குறும்படம் நிறைவுற்றபிறகு, சதாகர் தனது நண்பரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயணச் சீட்டிற்கு ஏற்பாடு செய்தார். இரவு 10.30 மணிக்குப் புறப்படும் மலைக் கோட்டை விரைவு வண்டியில் நால்வருக்கும் படுக்கை வசதியுடன் கூடிய இருக்கைகள் கிடைத்தன. இரவுதான் புறப்பட வேண்டும், இன்னும் பல மணி நேரமிருக்கிறது, எங்கு செல்லலாம் என்ற பேச்சு வந்தபொழுது, சுதாகர் உடனே கூறினார், எம்.ஜி.ஆர், அவர்களின் நினைவு இல்லம் இதே தி.நகரில்தான் இருக்கிறது அங்கு செல்வோம்.
தியாகராய நகர், ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். எம்.ஜி.ஆர் அலுவலகம் இருந்த வீடு இது. இக்குறுகிய தெருவிலா எம்.ஜி.ஆர், அவர்களின் அலுவலகம் இருந்தது? நம்புவதற்குச் சிறிது கடினமாகத்தான் இருக்கிறது.
வீட்டின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை எங்களை வரவேற்றது. வீட்டின் வலது புறம், வீட்டின் சுற்றுச் சுவரை ஒட்டி, ஒரு அழகிய சிறிய மண்டபத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் மார்பளவு சிலை, எங்களைப் பார்த்து புன்முறுவல் பூக்கிறது.
வீட்டினுள் நுழைகிறோம். TMX 4777 என்ற எண்ணுள்ள எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பச்சை நிற அம்பாசிடர் கார், கூடத்தின் நடுவே கம்பீரமாய் தலை நிமிர்ந்து நிற்கிறது. எத்துனையோ வெளிநாட்டுக் கார்கள், இந்திய மண்ணில் தடம் பதித்த பிறகும், கடைசி வரை எம்.ஜி.ஆர் பயன்படுத்தியது இந்த அம்பாசிடர் காரைத்தான்.
அறை முழுக்க எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள், கேடயங்கள் நிரம்பி வழிந்தன. மெதுவாக மாடிப் படியேறினோம். மாடியில் விசாலமான அறையின் நடுவே எம்.ஜி.ஆர் பயன்படுத்திய உடற்பயிற்சி சாதனங்கள். மரத்தினால் ஆன கரலாக்கட்டை என்னும் உடற்பயிற்சிக் கருவிகள் ஐந்து இருந்தன.அவற்றின் உயரத்தினையும், பருமனையும் பார்த்தால் இரண்டு கைகளால் தூக்குவதற்கே கடினமாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் ஒரே கையால் தூக்கி தலையைச் சுற்றி சுற்றி பயிற்சி செய்ய வேண்டிய உடற்பயிற்சி சாதனமாகும் அது. எம்.ஜி.ஆர் அவர்களின் கரம் எவ்வளவு வலுவானதாக இருந்திருக்கும் என்பது கரலாக் கட்டையை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது. எம்.ஜி.ஆர் அணிந்த உடைகள், தொப்பி, கண்ணாடி, கடிகாரம் முதலிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அறையின் ஒரு ஓரத்தில் ஆறடி உயர கண்ணாடிப் பெட்டியில் கம்பீரமாய் ஒரு சிங்கம். என்ன சிங்கமா?, ஆம் சிங்கம்தான். எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்கும், இந்த சிங்கத்திற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுகிறதல்லவா? கேள்வி எழுவது இயற்கைதான். இது எம்.ஜி.ஆர் வளர்த்த சிங்கம்.
வீட்டில் நாய் வளர்ப்பார்கள், ஆடு, மாடு, கோழி வளர்ப்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் வளர்த்ததோ சிங்கங்கள். ஒன்றல்ல இரண்டு சிங்கக் குட்டிகளை எம்.ஜி.ஆர் வளர்த்தார். சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடில் வசித்தபோதும், பின்னர் ராமாவரத் தோட்டத்தில் வசித்தபோதும் வளர்த்தார். ராஜா, ராணி என்று இரண்டு சிங்கங்கள். வீட்டிலேயே கூண்டு இருக்கும். அதை கவனிக்க ஆட்கள் இருப்பார்கள். இவ்விரு சிங்கங்களையும் எம்.ஜி.ஆர் மிகவும் பாசமாக வளர்த்தார். சில சமயம் இச்சிங்கங்கள் எம்.ஜி.ஆரின் கையை நக்கிக் கொடுக்கும்.
அடிமைப் பெண் திரைப்படத்தில் நடித்தது இந்த ராஜா என்கிற சிங்கம்தான். ராணி அதற்கு முன்னரே இறந்து விட்டது. அடிமைப் பெண்ணில் சிங்கம் தொடர்பான காட்சிகளை படமாக்கி முடித்ததும், சென்னை மிருகக் காட்சி சாலைக்கு இந்த சிங்கத்தை நன்கொடையாக வழங்கினார் எம்.ஜி.ஆர். அங்கு பல ஆண்டுகள் காலத்தை கழித்த ராஜா,வயது முதிர்வின் காரணமாக இறந்தபின், தகுந்த அனுமதியோடு, ராஜாவின் உடலைப் பெற்று, அச்சிங்கம் உயிரோடு இருப்பது போலவே பாடம் செய்து, ராமாவரம் தோட்ட வீட்டில் வைத்திருந்தார் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு நினைவு இல்லத்திற்கு இச்சிங்கம் மாற்றப்பட்டது.
அருகில் இருந்த மற்றோர் அறைக்குச் சென்றோம். புத்தகங்கள் நிரம்பியிருந்தன. ஒரு நாற்காலியில் மாவுக்கட்டு. 1967 ஆம் ஆண்டு நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டதை நாடறியும். அப்போது கழுத்தில் பாய்ந்த குண்டு அறுவைசி கிச்சையின் மூலம் அகற்ற பட்டபோது, எம்.ஜி.ஆருக்கு கழுத்தில் மாவுக் கட்ட போட்டார்கள் அல்லவா, அந்த மாவுக்கட்டு இன்றளவும் பத்திரமாய் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த மாவுக்கட்டு. வியப்புடன் அந்த மாவுக்கட்டையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அடுத்த அறை எம்.ஜி.ஆர் பார்வையாளர்களைச் சந்திக்கும் அறை. மூலையில் ஒரு தொலைக் காட்சிப் பெட்டி. அதற்கு அடுத்த அறை எம்.ஜி.ஆர் அவர்களின் அலுவலக அறையாகும்.
மீண்டும் தரைத்தளத்திற்கு வந்தோம். மாடிப் படியினை ஒட்டி இருந்த அறைக்குள் நுழைந்தோம். எம்.ஜி.ஆர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து, 1972 இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கியபோது, அ.தி.மு.க வில் இணைந்த முதல் பன்னிரண்டு பேர் கையொப்பமிட்ட உறுப்பினர் படிவம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
அடுத்த அறையில் எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் பெயர் பட்டியலும், ஒவ்வொரு படத்தில் இருந்து, ஒரு புகைப்படமும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. முதல் படம் சதிலீலாவதி, நடித்த ஆண்டு 1935. எம்.ஜி.ஆர் நடித்த கடைசி படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். ஆண்டு 1978. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் திரையிடப்பட்ட 1978 ஆம் ஆண்டு முதல் 1987 இல் அமரத்துவம் எய்தும் வரை எம்.ஜி.ஆர் அவர்களே தமிழக முதல்வர்.
எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு இல்லத்தில் நுழைந்த நிமிடத்தில் இருந்தே, கரந்தையும் தமிழ்ப் பல்கலைக் கழகமும் என் மனக் கண்ணில் மாறி மாறி சுழன்று கொண்டேயிருந்தன. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவராய் முப்பதாண்டுகள் ஒப்பிலாப் பணியாற்றிய உமாமகேசுவரனாரின் உணர்வுக்கு உயிர் கொடுத்தவரல்லவா எம்.ஜி.ஆர்.
உமாமகேசுவரனார் அவர்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் என்ன தொடர்பு என்ற குழப்பம் வரலாம். உண்மையில் உமாமகேசுவரனாரின் மிகப் பெரிய கனவுகளில் ஒன்றினை நிறைவேற்றிய பெருமைக்கு உரியவர் எம்.ஜி.ஆர்.
