Originally Posted by
P_R
வெங்கி, படத்தின் முக்கியமான படிமத்தை மிக தட்டையாக உள்வாங்கியிருக்கிறீர்கள். இது ஒரு சோகத் திணிப்பு அல்ல. விளக்க முயல்கிறேன்.
யோக்கியன்-அயோக்கியன் பற்றி முத்துசாமி வீட்டில் நடக்கும் உரையாடல் முக்கியமானது. சமுதாயத்தைக் கேள்வி கேட்கும் துணிவு, உரிமை யாருக்கு உண்டு என்பதைப் பேசும் காட்சி இது. அடுத்தவனை விட யோக்கியன் என்றுதான் சொல்லிக்கொள்ள முடியுமே தவிர, absolute scaleல் சொல்லிக்கொள்ள முடியாது என்று முத்துசாமி, கிருஷ்ணசாமியை வாயடைக்க வைக்கிறார்.
அந்த வசனம் Voice-overஆக வரவர அடுத்த காட்சி பஞ்சாபகேசனும், கிருஷ்ணசாமியும் நேப்பியர் பாலத்தில் நடந்து வருகிறார்கள். வயது மரியாதையைக் கூட ஒரு கணம் மறந்து, பஞ்சாபகேசனை, "குடலை அறுக்கும்" துர்நாற்றம் வீசும் கூவத்தை நுகரச் சொல்கிறான் கிருஷ்ணசாமி.
'லஞ்சம் குடுக்கவில்லை என்றால் இன்னின்ன இழப்புகள் ஏற்படும் என்றாலும் ஏற்கத் தயார் என்று சொல்பவன் தான் கேள்விகேட்க தகுதியானவன். 'வேறு வழியில்லை' என்று சொல்லி, கொடுத்துவிட்டு, 'அநியாயம் பண்றாங்களே' என்று முனகுபவனுக்கும், ex-post சீற்றம் கொண்டு பொங்குபவனுக்கும் அந்த உரிமை கிடையாது. தனிமனித இழப்புகள் இல்லாமல் பிரச்சனைகளுக்கு தீர்வை எதிர்பார்ப்பது வேடிக்கையானது' என்பது தான் கமல் முன்வைக்கும் கருத்து.
சமுதாயத்துக்கும் தனி மனிதனுக்குமான உறவு என்ன? தன் வசதிக்காக அதை பயன்படுத்துகிறான். தன் அழுக்கைக் களைந்து அதில் எரிந்து சுத்தம் எய்த நினைக்கிறான். இதில் கங்கை-கூவம் இரண்டும் ஒன்று. கூவத்தின் துர்நாற்றம் நிதர்சனம், என்பது தான் வித்தியாசம். கங்கையின் முங்கி பாவத்தை களைவது என்பது என்ன? நம் பிரச்சனைகளுக்குத் தீர்வு இது போல 'வெளியிலிருந்து' வரும் என்ற எதிர்பார்ப்பு. தெய்வாதீனமாக நம்மைச் சுற்றி உள்ள அசிங்கங்கள் நீங்கும் என்ற எதிர்பார்ப்பு.
வெங்கடாசலத்தை கொலை செய்ய நெருங்கும்போது கூட, அது தனிநபர் பழிதீர்க்கும் செயலாக இல்லை என்பதை அந்த காட்சியின் வசனங்கள் தெளிவுபடுத்தும். கிருஷ்ணசாமியின் கோபம் ஒரு சமுதாயக்கோபம். அதுவே நம்மை அடுத்த காட்சியை உள்வாங்கத் தயார்படுத்துகிறது.அதன்பிறகு நடக்கும் காட்சி ஒற்றை அர்த்தத்தைத் தாண்டி உயர்ந்து நிற்கிறது.
தன்னளவில் கிருஷ்ணசாமி ஏற்றுக்கொண்ட இழப்பு ஒரு badge of honor. (வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேனென்று நினைத்தாயோ). மேற்சொன்ன எல்லாவற்றிற்குமான குறியீடாகி, திரைப்படத்தையே அடுத்த தளத்துக்கு உயர்த்துகிறது அந்த முடிவுக் காட்சி. அக்காட்சி வெறும் சோகத் திணிப்பு அல்ல.