பாவமன்னிப்பு 51
12. "பாவமன்னிப்பு" படப்பாடல்கள் காலத்தை வென்றவை. இப்பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். அருமையான, ஆழமான கருத்துக்கள் கொண்ட பாடல் வரிகளுக்கு அற்புதமான, இனிமையான மெல்லிசை மெட்டுகள் என ஒரு புதிய திரை இசை அலையையே உருவாக்கினார்கள் மெல்லிசை மாமன்ன்ர்கள். பாடல்களின் ஒலிப்பதிவை மட்டும் ஒலிப்பதிவு மாமேதை முகுல்போஸ் செய்து கொடுத்தார்.
13. "எல்லோரும் கொண்டாடுவோம்" பாடலை நடிகர் திலகம் குழுவினருடன் பாடி நடிக்க சிவாஜிக்கு பின்னணி பாடியிருப்பார் டி.எம்.எஸ். குழுவினரில் ஒருவருக்கு நாகூர் ஹனீஃபா குரல் கொடுத்திருப்பார். இன்றளவும் இஸ்லாமிய பண்டிகை தினங்களில் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் தவறாமல் இடம்பெறும் பாடல் இது. நாகூர் ஹனீஃபா தனது பக்தி இசைக் கச்சேரிகளிலும் இப்பாடலை மறவாமல் பாடுவதுண்டு. நடிகர் திலகம் இப்பாடலுக்கு 'டேப்'பை வாசித்துக் கொண்டே பாடுவது இப்பாடலின் சிறப்பம்சம்.
14. "காலங்களில் அவள் வசந்தம்" பாடல் இன்றளவும் அனைத்து தலைமுறையினரையும் கவர்ந்த பாடல். பிபிஸ்ரீனிவாஸ் அவர்கள் எத்தனையோ மெலடிகளை பாடியிருக்கிறார். எனினும் அவரது சிகர மெலடி இது. இந்தப்படம் வெளிவருவதற்கு முன்னர் பல படங்களில் பல நல்ல மெலடிகளை அவர் இசைத்திருக்கிறார். இருப்பினும், இந்தப் படத்தின் இந்தப்பாடல்தான் அவரை Limelightற்கு கொண்டு வந்தது. ஜெமினிக்கு பிபிஎஸ் என்ற மியூசிகல் ஃபார்முலாவும் உருவாகக் காரணமாயிற்று. [காதல் மன்னனுக்கு ஹிட்ஸாங்ஸுகளுக்கு எப்பொழுதுமே குறைவிருந்ததில்லை. 1950களில் ஏஎம்ராஜா, கண்டசாலா குரல்களிலும், 1960களில் பிபிஎஸ்ஸின் வாய்ஸிலும், 1970களில் எஸ்பிபியின் குரல்ஜாலத்திலும் அவருக்கு பற்பல சிறந்த
பாடல்கள் அமைந்திருக்கின்றன. டி.எம்.எஸ். குரலிலும் அவருக்கு சில சிகர பாடல்கள் இருக்கின்றன.]
15. "சாயவேட்டி தலையில கட்டி" பாடல் Lesshit பாடல் தான் என்றாலும் படத்தோடு பார்க்கும் போது நம்மையும் அறியாமல் நமது கால்களை தாளம் போட வைக்கும். இப்பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி, டி.எம்.எஸ் மற்றும் குழுவினர் பாடியிருந்தனர்.
16. 'இந்த அளவுக்கு இனிமையாக என்னால் பாடவே முடியாது' என்று ஒரு இசைக்குயில் இன்னொரு இசைக்குயிலைப் பாராட்டியது. ஆம், "அத்தான் என் அத்தான்" பாடலைக் கேட்டு விட்டுத்தான் இத்தகைய மனமார்ந்த பாராட்டை பி.சுசீலாவுக்கு அளித்தார் லதா மங்கேஷ்கர். சாவித்திரியும், தேவிகாவும் போட்டி போட்டுக் கொண்டு perform பண்ணும் இந்தப் பாடல் காட்சியில் நடிகர் திலகம் ஒரு மலர்ந்த புன்னகை விரித்து சீனை தூக்கிக் கொண்டு போய் விடுவார். [இன்றளவும், எனது அத்தை மகன் அத்தானைப் பார்க்கும் போதெல்லாம் அவரை நோக்கி அடியேன் இந்தப் பாடலைப் பாடுவது வழக்கம்.]
17. "வந்தநாள் முதல் இந்தநாள் வரை" பாடலின் டியூன் படத்தில் டைட்டில் மியூசிக்காக தொடக்கத்திலேயே வந்து நமது ஆன்மாவைத் தொடும். பின்னர் பாடல் காட்சியாக வரும் போது கண்ணதாசன், விஸ்ராம், டி.எம்.எஸ் ஆகியோரை சைக்கிளில் செல்லும் சிவாஜி தன் performanceஸால் ஓவர்டேக் செய்து விடுவார். இப்பாடலில் விட்டல்ராவும் ஒளிப்பதிவில் தன் பங்குக்கு தூள் கிளப்பியிருப்பார். 'ரஹீம்' குற்றவாளியாக்கப்படும் காட்சியின் போதும் இப்பாடலின் சரணம் பின்னணியாக ஒலிக்கும். அதற்கு பின்னணி குரல் கொடுத்திருப்பார் உதவி இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்.
18. 'வந்தநாள் முதல் இந்தநாள் வரை' பாடல் காட்சியில், சிவாஜி அவர்கள் சைக்கிளில் வரும் போது, சைக்கிளின் கேரியரில் ஒரு குழந்தையை வைத்து அழைத்து வருவார். அந்தக்குழந்தை பின்னாளில் சிவாஜி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான, "சின்ன தம்பி", "மிஸ்டர் மெட்ராஸ்" போன்ற திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ரவீந்தர்.
19. மேலும், "வந்தநாள் முதல் இந்தநாள் வரை" டியூனையும் படத்தின் டைட்டில் மியூசிக்கிற்காக சேர்த்து ஒலிப்பதிவு செய்த போதுதான், தமிழ்த் திரை இசை வரலாற்றில், முதன்முதலாக, ஒரு படத்தின் ஆரம்ப இசைக்கு மிக அதிகப்படியான இசைக்கருவிகள் பின்னணியில் இசைக்கப்பட்டது. இத்தொடக்க இசைக்காக 60 வயலின், 8 வயோலா, 3 செல்லோ, 1 பாஸ், 4 டிரம்பட், 2 ஸாக்ஸ், 2 டிரம்ப், 2 ஃப்ளூட், 2 தபேலா, 2 டோலக், 2 டிரம் செட் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. "பாவமன்னிப்பு" திரைக்காவியம் ஒரு திரை இசை பிரம்மாண்டம்.
20. "கவியரசரின் பாட்டிருக்கும், இசையரசர்களின் மெட்டிருக்கும், இசையரசியின் குரலிருக்கும், நடிப்பரசரின் நடிப்பிருக்கும்". இவையனைத்தும் இணையும் கீதம் "பாலிருக்கும் பழமிருக்கும்". "பாலும் பழமும்" மட்டுமா சுவை, இந்தப் "பாவமன்னிப்பு" பாடலும் தானே! சுசீலாவின் இனிமைக்குரலுக்கு ஏற்றாற் போல் தேவிகாவும் இப்பாடலில் இங்கிதமாக நடித்திருப்பார். சிவாஜியின் ஹம்மிங் எம்.எஸ்.வியின் சிங்கிங்.
21. ரஹீமின் அழகு முகம், திராவக வீச்சுக்குப் பின், சிதையும் போது அவரது காதலி மேரி(தேவிகா) வந்து பார்த்துவிட்டு தாங்கொணாத் துயரத்துடன் திரும்பிச் செல்கிறாள். அப்போது திலகத்தின் உயிர்ப்பில் டி.எம்.எஸ். குரல் ஒலிக்கும்:
"ஓவியம் கலைந்ததென்று ஓவியர்கள் வெறுப்பதில்லை
உருக்குலைந்த கோட்டையினை சரித்திரம் மறப்பதில்லை
மறையாத காதலிலே மனங்கனிந்து வந்தாளோ
மறந்துவிட நினைப்பாளோ மறுபடியும் வருவாளோ"
ஆஹா...தமிழிருக்கும் வரை தமிழ்ப்பெரும் கவிஞன் கண்ணதாசனும் இருப்பார்.
22. "காலம் பல கடந்து" எனத் தொகையறாவில் தொடங்கி "சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்" எனப் பாட்டாகும் போது நம் ஐம்புலன்களும் பார்க்கின்ற திரையோடு ஐக்கியமாகி விடும். "சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்" சரிதான். ஆனால் இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் சிரித்துக் கொண்டே அழுவதற்கும், அழுது கொண்டே சிரிப்பதற்கும் ஒருவர் தானே இருக்கிறார். பாடல் முழுமையுமே நடிகர் திலகம் தனது performanceஸால் பார்ப்போரை புரட்டிப் போட்டு விடுவார். இந்தப் பாடலையெல்லாம் பாடகர் திலகம் டி.எம்.எஸ்ஸைத் தவிர இவ்வுலகில் வேறு எவரால் பாட முடியும். அன்றும், இன்றும், என்றும் பல கோடி உலக மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும், விளங்கப் போகும் வரிகளை கவியரசர் எத்தனை தீர்க்கதரிசனத்தோடு எழுதியிருக்கிறார் பாருங்கள்:
"காலம் ஒருநாள் மாறும்! நம் கவலைகள் யாவும் தீரும்!
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்! வந்ததை எண்ணி அழுகின்றேன்!"
சிவாஜி, சௌந்தரராஜன், விஸ்வநாதன், கண்ணதாசன் - பொற்காலப் படைப்பாளிகள். இவர்களின் பங்களிப்புக்கு ஒவ்வொருவருக்கும் எடைக்கு எடை தங்கம் கொடுக்கலாம்.
23. 'சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்' பாடல் காட்சியில், ஒரே ஃப்ரேமில் மூன்று சிவாஜிகள் தெரிவார்கள். ஒருவர் சிரிப்பார், ஒருவர் அழுவார், ஒருவர் சிரித்து-அழுது பாடிக் கொண்டே வருவார். இப்படி இந்தப் பாடல் காட்சியை எடுக்கச் சொல்லி பீம்சிங்கிற்கு ஐடியா கொடுத்ததே அய்யன் சிவாஜி தான்.
24. "பாவமன்னிப்பு" படத்தில் பல இடங்களில் பல காட்சிகளில் விட்டல் ராவின் கேமரா விளையாடியிருக்கும். ஆர்ட் டைரக்ஷனை ஹெச்.சாந்தாராம் செய்து கொடுக்க, எடிட்டிங் மேற்பார்வையை கவனித்தார் பீம்சிங்.
25. நடிகர் திலகத்தின் தாயாக இதில் நடித்திருப்பவர் எம்.வி.ராஜம்மா. முதலில் அந்தப் பாத்திரத்தில் நடித்தவர் பி.கண்ணாம்பா. அவர் நடித்து 6000 அடிகளுக்கான காட்சிகள் படமாகியிருந்த நிலையில் திடீரென்று அவர் நோய்வாய்ப்பட்டு உடல்நலம் குன்றினார். எனவே, மீண்டும் முதலிலிருந்து கண்ணாம்பா நடித்த காட்சிகளையெல்லாம் எம்.வி.ராஜம்மாவைக் கொண்டு படமாக்கப்பட்டது.