்துக் கொண்டிருக்கிறார்.
என்னால் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றியும் அவரது படங்களுக்குச் சென்ற அனுபவங்களைப் பற்றி மட்டுமே பகிர்ந்து கொள்ள முடிகிறது. இருந்தாலும், அந்தக் காலத்தில் இருந்து, அவ்வப்போது பார்த்த சில புள்ளி விவரங்கள் மனதில் இருப்பதால், சில விஷயங்களை மட்டும் சொல்ல முடிகிறது. இதற்கு நான் சில காலம், குமுதம் பத்திரிகையில் வேலை பார்த்த அனுபவமும் பெரிதும் ஒத்துழைக்கிறது. ஆனாலும், உங்கள் அளவிற்கு என்னால் முடியாது.
எத்தனை பேரால், இன்றைக்கு இருக்கின்ற அவசர உலகத்தில், தனக்குப் பிடித்த ஒரு மனிதரைப் பற்றியும் அவர்தம் சாதனைகளைப் பற்றியும், அந்த மனிதர் மறைந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகும் பகிர்ந்து கொள்ள முடியும். அதாவது, அதற்கென்று நேரம் ஒதுக்க முடியும். நடிகர் திலகம் ஒருவருக்குத் தான் இத்தனை பெரிய ரசிகர் கூட்டம் - அவர் நம்மை விட்டு மறைந்து இத்தனை நாள் ஆன பிறகும் அதே அர்ப்பணிப்புடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு இந்தத் திரி வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதே சாட்சி. அது மட்டுமல்ல. திருச்சி மாவட்ட ரசிகர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் மற்றும் நாஞ்சில் நகரத்து ரசிகர்களின் முயற்சிகளும் இதற்குக் கட்டியம் கூறுகிறது. என்னாலும், திருச்சி மாவட்ட அன்பர்கள் முயற்சியினை, மற்ற நண்பர்கள் கூறுவதை வைத்துதான் அறிய முடிகிறதே தவிர பார்க்க முடியவில்லை. அதற்கேற்ற சாப்ட்வேர் என்ன என்று தெரியவில்லை.
என்னைப் பொறுத்தவரை, ரசனையுள்ள ஒவ்வொருவருமே, அவரது ஏதோ ஒரு காலகட்டத்தில், நடிகர் திலகத்தின் ரசிகராக ஆவதைத் தவிர்க்கவே முடியாது. பல நாட்களுக்கு முன்னர், ஒரு கூட்டத்தில், எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களும் இதைப் பிரதிபலித்திருந்தார்.
பல ஆண்டுகளுக்கு முன், கல்கண்டு பத்திரிகை நிறுவனர் மற்றும் ஆசிரியர் திரு. தமிழ்வாணன் அவர்கள் ஒரு முறை கேள்வி பதிலில் கூறியது நினைவுக்கு வருகிறது. அவர் கூறியது, உலகத்தில் ஒரே ஒரு நடிகருக்குத்தான், அவரது திறமைக்கு, உடனடியாக, அங்கீகாரம் கிடைக்கிறது - அதாவது - மக்களிடமிருந்து திரை அரங்கத்தில். அவர் அளவிற்கு, எந்த நடிகருக்கும், இந்த அளவிற்கு, கைத்தட்டலும், ஆர்ப்பரிப்பும், அவர் நடிக்கும்போது கிடைக்கிற அளவிற்கு - கிடைப்பதை நான் இதுவரை பார்த்ததில்லை என்று கூறினார்.
நடிகர் திலகத்தைப் பற்றிய ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி குறைந்தபட்சம் ஒருவருடனாவது பகிர்ந்து கொள்ளாமல், இது வரை ஒரு நாள் கூட எனக்கு கடந்ததில்லை. இந்தத் திரி வந்தவுடன், இந்த பழக்கம் பல மடங்கு கிளைத்து விட்டது. நேற்று கூட என்னுடைய அம்மா, பெரியம்மா, தங்கை, அத்தை, அவரது மகன் என அனைவரும் ஒரு சிறிய சடங்கிற்கு ஒன்று கூட நேர்ந்தபோதும், மலரும் நினைவுகளைப் பற்றி அசை போடும் போது, கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதம் ஆக்கிரமித்துக் கொண்டது - அனைவரது பேச்சும் - நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றியும், அவரது படங்களைப் பற்றியும், அவைகளுக்கு நாங்கள் சென்று வந்த அனுபவங்களைப் பற்றியும் தான். நினைவுகள் தொடரும்.
அன்புடன்,
பார்த்தசாரதி
Guys,
Just looked at thalaivar rare photos at Sivaji Santhanam's face book. Photo link is http://www.facebook.com/photo.php?fb...0131809&ref=nf
There are more than 10 photos, very very rare photos. Days not passed by without seeing or thinking about NT. He will live for another 1000 years in fan's heart.
Cheers,
Sathish
நடிகர் திலகமும் அவரது படங்கள் பிற மொழிகளிலும்
இது ஒரு இரு பாகங்களை அடக்கிய தொகுப்பு. ஒன்று, நடிகர் திலகமும் அவர் நடித்த ரீமேக் படங்களும் (இது சமீபத்தில்தான் முடிந்தது.). மற்றொன்று, நடிகர் திலகத்தின் படங்கள் பிற மொழிகளில் எடுக்கப்பட்டது பற்றிய பாகம்.
நம் நடிகர் திலகம் மற்ற எல்லா நடிகர்களையும் விட எல்லா விதத்திலும் மிகச் சிறந்த நடிகர் என்று பறைசாற்றுவதற்காகத்தான் இந்தக் கட்டுரைகளை எழுதத் தீர்மானித்தேன். இதுதான் நம்மைப்போன்ற எல்லா ரசிகர்களால் மட்டுமல்ல, பெரிய பெரிய ஜாம்பவான்களுமே ஏற்றுக் கொண்ட ஒன்றாயிற்றே; எதற்கு இதைத் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். நீங்கள் அனைவரும் நடிகர் திலகத்தைப் பல கோணங்களிலும் பார்த்து ரசித்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். நானும் உங்களுடன் சேர்ந்து என்னுடைய பார்வையிலிருந்து எழுதுகிறேன். அவ்வளவுதான். எல்லாவற்றுக்கும் மூலம் நம் அனைவரையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகம் என்ற மகா மனிதன் மற்றும் கலைஞன் தான். நான் என் மனதில் முப்பது வருடங்களுக்கு முன்னரே (தேவர் மகன் படம் தவிர்த்து) வடித்து, பெரிய கட்டுரையாய் எழுதி வைத்ததன் வடிவம்தான் இவை. அந்தக் கட்டுரை எரிந்து விட்டாலும், இப்போதும், எப்போதும், தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கேட்டாலும், இவை அத்தனையையும் மனப்பாடமாக என்னால் சொல்ல முடியும் (சில நுணுக்கமான புள்ளி விவரங்களை மட்டும் சில வெப்சைட்-களில் இருந்து இப்போது எடுத்தேன்.). திரு Y.G.மகேந்திரா அவர்கள் வசந்த் டிவியில் கூறிய அந்த வெர்சடைலிடி தான் இந்த இரு பாகங்களுக்கும் அடி நாதம். (திரு சோ அவர்களும் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்னர் பொம்மை இதழில் இந்த வெர்சடைலிடியைப் பற்றி விரிவாக எழுதியிருந்தார்.)
நடிகர் திலகம் ஒவ்வொரு மொழியிலும் வெளி வந்த வெவ்வேறு மாதிரியான பாத்திரங்களையும் அசலை விட பல மடங்கு பிரமாதமாக நடித்திருந்தார். அதே நேரம், தமிழில் அவர் செய்த மிகச் சிறந்த, கனமான, வித்தியாசமான, உணர்வுபூர்வமான ஒரு பாத்திரத்தையும், அவை வேறு மொழிகளில் எடுக்கப்பட்டபோது, அந்தந்த மொழிகளில் நடித்த பெரிய பெரிய நடிகர்களாலேயே, நடிகர் திலகம் தொட்ட உச்சத்தில், ஐம்பது சதவிகிதத்தைக் கூடத் தொட முடியவில்லை.
மற்றவர்களால்,நடிகர் திலகத்தின் அசலில் ஐம்பது சதவிகிதத்தைக் கூடத் தொட முடியாமல் போனபோது, நடிகர் திலகத்தால் மட்டும் எப்படி அசலை விட பல மடங்கு சிறப்பாக செய்ய முடிந்தது? பல காரணங்களைப் பலர் கூறலாம். எனக்குத் தெரிந்து முக்கியமான காரணம், எந்த அந்நிய மொழிக் கதை மற்றும் சூழலையும், தன்னுடைய மண்ணிற்கேற்ப மாற்றிக் கொடுத்த நடிகர் திலகத்தின் கற்பனை வளம் மற்றும் முனைப்பு தான் முக்கிய காரணமாக இருக்க முடியும். எந்த ரீமேக் படமும் வேறு மொழியில் வெற்றி பெறுவதற்கு முழு முதல் காரணம், மாற்றம் செய்யப்படும் மொழி மற்றும் அந்த சூழலுக்கேற்ப (nativity) படமெடுக்கப்படும் விதம், மற்றும் நடிகர்களின் கற்பனை வளம். இந்த விஷயத்தில், நடிகர் திலகம் மட்டுமே அனைத்து நடிகர்களை விடப் பல நூறு மடங்கு உயர்ந்து நிற்கிறார் என்றால் அதற்கு காரணம் அவரது தொழில் பக்தி, முனைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கற்பனை வளம் ஆகியவை மற்றவர்களை விட மிகப் பெரிதாக இருந்ததே.
சமீபத்தில், திரு பாலகிருஷ்ணன் அவர்கள் கூட எனது முந்தைய பதிவிற்கான தனது பதிலில், இந்த புதிய தலைப்பையொட்டி, சில படங்களைக் கோடிட்டுக் காட்டியிருந்தார். அதில் அவர் குறிப்பிட்ட படங்களில், பாசமலர் மற்றும் நவராத்திரி மட்டும் எடுத்துக் கொண்டு, வேறு எட்டு படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறேன். இதனால், திரு பாலகிருஷ்ணன் குறிப்பிட்ட மற்ற படங்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. அந்தப் படங்களை எனது வேறு கட்டுரைக்காக தனியாக வைத்திருக்கிறேன்.
1. பாகப்பிரிவினை (1959) - கலிசி உன்டே கதலு சுகம் (1961) தெலுங்கு / கான்தான் (1965) ஹிந்தி
இது பீம்சிங் - நடிகர் திலகம் - விஸ்வநாதன் ராமமூர்த்தி - கண்ணதாசன்/பட்டுக்கோட்டையார் (இதற்கப்புறம் பட்டுக்கோட்டையார் மறைந்து விட்டதால், படிக்காத மேதையிலிருந்து கண்ணதாசன் தொடர்ந்தார்.) கூட்டணியில் அமைந்த இரண்டாவது வெற்றிப் படம் (பதிபக்திக்குப் பிறகு). இன்னும் சொல்லப் போனால், முப்பது வாரங்களுக்கு மேல் ஓடி, தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் மிகப் பெரிய வெற்றியைக் குவித்த படம்.
பின்னாளில் வெளிவந்த அத்தனை குடும்பப் படங்களுக்கும் முன்னோடியாக அமைந்த படம். மிகப் பெரிய நட்சத்திரக் கூட்டத்திலும், தானும் ஒரு டீம் ப்ளேயராகவும் இருந்து, தன் தனித் தன்மையையும் நடிகர் திலகம் நிரூபித்த படம். வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற வீரம் சொரிந்த கதாபாத்திரமாகவே மாறி சிம்ம கர்ஜனை செய்து விட்டு, உடனேயே, அதற்கு நேர் மாறான கன்னையன் என்ற பட்டிக்காட்டு சப்பாணி கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டிய படம்.
தன் இளம் வயதிலும், கனமான பாத்திரத்தை ஏற்று, பார்ப்பவர் அத்தனை பேரையும், அவரோடும், பாத்திரத்தோடும் ஒன்ற வைத்து, கலங்கடித்த படம். நடிகர் திலகம் என்றால் எத்தனையோ தனித் தன்மைகள் உண்டு. USP என்கிறார்களே. இவருக்குத்தான் எத்தனை USP-கள். அதில் மிக முக்கியமானது முழுமையான மற்றும் நிறைவான நடிப்பு. இதில், சப்பாணி கதாபாத்திரத்துக்கேற்றார்ப் போல், கடைசிக் காட்சிக்கு முன் காட்சி வரை, கேமரா கோணம் தொலைவில் இருக்கும்போது கூட, அந்த விந்தி விந்தி நடக்கும் சப்பாணி நடையை மிகச் சரியாக maintain பண்ணி நடித்தார் (தாழையாம் பூ முடிச்சு பாடலின் முடிவில் வரும் ஹம்மிங்கோடு முடியும் காட்சி ஒரு சாம்பிள்). இதே சப்பாணி பாத்திரத்தை பின்னாளில் கமல் பதினாறு வயதிலே படத்தில் ஏற்று நடித்த போது, அதற்கு, பாகப்பிரிவினை கன்னையனை மானசீகமாக நினைத்துக் கொண்டு தான் நடித்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், நடிகர் திலகத்திற்கு செவாலியே விருது வழங்கப் பட்ட அந்த மாபெரும் விழாவிற்கு நானும் சென்றிருந்தேன். அதில் பேசிய, நடிகை சரோஜா தேவி அவர்கள், இந்தப் படத்தில், ஒரு காட்சியில், தான் பிரசவ வேதனையால் தவிக்கிறார்ப் போல் நடிக்க முடியாமல் போக, நடிகர் திலகம் அந்தக் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று நடித்துக் காட்டியதில், ஒரு சிறிய பங்கே தான் நடித்து, நல்ல பெயர் வாங்கியதாகக் குறிப்பிட்டார்.
இதில், ஒவ்வொரு முறை அவர் எம். ஆர். ராதாவாலும், சொந்தத் தம்பி எம். என். நம்பியாராலும் அவமானப் படுத்தப்படும்போதும், அவருடன் சேர்ந்து மக்களும் விம்முவர். இந்தப் படத்தைப் பற்றியும், இதில் இடம் பெறப் போகும் மற்ற எல்லா படங்களையும் பற்றி இன்னும் விரிவாக எழுத முடியும், இந்தக் கட்டுரையின் நோக்கம் அதுவல்ல, என்பதால், இப்போதைக்கு இது போதும்.
பாகப்பிரிவினை தெலுங்கில் முதன் முறையாக 1961 -இல் எடுக்கப்பட்ட போது, கலிசி உன்டே கதலு சுகம் என்று பெயர் வைத்தனர். (மரோ சரித்ரா தெலுங்கு படத்தில், லிப்டில் ஒரு பாடல் வரும் - பல தெலுங்குப் படங்களின் பெயர்களை வார்த்தைகளாக வைத்து - அந்தப் பாடலின் முதல் வரி - அதாவது பல்வேறு படங்களின் - இது தான்.) தெலுங்கில் பிரதான பாத்திரங்களில் என்.டி. ராமாராவும் சாவித்திரியும் நடித்தனர். ரேலங்கி என்ற பண்பட்ட நகைச்சுவை நடிகர் எம்.ஆர். ராதா ஏற்ற நகைச்சுவை கலந்த வில்லன் பாத்திரத்தை ஏற்றார். என்.டி. ராமாராவ் புராண இதிகாச (ராமர், கிருஷ்ணர் வேடங்கள்) மற்றும் மசாலா படங்கள் மட்டுமல்லாமல், பல வித்தியாசமான படங்களில், நல்ல வேடங்களிலும் மிக நன்றாக நடித்திருக்கிறார். இருப்பினும், கன்னையன் பாத்திரத்தில், நடிகர் திலகம் அளவிற்கு அவரால் நடிக்க முடியவில்லை. படமும் பெரிய வெற்றியைப் பெறவும் முடியவில்லை.
ஆறு வருடங்களுக்குப் பிறகு பாகப்பிரிவினை ஹிந்தியில் எடுக்கப் பட்டபோது (காந்தான்), அதை மறுபடியும், பீம்சிங் தான் இயக்கினார். பிரதான பாத்திரங்களில், சுனில் தத், நூதன் மற்றும் பிரான் முதலானோர் நடித்தனர். ஏன் ஆறு வருடங்களுக்குப் பிறகு? பாகப்பிரிவினை வெளிவந்தவுடனேயே, இதை ஹிந்தியில் எடுக்க விரும்பி, வட நாட்டின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவரான, திலீப் குமாரை அணுகிக் கேட்டபோது, அவர், என்னால் விஷப் பரீட்சையெல்லாம் செய்ய முடியாது என்று கூறி நாசூக்காக ஒதுங்கிக் கொண்டாராம்.
சுனில் தத் காங்கிரஸ்காரர் மட்டுமல்லாது, நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பரும் ஆவார் (அவர்தம் மனைவி நடிகை நர்கீசும் நடிகர் திலகத்தின் நண்பர்தான்). நடிகர் திலகத்தின் படங்கள் ஹிந்தியில் எடுக்கப் பட்டபோது, பெரும்பாலும், சுனில் தத்தும், பின்னாளில், சஞ்சீவ் குமாருமே, அவைகளில், நடித்தனர். இந்தப் படம் சுனில் தத்துக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்து, ஓரளவிற்கு நன்றாகப் போனது என்றாலும், தமிழின் சாதனையை நெருங்கக் கூட முடியவில்லை. அதற்குக் காரணம், நடிகர் திலகத்தின் உயிர்ப்பான நடிப்பில், ஓரளவுதான் சுனில் தத்தால் செய்ய முடிந்தது. மற்ற நடிகர்களும், அசல் அளவிற்கு, செய்ய முடியவில்லை.
தொடரும்,
அன்புடன்,
பார்த்தசாரதி
கலிசி உன்டே கதலு சுகம்
Partha, good to read your posts covering other languages and the comparisons.
The above movie should read kalisi uNtE kaladha sukamu. It means koodi vAzhndhAl kOdi nanmai.
In passing, may I mention that deiva magan was remade in Telugu - and to keep with the gentlemanly traditions of this thread, I will merely state that the "Actor" attempting it in Telugu was Krishna. No further comments.
:lol: Okay, we got it.
நடிகர் திலகமும் அவரது படங்கள் பிற மொழிகளிலும் (தொடர்ச்சி)
2. படிக்காத மேதை (1960) - மெஹர்பான் (1967) - ஹிந்தியில்
மறுபடியும் பீம்சிங் - நடிகர் திலகம் - கண்ணதாசன் கூட்டணி (இசையமைப்பு மட்டும் இந்த முறை மாறியது. "மாமா" கே.வி. மகாதேவன் அவர்கள் இசையமைத்திருந்தார்). மிகப் பெரிய வெற்றியடைந்த படம். குறிப்பாக, மதுரை தங்கம் திரையரங்கத்திலேயே (ஆசியாவிலேயே பெரிய திரையரங்கம்) நூறு நாட்களைக் கடந்து ஓடியது.
இது ஒரு வங்க மொழிப் படத்தின் தழுவல் என்றாலும், இந்தப் படம் பிற மொழிகளில், குறிப்பாக, ஹிந்தியில் எடுக்கப்பட்டபோது, தமிழ்ப் படத்தை ஒட்டியே எடுத்ததால், இறுமாப்பாக, படிக்காத மேதை படத்தை இந்த பாகத்தில், சேர்த்துக்கொள்வதில், பெருமை கொள்கிறேன்.
இந்தப் படத்தைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம். பாகப் பிரிவினை படத்திற்குப் பிறகு, மறுபடியும், ஒரு அப்பாவி/வெகுளி கதாபாத்திரம். பாகப்பிரிவினை கன்னையனை ஒரேயடியாக அப்பாவி/வெகுளி என்று கூற முடியாது. அது ஒரு விதமான கிராமத்து இளைஞன் வேடம் - சப்பாணி என்பதால் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பதாக நடித்திருப்பார். அந்த வித்தியாசமான கெட்டப்பே - சிகை அலங்காரம், காது கடுக்கன், மீசை (பெரிதாக ட்ரிம் செய்யப்படாமல் எளிமையாக இருக்கும்.), இத்யாதி பிளஸ் சப்பாணி என்பதால் வரும் அந்த இரக்க உணர்வு அந்தக் கதாபாத்திரத்துடன் படம் பார்க்கின்ற ஒவ்வொருவரையும் ஐக்கியப்படுத்தி விடும். ஆனால், கடைசியில், அவரது கை, கால் சரியாகி விட்டபின்பு - அவருடைய ஒரிஜினல் சுருள் முடி வேறு சேர்ந்து விடும்! ஒரு மாதிரி சர்- என்று கன்னையன் பாத்திரத்தின் அந்த வெள்ளந்தியான தன்மை குறைகிறார்ப் போல் இருந்து மறுபடியும், நடிகர் திலகத்தின் ஒப்பற்ற உடல் மொழியால் மறுபடியும் அந்தப் பாத்திரம் உயிர் பெறும். (அவருக்கு மற்றவர் சொல்லித்தான் தெரிய வரும் தனக்கும் மற்றவர்போல் கை கால் சரியாகி விட்டதென்று - ஒரு மாதிரி கையையும் காலையும் ஆட்டி குதிப்பார் - உடனேயே, எல்லோரையும் அந்த கன்னையன் கதாபாத்திரத்திற்குக் கூட்டிச் சென்று விடுவார்.) கெட்டப் மாற்றம் என்பதற்கு நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே எந்த அளவிற்கு நடிகர் திலகம் முக்கியத்துவம் கொடுப்பார் என்பதற்கு இந்த இரு கதாபாத்திரங்களுமே சாட்சி.
படிக்காத மேதை "ரங்கன்" கதாபாத்திரத்திற்கு அவர் எந்த புதிய கெட்டப்பும் கொடுக்காமல் விட்டிருப்பார். அதாவது, பாகப்பிரிவினையில், கன்னையனுக்கு கை கால் சரியாகி விட்டபின் வரும் அந்த நார்மல் கெட்டப். இந்தப் படம் முழுவதும், ஒரு முண்டா பனியனும் வேட்டியுமே அவரது உடை. ரங்கன் ஒரு வேலைக்காரன் தானே. ஆனாலும், தன ஒப்புயர்வற்ற உடல் மொழி, வசன உச்சரிப்பால் மட்டுமே, இந்த அப்பாவி ரங்கன் பாத்திரத்தை, காலத்தால் அழிக்க முடியாத, ஒரு திரைக் கதாபாத்திரமாக மாற்றினார். ஆம். அவர் நடித்த எத்தனையோ சமூகச் சித்திரங்களில் ஏற்ற கதாபாத்திரங்களில், முதல் பத்து இடங்களில், முன்னணியில் அமைந்திருக்கும் பாத்திரம் பலருக்கும், இந்த "ரங்கன்" தான். (இதற்கும் வழக்கம் போல் கடும் போட்டி - பாரிஸ்டர், prestige -காரர், போன்றவர்களிடமிருந்து. அதைத் தனியாக வைத்துக் கொள்ளலாம்.)
இந்தப் படத்தைப் பற்றி யார் எப்போது எழுதினாலும், இரண்டு பெயர்கள் தவிர்க்க முடியாதவை. ஒன்று, நடிகர் திலகம் என்றால், மற்றொன்று, எஸ். வி. ரங்காராவ். என்ன ஒரு நடிப்பு. (அதிலும், குறிப்பாக, "எங்கிருந்தோ வந்தான்" பாடலில், பிறகு, கடைசியாக சிகரெட்டை ஒரு இழுப்பு இழுத்து விடும் காட்சி, போன்றவை).
எத்தனையோ காட்சிகள் - குறிப்பாக - நடிகர் திலகமும் சௌகாரும் வீட்டை விட்டுக் கிளம்பி வாசலில் ரிக்க்ஷாவில் ஏறப் போகும் போது, அங்கு வரும் எஸ்.வி.ரங்கா ராவ், சௌகாரிடம், அவனுக்கு உலகம் தெரியாது - நீதான் பார்த்துக்கணும் என்று சொல்லி விட்டு - நடிகர் திலகம் நோக்கித் திரும்புவார். நடிகர் திலகம் அது வரை முகத்தைத் திருப்பிக்கொண்டிருப்பார் - ரங்காராவ் தான் அவரை என் முகத்தில் விழிக்காதே என்று சொல்லி விட்டாரே! ரங்கா ராவ் நடிகர் திலகத்திடம் பேச ஆரம்பித்து அவரது தோளைத் தொடுவார் - அதாவது - அவர் தன்னிடம் கோபத்தில் இருக்கிறார் என்று நினைத்து - ஆனால் நடிகர் திலகமோ ஊமையாய் அழுது கொண்டிருப்பார். அவரைத் திருப்பியவுடனே நடிகர் திலகம் வெடிப்பார் பாருங்கள். இந்தக் காட்சியை நினைத்துக் கொண்டு எழுதும்போதே, கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறதே, பார்த்தால்! இந்தக் காட்சியை திரை அரங்கத்தில் பார்க்கும் போது - இன்னும் நினைவில் நிழலாடுகிறது - அரங்கமே அழுது கொண்டிருந்தது. அந்த அளவிற்கு, படம் பார்க்கும் அனைவரையும் தன் வசம் கட்டிப் போட்டிருப்பார்.
பொதுவாக, நடிகர் திலகம் சில காட்சிகளுக்கு அரங்கம் அதிர கை தட்டல் வாங்குவார் - சில காட்சிகளிலோ - அனைவரையுமே கட்டிப் போட்டு விடுவார் - சில காட்சிகளிலோ - அனைவரையுமே, குறிப்பாக, அவருடைய பிரத்தியேக ரசிகர்களாகிய நம்மை ஆர்ப்பரிக்க வைத்து விடுவார். அவர் சிரிக்கும்போது சிரித்து, அழும்போது அழுது, கோபத்தில் வெடிக்கும்போது வெடித்து - இப்படியாக அவருடனேயே எல்லோரையும் பயணிக்க வைத்து விடுவார்.
அடுத்தபடியாக, ரங்கா ராவ் இறந்தவுடன், அவர் வீட்டிற்குச் சென்று கண்ணாம்பாவுடன் சேர்ந்து வெடித்து அழும் காட்சி. இந்தப் படம், எண்பதுகளில், தூர்தர்ஷனில், ஒளிபரப்பப்பட்டபோது, எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் (என் நண்பர்களும் சேர்ந்து தான்) பார்த்து அழுதது இன்னும் நினைவில் உள்ளது. அது மட்டுமல்ல, உடனே வந்த ஒரு வார இதழில் (குமுதம் என்று நினைவு), நடிகை சுகாசினி மணிரத்னம் அளித்த பேட்டியில், இந்தக் காட்சியைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர், கமல் முதல் வீட்டில் இருந்த ஒவ்வொருவரும் அடக்க முடியாமால் அழுதோம் என்று கூறி இருந்தார். இன்று வரை, இந்தப் படம் பார்க்கின்ற அனைவரையும் ஆட்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. அதாவது, ரங்கன் இன்னமும், அனைவரையும், இன்று பிறந்த குழந்தை வரை, தன் வசம் கட்டிப்போட்டுக்கொண்டுதானிருக்கிறான்.
இந்தப் படம் ஹிந்தியில், மெஹர்பான் என்ற பெயரில் எடுக்கப் பட்டபோது, மறுபடியும், பீம்சிங் தான் இயக்கினார். மறுபடியும், சுனில்தத் - நூதன் நடித்தனர். நடிகர் திலகம் தொட்ட உச்சத்தில் பாதி கூட சுனில் தத்தால் தொட முடிய வில்லை - படமும் தமிழ் அளவிற்கு வெற்றி பெற முடியவில்லை.
Dear Plum,
Thanks for your immediate response and for correction. It's as usual, typing mistake. It's not only Deiva Magan, even Thirisoolam (both triple roles) was remade in Telugu by Mr. Krishna only. In fact, as you know, Mr. Krishna was a very close friend and well wisher of our NT and he also produced a few movies with NT in the lead. He also acted with him in some original Telugu movies, including Nivuru Kappina Nippu. I got these details as some of my cousins are born and brought up in Andhra only and I also used to visit Nellore/Hyderabad during my school days for summer holidays.
As I have reserved Deiva Magan for my ultimate presentation, for strategic reasons, have not included the same in this article.
Thanks once again,
Parthasarathy
" In fact, as you know, Mr. Krishna was a very close friend and well wisher of our NT and he also produced a few movies with NT in the lead"
Yes, yes, that is why I refrained from making comments on Krishna's remakes. The mention of Deiva Magan was also not to pre-empt you but just to add a snippet I happen to know.
நடிகர் திலகமும் அவரது படங்கள் பிற மொழிகளிலும் (தொடர்ச்சி)
3. பாசமலர் (1961) - ரக்த சம்பந்தம் (1963) தெலுங்கு / ராக்கி (1965 ) ஹிந்தி
மறுபடியும் பீம்சிங் - நடிகர் திலகம் - கண்ணதாசன் - விஸ்வநாதன் ராமமூர்த்தி - கூட்டணி (மறுபடியும் மெல்லிசை மன்னர்கள் இந்தக் கூட்டணியில் இணைந்தனர் - இதற்கு முன் வந்த பாவ மன்னிப்பு படத்திலேயே இவர்கள் இணைந்து விட்டனர். பாவமன்னிப்பு படத்தைப் பற்றியும் அந்தப் படத்தின் இசை பற்றியும் தனியாக எழுதும் எண்ணம் உள்ளது. உண்மையில், பாவ மன்னிப்பு படப்பாடல்கள் தான் இன்று உள்ள அனைத்து பாடல்களுக்கும் அதாவது தமிழ் சினிமா சங்கீதத்திற்கு முன்னோடி. சங்கீதத்தைப் பற்றிய அதற்குள்ள ஹப்பில் தனியாக எழுத வேண்டும்.)
பாசமலர் காலத்தை வென்ற காவியம். இன்றளவும், அண்ணன் தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாக மேற்கோள் காட்டப் படும் உயிரோவியம். 1961 -ஆம் ஆண்டில், நடிகர் திலகத்தின் இரண்டாவது வெள்ளிவிழாப் படம். கே.பி. கொட்டாரக்கரா என்ற கேரளக் கதாசிரியர் மற்றும் பட அதிபரின் கற்பனையில் உருவான கதையை தமிழில், ராஜாமணி பிக்சர்ஸ் பேனரில் எடுத்தனர். ஒரு வகையில், நடிகர் திலகத்தின் சொந்தப் படம் என்றும் கூறலாம்.
இந்த நிமிடம் வரையில், இன்னும் எத்தனை வருடங்கள் சென்றாலும், படம் பார்க்கும் ஒவ்வொருவரையும், பார்த்தவுடன், அவரவர்களது அண்ணன் தங்கையை நினைவுகூர வைக்கும் படம்.
இந்தப் படத்தின் டைட்டில் ஓடத் துவங்கியவுடன் ஒரு பாடல் பின்னணியில் துவங்கும் - "அன்பு மலர், ஆசை மலர்..." என்று. இசையமைப்பாளரும், மெல்லிசை மன்னரின் ஆரம்ப கால நண்பர் மற்றும் உதவியாளருமான திரு ஜி.கே. வெங்கடேஷ் அவர்களது வித்தியாசமான குரலில். (ஏற்கனவே, பாவ மன்னிப்பு படத்தில் " நடிகர் திலகம் சிறையிலிருக்கும் போது பின்னணியில் வரும் "இன்பமும் காதலும் இயற்கையின் நீதி..." என்று பாடியிருந்தார்.) இந்தப் பாடல் டைட்டிலில் ஓடிக்கொண்டிருக்கும்போதே, ஒரு சற்றே வயதுக்கு வந்த ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் வருவார்கள் (அந்த சிறுமி நடிகை குட்டி பத்மினி, சிறுவன் தெரியவில்லை.) அந்த சிறுவன் அந்தச் சிறுமியைப் பாடசாலையிலிருந்து ஆதரவுடன் (ஒரு பசுவையும் கன்றையும் வேறு காட்டுவார்கள் உதாரணத்திற்காக)
வீட்டிற்குக் கூட்டிச் செல்லுவதும், அவளுக்குத் தலை சீவி விடுவதும், தூங்க வைப்பதும்... அடடா! முதல் காட்சியிலேயே, நம் அனைவரையும், அந்தப் படத்தின் களத்திற்குக் கூட்டிச் சென்று விடுவார்கள். அதாவது, இயக்குனர், நடிகர்கள், பாடுபவர், பாட்டு எழுதியவர், மெட்டுப் போட்டவர் என்று அனைவரும் - இதுவன்றோ கூட்டு முயற்சி! அப்போது துவங்கி, கடைசிக் காட்சி வரை, எத்தனை எத்தனையோ காட்சிகளையும், நடிப்பையும், எத்தனையோ பேர் வடித்து விட்டாலும், இன்னுமொரு காட்சி.
நடிகர் திலகம் முதலில் சாவித்திரியை ஜெமினிக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்தபின், ஜெமினி அவர் வீட்டுக் கொல்லைப் புறத்தில் வந்து சாவித்திரியை சந்தித்துப் பேசிக் கொண்டிருப்பார். அப்போது, சாவித்திரி, எதிர்காலத்தில், கணவராக வரப்போகும் ஜெமினியிடம், அவரது காதலரை விட, தனக்கு, அண்ணனாக, தாயாக, தந்தையாக, எல்லாமுமாக இருக்கும் தன் அண்ணன் (நடிகர் திலகம்) தான் எனக்கு எல்லா விதத்திலும் உயர்ந்தவர். உங்களுக்காக, நான் அவரைப் பகைத்துக் கொள்ள முடியாது என்று சொல்லும்போது, ஜெமினி தன் வீட்டிற்கு வந்து கொல்லைப் புறத்தில் தங்கை சாவித்திரியிடம் பேசிக்கொண்டிருக்கிறார் என்று, அவரது வேலைக்காரர் (திரு எஸ். ஏ. கண்ணன் அவர்கள்) மூலம் தெரிந்து, கொலை வெறியுடன் துப்பாக்கியுடன் வந்து, சாவித்திரி பேசும் இந்த வார்த்தைகளைக் கேட்டு, கண்களில் உருண்டோடும் கண்ணீரை அந்தத் துப்பாக்கியாலேயே துடைத்துக் கொண்டு சென்று விடுவார். இது பற்றி எல்லோரும் பேசியாகி விட்டது.
இதற்கடுத்து, நடிகர் திலகம் சாவித்திரியிடம், உனக்கு கல்யாணம் செய்யலாமென்று இருக்கிறேன். மாப்பிள்ளையை அழைத்து வந்திருக்கிறேன் வந்து பார்த்து பிடித்திருக்கிறதா என்று சொல்லம்மா என்று சொல்வார். இதற்கு சாவித்திரி, நீங்கள் பார்த்து என்ன சொன்னாலும் சரி அண்ணா என்று சொல்வார். உடனே, நடிகர் திலகம் ஜெமினியை - ஆம், படம் பார்க்கும் நாமோ, சாவித்திரியோ எதிர்பார்க்காத - ஜெமினியை அழைத்து, சாவித்திரியிடம் கூட்டிச் சென்று, சாவித்திரியிடம், மாப்பிள்ளையைப் பாரம்மா என்பார். அது வரை சோகமாக (ஆம் அவர் வேண்டா வெறுப்பாகத்தான் சம்மதித்திருப்பார். அவரைப் பொறுத்தவரை, அண்ணன் தான் முக்கியம் என்று நினைத்ததால். இருந்தாலும், காதலால் சிக்குண்டு தவித்துக் கொண்டிருப்பார்.) அதுவரை சோகமாகத் தலை குனிந்து கொண்டிருந்தவர் இலேசாகத் தலையைத் தூக்கிப் பார்க்க, நேரில், தன் ஆருயிர்க் காதலர்..... ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும், ஆனந்தக் கண்ணீரிலும் நெகிழ்ந்து திக்குமுக்காடிப் போய், "அண்ணா" என்று நடிகர் திலகம் காலில் விழ, அவரைத் தூக்கி, ஆதரவோடும், கனிவோடும் நடிகர் திலகம் கூறும் அந்த வார்த்தைகள்....
"ஒரு பெண் தன் வாழ்க்கையில் யாரை வேணுன்னாலும் விட்டுக்கொடுக்கலாம். ஆனால், தன் வாழ்க்கையின் ஆதாரமான, தன் காதலரையே, தன் அண்ணனுக்காக விட்டுக் கொடுக்கும்போது, அந்தத் தங்கைக்காக, ஒரு அண்ணன் எது வேணுன்னாலும் செய்யாலாம்மா" என்று சொல்லி, சாவித்திரியையும், ஜெமினியையும் அழைத்து ஆசீர்வாதம் செய்வார். இந்த வாக்கியத்தில், அவர் "எது வேணுன்னாலும்" என்று சொல்லும்போது மட்டும், எல்லோரும் கூர்ந்து கவனியுங்கள். அந்த மொத்த வாக்கியத்தில், இந்த வரிகள் தான் மிக மிக முக்கியமானவை. அதனை உன்னிப்பாக உள்வாங்கி, மிகச் சரியாக, இந்த வார்த்தைகளுக்கு மட்டும் ஒரு விதமான அழுத்தத்தைத் தனக்கேயுரிய பாணியில் பேசி, நடித்து, அந்தக் காட்சிக்கு உயிர் கொடுத்ததனால்தான், அவர் நடிகர் திலகமாகிறார்.
இதற்கு முந்தைய காட்சியில், தன் கண்ணிலிருந்து பெருகும் கண்ணீரை துப்பாக்கியால் துடைக்கும்போது, தான் அழுது மக்களை அழ வைத்தவர், இந்தக் காட்சியில், தான் அழாமல், தமிழகத்தையே அழ வைத்தார். இதோ இந்தக் காட்சியையும், என் கண்களில் இருந்து பெருகும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டேதான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இது போல் எத்தனை எத்தனையோ உணர்ச்சிமயமான கட்டங்களும், நடிப்பும், பார்க்கும் அனைவரையும் நெக்குருக வைத்தது - இன்றும் வைக்கிறது - என்றும் வைக்கும்.
இந்தப் படம் முதலில் தெலுங்கில் 1963 -இல் ரக்த சம்பந்தம் என்ற பெயரில் எடுக்கப் பட்டது. என்.டி. ராமாராவ் நடிகர் திலகம் நடித்த பாத்திரத்தையும், சாவித்திரி மறுபடியும் அதே தங்கை வேடத்திலும், ஜெமினி வேடத்தில், ஜக்கையாவும் நடித்தனர். என்.டி. ராமாராவ் மறுபடியும், ஒரு கனமான வேடத்தை ஏற்று நடித்து, தான் ஒரு versatile நடிகர் என்று பெயர் வாங்கினார். சாவித்திரி பற்றிக் கூறவே வேண்டாம். ஜக்கையாவும் நன்றாகத் தான் நடித்திருந்தார் - படமும் நன்றாகத் தான் போனது. ஆனாலும், தமிழ் பாசமலர் அடைந்த அந்த காவிய அந்தஸ்தை அடைய முடியவில்லை. காரணம், நடிகர் திலகத்தின் நடிப்பை, என்.டி.ராமாராவாலும், இதனாலேயே, சாவித்திரியாலும் திரும்பவும் அந்த நடிப்பைக் கொடுக்க முடியாமல் போனதாலும் தான்.
பாசமலர் ஹிந்தியில், 1965 -இல் ராக்கி என்ற பெயரில், சிவாஜி பிலிம்சால் பீம்சிங் இயக்கத்தில் எடுக்கப்பட்டபோது, வட இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவரான அசோக் குமார் நடிகர் திலகத்தின் வேடத்திலும், வஹீதா ரஹ்மான் சாவித்திரி வேடத்திலும், பிரதீப் குமார் ஜெமினி வேடத்திலும் நடித்திருந்தனர். எத்தனையோ பேருக்குத் தெரிந்திருக்கும். இந்தப் படத்தின் உயிர் நாடியான கடைசிக் காட்சியில் (கை வீசம்மா... கை வீசு...), அசோக் குமாரால் சரியாக நடிக்க முடியாமல் போக, அவரும் தயங்காமல், நடிகர் திலகத்தை அணுகி, அவருடைய ஆலோசனையின் பேரில், அசோக் குமார் என்ற ஜாம்பவான் நடிகர் திலகம் சொல்லிக்கொடுத்தபடி நடித்தார் என்ற செய்தி, இன்று வரலாறு. இந்தப் படமும் ஹிந்தியில் ஓரளவு நன்றாகவே ஓடியது என்றாலும், நடிகர் திலகத்தின் நடிப்புச் சாதனையில், ஐம்பது சதம் தான் அசோக் குமார் செய்தார் எனலாம். (ஆனால், இவரது க்ரிஹஸ்தி என்ற ஹிந்திப் படம் தமிழில், மோட்டார் சுந்தரம் பிள்ளை ஆன போது, நடிகர் திலகம் அசோக் குமாரை விட பல மடங்கு உயர்வாக நடித்திருந்தாரே! இந்தப் படத்தை என் முந்தைய ரீமேக் கட்டுரையில் தவிர்த்து விட்டேன், அது வேறொரு ஆய்வில் பங்கு கொள்ளவிருப்பதால்.)
பாசமலர் மேற்கூறிய இந்த இரண்டு மொழிகளிலும் நன்றாகவே ஓடினாலும், தமிழின் காவிய அந்தஸ்தை பெற முடியாமல் போனதற்குக் காரணம் - நடிகர் திலகத்தின் நடிப்பு மற்றும் நடிகர் திலகத்திற்கும் சாவித்திரிக்கும் அமைந்த அந்த அண்ணன் தங்கை பொருத்தம். அந்த அளவுக்கு அண்ணன் தங்கையாகவே அவர்கள் மாறி வாழ்ந்ததால், தமிழகமே இவர்களிருவரையும் நிஜ அண்ணன் தங்கையாகவே பார்க்க ஆரம்பித்து விட்டது. இதனால் தான், இந்தப் படம் வெளியான சில மாதங்களிலேயே வெளிவந்த "எல்லாம் உனக்காக" படம், மிக நன்றாக அமைந்தும், தோல்வி அடைந்தது. அந்தப் படத்தில், நடிகர் திலகமும் சாவித்திரியும் ஜோடியாக நடித்ததை மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை.
தொடரும்,
அன்புடன்,
பார்த்தசாரதி
டியர் பம்மலார்,
சென்னை சாந்தி திரையரங்க மலரும் நினைவுகளாக தாங்கள் பகிர்ந்து கொண்ட நிகழ்வுகள் தங்களுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் உள்ளத்தில் உற்சாக வெள்ளமும் மகிழ்வும் நினைக்கும் போதெல்லாம் உண்டாகும் என்பது திண்ணம். மேலும் தங்களுடைய நினைவுகளை அறிய ஆவல்.
நிழற்படங்களுக்குப் பாராட்டுத் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
டியர் ராகேஷ்,
vee yaar என்ற பெயரில் FACEBOOK ல் படங்களைத் தரவேற்றியது அடியேன். மற்றபடி இதர படங்களும் அத்திரியும் எம்.ஆர்.சந்தானம் அவர்களின் புதல்வர் சிவாஜி அவர்களுடையதாக இருக்கும் என்று யூகிக்கிறேன்.
டியர் பார்த்த சாரதி,
நடிகர் திலகத்தின் படங்கள் வேற்று மொழிகளில் வெளிவந்த தகவல்களும் அவற்றின் ஆய்வும் பல புதிய தகவல்களையும் புதிய கோணங்களையும் தருகின்றன. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். தாங்கள் கூறியது போல் வசந்த் தொலைக்காட்சியில் ஒய்.ஜி. மகேந்திராவின் பார்வையிலே, நிகழ்ச்சியில் தற்போது வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் தன் கருத்துக்களை பகிரந்து கொண்டு வருகிறார். பல புதிய தகவல்கள். நடிகர் திலகம் மிகச் சிறந்த நீச்சல் வீரர், குதிரையேற்றத்தில் வல்லவர், வாட்சண்டையில் வல்லவர் என கூறினார். இன்னும் பல தகவல்கள். முடிந்த வரை அனைத்து ரசிகர்களும் இந்நிகழ்ச்சியினைத் தவறாமல் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன்.
பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை திரு மகேந்திர அவர்களுடன் பகிரந்து கொள்ளலாம். அவருடைய மின்னஞ்சல் - ygeems@gmail.com
சகோதரி சாரதா, பார்த்த சாரதி போன்று பலர் யூட்யூப் ஒளிக் காட்சியினைக் காண இயலவில்லை எனக் கூறியிருந்தீர்கள். தாங்கள் MOZILLA FIREFOX அல்லது GOOGLE CHROME உலாவியைப் பயன்படுத்திப் பாருங்கள். எந்த சிக்கலும் இருக்காது.
Firefox உலாவியினைக் கீழ்க்காணும் இணைப்பில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
http://www.mozilla.com/en-US/product...win&lang=en-US
Google Chrome உலாவியினைக் கீழ்க்காணும் இணைப்பில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
http://www.google.com/chrome/thankyou.html
இவற்றில் அனைத்து ஒளிக்காட்சிகளும் காணும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளன.
அன்புடன்
ராகவேந்திரன்
அன்பு சாரதி,
நமது திரியில் பங்கு பெறும் பலரின் பெயரையும் குறிப்பிட்டு இவர்கள் அளவிற்கு என்னால் எழுத முடியாது என்று நீங்கள் சொன்னது பொய்தானே? இப்போது நீங்கள் எழுதும் இந்த பதிவு, இது வரை யாரும் முயற்சிக்காத ஒன்று. சுவையாக இருக்கிறது. அது மட்டுமல்ல ஒரு சிலப் படங்களைப் பற்றி குறிப்பிட்டு அது பற்றிய வேறு சில பதிவுகளும் வர இருக்கின்றன என்ற தகவல் மற்றோர் சுவையான விருந்தும் காத்திருக்கின்றது என்று சொல்லாமல் சொல்கிறது. தொடருங்கள்.
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம்
என்று பாடியபடியே மக்களுக்கு தன் முகத்தை காண்பித்த ரஹீமை மறக்க முடியுமா? எப்படி ரங்கனை மறக்க முடியாதோ அது போல் இன்று [16-03-2011] அகவை 51-ல் அடியெடுத்து வைக்கும் ரஹீமையும் மறக்கவே முடியாது. அமைதியின் மறு உருவமாக, கருணையின் இருப்பிடமாக, கண்ணியமான காதலின் உறைவிடமாக திரையில் வாழ்ந்து காட்டிய ரஹீம்! அதனால்தானே மக்கள் இதயங்களில் நீங்கா புகலிடம் கொடுத்தனர். நம்மைப் போன்றவர்களும் அதன் காரணமாகத்தானே
வந்த நாள் முதல்
இந்த நாள் வரை
யார் மாறினாலும், எவை மாறினாலும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்ற நிலையிலிருந்து மாறாமல் நிற்கிறோம்!
அவரே பாடியது போல அவரையும் அவர் கதாபாத்திரங்களையும் திரையில் காணும் போது சிரித்துக் கொண்டே அழுகிறோம்! அழுது கொண்டே சிரிக்கிறோம்!
பாவமன்னிப்பு ரஹீம் பொன் விழா மட்டுமல்ல நூற்றாண்டும் கடந்தது வாழ்வார். அன்றும் இது போல அவர் புகழ் யாராவது பாடிக் கொண்டேயிருப்பார்கள்!
அன்புடன்
http://i872.photobucket.com/albums/a...asuda/PM01.jpg
http://i872.photobucket.com/albums/a...asuda/PM02.jpg
முரளி சார் சொன்னது போல எல்லோரும் கொண்டாடுவோம், இந்நாளை. 50 ஆண்டுகள் மட்டுமல்ல இன்னும் 500 ஆண்டுகள் ஆனபின்பும் எல்லோரும் கொண்டாடுவோம், இந்தப் படத்தையும், நடிகர் திலகத்தையும்.
நம்முடைய இணையதளத்தில் பாவ மன்னிப்பு 50 ஆண்டு நிறைவினையொட்டி சிறப்பு முகப்பு..
இதோ
அன்புடன்
ராகவேந்திரன்
எல்லோரும் கொண்டாடுவோம் பாடல் காட்சி
http://www.youtube.com/watch?v=_vLauEx6oqM
அன்புடன்
ராகவேந்திரன்
சகோதரி சாரதா,
தங்களின் பாராட்டுதல்களுக்கும், கூடுதல் தகவல்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்! "விஸ்வரூபம்" 100வது நாள் விழா பற்றிய பதிவினை ஆவலுடன் எதிர்நோக்குகின்றேன்!
டியர் சந்திரசேகரன் சார்,
தங்களது பாராட்டுக்கு நன்றி!
அன்புடன்,
பம்மலார்.
டியர் பார்த்தசாரதி சார்,
தங்களின் அன்பான பாராட்டுக்கு எனது கனிவான நன்றி! நமது நடிகர் திலகம் நம் அனைவரது உள்ளங்களிலுமே நீக்கமற நிறைந்திருக்கிறார். தாங்கள் கூறியது போல் அவரது வான்புகழை தொடர்ந்து நாம் அனைவரும் பாடிக் கொண்டே இருப்போம்.
தங்களின் 'நடிகர் திலகமும் அவரது படங்கள் பிறமொழிகளிலும்' தொடர் கட்டுரை அருமை, அற்புதம், அபாரம்.
1959 தீபாவளி வெளியீடாக வெள்ளித்திரைக்கு வந்த "பாகப்பிரிவினை", அதிகபட்சமாக மதுரை சிந்தாமணி திரையரங்கில் 31 வாரங்கள் [216 நாள்] ஓடி இமாலய வெற்றி கண்டது. "பாகப்பிரிவினை" ஏற்படுத்திய பாக்ஸ்-ஆபீஸ் பிரளயத்தை அடியேன் ஏற்கனவே இத்திரியின் ஐந்தாவது பாகத்தில் பதிவு செய்துள்ளேன். அதற்கான சுட்டி இதோ:
http://www.mayyam.com/talk/showthrea...Part-5/page116
1959-ம் ஆண்டு, தமிழ்த் திரையுலகில், மூன்று திரைப்படங்கள் இமாலய வெற்றியை அடைந்தன. நமது நடிகர் திலகத்தின் "வீரபாண்டிய கட்டபொம்மன்", "பாகப்பிரிவினை" மற்றும் காதல் மன்னனின் "கல்யாண பரிசு" ஆகியவையே இந்த மூன்று படங்கள். இம்மூன்றுமே வெள்ளிவிழாக் காவியங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"பாகப்பிரிவினை"யை ஹிந்தியில் தயாரிக்கும் முயற்சிகள் தொடங்கிய போது, அதில் கதாநாயகனாக நடிக்க, தாங்கள் குறிப்பிட்டது போல், திலீப்குமாரைத் தான் முதலில் அணுகினார்கள். ஒரிஜினலைப் பார்க்க விரும்பிய அவருக்கு திரையிட்டும் காட்டினார்கள். படம் முழுவதையும் பார்த்த திலீப்குமார், "என்னால் சிவாஜி மாதிரி நடிக்கவே முடியாது. நான் அழகான கதாநாயகனாக, மென்மையான ரொமான்டிக் ஹீரோவாகவே அதிகம் நடிக்க விரும்புகிறேன். அவர் மாதிரி யாராலுமே செய்ய முடியாது. அழகான ஹீரோவாகவும் நடிக்கிறார், அவலட்சணமான ஹீரோவாகவும் பிய்த்து உதறுகிறார். இப்படத்தின் பெரும்பகுதி அவர் அங்கஹீனம் உள்ளவராகவே நடிக்கிறார். ஒரு கையும், ஒரு காலும் செயலிழந்த வேடம் அவருக்கு. விந்தி விந்தி அவர் நடக்கும் போது கவனித்தேன். ஒரு இடத்தில் கூட error வரவில்லை. அதே போல், செயலிழந்த இடது கையை ஒரு மாதிரி உடம்போடு இறுக்கி வைத்துக் கொண்டு வருகிறார். அப்படி அவர் செய்வதில் கூட ஒரு காட்சியிலும் தவறு கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை மாதிரி நடிக்க அவரால் மட்டுமே முடியும். நான் இது மாதிரி வேடங்களெல்லாம் செய்வது எனக்கு விஷப்பரீட்சை, எனவே வேண்டாம்" என்று நடிகர் திலகத்தின் நடிப்பினை மனமாரப் பாராட்டி "பாகப்பிரிவினை"யின் ஹிந்திப் பதிப்பில் நடிப்பதிலிருந்து விலகிக் கொண்டார். பின்னர் சுனில்தத் நடித்தார்.
தமிழ் சினிமா வரலாற்றில், "படிக்காத மேதை", 1960-ம் ஆண்டின் No.1 வசூல் சாதனைக் காவியம். அதிகபட்சமாக சென்னை 'சித்ரா'வில் 153 நாட்கள் ஓடி மெகாஹிட்.
"பாசமலர்" காவியத்தின் ஹிந்திப் பதிப்பான "ராக்கி" 1962-ம் ஆண்டு வெளிவந்தது. "ராக்கி"யை நடிகர் திலகம் தனது சொந்த தயாரிப்பாக 'பிரபுராம் பிக்சர்ஸ்' பேனரில் தயாரித்தார்.
தங்களது தொடர் கட்டுரையின் அடுத்தடுத்த பதிவுகளைக் காண ஆவல் மேலிடுகிறது.
அன்பு கலந்த எதிர்பார்ப்புடன்,
பம்மலார்.
பாவமன்னிப்பு 51
1. கதாநாயகனாக நடிகர் திலகம், கதையின் நாயகனாக நடிகவேள், அருமையான குணச்சித்திரங்களில் காதல் மன்னன், நடிகையர் திலகம், நடிகர் திலகத்தின் நாயகியாக தேவிகா மற்றும் வி.நாகையா,டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா, கலைமணி கொத்தமங்கலம் சுப்பு, எம்.வி.ராஜம்மா மற்றும் பலர் நடித்த புத்தா பிக்சர்ஸ் "பாவமன்னிப்பு", ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் நிறைந்த திரைக்காவியம்.
2. இக்காவியத்தின் கதையினை புத்தா பிக்சர்ஸ் குழுவினர் உருவாக்க அதற்கு வசனத்தை எம்.எஸ்.சோலைமலை எழுதினார். அதற்கு திரைக்கதை அமைத்து இயக்கியவர் ஏ.பீம்சிங். தனது ஸ்டூடியோவை படப்பிடிப்புக்கு அளித்ததோடு, படத்திற்கு ஃபைனான்ஸும் செய்த ஏவிஎம் நிறுவனத்துடன் கூட்டாக இக்காவியத்தை தயாரித்தார்கள் புத்தா பிக்சர்ஸ்.
3. "பாவமன்னிப்பு" கதையின் மூலக்கதாசிரியர் யார் தெரியுமா? நகைச்சுவை நடிகர் சந்திரபாபு தான். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! எனினும் அதுதான் உண்மை. 1959-ம் வருடம் ஒரு நாள் பீம்சிங்கிடம் பேசிக் கொண்டிருந்த போது சந்திரபாபு, "அப்துல்லா" என்கின்ற தலைப்பில் தன் மனதில், ஏட்டில் புதைத்து, பதித்து வைத்திருந்த கதையை பீம்சிங்கிடம் கூறினார். ஒருவன் ஹிந்துவாகப் பிறந்து, ஒரு முஸ்லீமால் வளர்க்கப்பட்டு, ஒரு கிறிஸ்துவப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வது போன்ற கதை அது. ஹீரோ "அப்துல்லா"வாக தான் நடித்து பீம்சிங் அப்படத்தை 'புத்தா பிக்சர்ஸ்' பேனரில் தயாரித்து, இயக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் சந்திரபாபு. பீம்சிங்கும் ஒப்புக் கொண்டார்.
4. "அப்துல்லா" படம் பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பும் தொடங்கியது. 2000 அடிகள் வரை படம் வளர்ந்திருந்த நிலையில், பீம்சிங் தனது நெருங்கிய நண்பரான ஏவிஎம். சரவணனிடம் எடுத்தவரை திரையிட்டுக் காட்டினார். 2000 அடி படத்தைப் பார்த்து முடித்த சரவணனிடம் பீம்சிங், "எடுத்தவரை எனக்கு திருப்தியில்லை. எவ்வளவு பண்ணியும் சரியா எதுவும் அமையவில்லை. பாபுவுக்கு இந்த ரோல் டூ மச். இந்தப் படத்தை தொடர்ந்து எடுப்பதாக இருந்தால் முதலிலிருந்து ரீஷுட் பண்ணனும். இல்லையேல் படத்தைக் கைவிட வேண்டியது தான்" என்று விரக்தியுடன் கூறினார். அதற்கு சரவணன், "இந்தக் கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் அப்பச்சி(ஏவிஎம்)யிடம் இது குறித்து பேசுகிறேன். நாம இந்த Projectஐ கூட்டாக சேர்ந்து செய்வோம்" என்றார். அப்பச்சியும் சம்மதம் தெரிவிக்க முதல் மாற்றமாக "அப்துல்லா", "பாவமன்னிப்பு" எனப் பெயர் மாறியது. இப்படத்தின் தயாரிப்பு நிர்வாகி (Production Executive) பொறுப்பினை ஏற்றார் ஏவிஎம். சரவணன்.
5. புத்தா பிக்சர்ஸ்-ஏவிஎம் கூட்டுத் தயாரிப்பு என்பதால் அடுத்த அதிரடி மாற்றமாக ஹீரோ மாற்றம் நிகழ்ந்தது. சந்திரபாபுவுக்கு இந்த ஹீரோ ரோல் குருவி தலையில் பனங்காய் என்பதால் அவருக்கு பதிலாக நடிகர் திலகம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். [அப்பேர்ப்பட்ட பாத்திரங்களிலெல்லாம் நமது திலகத்தை தவிர வேறு யார் நடிக்க முடியும்]. பின்னர் ஏனைய கதாபாத்திரங்களுக்கும் நடிக-நடிகையர் தேர்வு செய்யப்பட்டார்கள்.
6. "பாவமன்னிப்பு" திரைப்படத்தினுடைய பூஜை, 20.1.1960 புதனன்று போடப்பட்டு, படப்பிடிப்பும் நல்ல முறையில் தொடங்கியது. படத்திற்கான மொத்த பட்ஜெட் ரூ.11,00,000/- என கணக்கிடப்பட்டு, அந்தத் தொகையை ஏவிஎம் தருவதாகவும், வருகின்ற லாபத்தில் புத்தா பிக்சர்ஸுக்கும், ஏவிஎம்முக்கும் சரிபாதி என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
7. "பாவமன்னிப்பு" திரைக்காவியத்தில், கதாநாயகன் 'ரஹீம்' என்கின்ற இஸ்லாமிய இளைஞனின் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறோம் என்று முடிவான உடனேயே சிவாஜி அவர்கள், பல முஸ்லீம் பெரியவர்களிடமும், அறிஞர்களிடமும், இளைஞர்களிடமும் இஸ்லாமிய மக்களின் நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்கள் ஆகியவை குறித்து கேட்டு விசாரித்து ஒரு முதல் கட்ட Preparationஐ ஆரம்பித்து விட்டார்.
8. பீம்சிங் இக்கதையை சிவாஜியிடம் கூறும்போதே ரஹீம் பாத்திரம் நடிகர் திலகத்தை கட்டிப்போட்டு விட்டது. ரஹீம் கதாபாத்திரத்தின் தன்மைகளை கிட்டத்தட்ட 40 பக்கங்களில் முதலிலேயே சிவாஜிக்கு பீம்சிங் எழுதிக் கொடுத்துவிட்டார். ரஹீம் பாத்திரத்தை மிகுந்த சிரத்தையோடு செய்ய திட்டமிட்டார் சிவாஜி. ஒவ்வொரு நாள் படப்பிடிப்புக்கு வரும் போதும் Fully Prepared ஆக வருவார். செவ்வனே செய்வார். அவர் நடிப்பதற்கு கேட்கவா வேண்டும். அன்றைய படப்பிடிப்பு இரவு எந்நேரத்தில் முடிந்தாலும், மறுநாள் படப்பிடிப்பில் எப்படி நடிக்க வேண்டும் என்பதனை பீம்சிங்குடன் கலந்து ஆலோசிதத பின்னரே வீட்டிற்குச் செல்வார். மறுநாள், எப்பொழுதும் போல் Prepared ஆக மேக்கப்புடன் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே படப்பிடிப்பு தளத்தில் ஆஜராகி விடுவார்.
9. இஸ்லாமிய சமூகத்தினர் இறைவனை வேண்டித் தரையில் மண்டியிட்டுத் தொழும் போது, அவர்களது நெற்றிமுனை தரையில் தட்டித்தட்டி அந்த இடம் கருப்பாகி விடும், அதாவது நெற்றிமுனையில் ஒரு கருப்புத் தழும்பு காணப்படும். இதையறிந்த நடிகர் திலகம் தனது நெற்றிமுனைக்கு மட்டும் சற்று கருப்பாக ஒப்பனை செய்து கொண்டார்.
10. "பாவமன்னிப்பு" திரைக்காவியத்தின் மிக முக்கிய காட்சி, நடிகவேள் நடிகர் திலகத்தின் மீது திராவகத்தை வீசும் காட்சி. இந்தக் காட்சி படமாக்கப்படுவதற்கு முந்தைய நாள் எப்பொழுதும் போல் அன்றைய படப்பிடிப்பு முடிந்தவுடன் பீம்சிங்கிடம் அடுத்தநாள் படப்பிடிப்பு பற்றி ஆலோசித்து விட்டு வீட்டிற்குச் சென்றார் நடிகர் திலகம். அன்று இரவு முழுவதும் அவருக்கு தூக்கம் பிடிக்கவில்லை. அடுத்தநாள் எடுக்கப் போகும் திராவக வீச்சு காட்சியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். பீம்சிங்கிற்கும் அவரது இல்லத்தில் உறக்கம் வரவில்லை. அடுத்த நாள் இயக்கப் போகும் காட்சி குறித்தே யோசித்துக் கொண்டிருந்தார். என்ன தோன்றியதோ தெரியவில்லை, நள்ளிரவில் சிவாஜிக்கு ஃபோன் செய்தார் பீம்சிங். கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு அடுத்த நாள் காட்சியைக் குறித்தே ஆராய்ந்து கொண்டிருந்த நடிகர் திலகத்துடன் ஃபோனில் நீண்ட நேரம் உரையாடினார் பீம்சிங்.
11. மறுநாள் திராவகம் வீசும் காட்சியின் படப்பிடிப்பும் தொடங்கியது. சிவாஜியின் முகத்தில் எதிர்பாராத விதமாக திராவகம் வீசப்பட்டு அவர் துடிதுடித்து தரையில் இங்குமங்கும் உருண்டு புரளும் காட்சி ஒரே ஷாட்டாக ஒரே டேக்கில் படமாக்கப்பட்டது. ஷாட் பிரித்தோ, இரண்டாவது டேக் போனாலோ மிக முக்கிய காட்சியின் அழுத்தம் குறைந்து விடும் என்று ஏற்கனவே தீர்மானித்திருந்ததாலேயே ஒரே ஷாட்டில் ஒரே டேக்கில் அக்காட்சியை படமாக்கினர் சிவாஜியும், பீம்சிங்கும். இதற்காகவே இரவெல்லாம் யோசித்து, தங்களுக்குள் விவாதித்திருக்கின்றனர்.