1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
இத்தகைய பின்புலத்தில்தான் பட்டிக்காடா பட்டணமா வெளியானது. தொடர்ந்து 115 காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடிக் கொண்டிருக்கிறது. நீண்ட பிளாஷ் பாஃக்கை முடித்து மீண்டும் 1972 ஜூன் 10-ந் தேதிக்கு வருவோம்
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
அதற்கு முதல் நாள் வெளியான நான் ஏன் பிறந்தேன் படத்திற்கு divided ரிப்போர்ட். ஆனால் நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்று செய்தி வந்தது. அதற்கு ஒரு முக்கிய காரணம், படத்தின் முதல் காட்சி ஓடிக் கொண்டிருக்கும் ட்ரெயின் அதன் மேல் போடப்படும் டைட்டில்ஸ். அடுத்த காட்சி ரயிலில் இருந்து இறங்கும் எம்ஜிஆர் பாடும் நான் ஏன் பிறந்தேன் என்ற பாடல். அது முடிந்து வீட்டிற்கு வந்து வாசல் கேட் திறக்கும் எம்ஜிஆரைப் பார்த்து அப்பா என்று ஓடி வந்து நிற்கும் பையன். இது ரசிகர்களை upset செய்தது. இதற்கு முன்பும் எம்ஜிஆர் குழந்தைக்கு தந்தையாக நடித்திருக்கிறார். ஆனால் அவற்றில் (வேட்டைக்காரன், பணம் படைத்தவன், நல்ல நேரம் போன்ற சில) இடைவேளைக்கு பிறகோ அல்லது கடைசி ஒரு மணி நேரமோ என்ற வகையில்தான் இருந்ததே தவிர படம் ஆரம்பம் முதலே ஒரு பையனுக்கு தந்தையாக நடித்தது எனக்கு தெரிந்த வரை இது ஒன்றுதான். சண்டைக் காட்சிகள் எல்லாம் இருந்த போதும் படம் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கலைப் பற்றி பேசியதால் படம் ரசிகர்களின் விருப்ப படமாக வரவில்லை. இந்த ரிப்போர்ட் முதல் நாள் மாலையே எங்களுக்கு வந்து விட்டது.
மறுநாள் ஜூன் 10 சனிக்கிழமை காலை. எனக்கு ஒரு சிறப்பு வகுப்பு இருந்தது. அதற்காக காலையில் திண்டுக்கல் ரோடு வழியாக சென்று கொண்டிருக்கும் போது (என் கஸினும் என்னுடன் வந்துக் கொண்டிருந்தான்) வழியில் வைத்து மதுரை மாநகர் எம்ஜிஆர் மற்ற பொறுப்பாளர் C.தங்கம் அவர்களை பார்த்தோம். அவர் எங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர். இவரைப் பற்றி சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு மீண்டும் ஒரு பிளாஷ் பாஃக் போக வேண்டும் என்பதால் அதை பின்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். எம்ஜிஆர் ரசிகர் என்றால் சிவாஜி ரசிகர்களை எதிரிகளாகவும் ஜென்ம விரோதிகளாகவும் பார்க்க வேண்டும் என்று சொல்லி தரும் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த நட்புணர்வுடன் பழக கூடியவர். நாங்கள் வயதில் சிறியவர்களாக இருந்த போதும் மரியாதை கொடுத்து பழகுவார்.
dig
<இன்றைய காலத்தில் எம்ஜிஆர் விசுவாசிகளுக்கு ஆளும் கட்சியில் மதிப்பில்லை, பதவியில்லை என்று நண்பர் வினோத் போன்றவர்கள் அடிக்கடி குறைப்பட்டுக் கொள்வார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்திலேயே அவருக்கு விசுவாசமாக இருந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள், sideline செய்யப்பட்டார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை. அதற்கு ஒரு உதாரணம் C.தங்கம். ஆனானப்பட்ட KAK, SDS போன்றவர்களே எம்ஜிஆரால் ஒதுக்கப்பட்டனர் எனும்போது இந்த தங்கம் எல்லாம் எம்மாத்திரம்?>
end dig
தங்கம் அவர்களிடம் படத்தைப் பற்றி விசாரித்தோம். அவர் எப்போதும் diplomatic-ஆக பதில் சொல்லுவார். நன்றாக இருக்கிறது என்றார். ரசிகர்களின் மனக்குறையைப் பற்றி கேட்டதற்கு அப்படி ஒரு கருத்து இருப்பது உண்மைதான். ஆனாலும் ஓகே என்றார். அவரிடமிருந்து விடை பெற்று நான் பயிற்சி வகுப்புக்கு போய் விட என் கசின் அவன் வேலையை பார்க்க போய் விட்டான். வகுப்பு பத்து மணிக்கு முடிந்ததும் மீண்டும் திண்டுக்கல் ரோடு வழியாக வராமல் மேல மாசி வீதி சென்று டவுன் ஹால் ரோடு உள்ளே நுழைந்து சென்ட்ரல் தியேட்டர் வாசலை அடைந்தேன். மணி 10.30யை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அங்கே காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. சரியான கூட்டம். நான் செல்லும் போதே 45 p, 75 p, 85 p, Re 1.20 p வரை அனைத்தும் புல். வாசலுக்கு போய் சேர்ந்தவுடன் Re 1.80 p இடம் இல்லை என்ற போர்டு மாட்டப்படுகிறது. அதன் பின் ஒரு ஐந்து நிமிடந்தான். Rs 2.70 p இன்னும் எத்தனை டிக்கெட் பாக்கி இருக்கிறது என்று ரசிகர்கள் பேசிக் கொண்டிருந்தனர் வெளியே கூடி நின்ற ரசிகர்களிடமிருந்து சட்டென்று ஒரு பெருத்த ஆரவாரம் மற்றும் கைதட்டல்கள் காதை அடைக்க ஹவுஸ் புல் இடம் இல்லை என்ற போர்டு தியேட்டர் கேட்டில் மாட்டப்பட அந்த கணத்தில் அங்கே ஒரு புதிய சாதனை சரித்திரம் எழுதப்பட்டது. தொடர்ந்து 116-வது காட்சி அரங்கு நிறைந்து முந்தைய ரிகார்ட் முறியடிக்கப்பட்டது. 1000 வாலா 5000 வாலா சரங்கள் சரமாரியாக வெடித்துச் சிதற தியேட்டர் வாசலில் இருந்த விளக்கு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த தட்டியில் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் எத்தனை என்பதை தெரிவிக்கும் வண்ணம் ஒட்டபட்டிருந்த பேப்பர் ஷீட்டில் 116 என்ற எண்கள் பதிக்கப்பட்டன.
அன்று நடைபெற்ற அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்தது. மறு நாளும் அதற்கு அடுத்த நாளும் அரங்கு நிறைந்து தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் 125-ஐ கடந்தன. ஜூன் 13 செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்ற 129 காட்சிகளும் புல் ஆனது. 40-வது நாள் மாட்னி காட்சியில் தொடர் ஹவுஸ் புல் விட்டுப் போனது.
மதுரை மாநகரின் 83 வருட திரைப்பட வரலாற்றில் தான் நடித்த கருப்பு வெள்ளை படங்கள், ஒன்றல்ல இரண்டல்ல மூன்று கருப்பு வெள்ளைப் படங்கள் தொடர்ந்து 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைவது என்ற சாதனையை செய்துக் காட்டிய ஒரே நாயக நடிகன் நமது நடிகர் திலகம் மட்டுமே.
சாதனை என்றால் எந்தக் காலத்திலும் நிலைத்து நிற்பதுதான் சாதனை. மதுரை மாநகரை பொறுத்தவரை அன்றும் இன்றும் என்றும் யாராலும் முறியடிக்க முடியாத ஒரு டஜன் சாதனைகளுக்கு சொந்தக்காரர் நடிகர் திலகம். அவற்றைப் பற்றி ஏற்கனவே இந்த திரியில் பேசியிருக்கிறோம். அவற்றுள் ஒன்றுதான் இந்த கருப்பு வெள்ளைப் படங்களின் தொடர் ஹவுஸ் புல் சாதனைகள்.
பட்டிக்காடா பட்டணமா இப்படி வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருக்க அடுத்து வரப் போகும் படங்களின் ரிலீஸ் தேதி பற்றிய சர்ச்சைகளும் ஆரம்பித்தன.
(தொடரும்)
அன்புடன்