-
9th December 2013, 04:11 PM
#11
உண்மை உணரும் நேரம் - 2
இன்றைய காலக்கட்டத்தில் தமிழகத்தின் அரசியல் வரலாறாக இருந்தாலும் சரி திரையுலக வரலாறாக இருந்தாலும் சரி, அதைப் பற்றிய உண்மை தகவல்கள் யாருமே எழுதுவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அந்தக் காலகட்டத்தைப் பற்றிய சரியான தகவல்கள் பெரும்பாலோனோருக்கு தெரியாது எனபது ஒன்று. சரியான தகவல்கள் தெரிந்த மிக குறைவான சிலரும் சில தனிப்பட்ட லாப நோக்கங்களுக்காகாவோ அல்லது சுய விருப்பு வெறுப்பின் அடிப்படையிலோதான் அதை எழுதுகிறார்கள். நமது நடிகர் திலகத்தை பொறுத்தவரை மிக தவறான தகவல்கள்தான் பெரும்பான்மையாக எழுதப்படுகிறது. ஆகவே பழைய விஷயங்களைப் பற்றி பேசும்போது நமக்கு உண்மை நிலவரங்கள் மற்றவர்கள் மூலம் கிடைப்பதில்லை.
சில மாதங்களுக்கு முன் நமது ஹப்பிலேயே நடிகர் திலகம் பற்றிய ஒரு பதிவு வெளியாகியிருந்தது. ஒரு புத்தகத்தில் வெளியாகியிருக்கும் தகவல் என குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள். விஷயம் என்னவென்றால் நடிகர் திலகம் தன் பிறந்த நாளை திருச்சியில் கொண்டாடப் போவதாக செய்தி வந்ததாம். சிவாஜி படங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் கோபத்துடன் இருந்த எம்.ஆர்.ராதா அவர்கள் இதை படித்தவுடன் மிகுந்த ஆத்திரமுற்று இதற்கு எதிராக அறிக்கை விடப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தாராம். இதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் உடனே ராதாவின் தனிப்பட்ட ஒப்பனையாளர் கஜபதி அவர்களை அழைத்து அப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என்று தான் சொன்னதாக ராதாவிடம் சொல்ல சொன்னாராம். அப்போது எம்.ஜி.ஆருக்கும் ராதாவிற்கும் நல்லுறவு இருந்த காரணத்தினால் ராதா திருச்சி விழாவை தாக்கி விட இருந்த அறிக்கையை வெளியிடவில்லையாம்.
நான் பல வருடங்களாக பல முறை கவனித்து வந்திருக்கும் நிகழ்வு என்னவென்றால் பழைய வரலாற்றை எழுதும் பலரும் உண்மை நிலவரம் தெரியாமல் எழுதுவதால், எழுதப்படும் விஷயம் சரியா? லாஜிக் இருக்கிறதா? காலப் பிரமாணம் என்று சொல்வார்களே அதன்படி நாம் எழுதும் விஷயம் ஒத்துப் போகிறதா என்றெல்லாம் யோசிக்காமல் எழுதி விடுகிறார்கள். சிலர் தங்கள் அபிமானத்துக்குரியவரை புகழ்ந்து எழுத வேண்டும் என்பதற்காக தவறான தகவல்களை அள்ளி விடுவார்கள்.
நாம் இனி மேற்சொன்ன விஷயத்திற்கு வருவோம். அதில் உள்ள லாஜிக் ஓட்டைகள், கால பிரமாண ஓட்டைகளை பார்ப்போம்.
சிவாஜி படங்களில் ராதாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை இதை முதலில் எடுத்துக் கொள்வோம்.
எம்.ஆர்.ராதா அவர்கள் 1930-களின் இறுதியில் திரையுலகில் நுழைந்தார். சின்ன சின்ன வேடங்களே கிடைத்தால் மீண்டும் நாடக மேடைக்கே திரும்பி சென்ற அவர் மீண்டும் 1954-ல் ரத்தக்கண்ணீர் திரைப்படம் மூலமாக மீண்டும் திரையுலகிற்கு வந்தார். அதன் பிறகும் சில வருடங்கள் தேக்க நிலை. 1958-ல் வெளியான APN-ன் நல்ல இடத்து சம்பந்தம் படத்தின் மூலமாக ஒரு நிலையான இடத்தை பிடித்தார். 1959-ல் முதன் முறையாக நடிகர் திலகத்துடன் பாகப்பிரிவினை திரைப்படத்தில் இணைந்து நடித்தார். அன்றிலிருந்து அதாவது பாகப்பிரிவினை வெளியான 1959-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி முதல் 1965-ம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று வெளியான சாந்தி திரைப்படம் வரை ஏராளமான சிவாஜி படங்களில் நடித்தார். சொல்லப்போனால் அவரது திரையுலக வாழ்க்கையிலே மறக்க முடியாத பல கதாபாத்திரங்கள் அவருக்கு நடிகர் திலகத்தின் படங்கள் மூலமாகவே கிடைத்தன. பாகப்பிரிவினை,பாவ மன்னிப்பு, பலே பாண்டியா, இருவர் உள்ளம், புதிய பறவை என்று சொல்லிக் கொண்டே போகலாம். இனி 1965 ஏப்ரல் 22-க்கு பிறகு 1967 ஜனவரி 12-ந் தேதி வரை நடிகர் திலகம் நடித்து வெளி வந்த படங்கள் என்னவென்று பார்ப்போம்.
திருவிளையாடல் - 31-07-1965
நீல வானம் - 10-12-1965
மோட்டார் சுந்தரம் பிள்ளை - 26-01-1966
மகாகவி காளிதாஸ் - 19-08-1966
சரஸ்வதி சபதம் - 03-09-1966
செல்வம் - 11-11-1966
கந்தன் கருணை - 14-01-1967
நான் ஏன் 1967 ஜனவரி 12 வரை குறிப்பிட்டேன் என்பது அனைவருக்கும் புரியும். இந்தப் பட்டியலில் இருக்கும் படங்கள் 7. அவற்றில் மூன்று புராணப் படங்கள். அந்தக் காலத்தில் இந்த திராவிட புலிகள் தங்கள் கொள்கைப்படி புராணப் படங்களில் நடிப்பதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆகவே திருவிளையாடல், சரஸ்வதி சபதம் மற்றும் கந்தன் கருணை படங்கள ruled out.[ஆனால் இந்த திராவிட புலி பசித்த போது KSG யின் தசாவதாரம் என்ற புராணப்பட புல்லை 1976-ல் தின்றது]. மீதி நான்கில் காளிதாஸ் படமும் mythology வகையில் படும் என்பது மட்டுமல்ல அதில் ராதாவிற்கு ஏற்ற வேடம் இருந்ததா என்பதை பார்த்தவர்களே சொல்லலாம். பாக்கி மூன்று சமூக படங்கள். நீலவானம், மோட்டார் சுந்தரம் பிள்ளை மற்றும் செல்வம். இந்த மூன்றிலும் கூட ராதா அவர்கள் நடிக்கும்படியான வேடம் ஏதும் இல்லை என்பதுதானே உண்மை.
1967 ஜனவரி 12-ந் தேதி நடைபெற்ற அசம்பாவிதத்திற்கு பிறகு ராதா மருதுவமனையிலும் பின்னர் சிறைசாலையிலும் காலத்தை கழித்தார். ஒரு வாததிற்காக எடுத்துக் கொண்டால் கூட அதன் பின் வந்த நெஞ்சிருக்கும் வரை, பேசும் தெய்வம், தங்கை மற்றும் பாலாடை போன்ற படங்களில் இடம் பெற்ற கதாபாத்திரங்களை பரிசீலனை செய்தோம் என்றால் ராதாவிற்கேற்ற ரோல் இல்லை எனபது விளங்கும். உண்மை நிலைமை இப்படி இருக்க ராதாவிற்கு வாய்ப்பு கொடுப்பதை நடிகர் திலகம் தடுத்தார் எனபதே அபத்தமான குற்றசாட்டு எனபது தெளிவாகும். தான் நடித்த கட்டபொம்மன் படத்திற்கு போட்டியாக அதே சரித்திரத்தை வேறு படமாக எடுத்து கட்டபொம்மன் வெளியான திரையரங்குகளில் தான் சார்ந்திருந்த கட்சியினரை விட்டு குழப்பம் விளைவித்து கட்டபொம்மன் படத்தின் வெற்றியை தடுக்க நினைத்து தலை குப்புற விழுந்து தோல்வியை தழுவிய எஸ்.எஸ்.ராஜேந்திரனை கூட மன்னித்து தன படங்களில் வாய்ப்பு கொடுத்த "தெய்வப்பிறவி" சிவாஜியை யாரும் மறந்து விடவில்லை.நடிகர் திலகத்தை கடுமையாக விமர்சித்து எழுதியவரும் சிவகங்கை சீமை படத்தை தயாரித்தவருமான கண்ணதாசனும் சிவாஜியால் மீண்டும் வாய்ப்பு பெற்றார். மாற்று முகாமிலிருந்த போது சிவாஜியை பல முறை திரையிலும் பேட்டிகளிலும் கிண்டலும் கேலியும் செய்த தேங்காய் அவரது கடைசி பத்து வருட வாழ்க்கையில் ராஜ வாழ்க்கை வாழ்ந்தது நடிகர் திலகத்தினால்தான். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இரண்டாவது அபத்தம் சிவாஜியின் பிறந்த நாள் விழா திருச்சியில் நடப்பதாக இருந்தது என்ற தகவல். வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரியும் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாக்கள் நடைபெற ஆரம்பித்ததே 1970 அக்டோபர் 1-ந் தேதியிலிருந்துதான். அதிலும் திருச்சியில் பிறந்த நாள் விழா நடைபெற்றதேயில்லை. அங்கே நடைபெற்றது நடிகர் திலகத்தின் 150-வது படமான சவாலே சமாளி வெளியான போது 1971 ஜூலை 10,11 தேதிகளில் 150-வது பட விழா கொண்டாடப்பட்டது.
அப்போது எம்.ஆர். ராதா எங்கே இருந்தார்? அந்த வரலாற்று குறிப்புக்கு வருவோம்.
1967 ஜனவரி 12-ந் தேதி நடந்த நிகழ்ச்சிக்காக ராதா மீது வழக்கு தொடரப்பட்டு வழக்கின் இறுதியில் அவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. செஷன்ஸ் கோர்ட்டில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார் ராதா. அங்கும் அது உறுதி செய்யப்படவே உச்சநீதி மன்றத்தை அணுகினார் ராதா. அந்த மேல் முறையீட்டில் அவரது தண்டனை 5 வருட காலமாக குறைக்கப்பட்டது. அதன்படி அவர் 1972-ம் ஆண்டு விடுதலையாக வேண்டும். ஆனால் 1971-ம் ஆண்டு மே மாதத்தில் நன்னடத்தை(?) காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டார் என்று அன்றைய திமுக அரசாங்கம் அறிவித்தது.
கோபாலபுரத்தாரின் இந்த நடவடிக்கை ராமாவரத்தாருக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. பின்னாளில் 1972-ம் ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட பிளவிற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது இங்கிருந்துதான். அந்த அரசியலுக்குள் நாம் நுழைய வேண்டாம். இதை இங்கே குறிப்பிட காரணமே எம்ஜிஆர் அவர்களுக்கும் எம்ஆர்ராதா அவர்களுக்கும் நல்லுறவு இல்லாமல் இருந்த காலம் என்பதை தெளிவுப்படுத்தவே.
மூன்றாவது அபத்தம் அல்லது உச்சக்கட்ட காமெடி என்னவென்றால் எம்ஜிஆர் அவர்கள் சொன்னதாக எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள். சிவாஜி வளர்ந்து வரும் நடிகர். அவர் தன்னை மேலும் வளர்த்துக் கொள்ள இது போன்ற விழாக்களை நடத்துக்கிறார்.அதை எதிர்த்தோ விமர்சித்தோ ஒன்றும் சொல்ல வேண்டாம் என்றாராம். தமிழில் முதல் பேசும் படம் வெளியான 1931-ல் தொடங்கி அன்றைய 1971 ஜூலை வரை 40 வருட காலத்தில் எந்த நடிகனாலும் செய்ய முடியாத சாதனையாக முதல் படத்திலிருந்தே 150 படங்கள் வரை நாயகனாக நடித்து வெற்றி வெற்றி மேல் பெற்றுக் கொண்டிருந்த நடிகர் திலகம் வளர்ந்து வரும் நடிகராம். எப்படி இருக்கிறது அளப்பு?
நான் சிவாஜி ரசிகன்தான். ஆனாலும் நடிகர் திலகத்தைப் பற்றி எம்ஜிஆர் அவர்கள் இப்படி சொல்லியிருக்கவே மாட்டார் என்பதுதான் என் கணிப்பு. அந்தளவிற்கு எதார்த்தம் தெரியாதவர் அல்ல அவர். அது மட்டுமல்லாமல் அவர் அப்படி சொல்வதற்கு வாய்ப்பில்லை என்று நான் நினைக்க லாஜிக்கான காரணமும் இருக்கிறது.
எம்.ஆர். ராதா, சிவாஜி விழாவை எதிர்த்து அறிக்கை வெளியிடுக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். அதனால் என்ன நடக்கும்? ஆஹா ராதா சொல்லி விட்டார் ஆகவே விழா நடைபெற வேண்டாம் என்று மக்கள் முடிவெடுத்திருப்பார்களா? இல்லை ரசிகர்கள் திருச்சிக்கு போகாமல் இருந்திருப்பார்களா? ஊர்வலம் நடக்காமல் இருந்து விடுமா? மேடையில் நடிகர் திலகம் தோன்றாமல் இருந்து விடுவாரா? இல்லை மாநாட்டில் பங்கெடுத்த அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட கலைஞர்கள் வராமல் இருந்திருக்கப் போகிறார்களா? இப்படி எதுவுமே நிற்காது என்பதை மற்றவர்களை விட நன்றாக தெரிந்த எம்ஜிஆர் எப்படி இப்படி ஒரு வாதத்தை முன்வைப்பார்?
1965 முதல் 1971 வரை மேற்சொன்ன விஷயங்கள் நடைபெற்றதை கோர்வையாக படிப்பவர்களுக்கு இந்த செய்தி எவ்வளவு பெரிய புருடா என்பது புரியும். விஷயம் இத்துடன் முடியவில்லை. இது ஒரு புத்தகத்தில் வந்திருக்கிறது என்று சொன்னாலும் கூட இதை சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு தினமலர் வாரமலர் இதழில் எழுதியவர் எஸ்.விஜயன். முகாம் மாறி சென்ற விஜயன். இதழ் வெளியான அன்றே இதை படித்துவிட்டு ராதாரவி அவர்கள் விஜயனை தொடர்பு கொண்டு ஏன் இப்படி பொய்யான தகவல்களையெல்லாம் எழுதுகிறீர்கள் என கண்டிக்க, இதை எதிர்பார்க்காத விஜயன் நான் எழுதவில்லை. வாரமலர் ஆசிரியர் குழுதான் இதை இப்படி மாற்றி போட்டு விட்டார்கள் என்று சொல்ல, ராதாரவி உடனே வாரமலரை தொடர்பு கொண்டு கேட்க அவர்கள் நாங்கள் எதுவும் மாற்றவில்லை. விஜயன் எழுதியதைத்தான் பிரசுரித்திருக்கிறோம் என்று உண்மையை உடைத்து சொல்லி விட்டார்கள். ராதாரவி மீண்டும் விஜயனை கூப்பிட்டு சத்தம் போட்டிருக்கிறார். இவர் இப்படி எழுதியதோடு மட்டுமல்லாமல் தங்கள் மீதும் பழி போட்டதை சீரியஸாக எடுத்துக் கொண்ட வார மலர் அதன் பிறகு விஜயனிடமிருந்து கட்டுரைகள் வாங்குவதை நிறுத்தி விட்டது. வருடத்தில் மூன்று நான்கு முறை சிவாஜி பிறந்த நாள், நினைவு நாள், எம்ஜிஆர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் தவறாமல் வாரமலரில் வந்துக் கொண்டிருந்த விஜயனின் கட்டுரை கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக வராமல் இருப்பதன் காரணம் இதுதான்.
இப்படி எந்த விதத்தில் பார்த்தாலும் 1965-67 காலகட்டத்திலும் சரி,1971 காலகட்டத்திலும் சரி லாஜிக் மற்றும் வரலாற்றின் chronological order அடிப்படையில் பார்த்தாலும் சரி அபத்தமான இந்த பொய் செய்தியை இது சரியான தகவலா? நடந்தவற்றைதான் இந்த புத்தகத்தில் எழுதியிருகிறார்களா என்பது பற்றியெல்லாம் சற்றும் யோசிக்காமல் ஒருவர் இங்கே பதிவு செய்கிறார் என்றால் அதற்கு காரணம் எனக்கு தெரிந்தவரை ஒன்றே ஒன்றுதான் இருக்க முடியும். நமக்கு பிடித்தவரை பற்றி தூக்கி எழுதப்பட்டிருக்கிறது. நமக்கு பிடிக்காதவரைப் பற்றி தாக்கி எழுதப்பட்டிருக்கிறது. உடனே copy paste பண்ணி பதிவிடு என்ற எண்ணம்தான் அது.
யார் இதைப் பற்றியெல்லாம் கேட்கப் போகிறார்கள்? அப்படியே கேட்டாலும் நானாகவா எழுதினேன், இந்த புத்தகத்தில் வந்திருக்கிறது. அதைத்தான் குறிப்பிட்டேன் என்று சொல்லி எளிதாக தப்பிக்கலாம் என்ற எண்ணம். மிக மிக வேதனையான போக்கு.
ஆனால் உண்மைகளை எப்போதும் எல்லா காலத்திலும் மறைக்க முடியாது அவை ஒரு நாள் வெளிவந்தே தீரும் என்பதுதான் அடிப்படை சித்தாந்தம். அதை புரிந்துக் கொண்டால் இப்படி வரலாற்றுப் பிழையான பதிவுகள் வராது.
அன்புடன்
Last edited by Murali Srinivas; 9th December 2013 at 04:18 PM.
-
9th December 2013 04:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks