இந்த நேரத்தில் ஒரு பக்கம் திராவிட இயக்கம் மிக வேகமாக மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. அவர்களுடைய பகுத்தறிவுப் பிரச்சாரம் மக்களிடையே வேகமாக ஆழமாக வேரூன்றத் தொடங்கிய காலம். இன்னொரு பக்கம் அவர் சார்ந்த அரசியல் இயக்கமோ இது பற்றி சற்றும் கவலைப் படாமல் மக்களிடம் உருவாகத் தொடங்கிய மனமாற்றத்தைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் இருந்த நேரம். இதனால் ஆன்மீக வாதிகள் கவலை கொள்ளத் தொடங்கினர். திரு ஏபி.என். அவர்கள் நான் பெற்ற செல்வம் படத்தில் வைத்த திருவிளையாடல் நக்கீரன் தருமி சிவன் காட்சி சில ஆன்மீக வாதிகளால் ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளப் பட்டு அதனடிப்படையிலேயே ஒரு தெய்வீக படத்தை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதில் திரு ம.பொ.சி. அவர்களின் பங்கும் இருந்தது என்றும் ஒரு கருத்து அப்போது இருந்ததாக நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.