சட்டத்தை எரித்த தோழர்களை எல்லாம் தேடிப் பிடித்து, அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், இரவு பகல் பாராது கடுமையாக உழைத்து, இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். 1946 இல் இந்தியாவில் டொமினியன் அந்தஸ்துள்ள இடைக்கால அரசு ஒன்று அமைக்கப்பட்டது. அப்போது பிரதமர் நேரு, பாகிஸ்தானைச் சார்ந்த லியாகத் அலிகான், நிதியமைச்சர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் 1947 இல் கூடிய அரசியல் நிர்ணயசபை சட்டத்தை வகுத்தது. டி.டி. கிருஷ்ணமாச்சாரி, அல்லாடி கிருஷ்ணசாமி, கோபால்சாமி அய்யங்கார், கே.எம். முன்ஷி ஆகிய பார்ப்பனர்களும், அசாம் மாநிலத்தைச் சார்ந்த முகம்மது சாதுல்லா என்ற முஸ்லீமும், அரசியல் சட்டத்தை உருவாக்கிய குழுவில் இடம் பெற்றிருந்தனர். குழுவின் தலைவர் டாக்டர் அம்பேத்கர். பிறகு அம்பேத்கர் அமைச்சரவையிலிருந்து வெளியே வந்து - பார்ப்பனர்கள் தன்னை ஏமாற்றி விட்டனர் என்று கூறினார். நானே அரசியல் சட்டத்தை எரிப்பேன் என்றார். அதைத்தான் நமது தோழர்களும் செய்தார்கள். நமது தோழர்கள் எந்த சலுகையையும் எதிர்பார்த்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. சிறையேகவில்லை.
ஆனாலும் வயதே ஏறாதவர்கள் எல்லாம் காங்கிரஸ் தியாகிகள் என்ற பெயரிலே மான்யம் வாங்கிக் கொண்டிருக் கிறார்கள். காங்கிரஸ் கட்சி கடைசியாக நடத்திய போராட்டமே 1942 இல் நடத்திய ஆகஸ்டு கிளர்ச்சிதான். ஆனால் வயதுக்கும் வரலாறுக்கும் சம்பந்த மில்லாதவர்கள் எல்லாம் மான்யம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் - எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்தபோது பெரியார் பொன்மொழிகளைத் தொகுத்து புரட்சி மொழிகள் என்ற நூலை வெளியிட்டார். பெரியாரின் - 144 வண்ணப் படங்கள் தொகுக்கப்பட்டு அச்சிடப்பட்டது. அப்போதுதான் சட்ட எரிப்புப் போராட்டத் தில் சிறைச் சென்ற தோழர்களுக்கும் எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்பினார். அவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சட்டத்தை எரித்தவர்களுக்கு அரசு மான்யம் தர முடியாது என்று அதிகாரிகள் கூறினார்கள். அரசு மான்யத்தை இப்போது வாங்கிக் கொண்டு, பிறகு திருப்பித் தரவேண்டும் என்ற நிலை வந்து விட்டால் என்னவாகும் என்று, பலர் அரசு மான்யம் வழங்க தயங்கினர். ஒரு பிரிவினர் பெரியார் உருவம் பொறித்த கேடயம் வழங் கினால் போதும் என்றனர். அவர்களுக்கு கடற்கரையில் நடந்த விழாவில் கேடயம் வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினர் நிதி உதவி பெற்றனர். இந்த நிதி உதவி திரும்பப் பெற முடியாத - முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து முதல்வர் எம்.ஜி.ஆர். வழங்கினார்.
( 19.05.07 தஞ்சையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய சாதி ஒழிப்பு மாநாட்டில் , சட்ட எரிப்புப் போராளிகளுக்கு விருது வழங்கி மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசு அவர்களின் உரையிலிருந்து )