Originally Posted by
vasudevan31355
ராஜேஷ் சார்,
பொதுவாகவே நகைச்சுவைப் பாடலகள் என்றால் பார்க்கும் போது எனக்கு அவ்வளவாக சிரிப்பு வராது. நகைச்சுவை நடிகர்களின் கொனஷ்டை கூத்துக்கள், கிச்சு கிச்சுக்கள், தாவுவது, குதிப்பது, விழுவது என்று ஆக்ஷனில் செய்யும் காமெடி எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. சிரிப்பே வராது. நகைச்சுவை நையாண்டி வசனங்களில் கொஞ்சம் பிரியம் அதிகம்.
எத்தனையோ நகைச்சுவைப் பாடல்கள். நாகேஷ், சந்திரபாபு, கருணாநிதி, மனோரமா, முத்துலஷ்மி நடித்தவை என்று. ஓஹோ காமெடி மூவீஸ் என்று புகழடைந்த தேன் கிண்ணம், தேன் மழை, நினைவில் நின்றவள் என்று பல படங்களில் நகைச்சுவை பாடல்கள் வந்தாலும் ரசிப்பேனே ஒழிய வாய்விட்டு சிரித்ததில்லை.
நேற்று மதியப் பணி முடித்து விட்டு இரவு வீட்டிற்கு வந்ததும் நீங்கள் பதித்திருந்த
'பழக்கமில்லாத கழுதைகிட்ட கொஞ்சம் பார்த்து கறக்கனும் பால'
'ஆரவல்லி' படப் பாடலைப் பார்த்தேன். நான் டிவியில் சில சமயங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் அவ்வளவு டீப்பாக பார்த்ததில்லை.
'சரி ராஜேஷ் தினம் அருமையான பாடல்களைத் தருவாரே! என்ன இன்றைக்கு இந்தப் பாடலைப் போய்த் தந்திருக்கிறாரே' என்று ஒரு கணம் நினைத்தேன்.
சரியென்று காபி சாப்பிட்டுக் கொண்டே பாடலைப் பார்க்க ஆரம்பித்தேன்.
சார்! ஏற்கனவே பார்த்திருந்தாலும் நிஜமாகவே சொல்கிறேன் இந்தப் பாடல் என் வயிற்றைப் பதம் பார்த்து விட்டது சார். குடித்த காபியெல்லாம் புரையேறி வெளியே வந்து விட்டது. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது சார்.
என்ன ஒரு காமெடி! ஆனந்தன், பக்கிரிசாமி, சட்டாம்பிள்ளை, சிவசூரியன், கே.கே.சௌந்தர் என்று!
பக்கிரிசாமியிடமெல்லாம் அசாத்திய திறமைகள். உள்ளுக்குள் உதைபடுவோம் என்ற உதறலோடு அக்கம் பக்கம் பார்த்து பார்த்து பாடுவார். ஆனால் இவரெல்லாம் ஏன் ஜொலிக்காமல் போனார்? நடிகர் திலகம் இவருக்கு நிறைய சான்ஸ் கொடுப்பார்.
ஆரவல்லி ஆட்சியின் ஆண்களின் மீதான பெண்களின் அடக்குமுறையை எவ்வளவு கேலியாக ஜாடை, மாடை இரட்டை அர்த்த வரிகளில் இப்பாடல் சித்தரிக்கிறது! கழுதையை திட்டுவது போல பெண் வீரிகளை (!) இடித்துரைக்கும் பாடல் படு ஜாலியாக.
அதுவும் நடித்த நடிகர்கள், எவரும் பிரமாதமான கொடி நாட்டிய நடிகர்கள் எல்லாம் இல்லை. சாதாரண நகைச்சுவை நடிகர்கள்தாம். ஆனால் முக பாவனைகள் அனைவரிடத்திலும் 'பட்பட்' சட்சட்டென்று மாறி மாறி விழுந்து நகைச்சுவைக் கொப்பளிக்கிறது. அங்கும் இங்கும் வலதும் இடதுமாகப் பார்த்து பயந்தபடியே கழுதையை விமர்சிப்பது போல 'ஆரவல்லி' அரக்கிகளை விமர்சிக்கும் புத்திசாலித்தனமான நிஜ நகைச்சுவை கேலிப்பாட்டு
கண்களில் தண்ணீரே வந்து விட்டது சார்.
'பாக்க இந்தக் கழுத பகட்டா தெரியுது பாலு மட்டும் இருக்காது'
என்று கழுதையிடம் பால் கறக்கும் போது கிராஸ் செய்யும் பெண்ணை நைசாக நக்கலடிக்கும் ஆனந்தன், பக்கிரிசாமி.
பக்கிரிசாமி பால் கறக்கும் போது ஒரு பெரிய குண்டம்மா சாட்டையால் அவரை அடிக்க
'ஏழெட்டு குட்டிகள போட்ட பிறகும் ஒரு எல்லையில நிக்காது இந்தக் கழுத'
இன்னா ஒரு நக்கல் நையாண்டி!அந்த குண்டம்மா ஏழெட்டுக் குழந்தைகள் பெற்றது போல இருப்பதை கழுதையை சொல்வது போல பக்கிரி கேலியாக கலாய்க்கும் போது என்னால் சிரிப்பை அடக்க முடியலை ராஜேஷ் சார்.
அப்புறம் அந்தப் பெண்மணி போனதுக்கப்புறம்
'இது எந்தப் பக்கம் இருந்தோ வந்த கழுத'
என்று போடும் போடை என்ன சொல்லி சிரிப்பது?
அதுவும் பாடிய பாடகர்கள் வேறு தனியாகக் கொடி நாட்டுகிறார்கள்.
பிறகுதான் புரிந்தது ராஜேஷ் ஏன் இந்தப் பாடலைப் போட்டிருக்கிறார் என்று.
ரசித்து ரசித்து சிரித்து சிரித்து அனுபவித்தேன் சார்.
உங்களுக்கும், உங்கள் ரசனைக்கும் மிக்க நன்றி ராஜேஷ் சார்.
இது போல உங்களிடம் தினம் தினம் எதிர்பார்க்கிறேன்.
என்னையே சிரிக்க வைத்து விட்டீ(டா) ர்களே!