Originally Posted by
esvee
செம்மாதுளையோ பனியோ மழையோ உன் சிரித்த முகமென்ன..மக்கள் திலகம் தான் "மாஸ்'
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...' என்ற பாடலில் நடித்து, இன்று பல கோடி ரசிகர்களின் மூச்சில் கலந்திருக்கும் அந்த மூன்றெழுத்து தான் எம்.ஜி.ஆர்., தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் , "புரட்சித் தலைவராய், மக்கள் திலகமாய், மன்னாதி மன்னனாய்,' வலம் வந்த எம்.ஜி.ஆர்.,ன் பிறந்த நாள் இன்று. "மறைந்தாலும், இவர் யார் என்று ஊர் சொல்ல வேண்டும்' என்ற பாடல் வரிகள், எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருந்தும்.
"கருப்பு, வெள்ளை' காலத்திலும், தன்னை பற்றி "கலர்' கனவு காண
வைத்தவர். நவீனம் குடியேறிய பிறகும், ரசிகர் மனதில் குடியிருந்த கோயிலாய் ஜொலிப்பவர். "இருந்த இடம் தேடி வெற்றியும், தமிழகமே இவரைச் சுற்றியும்,'
வலம் வந்த வரலாற்றை மறக்கமுடியுமா? "தமிழகத்தில் இவர் தடம் பதியாத பகுதியும் இல்லை; அரசியல் பிரவேசத்தில் தோற்ற தொகுதியும் இல்லை,'. திரையுலகிலும் எம்.ஜி.ஆர்., தான் மாஸ். இன்றும் "ஹவுஸ் புல்' ஆகும், அவரது படங்களே அதற்கு சாட்சி.
இன்றைய நிலவரப்படி தலைவர்களுக்கு "கட் அவுட், போஸ்டர், பேனர்,' வைப்பதன் பின்னணியில், கட்சியில் ஏதாவது பொறுப்பு கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஒருவர் மறைந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், எதிர்பார்ப்பு இல்லாமல் அவர் பிறந்த நாளை ஏழைகள், ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்றால், அவர் தானே மக்கள் தலைவர்.
இதோ மதுரை ரசிகர்கள் மனந்திறக்கின்றனர்...
வீரபாண்டி(செவித்திறன் குறைவுடைய கூலித்தொழிலாளி): பேசும், கேட்கும் திறன் இல்லாத எனக்கு, எம்.ஜி.ஆர்., திரையில் தோன்றினாலே குதூகலம் தான். நான்
பேச நினைத்ததெல்லாம் அவர் பேசினார். ஆனால் அவர் பேசிய வார்த்தையை தான் என்னால் கேட்க முடியவில்லை. இரு முறை நேரில் பார்த்திருக்கேன். ஒரு முறை காரில் சென்ற போது கைகொடுத்தார். எனக்கான உலகத்தில் ஒரே கடவுள் எம்.ஜி.ஆர்., தான்(சைகையில் பேசினாலும், அவர் கைகள் வணங்கிய போது எதிரில் இருந்தது எம்.ஜி.ஆர்., படம்).
போத்தி கோபாலகிருஷ்ணன்(ஸ்ரீமீனாட்சி பாரடைஸ் தியேட்டர் உரிமையாளர்): அரசியல் பிரச்னையால் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வெளியிட தடை விதித்தனர். எதிர்ப்பை மீறி வெளியிட முடிவு செய்தோம். எம்.ஜி.ஆர்., எங்கள் வீட்டிற்கு வந்து படப்பெட்டியை கொடுத்தார். தியேட்டருக்கு மின் சப்ளை துண்டித்தனர். முதன் முதலாக
ஜெனரேட்டர் வாங்கி படத்தை திரையிட்டோம். எங்கள் தியேட்டரில், 217 நாட்கள் ஓடியது. வேறெங்கும் வெளியிடாததால், வெளியூரிலிருந்து உணவு பொட்டலங்களுடன் வந்து, பல நாட்கள் தங்கி படம் பார்த்து சென்றனர். இன்றும் மாதத்திற்கு மூன்று எம்.ஜி.ஆர்., படம் திரையிடுகிறோம். புதிய படங்களுக்கான அதே "கலெக்ஷன்' கிடைக்கிறது.
விஜயகுமார்(கலைமதி கம்பைன்ஸ் ஆப்பரேட்டர்): கடந்த இரண்டு ஆண்டில் மதுரையில் மட்டும் 40 தியேட்டர்களில் "நாடோடி மன்னன்' படம் வெளியானது. நவீன தியேட்டர்களில் டி.டி.எஸ்., ஒலியுடன், கியூப் மற்றும் யூ.எப்.ஓ., தொழில்நுட்பத்திலும் வெளியிட்டோம். புதிய படங்களுக்கு குறைவில்லாத வரவேற்பு, இன்றும் எம்.ஜி.ஆர்., படத்திற்கு உள்ளது.
ஞானசேகரன் (ரிக்ஷா தொழிலாளி): எம்.ஜி.ஆர்., படம் பார்த்தால் உணவே தேவையில்லை. ஒரு நாளில் நான்கு "÷ஷா' பார்த்த படங்கள் நிறைய உள்ளன. அவரை நேரில் பார்க்க சென்னை கிளம்பினேன். அவர் வீட்டில் இல்லை. இரண்டு நாட்கள் ரோட்டில் தங்கி, மூன்றாவது நாளாக பார்த்தேன். திரையில் வருவதை விட அழகாக இருந்தார். "வாத்தியாரே...' என, கத்திய போது, நிமிர்ந்து பார்த்தவர், சிரித்த படி என்னை நோக்கி கையசைத்து சென்றார்.
ரிக்ஷாக்காரன் படத்தில் அவர் அணிந்த உடைகளை தான், இன்றும் அணிகிறேன்.
மாணிக்கம் (ரிக்ஷா தொழிலாளி): விபரம் தெரிந்த நாளில் இருந்து ரிக்ஷா ஓட்டுகிறேன். கடுமையாக கால் வலிக்கும் போது, ரிக்ஷாவில் ஒட்டியுள்ள எம்.ஜி.ஆர்., போட்டோக்களை பார்த்தால், தானாக தெம்பு வரும். இன்று, பண்டிகையில் தான் படங்கள் வெளியாகின்றன. அன்று, எம்.ஜி.ஆர்., படம் வெளியானாலே பண்டிகை தான். அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரை ரசித்தவர்கள் ஏராளம். இப்படி மனம் விட்டு பேசினர். இவர்களை போல இன்னும் எத்தனையோ ரசிகர்களிடம் எம்.ஜி.ஆர்., வாழ்கிறார். "காலத்தை வென்றவன் நீ; காவியம் ஆனவன் நீ'.
Courtesy - dinamalar