தங்கப் பதக்கம் (நினைவலைகள்) 01.06.1974
http://i1087.photobucket.com/albums/...t%20-2/R-3.jpg
இன்னொரு வைடூரியம்
காவல் துறையின் கண்ணியத்தை நம் துரை கட்டிக் காத்த படம்.
ஒரு காக்கி உடுப்பு, ஒரு வீடு, முக்கியமாக நான்கைந்து கேரக்டர்கள். அவ்வளவுதான். அதுவரை வசூலில் பிரளயம் செய்த அத்தனை படங்களும் அடிபணிந்தன.
உடுப்பின் மிடுக்கு ஒன்றிலேயே உலகத்தை வென்றவர் எஸ்.பி.
கல்கி எழுதியது போல் மீசை நடித்தது....மீசையின் ஒவ்வொரு முடியும் நடித்தது... புருவம் நடித்தது... லத்தி நடித்தது.
அழகான சின்ன திரைக்கதை... அளவே இட முடியாத, எவரும் தொட முடியாத நடிப்பு முத்திரைகள்.
பூவோடு சேர்ந்த நார்களும் அருமையாக மணம் வீசின.
மகனைத் தாலாட்டும் போது நெஞ்சை என்னென்னவோ செய்யும் அந்தப் பின்னணி இசை...
ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும் கண்ணாடி முன் நின்று தன்னை சௌத்ரியாய் கற்பனை பண்ணிக் கொள்ளவில்லை என்று சொல்லட்டும் பார்க்கலாம்...
மாயாண்டியை அடக்க முதல் காட்சியில் விரைந்து வரும் போலீஸ் ஜீப்பிலிருந்து (MSY 9545) இறங்கி சிங்கம் கால்களை விரைப்புடன் வைத்தவாறே விரைத்த போலீஸ் trouser உடன் நிற்கும் கம்பீர அறிமுகம்.
ஸ்டேஷன் முடிந்து வீடு வந்ததும் மனைவியிடம் சீண்டல்... (மனைவி: இவரு பெரிய மன்மதன். இவர்: எல்லார்கிட்டேயும் கேளு)...உறங்கும் மழலையிடம் உன்னத பாசம்
தீபாவளிக்கு வரும் விருந்தாளி நண்பனை பொய்யான உபசரணையோடு வரவேற்று பின் கால்களால் உதைத்து சிநேகித உரிமை கொண்டாடும் சிகர நட்பு.
சிறுவயது மகன் தவறுகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடித்தளம் அமைக்கும் போது ஏற்படும் மனக்குமுறல். அவன் குட்டிச்சுவராக ஆகி விடக் கூடாதே என்ற கரெக்டான கவலை.
அங்கவஸ்திரத்தைக் கொடுக்க சொல்லி அதனாலேயே மனோகர் கைகளைக் கட்டி இழுத்துச் செல்லும் அனுபவம் தோய்ந்த மூத்த அதிகாரியின் அலட்சிய தோரணை... (ரொம்ப கஷ்டம்...இந்தியாவிலேயே பேர் போன குடும்பம் என் குடும்பம்தான்)
மகன் பெரியவனாகி வீட்டுக்கு வேண்டாவெறுப்பாக திரும்பியவுடன் பாசத்தை பரிவுடன் காட்டும் பாங்கு. மகனின் அலட்சிய பேச்சுக்கு மனைவி பதில் அளிக்கையில் கைகளை பின்கட்டியவாறே அமைதியாக நின்று ஊமையாய் உணர்வுகளை உள்ளடக்கும் உன்னதம்.
மகன் தன்னிச்சையாக ஒருவளைக் காதலித்து வீட்டுக்கு வந்து இவள்தான் மனைவி என்று அறிமுகப்படுத்தியவுடன் போடும் உண்மையான ஆனால் செல்லமான கண்டிப்புகள்.
மகனுக்கு அரேஞ்ச் செய்த முதல் இரவு கொண்டாட்ட அலங்காரங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளை முன்னிட்டு தனக்கு சாதகமாகிக் கொண்டு மனைவியிடம் களி விளையாட்டுக்கள் ஆரம்பிப்பது. எப்போதோ மனைவி சொன்னதை ஞாபகம் வைத்து அதை இப்போது சொல்லச் சொல்லி கேட்கும் கெ(கொ)ஞ்சல். (ஆமாம்! அந்த deputy சம்சாரம் ஏதோ சொன்னாங்கன்னு சொன்னியே என்னது? )... பேசிக் கொண்டே படுக்கையில் கிடக்கும் பூக்களில் ஒரு பூவை எடுத்து படுத்திருக்கும் மனைவி மீது செல்ல வீசல் வேறு.
தன் சம்பந்தி மாயாண்டி தன மகள் எஸ்.பி. யின் மருமகளாகி விட்டாள் என்று பதறி வீட்டுக்கு ஓடிவரும்போது சாப்பிட்டுவிட்டு துண்டைக் கைகளால் துடைத்தபடியே நாக்கால் உதடுகளின் ஓரங்களின் உள்ளே துழாவிக்கொண்டே (உணவுத்துகள்கள் ஏதாவது பல்லிடுக்குகளில் மாட்டிக் கொண்டிருக்கிறதா என்று தேடுகிறாரா?) தூள்பரத்தும் அற்புதம்.(அதுவரை திரையுலகம் கண்டிராத ஏன் இதுவரையும் கண்டிராத, இனிமேலும் காணமுடியாத நொடிப்பொழுது உலக அதிசயம்)
மகன் வேறு வீடு பார்த்து தனிக் குடித்தனம் போவதாக சொல்லும் போது பெல்ட்டைக் கழற்றி விட்டபடி ,காக்கி ஷர்ட்டை வெளியே எடுத்து விட்டபடி படிக்கட்டுகளில் நடந்த படியே பேசிச் செல்லும் இயல்பு. (மத்தவங்களை என் பக்கம் திருப்பித்தாம்ப்பா பழக்கம்...நான் மத்தவங்க பக்கம் திரும்பி பழக்கமில்லே)
ஸ்ரீ ஷண்முகா சிட்பண்டில் 2 லட்ச ரூபாய் திருட்டுப் போய்விட அங்கு வேலை செய்யும் தன் மகனிடமே படு கண்டிப்பாக விசாரிக்கும் அந்த விசாரணைக் காட்சி.
ஒரே அதகளம்.
(இப்ப இங்க நடந்த திருட்டுக் கூட யாரோ ஒருத்தருடைய சொந்த உழைப்புத்தான்னு நான் நெனைக்கிறேன்... நீங்க என்ன நினைக்கீறீங்க?
அதைப் பத்தி நான் எப்படி சார் அபிப்பிராயம் சொல்ல முடியும்?)
இந்த வசனக் காட்சி வரைக்கும் ஓ.கே. இதற்கு அடுத்து வரும் அந்த
"ஏன்யா?"
என்று உச்சரிக்கும் தொனி.
பலமுறை என் தூக்கத்தைக் கெடுத்த அந்த உச்சரிப்பு.
காரணம்...
தெரியவில்லை.
அந்த "ஏன்யா?" வில் பொதிந்து கிடக்கும் அர்த்தங்கள்.... அந்த காந்தக் கண்கள்... அந்த சிமிட்டல்...அந்த வாய் சற்றே திறந்து.... ஆச்சரியங்கள் காட்டும் முகரேகைகள்.... அதிர்வுகளைக் காட்டும் அதிசயங்கள்...
திலகமே!
ஏன்யா? ஏன்யா பொறந்தே?... ஏன் இப்படி எங்க உயிரை வாங்குற? உன் ஒவ்வொரு அசைவையும் வர்ணிக்க வார்த்தை ஏதுய்யா? திருப்தியே வரமாட்டேங்குதே. நீ பாட்டுக்கு சர்வ சாதாரணமா எல்லாத்தையும் பண்ணிட்டுப் போயிட்டே...எடுத்துச் சொல்ல திராணி இல்லமா போராடுறோம்யா. கண்ணுல கண்ணீரை எப்பவும் எங்களுக்கு கசிய விட்டுட்டு ஏன்யா பட்ட மரமா எங்கள தவிக்க விட்டுட்டுப் போனே? நாங்க உனக்கு செய்யிறத எல்லாம் இருந்து எங்க கூடவே இருந்து பார்த்திருக்கலாமில்லே!
இதுக்கு மேல முடியலைய்யா!