Results 1 to 1 of 1

Thread: பாரந்தாங்கி !

  1. #1
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    பாரந்தாங்கி !

    எனக்கு தாங்க முடியாத வலி எடுத்து விட்டது. பிரசவ வேதனை. கூடவே என்ன ஆகுமோ எனும் பயம். ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் தவித்துக் கொண்டிருக்கிறேன். என் கணவர் என் பக்கத்தில். ஆதரவாக, தலையை வருடியபடி " ஒண்ணும் கவலைப் படாதே கலா. தைரியமா இரு. எல்லாம் நல்ல படியாக முடியும்". என்று தைரியம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், அவர் முகத்தில் கலவரம், எனக்கு நிதர்சனமாக தெரிந்தது.

    எனது பிரசவம் கொஞ்சம் கவலைக்கிடம்தான்! டாக்டர்கள் முன்பே சொன்னது எனது கர்பப்பை கோளாறு, கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் என. இதெல்லாம் ,எனக்கு ஐந்து மாதத்திற்கு முன்பே தெரிந்தது தான். இருந்தும், நான் தாயாக, எதற்கும் தயாராக இருக்கிறேன்.

    ***
    எனக்கு மூச்சு வாங்கியது. யாரோ எனக்கு ஊசி போடுகிறார்கள். டாக்டர்கள் என்னை சுற்றி நிற்கிறார்கள், கத்தியை கைகளில் வைத்துக் கொண்டு. எனக்கு மயக்கமாக வந்தது. . ஏதேதோ நினைவுகள் மாறி மாறி. யாரோ என்னைச்சுற்றி சுற்றி ஓடுகிறார்கள். ஏன்? ஒன்றும் புரியவில்லை. மெதுவாக எனக்கு நினைவு தப்ப ஆரம்பித்தது. ஒரே கும்மிருட்டு.


    குழந்தை பிறந்து விட்டது. என் கஷ்டம் , கவலை தீர்ந்தது. அப்பா! இதுவரை என்னுள்ளே இருந்த குட்டி கண்ணன், இப்போது வெளியே. அப்பப்பா!. ஒரே அழுகை. தாங்கவில்லை அவன் ஆர்பாட்டம். என் மடியிலேதான் எப்போதும். எல்லாவற்றிற்கும் நான் வேணும் அவனுக்கு. எனக்கு ஓய்வும் இல்லை, ஒழிவும் தூக்கமும் இல்லை. எப்போதும் அவன் நினைவே.

    இப்போது கண்ணனுக்கு ஒரு வயது. இதுவரை என்னையே ஒட்டி இருந்த குழந்தை, இப்போது நடக்கிறது. தத்தி தத்தி. என்னை விட்டு, வாசலை நோக்கி. வெளியே உலகத்தை பார்க்க. வெளி உலகத்தை பார்க்க என்ன ஒரு ஆசை இவனுக்கு.

    இப்போது கண்ணனுக்கு வயது ஐந்து. கடந்த ஒரு வருடமாக அவனுக்கு வெளியிலேதான் விளையாட்டு. வீட்டிலே இருக்கும்போது, எல்லாத்துக்கும் ஒரு அழுகை. என்னோட விளையாட அவனுக்கு விருப்பமுமில்லை. நேரமுமில்லை.

    கண்ணன் இப்போ வளர்ந்துட்டான். குரல் உடைய ஆரம்பித்து விட்டது. இப்போது கண்ணனுக்கு பதினைந்து வயது. என் பக்கத்திலே தான் உட்கார்ந்து இருக்கிறான். ஆனால், என் கிட்டே பாடம் கேக்க விருப்பமில்லே. போம்மா உனக்கு ஒண்ணும் தெரியாது. நானே படிச்சிகிறேம்மா. என்னை விட்டு விலகரானோ? ரொம்ப நாளாவே அவனுக்கு தனி அறைதான்.

    ஆயிடுத்து 20 வயது கண்ணனுக்கும். இப்போ அவனுக்கு நானே வேண்டாம். அவன் அறைக்குப் போனாலே, என்னம்மா வேணும்? கதவை தட்டிட்டு உள்ளே வரக்கூடாது? என்று அதட்டுகிறான். அவன் உலகமே வேறே. அவனுக்கு இப்போ நான் பணம்காய்ச்சி மரம் மட்டுமே. வெறும் பாரந்தாங்கி.

    இப்போது முப்பது வயது கண்ணனுக்கு. நானும் என் கணவரும் பாடு பட்டு, கடன் வாங்கி அவனை படிக்க வெச்சோம். நல்ல வேலை வாங்கி கொடுத்து, நல்ல இடத்திலே கல்யாணமும் பண்ணி வெச்சோம். இப்போது, அவனுக்கு நாங்க இடைஞ்சல். இப்போ நான் அவனுக்கு சுவையற்ற சுமை. ரத்தின சுருக்கமாக இதை சொல்லிட்டு, கண்ணன் தனிக் குடித்தனம் போயிட்டான். எங்க மன வலி பற்றி அவனுக்கென்ன?

    இப்போது, எனக்கு வயது அறுபத்தி ஐந்து. காசு பணம் எங்ககிட்டே இல்லை. எல்லாம் கண்ணன் படிப்புக்கு, அவன் வீடு வாங்க செலவாயிடுத்து. எனக்கு கான்சர். எங்களுக்கு முதியோர் இல்லம் வாசம். பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு. இப்போதெல்லாம், கண்ணன் என்னைக் கண்டு கொள்வதே இல்லை. கிட்டே வந்தா ஒட்டிப்பேனோன்னு பயம். இதுக்காகவா இவனை இவ்வளவு பாடு பட்டு பெத்தேன்? வளர்த்தேன்?

    சே! என்ன வாழ்க்கை இது? இப்போ நான் அவனுக்கு வெறும் பாரம். துக்கம் தொண்டையை அடைத்தது. உலகமே இருண்டது போல இருந்தது. மயக்கம் வரும் போல இருந்தது. கண்ணை மூடினேன்.

    ****

    கலா ! கலா! கண்ணை விழிச்சுப்பாரு. மெதுவா! மெதுவா! எழுந்திரு! என் கணவர் செந்தில்.

    இப்போ நான் எங்கே இருக்கேன்? டாக்டர் என்ன சொல்லறாங்க?

    ஆஸ்பத்திரிலே தான் கலா ! மனசை திடப் படுத்திக்கோ கலா!. இப்போதான் நீ தைரியமா இருக்கணும்

    என்ன சொல்றீங்க?

    எல்லாம் முடிஞ்சு போச்சும்மா! நான் பயந்தா மாதிரியே உனக்கு குறைப் பிரசவமாயிடுச்சு. நீ பொழச்சதே பெரிய விஷயமாம்.

    பரவாயில்லேங்க! நான் எதிர்பார்த்தது தான். என் குறை எனக்கு தெரிந்தது தானே. நீங்க இருக்கீங்களே, அதுவே போதும்!. குழந்தை யில்லேன்னா என்ன?

    என்னம்மா சொல்றே? செந்தில் குழப்பமாக பார்த்தார் .

    எப்படியிருந்தாலும், நம்மை விட்டு நம்ம குழந்தை, அவனோ அல்லது அவளோ, மிஞ்சிப் போனால் இருவது வருஷம்தான் கூட இருப்பாங்க. இதிலேயும் கொஞ்சம் கொஞ்சமா நம்மை விட்டு தூர விலகுவாங்க. அப்புறம் ஒரேயடியா விட்டுட்டு போயிடுவாங்க. கடைசியிலே வருத்தம் தான் மிஞ்சும். இதெல்லாம் நமக்கு தேவையேயில்லை. அப்போ போறதை இப்போவே போயிட்டான்னு நினைச்சிக்கிறேன்.

    ஐயோ! டாக்டர். இங்கே பாருங்க. என் மனைவி என்னன்னமோ பேசறாங்க? பயமா இருக்கு! செந்தில் பதற்றமாக.

    கூட இருந்து கேட்டுக் கொண்டிருந்த டாக்டர் சொன்னார். இல்லே! இல்லே! செந்தில். உங்க மனைவி நார்மல்தான். இப்போ நீங்க அவங்களுக்கு ஆறுதலா இருந்தா அதுவே போதும். நீங்கதான் நொடிந்து போகக் கூடாது.

    என்ன சொல்றீங்க டாக்டர் ?

    அவங்க ரொம்ப திடமான மனமுடயவங்க. ஏற்கெனவே அவங்களுக்கு தன் உடல் பிரச்னை தெரியும். ப்ளசண்டா கோளாறு இருக்கறதாலே, குழந்தை இறந்தே பிறக்கும் அபாயம் இருக்குன்னு நல்லாவே தெரியும். என் கூட பேசியிருக்காங்க. மன ரீதியா தனக்கு ஏற்படக்கூடிய சோகத்தை தாங்க, தன்னை தானே அவங்க தயார் படுத்திக் கிட்டாங்க. துயரத்தை தன் வழியிலே ஒப்புக்கிட்டாங்க.

    கேட்டுக் கொண்டிருந்த எனக்கு தோன்றியது. ஒரு வேளை டாக்டர் சொல்லறது நிஜமா இருக்குமோ! இல்லாத பிள்ளை மேல் வெறுப்பை வளர்த்துக் கிட்டு, நான் வலியை மறக்க என் மனம் முயற்சிக்கிறதோ?

    சீ !சீ ! இந்த பழம் புளிக்கும் மாதிரி என்னை நானே சமாதானப் படுத்திக்கிறேனோ? எனக்கு தெரியலை. ஒண்ணு மட்டும் நிச்சயம். இடிந்து போறதாலே எந்த லாபமும் இல்லை. இருக்கிற வரைக்கும் செந்திலோட ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாக இருக்கப் போறேன். அவருக்கு ஆதரவாக இருக்கணும். இந்த சோகத்தை சேர்ந்து தான் எதிர்கொள்ளணும்.

    செந்தில், எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க? சீக்கிரமே வீட்டுக்கு போலாம், வாங்க செந்தில். இந்த ஆஸ்பத்திரி வாடையே பிடிக்கலே.- புடவையை எடுத்து இழுத்துக் கட்டிக்கொண்டேன்.

    குழந்தை பாக்கியம் எனக்கு இல்லையென்றால் என்ன? இனி என் கணவன், என் குழந்தை, செந்தில் தானே!

    எனக்கு அவர், அவருக்கு நான்தானே எல்லாம். வேண்டுமென்றால், ஒரு நல்ல அனாதை ஆஸ்ரமத்திற்கு உதவி செய்தால் போச்சு. அந்த குழந்தைகள் வளர்ப்புக்கு, கல்விக்கு பணத்தால், உழைப்பால் முடிந்ததை செய்வோம். அதில் திருப்தி அடைவோம். ஏன் செந்தில் விருப்பப் பட்டால், ஒரு குழந்தையை தத்து கூட எடுத்துக் கொள்வோம்.

    வாழ நினைத்தால் வழியா இல்லை இந்த பூமியில்?


    **** முற்றும்

    ஆ.கு : நாம் எப்போதும் விரும்புவது சந்தோஷம் தான்.. துக்கம் வேண்டாம்தான். எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பதே நல்லதுதான் . ஆனால், வாழ்க்கை என்பதே இன்பமும் துன்பமும் கலந்து வருவதே. எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் நம்மிடையே வித்தியாசம் உண்டு .

    சிலர், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவர். சிலர் மனது பேதலித்து விடும். (Shut off from reality) . கற்பனை உலகில் வாழ ஆரம்பித்து விடுவர். சிலர் டிப்ரேஷன், குடி , போதை போன்ற வழக்கத்தில் தன் துன்பத்தை மறக்க முயலுவர். ஆனால், சிலர், தன்னை திடப் படுத்திக் கொண்டு வாழ முயற்சிப்பர்.

    ஒருவருக்கொருவர் இது வேறுபடுகிறது. அவர் அவர் மன நிலைக்கேற்ப. இந்த கதையில் கலா தன்னை திடப் படுத்திக் கொள்ள ஒரு நெகடிவ் எண்ணத்தை வளர்த்துக் கொண்டாள்.

    வள்ளுவர் கூறுகிறார் : இடுக்கண் அழியாமை என்ற அதிகாரத்தில் :

    "இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅதவர்".

    (துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.)

    DR. எலிசபெத் குப்ளர் ராஸ், மன நல வல்லுநர் , அவரது புத்தகத்தில் ( நன்றி : On Death and Dying), சாவை எதிர்கொள்ளும் ஐந்து நிலைகளை விவரிக்கிறார்.

    இறப்பவராகட்டும் , தனக்கு வேண்டியவரை இழந்தவராகட்டும், அம்மா வை இழந்த குழந்தையாகட்டும், அல்லது தாய்மை எதிர்பார்த்து குறைப் பிரசவத்தில் சேயை இழந்த அம்மாவாகட்டும் ,இது பொருந்தும் என சொல்கிறார்கள்... .

    மறுப்பு, கோபம், பேரம், மனச்சோர்வு, துயரத்தை ஒப்புக்கொள்ளுதல் (சாவை எதிர்நோக்குதல் அல்லது வாழ தொடங்குதல்) என 5 வகையாக நிலைகளை DR. ராஸ் பிரிக்கிறார். இந்த ஐந்தும் அந்த வரிசையில் வரவேண்டும் என இல்லையாம்.

    இதில், கலா ஐந்தாவது நிலையை எட்டிவிட்டார். அதற்கு அவரை அறியாமல், அவர் கொண்ட வழி 'சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்' பாணியே.


    மேலும் விவரங்களுக்கு http://en.wikipedia.org/wiki/K%C3%BCbler-Ross_model
    Last edited by Muralidharan S; 2nd April 2017 at 03:23 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •