One more website about Sathyaraj speech
Printable View
நடிகர் திலகமும் அவர் நடித்த படங்கள் பிற மொழிகளிலும் (தொடர்ச்சி)
6. ஆலய மணி (1962) / குடி கண்டலு – தெலுங்கு (1965) / ஆத்மி – ஹிந்தி (1968)
நடிகர் திலகத்தின் அசாதாரணமான நடிப்பில் வெளி வந்த ஒரு மகத்தான வெற்றிப் படம்.
நடிகர் பி.எஸ். வீரப்பா அவர்கள் PSV பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தைத் துவங்கியவுடன், எடுத்த முதல் படம். இந்தப் படத்தின் emblem "ஆலய மணியை" கடைசி வரையிலும் வைத்திருந்தார். அந்த அளவிற்கு இந்த பேனருக்குப் புகழ் வாங்கிக் கொடுத்த படம். கடைசி வரையிலும் , இந்த பேனரின் முதல் படம் தான் - இந்த ஆலய மணி தான் - மிகப்பெரிய வெற்றிப் படமுமாகும். சென்னை மாநகரத்தில் ஐந்து திரை அரங்குகளுக்கு மேல் வெளி வந்து அத்தனை அரங்குகளிலும் நூறு காட்களைக் கடந்த மாபெரும் வெற்றிப் படம்.
ஜாவர் சீதாராமன் என்ற மிகச் சிறந்த கதை வசனகர்த்தா மற்றும் நடிகரின் கதை வசனத்தில் வெளி வந்த படம். இறையருள் இயக்குனர் திரு. கே. சங்கர் அவர்களின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த முதல் படம். ஒரு மொத்த பாடலையும் சேரில் (சற்கர நாற்காலியில்) உட்கார்ந்து கொண்டே நடித்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்த படம் (பொன்னை விரும்பும் பூமியிலே - உண்மையில், கவியரசர் இந்தப் பாடலை, மெல்லிசை மன்னரை மனதில் வைத்து எழுதினாராம்! கவியரசர் கண்ணதாசனைப் பற்றியும் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதி வைத்து அதுவும் நடிகர் திலகத்தின் ஆய்வுக்கட்டுரையும் சேர்ந்து தான் எரிந்து விட்டது. அவரைப் பற்றியும், ஏராளமாய் எழுதிக்கொண்டே இருக்கலாம். ஆனால், இது நடிகர் திலகத்தின் திரி என்பதால், கொஞ்சமாகத்தான் எழுத வேண்டும்.). இடைவேளைக்கு முன்னர் நடிகர் திலகத்திற்கு ஒரு பாடலும் இல்லை. மானாட்டம் தங்க மயிலாட்டம் பாடலில் ஜீப்பை ஸ்டைலாக ஒட்டிக் கொண்டே (back projection technique தெரியாதவாறு நடிகர் திலகம் பிரமாதமாக நடித்து அந்தக் குறையை போக்கி விடுவார்.) பொதுவாக, நடிகர் திலகம் ஒருவர் தான், திரையில், அவர் பாடாமல் கூட நடிக்கும் நடிகை பாடும்போதும், ஒட்டுமொத்த மக்களின் கவனத்தைத் தன்பக்கம் வைத்துக் கொண்டவர். இந்த வகையில் வந்த நிறைய பாடல்களை ஏற்கனவே பலர் இந்தத்திரியில் - பம்மலார் மற்றும் சாராத மேடம் அவர்கள் என்று நினைக்கிறேன். அவருக்குப் பிறகு, ரஜினியை ஓரளவிற்கு சொல்லலாம்.) இடைவேளைக்குப் பிறகு, மூன்று சோலோ பாடல்கள் - மூன்றும் முத்தான பாடல்கள். மூன்று விதமான பாடல்கள். மூன்று விதமான நடிப்பு. "கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா" பாடலின் இரண்டாவது சரணத்தில் (கம்பன் கண்ட சீதை உந்தன் தாய் அல்லவா...), முழுவதும் க்ளோசப்பில், அற்புதமாக நடித்த படம். "சட்டி சுட்டதடா" பாடலில், விரக்தியின் எல்லையில் இருப்பவனை வடித்துக்காட்டிய படம்.
ஆலய மணி என்றால் உடனே நினைவுக்கு காட்சி - "உங்க எஜமான் நடையழகப் பாத்தியாடா?" என்று, நடிகர் திலகம் கால் ஊனமாகி, வீட்டிற்கு வெளியே வந்து, திரு எஸ்.ஏ. கண்ணன் அவர்களைப் பார்த்து கேட்டு உடையும் கட்டம்.
இந்தப் படத்தின் பிரதான கதாபாத்திரமான தியாகு என்கிற கதாபாத்திரம் ஒரு கத்தி முனையில் நடப்பது போன்ற கதாபாத்திரம். இது போல் எத்தனையோ பாத்திரங்களை இதற்கு முன்னரும், பின்னரும் நடிகர் திலகம் அனாயாசமாக ஊதித் தள்ளியிருப்பார். இத்தனைக்கும் , இந்தப் படம் வருவதற்கு முன்னர் (1960-இல் வெளி வந்த தெய்வப்பிறவி படத்திற்குப் பிறகு), அவர் நடித்த அத்தனை படங்களிலும் அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் நேர்மறையான மற்றும் மக்களின் ஒட்டுமொத்த அபிமானம் மற்றும் அனுதாபத்தையும் பெற்ற கதாபாத்திரங்கள் – படிக்காத மேதை, பாவ மன்னிப்பு , பாசமலர் , பாலும் பழமும் , கப்பலோட்டிய தமிழன் , படித்தால் மட்டும போதுமா , பார்த்தால் பசி தீரும் போன்றவை - நடுவில் வந்த நிச்சய தாம்பூலம் மட்டும் கொஞ்சம் - கொஞ்சம்தான் எதிர்மறையாக இருக்கும் அதாவது மனைவியை சந்தேகப் பட்டு குடிகாரனாவது போன்று. – ஆனால், ஆலயமணியின் “தியாகு” கதாபாத்திரமோ முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரம் .
கடைசி வரையிலும் இமேஜ் பார்க்காத நடிகர் நம் நடிகர் திலகம் மட்டுமே என்பது எல்லோருக்கும் தெரியும். அது இந்தப் படத்திலும் பெரிதாக நிரூபணம் ஆகி இருக்கும்.
ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் உள்ள இரண்டு குணங்களையும் அக்கு வேறு ஆணி வேறாக கதாசிரியர் அலசியிருப்பார். அந்த அலசலுக்கு அற்புதமாக முழு வடிவம் கொடுத்திருப்பார் நடிகர் திலகம் . குறிப்பாக, எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு இரத்தம் கொடுத்துவிட்டு அதற்குப் பின் , அவரைக் கத்தியால் குத்த வந்த வீரப்பாவை மன்னித்தபின் அவருடைய பிரத்தியேக அறைக்குச் சென்று, போட்டோ ஆல்பத்தையும் , மீனா பொம்மையையும் வைத்துக் கொண்டு பேசும் காட்சி. தனக்குள்ளே பேசிக் கொள்ளுவார் – "நண்பனுக்கு இரத்தம் கொடுத்தாய் , உன்னைக் கொல்ல வந்த பக்கிரியை மன்னித்தாய், ஒருவன் நல்லது நினைக்க நினைக்க, நல்லது செய்ய செய்ய, அவனிடத்தில் உள்ள மிருகப் பண்பு குறைந்து , மனிதப் பண்பு வளர்கிறது" என்று பேசிக் கொண்டே அவரை சுய சமாதானம் செய்து கொண்டே போய், திடீரென்று அந்த போட்டோ ஆல்பத்திலிருக்கும் பாபு என்ற சிறுவன் சிரிக்க ஆரம்பித்தவுடன், அவர் மனத்திரையில் ஓடும் காட்சிகள் … அப்படியே “பாபு!” என்று பெரும் கூச்சலுடன் அலறிக் கொண்டே கீழே விழும் அந்தக் காட்சி மெய் சிலிர்க்கும். உடனேயே, யாரோ அறைக் கதவைத் தட்டும் ஓசை கேட்டவுடன், கண் விழித்து, சுற்றி ஒரு முறை பார்த்து விட்டு பின் நாற்காலியில் உட்காரும் விதம் - அவ்வளவு நேரம் வேறு மாதிரி இருந்து விட்டு, இயல்பு நிலைக்கு வந்து, மீண்டும் அந்த தோரணையுடன் உட்கார்ந்து கொள்ளுவார். ஆஹா! திரு எஸ். ஏ. கண்ணன், பயத்துடனும் தயக்கத்துடனும், அவரிடம் வந்து எஸ்.எஸ்.ஆரின் அன்னை எம்.வி. ராஜம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்து, உடனேயே , தெளிந்த மன நிலைக்கு வந்து அவரது வீட்டிற்குச் சென்று, அவருக்கு ஒத்தடம் கொடுக்கும் கட்டம். பின், அவரை “அம்மா” என்று அழைத்து “எம்.வி. ராஜம்மாவையும் "மகனே" என்று கூறுங்கள் என்று சொல்லி விட்டு "அம்மா... அம்மா..." என்று மெதுவாக சன்னமாக உணர்ந்து கூறி கண் கலங்கும் கட்டம்.
சில காட்சிகளுக்குப் பின்னர் – அதுவும் குறிப்பாக – அடுத்தடுத்து வரும் சில காட்சிகள் – முதலில் சரோஜா தேவி பட்டுப்புடவையும் அலங்காரமுமாக வரும்போது, எஸ்.எஸ்.ஆர் அவரையுமறியாமல் சரோஜா தேவியின் அழகை எல்லோர் முன்னிலையிலும் ரசிப்பதைப் பார்த்து – கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய முக பாவம் மாறும் – அதாவது மாற்றானுக்கு மனைவியாய் வரப் போகிறவரை இன்னொருவன் இப்படிக் கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் பார்க்கிறானே என்று – ஒருவிதமான , அருவருப்பு தெறிக்கும் ஒரு பார்வை – இதை அவருடைய அந்த இரண்டு பெரிய கண்களும் – அவருடைய வாயும் – சற்றே இலேசாக நாசியைத் தூக்கி – அதை வெளிப்படுத்தும் அந்த அழகு – கடைசியில் – "சேகர்ர்ர்ரர்ர்ர்!" – என்று வெடிக்கும் அந்தக் கோபம். (இந்தக் காட்சியை ஏற்கனவே முரளி சார் விரிவாக விவரித்திருந்தாராயினும், என் பங்குக்கு நானும் நான் ரசித்த அந்த சிறிய முக பாவனை/உணர்வை நடிகர் திலகம் வெளிப்படுத்திய விதத்தை இங்கு கூறினேன்). உடனேயே, தொடரும் இன்னொரு காட்சி. பெருந்தன்மையோடு , SSR-ஐயும் சரோஜா தேவியையும் , ஒரு விசேஷத்துக்கு அனுப்பி வைத்து விட்டு, அவர்கள் ரொம்பவே கால தாமதமாகி வீட்டுக்கு ஒரு மாதிரியான - நெருக்கம் என்று சொல்ல முடியாது - ஆனாலும், ஒரு விதமான் அன்னியோன்னியம் இலேசாகத் தெரியும் - ஏற்கனவே காதலர்கள் அல்லவா! வந்தவுடன் , அவர்கள் வந்தவுடன் நடிகர் திலகம் காட்டும் அந்த மௌனமான அந்தக் கோபம் (அதற்கு முன் எத்தனை சிகரெட்டுகள், சும்மா ஊதித்தள்ளியிருப்பார், ஊதி, - நடிப்பையும் சேர்த்துதான்!). தான் கை வண்டியைத் தள்ளுகிறேன் என்று SSR முனைவார். கடைசியில், மெளனமாக, ஒரு விதமான, அச்சம் கலந்த குற்ற உணர்ச்சியுடன், சரோஜா தேவி அந்த வண்டியைத் தள்ளிக்க் கொண்டு போவார். இந்த இரண்டு கட்டங்களுக்குப் பிறகு, நடிகர் திலகம் தன் மனசாட்சியுடன் பேசும் அந்தக் காட்சி , கடைசியில் , தற்கொலைப் பாறைக்கு எல்லோரையும் நயவஞ்சகமாக வரவழைத்து விட்டு , SSR-ஐப் பிடித்து தள்ளுகிறவரை தொடரும் அந்த வில்லத் தனம் சொரிந்த அந்த நடிப்பு (பாபு அன்று நீ! இன்று? என்று கொலை வெறியுடன் சொல்லும் கட்டம். நிஜ வில்லன் தோற்றான்! அதிலும், முக்கியமாக, அந்த வசன உச்சரிப்பு மற்றும் மாடுலேஷன், முக பாவம்). அதற்கப்புறம், உண்மை தெரிந்து, கதறும் அந்த வெடிப்பும் வலியும், காப்பாற்றப் பட்ட பின், தெளிந்த மனோபாவத்துக்கு வந்தவுடன் , காட்டும் அந்த மாற்றம் (சதை படர்ந்த அந்த முகத்தில், அவர் வரவழைக்கும் அந்த கனிவு பொங்கும் நிர்மலமான, தெளிந்த நீரோடை போன்ற அந்த முகபாவம் – அது எப்படி , இவரால் மட்டும், ஒவ்வொரு கதாபாத்திரத்திலும், ஒவ்வொரு, காட்சியிலும், கூடு விட்டு கூடு பாய முடிந்தது?). திருமண வீட்டில், திருமணம் சரோஜா தேவிக்கு இல்லை என்று தெரிந்தபின், சரோஜா தேவி நடிகர் திலகத்தின் போட்டோவுக்கு முன் நின்று, நடிகர் திலகத்தைப் பற்றி உயர்வாக சொல்லிப் பேசும்போது , நடிகர் திலகம் , ஒரு குழந்தையைப் போல் , காட்டும் அந்த உணர்வு (அந்தக் கண்களை ஆர்வத்துடன் உருட்டும் விதம் ! ஒ!), கடைசியில், நொண்டிக் கொண்டே சரோஜா தேவியை நோக்கி ஓடும் காட்சி . நான் முதலில் சொன்ன காட்சிகளில் , மொத்த அரங்கத்தையே மௌனத்தில் ஆழ்த்திக் கட்டிப்போட்டுவிடுவார் என்றால், கடைசி காட்சிகளில், அதுவும், அந்த நொண்டி நடையின் மூலம், அரங்கத்தையே கைத் தட்டலால், ஆர்ப்பரிக்க வைத்து விடுவார் (இந்தப் படத்தில், இந்தக் காட்சியில்தான் திரை அரங்கத்தில் உள்ள ஒவ்வொருவரும் பெரிதாக ஆர்ப்பரிப்பார்கள்).
இந்தப் படம் "குடி கண்டலு" என்ற பெயரில், தெலுங்கில், மீண்டும் என்.டி.ராமாராவ் நடிப்பில் வெளி வந்தது. அவருடன், கிருஷ்ண குமாரியும் (சௌகாரின் தங்கை) மற்றும் ஜக்கையாவும் நடித்தனர். தெலுங்கிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படம் ஹிந்தியில், பீம்சிங்கின் இயக்கத்தில், "ஆத்மி" என்ற பெயரில், முதன் முறையாக, திலீப் குமார் அவர்கள் துணிந்து எதிர்மறையான பாத்திரத்தை ஏற்று நடிக்க வைத்தது. அவருடன், வஹீதா ரஹ்மானும், மனோஜ் குமாரும் நடித்தனர். ஹிந்தியிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்த இரண்டு மொழிகளிலும், ஆலய மணி நல்ல வரவேற்பைப் பெற்றாலும், நடிகர் திலகத்தின் அந்த, எதிர்மறையான வில்லத்தனமான நடிப்பை மட்டும், என்.டி.ராமாராவாலும், திலீப் குமாராலும், நெருங்க முடியவில்லை என்றே சொல்லலாம். இதற்கு முக்கியமான காரணம், தெலுங்கைப் பொறுத்தவரை, என்.டி. ஆரின் இமேஜ் மற்றும் அவருடைய limitation. ஹிந்தியைப் பொறுத்தவரையும் அதுதான் என்றாலும், திலீப் குமார் பொதுவாகவே பெரிய அளவிற்கு ஆரவாரமாகவும், முரட்டுத்தனமாகவும் நடித்திராதவர். "Tragedy கிங்" என்று தான் அங்கு அவரை அழைப்பார்கள் - தேவதாஸ் போன்ற படங்களிலேயே நடித்ததால்.
இந்தப் படத்துக்கான நடிகர் திலகம் விமர்சனம் "இதே கதைக்கு வட நாட்டிலும் நல்ல வரவேற்பு இருந்ததே!" என்பது தான்.
அன்புடன்,
பார்த்தசாரதி
Motor Sundaram Pillai
Motor Sundaram Pillai had earlier been released as DVD by Raj Video Vision. Now an even more economic version has been released. This is available in all major outlets. For your reference the image of the covers reproduced below.
http://i872.photobucket.com/albums/a.../MSPcovers.jpg
டியர் பார்த்தசாரதி சார்,
தியேட்டருக்கு போகாமலும், டீவி முன் உட்காராமலும், VCD-DVD உதவி இல்லாமலும் நாங்கள் இங்கே உங்கள் மூலம் கலைக்குரிசிலின் காவியங்களை மீண்டும் கண்டு களித்து வருகிறோம். அப்படி நாங்கள் உங்கள் எழுத்தின் மூலம் நேற்று பார்த்த நடிகர் திலகத்தின் திரைக்காவியம் "ஆலயமணி".
"ஆலயமணி" குறித்த சுவாரஸ்யங்கள் சில:
- சிங்காரச் சென்னையில், முதன்முதலில், வெளியான 4 திரையரங்குகளிலும் [பாரகன்(105), ஸ்ரீகிருஷ்ணா(105), உமா(105), நூர்ஜஹான்(105)], 100 நாள் விழாக் கொண்டாடிய கலைத்திலகத்தின் காவியம். சென்னை மாநகரில், முதன்முதலில், வெளியான 4 திரையரங்குகளிலும் [சித்ரா(119), பிரபாத்(112), சரஸ்வதி(112), காமதேனு(105)], 100 நாள் ஓடிய தமிழ்த் திரைப்படம் மக்கள் திலகத்தின் "மதுரை வீரன்(1956)".
- எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிகவும் பிடித்த, அவரது மனம் கவர்ந்த சிவாஜி படம்.
- இக்காவியம் வெளியான 23.11.1962 வெள்ளியன்று இரவு, இப்படத்தைப் பற்றிய First Day Reportஐ தொலைபேசியில் தொடர்பு கொண்டு, டைரக்டர் சங்கருக்கு வழங்கிய முதல் நபர் யார் தெரியுமா? மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்! 'என்ன சங்கர், தம்பி நடித்து நீங்கள் டைரக்ட் செய்து இன்று வெளியாகியுள்ள "ஆலயமணி" Box-Officeல் பிச்சு உதறுகிறதாமே, வாழ்த்துக்கள்!' என சங்கருக்கு முதல் பாராட்டு-வாழ்த்து தெரிவித்தவர் எம்.ஜி.ஆர். "ஆலயமணி"யின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்த போதும், படம் வெளியான சமயத்திலும், சங்கரின் இயக்கத்தில் "பணத்தோட்டம் [வெளியான தேதி : 11.1.1963]" படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ["பணத்தோட்டம்" தயாரிப்பு : சரவணா பிலிம்ஸ் ஜி.என்.வேலுமணி].
- தமிழ் சினிமா சரித்திரத்தில், 1962-ம் ஆண்டின் Box-Office Record படம் "ஆலயமணி". அந்த ஆண்டின் ஒரே மெகாஹிட் படம்.
- ஹிந்தி "ஆத்மி"க்கு விமர்சனம் எழுதிய ஒரு பிரபல தமிழ் வார இதழ், 'இங்கே ஸ்டிக்கும் நடித்தது! அங்கே...?' என விமர்சித்திருந்தது.
எழுதுங்கள், எழுதுங்கள், எழுதிக் கொண்டே இருங்கள்...படித்துப் பாதுகாக்கக் காத்திருக்கிறோம்!
அன்புடன்,
பம்மலார்.
அன்பு நண்பர்களுக்கு ஒரு நல்ல தகவல். மிக நீண்ட நாட்களாக பார்க்க முடியாமல் ஏங்கிக் கிடந்த செந்தாமரை படம் குறைந்த பட்சம் ஒளித்தட்டு வடிவிலாவது வெளியாகும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது. ஏ.எல்.எஸ். தயாரிப்பில் பீம்சிங் அவர்கள் இயக்கத்தில் நடிகர் திலகம், பத்மினி, கே.ஆர்.ராமசாமி, சந்திரபாபு உட்பட பல முன்னணி கலைஞர்கள் நடித்த படம். மெல்லிசை மன்னர்களின் இசையமைப்பில் பூவிருக்கு வண்டிருக்கு என்கிற டூயட் பாடல் - சௌந்தரராஜன், சுசீலா குரலில், வாரணமாயிரம் என்கிற ஆண்டாள் பாசுரம் பி.லீலா குரலில், தாங்காதம்மா தாங்காது என்கிற பாடல் சந்திர பாபுவின் குரலில், பாட மாட்டேன் நான் பாடமாட்டேன் என்று பாடி தன்னுடைய பாடும் சகாப்தத்தை முடித்துக் கொண்ட கே.ஆர்.ராமசாமி பாடிய பாடல், மற்றும் ஜி.கே. வெங்கடேஷ் குரலில் கனவே காதல் வாழ்வே என்கிற பாடல் உட்பட பல அருமையான பாடல்களைக் கொண்ட இப்படம், வருமா என்று ஐயமிருந்து கொண்டிருந்தது. இந்த ஐயத்தைப் போக்கும் வகையில் யூட்யூப் இணைய தளத்தில் இப்படத்தின் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. லீலா அவர்களின் குரலில் வாரணமாயிரம் பாசுரம் பத்மினி அவர்களின் ஆண்டாள் தோற்றத்தில் அருமையாக படமாக்கப் பட்ட பாடல் இதோ நம் பார்வைக்கு. ஒளிப் பிரதி நன்றாக இருப்பதாக தெரிகிறது. எனவே இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்போம்.
காரணம் நானும் இப்படத்தை இன்னும் பார்க்கவில்லை.
http://www.youtube.com/watch?v=t-BlQubHy_4
சாரதி/பாலா/செந்தில்,
சங்கர் குரு கன்னடப் படத்தில் ராஜ்குமார் சங்கர், குரு என்ற அந்த இரண்டு மகன்கள் வேடங்களை மட்டும்தானே செய்தார்? இல்லை தந்தை ராஜசேகர் ரோலையும் செய்தாரா?
அன்புடன்
ராகவேந்தர் சார்,
செந்தாமரை பாடல் காட்சி அருமையான பிரிண்ட். படமும் இப்படிப்பட்ட பிரிண்டாக வெளிவருமானால் நன்றாக இருக்கும்.
டியர் ராகவேந்திரன் சார்,
1955லேயே தொடங்கப்பட்ட "செந்தாமரை", தவிர்க்க முடியாத பல காரணங்களினால் மிகுந்த தாமதமாகி, 7 வருடங்கள் கழித்து, 14.9.1962 அன்று வெளிவந்தது. முதல் வெளியீடே பெரிய தாமதத்துக்குப் பின் நிகழ்ந்த இவ்வரிய காவியத்தின் வீடியோ பிரதி கிடைக்குமா என ஏங்கியிருந்த என்னைப் போன்ற எண்ணற்றோருக்கு, "செந்தாமரை"யின் பாடல் காட்சி ஒளிப்பேழையை பதிவிட்டு, வயிற்றில் பாலை வார்த்து விட்டீர்கள். "செந்தாமரை" VCD-DVD வடிவம் பெறும் என்ற நற்செய்திக்கும், அக்காவியத்தின் "வாரணமாயிரம்" பாசுரப்பாடலைப் பதிவிட்டமைக்கும் தங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்!
1962-ல் வெளியான "செந்தாமரை" பற்றி, 1965-ல் "வெண்ணிற ஆடை" மூலம் தமிழ்த் திரைப்படவுலகுக்கு அறிமுகமான கலைச்செல்வி ஜெயலலிதா, 1974-ல் வெளிவந்த தனது 100வது படமான "திருமாங்கல்யம்" திரைப்படத்தின் போது குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா...! ஆம், ஜெயலலிதா 100 படங்கள் நடித்து முடித்திருந்த சமயத்தில், 'பொம்மை' சினிமா மாத இதழில், தான் நடித்த 100 படங்களைப் பற்றியும் கருத்து கூறியிருந்தார். அதில் தனது 90வது திரைப்படமான "அன்னமிட்டகை" பற்றிச் சொல்லும் போது, "லலிதா, பத்மினி சகோதரிகளுக்கு 'செந்தாமரை' படம் போல இது எனக்கு அமைந்து விடுமோ என்று பயந்தேன். நல்ல வேளை! எனக்கு திருமணமாவதற்கு முன்பாகவே வந்து விட்டது" என்று கருத்து தெரிவித்திருந்தார். "அன்னமிட்டகை", 1966-ல் ஆரம்பிக்கப்பட்டு 15.9.1972 அன்று வெளியானது.
LPR என சுருக்கமாக அழைக்கப்பட்ட Lalitha, Padmini, Raghini சகோதரிகள் மூவரும் இணைந்து நடித்த மூன்றாவது சிவாஜி படம் "செந்தாமரை". [முதல் இரண்டு படங்கள் : தூக்கு தூக்கி(1954), காவேரி(1955)].
---------------------------------------------------
'மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்' எனத் தொடங்கி 'வாரணமாயிரம் சூழ வலம் செய்து' எனத் தொடரும் ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாடலின் இந்த ஒளிப்பிரதியில் கண்ட சில விஷயங்கள்:
- ஆண்டாளாக நாட்டியப் பேரொளியின் வேடப்பொருத்தமும், நடனமும், நடிப்பும் கனக்கச்சிதம்.
- தெய்வத்தமிழ் இலக்கியப்பாடலுக்கு சாஸ்திரீய சங்கீதமும் கலந்த ஒரு ஜனரஞ்சகமான மெட்டை செவ்வனே வழங்கியிருக்கிறார்கள் மெல்லிசை மாமன்னர்கள்.
- பி.லீலா இப்பாடலை தனது கம்பீரம் கலந்த கமகக் குரலில் அம்சமாக இசைத்திருக்கிறார்.
- "வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் - என்னெதிற்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்" என்ற இந்த நான்கு வரிகளில், முதல் இரண்டு வரிகளை பத்மினிக்கு பி.லீலா பாட, அடுத்த இரண்டு வரிகளை அதே பத்மினிக்கு எல்.ஆர்.ஈஸ்வரி பாடுகிறார். நன்றாகக் கவனித்துப் பார்த்தால் இது தெரியும். ஒரு நடிகைக்கு ஒரே பாடலில் இரு பின்னணிப் பாடும் குரல்கள், அபூர்வம். இந்த இரண்டு வரிகளைத் தவிர, 'தோழி நான்' என வரும் இடங்களைத் தவிர, ஏனைய எல்லா வரிகளையும் பி.லீலா தான் பாடியிருக்கிறார்.
- 'தோழி நான்' என்ற இடங்களிலும், குழுவினரிடத்திலும் எல்.ஆர்.அஞ்சலியின் குரல் தொனிக்கிறது.
- பாடலின் பிரிண்ட் பிரமாதமாக இருப்பது, படமாக வந்தாலும் அவ்வாறே இருக்கும் என்ற நம்பிக்கைக்கு வித்திடுகிறது.
-----------------------------------------------------
இக்காவியத்தில் இடம்பெற்ற, தாங்கள் குறிப்பிட்டுள்ள, 'பூவிருக்கு வண்டிருக்கு' பாடலையும், 'கனவே காதல் வாழ்வே' பாடலையும் இயற்றியவர் கவிஞர் கே.டி.சந்தானம். ஆண்டாள் பாசுரம் தவிர, மற்ற பாடல்களெல்லாம் கவியரசருடையது.
அன்புடன்,
பம்மலார்.
டியர் முரளி அவர்களே,
சங்கர் குரு மூலப் படத்தில், மூன்று பாத்திரங்களையும் (முறையே, ராஜசேகர், சங்கர் மற்றும் குரு) Dr. ராஜ்குமார் அவர்கள்தான் ஏற்று நடித்திருந்தார்.
வித்தியாசம் நடிகர் திலகத்தின் பிரத்தியேக உடல் மொழி மற்றும் கற்பனை வளம். மூலப் படத்தில் இருந்த, நான் ஏற்கனவே குறிப்பிட்ட அந்தக் காட்சி - நடிகர் திலகம் வெள்ளை கூட் சூட்டோடு வீகேயார் வீட்டிற்கு வந்து அதகளப்படுத்தும் காட்சி மற்றும் அந்த தொலைபேசி உரையாடல், இன்னும் பல காட்சிகள். குறிப்பாகச் சொன்னால், சென்னையில் திரிசூலத்தின் நூறாவது நாள் போஸ்டரில் - அதாவது 900 அரங்கு நிறைந்த காட்சிகள்! (சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி) - பெரிதாக நடிகர் திலகத்தின் இந்த உடையில் வாக்கிங் ஸ்டிக்குடன் ஸ்டைலாக ஒரு மாதிரி சாய்த்து நிற்கும் விதத்துடன் இருப்பது போல் - சென்னை மாநகரத்தின் பட்டி தொட்டியில் எல்லாம் ஒட்டப்பட்டு - அன்று பெரிதாக வளர்ந்து கொண்டிருந்த - கமல், ரஜினி போன்ற இளம் நடிகர்களின் வயிற்றில் புளியை வண்டி வண்டியாகக் கரைத்தது! கடைசியில், திரிசூலம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் எடுக்கப்பட்டபோது, பெரும்பாலும் தமிழை ஒட்டியே, அதாவது, நடிப்பைப் பொறுத்தவரை, எடுத்தார்கள் என்பதுதான் நடிகர் திலகத்தின் தனிச்சிறப்பு. (தெலுங்கில், நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர் மற்றும் பத்மாலயா பட அதிபர் கிருஷ்ணா / ஹிந்தியில், அமிதாப்பச்சன் (மகான் என்ற பெயரில்)).
டியர் ராகவேந்தர் அவர்களே,
தாங்கள் பதிவிறக்கம் செய்த செந்தாமரை படப் பாடல் வெகுப் பிரமாதம். VCD /DVD எப்போது வரும் என்ற ஆவலைக் கிளறி விட்டுவிட்டது.
டியர் பம்மலார் அவர்களே,
அந்த வாரணமாயிரம் - ஆண்டாள் பாசுரம், தாங்கள் சொன்ன "தூக்குத் தூக்கி" படத்திலும், இடம் பெற்றதுதான் ஒரு சுவாரஸ்யமான co-incidence.
அதாவது, சட்டாம்பிள்ளை வெங்கட்ராமனின் தந்தை, (இவர் நடிகர் திலகத்தின் நாடக ஆசான் என்று நினைக்கிறேன். தெரிந்தவர்கள் மேலும் சொல்லலாம்) முத்தமிழுக்கு எடுத்துக்காட்டாக, பத்மினி, ராகினி மற்றும் அவரது மகனாக நடித்திருந்த வெங்கட்ராமனையும் வடித்துக் காட்டச் சொல்ல, அதற்கு, ராகினி பாட, பத்மினி ஆட, அதற்கான பொழிப்புரையை, சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன், சொல்லுவதாக முடியும்.
அன்புடன்,
பார்த்தசாரதி
DEAR MURALI SIR,
Even Father's role was done by rajkumar in shankar guru.
Sir,how to post in tamil in this new format?
டியர் பம்மலார் அவர்களே,
தங்களின் மனப்பூர்வமான பாராட்டுகளுக்கு, என் மனமார்ந்த நன்றிகள். உங்களைப் போன்றவர்கள் ஊக்கப் படுத்த, ஊக்கப் படுத்த, எனக்கு, தாங்கள் பணித்தது போல், எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம், அது தான் பிரதான வேலையும் ஆகிப்போகிறது.
அன்புடன்,
பார்த்தசாரதி
நடிகர் திலகமும் அவரது படங்கள் பிற மொழிகளிலும் - (தொடர்ச்சி)
7. நவராத்திரி (1964) / நவராத்திரி (1966) – தெலுங்கு / நயா தின் நயி ராத் (1975) - ஹிந்தி
நடிகர் திலகமே “நடிப்புக்கும் நடிகனுக்கும் போட்டி” என்று இந்தப் படத்தைப் பற்றி சொல்லிவிட்டபிறகு, நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இல்லையில்லை, வண்டி வண்டியாக இருக்கிறது.
இந்தப் படம், நடிகர் திலகத்தின் கற்பனை வளத்திற்கும், அர்ப்பணிப்புக்கும், முனைப்புக்கும் எடுத்துக்காட்டாய் அமைந்த படங்களில் முக்கியமான படம். இன்று ஒப்பனைக் கலையில், வியத்தகு தொழில் நுட்பமும், தொழில் நுட்பக் கலைஞர்களும், வந்து விட்ட நிலையில், மீடியாவும், சம்பந்தப்பட்ட நடிகர்களுமே கூட, இந்த கெட்டப் விஷயங்களைப் பற்றிப் பெரிதாக சொல்லிக் கொள்ளுகிறார்கள். மீடியாக்களும், வட இந்தியாவின் ஆமிர் கான், ஷாருக்கான் முதல், நமது கமல், விக்ரம், சூர்யா வரை, பெரிதாக எழுதுகிறார்கள் - ஒரு படத்திற்காக, உடலைப் பெரிதாக வளர்த்துக் கொள்ளுகிறார்கள், உடனே, அடுத்த படத்துக்காக, குறைத்துக் கொள்ளுகிறார்கள் என்று. நடிகர் திலகமோ, உடல் மொழியையும், கற்பனை வளத்தையும், அசாத்திய தன்னம்பிக்கையையும் மட்டுமே வைத்துக் கொண்டு, சுயமாகவே பாதி ஒப்பனையையும் செய்து, இவர்கள் செய்ததை விட பல நூறு மடங்கு பிரமாதமாக செய்து விட்டாரே. அதற்காக, இந்தக் கலைஞர்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களுடைய சிரத்தையும், முனைப்பும், திறமையும் பாராட்டுக்குரியதுதான். என்னுடைய ஆதங்கமெல்லாம் (நம் எல்லோரோடையதும் தான்!) இன்றைய மீடியாக்கள், இவர்களைப் பற்றிப் பெரிதாகப் பாராட்டும்போது, இவர்கள் எல்லோருக்கும் முன்னோடியும், இவர்கள் மட்டுமல்ல இன்னும் இது போன்ற எத்தனையோ கலைஞர்களை விடவும், பல நூறு மடங்கு, பல வருடங்களுக்கு முன்னரே, நடிகர் திலகம் சாதித்து விட்டதை, விரிவாக எடுத்துச் சொல்லாமல், ஏன் இன்னமும் இருட்டடிப்பு செய்கிறார்கள்? இவர்களைப் பொறுத்தவரை, திரும்பத் திரும்ப ஒருவரது (பெயர் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?) புகழ் பாடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாது. இன்றைய தலைமுறையினருக்கும், உண்மை நிலவரம் தெரிய வாய்ப்பில்லை.
ஒரு நடிகன் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் (மாறு வேடங்களில் அல்ல) நடிக்கும் போது, ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அந்த ஒப்பனையில் இருப்பது ஒரே நடிகன்தான் என்பதைத் தெரியவைத்து, இருப்பினும், அதே மக்களை ஒவ்வொரு கதாபாத்திரத்தோடும், தன் கற்பனை வளத்தால், நடிப்பால், நடை உடை பாவனையால், குரல் மாற்றத்தினால், உடல் மொழியால், மக்களை அந்தந்தக் கதாபாத்திரத்துடன் ஒன்றச் செய்து விட முடியுமானால், அவனே, மிகச் சிறந்த நடிகனாகிறான்.
இதைத் தான், நடிகர் திலகம், நவராத்திரியில் செய்தார். அத்தனை வேடத்தில் இருப்பவரையும், மக்கள் எளிதாக (அந்த குஷ்ட ரோகி பாத்திரம் தவிர - அதையும், ஓரளவு கண்டு பிடித்து விடலாம்) அது நடிகர் திலகம்தான் என்று பார்த்தவுடன் சொல்ல வைத்து விட்டு, சிறிது நேரத்திலேயே, அந்தந்தக் கதாபாத்திரத்துடன், மக்களை ஒன்றைச் செய்து விட்டார். மக்களும் கடைசி வரையிலும், ஒவ்வொரு பாத்திரத்தையும், அந்தப் பாத்திரங்களாகவே பார்த்து மகிழ்ந்து, அதிசயித்துப் போனார்கள்.
மனிதனின் ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு பாத்திரத்தை அளித்து, அதற்க்கேற்றார்போல் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை அமைத்து, அதில், முழு வெற்றியையும் அடைந்த, கதாசிரியர்-இயக்குனர் திரு. ஏ.பி. நாகராஜன் அவர்கள் மற்றும் நடிகர் திலகத்தின் பங்கு இமாலயச் சாதனை என்றால் அது மிகையாகாது.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இவை தவிர,
1) நடிகையர் திலகம் சாவித்திரியின் பங்களிப்பு – நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுத்து நடித்தது – இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம்.
2) அது இல்லாமல், படத்தில் பங்கு பெற்ற அத்தனை கலைஞர்களும், மிகச் சிறிய பாத்திரத்தில் வருபவர் கூட - அனைவரையும் கவரும் படி நடித்தது; (அந்த நாடகக் கலைஞர் எபிசோடில் குள்ளமாக ஒரு நடிகர் - இவர் ஏபிஎன்னின் அத்தனை படங்களிலும் ஆஜராகியிருப்பார் - அந்தத் தண்ணீர் கூஜாவை மணிக்கணக்கில் திறந்து கொண்டே இருப்பது மற்றும் நடிகர் திலகத்திற்கு விசிறி வீசும்போது, அடிக்கடி அவரை அடித்துக் கொண்டே இருப்பது; (ஏ.பி.என்னின் தனித் திறமைகளில் ஒன்று, அவர் படங்களில் இடம் பெறும் அனைவரையும் நன்றாக நடிக்க வைத்து விடுவது - சிறு பாத்திரமாய் இருந்தாலும் - காரணம், அந்தச்சிறு பாத்திரமும் முக்கியப் பங்கு வகித்து, நடிப்பவர்களை ஊக்கப் படுத்தி விடும். முடிந்தவரை, தேவையில்லாமல், ஒரு சிறு கதாபாத்திரத்தைக் கூட அனாவசியமாக நுழைக்க மாட்டார்.);
3) மற்றும் "மாமா" என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் திரு. கே.வி. மகாதேவன் அவர்களின் பங்கு;
என்று ஒவ்வொரு அம்சமும் மிக நன்றாக அமைந்தது.
ஒன்பது பாத்திரங்களிலும், நடிகர் திலகத்தின் பங்களிப்பு அற்புதமாக அமைந்தது என்றாலும், முதல் நான்கு பாத்திரங்களும், (முறையே, அற்புதராஜ்; குடிகாரன்; டாக்டர் மற்றும் கோபக்காரனாக வந்து இறந்து போகும் பாத்திரம்), நாடகக் கலைஞர் மற்றும் காவல்துறை அதிகாரி பாத்திரமும், மக்களை வெகுவாகக் கவர்ந்த பாத்திரங்கள் எனலாம்.
முதல் பாத்திரத்தில், ஸ்டைலாகத் தோளைக் குலுக்குவது, சொந்தக் கதையை சாவித்திரியிடம் சொல்லும்போது, சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே பேசும் ஸ்டைல்; மற்றும், அந்த நடை;
இரண்டாவது பாத்திரத்தைப் பற்றிச் சொன்னால், சொந்தக் கதையை வர்ணிப்பது(அய்யய்யோ! அய்யய்யோ! என்று சொல்லும்போது எழும் கைத்தட்டல்!), மற்றும் "இரவினில் ஆட்டம்" பாடலில், நடக்கும் அந்த சாய்ந்த ஸ்டைலான நடை;
டாக்டர் பாத்திரம் என்றால், ஸ்டெதாஸ்கோப்பை வைத்துக் கொண்டு நடக்கும் - ஒரு முறை ஸ்டெத்தை மறந்து வைத்து விட்டு நடந்து, பின், திரும்பவும் வந்து, அதே நடையை maintain செய்து திரும்பவும் நடந்து செல்லுவார்; (மக்களைக் குறிப்பாக அந்தக் கதாபாத்திரத்துடன் ஒன்ற வைப்பதற்கு அவர் கையாளும் வித்தை மற்றும் சிரத்தை); சாவித்திரியிடம் பேசும் காட்சிகள் மற்றும்; கடைசியில், சாவித்திரி திடீரென்று காணாமல் போனவுடன், ஒரு மாதிரி, ஸ்டைலாக, அவரது வேலையாளைக் கூப்பிட்டுக்கொண்டே போகும் ஸ்டைல்; (சாவித்திரி தன் கதையை டாக்டரிடம், அதாவது, நடிகர் திலகத்திடம் விவரித்து இலேசாக கண் கலங்குவது (பிரமாதம்!); அதை நடிகர் திலகம் உன்னிப்பாக கவனித்துவிடுவார்; அதிலேயே, அவருக்குத் தெரிந்து விடும், சாவித்திரி நிஜப் பைத்தியம் அல்லவென்று; சாவித்திரியும் மற்றவர்களும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அடிக்கும் லூட்டி பிரமாதமாக இருக்கும்; அரங்கமே களை கட்டிவிடும்);
கோபக்காரன் பாத்திரத்தில் காட்டிய அந்தக் கோபம் மற்றும் வேகம்; குறிப்பாக, இறப்பதற்கு முன், சாவித்திரியிடம் சைகையாலேயே, "நான் வந்த காரியத்தை முடித்துவிட்டேன், நீ போய்விடு" என்று சொல்லி விட்டு, கீழே விழுந்து துடிதுடித்துக் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கும் கட்டம்;
"நவராத்திரி" - தொடரும்,
அன்புடன்,
பார்த்தசாரதி
7. "நவராத்திரி" - தொடர்ச்சி
அப்பாவி கிராமத்து விவசாயி பாத்திரத்தில், "போட்டது மொளச்சுதடி" பாடலில் காட்டும் அந்த இயல்பான உடல்மொழி; ரயில் முன் விழப் போகும் சாவித்திரியைத் தடுத்து நிறுத்த தலை தெறிக்க ஓடுவது; முகம் முழுவதும் வெள்ளை நிறப் பொடியை முகத்தில் கொட்டிக்கொண்டு வாயை வேறு மூடிக் கொள்ளும் காட்சி.
குஷ்ட ரோகி பாத்திரத்தில், வி. கோபாலகிருஷ்ணன் வீட்டில், தன் படத்தையே யாரென்று தெரியாமல் பார்த்து, பின்னர், அது தன் படம் தான் என்று தெரிந்த பிறகு மீண்டும் மீண்டும் பார்க்க முயற்சி செய்வது;
அடுத்து நாடகக் கலைஞர் பாத்திரம். வெகு இயல்பாக செய்திருப்பார். இந்தப் பாத்திரத்திற்கு முன்பு வரும் எபிசோடில் படம் இலேசான ஒரு தொய்வு நிலைக்கு வர ஆரம்பித்திருக்கும். சட்டென்று, இந்தக் கதாபாத்திரமும் அதனோடு வரும் காட்சிகளும், படத்தை மறுபடியும் தூக்கி நிறுத்த பெரிதும் உதவி செய்யும். ரொம்ப கலகலப்பாக அந்தக் காட்சிகளனைத்தும் அமைக்கப்பட்டிருக்கும் – முத்தாய்ப்பாக, அந்தத் தெருக் கூத்துப் பாடல் ("நான் காண்பதென்ன கனவா அல்லது நினைவா!" என்று பேசும் அந்த விதம். ஒ!). இந்தப் பாடல் முழுவதும், நடிகர் திலகத்தின் முகத்தைக் கூர்ந்து கவனித்தோமேயானால், முகத்தில் எந்த சலனமும் காட்டாமல், வசன உச்சரிப்புக்கும், நடன அசைவுகளுக்கும் மட்டும் நடிகர் திலகம் முக்கியத்துவம் கொடுத்திருப்பது தெரியும். ஒரு தேர்ந்த தெருக் கூத்துக் கலைஞரைக் கண் முன் நிறுத்தியிருப்பார். ஒரு தெருக் கூத்துக் கலைஞர் பெரிதாக முக பாவனையைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அவரைப் பொறுத்தவரை, மேடையில் என்ன காட்சி நடைபெறுகிறது என்பது கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவருக்கும் கேட்க வேண்டும். கடைசி வரிசையில் இருப்பவர்களுக்கு மேடையில் நடிப்பவர் என்ன பேசுகிறார் என்பது கேட்டால் போதும் – அவர் முகம் எப்படி உணர்ச்சிகளைக் காட்டுகிறது என்பது தெரிய வாய்ப்பில்லை என்பதால், ஒவ்வொரு தெருக் கூத்துக் கலைஞரும், வசன உச்சரிப்பு, குரல் ஏற்ற இறக்கம், உடல் மொழி, இவைகளில் தான் பெரிதாக கவனம் செலுத்துவர். ஆனால், இந்தக் கலைஞர்களின் பங்களிப்புதான் மகத்தானது. திரையில் நடிப்பவர்கள், எத்தனை டேக் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய பங்களிப்பை மேலும் மேலும் மெருகேற்றிக்கொண்டே போக முடியும். ஆனால், நாடக/மற்றும் தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு, ரீடேக்கெல்லாம் கிடையாது. மேடையில் நின்ற பின், அவர்கள், அடுத்து என்ன பேசுவது என்பதை மறந்து, விழித்தார்களானால், கூச்சலில் ஆரம்பித்து கல்லடியில் தான் முடியும். அந்தக் கலைஞன், இழந்த பெயரை மீண்டும் நிலை நிறுத்த பிரம்ம பிரயத்தனம் செய்து, போராடி, படாதபாடு படவேண்டியிருக்கும்.
இந்தக் தெருக்கூத்துப் பாடலில், நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள், நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுத்து பிரமாதமாக செய்திருப்பார். இத்தனைக்கும், சாவித்திரி அவர்களுக்கு, நாடக்கலையில், முன் அனுபவம் கிடையாது. நடிகர் திலகமும், இயக்குனர் ஏபிஎன்னும் சொல்லிக்கொடுத்ததை நன்கு உள்வாங்கி, அற்புதமாக நடித்துக் கொடுத்தார்.
அந்தக் காவல் துறை அதிகாரி பாத்திரத்தில், காட்டும் வேகம் மற்றும் மிடுக்கு (அந்த உடை கொஞ்சம் கூட கசங்காமல், இருக்கும், அந்த சிகை அலங்காரம் நிஜக் காவல்துறை அதிகாரியைக் கண் முன் நிறுத்தும்; இத்தனைக்கும், ஒரு பத்து நிமிடம் தான் வந்து போகும் பாத்திரம்; கடைசியில், ஆனந்தின் திருமணத்திற்கு அவர் அந்தக் கூடத்துக்குள் நுழையும் போதும் அதே வேகம்; மிடுக்கு) அதிலும், குறிப்பாக, சாவித்திரி யார் என்று தெரிந்து அவரை அனுப்பி வைத்து விட்டு, மக்களை – நம்மை நோக்கி – "lucky couple, eh!" என்று சொல்லி, சிங்கம் போல் கர்ஜித்து சிரித்து விட்டு – அதிலும் – மறுபடியும், ஹ்ம்ம்! என்று சொல்லி, சிகரெட்டை இழுத்து மறுபடியும், சிரிக்கும் ஸ்டைல் – கோடி கொடுக்கலாம் கொட்டி!. இதுவும், கர்ணனில் வரும் சிம்ம கர்ஜனையும் கிட்டத்தட்ட ஒன்று தான் என்றாலும், சிறு வித்தியாசம், அதில், கோபம் மற்றும் அவமானம்; இதில், ஒரு விதமான வெற்றி பெற்ற மனோபாவம் மற்றும் மன நிறைவு அடைந்தவுடன் வரும் அந்த அப்பாடா! என்ற மன நிலை.
அந்தக் கடைசி பாத்திரம், ஆனந்த் பாத்திரத்தில், பேசாமலயே காட்டிய அந்த உணர்வுகள்; மற்றும், திருமணக் கோலத்தில், மேடையில் அமர்ந்திருக்கும் போது, சாவித்திரி ஒரு மாதிரி அவரைக் கிள்ளும்போது நெளியும் அந்த நெளியல்;
பாச மலருக்குப் பின், மூன்று வருடங்கள் கழித்து, நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் படம் நெடுகிலும், சேர்ந்து ஜோடியாக நடித்து பெரிய வெற்றியை ஈட்டிய படம். இதற்கு முன்னர் இருவரும் ஜோடியாக நடித்து வெளிவந்த படங்கள் அனைத்தும் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை – ஏற்கனவே குறிப்பிட்ட காரணத்தால் – பாச மலருக்குப் பின்னர் இருவரையும் தமிழக மக்கள் அனைவரும் இவர்களை நிஜ அண்ணன் தங்கையாகவே பார்க்க ஆரம்பித்து விட்டனர். நவராத்திரிக்கு சற்று முன் வந்த “கை கொடுத்த தெய்வம்” படமும் பெரிய வெற்றி பெற்றது. ஆனால், இந்தப் படத்தில் இருவரும் படம் நெடுகிலும் ஜோடியாக நடிக்கவில்லை – கதையும் நட்பையும், கதாநாயகியின் வெகுளித்தனத்தால் ஏற்படும் விளைவுகளை ஒட்டியே இருக்கும்.
இந்தப் படம் வெளிவந்த காலத்திலேயே, ஹாலிவுட் நிறுவனமான, MGM -இன் நிறுவனர்கள், இந்தப் படத்தைப் பார்த்து விட்டு, கடைசி வரையில், இதில் நடித்தது, ஒரே நடிகர்தான் என்பதை நம்ப மறுத்து விட்டதாகவும், பின் அவர் ஒருவர்தான் என்று தெரிந்ததும், இதைப் போன்ற ஒரு நடிகர் எங்கள் ஊரில் இருந்தால், நாங்கள் தங்கச் சுரங்கத்தையே வாங்கி விடுவோம் என்று கூறிச் சென்றதாகக் கூறுவர். பின்னாளில், இந்தப் படத்தைப் பிரதானமாக வைத்து தான், நடிகர் திலகத்திற்கு, செவாலியே விருதை, பிரான்சு அரசும் வழங்கி நடிகர் திலகத்தை கௌரவித்துத் தானும் கௌரவப் (கர்வப்!) பட்டுக்கொண்டது.
நவராத்திரி, முதலில் தெலுங்கில் 1966-இல், ஏ. நாகேஸ்வரராவும், சாவித்திரியும் நடித்து, அதே பெயரில் வெளியானது. தெலுங்கில், இந்தப் படம் ஓரளவிற்கு, நல்ல வெற்றியைப் பெற்றாலும், தமிழ் அளவிற்கு சரியாகப் போகவில்லை; அதற்குக் காரணம், மறுபடியும், நடிகர் திலகத்தின் நடிப்பில் ஐம்பது சதவிகிதத்தைக் கூட நாகேஸ்வரராவால் தொட முடியாமல் போனது தான். பல வருடங்களுக்கு முன்பு, ஒரு மேடையில், நடிகர் திலகத்திற்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில், (எந்த விழா என்று நினைவில் இல்லை, தெரிந்தவர்கள், கூறினால் உபயோகமாக இருக்கும்), நாகேஸ்வர ராவே இது பற்றிக் கூறும்போது, இந்தியாவின் தலைசிறந்த நடிகர் சிவாஜிதான் என்பதில் எள்ளளவும் ஐய்யமில்லை; எத்தனயோ நடிகர்கள் அந்தந்த மொழிகளில் நடித்த படங்களை தமிழில் அசலை விட சிறப்பாக நடிக்கிறார்; ஆனால், அவர் நடித்த படங்கள் பிற மொழிகளில் எடுக்கப் படும்போது, அசலில், சிவாஜி நடித்த அளவுக்கு மற்ற மொழி நடிகர்களால் நடிக்கப்படுவதில்லை. உதாரணத்திற்கு, அவருடைய நவராத்திரி, தெலுங்கில் எடுக்கப்பட்டபோது, ஒன்பது வேடங்களிலும் , என்னால் அவர் அளவிற்கு நடிக்க முடியவில்லை . ஆறு அல்லது ஏழு வேடங்களில் தான் , அவருடைய நடிப்புக்கு ஓரளவிற்கு நிகராக என்னால் நடிக்க முடிந்தது என்று சொன்னார்.
நவராத்திரி, பிறகு, 1975-இல், ஹிந்தியில், “நயா தின் நயி ராத்” என்ற பெயரில், வட இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவரான சஞ்சீவ் குமார் மற்றும் ஜெயா பாதுரி நடிப்பில் வெளி வந்தது. இவர்கள் இருவரும், அப்போது தான், கோஷிஷ் என்றொரு மகத்தான படத்தில் நடித்திருந்தனர். (சஞ்சீவ் குமார், கோஷிஷ் படத்திற்காக, பாரத் விருது வேறு வாங்கியிருந்தார் – தமிழில் இந்தப் படம், நடிகர் திலகம் நடிப்பதாக இருந்து, பின்னர், கமல் - சுஜாதா நடிப்பில், “உயர்ந்தவர்கள்” படமானது). இந்தப் படமும் ஹிந்தியில், நன்றாக ஓடினாலும், எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாமல் போனதற்குக் காரணம், நடிகர் திலகம் அளவிற்கு சஞ்சீவ் குமாரால் நடிக்க முடியாமல் போனது தான்.
தொடரும்,
அன்புடன்,
பார்த்தசாரதி
டியர் பார்த்தசாரதி சார்,
வழக்கம் போல், "நவராத்திரி" திரைக்காவிய அலசலும் அற்புதம்!
"நவராத்திரி"யில் நடிகர் திலகத்திற்கு ஒன்பது பாத்திரங்கள்; ஆயினும், நாடக நடிகர் கதாபாத்திரத்தில் அவர் ஏற்கும் 'சத்தியவான்' வேடத்தைச் சேர்த்தால் அவருக்கு மொத்தம் பத்து வேடங்கள்.
நமது நடிகர் திலகத்தின் 100வது திரைக்காவியமான "நவராத்திரி", 100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் காவியம்.
ஒரு நடிகரின் 100வது படம், சென்னை மாநகரில் வெளியான 4 பெரிய திரையரங்குகளிலும் [மிட்லண்ட்(101), மஹாராணி(101), உமா(101), ராம்(101)], ரெகுலர் காட்சிகளில், 100 நாட்கள் ஓடியது நமது நடிகர் திலகம் ஒருவருக்கே.
மற்றும் மிகப் பெரிய திரையரங்குகளான மதுரை-ஸ்ரீதேவி(108), திருச்சி-சென்ட்ரல்(100) அரங்குகளிலும் 100 நாட்கள் ஓடியது.
100வது படம் கருப்பு-வெள்ளைப் படமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் அது அபார வெற்றி கண்டு 100 நாட்களுக்கு மேல் ஓடியதும், தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நமது நடிகர் திலகம் ஒருவருக்குத்தான்.
தனது 100வது திரைக்காவியம் வெளியான அதே தீபாவளித் திருநாளில் [3.11.1964], தனது இன்னொரு திரைக்காவியத்தையும் [99வது காவியமான "முரடன் முத்து"] வெளியிட்ட சிகர சாதனை, அசாத்திய துணிச்சல், அசுர தைரியம் உலக சினிமாவில் நமது நடிகர் திலகம் ஒருவருக்கே உண்டு.
"நவராத்திரி" 100 நாள் மாபெரும் வெற்றிக்காவியம் என்றால் "முரடன் முத்து", சென்னை மற்றும் தென்னகமெங்கும் பல சென்டர்களின் பல அரங்குகளில் 50 நாட்களைக் கடந்த சிறந்த வெற்றிக்காவியம். அதிகபட்சமாக, கோவை மாநகரின் 'இருதயா' திரையரங்கில் 79 நாட்கள் ஓடியது.
நமது சிவாஜி அவர்கள் நடிகர் திலகம் மட்டுமல்ல, பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளின் 'ராஜ திலகம்'.
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 183
கே: எங்க மாமாவின் இளமை ரகசியம் என்ன? (தெய்வமகன் ரசிகர்கள், பம்பாய்-22)
ப: எதையும் கட்டுப்படுத்தக்கூடியவர் நம்ம தாத்தா! (சாந்தியின் மகளுக்கு)
(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1970)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 184
கே: பெண் சிவாஜியாக ஏன் சௌகார் ஜானகியை சொல்லக்கூடாது என்று பொருமுகிறாளே எனது பெண் சிநேகிதி? (எஸ்.ஆர்.ஹரிஹரன், சென்னை)
ப: சிலர், பத்மினியை மறந்து விட்டீர்களா என்கிறார்கள். சிலர், சாவித்திரிக்காக கஜ்ஜை கட்டிக் கொண்டு சண்டைக்கு வருகிறார்கள், தவிர, பானுமதியின் விசிறிகள் பலர். எல்லோரையும் மடக்க, சிவாஜியை இப்படி வர்ணிப்பது பொருத்தமாக இருக்கும். சிவாஜி, ஓர் ஆண் சௌகார். சிவாஜி, ஓர் ஆண் பத்மினி. சிவாஜி, ஓர் ஆண் சாவித்திரி, ஆண் பானுமதி. நீங்களே சொல்லுங்கள், பொருத்தமாக இருக்கிறதா?!
(ஆதாரம் : குமுதம், 13.3.1980)
அன்புடன்,
பம்மலார்.
Thanks a lot Mr. Parthasarathy and Mr. Swamy for keep providing more and more details of NT. I am simplying enjoying each post. Thanks a again. In front you guys I am very much tiny NT fan.
Cheers,
Sathish
டியர் பார்த்தசாரதி,
ஆலயமணி ஆய்வுக்கட்டுரையைப்படித்து பதில் எழுதுவதற்குள், இன்னும் சிறப்பாக 'நவராத்திரி' சிறப்புக்கட்டுரை. ஒவ்வொரு ரோலைப்பற்றியும் உங்கள் விவரிப்பு மிகவும் அற்புதம். நுணுக்கமாக ஆராய்ந்து செதுக்குகிறீர்கள். அட்டகாசம்.
நவராத்திரியை நேரில் பார்த்ததுபோல, ஒவ்வொரு காட்சியாக அசைபோட வைத்தது. டாக்டர் கருணாகரன், கான்ஸ்டபிள் கரிக்கோல் ராஜுவிடம் 'உங்க உலகத்துக்கும் எங்க உலகத்தும் ரொம்ப தூரம்' என்று சொல்லும் இடத்தில் அவர் முகத்தில் பொங்கும் கருணை. சூப்பர். இன்றைக்கும் கூட பல விஐபிக்கள், விரும்பிக்கேட்டவை நிகழ்ச்சியில் 'இரவில் ஆட்டம்' பாடலையோ அல்லது 'தெருக்கூத்து' காட்சியையோ ஒளிபரப்பாமல் இருப்பதில்லை. சமீபத்தில் மறைந்த மலேசிய வாசுதேவனின் மகன் யுகேந்திரன் சிலமாதங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சியில், இந்த தெருக்கூத்து காட்சியைப்பற்றி அணுஅணுவாக விவரித்து மகிழ்ந்தார்.
உங்களுடைய ஒவ்வொரு படத்தைப்பற்றிய பதிவும், அதைத்தொடர்ந்து அதன் சாதனை விவரங்களை பம்மலார் விவரிப்பதும், இத்திரிக்கு விறுவிறுப்பை ஊட்டி வருகின்றன.
தொடரட்டும் உங்கள் அதிரடிப்பயணம்.
அன்பு நண்பர் பார்த்த சாரதி அவர்களின் பட அலசல்கள் அற்புதமாக அமைந்துள்ளன. குறிப்பாக மற்ற மொழிகளில் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய ஆய்வு சிறப்பானது. நவராத்திரி திரைப்படத்தினைப் பொறுத்த வரையில் ஹி்ந்தியில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாததற்கு பல காரணங்களைக் கூற முடிந்தாலும் முழு முதற் காரணம் நடிகர் திலகத்தின் நடிப்புக்கு முன் மற்றவை மிகவும் சாதாரணமாக தோற்றம் அளித்ததாகவும் கூறலாம். இருந்தாலும் நவராத்திரியை அவர்கள் முடிந்த அளவிற்கு சிறப்பாக எடுத்திருந்தனர் என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக லட்சுமிகாந்த் பியாரிலால் இசையில் பாடல்கள் பிரபலமடைந்தன. நம்முடைய மொழி பாடல்களுக்கும் அவர்களின் பாடல்களுக்கும் நிச்சயம் ஒப்பீடு செய்ய முடியாது.
அப்படி நயா தின் நயா ராத் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை இங்கே நாம் காணலாம். இது இரவினில் ஆட்டம் பாடலின் ஹிந்தி வடிவம். தமிழில் இடம் பெற்ற பாடலை மறந்து விட்டு இப்பாடலைப் பார்ப்பது நன்று. ஏனென்றால் அவர்கள் ஹிந்தி திரையுலகிற்கு ஏற்றவாறு பாடல் காட்சியைப் படமாக்கியிருந்தார்கள். பாடலைப் பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=WGVWuj-55KU
அன்புடன்
டியர் கோல்ட்ஸ்டார் சதீஷ்,
நாம் எல்லோரும் சிவாஜி குலம், சிவாஜி இனம். நாம் அனைவருமே அவர் புகழ் பாடும் குயில்கள்தான். தங்களது உயர்ந்த உள்ளத்திலிருந்து வரும் பாராட்டுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்!
சகோதரி சாரதா, பாராட்டுக்கு நன்றி!
வீடியோ வேந்தர் ராகவேந்தர் சார், 'மே வஹி வஹி பாத்' பாடலுக்கு நன்றி!
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகம் பற்றி காதல் மன்னன்
"சிவாஜி கணேசன் என்னை 'மாப்ளே...மாப்ளே'ன்னு தான் கூப்பிடுவார். சாவித்திரியை 'தங்கை'ன்னு தான் அழைப்பார். அதனால மாப்பிள்ளை முறை என்பார். 'பராசக்தி' படத்துலேயே அவர் நன்றாக நடிச்சிருந்தார். ஒரு நல்ல நடிகர் கிடைச்சிருக்கார்னு நான் சந்தோஷப்பட்டேன். சிவாஜியும், நானும் இணைஞ்சு நடிச்ச முதல் படம் 'பெண்ணின் பெருமை'. முதல் படத்திலேயே எங்களுக்கு வித்தியாசமான அனுபவம். ஒரு ஷாட்டுல நான் அவரோட கன்னத்துல ஓங்கி அறையற மாதிரி சீன். உடனே சிவாஜி என்கிட்ட 'மாப்ளே, உண்மையிலேயே என் கன்னத்துல அடிச்சிடு. இல்லைன்னா வேறு எங்காவது படாத இடத்துல பட்டுடப்போவுது'ன்னு சொன்னார். நானும் 'சரி'ன்னு சொல்லிட்டேன். ஆனால் ஷாட்டின் போது அவரை எப்படி அடிக்கிறதுன்னு தயக்கம். அதனால அடிக்கிற மாதிரி ஆக்ஷன் தான் பண்ணினேன். அதுதான் வினையாக மாறிடுச்சு. என் கை அவரோட உதட்டுல பட்டு இரத்தம் வர ஆரம்பிச்சிடுச்சு. 'மாப்ளே...என்ன இப்படி பண்ணிட்டியே? நீ உண்மையிலேயே அடிச்சிருந்தா வலியோடு போயிருக்குமே'ன்னு சொன்னார். இரத்தத்தைப் பார்த்ததும் எனக்கு மனசு ரொம்ப சங்கடமாப் போச்சு. இதற்குப் பிறகு 1958-ல 'கல்யாண பரிசு' படத்துல நடிச்சிட்டு இருந்தேன். அதே நேரத்துல தான் ஜெய்ப்பூரில் 'கட்டபொம்மன்' படத்தோட ஷூட்டிங். அதுல நடிக்கிறதா இருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஏதோ காரணத்துனால நடிக்க முடியாமல் போயிடுச்சு. அந்த வெள்ளையத் தேவன் கேரக்டரைத்தான் நான் பண்ணினேன். அப்போதும், அதற்குப் பிறகும் கூட நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து பல படங்களில் நடிச்சோம். சிவாஜி, நான், சாவித்திரி மூணு பேரும் பீம்சிங் இயக்கத்துல தொடர்ச்சியாக நடிச்சோம். பதிபக்தி, பாவமன்னிப்பு, பாசமலர், பார்த்தால் பசி தீரும், பந்தபாசம்-ன்னு எல்லாப் படங்களும் ரொம்ப நல்ல படங்களா அமைஞ்சுது. எல்லாப் படங்களும் மக்களிடையேயும் அமோகமாக வரவேற்பு பெற்று நன்றாக ஓடின. அந்த நாட்கள் எல்லாம் எப்பொழுதுமே என்னால் மறக்க முடியாதவை." [28.7.2003 தேதியிட்ட 'குமுதம்' இதழிலிருந்து]
இன்று 22.3.2011 அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம். நமது நடிகர் திலகத்துடன் 13 திரைப்படங்களில் இணைந்து நடித்த காதல் மன்னனுக்கு நமது ஆத்மார்த்தமான அஞ்சலி.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
சென்னை பெரம்பூரில் உள்ள 'மஹாலக்ஷ்மி' திரையரங்கில், கடந்த 18.3.2011 வெள்ளி முதல், முற்பகல் 11:30 மணிக் காட்சியாக, கலையுலக ஆண்டவரின் "ஆண்டவன் கட்டளை" வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடி வருகின்றது.
இத்தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு கனிவான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
டியர் பார்த்தசாரதி சார்,
நமது பாசத்திலகத்தின் "பாசமலர்" காவியத்தினுடைய Title Songஆன 'அன்புமலர் ஆசைமலர்...' பாடலைப் பாடியவர் நமது மெல்லிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன்.
நடிகர் திலகமும், காதல் மன்னனும் பார்வையால் பேசிக் கொள்ளும் கடற்கரைக் காட்சியில்,
'முன்புறமாய் கால் நடக்கும்
பின்புறமாய் மனம் நடக்கும்
பேசினால் தீர்ந்துவிடும்
சேர்ந்துவிடும் உறவு
யார் முதலில் பேசுவது
அங்கே தான் பிரிவு'
எனப் பின்னணியில் ஒலிக்கும் வரிகளை இசைத்தவர் இசை மேதை ஜி.கே.வெங்கடேஷ்.
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 185
கே: "தங்கை" படத்தில் சிவாஜி கணேசன் சண்டை போடும் காட்சிகள் எப்படி? (அன்புதாசன், கோயமுத்தூர்)
ப: வெளுத்து வாங்கி விட்டார்.
(ஆதாரம் : பேசும் படம் வெள்ளிவிழா மலர், ஆகஸ்ட் 1967)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 186
கே: நடிகர் திலகத்திடம் உள்ள தனிச்சிறப்பு என்ன? (ஈ.முத்துக்குமார், அம்பலகாரன்பட்டி)
ப: அவரைப் போல் தொழிலில் பக்தியுள்ளவர்களைக் காண்பது அரிது!
(ஆதாரம் : பேசும் படம், ஜனவரி 1978)
அன்புடன்,
பம்மலார்.
அன்புள்ள பம்மலார் அவர்களே,
தங்களுடைய பாராட்டு என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நான் பதிவு செய்யும் ஒவ்வொரு படத்திற்கும் விடாமல் உடனேயே அதற்கு பதில் பாராட்டு செய்து, அந்தப் படத்தைப் பற்றிய மேலும் சிறப்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி என்னை உற்சாகப்படுத்துவதோடு நிற்காமல், இந்தத் திரிக்கு மேலும் சுவையையும் சுவாரஸ்யத்தையும் கூட்டி விடுகிறீர்கள்.
நன்றியுடன்,
பார்த்தசாரதி
Dear Sathish,
Thanks for your sincere appreciation. In front of NT, every human being is tiny. We all get immense pleasure and satisfaction whenever we think, talk, discuss, write, share and see NT and his performances.
Thanks once again,
Regards,
R. Parthasarathy
டியர் ராகவேந்தர் அவர்களே,
தங்களுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்கு என் சிரம் தாழ்த்திய நன்றிகள். உங்களைப் போன்றோரின் பாராட்டுக்கள் என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நான் ஒவ்வொரு முறை ஒரு நடிகர் திலகத்தைப் பற்றிய படத்தைப் பற்றிப் பதிவிட்ட உடனேயே, நீங்கள் அனைவரும் (நீங்கள், முரளி சார், பம்மலார், சாரதா மேடம், பாலா, மற்றும் பலர்) பதில் பாராட்டு அளிப்பதோடு நிற்காமல், அந்தப் படங்களைப் பற்றி மேலும் பல நுணுக்கமான விவரங்களை உடனுக்குடன் அளித்து, மேலும் மேலும், இந்தத் திரிக்கும், நடிகர் திலகத்துக்கும் வான் புகழை அளித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
நன்றியுடன்,
பார்த்தசாரதி
Thanks Mr.Parthasarathy for Very good Review about NAVARATHIRI.
Thanks Mr.Pammalar for your Value added services to every review.
last three days three films, karnan, andha naal, paraasakthi... :notworthy:
kattabomman, dwlded, scheduled for tonite.
any other recommendations? like a must watch? any movies in which NT shows subtle acting skils too??
Dear SoftSword,
An apple a day keeps the doctor away!
An NT film a day keeps all hassles away!
It is very thrilling & nice to know that you are watching NT movies for the past three days. Thanks a lot for sharing this info.
According to me, every movie of NT comes under the MUST WATCH category.
Anyway, My strong recommendations for your query are the following films:
1. Kappalottiya Thamizhan
2. Paasamalar
3. Navarathiri
4. Deivamagan
5. Uthamaputhran
6. Motor Sundaram Pillai
7. Thiruvilayadal
8. Thillana Mohanambal
9. Sivandha Mann
10. Deepam
More to come...
A Very Very Happy Viewing & Sweet Sivaji Dreams,
Pammalar.
Dear SoftSword,
My strong recommendations continues:
11. Vietnam Veedu
12. Gauravam
13. Paavamannippu
14. Rajapart Rangadurai
15. Thiruvarutchelvar
16. Gnana Oli
17. Kai Kodutha Deivam
18. Pudhiya Paravai
19. Galatta Kalyanam
20. Raja
More to come...
Happy Viewing & Sweet Sivaji Dreams,
Pammalar.
Dear Mr. SoftSword,
Very happy to note that you too are a fan of the great Sachin. However, my happiness got doubled when I further note that you have been fortunate to watch 3 great NT movies in the last 3 days, continuously.
In fact, I would recommend a minimum of 150 movies for you to watch and enjoy NT and the max. is 305 (total no. of movies NT acted); but, it would be fitting that a veteran like Mr. Pammalar started indicating the list and hence, that will be ultimate. Please follow what Mr. Pammalar advises.
Regards,
R. Parthasarathy
thanks Pammalar and Parthasarathy...
too many movies to see.. and thats the main reason i cant decide to watch any movie all these days...
onnae onnu kudunga... patthuttu vandhu thirumba kekkaren...
NT'ya pudikkadha, avar nadippa pudikkadhu'nu solravangalukku neenga oru padam recommend panna endha padam pannuveenga? adha sollunga...
Dear Mr. SoftSword,
This will be most difficult question, even God may not be able to answer, as I, not only as a sincere NT fan, but, also as a person who happened to watch most of the brilliant performance of all the thespians in the film world (Tamil, Telugu, Malayalam, Kannada, Bengali, Hindi & English) feel that NT cannot be compared with anybody. Most of the veterans of veterans across the globe have already declared NT is the only Artiste who performed a variety of roles with equal ease, passion and composure than anybody. This is what makes him the most special and gifted Artiste.
Instead, let us continue to watch and enjoy NT perform.
Regards,
R. Parthasarathy
My all time favorite movie is "Karna" =>
1. Encounter with Indhiran
2. Diplomacy scene in the King's court
3. Refusal of a "post" in the War
4. (not for NT but for NTR => Assurance to Arjuna)
(My another Favorite movie is MayaBaazar )
Nice List, have watched them all. As I had posted somewhere in HuB that we got to urge the govt. or an assosiation to Re-Master these classics and screen it to the world audience. (Not talking about VHS to VCD or VCD to DVD but a quality sound and image mastering but not to be colored. The B&W tone is the best to watch anyone perform notably NT) .
SS, you can start with these (in any order you wish) "Thiruvilayadal", "Navarathiri", "Gnana Oli" & "Pudhiya Paravai".
Sir, naan NT'ku edhira edhum sollaliyae...
orae oru padam nach'nu sollunga'nu dhane keaten.
maybe enakku inga sariya pesa therilanu nenakkiren :)
thanks arthi...
the thing is, i have seen all the movies u suggested and the other suggested here, its not like i have never watched NT movies, but only before a long time.
My mom and her younger bro are great NT fans, rendu perum onnaa ukkandhu 'malarndhu malaraadha' pattellaam paadunvaanga enga munnaadi.