Results 1 to 10 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பூவா? தலையா?....

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

    மன்னிக்க வேண்டும் திரு.சின்னக் கண்ணன் சார். இன்றுதான் நமது திரியை பார்த்தேன். வேலை அதிகம். அதனால், சில நாட்கள் பார்க்க முடியவில்லை. கிடைக்கும் நேரத்திலும் மக்கள் திலகம் திரிக்கு பங்களிக்க வேண்டியுள்ளது. ஆனால், நான்தான் இங்கே வரவில்லை போலிருக்கிறது என்று பார்த்தால், திரு.வாசு சார், திரு.கிருஷ்ணா சார், திரு.ரவி சார் யாரையுமே பார்க்க முடியவில்லையே. இன்றும் வேலை ஜாஸ்திதான் என்றாலும் நீங்கள் அழைத்துள்ளீர்கள். மறுக்க முடியுமா? மேலும், இன்னொரு கடமையும் உள்ளது. திரு.கல்நாயக் அய்யாவுக்கு (சார் போடவில்லை திருப்தியா?) கெட்ட பெயர் வந்து விடக் கூடாதே? அதனால் உடனடியாக களத்தில் குதித்து விட்டேன்.

    -----------------------

    டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் கூட காங்கிரஸ் ஆதரவோடும் மக்களின் மிகுந்த எதிர்பார்ப்போடும் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியமைத்தார். மனிதர் என்ன நினைத்தாரோ? லோக் பால் மசோதாவை தாக்கல் செய்தால் எப்படியும் கட்சிகள் ஆதரவு கிடைக்காது. அதனால், பழியை எதிர்க்கட்சிகள் மீது போட்டு ராஜினாமா செய்தால் தியாகி பட்டத்தோடு அனுதாபமும் கிடைக்கும். மீண்டும் தேர்தல் நடந்தால் மெஜாரிட்டி பலத்தோடு ஜெயித்து விடலாம் என்று கணக்கிட்டாரோ என்னவோ? 49 நாட்களில் ராஜினாமா....

    மக்களிடம் அனுதாபத்துக்கு பதிலாக அவர் மீது ஏமாற்றமும் கோபமும் ஏற்பட, ராஜினாமா செய்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இப்போது பிப்ரவரி 7ம் தேதி டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடக்கும் நிலையில், மீண்டும் ஆட்சியைக் கொடுங்கள் என்று கேட்கிறார். இன்று 7 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்றுள்ளார். நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

    நிலைமை ஏற்கனவே அவருக்கு சரியில்லாத நேரத்தில், கட்சியில் சேர்ந்து 15 நாள் கூட ஆகாத முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடியை அதிரடியாக தனது முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது பாரதிய ஜனதா. கிரண் பேடிக்கு ஏற்கனவே நல்ல இமேஜ். திஹார் சிறையில் சீர்திருத்தங்கள் செய்தவர். நேர்மையான அதிகாரி. அன்னா ஹசாரே இயக்கத்தில் கெஜ்ரிவாலுடன் பணியாற்றியவர். இது பா.ஜ.வின் மோடி + அமித் ஷா கூட்டணியின் ராஜதந்திரமான மூவ் ஆக பார்க்கப்படுகிறது டெல்லி அரசியலில். ஆப் (aap)ப்புக்கு ஆப்பு.

    இதை எதிர்பாராத கெஜ்ரிவால், பொது விவாதத்துக்கு தயாரா? என்று கிரண் பேடியை சவாலுக்கு அழைக்கிறார். தயார் என்று பேடியும் பதில் முழக்கமிட, பந்து இப்போது கெஜ்ரிவால் பக்கம். இருவரும், பூவா தலையா? படத்தில் வரும் பூவா? தலையா? போட்டால் தெரியும், நீயா? நானா? பார்த்துவிடு..... என்று மல்லுக்கட்டி நிற்கின்றனர் டெல்லி தேர்தல் களத்தில்.

    எனக்கு பிடித்த அருமையான பாடல் சார் இது. மெல்லிசை மன்னரின் இசையில் டி.எம்.எஸ்.& சீர்காழியின் ஜாலக் குரல்களில் உற்சாகம் வழிந்தோடும். நாகேஷூக்கு இணையாக ஜெய்யும் நன்றாக ஆடியிருப்பார். தனது ஏற்பாட்டில், பாதி பாட்டில் ஜெய்யை அடக்க வரும் முரட்டு வில்லனைப் பார்த்ததும் திருப்தியும் அவருக்கு பார்வையிலேயே உத்தரவிடும் வில்லி வரலட்சுமியின் நடிப்பு டாப்.

    பூவா தலையா? படம் என்றதும் நினைவுக்கு வருகிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இராம. அரங்கண்ணல். திரு. பாலச்சந்தர் அவர்களோடு (இயக்கம் இவரே) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர். திமுகவில் முக்கியஸ்தராக இருந்தவர். படத்தின் 100 வது நாள் விழா திரு.கருணாநிதி அவர்கள் தலைமையில். விழாவில் கவியரசர் கண்ணதாசனும் கலந்து கொண்டுள்ளார். அப்போது கவியரசர் , திரு.கருணாநிதிக்கு எதிர் முகாமில். இருந்தாலும் அரசியல் நாகரிகம் இருந்த காலங்கள் அது.

    அந்த காலகட்டத்தில் திரு.கருணாநிதிக்கு முன்னால் முடி இருக்கும். நடு வகிடு எடுத்திருப்பார். பின் தலையில் வட்டமாக லேசான வழுக்கை இருக்கும். விழாவில் கவியரசர் பேசும்போது, கருணாநிதியின் பின்னால் அவரது தலையைப் பார்த்தேன். வட்டமாக பூ போல இளவழுக்கை இருக்கிறது. இது பூவா? இல்லை தலையா? என்று வியந்தேன். பூவா, தலையா? பட விழாவுக்கு அவரை கூப்பிட்டது பொருத்தமே என்று பலத்த சிரிப்பொலிகளுக்கிடையே பேசினார்.

    திரு.கருணாநிதி அவர்களின் அரசியலை நான் ஏற்பவனல்ல. என்றாலும், அரசியல் தவிர்த்து நடுநிலையோடு பார்த்தால் பன்முக ஆற்றலும் கூர்த்த மதியும் நகைச்சுவை திறனும் கொண்டவர். கவியரசருக்கு திரு.கருணாநிதி அளித்த பதில்.........பூவாக இருந்தாலும் சரி, தலையாக இருந்தாலும் சரி, பறிக்காமல் இருந்தால் சரி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    Last edited by KALAIVENTHAN; 20th January 2015 at 05:19 PM.

  2. Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •