-
4th July 2014, 12:51 AM
#11
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
1969-ஐ தொடர்ந்து 1970-லும் நடிகர் திலகத்தின் படங்கள் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளை கண்டது.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
1971-ல் எம்ஜிஆரின் முதல் படம் ஜனவரி 26 சிந்தாமணியில் வெளியான குமரிகோட்டம். இதுவும் அந்த இலக்கை எட்டவில்லை. இங்கே இரு துருவம் படம் ஜனவரி 14 அன்று நியூ சினிமாவில் வெளியானது. படத்தின் ரிப்போர்ட் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் தொடர் ஹவுஸ் புல் பற்றி யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை. பிப்ரவரி 6 அன்று தங்கைக்காக ஸ்ரீதேவியில் ரிலீஸ். பெண்கள் ஆதரவு இந்தப் படத்திற்கு பிரமாதமாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் இந்திய பாராளுமன்றத்திற்கும் தமிழக சட்டசபைக்கும் முன்கூட்டியே பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு விட, நமது ரசிக மன்ற கண்மணிகள் பெருந்தலைவரும் மூதறிஞர் அவர்களும் உருவாக்கிய கூட்டணிக்காக உழைக்க களம் புகுந்து விட்டனர். அதனால் தங்கைக்காக படமும் சரி மிக சரியாக தேர்தல் நாளான 1971 மார்ச் 5 அன்று நியூ சினிமாவில் வெளியான அருணோதயம் படமும் சரி [இந்த முக்தாவை என்ன சொல்லி திட்டுவது?] படத்தின் தரத்திற்கேற்ப வெற்றியை பெற முடியாமல் போனது. அருணோதயம் வெளியாகி 3 வாரத்தில் மார்ச் 26 அன்று குலமா குணமா ஸ்ரீதேவியில் ரிலீஸ். இந்த பக்கம் அருணோதயம் ஓடிகொண்டிருக்கிறது. அந்த பக்கம் 18 நாட்களில் ஏப்ரல் 14 அன்று சுமதி என் சுந்தரி அலங்காரிலும், பிராப்தம் சென்ட்ரலிலும் வெளியாகி விட்டது. 90 நாள் இடைவெளியில் 6 படங்கள் வெளியானால் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளுக்கு ஏது வாய்ப்பு?
1971 மே 29 சனிக்கிழமை மதுரை நியூசினிமாவில் ரிக்ஷாகாரன் வெளியானது. வணிக ரீதியில் வெற்றி பெற்ற இந்த படம் 100 தொடர் ஹவுஸ்புல் காட்சிகளை கண்டது. ஐந்து வாரத்தில் 115 காட்சிகளும் அரங்கு நிறைந்த இந்த படம் 36வது நாள் சனிக்கிழமை காலைக்காட்சியில் ஹவுஸ்புல் விட்டுப் போனது.
இப்போது ball was in our court. அதற்கு நமக்கு வந்து அமைந்தது சவாலே சமாளி. ஜூலை 3 அன்று ஸ்ரீதேவியில் வெளியாகி மிக பிரமாதமான ரிப்போர்ட். படம் சர்வ சாதாரணமாக ஹவுஸ் புல் ஆகிக் கொண்டிருந்தது. எந்தளவிற்கு என்றால் படம் வெளியான 8வது மற்றும் 9வது நாளில் அதாவது ஜூலை 10,11 தேதிகளில் திருச்சி மாநகரில் நடிகர் திலகத்தின் 150-வது படவிழா நடைபெற்றது. பெரும்பாலான ரசிகர்கள் மாநாட்டிற்கு போய் விட்ட அந்த சூழலிலும் அந்த இரண்டு நாட்களிலும் சரி அதன் பிறகு 20-வது நாளன்று வெளியான, அதாவது ஜூலை 22-ந் தேதி சிந்தாமணி டாக்கீஸில் நடிகர் திலகத்தின் அடுத்த படமான தேனும் பாலும் வெளியான் போதும் just like that என்று சொல்வார்களே அது போல் அரங்கு நிறைந்தது. அதற்கு இரண்டு நாள் கழித்து வந்த 4-வது சனிக்கிழமை காலைக்காட்சியும் புல். ஞாயிறு திங்கள் எல்லா காட்சிகளும் ஹவுஸ் புல். 24 நாட்களில் நடைபெற்ற் 80 காட்சிகளும் ஹவுஸ் புல்.
