-
22nd July 2014, 11:59 PM
#71
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
இத்தகைய பின்புலத்தில்தான் பட்டிக்காடா பட்டணமா வெளியானது. தொடர்ந்து 115 காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடிக் கொண்டிருக்கிறது. நீண்ட பிளாஷ் பாஃக்கை முடித்து மீண்டும் 1972 ஜூன் 10-ந் தேதிக்கு வருவோம்
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
அதற்கு முதல் நாள் வெளியான நான் ஏன் பிறந்தேன் படத்திற்கு divided ரிப்போர்ட். ஆனால் நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்று செய்தி வந்தது. அதற்கு ஒரு முக்கிய காரணம், படத்தின் முதல் காட்சி ஓடிக் கொண்டிருக்கும் ட்ரெயின் அதன் மேல் போடப்படும் டைட்டில்ஸ். அடுத்த காட்சி ரயிலில் இருந்து இறங்கும் எம்ஜிஆர் பாடும் நான் ஏன் பிறந்தேன் என்ற பாடல். அது முடிந்து வீட்டிற்கு வந்து வாசல் கேட் திறக்கும் எம்ஜிஆரைப் பார்த்து அப்பா என்று ஓடி வந்து நிற்கும் பையன். இது ரசிகர்களை upset செய்தது. இதற்கு முன்பும் எம்ஜிஆர் குழந்தைக்கு தந்தையாக நடித்திருக்கிறார். ஆனால் அவற்றில் (வேட்டைக்காரன், பணம் படைத்தவன், நல்ல நேரம் போன்ற சில) இடைவேளைக்கு பிறகோ அல்லது கடைசி ஒரு மணி நேரமோ என்ற வகையில்தான் இருந்ததே தவிர படம் ஆரம்பம் முதலே ஒரு பையனுக்கு தந்தையாக நடித்தது எனக்கு தெரிந்த வரை இது ஒன்றுதான். சண்டைக் காட்சிகள் எல்லாம் இருந்த போதும் படம் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கலைப் பற்றி பேசியதால் படம் ரசிகர்களின் விருப்ப படமாக வரவில்லை. இந்த ரிப்போர்ட் முதல் நாள் மாலையே எங்களுக்கு வந்து விட்டது.
மறுநாள் ஜூன் 10 சனிக்கிழமை காலை. எனக்கு ஒரு சிறப்பு வகுப்பு இருந்தது. அதற்காக காலையில் திண்டுக்கல் ரோடு வழியாக சென்று கொண்டிருக்கும் போது (என் கஸினும் என்னுடன் வந்துக் கொண்டிருந்தான்) வழியில் வைத்து மதுரை மாநகர் எம்ஜிஆர் மற்ற பொறுப்பாளர் C.தங்கம் அவர்களை பார்த்தோம். அவர் எங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர். இவரைப் பற்றி சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு மீண்டும் ஒரு பிளாஷ் பாஃக் போக வேண்டும் என்பதால் அதை பின்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். எம்ஜிஆர் ரசிகர் என்றால் சிவாஜி ரசிகர்களை எதிரிகளாகவும் ஜென்ம விரோதிகளாகவும் பார்க்க வேண்டும் என்று சொல்லி தரும் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த நட்புணர்வுடன் பழக கூடியவர். நாங்கள் வயதில் சிறியவர்களாக இருந்த போதும் மரியாதை கொடுத்து பழகுவார்.
dig
<இன்றைய காலத்தில் எம்ஜிஆர் விசுவாசிகளுக்கு ஆளும் கட்சியில் மதிப்பில்லை, பதவியில்லை என்று நண்பர் வினோத் போன்றவர்கள் அடிக்கடி குறைப்பட்டுக் கொள்வார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்திலேயே அவருக்கு விசுவாசமாக இருந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள், sideline செய்யப்பட்டார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை. அதற்கு ஒரு உதாரணம் C.தங்கம். ஆனானப்பட்ட KAK, SDS போன்றவர்களே எம்ஜிஆரால் ஒதுக்கப்பட்டனர் எனும்போது இந்த தங்கம் எல்லாம் எம்மாத்திரம்?>
end dig
தங்கம் அவர்களிடம் படத்தைப் பற்றி விசாரித்தோம். அவர் எப்போதும் diplomatic-ஆக பதில் சொல்லுவார். நன்றாக இருக்கிறது என்றார். ரசிகர்களின் மனக்குறையைப் பற்றி கேட்டதற்கு அப்படி ஒரு கருத்து இருப்பது உண்மைதான். ஆனாலும் ஓகே என்றார். அவரிடமிருந்து விடை பெற்று நான் பயிற்சி வகுப்புக்கு போய் விட என் கசின் அவன் வேலையை பார்க்க போய் விட்டான். வகுப்பு பத்து மணிக்கு முடிந்ததும் மீண்டும் திண்டுக்கல் ரோடு வழியாக வராமல் மேல மாசி வீதி சென்று டவுன் ஹால் ரோடு உள்ளே நுழைந்து சென்ட்ரல் தியேட்டர் வாசலை அடைந்தேன். மணி 10.30யை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அங்கே காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. சரியான கூட்டம். நான் செல்லும் போதே 45 p, 75 p, 85 p, Re 1.20 p வரை அனைத்தும் புல். வாசலுக்கு போய் சேர்ந்தவுடன் Re 1.80 p இடம் இல்லை என்ற போர்டு மாட்டப்படுகிறது. அதன் பின் ஒரு ஐந்து நிமிடந்தான். Rs 2.70 p இன்னும் எத்தனை டிக்கெட் பாக்கி இருக்கிறது என்று ரசிகர்கள் பேசிக் கொண்டிருந்தனர் வெளியே கூடி நின்ற ரசிகர்களிடமிருந்து சட்டென்று ஒரு பெருத்த ஆரவாரம் மற்றும் கைதட்டல்கள் காதை அடைக்க ஹவுஸ் புல் இடம் இல்லை என்ற போர்டு தியேட்டர் கேட்டில் மாட்டப்பட அந்த கணத்தில் அங்கே ஒரு புதிய சாதனை சரித்திரம் எழுதப்பட்டது. தொடர்ந்து 116-வது காட்சி அரங்கு நிறைந்து முந்தைய ரிகார்ட் முறியடிக்கப்பட்டது. 1000 வாலா 5000 வாலா சரங்கள் சரமாரியாக வெடித்துச் சிதற தியேட்டர் வாசலில் இருந்த விளக்கு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த தட்டியில் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் எத்தனை என்பதை தெரிவிக்கும் வண்ணம் ஒட்டபட்டிருந்த பேப்பர் ஷீட்டில் 116 என்ற எண்கள் பதிக்கப்பட்டன.
அன்று நடைபெற்ற அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்தது. மறு நாளும் அதற்கு அடுத்த நாளும் அரங்கு நிறைந்து தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் 125-ஐ கடந்தன. ஜூன் 13 செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்ற 129 காட்சிகளும் புல் ஆனது. 40-வது நாள் மாட்னி காட்சியில் தொடர் ஹவுஸ் புல் விட்டுப் போனது.
மதுரை மாநகரின் 83 வருட திரைப்பட வரலாற்றில் தான் நடித்த கருப்பு வெள்ளை படங்கள், ஒன்றல்ல இரண்டல்ல மூன்று கருப்பு வெள்ளைப் படங்கள் தொடர்ந்து 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைவது என்ற சாதனையை செய்துக் காட்டிய ஒரே நாயக நடிகன் நமது நடிகர் திலகம் மட்டுமே.
சாதனை என்றால் எந்தக் காலத்திலும் நிலைத்து நிற்பதுதான் சாதனை. மதுரை மாநகரை பொறுத்தவரை அன்றும் இன்றும் என்றும் யாராலும் முறியடிக்க முடியாத ஒரு டஜன் சாதனைகளுக்கு சொந்தக்காரர் நடிகர் திலகம். அவற்றைப் பற்றி ஏற்கனவே இந்த திரியில் பேசியிருக்கிறோம். அவற்றுள் ஒன்றுதான் இந்த கருப்பு வெள்ளைப் படங்களின் தொடர் ஹவுஸ் புல் சாதனைகள்.
பட்டிக்காடா பட்டணமா இப்படி வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருக்க அடுத்து வரப் போகும் படங்களின் ரிலீஸ் தேதி பற்றிய சர்ச்சைகளும் ஆரம்பித்தன.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd July 2014 11:59 PM
# ADS
Circuit advertisement
-
25th July 2014, 12:39 AM
#72
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
பட்டிக்காடா பட்டணமா இப்படி வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருக்க அடுத்து வரப் போகும் படங்களின் ரிலீஸ் தேதி பற்றிய சர்ச்சைகளும் ஆரம்பித்தன.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
பட்டிக்காடா பட்டணமா வெளி வருவதற்கு முன்பு அடுத்து வெளிவரப் போகும் நடிகர் திலகத்தின் படங்கள் பின் வரும் தேதிகளில் ரிலீஸ் செய்யும் வண்ணம் chart செய்யப்பட்டிருந்தது. தர்மம் எங்கே அடுத்த ரிலீஸ் ஆக அறிவிக்கப்பட்டு ஜூலை 1-ந் தேதி வெளிவரும் என தகவல். அதற்கு அடுத்தது தவப்புதல்வன். இதற்கு இரண்டு தேதிகள் சொல்லப்பட்டிருந்தன. ஒன்று ஆகஸ்ட் 26 அல்லது செப்டம்பர் 9 என்று. வசந்த மாளிகை தீபாவளி நவம்பர் 4-ந் தேதி என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் பட்டிக்காடா பட்டணமாவின் இமாலய வெற்றி மேற்சொன்ன ரிலீஸ் தேதிகளை எல்லாம் புரட்டிப் போட்டது. சென்னையைப் பொறுத்தவரை முதலில் சாந்தியில்தான் தர்மம் எங்கே வெளியாவதாக இருந்தது. ஆனால் பட்டிக்காடா பட்டணமாவின் வெற்றியைப் பார்த்தவுடன் அதை சாந்தியிலிருந்து மாற்றுவது இயலாத காரியம் என்று தெரிந்தவுடன் வேறு தியேட்டர் தேடும் முயற்சிகள் துவங்கின. மவுண்ட் ரோடு நேரடி தியேட்டர்கள் எல்லாம் book ஆகி இருக்க மவுண்ட் ரோடின் அருகில் GP ரோட்டில் அமைந்திருக்க கூடிய ஓடியன் தேர்வு செய்யப்பட்டது. இதன் காரணமாகவும் பட்டிக்காடா பட்டணமாவிற்கு சற்று கூடுதல் இடைவெளி கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் 56 நாட்கள் இடைவெளி 70 நாட்களாக மாற்றப்பட்டு தர்மம் எங்கே ஜூலை 15-ந் தேதி ரிலீஸ் என்று முடிவு செய்யப்பட்டது. மதுரை ஸ்ரீதேவியில் படம் ரிலீஸ். தவப்புதல்வன் செப் 9 என்றும் மாளிகை தீபாவளி என்றும் முடிவு செய்யப்பட்டு பாலாஜியின் நீதி 1973 ஜனவரி 26 என்று தீர்மானிக்கப்பட்டது.
ஜூன் 18 அன்று ஞான ஒளி 100 நாட்களை நிறைவு செய்து சென்னையில் தொடர்ந்து ஹாட்ரிக் 100 நாள் படங்களை கொடுத்த பெருமை மீண்டும் நடிகர் திலகத்திற்கு கிடைத்தது. கிட்டத்தட்ட 6,7 தியேட்டர்களில் 100 நாட்களை கடந்திருக்க வேண்டிய ஞான ஒளி பற்பல சூழ்ச்சி சூழல் காரணமாக நூலிழையில் 5,6 தியேட்டர்களை தவற விட்டது. பிளாசாவில் 100 நாட்களை கடந்தது.
இந்த நேரத்தில் தமிழக அரசியல் வானிலும் போராட்டங்களும் மாற்றத்திற்கான அறிகுறிகளும் தோன்ற ஆரம்பித்தன.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th August 2014, 11:57 PM
#73
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
இந்த நேரத்தில் தமிழக அரசியல் வானிலும் போராட்டங்களும் மாற்றத்திற்கான அறிகுறிகளும் தோன்ற ஆரம்பித்தன.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
தவிர்க்க முடியாத பல வேலைகளினால் இந்த தொடர் நினைவலைகளை பதிவு செய்யும் பணியில் சிறிது தொய்வு. வாசகர்கள் மன்னிக்கவும். சீரிய இடைவெளியில் இதை தொடர முயற்சிக்கிறேன்.
தமிழகத்திலே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் 60-களின் இறுதியில் விவசாய போராட்டங்கள் ஆரம்பித்தன. குறிப்பாக குறைந்த அளவு நிலமும் பம்ப் செட்டும் வைத்திருந்த விவசாயிகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் இந்த போராட்டங்கள் துவங்கின. நாம் இப்போது கடந்து வந்துக் கொண்டிருக்கும் 1972-ல் அந்த போராட்டங்கள் குறிப்பாக கோவை மாவட்டத்தில் தீவிரமடைய துவங்கியது. நாராயணசுவாமி நாயுடு போன்று பிற்காலத்தில் விவசாய சங்க தலைவராக பிரபலமானவர்கள் அந்த 1972 போராட்டதின்போதுதான் தங்களை முன்னணி போராட்ட வீரனாக முன் நிறுத்திக் கொண்டனர். அன்று விவசாயிகள் தலைவராக இருந்தவர் சிவசாமி. ஜூன் முதல் வாரத்தில் (7-ந் தேதி என்று நினைவு) கோவை மாநகரில் மிகப் பெரிய காளை வண்டி போராட்டம் நடத்தினார்கள். முதல் நாளே பல சுற்றுவட்டார ஊர்களிலிருந்து வண்டிகளை கொண்டு வந்து இரவோடு இரவாக நகருக்குள்ளே நுழைந்து நகரையே ஆக்கிரமிப்பு செய்த விட்டனர். எந்த அளவிற்கு என்றால் மாவட்ட ஆட்சி தலைவரின் வாகனம் கூட அவரது அலுவலகத்திற்கு செல்ல முடியவில்லை. அவர் காரிலிருந்து இறங்கி நடந்தே அலுவலகம் சென்று அன்றைய முதல்வரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அன்று அங்கே நிலவிய சூழலை பற்றி தகவல் தெரிவித்தார். பேச்சு வார்த்தை நடந்தும் முடிவு எட்டபப்டவில்லை. நாட்கள் செல்ல செல்ல போராட்டம் கடுமையாக பெருமாநல்லூர் என்ற ஊரில் காவல் துறை துப்பாக்கி சூடு நடத்த மூன்று பேர் உயிரிழந்தனர். இது தமிழகமெங்கும் கொந்தளிப்பான சூழலை உருவாக்கியது.
அதே நேரத்தில் அன்றைய ஆளும் கட்சியில் ஒரு பனிப் போர் ரூபம் கொண்டு பெரிதாவது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது. அன்றைய முதல்வர் மு.க.வின் மூத்த மகன் மு.க.முத்துவை நாயகனாக்கி இரட்டை வேடங்கள கொடுத்து அஞ்சுகம் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பிள்ளையோ பிள்ளை என்ற படம் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் தயாராகி வெளியிடுவதற்கு ரெடியானது. 1971 அக்டோபரில் எம்ஜிஆர் கிளாப் அடித்து துவக்கி வைத்த படம் 1972 ஜூன் மாதம் 23 அன்று வெளியானது. படம் வெளியாவதற்கு முதல் நாள் தேவி பாரடைஸ் அரங்கில் பிரிமியர் ஷோ நடைபெற்றது. அந்த காட்சிக்கு வாலி அவர்களை உடன் அழைத்துக் கொண்டு வந்த எம்ஜிஆருக்கு காரை விட்டு கிழே இறங்கியதும் முதலில் கண்ணில் தென்பட்டது "அனைத்துலக மு.க.முத்து ரசிகர் மன்றம் உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்ற பானர்தான். அதை பார்த்துவிட்டு உள்ளே போனவர் மு.க.முத்துவை வாழ்த்திவிட்டு [என்னை எங்க வீட்டு பிள்ளை என்று தமிழக தாய்மார்கள் கூறுவார்கள். முத்து நம்ம வீட்டு பிள்ளை என்று பெயர் பெற வேண்டும்] படம் முடிந்து வீட்டிற்கு செல்லும்போது கூடவே வந்த வாலியிடம் தன் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மூன்று தமிழும் மு.க.முத்துவிடம்தான் தோன்றியதா என்று கோவத்தோடு கேட்ட எம்ஜிஆரை சமாதானப்படுத்த சிரமப்பட்டு போனதை வாலி ஆவர்கள் தன் சுய சரிதையான நானும் இந்த நூற்றாண்டும் தொடரில் பதிவு செய்திருக்கிறார்.
விவசாயிகள் போராட்டம் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அடுத்த கட்டதிற்கு நகர ஆரம்பித்தபோது அதற்கு ஆதரவாக பெருந்தலைவர் களமிறங்கினார். கட்டணம் குறைக்கப்பட வேண்டும், துப்பாக்கி சூட்டிற்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது ஸ்தாபன காங்கிரஸ். [1972 ஜூலை 5-ந் தேதி வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக நினைவு]
இதன் நடுவில் ஜூலை 15 அன்று வெளியிடுவதற்காக தர்மம் எங்கே தயாராகிக் கொண்டிருந்தது. சொன்னது போல் ஞான ஒளி 100 நாட்களை நிறைவு செய்தது. பட்டிக்காடா பட்டணமா வெளியான அனைத்து ஊர்களிலும் 50-வது நாளை கடந்து ஓடிக் கொண்டிருந்தது. அரசியல் ஒரு பக்கம் சூடு என்றால் தொடர் வெற்றிகளும் வெளியாக போகும் படங்களின் எதிர்பார்ப்பும் மற்றொரு பக்கம் சூட்டை கிளப்பிக் கொண்டிருந்தது.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
31st August 2014, 02:27 PM
#74
Senior Member
Veteran Hubber
டியர் முரளி சார்,
ஒவ்வொரு அத்தியாயத்தையும் சுறுசுறுப்பான தொடர் நாவலுக்குரிய சஸ்பென்ஸுடன் நிறுத்துகிறீர்கள். வார இதழ்களிலாவது 'சரி, அடுத்தவாரம் சஸ்பென்ஸ் அவிழ்ந்துவிடும்' என்று எதிர்பார்க்கலாம். ஆனால் தங்களின் அடுத்த பதிவு எப்போது வருமோ என்பதேகூட ஒரு சஸ்பென்ஸ்தான்.
நமக்குப்பிடித்த தர்மம் எங்கே படம் வரும்போதுதானா தமிழ்நாட்டில் இவ்வளவு போராட்டங்களும், அரசியல் மாற்றங்களும் நடக்க வேண்டும்?. முதல்நாள் ரிசர்வேஷன் கிடைக்காமல் ஆனால் எப்படியும் முதல்நாள் பார்த்தே தீரவேண்டும் என்ற ஆர்வத்தில் என் வாழ்நாளிலேயே முதல்முறையாக மகாராணி தியேட்டரில் பிளாக்கில் டிக்கட் வாங்கி பார்த்த படம் தர்மம் எங்கே. என்னைப்பொருத்தவரை பிளாக்கில் டிக்கட் வாங்கினாலும் இன்றுவரை அதற்கு தகுதியான படம்தான் 'தர்மம் எங்கே'. புரட்சி வீரன் வரிசையில் சண்டைக்காட்சிகளைப் பொருத்தவரை சிவந்த மண்ணைவிட சிறப்பான படம். சிறையில் அந்த மாமிசமலை முரடன்களோடு போடும் அந்த சண்டைக்கே கொடுத்த காசு செரித்தது. (அவ்விரண்டு படங்களைப்பற்றிய ஒப்பீட்டு பதிவு ஒன்றை இட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆவல் பெண்டிங்காக இருக்கிறது).
அடுத்த அத்தியாயத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st September 2014, 11:39 PM
#75

Originally Posted by
mr_karthik
டியர் முரளி சார்,
ஒவ்வொரு அத்தியாயத்தையும் சுறுசுறுப்பான தொடர் நாவலுக்குரிய சஸ்பென்ஸுடன் நிறுத்துகிறீர்கள். வார இதழ்களிலாவது 'சரி, அடுத்தவாரம் சஸ்பென்ஸ் அவிழ்ந்துவிடும்' என்று எதிர்பார்க்கலாம். ஆனால் தங்களின் அடுத்த பதிவு எப்போது வருமோ என்பதேகூட ஒரு சஸ்பென்ஸ்தான்.
நமக்குப்பிடித்த தர்மம் எங்கே படம் வரும்போதுதானா தமிழ்நாட்டில் இவ்வளவு போராட்டங்களும், அரசியல் மாற்றங்களும் நடக்க வேண்டும்?. முதல்நாள் ரிசர்வேஷன் கிடைக்காமல் ஆனால் எப்படியும் முதல்நாள் பார்த்தே தீரவேண்டும் என்ற ஆர்வத்தில் என் வாழ்நாளிலேயே முதல்முறையாக மகாராணி தியேட்டரில் பிளாக்கில் டிக்கட் வாங்கி பார்த்த படம் தர்மம் எங்கே. என்னைப்பொருத்தவரை பிளாக்கில் டிக்கட் வாங்கினாலும் இன்றுவரை அதற்கு தகுதியான படம்தான் 'தர்மம் எங்கே'. புரட்சி வீரன் வரிசையில் சண்டைக்காட்சிகளைப் பொருத்தவரை சிவந்த மண்ணைவிட சிறப்பான படம். சிறையில் அந்த மாமிசமலை முரடன்களோடு போடும் அந்த சண்டைக்கே கொடுத்த காசு செரித்தது. (அவ்விரண்டு படங்களைப்பற்றிய ஒப்பீட்டு பதிவு ஒன்றை இட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆவல் பெண்டிங்காக இருக்கிறது).
அடுத்த அத்தியாயத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்....
கார்த்திக் சார்,
உங்கள் ஆதங்கம் புரிகிறது. சஸ்பென்ஸ் வைக்க வேண்டும் என்றோ அல்லது எப்போது அடுத்த பகுதி வரும் என்று எதிர்பார்க்க வைப்பதற்கோ நான் அப்படி நிறுத்துவதில்லை. முதலில் ஓபனிங் ஷோ அல்லது ஓபனிங் டே போன படங்களைப் பற்றி மட்டுமே எழுத ஆரம்பித்த நான் பின் அன்றைய காலகட்டத்தில் வெளியான அனைத்து நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியும் எழுதலாமே என்ற எண்ணம் தோன்றியதும் அதையொட்டி அன்றைய தமிழகத்தில் நடந்த நிகழ்வுகளைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளலாமே என்ற அடிப்படையிலும் இதை விவரித்து எழுத ஆரம்பித்தேன்.
ஏதேனும் டைரியைப் பார்த்தோ அல்லது அன்றைய நாளிதழ்களின் நகல்களைப் பார்த்து எழுதுவதாக இருந்தால் பிரச்சனையில்லை. அப்படி எதுவும் என் கைவசம் இல்லை. ஆகையால் என் ஞாபகத்தில் இருக்கும் நினைவுகளின் அடிப்படையில் எழுத வேண்டும் என்கின்றபோது நமது பதிவில் தவறுகள் ஏதும் நிகழ்ந்து விடக் கூடாதே என்று பலமுறை யோசித்து எழுத வேண்டியிருப்பதால் இடைவெளி விழுந்து விடுகிறது. அதை தவிர்க்க முயற்சி செய்கிறேன்.
உங்கள் தர்மம் எங்கே பதிவை படிக்க ஆவலுடன் காத்திருக்கும்
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st September 2014, 11:48 PM
#76
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
அரசியல் ஒரு பக்கம் சூடு என்றால் தொடர் வெற்றிகளும் வெளியாக போகும் படங்களின் எதிர்பார்ப்பும் மற்றொரு பக்கம் சூட்டை கிளப்பிக் கொண்டிருந்தது.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
தர்மம் எங்கே திரைப்படம் பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். தெய்வமகன் வெளியாகி மூன்று வருட இடைவெளிக்கு பின் சாந்தி பிலிம்ஸ் தயாரித்த படம். அதே நாயகி அதே வில்லன் அதே இயக்குனர் என்ற combination. அதையெல்லாம் விட ஒரு period பிலிம் என்பது ஒரு எதிர்பார்ப்பை தூண்டியிருந்தது. படத்திற்கு வந்த விளம்பரங்கள்.பத்திரிக்கைகளில் வெளியான ஸ்டில்ஸ் அதிலும் மதி ஒளி தர்மம் எங்கே சிறப்பு மலராக வெளியிட்ட இதழில் அச்சாகியிருந்த சில புகைப்படங்கள் ரசிகர்களின் ஆவலை தூண்டியிருந்தன.
எல்லா இடங்களிலும் இதை பற்றிய பேச்சு. அந்த கல்வியாண்டில் ஸ்கூல் மாறி விட்ட பழைய ஸ்கூல் நண்பன் ஒருவனை சந்தித்தேன். அவன் வீட்டிற்கு சென்றால் அங்கே அவனது அண்ணன் தர்மம் எங்கே பற்றி எதிர்பார்ப்போடு பேசுகிறான். நாங்கள் மட்டுமல்ல பலரும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது.
கடந்த பதிவில் நான் குறிப்பிட்ட ஒரு நாள் வேலை நிறுத்தத்தை முறியடிக்க அரசாங்கம் முழு முனைப்புடன் வேலை செய்தது. அன்றைய தினம் திண்டுக்கல் ரோடு, மேலமாசி வீதி போன்ற இடங்களில் பூட்டிக் கிடந்த கடைகளை திறக்க சொல்லி ஆளும் கட்சியினர் கடை உரிமையாளர்களை மிரட்டியதை நானே நேரில் பார்த்தேன். போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினால் குண்டுகள் பாயாமல் பூமாரியா பெய்யும் போன்ற சில கமன்ட்கள் ஆளும் கட்சியின் முச்சிய தரப்பினரிடமிருந்து வந்தது. ஆனால் ஒரு விஷயம் உறுதியாக தெரிய ஆரம்பித்தது. அதுதான் பொது மக்கள் ஆளும் கட்சியின் மேல் கோவம் கொள்ள ஆரம்பித்து விட்டான்ர் என்ற உண்மை.
அறிவித்தபடியே தர்மம் எங்கே ஜூலை 15-ந் தேதி சனிக்கிழமை அன்று வெளியானது. மதுரையில் ஸ்ரீதேவியில் படம் ரிலீஸ். ரிலீசிற்கு முதல் நாளே தேவியில் கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது. படத்தைப் பற்றிய செய்திகளும் தமிழகமெங்கும் நடிகர் திலகத்தின் படங்கள் வீறு நடை போட்டு புதிய சாதனைகள் படைப்பதையும் அங்கே விவாதிக்கபட்டுக் கொண்டிருந்தன.
ரிலீசன்று முழு பக்க விளம்பரம். காலையில் பார்த்தவுடன் படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமானது. ஆனால் ஸ்கூல் இருந்த காரணத்தினால் போக முடியவில்லை. வழக்கம் போல் என் கசின் அவன் ஓபனிங் ஷோ பார்பதற்கு ஏற்பாடு செய்து விட்டான். என்னை மாலைக்காட்சிக்கு கூட்டிப் போவதாக சொல்லியிருந்தான். அப்போது நான் படித்திருந்த ஸ்கூல் சனிக்கிழமைகளிலும் புல் ஸ்கூல். ஸ்கூல் விட்டு வந்தவுடன் போய் விடலாம். மாலை 6.30 மணிக்குதானே ஷோ என்று நினைத்துக் கொண்டே ஸ்கூல் போனேன். அங்கே போனாலும் மனதில் படம் பற்றிய நினைவுகளே சுற்றி சுற்றி வந்தன. மாலை வேக வேகமாக வீட்டிற்கு வருகிறேன். என் கஸினை காணோம். வீட்டில் கேட்டால் வெளியில் போயிருக்கிறான் என்று சொன்னார்கள். காத்திருந்து காத்திருந்து பார்த்தேன். அவன் வரவில்லை. அதுவரை படத்தைப் பற்றிய ரிப்போர்ட்-ம் கேட்க முடியவில்லை. இரவு 9.30 மணிக்கு வந்தான். படம் எப்படி இருக்கு? ரிப்போர்ட் எப்படி? ஓபனிங் ஷோ போனியா? ஈவ்னிங் ஷோ போகலாம்னு சொல்லிட்டு நீ பாட்டுக்கு போயிட்டியே? என்று கேள்விகளால் அவனை அரித்து எடுத்து விட்டேன்! படம் நல்லா இருக்கு. மத்ததை அப்புறம் சொல்லுறேன் என்றான். தாத்தா வீட்டில் இருந்தார் ஆகவே நிறைய பேச முடியாது.
மறுநாள் காலை 8 மணிக்கு நாங்கள் இரண்டு பேரும் கடைக்கு போவதற்காக வெளியே செல்கிறோம். முதலில் நகை கடை பஜார் என்றழைக்கப்படும் தெற்காவணி மூல வீதி சென்றோம். தெரு முழுக்க நகைக் கடைகள் நிறைந்து இருக்கும். அன்றைய நாளில் ஞாயிறன்று நகைக் கடைகள் கிடையாது. ஆகவே அங்கே ஞாயிறு வாசக சாலை செயலபடும். இது சிவாஜி ரசிகர்களால் நடத்தப்படுவது. அங்கே சந்தித்த சில ரசிகர்கள் படத்தைப் பற்றியும் முதல் நாள் ஓபனிங் ஷோவில் நடந்த அலப்பரை பற்றியும் பேசினார்கள். அங்கிருந்து மேலமாசி வீதி வாசக சாலைக்கு செல்கிறோம். அங்கேயும் அதே நிலை. இறுதியாக டவுன்ஹால் ரோடு தானப்ப முதலி தெரு சந்திப்பில் இயங்கி வந்த லால் பகதூர் சாஸ்திரி மன்றம் [உட்கிளை சிவாஜி மன்றம்] சென்றோம். அங்கே சென்றபோதுதான் படத்திற்கு முதல் நாள் வந்த கூட்டம் பற்றி தெரிந்தது. அது மட்டுமல்ல அன்று காலையில் தேவி டாக்கீஸ் சென்றிருந்த ரசிகர் அங்கே வந்து கூட்டம் அதிகமாக இருப்பதால் இன்று 5 காட்சிகள் போட்டு விட்டார்கள். காலையில் 9.15 மணிக்கு ஷோ ஆரம்பித்து விட்டது என்றார். இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு மந்திரித்து விட்டது போல் ஆகி விட்டது. எப்படியும் அன்று படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட ஆரம்பித்தது. இதற்கு நடுவில் கசின் ஓபனிங் ஷோ தவிர முதல் நாள் மாலைக் காட்சியும் பார்த்த விஷயம் வெளியில் வந்து விட்டது. எனக்கு சமாதானம் சொல்லும் விதமாக மாலை 5.30 மணிக்கே படம் போடப் போகிறார்கள் என்பதனால் நான் கிளம்பி விட்டேன் என்றான்.
வீட்டிற்கு போனவுடன் மாலைக் காட்சி போவதற்கு அடி போட ஆரம்பித்து விட்டேன். ஆனால் அனுமதி எளிதில் கிடைக்கவில்லை. இதற்கு நடுவில் படத்திற்கு பயங்கர கூட்டம் என்றும் போலீஸார் அடித்து விரட்டுகிறார்கள் என்ற செய்தியையும் எனது இளைய மாமன் என் தாயாரிடம் சொல்லி விட எனக்கு முட்டுக்கட்டை பலமானது. எந்த பிரச்சனையுமில்லை. எந்த வித சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல் சென்று வருகிறோம். வேண்டுமென்றால் மாமா எங்களுக்கு துணையாக வரட்டும் என்று கேட்டு அந்த நிபந்தனையின் பேரில் அனுமதி கிடைத்தது. நாங்கள் மாலை 5 மணிக்கே கிளம்ப இப்பவே எதற்கு என்று மாமா கேட்க இப்போது சென்றால்தான் டிக்கெட் கிடைக்கும் என்று நாங்கள் சொல்ல அப்படியானால் நீங்க இரண்டு பேரும் முன்னாடி போங்க. நான் அங்கே வந்துர்றேன் என்றார். நாங்கள் ஓட்டமும் நடையுமாய் தேவி டாக்கீஸ் சென்றோம். தானப்ப முதலி தெரு வழியாக வடக்கு மாசி வீதி கடந்து கிருஷ்ணாராயர் தெப்பக்குள தெரு தாண்டி B 4 போலீஸ் ஸ்டேஷன் பக்கத்து தெருவில் நுழைந்தபோதுதான் புரிந்தது கூட்டம் பற்றி பல ரசிகர்களும் சொன்னது எந்தளவிற்கு சரி என்று!
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th September 2014, 12:42 AM
#77
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
தர்மம் எங்கே படத்திற்கு ஜூலை 16-ந் தேதி மாலைக் காட்சி போவதற்கு நாங்கள் ஓட்டமும் நடையுமாய் தேவி டாக்கீஸ் சென்றோம். தானப்ப முதலி தெரு வழியாக வடக்கு மாசி வீதி கடந்து கிருஷ்ணாராயர் தெப்பக்குள தெரு தாண்டி B 4 போலீஸ் ஸ்டேஷன் பக்கத்து தெருவில் நுழைந்தபோதுதான் புரிந்தது கூட்டம் பற்றி பல ரசிகர்களும் சொன்னது எந்தளவிற்கு சரி என்று!
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
நான் என் சிறு வயது முதல் பல நடிகர் திலகத்தின் படங்களுக்கு பெரிய அளவில் மக்கள் கூட்டத்தைப் பார்த்திருக்கின்றேன். பிரம்மாண்ட கூட்டத்தையும் பார்த்திருக்கிறேன். முதல் நாள் அல்லாமல் படம் வெளியான சில நாட்களுக்குள் பெரிய கூட்டம் என்று சொன்னால் அது தங்கத்தில் கர்ணன் படத்திற்கும் ஸ்ரீதேவியில் திருவிளையாடல் படத்திற்கும் பார்த்த கூட்டத்தை குறிப்பிட வேண்டும். அவை இரண்டுமே மிக சிறிய வயதில் பார்த்தது என்பதனால் நாங்கள் சென்றது எத்தனையாவது நாள் என்பது எனக்கு தெரியவில்லை.
ஆனால் ஓரளவிற்கு விவரம் தெரிய ஆரம்பித்தவுடன் முதல் நாள் கூட்டம் பார்த்தது என்றால் அது முதன் முதலில் 1967 நவம்பர் 1 தீபாவளி அன்று சென்ட்ரலில் ஊட்டி வரை உறவு படத்திற்கு பார்த்த கூட்டம்தான். இப்போதும் நினைவிருக்கிறது. யாரோ உறவினர்கள் அந்த தீபாவளிக்கு வந்திருந்ததால் ஒரு சினிமாவிற்கு போவோம் என்ற முறையில் வீட்டிலிருந்து சென்ற படம் என்பது நினைவில் இருக்கிறது.[ஏன் என்றால் அதற்கு முன்போ அல்லது பின்போ முதல் நாள் படம் பார்க்க வீட்டில் பெற்றோருடன் போனதேயில்லை. பின்னாட்களில் கசினுடன் சேர்ந்து முதல் நாள் போனதுண்டு]. தாயாருடன் சென்றதால் [தந்தை மற்றும் ஆன் உறவினர்கள் வெளியில் நிற்க] சென்ட்ரல் உள்ளே போக முடிந்தது. ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. அப்போது பார்த்த கூட்டம் சரியான கூட்டம்.
அதன் பிறகு மதுரையில் பெரிய அளவில் வந்த முதல் நாள் கூட்டங்கள் என்று சொன்னால் தில்லானா, எங்க மாமா, சொர்க்கம், ராஜா, வசந்த மாளிகை, ராஜ ராஜ சோழன், எங்கள் தங்க ராஜா, கெளரவம், சிவகாமியின் செல்வன், தங்கபதக்கம், அவன்தான் மனிதன், அண்ணன் ஒரு கோவில் திரிசூலம் இவற்றையெல்லாம் குறிப்பிடலாம். ஆனால் எனக்கு தெரிந்தவரை அல்லது நான் பார்த்தவரை பிரம்மாணடமான பயங்கரமான கூட்டம் என்று சொன்னால் நான் இரண்டு படங்களைத்தான் குறிப்பிடுவேன். ஒன்று சிவந்த மண் மற்றொன்று தர்மம் எங்கே! மற்ற படங்களுக்கு வந்தது பெரிய கூட்டம். ஆனால் சிவந்த மண் மற்றும் தர்மம் எங்கே படத்திற்கு வந்ததோ பிரம்மாண்டத்தையும் தாண்டியது.
மதுரையில் ஸ்ரீதேவி திரையரங்கம் அமைந்திருந்த [ஆம், இப்போது அந்த அரங்கம் இல்லை. apartment ஆக மாறி விட்டது] தெருவிற்கு ஒர்க் ஷாப் ரோடு என்று பெயர். ஸ்ரீதேவி திரையரங்கம் அன்றைய நாட்களில் மதுரையில் ஏனைய அரங்குகளை விட [தங்கம் திரையரங்கை தவிர்த்து விட்டுப் பார்த்தால்] பெரிய வளாகத்தை கொண்டது. தெருவில் ஆரம்பித்தால் உள்ளே அரங்கம் அமைந்திருக்கும் இடம் வரை நல்ல விசாலமான ஏரியா. சைக்கிள் மற்றும் கார் பார்க்கிங் வரை செய்யலாம். இரு பக்கமும் நீளமான கம்பிகளுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் ticket counter வரிசை. உள்ளே பெண்களுக்கு என்று தனி counter என பலவேறு வசதிகள். நான் முன்னர் குறிப்பிட்டது போல் அவையெல்லாம் இடிக்கப்பட்டு குடியிருப்பு வளாகமாக மாறி விட்ட போதிலும் அந்த திரையரங்கை காண வேண்டுமென்றால் இயக்குனர் பார்த்திபன் இயக்கி வெளிவந்த ஹவுஸ் புல் [House Full] படத்தில் காணலாம். அந்த படம் முழுக்க ஸ்ரீதேவி திரையரங்கிலேதான் படமாக்கப்பட்டது.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th September 2014, 01:04 AM
#78
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
நான் முன்னர் குறிப்பிட்டது போல் அவையெல்லாம் இடிக்கப்பட்டு ஸ்ரீதேவி திரையரங்கம் குடியிருப்பு வளாகமாக மாறி விட்ட போதிலும் அந்த திரையரங்கை காண வேண்டுமென்றால் இயக்குனர் பார்த்திபன் இயக்கி வெளிவந்த ஹவுஸ் புல் [House Full] படத்தில் காணலாம். அந்த படம் முழுக்க ஸ்ரீதேவி திரையரங்கிலேதான் படமாக்கப்பட்டது.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
தியேட்டரை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை சந்தை நடைபெறும் திலகர் திடல் அமைந்திருக்கும். தியேட்டரின் ஒரு புறத்தில் விபி சதுக்கம் என்ற இடமும் மற்றொரு பக்கம் ராஜா மில் பாலமும் அமைந்திருக்கும். நாங்கள் அன்று தர்மம் எங்கே படத்திற்கு செல்லும்போது கூட்டத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் தியேட்டருக்கு எதிரே அமைந்திருந்த தெருவில் பாதி தூரம் வரை மக்கள். ஒர்க் ஷாப் ரோட்டில் இந்த பக்கம் விபி சதுக்கம் வரை மக்கள் கூட்டம். அந்த பக்கம் அதே அளவிற்கு கூட்டம். அவ்வளவு பெரிய அரங்க வளாகமோ எள் போட்டால் எள் விழாது என்பது போல் பிதுங்கி வழிகிறது. எப்படியாவது டிக்கெட் வாங்கி விட மாட்டோமா என்று இரண்டு முறை உள்ளே போய் விட்டு வெளியே வருவதற்குள் உன் பாடு என் பாடு ஆகி விட்டது.
உள்ளே வரிசையில் நிற்கும் கூட்டம் நடுநடுவே ஆட்கள் உட்புக முயற்சிக்க அதன் காரணமாக வரிசை சிதற ஏற்கனவே பெருங்கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த காவல் துறையினர் லத்தியை சுழற்ற கூட்டம் சிதறி மக்கள் மெயின் ரோட்டிற்கு ஓடி வர அங்கே போக்குவரத்து ஸ்தம்பிக்க ஒரு கட்டத்தில் போலீசார் அந்த ரோட்டில் போக்குவரத்தை நிறுத்தி விட்டு மாற்று வழியில் திருப்பி விட்டனர். அதன் பிறகும் கூட்டத்தின் ஆவேசம் குறையாமல் வளாகத்துக்குள் செல்ல முயற்சிக்க மீண்டும் அங்கே தடியடி. டிக்கெட் ஏற்பாடு செய்வதாக உள்ளே சென்றிருந்த நண்பரை காணவில்லையே என்று நாங்கள் மீண்டும் உள்ளே செல்ல முயற்சிக்க அப்போது வரிசையில் நின்றிருந்த ஒரு சில ஆட்களின் நிலையை கண்டதும் மயக்கமே வந்து விட்டது. கால் முட்டியிலிருந்து ரத்தம் வழிந்தோட ஒருவர் நிற்க, லத்தி வீசியபோது கீழே விழுந்து கைகளில் காயத்தோடு இருவர் நிற்க எல்லாவற்றிருக்கும் மேலாக தலையிலிருந்து ரத்தம் வழிய அப்படியும் வரிசையை விட்டு விலகாமல் படம் பார்த்தே தீருவேன் என்று கூட வந்தவர்களுடன் வாதம் செய்துக் கொண்டிருந்த நபர். இது தவிர சட்டை கிழிந்தவர்கள், வேட்டி கிழிந்தவர்கள், சிதறி ஓடும்போது விட்டுப் போன செருப்புகள் ஆங்காங்கே கிடக்க இவை அனைத்தையும் தாண்டி படம் பார்க்க நின்ற அந்த மக்கள் வெள்ளத்தை இன்று வரை மறக்க முடியவில்லை. அதாவது நடிகர் திலகத்திற்காக எதையும் செய்ய தயாராக இருந்த கூட்டம் அது. அப்படிபட்ட ஒரு loyal crowd நடிகர் திலகத்திற்கு மதுரையில் இருந்தது. கால ஓட்டத்தின் சுழற்சியில் சிக்கினாலும் கூட இப்போதும் அந்த loyal crowd மதுரையில் நடிகர் திலகத்திற்கு இருக்கிறது என்பதுதான் நிஜம். இதற்கிடையில் எங்களுக்கு பின்னர் தியேட்டருக்கு வந்த என் மாமன் அந்த கூட்டத்தில் எங்களை தேடி கண்டுபிடிக்க முடியாமல் திரும்பி சென்றதை இரவு வீட்டிற்கு செல்லும்போது தெரிந்துக் கொண்டோம்.
அரங்க வளாகத்திற்கு வெளியே ஒரு பெருங்கூட்டம் நின்று அந்த வருடத்தில் வெளிவந்த படங்களின் சாதனைகள் பற்றியும் வெளிவரப் போகும் படங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்க என் கசின் எக்ஸ்ட்ரா டிக்கெட் வைத்திருந்த அறிமுகமான ஒரு ரசிகரிடம் கேட்க அவர் உடனே நீதான் ஏற்கனவே இரண்டு தடவை பார்த்து விட்டாயே உனக்கு எதற்கு? வேண்டுமென்றால் இந்த பையனுக்கு [என்னை சுட்டிக் காட்டி] தருகிறேன் என்று சொல்ல அவன் சின்ன பையன் அவனை தனியாக அனுப்ப முடியாது என்று என் கஸின் சொல்ல சரி இருக்கும் இந்த இரண்டு டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டு உள்ளே போய் விடுவோம். அங்கே எப்படியாவது தேற்றி விடுவோம் என சொல்லி கையில் வைத்திருக்கும் டிக்கெட்டுகள் மன்ற டோக்கன் என்பதால் அதற்குண்டான வரிசைக்கு போனால் அங்கேயும் கூட்டம் மென்னியை நெரிக்கிறது. நான் முன்னரே குறிப்பிட்டது போல் ஒரு நேரத்தில் ஒரு ஆள் மட்டுமே நகர்ந்து செல்ல முடியும் என்பது போன்ற அமைப்பு கொண்ட வரிசை. அந்த வரிசையில் ஒருவர் பின் ஒருவராக நிற்கும் போது கூட்டம் அப்படியே நெருக்க முதன் முறையாக நான் பயந்தேன். அதுவரை கூட்டத்தில் போகும்போது ஏற்படாத பயம் அப்போது ஏற்பட்டது. அந்த மூர்க்கத்தனமான நெருக்கலில் மூச்சு திணற நமக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயம் வந்தது. வேண்டாம் வெளியே போய் விடலாம் என்று பார்த்தால் நடுவில் மாட்டிக் கொண்டிருக்கிறோம், வரிசையை விட்டு வெளியே போக முடியாது எனபது புரிந்தது. நான் சிறுவன் என்பதால் எனக்கு முன்னும் பின்னும் உள்ளவர்கள் என்னை விட உயரம் என்பதால் ஏற்படும் இந்த சிக்கலை போக்க இரண்டு பக்கமும் இருந்த கம்பிகளின் மேல் கால் வைத்து மேலேறி கவுன்ட்டர் வரை அப்படியே முன்னேறினோம். கவுன்ட்டரில் இரண்டு டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்து மீண்டும் டிக்கெட் வேட்டையை தொடர்ந்தோம். பெண்கள் டிக்கெட், தியேட்டர் நிர்வாக அலுவலகம் ஒன்றையும் விடவில்லை. ஆனால் பலன் பூஜ்யம்.
இதற்கிடையில் படம் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட அனைவரும் உள்ளே நுழையும் முயற்சியில் ஈடுபட்டனர். அன்று ஐந்து காட்சிகள் நடைபெற்றதாலும் மாலை மணி 6.30 மணிக்கு மேல் ஆகிவிட்டதாலும் நியூஸ் ரீல் மற்றும் விளம்பரங்கள் ஏதுமின்றி படம் நேரடியாக துவங்கும் என்று தியேட்டர் ஆட்கள் சொல்லிக் கொண்டிருக்க அது ஒரு பக்கம் ஆவலும் மறுபக்கம் டிக்கெட் கிடைக்கவில்லையே என்ற பதட்டமும் ஒரே நேரத்தில் ஏற்பட, இவ்வளவு முயற்சி எடுத்து இத்தனை தூரம் வந்து விட்டு டிக்கெட் கிடைக்காமல் போவதா என்ற ஏமாற்றம் மனதை பிசைய இருவரும் அலைகிறோம். எக்ஸ்ட்ரா டிக்கெட் கொடுத்த நண்பர் உள்ளே சீட் கிடைக்காது. ஆகவே நான் உள்ளே செல்கிறேன் என போய்விட அரங்கத்தினுள்ளேயிருந்து பயங்கர கைதட்டல் சத்தம் காதைப் பிளக்கிறது. படம் சென்சார் சான்றிதழ் காண்பிக்கிறார்கள். கிட்டத்தட்ட அழுகையே வந்து விட்டது. ஆபிஸ் ரூம் பக்கத்தில்தான் குளிர்பான தின்பண்ட கடை. அங்கே உள்ளே உட்கார்ந்திருந்த ஒருவர் எங்களைப் பார்த்துவிட்டு [வெகு நேரமாக எங்களை கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார்] டிக்கெட் வேண்டுமா என்று கேட்க அப்படியே நாங்கள் மலைத்துப் போக [சென்ட்ரல் சினிமாவில் பட்டிக்காடா பட்டணமாவிற்கு நடந்தது போல] தெரிந்த ஒருவர் டிக்கெட் வேண்டும் என்று சொல்லியிருந்தார். அவருக்காக எடுத்து வைத்தது. அவர் இந்த கூட்டத்தில் சிக்கி கொண்டார் போல, நீங்கள் வேண்டுமானால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்ல தெய்வமே என்று அவரை வணங்காத குறையாக அந்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டு டிக்கெட் எடுத்து உள்ளே நுழையும் இடத்தில டிக்கெட் கிழிக்கும் தியேட்டர் ஊழியர், ஒரு constable மற்றும் இரண்டு நபர்கள் நின்று எங்களையும் மற்றும் எங்கள் முன் உள்ளே செல்ல முயன்றவர்களையும் தடுக்கிறார்கள். காரணம் என்னவென்றால் படம் பார்க்க வந்த அந்த இரண்டு நபர்களில் ஒருவரின் கை கடிகாரம் தொலைந்து போய் விட்டதாம். ஆகவே ஒவ்வொருவரையும் சோதனை செய்தே உள்ளே அனுப்பிக் கொண்டிருக்க எங்களுக்கோ தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் படம் ஓடிக் கொண்டிருக்கிறதே என்ற கவலை. ஒரு வழியாக சோதனை முடிந்து டிக்கெட் கிழிக்கப்பட்டு உள்ளே நுழைந்தால் காது செவிடாகும் வண்ணம் ஒரு வெங்காய வெடி வெடிக்க அந்த சத்தத்திற்கு இணையான கைதட்டலகளுடன் ஸ்க்ரீனில் நடிகர் திலகம் முதுகில் கூடையை மாட்டிக் கொண்டு அறிமுகமாகும் காட்சி.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th October 2014, 12:10 AM
#79
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி
டிக்கெட் கிழிக்கப்பட்டு உள்ளே நுழைந்தால் காது செவிடாகும் வண்ணம் ஒரு வெங்காய வெடி வெடிக்க அந்த சத்தத்திற்கு இணையான கைதட்டலகளுடன் ஸ்க்ரீனில் நடிகர் திலகம் முதுகில் கூடையை மாட்டிக் கொண்டு அறிமுகமாகும் காட்சி.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
அரங்கத்தினுள்ளே நுழைந்து இடம் தேடினால் ஒரு காலி சேர் கூட கண்ணுக்கு தெரியவில்லை. பாடல் வேறு ஆரம்பித்து விட்டது. காதைப் பிளக்கும் அலப்பரை சத்தம். அந்த 90 பைசா வகுப்பின் முதல் வரிசையில் ஒரு காலி நாற்காலி தெரிய உடனே என்னை அங்கே உட்கார வைத்துவிட்டு என் கசின் பின்வரிசைக்கு போய் விட்டான். சிறிது நேரத்தில் உள்ளே வந்த மற்றொரு நபர் தம்பி கொஞ்சம் இடம் கொடுப்பா என்று சொல்லி நான் அமர்ந்திருந்த நாற்காலியில் அவரும் வந்து அமர்ந்து விட்டார்[ஆஹா இதற்கு என் கசினையே உட்கார சொல்லியிருக்கலாமே என்று தோன்றியது].
முதல் பாடலே நடிகர் திலகத்தின் ஸ்டைல் மற்றும் பாடல் வரிகளின் அர்த்தம், முத்துராமன் குமாரி பத்மினியின் காதல் காட்சி, ராஜபிரதிநிதியின் ஆட்கள் ஊருக்குள் கொள்ளையடிக்க வருதல் என்று பல சம்பவ கோர்வைகளின் சங்கமமாக அமைந்திருந்ததால் [முதல் காட்சியிலே கதை ஆரம்பித்து விடும்] இங்கே அலப்பரை அதிகமானது. அதிலும் கண்ணதாசனின் வரிகள்
மனிதனின் வாழ்க்கையில் நாணயம் இருந்தால் மனிதருள் மாணிக்கம் என்போம்
தன்னிகரிலா தலைவன் பிறப்பான் ஆயிரத்தில் ஒரு நாளே
என்ற வரிகளின் போது பெருந்தலைவரை வாழ்த்தி கோஷம் கிளம்பியது.
திறமை உள்ளவன் எங்கிருந்தாலும் தேசம் அவனிடம் ஓடும் என்ற வரியின்போதோ
அடுத்த வரிகளை கேட்கவே முடியாமல் அப்படி ஒரு சத்தம். அந்த சத்தம் சற்றே அடங்கவும்
தோட்டம் என்பது எனக்கே சொந்தம் என்பது சுயநலக் கூட்டம் என்ற வரி திரையில் ஒலிக்கவும் மீண்டும் பயங்கர கைத்தட்டல், கோஷம்.
அடுத்த சரணத்தில்
ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாறு இல்லை
என்ற வரிகளுக்கெல்லாம் தியேட்டர் உள்ளே எழுந்த கோஷம், கேட்ட கைதட்டல், ரசிகர்கள் எழுந்து ஆடியதை எல்லாம் எழுத வேறு புதிய வார்த்தைகள்தான் உருவாக்க வேண்டும்.
அதுவும் அந்த இறுதி சரணத்தை முடித்து பல்லவியைப் பாடிக் கொண்டே நடிகர் திலகம் நடந்து வரும் அந்த ஸ்டைல் [ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும்] என்னை சுற்றி இருந்தவர்கள் யாரும் சீட்டில் .உட்காரவேயில்லை.
குமாரி பத்மினியிடம் தவறாக நடக்க முயற்சிக்கும் தளபதியை முத்துராமன் கொல்வது, ஊர் மத்தியில் ஆட்களை கூட்டி வைத்து ராமதாஸ் கேள்வி கேட்கும்போது முத்துராமன் சட்டையில் படிந்திருக்கும் ரத்தக்கறையை மறைக்க சொல்லி நடிகர் திலகம் சுட்டிக் காட்டி விட்டுப் போவது, ராஜ பிரதிநிதியை சந்திக்கப் போய்விட்டு அங்கே ராமதாசை குற்றவாளி என்று சொல்லிவிட்டு திரும்ப உன் பெயர் என்ன என்று கேட்கும் நம்பியாரிடம் அப்படியே பக்கவாட்டில் திரும்பி சேகர் ராஜசேகர் என நடிகர் திலகம் சொல்லும்போதெல்லாம் ஒரே இடியோசைதான்.
அதன் பிறகு மீண்டும் நடிகர் திலகம் நம்பியார் சந்திக்கும் காட்சி. உங்கள் ஆட்கள் நாடு மக்கள் சுதந்திரம் தியாகம் என்று பேசுவார்கள். ஆனால் நாங்களோ சூழ்ச்சி வலை விரித்து நாட்டை வசப்படுத்தி விடுவோம் என்று நம்பியார் சொல்ல அதற்கு மக்கள் முன்பு போல் இல்லை. உங்களை இனம் கண்டுகொண்டு விட்டார்கள். உங்கள் ஆட்சி முடிவக்கு வரத்தான் போகிறது என்று நடிகர் திலகம் பதில் சொல்லும்போது அன்றைய நாளின் அரசியல் சூழலுக்கு ஏற்ப எழுதப்பட்ட வசனங்களுக்கு அமோக வரவேற்பு.
அடுத்து சிறைச்சாலை சண்டைக்கு தியேட்டர் அலறியது என்றால் அங்கேயிருந்து தப்பித்து நாடோடி கும்பலால் காப்பாற்றப்பட்டு கெட்டப் மாறி வரும்போது மீண்டும் அலப்பரை. தாயை பார்க்க வந்துவிட்டு தாய் இறந்துவிட வாய் விட்டு அழக் கூட முடியாமல் விம்முவார். அதகளமானது அரங்கம். அதே காட்சியில் தாய் இறப்பதற்கு முன் தாயை விட்டு விலகி நடக்க முயற்சிப்பார். அப்போது அவரின் தாய் சேகர் என்று ஈனக்குரலில் அழைக்க முகம் திரும்பாமல் காலை வளைத்து அவர் முதுகு காட்டி நிற்கும் போஸிற்கு பயங்கர அலம்பல். இதையெல்லாம் அன்று பார்த்தபோது [எங்கே பார்க்க விட்டார்கள்?] அவ்வளவு உன்னிப்பாக கவனிக்க முடியவில்லை. மீண்டும் படம் பார்த்தபோதுதான் எந்தெந்த காட்சிக்கு ஏன் அப்படி ஒரு அலப்பரை நடந்தது என புரிந்தது.
அடுத்து நாற்சந்தியில் வைத்து முத்துராமனியும் குமாரி பத்மினியையும் தூக்கிலிட முயற்சிக்கும்போது அந்த இடத்திற்கு வெள்ளை குதிரையில் சிவப்பு நிற உடையணிந்து வரும் நடிகர் திலகதைப் பார்த்ததும் ஆரம்பித்த கைதட்டல் அவர் மக்களிடையே பேசும் வசனங்களுக்குயெல்லாம் [குறிப்பாக இரண்டு முறை அவர் வெவ்வேறு modulation-ல் சொல்லும் இதே போல் இதே போல் என்ற வார்த்தை எல்லாம் பெரிதாக வரவேற்கப்பட்டன]. உடன் வந்த தர்மம் எங்கே பாடல் காட்சி, அதன் பிறகு ஆற்றின் கரையில் நடக்கும் சண்டைக் காட்சி. அதில் இரண்டு கைகளிலும் கத்தி பிடித்து சற்றே உயரமான மணல் திட்டிலிருந்து நடிகர் திலகம் குதிக்கும் காட்சியெல்லாம் ஆஹா ஓஹோ!
பிடித்து செல்லப்பட்ட ஊர் மக்களை விடுவிக்க ஒற்றை கண் தெருப் பாடகனாக வந்து பாடும் வீரமெனும் பாவைதனை கட்டிக் கொள்ளுங்கள் பாடலுக்கும் சரி பாடல் முடிவில் கிடாரின் பின்புறத்தில் துப்பாக்கியை மறைத்து வைத்து சுடும் ஸ்டைல் அதன் பிறகு அதே காட்சியில் பிச்சுவா கத்தி வீசும் வேகம், கை அசைவு. தொடர்ச்சியாக வரும் காட்சிகளை பார்க்க பார்க்க நிற்காமல் வரும் அலைகளைப் போல் கைதட்டல்கள் கோஷங்கள் எதிரொலித்துக் கொண்டேயிருந்தன.
மீண்டும் ஒரு முறை ஊர் மக்கள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டு கோட்டைக்குள் கம்பங்களோடு சேர்த்து கட்டப்பட்டு உயிரோடு எரித்து கொல்லும்படி நம்பியார் உத்தரவிட கோட்டையை கைப்பற்றும் முயற்சியில் 5 பேர் போக வேண்டும் என முடிவு செய்வது அதற்கு சிவப்பு வண்ண அட்டையை வைத்திருப்பவர்கள்தான் போக வேண்டும் என்பது, செங்குத்தான மலையின் மீது கயிறை கட்டி ஏறுவது, மேலே ஏறி செல்லும் ஒவ்வொருவரும் சிப்பாயிடம் மாட்டிக் கொள்வது, தந்திரமாக அவனை வீழ்த்தி விட்டு மாளிகைக்குள் புகுந்து பின், நடிகர் திலகம் நம்பியார் போல் உடையணிந்து [பையில் அதற்கான ஆயத்த உடைகளை கொண்டு வந்திருப்பார்] சிப்பாய்களை கட்டளையிடுவது இப்படி படம் விறுவிறுப்பின் உச்சிக்கே போக அப்போது நம்பியார் அங்கே வந்து விடுவார்.
இருவரும் மெய்க்காப்பாளனிடம் தான்தான் உண்மையான ராஜ பிரதிநிதி என்று கூற அந்த கைகலப்பில் நடிகர் திலகம் வேடம் கலைந்து விட ராஜ பிரதிநிதியின் உடைகளை முற்றிலுமாக களைந்து விட்டு white and white-ல் நடிகர் திலகம் நின்று அங்கே சுவரில் மாட்டியிருக்கும் நீண்ட உடை வாளை எடுத்து நீட்டி காலை வளைத்து நின்று ஒரு போஸ் கொடுப்பார். அப்போது ஆரம்பித்தது இடியோசை. கத்தி சண்டையின் போது ஒரு கையை இடுப்பில் வைத்து காலால் வேகமான ஸ்டெப்ஸ் போட்டு வலது கையால் கத்தியை சுழற்றி சண்டை போடும்போதெல்லாம் வானம் இடிப்பட்டது பூமி பொடிப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு நிலை அது.
சண்டையில் தோற்று நம்பியார் ஆற்றில் குதித்து போய்விட கொடுங்கோல் ஆட்சி ஒழிந்து மக்கள் நடிகர் திலகத்தை தோளில் ஏற்றி அரியணையேற்றும் காட்சியோடு இடைவேளை. ஒரு சில இந்தியா பாகிஸ்தான் போட்டிகளின்போது the atmosphere was electric என்று எழுதுவார்கள். அதாவது அந்த இடத்தில வீசும் காற்றை தொட்டால் ஷாக் அடிக்கும் என்ற அர்த்தத்தில். அன்றைய தினம் மதுரை ஸ்ரீதேவி தியேட்டரில் அத்தகைய சுற்றுசூழல்தான் நிலவியது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th October 2014, 08:04 AM
#80
Senior Member
Seasoned Hubber
முரளி சார்
தர்மம் எங்கே படத்தில் திரையரங்கு ஆரவாரம் அனைவருக்கும் அந்நாட்களில் பார்த்த ஞாபகத்தை வரவழைக்கும் வலிமை தங்கள் எழுத்துக்களுக்கு உள்ளது. மேலும் மேலும் தங்களிடமிருந்து எதிர்பார்க்க வைக்கும் ஆவலைத் தங்கள் எழுத்து தூண்டுகிறது.
காத்திருக்கிறோம் இன்னும் படிக்க..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks