அதிர்ந்தது அரங்கம்

குலுங்கியது சாந்தி





நேற்று மதியம் மூன்று மணிக்கெல்லாம் நானும், என் மகனும் சாந்திக்கு சென்று விட்டோம். மதியம் மேட்னிக்கு நல்ல கும்பல். நான்கு மணியிலிருந்து சாந்தி திரையரங்கம் திருவிழாக் கோலம் பூண்டது. கடலூரில் இருந்து ரசிகர்கள், பெங்களூருவிலிருந்து ரசிகர்கள், சென்னை ரசிகர்கள் என்று கூட்டம் கூட்டமாகத் திரள ஆரம்பித்தார்கள். 5 மணி வாக்கில் தியேட்டர் வாயிலில் நிற்க இடமில்லை. இதற்கே ஈவ்னிங் ஷோ ஆன்லைன் புக்கிங்கில் ஏற்கனவே ஃபுல். ஆனால் தேர்க்கூட்டம் திருவிழாக் கூட்டம்.

கர்நாடகாவிலிருந்து ரசிகர்கள் ஏராளாமான மாலைகள் கொண்டு வந்திருந்தனர். சாந்தி தியேட்டர் வாயிலில் இருந்து சிறிது தூரம் தள்ளிச் சென்று, அங்கிருந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க, மாலைகளை அனைவரும் பிடித்தபடி ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பி ஊர்வலமாக வந்தார்கள். மாலைகளை தியேட்டரின் முன் பிரம்மாண்டமாய் பேனரில் நிற்கும் நம் கட்டபொம்மனுக்கு ஒவ்வொன்றாக அணிவித்து அழகு பார்த்தார்கள். ரசிகர்களின் கரகோஷமும், கூச்சலும், அலம்பல்களும் அலப்பரைகளும் எல்லை மீறியது. பேண்டு வாத்தியங்கள் 'என்னடி ராக்காம்மா'வை முழங்க சும்மா பெரியவர், சிறியவர் என்றில்லாமல் அனைவரும் ஆட்டம் போட்டு அதகளம் பண்ணி விட்டனர்.

எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். குழுமம் குழுமமாக ஆட்டம். 'தலைவர் வாழ்க' கோஷம். 'சிவாஜி எங்கள் உயிர்' என்ற உயிர்த் துடிப்பான குரல்கள். படம் பார்க்க வந்திருந்த திரளான பெண்கள் இந்த உற்சாகக்
களியாட்டாத்தைக் கண்டு ரசித்தனர். இளைஞர்கள் பட்டாளமும் அதிகம்.

வெளியே மவுண்ட் ரோட்டில் போலீஸ் வந்திருந்தது. வாயிலின் நுழைவில் இருக்கும் பேனருக்கு மாலைகள் போடப்பட்டன. 1000 வாலாக்கள் வெடித்துச் சிதறின. ஹெல்மெட் தலைகளில், அட்டைப் பெட்டிகளில் கற்பூரம் கொளுத்தப்பட்டு ஆராதனை நடைபெற்றது. மவுன்ட்ரோட் ஸ்தம்பித்தது ஒருகணம்.

நேரமாக ஆக ரசிகர்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அமர்க்களம் பண்ண ஆரம்பித்து விட்டனர். எங்கு பார்த்தாலும் டான்ஸ்தான். பின் தொடர் அதிர்வேட்டுகள் முழங்க ஆரம்பித்தன. வானில் ஒவ்வொன்றும் வெடித்துச் சிதறி மத்தாப்புகள் அங்கிருக்கும் கட்டபொம்மனின் பேனரில் பூக்கள் போலச் சிதறி விழுந்தது கண்கொள்ளாக் காட்சி.

நமது அன்பு ஹப்பர்கள் முரளி சார், ராகவேந்திரன் சார், பம்மலார், சித்தூர் வாசுதேவன் சார், ராதாகிருஷ்ணன் சார், பார்த்தசாரதி சார், சிவாஜி தாசன் சார் என்று அனைவரும் வந்திருந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு அனைவரையும் சந்தித்ததில் மிக மகிழ்ச்சியாய் இருந்தது. கிரிஜா மேடம், எம்.எல்.கான் அனைவரிடமும் அளவளாவி மகிழ்ந்தேன்.

நமது அருமை நண்பர் பேரவைத் தலைவர் சந்திரசேகரன் சார் குடும்பத்துடன் வந்திருந்து படத்தைக் கண்டு களித்தார். அவரிடமும் பேசியதில் மகிழ்ச்சி.

அரங்கத்தினுள் நுழையும் போது அனைவருக்கும் ஜாங்கிரி இனிப்பு வழங்கப்பட்டது. உள்ளே ஒரே ஆரவாரம். கட்டபொம்மனின் அறிமுகக் காட்சியில் சாந்தியே குலுங்கியது. ஸ்க்ரீனை விட்டு மக்கள் நகரவேயில்லை. படம் முழுதும் கைத்தட்டல்களும் விசிலும்தான். கட்டபொம்மனின் ஒவ்வொரு அசைவிற்கும் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு செய்தனர். முக்கியமாக ஜாக்ஸனுடன் மோதும் அந்த உலகப் புகழ் பெற வீர 'வரி' வசனம், தானாபதிப் பிள்ளையிடம் நெல் கிடங்கு கொள்ளை சம்பந்தமாய் கொட்டித் தீர்க்கும் ஆத்திரம், திருச்செந்தூர் கோவிலிலே பறங்கியரின் படையெடுப்பு பற்றிக் கேட்டவுடன் மிருதுவான குரலில் ஆரம்பித்து படிப்படியாக சிங்க மிருகத்தின் குரலில் நாட்டோரை போருக்குத் தயாராக்க முழங்குவது, போருக்கு செல்லுமுன் ஜக்கம்மாவிடம் விடைபெற்றுச் செல்லும் காட்சி, கிளைமாக்ஸ் காட்சிகள் (எதைச் சொல்வது எதை விடுவது) என்று ஒவ்வொரு காட்சியும் ஆரவாரப் பொறி பறந்தது. அதுவும் அந்த 'அசல் வித்து' வசனத்திற்கு கூரை இடிந்து விழாத குறைதான்.

அதே சமயம் ஒவ்வொருவரும் கட்டபொம்மனோடு ஒன்றி, அந்த நடிப்பில் மெய்மறந்து, தங்களை அவனோடு இணைத்துக் கொண்டு, அனைவரும் ஒரு இறுக்கமான சூழ்நிலையில் இருந்ததும் நிஜம். கண்கூடு. அதுதான் அந்தக் கட்டபொம்மக் கடவுளுக்குக் கிடைத்த நிஜ வெற்றி. அந்தக் கட்டபொம்மன் துரதிருஷ்டவசமாக ஆங்கில ஏகாதிபத்தியத்திடம் வீரமாகத் தோற்றுப் போனான். இந்த பொம்மனோ தன் அங்க அசைவுகளால் அகிலத்தில் உள்ள மனங்கள் அனைத்தையும் வென்றான்.

கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்டதும் அசாத்தியமான மௌனம் நிலவியது அரங்கில். அரங்கே சோக முகத்துடன், வாட்ட முகத்துடன்தான் திரும்பியது. அதுவரை பண்ணிய ஆர்ப்பாட்டங்களும், அலம்பல்களும் அரை நொடியில் காணாமல் போயின.

இன்னொரு கூத்து. இடைவேளை விட்டாலும் கூட நம் ரசிகப் பிள்ளைகள் திரையை விட்டு அகலவே இல்லை. அதற்கேற்றார் போல் 'உத்தமனி'ன் 'கனவுகளே... கனவுகளே' பாடலையும், 'தெய்வ மகனி'ன் 'காதல் மலர்க் கூட்டம்' ஒன்று பாடலையும் இடைவேளை சமயத்தில் டைமிங்காகப் போட்டு விட்டுவிட, சும்மா ரசிகர்கள் என்னஆட்டம்! என்ன அபிநயம்! என்ன உற்சாகம்! அடேயப்பா! ஒவ்வொருவரும் தங்களை நடிகர் திலகமாக நினைத்துக் கொண்டு அவரைப் போலவே நடித்துப் பார்த்து, நடந்து பார்த்து, ஆடிப் பார்த்து மகிழ்ந்து. அதையெல்லாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது போங்கள்.

முரளி சாரும், நானும் அருகருகே அமர்ந்து தெய்வத்தை அணுஅணுவாக ரசித்துப் பார்த்தோம். 'முரளி சார் பக்கத்தில் இருக்கிறாரே... கை தட்டாமல் சமாளிப்போம்' என்று முடிவெடுத்துதான் தியேட்டரில் அவருடன் அமர்ந்தேன். ஆனால் முதல் காட்சியிலயே என் வாட்ச்சைக் கழற்றி பையனிடம் கொடுத்துவிட்டேன். ஆரம்பக் காட்சியிலேயே எடுத்த முடிவு அம்பேல்.

படம் பிரமாதமாக ரீ-ஸ்டோர் செய்யப்பட்டிருக்கிறது மிகப் பிரம்மாண்டமாய். ஆடியோ அருமை. சங்கீதங்களின் சங்கதிகள் அருமையாய் காதில் வந்து விழுகின்றன. படம் போவதே தெரியவில்லை. 'ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி' வெட்டி விடப்பட்டு விட்டது. ஆனால் பத்மினி, ஜெமனி காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கை வைத்திருக்கலாம். ஜெமினி காளை மாட்டுச் சண்டையை இப்போது பார்க்கையில் சற்று நீளமாகத் தெரிகிறது. அந்தக் காட்சியை விட்டுவிட்டேனே! உட்கார்ந்தபடியே காளையுடன் மோதும் கட்டபொம்மனுக்கு கரகோஷங்கள் விண்ணைப் பிளந்தது.


இதைவிடயெல்லாம் பெரிய சந்தோஷம் எனக்கு என்ன தெரியுமா?! அருகில் அமர்ந்து படம் பார்த்த கல்லூரி படிக்கும் என் மகனிடம் இடைவேளையின் போது அவன் காதைக் கடித்தேன்.

'எப்படிடா இருக்கு?'

அவன் சொன்ன பதில்...

'இப்பதான் ரொம்ப ரசிச்சி ரசிச்சி பார்க்கிறேன். அடுத்த வாரம் என் நண்பர்களையெல்லாம் கூட்டிகிட்டு 'சத்யத்'தில் போய் மறுபடியும் கட்டபொம்மனைப் பார்க்கப் போகிறேன். எல்லார்கிட்டேயும் சொல்லப் போறேன். நீங்களும் தம்பியை மறக்காம கூட்டிகிட்டு போய் காண்பிச்சிடுங்க'

இதைவிட வேறு சந்தோஷம் வேற என்னங்க வேணும்? எத்தனை தலைமுறையானாலும் தவிர்க்கவே முடியாதவர்தானே நடிகர் திலகம்? அந்த பாக்கியம் அவரைத் தவிர வேறு எவருக்கு உண்டு?

சாந்தி 'கட்டபொம்மன்' அமர்க்களங்கள் புகைப்படங்களாகவும், வீடியோ வடிவிலும் விரைவில். தரவேற்ற நாழியாகும். அதுவரை பொறுக்க.