அன்புள்ள வாசுதேவன் சார்,
முதலில் பிடியுங்கள் பாராட்டுக்களை.. என்ன ஒரு அட்டகாசமான ஸ்டண்ட் காட்சி. இதற்காகத்தான் தாங்கள் சண்டைக்காட்சிகள் சீரியலைத் துவக்கியபோதே, 'தங்கச்சுரங்கம் ஓட்டல் அறை சண்டைக்காட்சியை மறாவாமல் வையுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தேன். (நான் கேட்காவிட்டாலும் நீங்கள் மறக்க மாட்டீர்கள் என்பது தெரியும்). ஆனால் அதை எனக்கே டெடிகேட் செய்த தங்கள் அன்பினைப்பார்த்து சிலிர்த்துப்போனேன். இரண்டு ஸ்டண்ட்மென்களின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தொங்கும்போது டூப் இல்லாமல் தானே செய்திருக்கும் அழகு. அடி ஒவ்வொன்றும் இடியாக இறங்கும் வேகம். எதைச்சொல்வது எதைவிடுவது..?.
கடைசியில் நீங்கள் குறிப்பிட்ட சிகரெட் பற்ற வைக்கும் ஸ்டைலைப்பற்றி ஒரு விஷயம். தங்கச்சுரங்கம் வெளியானதிலிருந்து இயன்றவரை எப்போது எங்கே மறுவெளியீடு ஆனாலும் பார்த்துவிடுவதி வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்போது வீடியோ எல்லாம் ஏது?. அப்படி ஒருமுறை ஒட்டேரி சரவணா தியேட்டரில் மறுவெளியீட்டில் பார்த்துக் கொண்டிருக்கும்போது, நம் ரசிகர் அல்லாத ஒருவர் அந்த சிகரெட் பற்றவைக்கும் ஸ்டைலைப்பார்த்து விட்டு, 'அட, இவர் அப்பவே இதெல்லாம் செஞ்சுட்டாருப்பா. இதைப்பார்த்துதால் நம்ம ஆள் காப்பியடிச்சிருப்பார் போலிருக்கு' என்று தன்னையும் அறியாமல் உண்மையை வெளியிட்டார். கேட்டுக்கொண்டிருந்த எனக்குப் பெருமையாக இருந்தது.
'தங்கை' படத்திலேயே நடிகர்திலகத்தின் படங்களில் சண்டைக்காட்சிகள் இடம்பெறுவது துவங்கியபோதிலும், இடையில் 68-ல் வெளியான கலாட்டா கல்யாணம், லட்சுமி கல்யாணம், உய்ர்ந்த மனிதன் படங்களில் சண்டைக்காட்சிகள் இல்லாமல், அப்படி இருந்தாலும் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லாமல் இருந்த நேரத்தில் 'தங்கச்சுரங்கம்' மற்றும் 'திருடன்' படங்களில்தான் மீண்டும் அதிவேக சண்டைக்காட்சிகள் இடம்பெற்றன. பின்னர் இது தொடர்ந்தது. இரண்டு படங்களுக்குமே திருவாரூர் தாஸ் அவர்கள்தான் சண்டைப்பயிற்சியாளர். 'திருடனில், திருடிய குழந்தையைத் திருப்பிக்கேட்குமிடத்தில் நடக்கும் சண்டை அதியற்புதம். இதில் திருவாரூர் தாஸ் அவர்களே நடிகர்திலகத்துடன் சண்டை போடுவார். அதேபோல ஓடும் ரயிலின் கூரைமீது நடக்கும் சண்டையும்.
ஒரு சங்கடமான விஷயத்தையும் இங்கே சொல்ல வேண்டும். இடையில் 'சிவந்த மண்' படத்துக்கு மாற்று முகாம் ஸ்டண்ட் மாஸ்ட்டரை ஸ்ரீதர் ஒப்பந்தம் செய்ய, அவரு வரும்போதே எவ்வளவு சொதப்ப முடியுமோ அவ்வளவு சொதப்பும்படியாக துர்ப்போதனை செய்யப்பட்டு இங்கே அனுப்பப் பட்டார். அவரும் அதை செவ்வனே செய்து தன் விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார். அதனால்தான் விமானத்தில் தேங்காயுடன் போடும் சண்டையும் சரி, தனக்கு துரோகம் செய்த செஞ்சிகிருஷ்ணனுடன் செயற்கை ஆற்றோரத்திலும் ஆற்றுக்குள்ளேயும் நடக்கும் சண்டையும் சரி, கிளைமாக்ஸில் நம்பியாருடன் நடக்கும் பலூன் சண்டைக்காட்சியும் சரி சுவாரஸ்யமில்லாமல் போனது. சிறையிலிருந்து தப்பிக்கும்போது நடக்கும் சண்டைக்காட்சி மட்டுமே சற்று ஆறுதலாக இருந்தது.
அருமையான 'தங்கச்சுரங்கம்' சண்டைக்காட்சியை பதிவிட்டு, அதையும் எனக்கு டெடிகேட் செய்த தங்கள் பரந்த மனதுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்.