Yesterday sunlife channel telecasted thai sollai thathey @1900 hrs
தாய் சொல்லைத் தட்டாதே படத்தைத் தயாரிக்க முடிவு செய்ததும், கதையை எம்.ஜி.ஆரிடம் கூறுவதற்காக என்னை அவரிடம் தேவர் அழைத்துச் சென்றார். என்னைப் பார்த்ததும் எடுத்த எடுப்பிலேயே, 'நீங்கள் சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதுகிறீர்கள் அல்லவா?' என்று எம்.ஜி.ஆர். கேட்டார். 'பாசமலர்', 'படித்தால் மட்டும் போதுமா' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருப்பதாக தெரிவித்தேன். 'நீங்கள் சிவாஜி பிலிம்சுக்கு நிரந்தர எழுத்தாளரா?' என்று எம்.ஜி.ஆர். கேட்டார். 'இப்போதைக்கு அப்படித்தான்' என்றேன். 'சிவாஜியை உங்களுக்கு எப்படி தெரியும்?' என்று கேட்டார், எம்.ஜி.ஆர்.
'ஜெமினி அறிமுகம் செய்து வைத்தார்' என்றேன். 'தாய் சொல்லைத் தட்டாதே படத்துக்கு வசனம் எழுதி முடித்து விட்டீர்களா?' என்று கேட்டார். 'எழுதி முடித்து விட்டேன்' என்றேன். 'படப்பிடிப்புக்கு முன் முடித்துவிடுவது நல்ல வழக்கம்தான்' என்றார், எம்.ஜி.ஆர். புலிக்கு எதிரில் நிற்கும் ஆடு போன்ற நிலையில் நான் இருந்தேன்! எம்.ஜி.ஆர். என்னை சிவாஜியின் ஆள் என்று முடிவு கட்டிவிட்டார் என்று எனக்குத் தெரிந்தது. படத்திலிருந்து விலகிக்கொள்ளலாமா என்று நினைத்தேன். ஆனால், `தாய் சொல்லைத் தட்டாதே' படத்துக்கு முழு வசனமும் எழுதி முடித்துவிட்டதால், என்ன செய்வது என்று தெரியவில்லை.
இந்த நிலையில் படப்பிடிப்பு ஆரம்பமானது. தாயில்லாத பெண்ணான சரோஜாதேவியின் தந்தை எம்.ஆர்.ராதா. தந்தையற்ற மகனான எம்.ஜி.ஆரின் தாய் கண்ணாம்பா. அவர் கைம்பெண் ஆனதற்கு காரணமே எம்.ஆர்.ராதாதான். இந்த நிலையில், தனது காதல் திருமணத்திற்கு தந்தையின் அனுமதி கிடைத்துவிட்டது என்று சரோஜாதேவி, எம்.ஜி.ஆரிடம் கூறுவது போன்ற காட்சி படமாகியது. 'உங்கம்மாவை எங்க வீட்டுக்கு அனுப்பி, எங்க அப்பாகிட்ட என்னை பெண் கேட்கச் சொல்லுங்க' என்றார், சரோஜாதேவி. 'எங்கப்பா இறந்ததற்கு அப்புறம், எங்க அம்மா எந்த மங்கல காரியத்திலேயும் பங்கெடுக்கிற வழக்கம் இல்லை. பொதுவாக கணவரை இழந்த பெண்களை பார்க்கிறதே அபசகுணம் என்று சொல்வாங்க. ஆனால் நான் விடிந்ததும் முதலில் என் அம்மா முகத்தில்தான் நான் விழிக்கிறேன். அதனால்தான் எனக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கிறது.
எனக்கு எப்பவும் தாய்தான் தெய்வம். அந்த தாய் சொல்லை தட்டமாட்டேன்' என்பார், எம்.ஜி.ஆர். இந்த வசனத்தை நான் படித்துக் காட்டியதும் எம்.ஜி.ஆர். என்னை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, என் தோளில் தட்டிக்கொடுத்தார். பின்னர், 'தாயை பற்றி நீங்கள் எழுதி இருக்கும் வசனம் வார்த்தைக்கு வார்த்தை எனக்குப் பொருந்துகிறது. இது எனக்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது' என்றார். எம்.ஜி.ஆரைப்பற்றி, தவறான புள்ளிகள் வைத்து என் மனமுற்றத்தில் நான் போட்டிருந்த தவறான கோலம், முற்றிலுமாக அழிந்து போய்விட்டது.
- திரு.ஆரூர்தாஸ் பதிவிலிருந்து