தமிழ் மொழிக்கு எனத் தனியே ஓர் தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று 1921 ஆம் ஆண்டிலேயே, முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றியவர் உமாமகேசுவரனார் அவர்களாவார். சரியாக 60 அண்டுகள் கழித்து, 1981 இல் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவி, உமாமகேசுவரனாரின் கனவினை நிறைவேற்றியவர் எம்.ஜி.ஆர்.
உமாமகேசுவரனார் கூட, தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் திருச்சியில் நிறுவிட வேண்டும் என்றுதான் தீர்மானம் இயற்றினார். ஆனால் உமாமகேசுவரனார் வாழ்ந்த தஞ்சையிலேயே, தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் எம்.ஜி.ஆர். அதுமட்டுமா, தமிழ்ப் பல்கலைக் கழகப் பேரவைக்கு, கரந்தைத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்து அனுப்பும் உரிமையினையும் வழங்கிய வள்ளல் அல்லவா.
எம்.ஜி.ஆர் அவர்களின் வள்ளல் தன்மையினையும், பெருந்தன்மையினையும் நாடே அறியும். தமிழுக்காக ஒர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை உருவாக்கியதோடு, அப்பல்கலைக் கழகத்திற்கு இடம் ஒதுக்கிய நிகழ்விலும், தான் வள்ளல்தான் என்பதை நிரூபித்தவர் எம்.ஜி.ஆர்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தஞ்சையில் நிறுவுவது என்று முடிவு செய்த அன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு எம்.ஜி,ஆர் அவர்கள், அப்பணி தொடர்பாக தமிழறிஞர்களின் கூட்டம் ஒன்றினை கூட்டினார். தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு எவ்வளவு இடம் தேவை? என தமிழறிஞர்களிடம் வினவினார். ஒரு தமிழறிஞர் தயங்கியவாறே 50 ஏக்கர் ஒதுக்கினால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். மற்றொருவார் 100 ஏக்கர் ஒதுக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கூறினார். எம்.ஜி.ஆர் புன்னகைத்தார். தமிழுக்கு என்று ஒரு பல்கலைக் கழகத்தைத் தனியே அமைக்கவிருக்கின்றோம். இப்பல்கலைக் கழகம் சீரும் சிறப்புமாகச் செயல்பட வேண்டும். எனவே இப் பல்கலைக் கழகத்திற்கு 1000 ஏக்கர் இடத்தினை ஒதுக்குகிறேன் என்று கூறி தமிழறிஞர்களை வியப்பில் ஆழ்த்தினார். கூறியபடியே 1000 ஏக்கர் நிலத்தைனை ஒதுக்கி தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய பெருந்தகை எம்.ஜி.ஆர்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்தை எண்ணியவுடன் வேறொரு நினையும், நெஞ்சில் முள்ளாய் தைக்கத் தொடங்கியது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தொழில் நுட்ப வசதியில்லாத காலத்தில், தஞ்சைப் பெரிய கோவில் என்னும் அதிஅற்புத சாதனையினை நிகழ்த்திக் காட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சிலைக்கு, எப்படி பெரிய கோவிலின் உள்ளே இடம் கிடைக்கவில்லையோ, அதைப் போலவே, தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய, எம்.ஜி.ஆர் அவர்களின் புகைப்படத்திற்கு, தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்திற்குள், ஓர் சிறிய இடம் கூட கிடைக்காமற் போனதுதான் கொடுமையிலும் கொடுமை.
தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப் பெற்று இருபது ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில், 2004 ஆம் ஆண்டில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தமிழ்ப் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த புலவர் மீனா.இராமதாசு அவர்கள், எம்.ஜி.ஆர் அவர்களின் புகைப்படத்தினை, தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மாட்ட வேண்டும் என்ற தீர்மானத்தினையே கொண்டு வந்தார். தீர்மானம் நிறைவேறியது. ஆனால் புகைப்படம் மாட்டப்பெற்றதா என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆர் அவர்களின் படம் மாட்டப்பெற்றிருக்குமானால் மகிழ்வுடன் வாழ்த்தி வரவேற்போம்.
நூறு முறையாவது சென்னைக்குச் சென்றிருப்போம். ஆனால் இதுவரை எந்தவொரு சென்னைப் பயணத்திலும் கிடைக்காத ஓர் நிறைவினை, மகிழ்வினை இப்பயணத்தில் உணர முடிந்தது.
நண்பர் சுதாகர் அவர்களுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.
courtesy - karanthai jaikumar.