அன்புள்ள நண்பர்களே,
உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Printable View
அன்புள்ள நண்பர்களே,
உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,
தாங்கள் பதிவிட்டு வரும் ஒவ்வொரு ஆவணப் பதிவும் மிகச் சிறப்பாக அமைகின்றன. தாங்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தை அயர வைக்கிறது. ஒவ்வொரு பதிவினைப் பார்க்கும் போதும் / படிக்கும் போதும், நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன.
தங்களின் இந்தத் தொண்டு இந்தப் புத்தாண்டில் மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அன்புள்ள திரு. ராகவேந்தர், திரு. வாசுதேவன் மற்றும் திரு. கார்த்திக் அவர்களே,
திரு. பம்மலார் அவர்களது பதிவைப் போல, தங்களுடைய பதிவுகளும் தொடர்ந்து இந்தத் திரிக்கு வளம் சேர்க்கின்றது. ஒவ்வொரு நாளும், இந்தத் திரிக்குள் நுழையும் போது, திரு. பம்மலார் மட்டுமல்லாது, உங்கள் மூவருடைய பதிவுகளும் தொடர்ந்து இடம் பெற்று இந்தத் திரிக்கு கூடுதல் வளம் சேர்க்கிறது.
உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து எதிர்நோக்குகிறோம்.
அன்புள்ள திரு. முரளி அவர்களே,
இப்போதெல்லாம் தங்களது பதிவு மிகவும் அரிதாகி விட்டாலும், ஒவ்வொரு முறை உங்களது பதிவு இடம் பெறும் போதும், அந்தப் பதிவு இந்தத் திரிக்கு எப்போதும் கூடுதல் சுவையையும் சுவாரஸ்யத்தையும் அளித்துக் கொண்டே இருக்கிறது. உங்கள் எழுத்துக்கு ரசிகனான நானும் மற்றவர்களைப் போல உங்களிடமிருந்து தொடர் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
சாரதா மேடம் அவர்களும் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு சில பதிவுகளைத் தந்து உற்சாகப் படுத்தியதற்கு நன்றி.
மேற்கூறிய அன்பர்கள் அல்லாது, இந்தத் திரிக்கு மேலும் மேலும் சுவையை நல்கிடும் அனைத்து நண்பர்களே,
திரு. ராமஜெயம் கூறியது போல், கடந்த ஆண்டு (2011) நடிகர் திலகத்தின் திரிக்கு மிகவும் சிறப்பான ஆண்டு. பல புதிய உறுப்பினர்கள் இந்தத் திரியில் நுழைந்தது மட்டுமல்லாமல், இந்த ஆண்டு தான் பல பக்கங்களையும் பூர்த்தி செய்த ஆண்டு.
இந்தத் திரி மேலும் மேலும் வளம் பெறப்போவது உறுதி.
நன்றியுடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள பம்மலார் சார்,
ஆங்கிலப்புத்தாண்டு அன்பளிப்பாக தாங்கள் அளித்துள்ள 'அன்பளிப்பு' ஆவணப்பொக்கிஷங்கள் அருமையாக உள்ளன. நேற்று நீங்கள் அளித்திருந்த, இயக்குனர் ஸ்ரீதரின் கட்டுரைப்பக்கங்களும் கன ஜோர். ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஆவணங்களை பல்வேறு பத்திரிகைகளில் இருந்து நீங்கள் சேகரித்து, தொகுத்து, அழகுற அளித்து வரும் பாங்கு பாராட்டுக்குரியது.
நான் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, இங்கு பதிவிடுவோர் மட்டுமல்லாது வெளியிலிருந்து பல்வேறு ரசிகப்பெருமக்களும் தங்களின் சளைக்காத சேவையைப்பாராட்டி நன்றி தெரிவிக்கின்றனர். சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எழுதும் மடல்களில் அவர்கள் தெரிவிக்கும் கருத்து, 'எங்களுடைய இத்தனை வயதிலும் இவற்றையெல்லாம் நாங்கள் பார்த்ததில்லை. எப்பவோ வெளியான சாதனைகளையெல்லாம் இவர் தேடித்த்ருகிறார். இந்தப்பிள்ளை நல்லாயிருக்கட்டும்' என்று எழுதுகின்றனர். படிக்கும்போது எனக்குப்பெருமையாக இருக்கிறது.
தங்கள் தொண்டு ரசிகர்களின் இதயங்களில் முத்திரையைப் பதித்து விட்டது.
அன்புள்ள பார்த்தசாரதி சார், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தங்களின் பாராட்டுக்கு நன்றி. முரளிசாரை அடிக்கடி வரச்சொல்லும் நீங்களும் அடிக்கடி காணாமல் போய் விடுகின்றீர்கள். தங்களின் மகத்தான பாடல் ஆய்வுகள் அனைத்தும் என்ன சாமானியமானவையா?. 'சக்கை போடு' போட்ட பிறகு தங்களின் ஆய்வுப்பதிவைக்காண முடியவில்லை. பணிச்சுமையாக இருக்கலாம். பரவாயில்லை. போதிய நேரம் எடுத்துக்கொண்டு அடுத்த அதிரடியுடன் வந்து கலக்குங்கள்.
நீங்களும் திரு ராமஜெயம் அவர்களும் சொன்னதுபோல, 2011-ம் ஆண்டு விசேஷமான ஆண்டு மட்டுமல்ல. அந்த ஆண்டின் ஜூலை மாதத்திலிருந்து, நடிகர்திலகத்தின் சாதனைச்செப்பேடுகளான ஆவணமழை கொட்டத்துவங்கிய ஆண்டு.
2012 இதை விட சூப்பராக இருக்கும் என்று நம்புவோம்.
நடிகர்திலகம் - ஸ்ரீதர் இணைந்து படைத்த கடைசிக் காவியம்...
'மோகனப்புன்னகை' நினைவலைகள்
32-வது உதய தினம் (14.01.1981 - 14.01.2012)
இயக்குனர் ஸ்ரீதருடன் நீண்டகாலமாக ஸ்டில் போட்டோகிராபராகப் பணியாற்றிய 'ஸ்டில் சாரதி' தனது ‘சாரதி மோஷன் பிக்சர்ஸ்’ சார்பில் தயாரித்த படம் 'மோகனப்புன்னகை'. அவருக்கு ஆசை நடிகர்திலகத்தை வைத்து படம்பண்ண வேண்டுமென்று. அதே சமயம் தனக்கு நெடுங்காலமாக வாழ்வளித்த ஸ்ரீதர் கையால் இயக்கப்பட வேண்டும் என்பதும் அவரது எண்ணம். ஆகவே வைரநெஞ்சத்துக்குப்பிறகு நடிகர்திலகத்தை விட்டு திசைமாறிப்போயிருந்த ஸ்ரீதரையும் நடிகர்திலகத்தையும் இப்படத்தில் மீண்டும் ஒன்று சேர்த்தார். இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீதர் மாற்றுமுகாமில் இரண்டு படங்களையும், அதன்பின் கமல் ரஜினியை வைத்து இளமை ஊஞ்சலாடுகிறது படத்தையும், பின்னர் அழகே உன்னை ஆராதிக்கிறேன் போன்ற படங்களையும் இயக்கியிருந்தார். பெருந்தன்மையோடு எதையும் எடுத்துக்கொள்ளும் நடிகர்திலகமும் மீண்டும் ஸ்ரீதருடன் இணைந்து பணியாற்ற சம்மதித்தார். மோகனப்புன்னகை உருவானது.
நடிகர்திலகத்தின் படங்களிலேயே முதன்முறையாக நான்கு கதாநாயகிகள் (பாவை விளக்கில் எத்தனை?). அந்த நால்வர், வைரநெஞ்சத்தில் ஏற்கெனவே நடிகர்திலகத்துடன் இணைந்திருந்த பத்மப்ரியா, பிற்காலத்தில் கவர்ச்சி ஆட்டத்தில் கலக்கிய அனுராதா, மலையாளப்படங்களில் கொடிகட்டிப்பறந்த ஜெயபாரதி, மற்றும் இலங்கை நடிகை கீதா ஆகியோர். நெடுநாட்களுக்குப்பின் ஸ்ரீதரின் இயக்கம், மெல்லிசை மன்னரின் இசை, பி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவு எல்லாம் சேர்ந்து ரசிகர்களை அதிகம் எதிர்பார்க்க வைத்து விட்டது. மெல்லிசை மன்னரும், சுந்தரமும் ஏமாற்றவில்லை. கதைதான் சற்று பலவீனமாக அமைந்துவிட்டது.
சாந்தியில் விஸ்வரூபம் ஓடிக்கொண்டிருந்தபோது இப்படம் ‘சித்ரா’வில் வெளியானது. ஆகவே சாந்தியில் தினமும் மாலை நாங்கள் கூடிப்பேசிக் கொண்டிருந்தபோது, ஏற்கெனவே அப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்திருந்த நண்பர் சிவா படத்தை ஏகமாக புகழ்ந்து தள்ளினார். சித்ராவில் முதல்காட்சி பார்த்து விடலாம் என்று எண்ணியிருந்தபோது, ‘Oasis Entertainers’ என்ற அமைப்பினர் படம் ரிலீஸ் அன்று காலை மோகனப்புன்னகை சிறப்புக்காட்சியாக, பைலட் தியேட்டரில் ஒருகாட்சி மட்டும் திரையிட இருக்கிறார்கள் என்ற செய்தி வர, 'அட சித்ராவில் பார்ப்பதைவிட பைலட்டில் பார்க்கலாமே' என்ற ஆர்வம் எல்லோருக்கும் உண்டானது. அதற்கேற்றாற்போல மறுநாள் அந்த Oasis Entertainers அமைப்பினரே நேரடியாக வந்து சாந்தி வளாகத்தில் நின்ற ரசிகர்களிடம் டிக்கட் விற்கத்தொடங்கினர் (ஸ்பெஷல் காட்சியாதலால் கூடுதல் விலை). எல்லோருக்கும் முதல்நாள் பைல்ட்டில் பார்க்க இருக்கிறோம் என்ற சந்தோஷம். (ஏனோ சிவாஜி மன்றத்தில் இப்படத்தின் ஸ்பெஷல் காட்சி போடவில்லை).
ரிலீஸுக்கு முதல்நாள் இரவு 12 மணிவரை சித்ராவில் அலங்காரம் நடந்துகொண்டிருப்பதைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தோம். சேப்பாக்கம் மன்றத்தினர் பந்தல் அமைத்திருந்தனர். எங்கள் மன்றத்தின் சார்பில் நடிகர்திலகத்தின் கட்-அவுட்டுக்கு ராட்சத மாலை போட்டிருந்தோம். மற்ற மன்றத்தினர் தங்கள் மன்றங்களின் பேனர்கள் மற்றும் கொடிகளால் அலங்கரித்திருந்தனர். ‘சைதை சிவந்த மண் சிவாஜி’ மன்றத்தினர் வழக்கம்போல ராட்சத பேனர் அமைத்திருந்தனர். சித்ரா தியேட்டரின் கண்ணடிப்பெட்டியினுள் நமது ராகவேந்தர் சார் அழகுற அமைத்திருந்த வண்ண மயமான பதாகை அலங்கரித்திருந்தது.(அதைப்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோதுதான் 'அமரகாவியம்' படத்துக்கு தாஜ்மகால் வடிவில் ஒரு சிறப்பு பதாகை உருவாக்க இருப்பதாகச்சொன்னார்).
ரிலீஸன்று காலை 8 மணிக்கெல்லாம் பைலட் தியேட்டர் முன் கூடி விட்டோம். அப்போது அங்கே திரையிடப்பட்டிருந்த வேறு படத்தின் பானர்கள் கட்டப்பட்டிருந்தன. படம் ரிலீஸாகும் தியேட்டர் ஒன்று, நாங்கள் பார்க்க வந்திருக்கும் தியேட்டர் ஒன்று. அந்த வழியே பஸ்ஸில் போனவர்களெல்லாம், அங்கே திரையிடப்பட்டிருந்த படத்துக்குத்தான் இவ்வளவு கூட்டமும் என்று எட்டிப்பார்த்துக்கொண்டு போயினர். 8.40 அளவில் எல்லோரையும் உள்ளே அனுமதித்து, சரியாக 9 மணிக்கு படத்தைத் துவக்கினார்கள். படம் துவக்கத்திலிருந்தே நன்றாகவே இருந்தது.
நடிகர்திலகத்துக்கு நான்கு ஜோடிகள் இருந்தபோதிலும் அதில் மூன்று ஜோடி ஒருதலைக்காதல். இலங்கை நடிகை கீதாவுக்கும் அவருக்கும் மட்டும்தான் ஒரிஜினல் காதல். ஏற்கெனவே பத்மப்ரியாவுக்கு அவர் மேல் ஒருதலைக்காதல். அது நிறைவேறாமல் நடிகர்திலகம் - கீதா காதல் மணமேடை வரை வந்ததில் அவருக்கு வருத்தம். ஆனால் மணமேடையில் கீதா கொல்லப்பட, அந்த ஒரிஜினல் காதல் முறிந்து போகிறது. நாளடைவில் தன் அலுவலகத்திலேயே பணிபுரியும் ஜெயபாரதியுடன் நடிகர்திலகத்துக்கு காதல் ஏற்பட, அதையறியாத ஜெயபாரதி, நடிகர்திலகம் தன் காதலைச்சொல்ல வரும் நேரம் பார்த்து, தான் மணமுடிக்கப்போகும் நபரை அவருக்கே அறிமுகப்படுத்த அந்தக்காதலும் அவுட். இதனிடையே தான் வளர்த்து வந்த அனுராதாவும் தன்மீது காதல் கொள்வது கண்டு, அதிர்ச்சியடையும் நடிகர்திலகம், அதை முறிக்க அவரே அனுவுக்கு முன்னின்று வேறு ஒருவருடன் மணமுடிக்க, புதிய கணவனுடன் கப்பலில் பயணிக்கும் அனுராதா நடிகர்திலகத்தை மறக்க முடியாமல் கப்பலில் இருந்து குதித்து உயிரை விட, கடற்கரையில் சோகமே உருவாக அமர்ந்திருக்கும் நடிகதிலகத்தின் காலடியிலேயே அனுராதாவின் பிணம் ஒதுங்க, அதைத்தூக்கியவாறு அவர் கடலுக்குள் செல்வதோடு படம் முடிகிறது.
கொஞ்சம் சிக்கல் நிறைந்த கதைதான். இடையில் கொஞ்சம் சொதப்பியும் இருந்தார்கள். காதலி கீதா இறந்த சோகத்தில் முதலில் மதுப்பித்தராகவும், பின்னர் பெண்பித்தராகவும் மாறுவதாகக் காட்டியிருந்தது ரசிகர்களுக்கும், தாய்மார்களுக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. கீதா இறந்த பின் ஜெயபாரதியுடனான அவரது காதல் நிறைவேறுவதாக முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் அப்போதே பேசிக்கொண்டார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக படம் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. படம் நெடுகிலும் ரசிகர்கள் ஆரவாரமாக கைதட்டி ரசித்தார்கள். நாகேஷின் காமெடியும் நன்றாகவே அமைந்து ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. வம்பு பேச ஆளில்லாமல் கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துப்பேசிக்கொள்ளும் இடம் வெகு ஜோர்.
குறிப்பாக பாடல் காட்சிகள் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. படத்தின் முதல் பாடலாக, கீதா அருவியில் குளிக்கும் காட்சியுடன் படமாக்கப்பட்ட 'தென்னிலங்கை மங்கை' பாடலும், கீதாவும் நடிகர்திலகமும் இணைந்து பாடும் டூயட் 'தலைவி.. தலைவி... என்னை நீராட்டும் ஆனந்த அருவி' பாடலும் கொண்டாட்டமாக ரசிக்கப்பட்டது என்றால், ஜெயபாரதி தன் வருங்காலக்கணவனை அறிமுகப்படுத்தியதும், அவரை வாழ்த்தி நடிகர்திலகம் பாடும் 'கல்யாணமாம் கச்சேரியாம்' பாடல் ரசிகர்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. கண்களில் சோகத்தைத்தேக்கி வைத்துக்கொண்டே சிரித்துக்கொண்டு பாடும் காடசிகளில் ரசிகர்களின் கைதட்டல் அரங்கத்தை அள்ளியது. அனுராதாவிடம் பாடும் பாடல் 'குடிக்க விடு... என்னைத் துடிக்க விடு' என்ற பாடலும் ரசிகர்களால் ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டது. வெளிச்சத்துக்கு வராமல் போன நடிகர்திலகத்தின் பல தத்துவப்ப்பாடல்களில் இதுவும் ஒன்று.
பைலட் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, படம் நன்றாக இருக்கிறது நிச்சயம் வெற்றிபெறும் என்று எல்லோரும் பேசிக்கொண்டு சென்றனர். அன்று மாலைக்காட்சியின்போது ரெஸ்பான்ஸ் தெரிந்துகொள்வதற்காக சித்ராவுக்குப்போனோம். உள்ளே போய் படம் பார்க்கவில்லை. முதல்நாளாகையால் கடும் கூட்டம். மேட்னி பார்த்துவிட்டு வெளியே வந்த பொதுமக்கள், படம் நன்றாயிருப்பதாகச்சொல்லவே படம் வெற்றியென்று அப்போதே முடிவு செய்தோம். ஐந்தாம் நாள் இரண்டாம் முறையாக, 'சித்ரா'வில் மாலைக்காட்சி பார்த்தோம். அப்போதும் எல்லோரும் நன்றாகவே ரசித்தனர், கைதட்டினர், பாராட்டினர். குறிப்பாக 'கல்யாணமாம்' பாடலுக்கும், 'குடிக்க விடு' பாடலுக்கும் நல்ல வரவேற்பு.
இவ்வளவு ஆரவாரமாக வரவேற்கப்பட்ட 'மோகனப்புன்னகை' ஏன் பெரியதொரு வெற்றியைப் பெறவில்லையென்பது இன்றுவரை புரியாத காரணமாகவே இருக்கிறது.
பொங்கல் நாளுக்கு இன்னும் பத்துநாட்களுக்கு மேல் இருக்கையில் இப்போது ஏன் 'மோகனப்புன்னகை' பதிவை இட்டாய் என்று நினைக்கலாம். பொங்கலுக்கு வேறு சில படங்களும் வர இருப்பதால் மோகனப்புன்னகை முந்திக்கொண்டு விட்டது.
அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,
தங்களின் பாராட்டுக்கு நன்றி. நீங்கள் சொன்னது போல் ஒரே நேரத்தில் பல வேலைகள் வந்து விட்டதால், தொடர்ந்து எழுத முடியவில்லை.
தங்களின் "மோகனப்புன்னகை" நினைவலைகள் அருமையாக, சரளமாக இருந்தது.
இந்தப் படம் துவங்கப்பட்ட அன்று, நடிகர் திலகமும் ஸ்ரீதரும் கை கோர்த்துக்கொண்டு நிற்கும் போட்டோவுடன் தினத்தந்தி நாளிதழின் கடைசிப் பக்கத்தில் வெளியிடப்பட்ட விளம்பரம் இன்னமும் கண்ணில் நிழலாடுகிறது. எப்பேர்பட்ட எதிர்பார்ப்பைத் தூண்டி விட்ட படம். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு முக்கிய காரணங்கள் திரைக்கதை சொதப்பலும், பொருந்தாத, அந்தக் காலத்தில் அந்த அளவுக்கு பிரபலம் ஆகாத கதாநாயகிகளும் தான் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)
2. "கா... கா...கா"; படம்:- பராசக்தி (1952); இயக்கம்:- கிருஷ்ணன்-பஞ்சு
எனக்குத் தெரிந்து இது தான் தமிழ்த் திரைப்படங்களில் ரொம்பவும் காஷுவலாக நாயகன் பாடுவதாக (கிணற்றின் மேல் உட்கார்ந்து கொண்டு) முதல் முறையாக எடுக்கப் பட்ட பாடல் (என்ன ஒரு நம்பிக்கை நடிகர் திலகத்தின் மேல், முதல் படத்திலிருந்தே!).
மிகவும் எளிமையாக எடுக்கப் பட்ட பாடல் - இத்தனைக்கும் ஆழமான பொருள் பொதிந்த கருத்துக்கள் இடம் பெற்ற பாடல். சமூகத்தின் மேல் நாயகனுக்கு இருக்கும் கோபம் வன்மையாகவும் சற்றே கேலியாகவும் வெளிப்பட்ட பாடல். பிற்காலத்தில், எத்தனையோ விதமான நடிப்பு இந்தக் கலைஞனிடத்தில் வெளிப்படப்போகிறது என்பதற்குக் கட்டியம் கூறும் பாடல். ஆம், முதல் படத்திலேயே, முழுப் பாடலையும், படு காஷுவலாக கிணற்றின் மேல் உட்கார்ந்து கொண்டே தனது சரளமான உடல் மொழியைக் காட்டி, நடித்த பாடல்.
இந்தப் பாடலில் இரண்டு முக்கிய அம்சங்கள் - அவரது உடை மற்றும் ஒப்பனை - அதாவது, நாடோடி போல் திரிந்து கொண்டிருப்பவன் எப்படி இருப்பானோ, அப்படியே இருப்பார். இந்தப் பாடல் துவங்குவதற்கு முன், அவர் பண்டரிபாயிடமிருந்து, ஏதோ ஒரு பொட்டலத்தைப் பிடுங்கிக் (திருடி) கொண்டு ஓடி, தவறுதலாக, அறியாமல், மற்றவரிடமிருந்து தப்பித்து, அவசரமாக, அவரது வீட்டுக்கே சென்று வீட்டின் பின்புறம் வழியாகச் சென்று, ஹாயாக, ஒரு கிணற்றின் மேல் அமர்ந்து கொண்டு அங்கிருக்கும் காக்கைகளைப் பார்த்து அவைகள் கரையத் துவங்கியவுடன், அந்த உணவை அவைகளுக்கும் போட்டு விட்டு, பாடத் துவங்குவார்.
முதல் சரணம். "சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ..." அந்த முகத்தை கவனித்தால், அந்த வரிகளுக்கேற்ற முக பாவம் - இரக்க உணர்வு, "தாழ்ப்பாளைப் போடுறாங்க..." என்று பாடி, "அந்தச் சண்டாளர் ஏங்கவே, தன்னலமும் நீங்கவே", எனும் போது கோபம், பின், "தாரணி மீதிலே பாடுங்க" என்று முடித்து, "ராகம் கா... கா...கா..." எனும் போது முகத்தில் மறுபடியும் மலர்ச்சியையும் உற்சாகத்தையும் காட்டியிருப்பார்.
இரண்டாவது சரணம். "எச்சிலை தன்னிலே..." என்று சி.எஸ்.ஜெயராமன் ஒரு நீண்ட ஆலாபனை செய்யும்போது, அதற்கேற்றாற்போல், வாயசைத்த விதம். (முதல் படம்?!!!) இந்தச் சரணத்திலும், அதே லாகவம், உடல் மொழி, வாயசைப்பு.
இந்தப் படம் வருவதற்கு முன்பு வரை, அநேகமாக எல்லாத் தமிழ்ப் படங்களிலும், படத்தில் வரும் நடிகர்களே பாடி நடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள், பெரிய பாடகர்களாயிருந்ததால், அந்தப் பாடல் இடம் பெறும் சூழலையும், அந்தப் பாடலில் வரும் வரிகளின் அர்த்தத்தையும் பற்றிப் பெரிதாக நினைக்காமல், பாடும் முறை பற்றியே நினைத்துக் கொண்டு ஒரு பாடகரைப் போல் மட்டுமே நடித்துக் கொண்டிருப்பர். அந்த முறையை மாற்றி, சினிமாவில் பாடல் என்பது வேறு; அதில் நடிப்பவர்களது பொறுப்பு என்ன என்பதை முழுதும் உணர்ந்து, பின் வரும் சந்ததியினர், எப்படி, சினிமா பாடல்களை அணுக வேண்டும் என்பதற்கு, இந்தப் படத்தின் மூலம், அதாவது, முதல் படத்தின் மூலமே (அதுவும் நாடகத்திலிருந்து வந்தவர்!) அடி கோலினார்.
இந்தப் பாடலையும் உற்று நோக்கினால், நடிகர் திலகத்தின் அபார கற்பனை வளம், எதையும் வித்தியாசமாக சிந்தித்து புதுமையாக அதே சமயம் முழுமையாகச் செய்ய வேண்டும் என்ற முனைப்பு தென்படுவதைக் காணலாம். மேம்போக்காக, உயிரோட்டமில்லாமல், அவரால் முதல் படத்திலிருந்தே செய்ய முடியவில்லை.
தொடரும்,
இரா. பார்த்தசாரதி
டியர் பார்த்தசாரதி சார்,
முதல் படத்திலேயே முத்திரை பதித்த நாயகனின் முத்தான சமுதாய சிந்தனையைத் தூண்டும் பாடலை மிகச் சிறப்பாகவும் நுணுக்கமாகவும் அலசியுள்ளீர்கள்.
பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய வரிகள்.Quote:
சினிமாவில் பாடல் என்பது வேறு; அதில் நடிப்பவர்களது பொறுப்பு என்ன என்பதை முழுதும் உணர்ந்து, பின் வரும் சந்ததியினர், எப்படி, சினிமா பாடல்களை அணுக வேண்டும் என்பதற்கு, இந்தப் படத்தின் மூலம், அதாவது, முதல் படத்தின் மூலமே (அதுவும் நாடகத்திலிருந்து வந்தவர்!) அடி கோலினார்.
பாராட்டுக்கள்.
டியர் கார்த்திக்,
சித்ரா தியேட்டர் என்றைக்குமே நம் தியேட்டராகவே இருந்தது. சாந்தி தியேட்டருக்கு முன் அது தான் நம் ரசிகர்களை வளர்த்தது என்றால் மிகையில்லை. பாசமலர் உள்பட பல முக்கியமான படங்களை வெளியிட்ட தியேட்டர். அங்கே மோகன புன்னகை வெளியான அன்று பழைய நினைவுகளுடனும் படத்தின் ரிசல்ட்டுடனும் உரையாடிக்கொண்டிருந்த நாட்கள் இன்றும் எனக்கு பசுமையாக நினைவில் உள்ளன என்றால், நீங்கள் அதையும் தாண்டி அடியேன் வைத்திருந்த சின்ன பேனருக்கே போய் விட்டீர்கள். எனக்கு ஞாபகம் உள்ள வரையில் உத்தமன் படத்திலிருந்து சின்னச் சின்ன சார்ட்டுகளை வைக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு படத்திற்கும் ரிலீஸுக்கு முதல் நாள் தியேட்டரே கதி என்பது வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே ஆகி விட்டது. இதற்கெல்லாம் எதிர்ப்புகளைச் சந்திக்காமல் இல்லை. இருந்தாலும் அந்த வேகம், அந்த ஆர்வம், அந்த வெறி, நடிகர் திலகத்தின் ஆகர்ஷண சக்தி நம் அனைவரையும் கட்டிப் போட்டு விட்டது. படிப்படியாக முன்னேறினேன்.. எதில் வாழ்க்கையிலா.. இல்லை.. சார்ட்டின் டிசைனை மெருகேற்றுவதில்... அதற்காக பிளாசா தியேட்டர் வாசிலில் இருந்த முதியவர் தான் ஆபத் பாந்தவர்.. வரும் ஸ்டில்களையெல்லாம் வாங்கி விடுவோம்.. அநைத்தும் சார்ட்டில் ஏறி விடும் (இப்போது மிகவும் மனம் வருந்துகிறேன். அவற்றையெல்லாம் இன்னொரு காப்பி எடுத்திருக்கலாமே என்று ). [அடியேன் ஆரம்பித்து சில வருடங்களில் கிரிஜா அவர்களும் துவங்கி விட்டார். அவருடைய உழைப்பு மிகவும் அபாரமானது. அவருடைய உழைப்பைப் பாராட்டத் தனித்திரியே துவங்க வேண்டும்]. அப்படிப்பட்ட ஒரு சார்ட்டைத் தான் மோகனப் புன்னகைக்காக வடிவமைத்து அதைப் பற்றித் தாங்கள் கூறியிருப்பது. தங்களுக்கும் தங்கள் நினைவாற்றலுக்கும் என் உளமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.
மோகனப் புன்னகைக்கு வருவோம். நானும் பைலட்டில் தான் பார்த்தேன். அதற்கு முன்பாகவே சிறப்புக் காட்சியில் பார்த்து விட்டோம். அந்தக் காட்சியைப் பார்த்து விட்டு படம் முடிந்ததும் உடனே கிளம்ப முடியாமல் உணர்ச்சி மயமாய் அமர்ந்திருந்தோம்.
இப்போது பேசப் படும் Shuttle Acting, Method Acting, போன்றவற்றையெல்லாம் தன் முதல் படத்திலேயே ஊதித்தள்ளி விட்ட நடிகர் திலகம், மீண்டும் இப்படத்தில் அதற்கான பொருளை உணர்த்தினார். குறிப்பாக தலைவன் தலைவி பாடல் simply class.
சற்றே வித்தியாசமான கதையமைப்பு, புதிய ஜோடி, சிறந்த இசை, நல்ல ஒளிப்பதிவு என பல்வேறு சிறப்பம்சங்கள் படத்தில் இருந்தன.
இவற்றையெல்லாம் மீறி படம் ஓடவில்லை என்றால்..
ஒரே காரணம்...
துர்ப்பிரச்சாரம்...
நடிகர் திலகத்தைப் பற்றியும் அவரது உடலமைப்பைப் பற்றியும் கிளப்பப் பட்ட ஏச்சுக்களும் பேச்சுக்களும் பரவலாகப் பரப்பப்பட்டதாலும் அவரது படங்களைப் பற்றி கிண்டலும் கேலியும் மிகப் பரவலாக செயற்கையாக உருவாக்கப் பட்டதாலும் பல நல்ல படங்கள் சரியான முறையில் சென்றடைய விடாமல் தடுக்கப் பட்டதாலும் தான் 80 களில் அவரது படங்கள் பாதிக்கப் பட்டன. அப்படிப் பட்ட படங்களில் ஒன்று தான் மோகன புன்னகை. குறை சொல்லுமில்லாத சிறந்த படம். 80களில் மிகச் சோதனையான காலங்களில் அவருடனேயே இருந்த பல கோடி ரசிகர்களில் ஒருவன் என்ற முறையிலும் அந்த ஏளனங்களுக்கும் ஏகடியங்களுக்கும் பதில் கொடுத்து நின்ற ரசிகர்களில் ஒருவன் என்ற முறையிலும் பல முறை இப்படிப்பட்ட நல்ல படங்கள் தோல்வியடைந்த போது மனம் வேதனை யடைந்திருக்கிறேன். அதே போல் தான் கார்த்திக்கும் உணர்ந்திருப்பார் என்பதை அவருடைய பதிவுகளில் அனைவரும் உணர முடியும்.
நம்மையெல்லாம் அந்த அளவிற்கு உணர்ச்சி மயமாக்கிய மோகனப் புன்னகை பாடலைப் பார்த்து நினைவுகளை அசை போடுவோமே..
http://youtu.be/gxXcH13sGIc
http://youtu.be/eVV3H_odMRU
மேடையில் நடனமாடும் நடிகர் திலகம்
(நெஞ்சிருக்கும் வரை படத்தில் வரும் பாடலுக்கு என்று நினைகிறேன் )
http://s431.photobucket.com/albums/q...vajiunseen.jpg
NT WITH NTR AND GANTASALA
http://www.nbkfans.com/photogallery/.../ntr2spl14.jpg
அன்புள்ளங்கள் அனைவருக்கும்,
நன்றி கலந்த வணக்கம் !
டிசம்பர் 2011-ன் இறுதி நாட்களில் ஏற்பட்ட திடீர் இயற்கைச் சீற்றங்களினால் புதுச்சேரியும், தமிழகமும் மிகுந்த பாதிப்புக்குள்ளாயிருப்பது அனைவரும் அறிந்ததே. புதுவையிலும், தமிழகத்தில் குறிப்பாக கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, விழுப்புரம், தஞ்சை, குடந்தை போன்ற பகுதிகளிலும் இச்சீற்றங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கிப்போயிருப்பது ஊடகங்களின் மூலம் தெள்ளத்தெளிவாகின்றன. 'தானே' சூறாவளிப்புயல் உண்டாக்கிய சீரழிவால், பொதுமக்கள் அடிப்படை வசதிகளுக்கும், முக்கிய தேவைகளுககுமே அல்லல்படும் அமைதியற்ற சூழலில், பரிதவித்து வருகின்றனர். இந்த நிலையிலிருந்து விடுபட்டு, தமிழகமும், புதுச்சேரியும் வெகுவிரைவில் இயல்புநிலையை அடைய எல்லாம் வல்ல இறைவனிடமும், இறைவனுக்கு நிகரான நமது இதயதெய்வத்திடமும் பிரார்த்தனை செய்வோம். இந்தப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும் இத்துன்பநிலை நீங்கி இன்பநிலை காண்பதற்கும், அனைத்து அல்லல்களிலிருந்தும் வெளிவருவதற்கும், அவர்களுக்கு எல்லாவித சக்திகளையும் இறைவனும், இதயதெய்வமும் அளித்து அருள் பாலிக்கட்டும் !
நமது திரியின் சுப்ரீம் ஸ்டார் நெய்வேலி வாசுதேவன் அவர்கள் வசிக்கும் ஊரான நெய்வேலியும், இந்த இயற்கைச் சீரழிவால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அவர் வசிக்கும் இடத்தின் பகுதிகளில் உள்ள மின்சார இணைப்புக்களிலெல்லாம் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதால் கடந்த ஒருவார காலமாகவே அவர் மின்சாரம் இல்லாமல் இருந்து வருகிறார். இதுதவிர, நெய்வேலியில், தொலைத்தொடர்பு இணைப்புகளும் முழுவதுமாக சேதமடைந்திருக்கின்றன. இவைதவிர, மற்ற முக்கிய அன்றாட அடிப்படைத்தேவைகள், இறையருளாலும், இதயதெய்வத்தின் கிருபையாலும் அவருக்கு பாதகமில்லாமல் சாதகமாக இருக்கின்றன என்பது இந்த நிலையிலும் ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தி. நானும், அவரும் தினந்தோறும் சிலமணித்துளிகளாவது கைபேசியில் உரையாடாமல் உறங்கியதில்லை. அதேபோல, கடந்த சில தினங்களாகவும் அவருடன் பேசியபோது, நான் மேற்குறிப்பிட்டுள்ள தகவல்களை அவர் என்னிடம் தெரிவித்தார். நேற்றிரவு பேசும்போது, மின்சாரம் இணைப்புகளெல்லாம் இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு கூறினார். எனினும், தொலைபேசி இணைப்புகளெல்லாம் சீராகி, internet broadband சேவைகள் வருவதற்கு குறைந்தபட்சம் ஒருவாரம் முதல் இரண்டு வாரங்கள் வரை ஆகும் என்றும் கூறினார். கடந்த ஒரு வாரகாலமாக நமது திரிக்கு வரமுடியவில்லையே, பதிவுகளை அளிக்க முடியவில்லையே என்று அவரது இந்த நிலையிலும் மிகுந்த மனவருத்தம் கொண்டார். நான் அவரைத் தேற்றியதோடு, கடந்த ஒரு வாரமாக நமது திரியில் வந்த பதிவுகளையும் வாசித்துக் காண்பித்தேன். அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். தங்களது சங்கடங்கள் இன்னும் சில தினங்களில் சரியாக பிரார்த்திக்கிறேன் என்று கூறியதோடு, தாங்கள் பதிவிட இயலாத இச்சூழ்நிலை குறித்து நமது திரியிலும் ஒரு பதிவை இடுகை செய்துவிடுகிறேன் என்றும் இயம்பினேன். அவர் உணர்ச்சிவயப்பட்டார். நமது திரியின் அன்பர்களும், நமது அன்புள்ளங்கள் அவைவரும் தங்களுக்காக அவசியம் பிரார்த்தனை செய்வார்கள் என்றும் கூறினேன். அவர் பரமதிருப்தி அடைந்தார். 'Happiness is the state of mind' என்பார்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் நமது வாசுதேவன் சாரும் அவரது குடும்பத்தினரும். இந்த இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலும், அவரும் அவரது குடும்பத்தினரும் எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல் எப்பொழுதும்போல் மகிழ்ச்சியாகவே இருந்து வருகின்றனர். இப்பண்பு, அவர்கள் எப்பேர்ப்பட்ட உயர்ந்த நெறியாளர்கள்-பண்பாளர்கள் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இத்தகைய நல்ல உள்ளங்களுக்கு எல்லா நன்மைகளும் சேரவும், வெகுவிரைவில் அவர்களுக்கு சகஜநிலை திரும்பவும் இறைவனிடமும், இதயதெய்வத்திடமும் வேண்டிக் கொள்வோம். குகநாதனின் வாக்குமூலத்தை உள்ளடக்கிய சமீபத்திய 'சினிமா எக்ஸ்பிரஸ்' இதழில் வெளிவந்த "ராஜபார்ட் ரங்கதுரை" காவியக்கட்டுரையை தனது சமீபத்திய பதிவாக அளித்தபின், இயற்கை இடையூறுகளால் சில தினங்கள் பதிவுகளை இட இயலாமல் இருக்கும் வாசுதேவன் அவர்கள், இன்னும் ஓரிரு வாரங்களில், தமிழர் திருநாளையொட்டி, பதிவுகளை அள்ளி வழங்க வந்து எப்பொழுதும்போல், நமது திரியின் ராஜபார்ட்டாக ராஜநடை போடுவார் என்பது திண்ணம் !
[வாசுதேவன் அவர்கள் இல்லாமல் நமது திரி வெறிச்சோடிக்கிடக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. அதுவும் எனக்கு ரொம்பரொம்பவே].
பாசத்துடன்,
பம்மலார்.
டியர் பார்த்தசாரதி சார்,
தாங்கள் வழங்கிய சிறப்பான பாராட்டுதல்களுக்கு எனது இருகரம் கூப்பிய சிரம் தாழ்த்திய நன்றிகள் !
2011-ம் ஆண்டு நமது திரிக்கு ஒரு பொன்னான ஆண்டு என்று கூறினால் அது மிகையன்று. திறனாய்வு சூப்பர் ஸ்டாரான தாங்களும், திரியின் சுப்ரீம் ஸ்டாரான வாசுதேவன் அவர்களும் நமது திரிக்குள் வந்து அசத்தத் தொடங்கிய ஆண்டாயிற்றே ! இங்குள்ள அனைவரும் தெரிவித்ததுபோல நம் அனைவரது பங்களிப்பாலும், 2012லிருந்து நமது திரி மேலும் மேலும் பொலிவடையப்போகிறது என்பது திண்ணம் !
சக்கை போடு போட்டுத் துவங்கிய தாங்கள் அடுத்ததாக அண்டபகிரண்டத்தைக் காக்கும் கலையுலகப் "பராசக்தி"யின் 'கா..கா..கா' பாடலோடு கம்பீரமாக வந்துள்ளீர்கள். காலஞ்சென்ற எனது தாயார், இந்தப்பாடல் எப்பொழுது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டாலும், அவர்கள் அப்பொழுது என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், அதை அப்படியேவிட்டுவிட்டு, இப்பாடலை முழுவதும் பார்த்து ரசித்துவிட்டு, அதன் பின்தான் அந்த விட்ட வேலையைத் தொடர்வார்கள். அவர், ஒவ்வொரு முறையும், இப்பாடலை கண்டு களிக்கும் போதெல்லாம் சொல்லும் வாசகம், 'முதல் படத்திலேயே என்னமாய் நடிச்சிருக்கார் பாரு..அவர மாதிரி இனியொருத்தர் பொறந்து வரணும்' என்பார். இவையெல்லாம் எனது நினைவுத்திரையில் நீங்காமல் இடம்பெற்றிருப்பதால், தங்களுடைய 'கா..கா..கா' பாடல் பதிவைப் படித்தவுடன், அப்படியே எழுத வந்துவிட்டது.
உடுமலை நாராயண கவிராயரின் உண்மையை உரக்க உரைக்கும் உன்னத வரிகள், சுதர்சனம் அவர்களின் சுகமான சங்கீதம், இசைச் சித்தரின் இங்கிதம்கலந்த குரல்ஜாலம் எல்லாம் "பராசக்தி" கணேசரின் performanceஸோடு இணைந்து பரிமளிக்கும் போது, அந்தப்பாடல் எவ்வளவு பெரிய உயரத்தை அடையும் என்பதற்கு இந்தப்பாடல் ஒரு சிறந்த முன்னுதாரணம். மாருதிராவின் கேமராவும் இப்பாடலில் திலகத்தைப் படம்பிடிப்பதில் மலைப்பை ஏற்படுத்தியிருக்கும். சிதம்பர ரகசியமாக இருந்த சிதம்பரம் ஜெயராமனின் பாட்டுக்குரல் பட்டி-தொட்டியெங்கும் ஒலிக்கும் பிரபலக்குரலானதும் "பராசக்தி" கணேசரின் performance பலத்தால்தான் !
அருமையான ஆய்வுப்பதிவை அழகுற அளித்த தங்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள் !
தங்களுக்காகவும் மற்றும் இங்குள்ள அனைவருக்காகவும் 'கா..கா..கா' பாடலின் வீடியோ:
http://www.youtube.com/watch?v=H2kPbPF7dIE
அன்புடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
தங்களது தூய உள்ளத்திலிருந்து தாங்கள் அன்றாடம் அள்ளி வழங்கிவரும் பாசமான பாராட்டுதல்களுக்கு முதற்கண் எனது பொன்னான நன்றிகள் !
இயன்ற அளவு, இந்த எளியேன் இங்கே ஆற்றிவரும் சிறுதொண்டு, நமது நல்லிதயங்களின் உள்ளங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகத் தாங்கள் தெரிவித்திருப்பது என் வாழ்வின் பாக்கியம். இதற்காக தங்களுக்கும், நமது அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றேன். அனைவரது பாராட்டுக்களும், வாழ்த்தொலிகளும், ஆசிமலர்களும் இந்த சிறியேனுக்குக் கிடைக்கும்போது அதைவிட வேறு என்ன பேறு வேண்டும் ஒரு பக்தனுக்கு. அடியேனது ஒவ்வொரு பங்களிப்புக்கும் இவையெல்லாம் மாபெரும் ஊக்கசக்தியாக விளங்கும் என்பது சத்தியவாக்கு !
அன்பு கலந்த ஆனந்தக்கண்ணீருடன்,
என்றென்றும் கலைதெய்வத்தின் புகழ்பாடும் குயில்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
டியர் பம்மலார்,
தாங்கள் கூறியது போல் வாசுதேவன் சாருடன் தொலைபேசியில் உரையாடிய பின்னரே நமக்கே ஒரு ஆறுதலாக இருந்தது என்றால் அவர்கள் அங்கு கண்ட இன்னல்கள் அல்லது இடையூறுகள் மிகவும் கஷ்டமானவை. ஒரு வாரத்திற்கும் மேலாக மின் இணைப்பின்மையும் தொலைத் தொடர்பின்மையும், நிச்சயம் மிகவும் பரிதாபத்திற்குரிய நிலைமைதான். அவர்கள் வெகு விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என இறைவனை வேண்டுவோம்.
தங்களுடைய ஆவணங்கள் தங்களின் உயரத்தை நாளுக்கு நாள் அதிகரிப்பதோடு எங்களை நாளுக்கு நாள் கழுத்தை உயர்த்தச் செய்கின்றன. நெஞ்சை நிமிர்த்தி சொல்வதற்கு கழுத்தை நிமிர்த்திப் பார்க்க வேண்டியது ஒன்றும் சுமையல்லவே..
பாராட்டுக்கள்..
அன்புடன்
டியர் mr_karthik,
"மோகனப்புன்னகை" நினைவலைகள் அனுபவப்பதிவு படுஅமர்க்களம் !
இப்பதிவின் தொடக்கமே சுவை. நடிகர் திலகமும் புதுமை இயக்குனரும் மீண்டும் இணைந்தததை மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.
"பாவை விளக்கு" காவியத்திலும் நான்கு ஹீரோயின்கள் [சௌகார் ஜானகி, எம்.என்.ராஜம், குமாரி கமலா, பண்டரிபாய்].
தாங்களும் மன்றங்களில் இணைந்து செயல்பட்டதை ஏற்கனவே தங்களின் பதிவுகளில் பசுமையாகப் பதிவு செய்துள்ளீர்கள் ! "மோகனப்புன்னகை"க்காகவும் தங்கள் மன்றம் சார்பில் அண்ணலின் கட்-அவுட்டுக்கு ராட்சதமலர்மாலையெல்லாம் அணிவித்திருப்பது போற்றுதலுக்குரிய செயல். ஏனைய மன்றங்கள் சளைக்காமல் செய்தவற்றையும் உள்ளன்போடு குறிப்பிட்டிருக்கிறீர்கள் ! நடிகர் திலகத்தின் புகழை எப்படியெல்லாம் வளர்த்து, பாடி, பரப்பி, கட்டிக்காத்திருக்கிறீர்கள். Simply great !
அனைவரது பங்களிப்புகளையும் உயர்வாகப் பாராட்டும் பெருங்குணம் அப்போதிருந்தே தங்களுக்கு இருப்பது தெரிகிறது. நமது ராகவேந்திரன் சார் 'சித்ரா'வில் அமைத்த பதாகையை குறிப்ப்ட்டுப் பாராட்டியதைத்தான் சொல்கிறன். ராகவேந்திரன் சார் குறிப்பிட்டதுபோல், இந்த விஷயத்தில் சகோதரி கிரிஜாவும் உச்சமாகப் பாராட்டப்படவேண்டியவர். சிகர ரசிகை சகோதரி கிரிஜாவும், நமது ரசிக முதல்வர் ராகவேந்திரன் சாரும், எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல், நமது இதயதெய்வத்திற்கு தொண்டு புரிவதை மட்டுமே, அவரது புகழ் பாடுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றுபவர்கள், வாழ்பவர்கள் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
தங்களது இனிய நினைவுப்பதிவு வழக்கம் போல் வெகு அருமை ! ஆரவாரங்களைப் பற்றிய அட்சரப்பிசகாத வருணனைகள் என்ன, திரைக்காவியத்தைப் பற்றிய ஒரு மினி அலசல் என்ன, காவியம் குறித்த மக்களின் பல்ஸ் என்ன என ஒவ்வொன்றையும் எப்பொழுதும்போல் புட்டுபுட்டு வைத்துவிட்டீர்கள் !
பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !! நன்றிகள் !!!
அன்புடன்,
பம்மலார்.
Dear Vasudevan,
Every day he helps you and your family
Every hour he loves you and your family
Every minute he blesses you and your family
Becasue,
Every second I pray God to take care of you and your family and OTHERS THOSE WHO AFFECTED
Pray God for speedy recovery from natural disaster
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் உயர்ந்த பாராட்டுக்கு எனது உளமார்ந்த நன்றிகள் !
mr_karthik அவர்களின் "மோகனப்புன்னகை" நினைவலைகள் பதிவுக்கு பாராட்டு தெரிவித்து பதிலளிக்கும் பதிவாக தாங்கள் அளித்திருந்த பதிவும் பிரமாதம் என்பதோடு மட்டுமல்லாமல் பல உண்மைகளை உலகுக்கு விளக்கின.
"மோகனப்புன்னகை" பாடல் காணொளிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் !
['பிளாசா' தியேட்டர் முதியவரிடம் எனக்கும் நல்ல பரிச்சயமுண்டு. சற்றேறக்குறைய ஐந்து வருடங்களுக்கு முன்னர், அவரிடம் இருந்த "வணங்காமுடி","குறவஞ்சி" காவியங்களின் சில அபூர்வ புகைப்படங்களை(மொத்தம் ஒரு ஏழெட்டு புகைப்படங்கள் இருக்கும்), ஒரு நல்ல விலைக்கு எனக்களித்தார். வாங்கிவந்து பத்திரமாக வைத்திருக்கிறேன். "வணங்காமுடி", "குறவஞ்சி" ரிலீஸ் மேளா சமயத்தில் அவற்றைப் பதிவிடுகிறேன். இதற்கு முன்னர் கூட, பல சமயங்களில், அண்ணலின் சில அரிய புகைப்படங்களை அவர் எனக்கு அளித்திருக்கிறார்].
அன்புடன்,
பம்மலார்.
அன்புள்ள பம்மலார் சார்,
தங்களின் இதயம் நிறைந்த பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.
நமது அன்புச்சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்களின் தற்போதைய சுழல் பற்றிய தங்களின் பதிவு உள்ளத்தைத்தொட்டது. கடந்த சில தினங்களாக தொலைக்காட்சிகளில் கடலூர், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநில மக்களின் துய்ரம் நிறைந்த வாழ்க்கையை ஒளிபரப்ப, அதைப்பார்க்கும் அனைவரது உள்ளமும் அம்மக்களின் துயரம் விரைவில் நீங்க பிரார்த்திப்பதுடன், மத்திய மாநில அரசுகள் தங்கள் முழு கவனத்தையும், முழு அரசு எந்திரத்தையும் அங்கு ஈடுபடுத்தி அப்பகுதியை சீரமைத்து அவர்களின் பழைய வாழ்க்கையை மீட்டுத்தர போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் கருத்து வேற்றுமைகளை புறந்தள்ளி அம்மக்களின் வாழ்வு சீரடைய உதவ வேண்டும். முப்பதாண்டுகளாக வளர்க்கப்பட்ட முந்திரி தோப்புக்கள் மூன்று மணிநேர இயற்கைக் கோரத் தாண்டவத்தில் வேரோடு பிடுங்கியெறியப்பட்ட காட்சிகள் மனதை வருத்தமுறச்செய்கின்றன.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் வாழும் சூழ்நிலையிலும், நமது திரியில் பங்கேற்க முடியவில்லையே, பதிவுகள் இட இயலவில்லையே என்று வருத்தப்படும் வாசுதேவன் அவர்களின் தூய எண்ணத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம். விரைவில் எல்லா இடையூறுகளும் நீங்கி, புதிய பொலிவுடன் அவர் நம் திரியில் வலம் வரும் நாளை அன்புடன் எதிர்நோக்குகிறோம்.
அன்புள்ள ராகவேந்தர் சார்,
தங்களின் மேலான மறுமொழிக்கு நன்றி. மோகனப்புன்னகை படத்தின் சிந்தனையை மேலும் வளர்த்திருக்கிறீர்கள். தங்களின் அரியசேவைகளை மறந்தால்தான் அதிசயம். நினைவில் வைத்துக்கொள்வது அதிசயம் இல்லை.
நீங்கள் குறிப்பிட்ட பிளாசா தியேட்டர் நுழைவாயிலில் அரிய புகைப்படங்களை விற்பனை செய்து வந்த அந்த முதியவரைப்பற்றிக் குறிப்பிட்டபோது என் நினைவுகள் பின்னோக்கிச்சென்றன. நானும் அவரிடம் பல்வேறு அரிய நிழற்படங்களை வாங்கியிருக்கிறேன். அவற்றில் ஒன்று கௌரவம் படத்தில் 'அதிசய உலகம்' பாடல் ஷூட்டிங் முடிந்ததும் நடிகர்திலகத்துடன் இணைந்து படமெடுத்துக்கொள்ள விரும்பிய நடிகை ஜெய்குமாரி, அதே டான்ஸ் உடையில் நடிகர்திலகத்தின் பக்கத்தில் நிற்க, அவர் கருப்பு ஃபுல்சூட் அணிந்த பாரிஸ்டராக ஜெய்குமாரியின் தோளில் கைவைத்து அணைத்துக்கொண்டு நிற்கின்ற படம். கலரில் எடுக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற பல அரிய புகைப்படங்கள் மற்றும் பத்திரிகைச்செய்திகள் அடங்கிய பெட்டி, நான் இல்லாதபோது வீடுமாற்றியதில் தொலைந்து போனது. மிகவும் சிரமப்பட்டு சேகரித்த பல ஆவணங்கள் மிஸ்ஸிங்.
ஆனால் இப்போது நமது பம்மலார் அவர்களின் பேருதவியால், மிகப்பெரிய ஆவணக்களஞ்சியத்தை உருவாக்கி பாதுகாக்கத்துவங்கி விட்டேன். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். நமது பம்மலார் அவர்கள் இதுவரை நடிகர்திலகத்தின் 95 படங்களுக்கு ஆவணப்புதையல்களை அள்ளித்தந்திருக்கிறார். இந்த கருணை மனம் யாருக்கு வரும்?.
டியர் பாலா சார்,
கிடைத்தற்கரிய நிழற்படங்களை வழங்கியமைக்கு கனிவான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
தங்களின் பதில் பதிவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ! நிலைமை விரைவில் சீரடைய பிரார்த்திப்போம் !
மிஸ்டர் கார்த்திக் எனும் கார்மேகம், மாரியெனப் பாராட்டுக்களைப் பொழியும்போது, நான் பதிலுக்கு தெரிவிக்கும் நன்றிகள் எம்மாத்திரம் !
இருப்பினும், தங்களுக்கு எனது கோடானுகோடி நன்றிகள் !
பாசத்துடன்,
பம்மலார்.
GODFATHER's JANUARY GULAAB JAAMOONS
மோகன புன்னகை
[14.1.1981 - 14.1.2012] : 32வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
காவிய விளம்பரம் : தினத்தந்தி : 29.10.1978
http://i1110.photobucket.com/albums/...Punnagai-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
அன்புள்ளங்கள் அனைவருக்கும்,
ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி !
இன்று [4.1.2012] இரவு ஒன்பது மணியளவில், நெய்வேலியில் நமது வாசுதேவன் சார் வசிக்கும் பகுதியிலும் மற்றும் இதர பகுதிகளிலும் மின்சார இணைப்பு வந்துவிட்டது. ஒரு வாரகாலமாக இருந்த இருள் விலகி ஒளி பிறந்திருக்கிறது. வழக்கம்போல், வாசுதேவன் சாருடன் கைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தபோதே மின்சாரம் வந்துவிட்டதை அவர் தெரிவித்தார். தொலைபேசி இணைப்பும், இணையதள இணைப்பும் கூடிய விரைவில் கிடைத்துவிடும் என்றும் அவர் கூறினார்.
நமது திரியில் நமது நல்லிதயங்கள் திரு.ராகவேந்திரன் சார், திரு.பாலா சார், mr_karthik ஆகியோர் இடுகை செய்த பதிவுகளை அவருக்கு படித்துக் காட்டினேன். அவரது கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருக்கெடுத்தது. அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். இணைய இணைப்பு வந்தவுடன் திரியில் பங்களிப்பை நல்குவதாகக் கூறினார்.
[நமது திரியைப் பார்த்துவிட்டு, நமது ஜேயார் சார் (J.Radha Krishnan Sir), இன்று (4.1.2012) காலை கைபேசியில் தொடர்புகொண்டு பேசியதையும் வாசுதேவன் அவர்கள் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்].
பாசத்துடன்,
பம்மலார்.
வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்
தொண்டரடிப்பொடியாழ்வார் பாசுரம்
பச்சைமா மலைபோல் மேனி
http://www.youtube.com/watch?v=MFQvEfKgaLk
பக்தியுடன்,
பம்மலார்.
'அவன் ஒரு சரித்திரம்' - இனிய நினைவுகள்
36-வது ஆண்டு உதயம் (14.01.1977 - 14.01.2012)
1976 டிசம்பர் இறுதியில் ரோஜாவின் ராஜா வெளிவருவதற்கு முன்பாகவே, 1977 பொங்கல் வெளியீடாக 'அவன் ஒரு சரித்திரம்' வரப்போகிறது என்ற விவரம் மதிஒளி, திரைவானம், பொம்மை, பேசும்படம் போன்ற இதழ்கள் மூலமாக அனைவரிடத்திலும் சென்று சேர்ந்து விட்ட விவரத்தை முன்பே சொல்லியிருந்தேன். அதற்கேற்றாற்போல அந்த இதழ்களும் அவன் ஒரு சரித்திரம் பற்றிய செய்திகளையும் பல்வேறு ஸ்டில்களையும் வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்தன. படத்தின் பெயரும் ஒரு அழகான பெயராக அமைந்ததில் ரசிகர்களுக்கு திருப்தி. பட வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தபோது, ‘பொங்கல் வெளியீடு பைலட், ஸ்ரீகிருஷ்ணா, அபிராமி,நூர்ஜகான் தியேட்டர்களில் அவன் ஒரு சரித்திரம்’ என்ற விளம்பரம் தினத்தந்தியில் வெளியானது. ரசிகர்களுக்கு ம்கா உற்சாகம். உற்சாகத்துக்குக் காரணம் அப்போதுதான் புதிதாக திறக்கப்பட்டிருந்த புரசைவாக்கம் 'அபிராமி a/c' தியேட்டரில் படம் வெளியாகிறது என்ற அறிவிப்புத்தான். ரிசர்வேஷன் ஆரம்பிக்கட்டும், அபிராமியில் புக் பண்ணி பார்த்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்திருந்தோம்.
அபிராமி என்றால் இப்போதிருக்கும் அபிராமி மெகாமால் எல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அன்னை அபிராமி, சக்தி அபிராமி தியேட்டர்கள் கூட அப்போது கட்டப்படவில்லை. அந்த வளாகத்தில் இருந்தது அபிராமி என்ற பெரிய தியேட்டரும், பால அபிராமி என்ற மினி தியேட்டரும்தான். அதுவரையில் அபிராமியில் படம் பார்த்ததில்லை. பார்த்தவர்களெல்லாம் தியேட்டரைப்பற்றி ஆகா, ஓகோவென்று புகழ்ந்ததால், சரி முதன்முதலாக அண்ணனின் புதுப்படத்தை அங்கே பார்ப்போம். ஒற்றைக்கு இரட்டை சந்தோஷமாக இருக்கட்டுமென்று, ரிசர்வேஷனுக்காகக் காத்திருந்தால்......
ரிசர்வேஷன் அன்று தினத்தந்தியில் வந்த விளம்பரத்தில் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. அபிராமி என்ற பெயர் அகற்றப்பட்டு அசோக் தியேட்டர் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. எல்லோருக்கும் ஷாக். 'நேரு ஸ்டேடியத்துக்கு எதிரில் இருக்கும் அசோக் தியேட்ட்ரா?. அது பராசக்தி வெளியான பழைய தியேட்டர் அல்லவா?. அதில் சமீப காலமாக புதிய தமிழ்ப்படங்கள் எதுவும் வெளியாவதில்லையே. பக்கத்திலுள்ள சௌகார்பேட்டையிலிருக்கும் மார்வாரிகளுக்காகவும், பெரியமேடு பகுதியிலிருக்கும் உருது பேசும் இஸ்லாமியர்களுக்காகவும் அங்கு வாரம் ஒரு இந்திப்படம்தானே போடுகிறார்கள்?. அந்த தியேட்டரை ஏன் புக் பண்ணியிருக்கிறார்கள்?. ஏற்கெனவே அந்த ஏரியாவில் ராக்ஸியில் ரோஜாவின் ராஜா ஓடிக்கொண்டிருக்கிறது. புவனேஸ்வரியில் குடியரசு தினத்தன்று தீபம் வெளியாகவிருக்கிறது. அட்லீஸ்ட் மேகலா அல்லது உமாவில் வெளியிட்டிருக்கலாமே. என்னய்யா இப்படி கவுத்துட்டாங்க?' என்று எல்லோரும் உற்சாகம் குன்றிப்போனார்கள்.
சரி, அபிராமி கனவுதான் போச்சு, பைலட் தியேட்டரிலாவது புக் பண்ணுவோம் என்று ஓரிருவர் யோசனை சொன்னதை மற்றவர்கள் மறுத்தனர். 'விடுங்கப்பா, நம்ம ஏரியா ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில் படம் ரிலீஸாகுது அப்புறம் என்ன கிருஷ்ணாவிலேயே புக் பண்ணுவோம்' என்று முடிவுசெய்து கிளம்பினோம். ஸ்ரீகிருஷ்ணா தியேட்டருக்குப்போனால் எங்களுக்கு முன்பே அங்கே பெருங்கூட்டம் கூடி நின்றது. பிராட்வே போல டல்லடிக்கவில்லை. ரசிகர்கள் உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் கூடி நின்றனர். அங்கேயும் ரசிகர்களிடையே அபிராமி தியேட்டர் மாற்றப்பட்ட பிரச்சினையே ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் போன சில நிமிடங்களிலேயே கேட் திறக்கப்பட்டு வரிசையாக உள்ளே அனுப்பப்பட்டனர். ஏற்கெனவே போலீஸ் வந்துவிட்டிருந்தது. வரிசையில் நின்று திரும்பிப்பார்த்தால் எங்களுக்குப்பின்னால் கியூ வளைந்து நெளிந்து அனுமார் வால் போல நீண்டிருந்தது. எங்களுக்கு உற்சாகமாக இருந்தது.
கியூவில் நிற்கும்போதே படத்தைப்பற்றி ரசிகர்கள் மத்தியில் பேச்சு நடந்துகொண்டிருந்தது. 'அண்ணனுக்கு இதில் க்லெக்டர் ரோல். நல்லா பண்ணியிருக்காராம். ஸ்டில்ஸெல்லாம் பார்க்கும்போது ரொம்ப கலக்கலாகவே இருக்கிறது' என்று ரசிகர்களுக்குள் கருத்துப்பறிமாற்றங்கள். இதற்கு முன் மற்றவர்கள் பேசுவதைக்கேட்டு ரசித்துக்கொண்டிருந்த நாங்கள், இப்படம் வந்த காலகட்டத்தில் நாங்களே படங்களைப்பற்றிக் கருத்துக்களைப் பறிமாறிக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிட்டோம்.
ஸ்ரீகிருஷ்ணாவில் எப்போதுமே ரிசர்வேஷனுக்கு, சாதாரணமாக காட்சி நேரத்தில் குறைந்த கட்டணத்துக்கு டிக்கட் கொடுக்கும் கவுண்ட்டரையே பயன்படுத்துவார்கள். அங்குதான் நீண்ட கியூ நிற்க இடமிருக்கும் என்பதால். அன்றைக்கும் அப்படியே. காலை ஒன்பது மணிக்கு புக்கிங் துவங்கியது. பிளாக் டிக்கட்டை கட்டுப்படுத்துவதற்காக, ரிசர்வேஷன் செய்யும்போது ஒரு ஆளுக்கு ஐந்து டிக்கட்டுக்கு மேல் கொடுக்க மாட்டார்கள். அதனால் நாங்கள் எல்லோருமே கியூவில் நின்றோம். வரிசை மளமளவென்று முன்னேறியது. எங்களுக்கு பயம். முதல்நாள் டிக்கட் கிடைக்காதோ என்று. கவுண்ட்டர் பக்கத்திலேயே ரிசர்வேஷன் சார்ட் வைத்து, காட்சி நிறைய நிறைய ‘full' என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வந்தார்கள். நாங்கள் கவுண்ட்டரை நெருங்கும்போது மேட்னி full என்று ஒட்டினார்கள். எங்களுக்கு அச்சம் எழுந்தது. நல்லவேளை நாங்கள் வாங்கும்போது மாலைக்காட்சிக்கு டிக்கட் நிறையும் தறுவாயில் இருந்தது. நாங்கள் வாங்கியபின் அடுத்த ஆள் வாங்கியிருப்பார். மாலைக்காட்சியும் full என்று ஒட்டினார்கள். எங்களுக்கோ பிடிபடாத சந்தோஷம். எதையோ சாதித்துவிட்டது போலிருந்தது.
டிக்கட்தான் வாங்கிவிட்டோமே என்று வீட்டுக்குப்போய்விட்டால் எப்படி?. கவுண்ட்டர் அருகில் நிறக் விடாமல் போலீஸ் விரட்டியதால் டிக்கட் வாங்கிய ஏராளமான ரசிகர்கள் சற்று தூரத்தில் நின்று, மீண்டும் படத்தைப்பற்றி அதுவரை வந்திருக்கும் செய்திகளை அசைபோட்டுக் கொண்டிருந்தோம். இருந்தாலும் எங்கள் கண் முழுக்க 'சார்ட்'டில்தான் இருந்தது. வரிசை நகர நகர 'full' ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டே வந்தனர். நாங்கள் புறப்படும் முன்னரே ஸ்ரீகிருஷ்ணாவில் பதினான்கு காட்சிகள் நிறைந்தன. திருப்தியாக வீடு வந்தோம்.
அப்போது ஒன்டே கிரிக்கெட் தோன்றாத காலம். கிரிக்கெட் என்றால் அது டெஸ்ட் மேட்ச்தான். இந்தியாவில் வழக்கமாக டிசம்பரில் துவங்கி கல்கத்தா, டில்லி, நாக்பூர் என்று சுற்றியபின் சரியாக பொங்கல் விடுமுறைக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போடுவார்கள். பொங்கலுக்கு தமிழ்நாட்டில் நான்கு நாட்கள் விடுமுறையென்பதால் வருடாவருடம் இந்த ஏற்பாடு. அப்போது சென்னையில் கருப்புவெள்ளை டிவி இருந்தபோதிலும், மைதானத்தில் வசூல் குறைந்துவிடும் என்பதற்காக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அனுமதிக்க மாட்டார்கள். ரேடியோ கமெண்ட்ரி மட்டுமே. நாங்களும் வருடாவருடம் ஐந்துநாட்கள் பகல் முழுவதும் சேப்பாக்கம் மைதானமே கதியென்று இருப்போம். அதுவும் எப்படி?. என்னமோ நாங்களே பிளேயர்கள் போல ஒய்ட் அண்ட் ஒய்ட்டில் போய் அமர்ந்துகொண்டு, காதில் சின்ன பிலிப்ஸ் ட்ரான்ஸிஸ்டரில் கமெண்ட்ரி கேட்டுக்கொண்டே நேரில் கிரிக்கெட்டைப் பார்ப்பதில் ஒரு அலாதி திருப்தி. (அந்த சந்தோஷங்கள் இப்போது டிவி முன் அமர்ந்து, மிகத்தெளிவாக, குளோஸப் காட்சிகளாக, ஆயிரத்தெட்டு ரீப்ளேக்களுடன் பார்க்கும்போது கிடைக்கவில்லை). அந்த வருடம் பொங்கலுக்கு, அண்ணனின் 'அவன் ஒரு சரித்திரம்' படத்துக்காக கிரிக்கெட்டை தியாகம் செய்தோம். காவஸ்கரும், கபில்தேவும், யஷ்பால் சர்மாவும், ஷிவ்லால் யாதவும், சந்தீப் பட்டீலும் இரண்டாம் பட்சமாகிப்போனார்கள். (இவர்களின் ரசிகர்கள் மன்னிக்க).
பொங்கல் தினமும் வந்தது. மூன்று நாட்கள் கல்லூரி விடுமுறை. (இப்போ காலேஜ் ஸ்டூடண்ட் ஆயிட்டோமாக்கும்). பொங்கல் கொண்டாட்டம் அதுபாட்டுக்கு ஆட்டோமாட்டிக்காக நடந்துகொண்டிருந்தது. எங்களுக்கோ, 'ராஜா' படத்தில் கேரள ஆற்றுப்பாலத்தின் அருகில் உட்கார்ந்து நடிகர்திலகம் ஜெயலலிதாவிடம் சொல்வது போல, 'எப்படா மாலைவரும், மாலைவரும்'னு காத்துக்கிட்டிருந்தோம். மதிய உணவு முடிந்ததும் இருப்புக்கொள்ளவில்லை. மூணு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம். பொங்கல் தினமல்லவா?. பிராட்வேயில் 'ரோஜாவின் ராஜா' FULL. பக்கத்தில் பிரபாத்திலும் ஏதோ ஒரு படம் FULL. ஸ்ரீகிருஷ்ணாவை அடைந்தபோது மணி மூணரை இருக்கும். வெளியில் மேட்னி ‘HOUSE FULL’ போர்டு பளிச்சென்று தொங்கியது. (இடைவேளைவரை போர்டு தொங்கும். பின்னர் எடுத்து விடுவார்கள்). மெயின்கேட்டுக்கு வெளியே அந்த நேரத்திலும் அடுத்த காட்சிக்காக திரளான கூட்டம். எங்களுக்கு ஏதோ 76-இன் தேக்க நிலை மாறி, மீண்டும் 72, 73 திரும்பிவிட்டது போலிருந்தது. நல்ல அறிகுறியாகத்தெரிந்தது. மனம் சந்தோஷத்தில் துள்ளியது. அங்கு நின்ற ரசிகர்கள் மத்தியிலும் அதுவே பேச்சாக இருந்தது.
தியேட்டர் அலங்காரங்களைப் பார்த்தோம். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள், ராஜபார்ட் ரங்கதுரைக்கு செய்யப்பட்டிருந்தது போல அதே காங்கிரஸ் கொடிகள், பேனர்கள். கட் அவுட்களுக்கு மூவண்ண நிறத்தில் மாலைகள் என கோலாகலமாக இருந்தது. ஆனால் 73 டிசம்பருக்கும் 77 ஜனவரிக்கும் அரசியலில் பெரிய மாற்றம். அப்போது (73ல்) பெருந்தலைவர் உயிருடன் இருந்தார். ஸ்தாபன காங்கிரஸ்தான் தமிழ்நாட்டின் ஒரே காங்கிரஸ் என்ற துடிப்போடு செயல்பட்டு வந்தது. 1975 அக்டோபரில் தலைவர் மறைந்ததும், நிலைமை மாறிப்போனது. ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாகப்பிரிந்து, ஒரு அணி மகாதேவன்பிள்ளை தலைமையில் நடிகர்திலகம், மூப்பனார், மற்றும் சிவாஜி மன்றத்தினர் அனைவரும் இ.காங்கிரஸில் இணைந்தோம். இன்னொரு பிரிவினர் பா.ராமச்சந்திரன், குமரி அனந்தன் ஆகியோர் தலைமையில், அப்போது உதயமாகியிருந்த ஜனதா கட்சியில் இணைந்தனர். தமிழகத்தில் தி.மு.க.ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத்தலைவர் ஆட்சி ஓராண்டுக்கு மேல் நடைபெற்று வந்தது. நாடெங்கும் இந்திராவின் 'இருபது அம்சத்திட்டம்' பற்றிய பிரச்சாரம் வலுப்பெற்று வந்தது. நாடெங்கும் அமல்படுத்தப்பட்டிருந்த எமர்ஜென்ஸி, வடநாட்டில் எதிர்ப்பையும், தென்னாட்டில் வரவேற்பையும் பெற்றிருந்தது. இத்தகைய சூழ்நிலையில்தான் 'அவன் ஒரு சரித்திரம்' வெளியானது.
வடசென்னை ரசிகர்கள் புதிய உற்சாகத்துடன் ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரை அலங்கரித்திருந்தனர். ரசிகர்மன்றங்களின் பெரிய பெரிய பேனர்களும் சிறப்புத்தட்டிகளும், நாலாபுறமும் நடிகர்திலகத்தின் பல்வேறு வண்ணப்படங்கள் ஒட்டப்பட்ட ராட்சத ஸ்டார்களுமாக தியேட்டரே களைகட்டியிருந்தது. மிண்ட் பகுதியைச்சேர்ந்த 'கர்ணன் கணேசன் கலைமன்றத்தினர்' மூன்று அடுக்கு பந்தல் அமைத்திருக்க, ராயபுரம் 'மாடிப்பூங்கா' ரசிகர்மன்றத்தினர் நடிகர்திலகத்தின் சாதனைகளை விளக்கி, பல பக்கங்கள் அடங்கிய சிறப்புமலர் வெளியிட்டிருந்தனர் (விலை 1 ரூபாய்). இவைபோக வண்ணாரப்பேட்டை, மண்ணடி பகுதி ரசிகர்மன்றத்தினரும் தனித்தனி நோட்டீஸ்கள் அச்சடித்து விநியோகித்தனர்.
வழக்கமாக கிரௌனில்தான் இப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் அதிகமாக நடப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஸ்ரீகிருஷ்ணாவில் நடந்தது ஆச்சரியமாக இருந்தது. அதற்கு மூத்த ரசிகர் ஒருவர் சொன்ன காரணம், 'ஒருகாலத்துல பாவமன்னிப்பு, பாலும் பழமும், ஆலயமணி, புதிய பறவைன்னு கிருஷ்ணா நம்ம கோட்டையாகத்தான் இருந்தது. இடையில் நாம கிரௌன் பக்கம் போனதால் 'அவங்க' பிடிச்சிக்கிட்டாங்க. இப்போ மீண்டும் நாம பிடிக்கணும்னுதான் இந்த ஏற்பாடுகள்'’ அப்படீன்னார். யோசித்ததில் அவர் சொன்னதும் சரியாகத்தான் பட்டது. (இடைப்பட்ட காலத்தில் One in Thousand, Resided Temple, Slavery Girl, Our Country, Rickshawala என்று ‘அவர்’தான் பிடித்து வைத்திருந்தார்).
நீண்ட இடைவெளிக்குப்பின் காஞ்சனா நடித்திருக்கிறார், அத்துடன் மஞ்சுளா எட்டாவது படமாக ஜோடியாக நடித்திருக்கிறார் (இடையில் ஒன்பதாவது படமாக சத்யம் படத்தில் ஜோடியில்லாமலும் நடித்தார்). இரண்டு கதாநாயகிகள் என்பதால் யார் ஜோடி, அல்லது இருவருமே ஜோடியா என்பது போன்ற கேள்விகள் அங்கே உலா வந்தன. படம் வருவதற்கு முன்பே நான்கு பாடல்கள் வெளியாகி பிரபலமாகியிருந்தன. அவற்றில் 'வணக்கம் பலமுறை சொன்னேன்' பாடல் பயங்கர HIT . அடுத்து 'என் மனது ஒன்றுதான் உன்மீது ஞாபகம்' மற்றும் 'மாலையிட்டான் ஒரு மன்னன்' பாடல்களும் பிரபலமடைந்திருந்தன. 'நாளை என்ன நாளை.. இன்றுகூட நமதுதான்' பாடல் அங்கு நின்ற ரசிகர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டது.
'அது என்னப்பா, அந்தப்பாடலை இப்படி துவக்கியிருக்கார்?' என்று ஒருவர் கேட்க அதற்கு இன்னொருவர், 'தெரியலையா, அவருக்காக வாலி 'நாளை நமதே' அப்படீன்னு பாட்டு எழுதியிருக்காரே அதுக்குப் போட்டியா இவருக்காக கண்ணதாசன் 'நாளை என்ன நாளை... இன்றுகூட நமதுதான்' அப்படீன்னு எழுதியிருக்கார்'னு சொன்னதும் ரசிகர்கள் கைதட்டினார்கள். அந்தப்பாடல் காட்சி படத்தில் எப்படியிருக்குமென்று பார்க்க எல்லோருக்கும் ஆவலாக இருந்தது.
ஏற்கெனவே இடைவேளை முடிந்து, படம் துவங்கியபின் மெயின் கேட் திறந்துவிடப்பட்டு, காம்பவுண்டுக்குள்தான் இவ்வளவு பேச்சுக்களும் நடந்து வந்தன. கரண்ட் புக்கிங் கவுண்ட்டர்களுக்கு மக்கள் அனுமதிக்கப்பட்டு போலீஸ் உதவியுடன் வரிசை நீண்டிருந்தது. ரொம்ப நாளைக்குப்பிறகு கட்டுக்கடங்காத கூட்டத்தைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
மேட்னிஷோ முடிந்து மக்கள் வெளியே வரத்துவங்கினர். அவர்கள் வெளியே செல்ல வழிவிட்டு கூட்டம் ஒதுங்கிக்கொண்டதுடன், வந்தவர்களிடம் அபிப்பிராயம் கேட்டனர். பொதுமக்கள் அனைவருமே 'படம் நல்லாயிருக்கு' என்று சொல்லியவண்ணம் வெளியே செல்ல, படம் பார்த்த ரசிகர்கள் ஏற்கெனவே நின்றவர்களோடு கலந்து நின்று படம் பற்றி விலாவரியாகச் சொன்னார்கள். ஒருவர் 'மஞ்சுளாதான் ஜோடி, காஞ்சனா ஜோடியில்லை' என்றார். இன்னொருவர், 'என்மனது ஒன்றுதான் பாட்டு இல்லேப்பா. அதுக்கு பதிலா அம்மானை என்ற பாட்டை சேர்த்திருக்காங்க. அதுவும் நல்லாத்தான் இருக்கு' என்றார். இன்னும் சிலர், 'பெருந்தலைவருக்கு மாலை போட்டுவிட்டு தலைவர் ஊர்வலம் போற பாட்டு சூப்பர்பா' என்றார். தியேட்டருக்குள் பதினைந்து நிமிடங்களில் பாப்கார்ன் குப்பைகள் வாரப்பட்டு, மாலைக்காட்சிக்காக மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இம்முறை காங்கிரஸ் மகளிர் அணியினர் வாசலில் நின்று அனைவருக்கும் லட்டு வழங்கினார்கள்.
உள்ளே சென்று அமர்ந்தோம். படம் துவங்கும்வரை ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக, ஆர்வத்துடன் சற்று சத்தமாக உரையாடிக்கொண்டிருந்ததால் எங்கும் ஆரவாரமாக இருந்தது. நான் முதலில் குறிப்பிட்டது போல, 1977-ம் ஆண்டு 72-ஐத் திரும்பக்கொண்டுவந்துவிட்டது போலத்தோன்றியது. படம் துவங்கியதும் ஆரவாரம் அதிகரித்தது. ஒரு முடிவோடு வந்திருந்த ரசிகர்கள் அனைவரும் காட்சிக்கு காட்சி கைதட்டி மகிழ்ந்தனர். 'அம்மானை... அழகுமிகும் கண்மானை' பாடலை மிக அட்டகாசமாகத்துவக்கியிருந்தார் மெல்லிசை மன்னர். இதற்குமுன் வெளியில் கேட்டிராத பாட்டு. கட்டம்போட்ட சஃபாரி சூட்டில் நடிகர்திலகமும், சிக்கென பாவாடை தாவணியில் மஞ்சுளாவும் தோன்ற அழகாக வெளிப்புறப்படப்பிடிப்பாக படமாக்கியிருந்தார் கே.எஸ்.பிரகாஷ்ராவ். வான்புகழ்கொண்ட 'வசந்த மாளிகை'யை இயக்கியவராயிற்றே. டி.எம்.சௌந்தர்ராஜனின் கம்பீரக்குரலும், வாணிஜெயராமின் கனிவுக்குரலும் பாடலை எங்கோ உயரத்துக்கு இட்டுச்சென்றன.
டி.கே.பகவதி, மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வரலட்சுமி, வி.கே.ராமசாமி, எம்.பானுமதி ஆகியோர் மிக நிறைவாக நடித்திருந்தனர். ஸ்ரீகாந்தின் நடிப்பு படு அட்டகாசமாக அமைந்திருந்தது. தம்பியாக இருந்துகொண்டே வில்லனாகச்செயல்படும் காட்சிகளில் அருமையாகச் செய்திருந்தார். டென்னிஸ்கோர்ட்டில் உட்காரவைத்து நடிகர்திலகம் ஸ்ரீகாந்துக்கு அட்வைஸ் செய்யும் இடம், படத்தின் ஜீவக்காட்சிகளில் ஒன்று.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 'வணக்கம் பலமுறை சொன்னேன்' பாடல், கானக்குயில் சுசீலாவின் ஆலாபனையுடன் துவங்க, மாடிப்படியின் மேல்பகுதியில் சிவந்தமண் நாயகியைப்பார்த்ததும் ரசிகர்களின் கைதட்டல் அதிர வைத்தது. இப்பாடலில் நடிகர்திலகத்துக்கு அருமையான கருப்பு ஃபுல்சூட் உடையுடன் Hair Style -ம் அருமையாக இருக்கும். ஒரு கலெக்டருக்குரிய கண்ணியத்தோற்றம் அளித்தார். சற்றும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் பார்டருடன் கூடிய வெள்ளைப்புடவையணிந்த நடனமாதர்கள் பாடலில் பங்கேற்க ரசிகர்கள் உற்சாக வெள்ளம் கரை கடந்தது. நடிகர்திலகம் 'வண்ணத்திலகங்கள் ஒளிவீசும் முகங்கள்' என்ற சரணத்தைப்பாடியவாறு, காங்கிரஸ் புடவையணிந்த அந்த நடனமாதர்களின் முன்னால் ஸ்டைலாக நடந்துவரும்போது, ரசிகர்கள் ஆரவாரத்தில் தியேட்டரே ஒருவழியானது. நாங்கள் உணர்ச்சிவெள்ளத்தில் திக்குமுக்காடிப்போனோம். பின் வரிசையில் இருந்த நடுத்தர வயதைக் கடந்த ரசிகர் ஒருவர், 'சிவாஜி படத்துல இந்தமாதிரி ஆரவாரத்தைப்பார்த்து ரொம்ப நாளாச்சுப்பா' என்று சொல்லிக்கொண்டிருந்தார். உண்மைதான்.
அங்கங்கே நிறைய பொடியும், நெடியும் கலந்து எழுதப்பட்ட ஆரூர்தாஸின் வசனங்கள் ரசிகர்களாலும் மக்களாலும் புரிந்துகொள்ளப்பட்டு ரசிக்கப்பட்டன. கலெக்டர் பதவியை உதறித்தள்ளிவிட்டு பொதுவாழ்வில் இறங்கும் நடிகர்திலகம், பூங்காவிலிருக்கும் பெருந்தலைவர் சிலைக்கு மாலையணிவித்து ஊர்வலத்தைத் துவங்குவதாக அமைந்த பாடல் துவங்கியது......
வெள்ளை குர்தா, ஜிப்பா அணிந்து அதன்மேல் கட்டம் போட்ட கதர் ஷெர்வாணியும் அதன்மீது பேட்ஜும் அணிந்தவாறு பெருந்தலைவர் கர்மவீரர் சிலைமுன் இருக்கும் படிக்கட்டில் பெரிய மாலையுடன் ஏறும் நடிகர்திலகம்,
'நாளை என்ன நாளை... இன்றுகூட நமதுதான்
வேளை நல்ல வேளை.. விழுந்தவர்க்கு வாழ்வை
வழங்கவாரும் தோழரே'
என்ற முழங்கியவாறு சிலைக்கு மாலை அணிவிக்கும்போது கைதட்டல், விசில், காகித வீச்சு என கிருஷ்ணா தியேட்டரே ஆடிப்போனது. அதிலிருந்து பாடல் முடியும்வரை வரிக்கு வரி கைதட்டல்கள்தான். குறிப்பாக, 'ஞானத்தோடு வாழுவோம்.. நிதானத்தோடு வாழுவோம் மாபெரும்தலைவர் சொன்ன மானத்தோடு வாழுவோம்' என்ற வரிகளின்போது கூடுதல் ஆரவாரம். ஊர்வலத்தின் முன்வரிசையில் மஞ்சுளா, காஞ்சனா இருவரும் நடந்துவரும் காட்சியும் ரசிக்கப்பட்டது. படம் நிறைவுறும் தறுவாயில் நடிகர்திலகம் உரையாற்றும்போது, பாரதப்பெருந்தலைவி அன்னை இந்திரா அவர்களின் இருபது அம்சத்திட்டத்தை குறிப்பிட்டுப்பேசியபோதும், பெருந்தலைவரைப் புகழ்ந்து பேசியபோதும் கைதட்டல் விண்ணைப்பிளந்தது.
படம் முடிந்து வெளியே வரும்போது ரசிகர்கள் மத்தியில் ஒரே ஆரவாரம், 'அண்ணன் சிவாஜி வாழ்க', 'அன்னை இந்திரா வாழ்க' என்ற் கோஷங்கள் அவ்வழியே சாலையில் செல்வோரின் கவனத்தைத்திருப்பின. இன்னும் சில ரசிகர்கள் 'திரும்பியது எங்கள் பொற்காலம்' என்று கோஷமிட்டனர். அடுத்த காட்சிக்கு வரிசையில் நின்ற ரசிகர்களைப்பார்த்து, கட்டைவிரலை உயர்த்தி 'படம் சூப்பர்' என்று உற்சாகமளித்தனர். ஒரு பெரியவர் சொன்னது போல கிருஷ்ணாவைப்பிடித்து விட்டதாகவே தோன்றியது. அதுவரை பிடித்து வைத்திருந்தவர் மகாராணி பக்கம் ஒதுங்கினார். அதற்குப்பின் ‘அவரது’ நான்கு படங்கள் வெளிவந்தன. அனைத்தும் மகாராணியிலேயே. 'அவன் ஒரு சரித்திரம்' சென்னையிலேயே அதிகபட்சமாக ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில்தான் அதிக நாட்கள் ஓடியது. பக்கத்தில் கிரௌன் திரையரங்கில் 'தீபம்' வெளியாகி பட்டையைக்கிளப்பியபோதும், அது இப்படத்தின் ஓட்டத்தைப் பாதிக்கவில்லை.
நினைக்க நினைக்க திகட்டாத எண்ண அலைகள்..... வண்ண நினைவுகள்.......
Thank you Sir
அன்புள்ள பம்மலார் சார்,
ஒருபக்கம் பகுத்தறிவுவாதிகளின் பராசக்தி படத்திலிருந்து 'கா.... கா... கா....' பாடலையும், இன்னொரு பக்கம் ஆன்மீகம் சொட்டும் 'பச்சைமா மலபோல் மேனி' பாடலையும் வீடியோ வடிவில் தந்து, இரண்டு எல்லைகளையும் தொட்டவர் நம் நடிகர்திலகம் என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்கள். இரண்டு அருமையான பாடல்களையும் காட்சி வடிவில் காணச்செய்தமைக்கு மிக்க நன்றி.
அன்புள்ள பார்த்தசாரதி சார்,
தங்களின் 'கா கா கா' பாடலின் திறனாய்வுக்கட்டுரை மிக அருமை. வழக்கம்போல பாடலின் எல்லா அம்சங்களையும் தனித்தனியே அலசியிருக்கிறீர்கள். ஒவ்வொரு வரிக்கும் ஏற்ப அவருடைய முகபாவம் மாறுவதை சுட்டிக்காட்டியிருந்த விதம் அருமை. பாடலின் லொக்கேஷனைக்கூட (தண்ணீர்த்தொட்டி) நீங்கள் விட்டுவைக்கவில்லை. காலத்தால் அழியாத ஒரு பாடலைப்பற்றி காலத்துக்கும் நினைத்திருக்கிறாற்போன்ற ஒரு ஆய்வைத் தந்தமைக்கு மிக்க நன்றி.
அன்பு கார்த்திக் சார்,
தங்களுடைய கிருஷ்ணா தியேட்டர் நினைவுகள் அபாரம். இன்று நடந்தது போல் எழுதியுள்ளீர்கள். நம்மையும் அன்றைய தேதிக்கே அழைத்துச் சென்று விட்டீர்கள். ரசிகர்களின் கனவுப் படமாகிய இதைக் கெடுப்பதற்கென்றே ஒரு பிரகஸ்பதி முளைத்து வந்து, தன் பட விளம்பரத்தில் மாற்று முகாமினரையும் இழுத்து விட்டு ரசிகர்களிடையே தன் படம் தான் சென்றடைய வேண்டும் என்ற பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். அவ்வளவு எதிர்ப்பையும் தாண்டி இப்படம் வெற்றி பெற்றது மறக்க முடியாத உண்மை. வழக்கம் போல் சிலர் இதையும் தோல்வி என்று எழுதி தம்முடைய மேம்போக்கான விமர்சனங்களை மக்கள் மீது திணிக்க முற்பட்டதும் மறக்க முடிய வில்லை. அண்ணனும் தம்பியும் சேர்ந்து விட்டார்கள், இனிமேல் கொண்டாட்டம் தான் என்றெல்லாம் கூறப் பட்ட நாட்கள் அது.
மறக்க முடியுமா..
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,
தங்களுடைய பாராட்டுக்கு மேலான நன்றிகள்.
மோகனப் புன்னகை குறித்த தங்களது ஆதங்கம் உங்களது இதயத்தின் அடித்தளத்திலிருந்து வந்தது அப்பட்டமாகத் தெரிகிறது. இது தானே ஒவ்வொரு ரசிகனின் ஆதங்கமும். இது போல் பல படங்கள் - அந்த நாள், நீலவானம், நெஞ்சிருக்கும் வரை, தங்கைக்காக, துணை - என்று அது ஒரு பெரிய பட்டியல்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,
தங்களுடைய பாராட்டுக்கு மேலான நன்றிகள். கூடவே, காலஞ்சென்ற தங்களது தாயாரைப் பற்றியும் மற்ற சில விவரங்களையும், அந்தப் பாடலின் வீடியோ லிங்கையும் அளித்து உற்சாகப்படுத்தி விட்டீர்கள். மிக்க நன்றிகள்.
புதுச்சேரி, கடலூர், நெய்வேலி பகுதிகளில் இயற்கையின் கோரத் தாண்டவம் மற்றும், நமது நண்பர் திரு. வாசுதேவன் அவர்கள் புயலின் காரணமாக சந்தித்து வரும் இன்னல்கள் பற்றியும் உருக்கமாக எழுதியுள்ளீர்கள்.
உண்மையைச் சொல்லப்போனால், நேற்று நான் அந்த புயல் பாதித்த பகுதிகளில், நான் வேலை செய்து வரும் நிறுவனம் சார்பாக சென்றிருந்தேன் - புயல் நிவாரண வேலை சம்பந்தமாக. அப்போது தான் நிஜமாக நேரில் அந்த பேரிடர்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது "தானே" புயல். திருவண்டார் கோவில் மற்றும் திருபுவனை பகுதிகளில் மாலை ஆறரை மணியளவில் எங்கும் இருள் சூழ்ந்து, மக்கள் தவித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது நண்பர் திரு. வாசுதேவன் அவர்கள் நினைவுக்கு வர, அவருடன் போனிலாவது உரையாட முடியுமா என்று யோசித்தேன். (என்ன செய்வது அவருடைய நம்பர் இல்லையே, நம்பர் இல்லையே). இப்போது அவரது வீட்டில், மின்சாரம் வந்து விட்டது என்றெண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.
நாம் அனைவரும் புயல் பாதித்த பகுதிகளில் விரைந்து நிவாரணம் கிடைத்து, மக்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியளிக்கும் வண்ணம் இயல்பு வாழ்க்கை விரைவில் திரும்ப எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள பார்த்தசாரதி சார்,
தங்களின் 'கா கா கா' பாடலின் திறனாய்வுக்கட்டுரை மிக அருமை. வழக்கம்போல பாடலின் எல்லா அம்சங்களையும் தனித்தனியே அலசியிருக்கிறீர்கள். ஒவ்வொரு வரிக்கும் ஏற்ப அவருடைய முகபாவம் மாறுவதை சுட்டிக்காட்டியிருந்த விதம் அருமை. பாடலின் லொக்கேஷனைக்கூட (தண்ணீர்த்தொட்டி) நீங்கள் விட்டுவைக்கவில்லை. காலத்தால் அழியாத ஒரு பாடலைப்பற்றி காலத்துக்கும் நினைத்திருக்கிறாற்போன்ற ஒரு ஆய்வைத் தந்தமைக்கு மிக்க நன்றி.[/quote]
அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,
தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றிகள்.
"அவன் ஒரு சரித்திரம்" பட நினைவுகள் வழக்கம் போல், மிகவும் உணர்வு பூர்வமாகவும் சரளமாகவும் இருந்தது. குறிப்பாக, படம் எப்போது வரும் எப்போது வரும் என்கிற ஆவலை, ராஜா படத்தில் வரும் வசனக் காட்சியை வைத்து எழுதியது, அருமை - அதற்குக் கூட, நடிகர் திலகத்தின் பட வசனத்தை நினைவு கூறும் அளவுக்கு அவர் தங்களின் வாழ்வோடு ஒன்றி விட்டார். (ஏன் நம் எல்லோருடைய வாழ்விலும் தான்!).
ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Mr Karthick
Avan oru sarithram narration arumai-
neenga ellam annan padam release andru partha punniyavangal
Wish the situation in Kadalore, Neyveli improves and my prayers for the same.
டியர் கார்த்திக் சார்,
அவன் ஒரு சரித்திரம் நினைவலைகள் பிரமாதம், இதை படிக்கும் போது நாங்களும் அந்த காலகட்டத்துக்கே சென்றது போல் இருந்தது, நல்ல சரளமான நடை, அடுத்து தங்களின் தீபம் பட பதிவிற்காக காத்திருக்கின்றோம்.
மிக்க நன்றி!!!