-
16th January 2015, 04:50 PM
#11
Junior Member
Seasoned Hubber

‘மன்னாதி மன்னன்’
உறவினர்களை நீண்ட காலத்துக்குப் பிறகு ஒன்றாக ஒரே இடத்தில் பார்த்து உணர்வுகளை மனம் விட்டு பேசியது போல இருந்தது. இன்று காலை விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான மன்னாதி மன்னன் நிகழ்ச்சியைத்தான் சொல்கிறேன். 2 மணி நேரம் போனதே தெரியவில்லை.
முதலில் இதுபோன்ற பொங்கல் விழா கொண்டாட்ட நாளில் தலைவரைப் பற்றி பிரபலமான டி.வி.யில் 2 மணி நேரத்துக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது என்றால் மக்கள் அதனை விரும்புகிறார்கள் என்ற காரணம்தானே உண்மை. இந்த நிகழ்ச்சியைத் தவிர, நேற்று இரவு ராஜ் டி.வி.யில் ‘எம்.ஜி.ஆர் தி லெஜன்ட்’ என்ற நிகழ்ச்சியை வேறு அரை மணி நேரம் ஒளிபரப்பினார்கள். நாளை தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு, தனியார் தொலைக்காட்சிகளில் குறைந்தது (இப்போது உள்ள நிலவரப்படி) 8 படங்கள் ஒளிபரப்பாகிறது.
இதையெல்லாம் பார்க்கும்போது, மறைந்து 27 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் கூட தனியார் தொலைக்காட்சிகளில் தலைவருக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தை பார்க்கும்போது அவரது ஆளுமைதான் என்ன? என்ற வியப்பே ஏற்படுகிறது. சரி. நிகழ்ச்சிக்கு வருகிறேன்.
*விஐடி பல்கலைக் கழக வேந்தர் திரு.விஸ்வநாதன் இந்த பல்கலைக்கழகமே எம்.ஜி.ஆர்.போட்ட பிச்சை என்றார்.
* திரு.ஜேப்பியாரின் மகள் மரியா, தனது தந்தை கூறியதாக ஒரு கருத்தை சொன்னார். ‘தனது வேனுக்குப் பின்னால் ஓடிவரும் மக்களைப் பார்த்து தலைவர் ‘இவர்களுக்கெல்லாம் நான் என்ன செய்யப் போகிறேன்?’’ என்று கண்ணீர் விட்டபடியே கேட்டாராம்.
* திரு. பந்துலுவின் மகள் விஜயலட்சுமி, பந்துலு அவர்கள் மறைந்த பிறகு அவர் குடும்பத்தின் கடன் பற்றிய விவரங்களை அறிந்து மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை தலைவரே டைரக்ட் செய்து (இதற்கு பணம் கிடையாது) நடித்துக் கொடுத்து கடனை அடைத்தார் என்று தெரிவித்தார். அவரும் அழுதார்.
*ஆரம்பத்தில் தலைவரின் பேச்சை ஒலிபரப்பினார்கள். அந்த மழலை மணிக்குரலை கேட்டதுமே அனைவருக்கும் ஆனந்தக் கண்ணீர். அரங்கில் மட்டுமல்ல, நமக்கும்.
*பேச்சைக் கேட்டதும் ஒருவர் (பெயர் தெரியவில்லை. பெயர்களை போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்) அழுகை தாங்க முடியவில்லை அவருக்கு. அவருக்காக மீண்டும் பேச்சை ஒலிபரப்பினார்கள்.
* நண்பர் திரு.லோகநாதன் குறிப்பிட்டது போல, திரு. ஞான ராஜசேகரனின் மனதைத் தொட்ட பேச்சு.
இன்னும், திரு.மோகன் ராம், தலைவரின் எந்த படத்தை பற்றி, என்ன தகவல் கேட்டாலும் அடுத்த விநாடி பதிலளித்த திரு. ராஜப்பா வெங்கடாச்சாரி, திரு. ஞான.ராஜசேகரன், கரு.பழனியப்பன், இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ், 1956ம் ஆண்டு தலைவர் ஆசிரியராக இருந்து நடத்திய ‘நடிகன் குரல் ’ பத்திரிகை தொகுப்பை காட்டியவர், அதை எந்த விலை கொடுத்தும் வாங்குவதற்கு தயாராக இருந்தவர்கள், தலைவரின் அட்டகாச ஸ்டைல் நடிப்பை ரசித்தவர்கள், நடிப்பு பிடித்ததற்கான காரணங்களை சொன்னவர்கள், அவரது அழகிய தோற்றத்தை சிலாகித்தவர்கள்..... கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
ஒரு அம்மையார் தலைவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், கடைசிவரை பார்க்க முடியவில்லை என்று கதறினார். (அவர் மாட்டுக்கார வேலனுக்கு டிக்கட் வாங்கியது சுவாரசியம்)அப்படியே, என் எண்ணத்தை பிரதிபலித்தார். என் வாழ்நாளில் இனி நிறைவேற வாய்ப்பே இல்லாத, தாங்கிக் கொள்ள முடியாத ஏமாற்றம் அது.
அந்த அம்மையார் உட்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தலைவர் பற்றி குறிப்பிட்டபோது கண்ணீர் விட்டனர். நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் கண்கள் பனித்தன. இதே நிலை நம் எல்லாருக்குமே இருந்திருக்கும். வேனுக்குப் பின்னால் ஓடி வந்த மக்களைப் பார்த்து ‘இவர்களுக்கெல்லாம் நான் என்ன செய்யப் போகிறேன்?’ என்று தலைவர் கண்ணீர் விட்டாரே? மன்னாதி மன்னன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும், பார்த்துக் கொண்டிருந்த நாமும் கண்ணீர் விட்டோமே? இந்தக் கண்ணீர் துளிகள்தான், தலைவர் மீது நாமும், நம் மீதும் ரசிகர்கள், கட்சியினரைத் தாண்டி பொதுமக்கள் மீது தலைவரும் வைத்திருந்த ஆழம் காண முடியாத அன்பு பெருங்கடலின் துளிகள். அந்தக் கண்ணீரில் நடிப்பு இல்லை. உண்மை இருந்தது.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஒரு பதிவில் எழுத முடியாது. மேலே குறிப்பிட்டவர்களுடன் விட்டுப் போன பிறரையும் சேர்த்து பகுதி, பகுதியாக எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். ‘‘தலைவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், கடைசிவரை பார்க்க முடியவில்லை’’ என்று அழுது, என் எண்ணத்தை பிரதிபலித்தார் என்றேனே, அந்த தாயிடம் இருந்தே முதல் பதிவை தொடங்குகிறேன்.
இன்று வெளியூர் புறப்படுகிறேன். அடுத்த வாரமும் வெளியூர் செல்ல வேண்டியிருக்கிறது. நாளை மறுநாள் திரும்பி விடுவேன். தலைவருக்கு நாளை பிறந்த நாள். அட்வான்சாக இன்றே பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு புறப்படுகிறேன். திரும்பி வந்து எழுதுகிறேன். நன்றி.
திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு, எங்க வீட்டுப் பிள்ளை படத்தைப் பற்றியும் நிச்சயம் எழுதுகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
16th January 2015 04:50 PM
# ADS
Circuit advertisement
Bookmarks