நான் சுவாசிக்கும் சிவாஜி! (10) - ஒய்.ஜி. மகேந்திரா!
பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013,00:00 IST
எங்களது, 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' நாடகத்தின், நூறாவது நாள் விழாவிற்கு, சிவாஜி தலைமை வகித்தார். அந்த நாடகத்தில், சேஷப்பா என்கிற சவடால் பேர்வழியாக, ஏ.ஆர்.எஸ்., நடித்திருப்பார். அதில் வரும் நகைச்சுவை, சிவாஜிக்கு ரொம்ப பிடிக்கும். எங்கள் இருவரையும் பார்க்கும் போதெல்லாம், 'டேய், அந்த ரிகார்டு ஜோக்கை, ஒரு தரம் சொல்லேன்...' என்று கேட்பார்.
அந்த, தமாசு இது தான்:
ஒரு பாகவதர், ஏ.ஆர்.எஸ்.,சிடம் (சேஷப்பா), கோவில் திருவிழாவில் பாடுவதற்கு சான்ஸ் கேட்பார்.
'இல்ல. நாங்க ரிகார்டு வைக்கப் போறோம்...'
'ரிகார்டு வைக்கிற இடத்தில், என்னை வைக்க கூடாதா?' என்று, பாகவதர் கேட்பார்.
'சீ...சீ அந்த இடத்தில உன்னை வைச்சா ஊசி கிழிச்சிடும்...'
சிவாஜிக்கு, ஒரு தனிச் சிறப்பு உண்டு. 'மாஸ்' என அழைக்கப்படும், எளிய ரசிகர்களும் சரி, 'கிளாஸ்' என்று கூறப்படும், மேல்தட்டு ரசிகர்களும் சரி, இந்த இரு வகையினரையும், அவரால், முழுமையாக கவர முடியும்.
சிவாஜி காலமான பின், 'பாரத் கலாச்சார்' அமைப்பு வெளியிட்ட, 2001ம் ஆண்டு மலரில், நான் குறிப்பிட்டது, நினைவுக்கு வருகிறது, 'பார்வதி தேவி, சிவாஜியை, கைலாயத்தில் பார்த்து, சிவபெருமானே வந்து விட்டார் என்று நினைப்பதாகவும், அந்த காட்சியை பரமசிவனே ரசிப்பது போலவும்' குறிப்பிட்டிருந்தேன்.
உண்மை தான். தேச பக்தர்களை, பாரதம் போற்றும் தலைவர்களை, எந்த அளவு அவர் நமக்கு அறிமுகம் செய்திருக்கிறாரோ, அந்த அளவு, புராண பாத்திரங்களில் சிவனாக, பெருமாளாக, நாரதராக இன்னும் எத்தனையோ சிவனடியராக, பெருமாள் பக்தராக நடித்து, நம்மை அசத்தி இருக்கிறார்.
இதே போல், சமுதாயத் தில் உயர் மட்டத்தில் இருக் கும் பல பாத்திரங்களை அவர் செய்திருப்பதால், உயர் மட்டத்தில் இருப் போருக்கும் அவரை பிடிக்கும். மும்பையில் நான் கண்கூடாக பார்த்த, சுவையான அனுபவத்தை, இங்கு குறிப்பிடுகிறேன்.
மும்பையில் உள்ள, ஷண்முகானந்தா சபா, அனைவரும் அறிந்த ஒன்று. நிறைய இருக்கைகள் கொண்ட, பெரிய அரங்கு. நாடகம் போட வரும் கலைஞர்களுக்கு, அங்கேயே தங்கிக் கொள்ளவும் வசதி உண்டு. ஷண்முகானந்தா ஹாலை உருவாக்கி, பம்பாய் நகர மக்களுக்கு அர்ப்பணித்தவர் ஒரு பிரபல தமிழர்.
அந்த அரங்கில், எங்கள், யு.ஏ.ஏ., குழுவின் நாடக விழா நடந்து கொண்டிருந்தது. அங்கு, பொதுவாக நாடகங்கள் இரவு, 8:00 மணிக்கு ஆரம்பமாகும். இந்நிலையில், எங்கள் அறையில், நாங்கள் இருந்த போது, ஒரு வட மாநில சிறுவன் வந்து, 'கோன் ஒய்.ஜி.,?' (யார் ஒய்.ஜி.,) என்று கேட்டான்.
'நான் தான்...' என்றேன்.
'கோயி சிவாஜி கணேசன் புலாதா ஹை...' (யாரோ சிவாஜி கணேசனாம்... டெலிபோனில் அழைக்கிறார்) என்றான்.
சிவாஜியிடமிருந்து போன் என்றதும், ஆடிப் போய் விட்டேன். யாரோ கிண்டல் செய்கின்றனர் என்று தான், முதலில் நினைத்தேன். தயக்கத்துடன் போனை எடுத்தால், கம்பீரமான குரலில், 'என்னடா பண்றே பம்பாயிலே...' என் றார் சிவாஜி.
'சார் நீங்களா...' என்றேன் தயக்கத்துடன்
'நீ, எங்கே போனாலும் மடக்கிட்டேன் பார்த்தாயா... இந்தியன் எக்ஸ்பிரஸ் ரங்க நாதன், இன்னிக்கு, உன் டிராமா இருக்குன்னு சொன்னான்...' என்றவர், கிண்டலாக, 'சென்னையில ஆடியன்சை கெடுத்தது போதாது என்று, பம்பாயிலும் கெடுக்க போயிட்டீயா...சரி டிராமா எட்டு மணிக்கு தானே... நான் லீலா பேலஸ்லிலே இருக்கேன். வந்து பார்த்துட்டு போ.... தனியாக வராதே. சோட்டாவையும் கூட அழைத்து வா...' என்றார். சோட்டா என்று, அவர் குறிப்பிட்டது, எங்கள் குழுவின் காமெடி நடிகர் சுப்புணியை. அவர் கொஞ்சம் குள்ளமாக இருப்பார்.
சிவாஜி கூப்பிட்டு இருக்கிறாரே என்று, அரக்க பரக்க சுப்புணி, நான், மற்றும் எங்க மானேஜர் கண்ணன் போன்றோர் ஆட்டோ பிடித்துக் கிளம்பினோம்.
ஏழு நட்சத்திர ஓட்டலின் பெரிய பிரமாண்டமான அறையில், (அப்போது அதுதான் பெரிய ஸ்டார் ஓட்டல்) சிம்மாசனம் போன்ற சோபாவில், சிவாஜி உட்கார்ந்திருந்தார்; அருகே, மற்றொரு இருக்கையில், கமலாம்மா. சிவாஜி உட்கார்ந்திருந்த சோபாவுக்கு அருகே, தரையில், கார்ப்பெட்டில், நன்றாக உடை அணிந்திருந்த ஒரு நபர் உட்கார்ந்திருந்தார். 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ரங்கநாதனை தெரியுமென்பதால், அவருக்கு வணக்கம் சொன்னேன். அருகே இருந்த சோபாவில், எங்களை உட்கார சொன்னார் சிவாஜி.
தரையில் கார்ப்பெட்டில் அமர்ந்திருப்பவரை காட்டி, 'இவர் யார் தெரியுமா?' என்று, கேட்டார் சிவாஜி.
'தெரியலையே சார். உங்க ரசிகரோ...' என்று, கேட்டேன்.
'ரசிகர் தான். ஆனால், அதை விட, முக்கியமானது, இவர் தான் இந்த லீலா பேலஸ் ஓட்டலுக்கு, சொந்தக்காரர்...' என்றார்.
ஏழு நட்சத்திர ஓட்டல் அதிபர், தரையில் அமர்ந்திருக்க, நாங்கள் சோபாவில் அமர்ந்திருப்பது சங்கடத்தை ஏற்படுத்த, நானும், சுப்புணியும் எழுந்து நின்றோம். நான் ஓட்டல் உரிமையாளரான நாயரைப் பார்த்து, 'சோபாவிலே வந்து உட்காருங்க...' என்றேன்.
மலையாளம் கலந்த தமிழில், 'எனக்கு இந்த இடம் போதும். ஞான் சாரிண்ட பரம ரசிகனானு. கட்டபொம்மன் படம் எத்தர டயம் நோக்கிட்ட உண்டு...' என்றதும், எனக்கு பேச்சே வரவில்லை.
எங்கள் நாடக குழுவில், சிவாஜிக்கு மிகவும் பிடித்த நடிகர் சுப்புணி தான். டிராமா பார்க்க வருவதற்கு முன், 'அவன், இந்த டிராமாவிலே இருக்கானா?' என்று தான், முதலில் கேட்பார்.
என் மகள் மதுவந்தியின் திருமணத்திற்கு, சிவாஜி வந்த போது சுப்புணியும், நானும் அவரை வரவேற்றோம். அப்போது நாங்கள், 'டிவி'யில் செய்து கொண்டிருந்த, 'மிஸ்டர் ட்ரெயின் மிஸ்டர் ப்ரெயின்' தொடரில், சுப்புணி வில்லனாக நடித்திருப்பார். சிவாஜி அந்த, 'டிவி' தொடரை சுட்டிக் காட்டி, 'சுப்புணி... வில்லனாக, வக்கீல் பாத்திரத்தில் நன்றாக செய்திருக்கேடா...' என்றார். சுப்புணிக்கு சந்தோஷப்படுவதா, நெகிழ்வதா தெரியவில்லை. அடுத்து, உடனே, சிவாஜி தனக்கே உரித்தான பாணியில்,
'டேய் சுப்புணி... இப்படி ஒரு வக்கீல் ரோல், நீ பண்ணப் போறேன்னு தெரிந்திருந்தால், கவுரவம் படத்தில், பாரிஸ்டர் ரஜனிகாந்த் ரோலை, நான் பண்ணியிருக்க மாட்டேன்...' என்றார்.
அனைவரும் சிரித்தோம்; சிவாஜியும் சிரித்தார்.
பாராட்டுவதற்கு ஒரு மனம் வேண்டும்; அது சிவாஜியிடம் தாராளமாக இருந்தது.
மிகவும் அதிகமான இசைக்கருவிகள் வைத்து, புதியபறவை படத்திற்காக, எம்.எஸ்.விஸ்வநாதன் ரிகார்டிங் செய்த பாடல், 'எங்கே நிம்மதி...'
அறுபதுக்கும் மேற்பட்ட வயலின்களை, இசைக் கலைஞர்கள் வாசித்தனர். ரிக்கார்டிங் தியேட்டரில் அனைவருக்கும் இடம் இல்லாமல், தியேட்டருக்கு வெளியே பிரத்யேக இடம் அமைத்து, அதில், பல இசைக்கலைஞர்களை உட்கார வைத்து ரிகார்டிங் நடத்தினர்.
அதேபோல, மிகவும் குறைந்த அளவு இசைக்கருவிகள் வைத்து, அதாவது, மொத்தமே மூன்று தான். புல்லாங்குழல், தபலா, எபெக்ட் தரும் கருவி ஆகிய மூன்றை மட்டும் வைத்து, ரிகார்டிங் செய்யப்பட்ட பாடல். 'தாழையாம்பூ முடிச்சு'...' என்ற பாடல். பாகப் பிரிவினை படத்தில் இடம் பெற்ற இப்பாடலை பாடுவதற்கு, ரிகார்டிங் தியேட்டருக்கு வந்த டி.எம்.சவுந்திரராஜன், இசைக்கருவிகள் அதிகம் இல்லாமல் இருந்ததை பார்த்து, 'இன்னிக்கு ரிகார்டிங் இல்லையா?' என்று கேட்டார். மொத்தமே, மூன்று இசைக்ருவிகள் தான் என்று அவருக்கு விளக்கிய போது, ஆச்சரியப்பட்டார். மிகவும் அதிகமான கலைஞர்கள் பங்கெடுத்த, 'எங்கே நிம்மதி' பாடலும், மிகக் குறைந்த இசைக்கருவிகள் உபயோகப்படுத்தப்பட்ட, 'தாழயாம் பூ முடிச்சு' பாடலும், சூப்பர் ஹிட் பாடல்கள்.
சிவாஜியின் சிறந்த நடிப்பால், எம்.எஸ்.வி.,யின் சிறந்த இசையால், டி.எம்.சவுந்திரராஜனின் கம்பீர குரலால், இன்றும் அந்த பாடல்கள் நம் மனதில் நிற்கின்றன.
- தொடரும்.
எஸ்.ரஜத்
dinamalar