Originally Posted by
Murali Srinivas
உண்மை உணரும் நேரம் - 3 (Part II)
சரி இது கூட ஒரு புத்தகத்தில் வந்தது. அதை எடுத்து பதிவிட்டோம் என்று சொல்லலாம். அதே பதிவில் வேறொரு அபத்தமும் (அல்லது காமெடி என்று கூட சொல்லலாம்) எழுதப்பட்டிருகிறது. என்னவென்றால் பெருந்தலைவரின் சாதனைகளை பற்றி நாம் குறிப்பிட்டோம். அது ஒன்றும் பெரிய சாதனை இல்லை என்று நிலைநாட்ட ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். அதை படித்தவுடன் அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியவில்லை. அப்படி என்ன எழுதியிருந்தார்கள்?
காமராஜ் பிரதமர்களை உருவாக்கும் வல்லமை பெற்று King maker ஆக திகழ்ந்ததால் மத்திய அரசில் செல்வாக்கு பெற்றிருந்த அவர் அதை பயன்படுத்தி தன்னுடைய ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு வேண்டிய திட்டங்களைப் எளிதாக பெற முடிந்தது என்று எழுதியிருந்தார்கள். எந்தளவுக்கு இவர்களை போன்றவர்களுக்கு தமிழக மற்றும் இந்திய அரசியல் வரலாறு தெரியும் என்பதற்கு இது ஒரு சான்று. நாம் உண்மை வரலாற்றை திரும்பி பார்ப்போம்.
பெருந்தலைவர் தமிழக முதல்வராக பணியாற்றிய காலம் 1954 ஏப்ரல் 13 முதல் 1963 அக்டோபர் 2 வரை. நான் இங்கு ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன். அதை மீண்டும் சொல்கிறேன். இந்திய சுதந்திரம் பெற்று 66 வருடங்களாகின்றன. இத்தனை வருட காலகட்டத்தில் தமிழகத்தில் 5 வருடங்கள் முழுமையாக ஆட்சி செய்து தேர்தலை சந்தித்து மீண்டும் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஒரே மனிதன் பெருந்தலைவர் மட்டுமே. அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவரை எவராலும் அவரை வெல்ல முடியவில்லை. கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், தானே கொண்டு வந்த K Plan என்ற திட்டத்தின் கீழ் முதல்வர் பதவியை விட்டு விலகி கட்சிப் பணிக்கு சென்றார்.
ஆட்சித் தலைவர் பதவியை விட்டு விலகிய அவருக்கு கட்சித் தலைவர் பதவி தேடி வந்தது. ஆம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பெருந்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் சிறப்புற அவர் செயலாற்றிக் கொண்டிருக்கும் போதுதான் துயர்மிகு 1964 மே மாதம் 27-ந் தேதி வந்தது. எவருமே எதிர்பார்க்காத வகையில் ஆசிய ஜோதி பண்டிட் ஜவஹர்லால் நேரு இயற்கை எய்தினார். அடுத்த பிரதமர் யார் என்பதைப் பற்றிய சிந்தனை கூட இல்லாமல் இருந்த பொது மக்களுக்கும் சரி காங்கிரஸ் கட்சியினருக்கும் சரி இது ஒரு பெரிய சவாலாக தோன்றியது. ஆனால் அந்த படிக்காத மேதை தன் கூர் மதியால் லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக தேர்ந்தெடுத்தார். சாஸ்திரியின் உருவத்தை பார்த்து இவரா என்று கேலி பேசியவர்களை சாஸ்திரி தன் திறமையினால் வாயடைக்க செய்தார். விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து அவர் மேற்கொண்ட முயற்சிகளும் அந்த விவசாயிகளை நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு இணையாக முன்னிறுத்தி ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற அவர் முழக்கமும் நல்ல பலனை தந்தன. வலிமை குறைந்த தலைவன் என தப்புக் கணக்கு போட்டு கராச்சியை தலைநகராக கொண்ட சிந்து மாகாண எல்லையில் அமைந்துள்ளதும் நமது குஜராத் மாநில எல்லையில் அமைந்துள்ளதுமான கட்ச் என்ற சதுப்பு நிலம் வழியாகவும் பஞ்சாப் வாகா எல்லைப்புறம் வழியாகவும் நம்மை 1965 செப்டம்பரில் தாக்கி ஆக்ரமிக்க நினைத்த பாகிஸ்தான் படையெடுப்பையும் வெற்றிகரமாக தடுத்து அந்தப் படைகளை ஓட ஓட விரட்டி வீர சாதனை புரிந்தார்.
இவ்வகையில் சாஸ்திரி திறம்பட ஆட்சி செய்துக் கொண்டிருந்த போது இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூண்டதனால் ஏற்பட்ட பதற்ற நிலையை அகற்றி இரு நாடுகளுக்கிடையே ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பட அன்றைய ரஷ்ய அதிபர் கோஸிஜன் முயற்சி எடுத்து ரஷ்ய நாட்டில் அமைந்துள்ள தாஷ்கண்ட் நகரில் இந்திய பிரதமர் சாஸ்திரி அவர்களையும் அன்றைய பாகிஸ்தான் அதிபர் அயுப்கான் அவர்களையும் சந்திக்க வைத்தார். 1966 ஜனவரி 10-ந் தேதி அன்று நடைபெற்ற இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பின் முடிவில் தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தானது. எதிர்பாராத விதமாக அன்று இரவு (மறுநாள் அதிகாலை) சாஸ்திரி மரணம் அடைந்தார். சந்தேகத்திற்கிடமான முறையில் அவர் இறப்பு இன்றும் பார்க்கப்படுகிறது.
நேருவின் மறைவுக்கு பின் சாஸ்திரியின் மறைவும் இந்திய அரசியலில் ஒரு வெற்றிடத்தை தோற்றுவித்த போது மீண்டும் பிரதமரை தேர்ந்தெடுக்கும் சுமை பெருந்தலைவர் தலையில் விழுந்தது. இம்முறை அவரே பிரதமர் ஆக வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. ஆனால் என்றுமே பதவியை துச்சமாக மதித்த பெருந்தலைவர் அந்த வாய்ப்பை மறுத்தார். அன்றைய சூழலில் நாட்டிற்கு தேவை ஒரு வலிமையான மனஉறுதி படைத்த தலைமை என்பதை உணர்ந்த பெருந்தலைவர் நேருவின் மகளும் சாஸ்திரியின் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிப்பரப்பு துறை அமைச்சராக [Minister of Information & Broadcasting] பணியாற்றிக் கொண்டிருந்த இந்திரா காந்தி அம்மையார் அவர்களை பிரதமராக தேர்ந்தெடுத்து பதவி ஏற்க வைத்தார். 1966 ஜனவரி 24 அன்று இந்திரா அம்மையார் பாரதப் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இப்படி நமது தேசத்தில் இரண்டு முறை தலைமை பொறுப்பில் ஒரு வெற்றிடம் ஏற்பட்ட போது அந்த சூழலை தன மதியூகத்தினால் திறம்பட சமாளித்து நமது நாட்டிற்கு அன்றைய சூழலில் திறமைமிக்க பிரதமர்களை தேர்ந்தெடுத்துக் கொடுத்ததால் பெருந்தலைவர் கிங் மேக்கர் [King Maker] என்று அழைக்கப்பட்டார். இதுதான் வரலாற்று உண்மை. அதாவது அவருக்கு அந்தப் பட்டம் கிடைத்ததே 1966 ஜனவரிக்கு பிறகுதான்.
நாம் குறிப்பிட்டு சொன்ன பதிவில் என்ன எழுதியிருக்கிறார்கள்? பெருந்தலைவர் கிங் மேக்கர் என்று மத்திய அரசில் செல்வாக்கு பெற்று விளங்கியதால் அதன் காரணமாக அவர் தமிழக முதல்வராக இருந்த போது தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு அனுமதித்தது என்று எழுதியிருக்கிறார்கள். பெருந்தலைவர் தமிழக முதல்வராக பதவி வகித்த காலம் 1954 ஏப்ரல் 14 முதல் 1963 அக்டோபர் 2 வரை. அவர் கிங் மேக்கர் என்று புகழ் பெறுவது 1966 ஜனவரியில். அதாவது தமிழக முதல்வர் பதவியிலிருந்து விலகி இரண்டரை வருடங்களுக்கு பிறகு [சுமார் 28 மாதங்களுக்கு பிறகு]. உண்மை இப்படியிருக்க அவர் எப்படி பின்னாட்களில் வந்த இந்த செல்வாக்கை வைத்து அவர் முன்னாட்களில் முதல்வராக இருக்கும்போது மத்திய அரசிடமிருந்து திட்டங்களை வாங்கியிருக்க முடியம்?
நாம் முன்பே சொன்னது போல் அன்று முதல் இன்று வரை தங்களின் நோக்கத்தை நியாயப்படுத்தும் வண்ணம் தவறான தகவல்களை பரப்பி வரும் இந்த செய்கை நிற்காமல் தொடர்கிறது. காமராஜ் ஒரு தமிழக தலைவர், தமிழக முதல்வராக இருந்தார். கிங் மேக்கர் என்று அவருக்கு கிடைத்திருந்த செல்வாக்கை வைத்து அவர் முதல்வராக இருக்கும்போது திட்டங்களை மத்திய அரசிடமிருந்து பெற்று தந்தார் என்று ஒரு மாணவன் கட்டுரை எழுதினால் புரிந்துக் கொள்ளலாம். இதையே முதிர்ந்தவர்கள் எழுதுவது வேதனையானது.
என்ன செய்வது? 1979 செப்டம்பரில் அதிகாரப்பூர்வமாக்கப்பட்ட சீர்திருத்த தமிழ் 1965 பிப்ரவரி 10-ந் தேதி வெளியான தமிழ் நாளேட்டில் 100-வது நாள் திரைப்பட விளம்பரத்திலேயே வரும் அதிசயத்தையும் இப்போதும் நமது மய்யம் இணையதளத்திலேயே பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? உருவாக்கப்பட்ட விளம்பரங்கள் இனி இடம் பெறாது என்று அருமை நண்பர் வினோத் போன்றவர்களெல்லாம் உறுதி அளித்தும் கூட "சென்னை" பிளாசா என்ற விளம்பரமெல்லாம் இப்போதும் வரத்தானே செய்கிறது!
நாம்தான் ஒவ்வொரு முறையும் உண்மையை உரக்க சொல்ல வேண்டும்!
அன்புடன்