சாதாரணமாக படம் ஓடும் தியேட்டர் முன்பு ரசிகர்கள் கூட்டம் ஒன்று நிற்கும். சவாலே சமாளி போன வேகத்தை பார்த்து விட்டு சர்வ சாதாரணமாக இது இலக்கை அடைந்து விடும் என்று நினைத்தோ என்னமோ ரசிகர் கூட்டம் குறைந்தது. 25-வது நாள் செவ்வாய்க்கிழமை பகல் காட்சி மடமடவென்று அனைத்து வகுப்பு டிக்கெட்களும் விற்று தீர்ந்து கொண்டிருந்தது. கீழே பெண்கள் 40 பைசா, பெண்கள் மற்றும் ஆண்கள் 70 பைசா, ஆண்கள் 80 பைசா, பால்கனியில் 1.15, 1.70 என்று அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட, 2.50 டிக்கெட் மட்டும் கடைசி நிமிடத்தில் 4 டிக்கெட்கள் நின்று போயின. யாருமே எதிர்பார்க்காத வகையில் 80 காட்சிகளோடு தொடர் ஹவுஸ் புல் விட்டுப் போனது.
இந்த எதிர்பாராத நிகழ்வினாலும் அப்போது ஓடிக் கொண்டிருந்த தேனும் பாலும் படமும் சரி ஆகஸ்ட் 14 அன்று ஸ்ரீமீனாட்சியில் வெளியான மூன்று தெய்வங்கள் படமும் சரி இந்த கான்செப்டில் வரவில்லை. படத்தின் ரிப்போர்ட் சுமார் என்பதாலும் சவாலே சமாளி இருக்கிறது என்ற காரணத்தினாலும் தேனும் பாலும் கண்டுகொள்ளப்படவில்லை என்றால் மூன்று தெய்வங்கள் படம் பற்றி அது வெளிவருவதற்கு முன் பரவியிருந்த தவறான கருத்து [சிவாஜி கௌரவ தோற்றமாம்] படத்தின் முதல் வாரத்தில் சற்று பாதிப்பை ஏற்படுத்தினாலும் அதை சமாளித்து படம் முன்னேறியபோதுதான் ஆகஸ்ட் 31 வந்தது.
மதுவிலக்கைப் பொறுத்தவரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ரோல் மாடல் மாநிலமாக தமிழகத்தை விளங்க வைத்த அன்றைய காங்கிரஸ் அரசாங்கமும் மூன்று தலைமுறை மனிதர்களை குடி என்றால் என்னவென்றே தெரியாமல் வைத்திருந்து ஆட்சி புரிந்த பெருந்தலைவரும் மூதறிஞரும் பெரியவர் பக்தவத்சலமும் கட்டிக் காத்த மதுவிலக்கு கொள்கை திராவிட தலைவர்களால் காற்றிலே பறக்க விடபப்ட்டு தமிழகமெங்கும் மதுக் கடைகள் திறக்கப்பட்ட நாள் 1971 ஆகஸ்ட் 31. தமிழக மக்களை நிரந்தரமாக "குடிமகன்களாக" ஆக்கிய அவலம் அன்றுதான் ஆரம்பித்தது. கொட்டும் மழையில் கோபாலபுரத்திற்கு ஓடோடி சென்று மதுவிலக்கை ரத்து செய்யாதீர்கள் என்று மன்றாடிய மூதறிஞரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. "என் எதிரி கூட குடிக்க கூடாது என்று நினைக்கிறவன் நான்" என்று சினிமாவில் வசனம் பேசியவர்கள், சினிமாவில் மட்டும் வசனம் பேசி விட்டு நிஜ வாழ்க்கையில் அதிகாரம் கையில் வந்த போது 7 வருடங்களாக [1974 செப்டம்பர் 1 முதல் 1981 ஜூன் 30 வரை] மூடிக் கிடந்த மது கடைகளை எல்லாம் திறந்து விட்ட காட்சியையும் தமிழகம் வேதனையோடு வேடிக்கை பார்த்தது. ஆயிற்று, 1981 ஜூலை 1-ந் தேதி அன்று திறக்கப்பட்ட கடைகள் இந்த 2014 ஜூலை 1-ந் தேதியுடன் 33 வருடங்களை கடந்து, இன்னும் செயல்பட்டுகொண்டுதான் இருக்கின்றன. சமூக அக்கறை உள்ள எவரும் நாளைய சமுதாயத்தை நம்பிக்கையோடு எதிர் நோக்கும் எவரும் இன்றைய இளைஞர் நிலை கண்டு வேதனையும் வருத்தத்தையும் அடைவதுதான் மிச்சம். தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடவில்லை. மதுபானம்தான் ஆறாக ஓடுகிறது.
மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் முன்னிரவு மற்றும் பின்னிரவு நேரங்களில் பெண்கள் வெளியே வர அச்சப்படும் சூழல் உருவானது. பெண்கள் திரையரங்கிற்கு இரவு காட்சிகளுக்கு வராத சூழல் ஏற்பட்டது. இது தொடர் ஹவுஸ் புல் நிகழ்வையும் படங்களின் ஓட்டத்தையும் பாதித்தது. மூன்று தெய்வங்கள் படமும் இந்த அசாதாரண சூழலால் பாதிக்கப்பட்டது.
தீபாவளிக்கு பாபு ஸ்ரீதேவியிலும், நீரும் நெருப்பும் சென்ட்ரலிலும் ரிலீஸ். நீரும் நெருப்பும் ரிப்போர்ட் சுமார். ஆகவே அந்த படம் தொடர் ஹவுஸ் புல் காட்சிகளுக்கு முயற்சிக்கப்படவில்லை. மேலும் ரிக்ஷாகாரன் படம் 100 தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் என்ற இலக்கை எட்டி விட்டதாலும் இந்த படம் கண்டு கொள்ளாமல் விடப்பட்டது. பாபு படத்தை பொறுத்தவரை நல்ல ரிப்போர்ட். படம் நன்றாகவே போனது. ஆனாலும் தொடர் ஹவுஸ் புல் என்ற இலக்கை அடைய முடியவில்லை. எனக்கு அன்றும் இன்றும் தோன்றுகின்ற காரணம் என்னவென்றால் இது போன்ற உணர்ச்சிப்பூர்வமான படங்களுக்கு repeat audience சற்று குறைவாக் இருக்கும். தொடர் ஹவுஸ் புல் காட்சிகளுக்கு repeat audience factor-ம் தேவை.
1971 டிசம்பரில் ஒரு தாய் மக்கள் நியூசினிமாவில் வெளியானது. 1966 முதல் தயாரிப்பில் இருந்த படம் என்பதனாலும் படத்தைப் பற்றிய அபிப்பிராயம் சரியான முறையில் அமையாததாலும் படம் முதல் வார சனிக்கிழமை காலைக்காட்சியே அரங்கு நிறையாமல் போனது. இப்படி 1971 முடிவிற்கு வரும்போது அதற்கு முந்தைய வருடமான 1970 இறுதியில் தொடர் ஹவுஸ் புல் காட்சிகளைப் பொறுத்தவரை நாம் சந்தோஷமாக இருந்தோம். அவர்களுக்கு அந்த மகிழ்ச்சி இல்லை. 1971 இறுதியில் நிலைமை அப்படியே மாறியது. 1971-ல் ஹாட்ரிக் அடித்திருக்கலாமே, விட்டு விட்டோமே என்ற வருத்தம் இருந்தாலும் 1972- ஐ ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம்.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
4th July 2014 12:51 AM
# ADS
Circuit advertisement
Bookmarks