Originally Posted by
jaisankar68
நல்ல நேரம்
மக்கள் திலகத்தின் மகத்தான படங்களில் ஒன்று. நவரசங்களிலும் நம்மவர் கலக்கிய படம். யானையுடன் கால்பந்து விளையாடும் காட்சி அருமை. அதன் பின்னர் கே.ஆர்.விஜயாவை பெண் கேட்கச் சென்று அசோகனுடன் கூடிய அந்தக் காட்சி நகைச்சுவை இழையோடும் அருமையான காட்சி. மீண்டும் மீண்டும் தண்ணீர் குடித்து விட்டு இனி குடிக்க முடியாது என்ற நிலையில் அவரது மாடுலேசனும் முகபாவங்களும் அமர்க்களம்.
ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்றவுடன் நாகேஷுடன் அவர் ஆடும் ஆட்டமும், பின்னர் இனி குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்றவுடன் காட்டும் வாட்டமும் உடனடியாக மனத்தைத் தேற்றிக் கொண்டு கும்பகோணம் அடுக்குப் பாத்திரம் போல பத்து குழந்தைகள் வேண்டுமா நல்முத்து போல ஒன்று போதாதா என்று கே.ஆர்.விஜயாவுக்கு ஆறுதல் கூறும் கட்டமும் உள்ளத்தை உருக்கக் கூடியது. என்றும் மனதை விட்டகலா காட்சிகள்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களுடன் வாழ்க்கைத் தத்துவங்களை பேசும் காட்சிகள் அருமையான வாழ்க்கைப் பாடங்கள். இந்தப் படத்திற்கு ஆர்.கே.சண்முகம் அவர்களது வசனங்கள் மிக அற்புதம். மருத்துவமனையில் கே.ஆர்.விஜயா யானையால் தாக்கப்பட்ட ஒரு குழந்தையைப் பார்த்து மனநிலை பாதிக்கப்பட்டு தன் குழந்தைக்கும் அது போல் ஆபத்து வருமோ எனப் பயந்து கதறும் கட்டங்களில் மக்கள் திலகம் பேசக்கூடிய வசனங்கள் சிந்தனையைத் தூண்டக்கூடியவை மட்டுமல்ல. ஒரு அருமையான வழக்கறிஞரின் வாதத்திற்கு ஒப்பானவை. மனைவியின் கட்டாயத்திற்காக தன்னை வாழ வைத்த யானையின் காலை சங்கிலியால் பிணைக்கும் போது கதறுவது மக்கள் திலகம் மட்டுமல்ல. படம் பார்க்கும் மக்களும் தான். சங்கிலியை அறுத்து கொண்டு குழந்தையைக் காப்பாற்றப் போய் வீண் பழி சுமத்தப்பட்ட யானையிடம் மனக்குமுறலுடன் நீ ஏன் அங்கே போனாய் என்று கேட்டு அடிக்கும் காட்சியில் தான் அதன் மீது கொண்ட நம்பிகைக்கையையும், அதே சமயத்தில் கே.ஆர்.விஜயாவின் சந்தேகத்திற்கு இடமளித்து விட்டதற்காக ஏற்படும் கோபத்தையும் அழகாக வெளிப்படுத்தியிருப்பார். மற்ற படங்களைப் போலவே இந்தப் படத்திலும் மக்கள் திலகம் நடிக்க வில்லை. வாழ்ந்திருப்பார். நுணுக்கமான நடிப்புத் திறமை அவரது தனிச்சிறப்பு. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத மக்கள் திலகத்தின் படங்களுள் இதுவும் ஒன்று.