Originally Posted by
esvee
Kanneer varum ilanakai nanbarin katturai
ஆயிரத்தில் அல்ல கோடிகளில் ஒருவர்.
ஒரு இலங்கைத்தமிழனது பார்வையில் எம்.ஜி.ராமச்சந்திரன் என்பவர், தலைவனுக்குத்தலைவன், இதய தெய்வம் என்ற நிலையில் என்றும் மிகப்பெரிய கௌரவத்துடனும், நன்றியுடனும் பார்க்கப்படும் ஒருவர்.
எந்தவொரு கலைஞனுக்கும் அடிமைப்பட்டுவிடாத இலங்கைத்தமிழன், எம்.ஜி.ஆர் என்ற நாமத்திற்கு மட்டும் கொண்டாட்டம் எடுத்தகாலங்கள் ஆச்சரியமானது.
அதுபோல உலகத்தலைவர் எவருக்கும் சிலைவைத்து வழிபடாத சமுகம், எம்.ஜி.ஆர் என்ற அந்த தலைவனுக்குமட்டும் சிலையெழுப்பி தலைகுனிந்து இன்றும் வணக்கம் சொல்லிக்கொண்டிருக்கின்றது. ஏனெனின் இலங்கைத்தமிழனின் இன உணர்வுக்கும், விடியல் என்ற பயணத்திற்குமான “ஆணிவேர்” எம்.ஜி.ஆர் என்ற அந்த அன்பு மனிதனே என்பதில் இன்றுவரை அந்த சமுகம் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் நெஞ்சில் வைத்து துதித்துகொண்டிருக்கின்றது.
மருதூர் கோபாலமேனன் இராமச்சிந்திரன் இதேநாள் 1917 ஆம் ஆண்டு இலங்கையில் நாவலப்பிட்டி என்னும் இடத்தில் பிறந்து டிசெம்பர் 24 1987ஆம் ஆண்டு உடலால் மறைந்தாலும் இன்றுவரை கோடிக்கணக்கான உள்ளங்களில் என்றுமே ஒரு சக்கரவர்த்தியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.
எம்.ஜி.ஆர் உடைய திரையுலக வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என்பவற்றை சொல்லப்போனால் அது சூரியனுக்கே கண்ணாடி பிடித்து காட்டுவதுபோலாகிவிடும்.
எனவே என்பார்வையிலும், என் அனுபவங்களிலும் எம்.ஜி.ஆர் என்ற கோணத்தில் போகின்றேன்.
1987 ஆம் ஆண்டுகளின் முன்பகுதி பாரிய அனர்த்தங்கள் ஆபத்துக்கள், குண்டுவீச்சுக்கள், ஷெல் வீச்சுக்களுக்கு மத்தியில் நாளை எங்கள் உயிர் ஒட்டுமொத்தமாக பறிக்கப்பட்டுவிடும் என்ற பீதியுடன் நாம் வாழ்ந்துவந்தாலும், எம்.ஜி.ஆர் இருக்கின்றார் என்ற தைரியம் எம் சுற்றத்தில் உள்ள பெரியவர்களின் பேச்சுக்களிலும், போராளிகளின் நம்பிக்கைகளிலும் தெளிவாகத்தெரிந்தமையினை அப்போது 09 வயதுதான் என்றாலும் தெளிவாகப்புரிந்துகொண்டேன்.
உணவுக்கு பஞ்சம் ஏற்பட்ட நிலையில் உணவுகளுடன் வந்த இந்தியக்கடற்படை கப்பல்கள் இலங்கை கடற்படையினால் எச்சரிக்கப்பட்டு, திரும்பி அனுப்பட்டதும், ஆனால் உடனயடியாகவே பிற நாடு ஒன்றின் வான்பரப்பு என்றாலும் வாடுவது தமிழ் இனம் என்ற எம்.ஜி.ஆரின் அசைக்கமுடியாத பிடிமானத்தால் இந்திய மிராஜ் விமானங்கள் இலங்கைக்கு மேலாக சுற்றிவந்து உணவுப்பொருட்களை கொட்டிவிட்டு சென்றதும்,
அப்போது எங்களுக்கு வானில் இருந்து அருள் புரிந்தது மிராஜ்களாக தெரியவில்லை எம்.ஜி.ஆராகவே தெரிந்தார்.
ஆனால் சில சூழ்ச்சிகளால், இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில், ஈழத்தமிழர்களின் தாயகங்களில் சிங்களவனையும் மீறிய ஊழித்தாண்டவங்கள் இடம்பெற்றபோது, நோய்ப்படுக்கையில் படுத்திருந்தாலும் அவர்களுக்காக ஏங்கிய ஒரே உன்னதமான ஜீவன் எம்.ஜி.ஆர் மட்டுமே.
இத்தனை கொடுமைகளுக்கும் மத்தியில் நாம் இருக்கும்வேளைகளில், இந்திய அமைதிகாக்கும் படைகள், ட்ராக்குலாக்களாக எங்கள் இரத்தங்களை வெறிகொண்டு குடித்துவந்த நிலையில், எம்.ஜி.ஆரின் இழப்பு எங்களின் இழப்பாகவே எங்களுக்கும்தோன்றியது.
ஐயோ… எங்களைக்காப்பாற்ற இனி எவரும் எம் இனத்தில் இல்லை என்ற அன்றைய நாட்களின் அந்த மக்களின் அவலக்குரல் இறுதிமட்டும் தீர்க்கதரிசனமாகவே போய்விட்டது.
எம்.ஜி.ஆரின் எங்கள் மீதான் கரிசனை வெறும் வார்த்தைகளாக இருக்கவில்லை, அரசியல் இலாபங்களாக இருக்கவில்லை, அதற்கான தேவைகளும் உச்சத்தில் இருந்த அவருக்கு இருக்கவில்லை. காசுக்காகவோ, தன் காரியங்களுக்காகவோ அது இருக்கவில்லை. உண்மையான உணர்வு, பாசம், நேசிப்புக்களுக்காகவே அது இருந்தது. அந்த நேசம், பாசம் அவர் மறையும் வரை அவரிடம் உச்சமாக இருந்தது.
நிச்சயம் எம் மீதான ஒரு பெரும் ஏக்கத்துடனனேயே அந்த ஜீவன் பிரிந்திருக்கும் என்பது ஈழத்தமிழரின் அசைக்கமுடியாத உண்மை.
சென்னை சென்ற முதலாவது நாள்.. முதல்வேலையாக மரினாபீச்சுக்கு சென்று அங்கே..இங்கே பார்க்காமல் நேராகச்சென்றேன் எம்.ஜி.ஆரின் புகழுடல் “ஈழத்தமிழன் விடிவு பற்றிய நல்லசெய்தி தன் கல்லறையின் காதுகளில் விழாதா” என்ற ஏக்கத்துடன் இருக்கும் இடத்திற்கு.
தூரத்தில் “எம்.சி.ஆரின் வாச்சு சத்தம் கேக்குதுப்பா.. என்று சிலர் கல்லறையில் காதுகளை வைத்து கேட்டுக்கொண்டிருந்தனர். சிலர் வேடிக்கையாக திறப்புக்களால் தட்டிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் அகலும்வரை காத்திருந்துவிட்டு அந்த இடத்திற்கு செல்கின்றேன். கண்கள் கலங்குகின்றன, இருதயத்தில் ஒரு பரிதவிப்பு, இதோ கோடி இயதங்களில் வாழும் ஒருவரின், எங்கள் நெஞ்சங்களில் என்றும் வாழும் ஒரு உன்னதமானவரின் உறங்கும் இடத்திற்கு செல்கின்றேன் என்ற பதபதப்பு. அமைதியாக கைகளை கட்டி நானும் என்னுடன் வந்த நண்பர்களும் நிற்கின்றோம். எனக்கு கண் குழமாகிவிட்டது. நண்பர்களை பார்த்தேன் அதில் ஒருவர் அழுதே விட்டார். “காற்று நம்மை அடிமை என்று சொல்லவில்லையே” என்று தொடர்ந்து அந்த பாடல் வரிகள் மனதிற்குள் கேட்டுக்கொண்டிருந்தன.
பக்கத்தில் கடமையில் இருந்த காவல்அதிகாரி தம்பி நீங்கள் சிலோனுங்களா? என்று கேட்டார். ஓம்.. என்றோம். ஏதோ சொல்லவந்தவர், கல்லறையினையும் எங்களையும் பார்த்து தொண்டைவரை வந்த வசனங்களை கஸ்டப்பட்டு விழுங்கிவிட்டு, எங்களை தட்டிக்கொடுத்துவிட்டு அப்பால் சென்றார்.
தமிழ்நாட்டில் எம் இனத்தின் எம்மீதான் அன்றைய நிலையாக அவரது செய்கை சிம்போலிக்காக இருந்தது நமக்கு.
இதோ இப்போது திக்குத்தெரியாத காட்டில் என்ன செய்வதென்று தெரியாது தவிப்புடன் இப்போது எம்மினம் அடிபட்டு நிற்கின்றது. அப்போது திக்கற்றுநின்ற நமக்கு இதுதான் கிழக்கு என்று தெளிவாகக்காட்டிய அந்த எம்.ஜி.ஆரின் பாசக்கரங்கள். இப்போது மீண்டும் திக்கற்ற சமுதாயமாக இருக்கும் நமக்கு ஒரு ஆன்மபலமாக நின்று வழிகாட்டும் என்ற நம்பிக்கையுடன்….இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.