Results 1 to 10 of 536

Thread: Maestro Ilayaraja News and Tidbits 2014

Threaded View

  1. #11
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என்னோடு உன்னோடு இளையராசா – முருகன் மந்திரம்


    என் இசை அறிவின் வட்டத்திற்குள் புதிதாக வருகிற ராசாவின் பாடலை…. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் தினமும் கேட்கிறேன்… வெறி கொண்டலைபவன் போல மீண்டும் மீண்டும்… காதுக்குள் அந்த பாடலை அலையவிடுகிறேன்.

    இதுவரை என் செவிகள் ருசித்துக்கொண்டிருக்கிற மெட்டுக்களை விட, எனக்கு இன்னும் அறிமுகமாகாத ராசாவின் பாடல்களைப் பற்றிய தேடல் பேராவலாய் எழுந்து நிற்கிறது.

    உதவி இயக்குநராக சேரவேண்டும்… யாரிடம் சேரலாம். இரண்டே இரண்டு பெயர்களை மட்டுமே உச்சரித்தது, என் விருப்பத்தின் குரல். என் விருப்பத்தின் குரல் உச்சரித்த, அந்த இரண்டு பெயர்களுமே இயக்கத்தின் உச்சத்தில் இருந்த நேரம்…

    அந்த பெயர்களின் சொந்தக்காரர்களை நேராகப் பார்க்க வாய்ப்புகளை வழங்காத சந்தர்ப்பங்களோடு சண்டை செய்வதில் உடன்பாடில்லை. எனவே, கடிதத்தை உதவிக்கு அழைத்தேன். என் சார்பாக சென்று வாய்ப்பு கேட்டு வர என் கடிதங்கள் புறப்பட்டன. ஆனால் அந்த கடிதங்களை அவர்களிடம் அழைத்துச் செல்வது யார்?

    அதில் முதல் பெயர்க்காரருக்கு எழுதப்பட்ட ஒரு கடிதம் பற்றிய பாட்டுக்கதை தான் இது… அந்த முதல் பெயர்க்காரர் இயக்குநர் பாலா.

    உதவி இயக்குநர் வாய்ப்பு தேடி அலைபவர்கள் யாவருமே.. அநாதையின் நிலையில் தான் இருப்பார்கள். நானும் அப்படியே… எந்த இழிநிலையிலும்.. நிலை பிறழாமல்…. கூடவே வரும் ராசாவின் பாடல்கள்.

    இதயத்தில் இருள்குவிந்து இடிந்து கிடக்கும் இயலாமைப்பொழுதுகளில்.. தாய்போல மடியில் கிடத்தி, தன் இசையின் விரல்களால் தடவிக்கொடுக்கிறார் ராசா.

    நீட்டுவதும் நிறுத்துவதுமாக,
    போற்றுவதும் போதிப்பதுமாக,
    உணர்தலும் உணர்த்துதலுமாக
    ராசாவின் பாடல்கள், கேட்டல் என்ற நிலையை கடந்த ஒன்று. காதுகளோடு நின்று விடக்கூடிய ஒலிகள் அல்ல… ராசாவின் இசைக்கோர்வைகள். உயிரோடு பேசக்கூடிய மொழிகள்…

    கோடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம்
    எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ
    காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
    நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ

    காலப்பெருவெள்ளத்தின் கண்கள் வழியாக கண்ணதாசன் கண்ட வாழ்வின் தத்துவத்தை… இசைஞானியின் ராகம்… தன் தோளில் சுமந்து வரும்பொழுது…

    திசைகளை தொலைத்துவிட்டதொரு நிலப்பரப்பின் நடுவில்… தனியொருவனாய் வீசி எறியப்பட்டதைப்போல… ஒரு அமானுஷ்யத்திற்குள்… நிற்கிறோம் நாம்… அதை இன்னும் அதிகப்படுத்துகிறது… ராசாவின் இசையோடு இறுகிக் கசிகிற ஜென்சி, ஷைலஜா, மலேசியா வாசுதேவனின்

    குரல்.

    விதியின் கைகள் போல, ராசாவின் இசையின் கைகள், நம்மை தன்போக்கில் இழுத்துச் செல்கிற வல்லமை படைத்ததாய் இருக்கிறது.

    வடபழனியில், விசாலமான வாகனம் நிறுத்தும் வசதி கொண்ட அந்த நட்சத்திர விடுதியில் பாலா, தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இருப்பதாய்…. என்னை ரசிக்கிற, என்னை நேசிக்கிற, ஒரு தம்பி ராஜேஷ்குமார் எனக்கு அறிவித்தான். கூடவே எனக்கு மட்டும் தபால்காரனாகி உதவுகிறேன் என்று தன்னம்பிக்கை தந்தான். சில காகிதங்கள் என் கடிதமாக உருமாறியது. அந்தக் கடிதம் கை மாறியது. என் பிரத்யேக தபால்காரனால் பாலாவின் கைகளில் சேர்க்கப்பட்டது. என் எதிர்காலத்தை சுமந்துகொண்டிருப்பதாய் நான் நினைத்த என் கடிதம், ஒரு பாடலின் சில வரிகளையும் தனக்குள் கொண்டிருந்தது…

    ராசாவின் மெட்டு, ராசாவின் வார்த்தை…. என்ற சிறப்புத்தகுதி கொண்ட பாடல்களில் அந்த பாடலும் ஒன்று. கூடுதலாக மதுபாலகிருஷ்ணனின் மாயக்குரலை தன்னோடு சேர்த்துக்கொண்டது அப்பாடல்…

    பொருளுக்கு அலைந்திடும்
    பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
    உன் அருள் அருள் அருள் என்று
    அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே

    அருள் விழியால் நோக்குவாய்
    மலர் பதத்தால் தாங்குவாய்
    உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற…

    அந்த பாடலில் இருந்து இந்த வரிகளை மட்டும் வெட்டி எடுத்து என் கடிதத்திற்குள் கொட்டி இருந்தேன்.

    இந்தப்பாடல் வரிகள், நான் உன்னிடம் தான் உதவி இயக்குநராக சேரவேண்டும் என்று இன்னுமொரு முறை எனக்குச்சொன்னது. வார்த்தைகளின் கண்ணாடியில் வாழ்க்கையின் பிம்பத்தைக்காட்டுகிறாய். எப்படி உனக்கு மட்டும் இப்படி வாய்க்கிறது… என்று… வியப்பின் உச்சியில் நின்று பாலாவிடம் உரைத்துவிட்டு… அடுத்தவரியில் உண்மையையும் உளறி இருந்தேன்.

    இந்த வரிகளை உன் அனுமதியோடு என் வரிகளாய் மாற்றிக்கொள்கிறேன். மன்னிக்கவும்… எனக்கான வரிகளாய், என் நிலையின் வரிகளாய் மாற்றிக்கொள்கிறேன். என் நிலை உனக்கு உரைக்க இந்த வரிகள் போதும்… எனக்கு வாய்ப்பு தருவது பற்றிய உன் நிலை பற்றி தெரியும் வரை, நிலை கொள்ளாமல் நான் திரிவேன் என்பதை மட்டும் உன்னிடம் சொல்லிக்கொள்கிறேன், என்று வேண்டுகோள் வைத்திருந்தேன்.

    அவர் பாடலையே அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். வாசித்துவிட்டு பாலா என்ன நினைத்திருப்பாரோ என்று நினைத்தேன். இன்று வரை விடை தெரியாமல் அந்த நட்சத்திர விடுதியிலேயே என் கேள்வி சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது என்பது உபகதை.

    ஆனால் இன்றும் அந்தப்பாடல்.., நான் சோர்வுறும் போதெல்லாம் என் அருகிலேயே நிற்பதாய் உணர்வேன். “பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்…” என்று முதல் வரியிலேயே ராசா… நான் என்பது ஒன்றுமில்லை என, இறைவனின் காலடியில் சரணாகதி அடைந்திருப்பார்.

    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே
    யாம் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே

    பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
    உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே

    பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
    உதிரமும் அடங்கிய
    உடம்பு எனும்
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே

    அம்மையும் அப்பனும் தந்ததா
    இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
    அம்மையும் அப்பனும் தந்ததா
    இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்ததா
    இம்மையை நான் அறியாததா
    இம்மையை நான் அறியாததா
    சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட

    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே

    அத்தனை செல்வமும் உன் இடத்தில்
    நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
    அத்தனை செல்வமும் உன் இடத்தில்
    நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
    வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
    அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

    ஒரு முறையா இரு முறையா
    பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
    புது வினையா பழ வினையா,
    கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்

    பொருளுக்கு அலைந்திடும்
    பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
    உன் அருள் அருள் அருள் என்று
    அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
    அருள் விழியால் நோக்குவாய்
    மலர் பதத்தால் தாங்குவாய்
    உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே
    பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
    உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே.

    இடைவெளியற்ற தனிமையின் சர்வாதிகாரம், நம் தோல்விகளின் கண்ணீரை ருசித்துச் சிரிக்கிற பொழுதுகளிலும்…

    நிகழ்காலம் என்ற ஒன்று எதிர்காலத்திற்குள் எட்டிப்பார்க்குமா… என்ற கேள்விக்குறியோடு… தற்காலிகமாய் மூளைச்சாவு நடந்தேறும் நிமிடங்களிலும்…

    தேடல்களோடு திரிகிற நம்மை… திருப்பி அனுப்பியே தீருவதென்று துடிக்கிற தினசரி வாழ்வின் இரக்கமற்ற தேவைகளின் முன் மண்டியிடுகிற போதும்..

    நம் அசாத்திய நம்பிக்கையின் முடிவில்லாப் பெருவெளியை… முட்டுச்சந்துகளாக மட்டுமே முடிவு செய்து நகைப்பவர்களின் முகங்களை…
    முகம் சுழிக்காமல் சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயங்களிலும்…

    ராசாவின் பாடல்கள் தான்… காலாட்படையாக, குதிரைப்படையாக, யானைப்படையாக… வந்து நின்று நம் எதிரிகளை விரட்டி அடிக்கிறது.

    ராசாவே மெட்டமைத்து, ராசாவே எழுதிய இந்த பாடல், எல்லா நிலையிலும் ஒரே நிலையில் இருப்பதாய், ஒரே நிலையை உரைப்பதாய் உணர்கிறேன். ஆதலினால் அடிக்கடி கேட்க விழைகிறேன்.

    வாழ்தலுக்கான செல்வத்தைத் தாண்டிய, அத்தனை செல்வங்களும் என்னிடம் இருப்பதாய் உணர வைக்கிறது இந்த பிச்சைப்பாத்திரம். மிக மிக சொற்ப அளவில் கல்வியாக, கலையாக, என்னோடு இருக்கும் செல்வத்தை விட பெருஞ்செல்வம் ஏதுமில்லை, என்றுபிச்சைப்பாத்திரம் வழியாக உணர்த்திச் செல்கிறார் ராசா.



    - முருகன் மந்திரம்

  2. Likes rajaramsgi, venkkiram liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •