-
3rd November 2015, 09:38 PM
#11
Senior Member
Diamond Hubber
ஜி!
மிக அருமையாக 'குட் மார்னிங் சிஸ்டர்' ஞாபகப்படுத்தி ரமாபிரபா நினைவலைகளை தட்டி எழுப்பி விட்டீர்கள்.
ரமாபிரபா


'லில்லி லல்லி ஜிம்மி ஜிப்பி ரோஸி ரோஸி ராணி' என்று நாய்க்குட்டிகளோடு கொஞ்சி அவைகளை மேய்த்து மகிழும் இளம் அரைப்பைத்திய, சகஸ்வரநாமத்தின் செல்லப் பெண்ணாக, வாரிசுக்காக செல்வத்தின் இரண்டாந்தரமாக கட்டி வைக்க பெரிசுகளால் ஜோதிட முடிவு செய்யப்பட்ட நேரத்தில் 'வாரிசுக்காகத்தான் உங்களை கல்யாணம் செய்துக்கிறேன்...வாரிசு பெற்றுக் கொடுத்ததும் நான் எங்காவது போய் விடுவேன். அப்புறம் நீங்களும், வள்ளி அக்காவும் சுகமாக வாழலாம் ' என்று நம் 'செல்வ'த்தின் மேல் அக்கறை காட்டும் வெகுளி முறைப்பெண் ரத்னாவாக.

அக்காள் முறை ஏழை வாணிஸ்ரீ அம்மா சுந்தரிபாயால் கொடுமைப் படுத்தப்படும் போது அவருக்காகப் பரிந்து பேசி, பார்ப்பவர்களையெல்லாம் 'குட் மார்னிங் சிஸ்டர்...குட்மார்னிங் பெரியப்பா...குட்மார்னிங் மம்மி' என்று சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்து கிராக்குத்தனமாய் 'இருளும் ஒளியும்' புரியாத ரமாவாக.

'சூரக்கோட்டை இளையராஜா' என ஜோராக புருடா விடும் திகிடுதத்த ஏமாற்றுப் பேர்வழி நாகேஷிடம் ஏமாந்து மனதையும் பறி கொடுத்து, வெண்மை உடையில் அவருடன் 'வெண்ணிலா நேரத்திலே வேணுகானம்' பாடி, இறுதியில் நாகேஷின் களவாணித்தன உண்மை தெரிந்து கலங்கும், இதயங்களைத் தேடி அலையும் பணக்கார பரிதாப மனைவி கமலாவாக.

அறிந்தும் அறியாத, இரண்டுங்கெட்ட வயசு ஸ்கூல் பெண்ணாக டீச்சர் காஞ்சனாவுடன் ஊர் சுற்றி, நாகேஷை விவரம் புரியாமல் 'சாந்தி நிலைய'த்தில் காதலித்து 'கண்கள் தேடுவது...உள்ளம் நாடுவது...மெல்லப் பேசுவது...ஒன்று சேருவது' எனப் பாட்டுப் பாடி மகிழும் பாவாடை சட்டை அணிந்த இளம் பெண் கீதாவாக.

'நாதா... நாதா' என்று சர்வசதா காலமும் நாகேஷின் உயிர் எடுக்கும் பூர்வ ஜென்மப் பைத்தியமாக 'உத்தரவின்றி உள்ளே வந்த' மோகினியாக.

'காசேதான் கடவுளடா' கும்பலில் கேட்ட பொருள் கேட்ட மாத்திரத்தில் கிடைக்காத பட்சத்தில் கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசி துவம்சம் செய்து, தாண்டவம் ஆடி, மயங்கி விழுந்து, பின் தெளிந்து எழுந்து, 'இங்கே என்ன நடந்தது?' என்று அப்பாவியாய் கேள்வி கேட்கும் பைத்திய கேஸ், நாயகி லஷ்மியின் பெயரை தன் பெயராகக் கொண்டு குழப்பம் ஏற்படுத்தும் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகள் ரமாவாக.

வி.கே.ஆர். நாகேஷ் இரு 'குக்' களிடம் மாற்றி யாரைக் காதலிப்பது என்று குழம்பி, பெரிய அடுக்கு சாப்பாட்டுக் கேரியரில் நாகேஷ் சதி வேலையால் வி.கே.ஆர் மாற்றிக் கொடுக்கும் பச்சை மீன், முட்டை, கோழி என்று ஏமாந்து, அதையே,சமைத்த வாக்கில் நாகேஷ் தரும் போது ஆனந்தமாய் சாப்பிட்டு மகிழ்ந்து,
(நாகேஷ் ஒவ்வொரு கிண்ணமாக சாப்பாட்டுக் கேரியரை ரமாபிராபாவிடம் திறந்து காட்டும்போது
'இது என்ன சொல்லு?'
எனக் கேட்க அதிலுள்ள அவித்த முட்டையைப் பார்த்து ரமாபிரபா,
'முட்டை' என்று ஆனந்தமாகக் கூற,
அதற்கு நாகேஷ் தரும் பதில்
'ஆமாம்! கோழியே வச்சது'
எப்படி சிரிக்காமல் இருப்பது?)
நாகேஷின் 'ஜகஜகா'வுக்கு அர்த்தம் புரியாமல் 'என்ன?' என்று கேட்க, நாகேஷ் அதற்கான பதிலை காதில் கிசுகிசுக்க 'ச்சீ ! இவ்வளவுதானா?' என்று அலட்சியம் காட்டி நம்மை அலற வைக்கும் 'வசந்த மாளிகை' ஜமீனின் சராசரி வேலைக்காரி முத்தம்மாவாக.
கணவன் நாகேஷ் (பட்டாக்கத்தி பைரவனின் கைத்தடி) கொஞ்சம் ஜொள்ளுப் பேர்வழி என்று தெரிந்து இரவில் அவனை ஊர் சுற்ற விடாமல் கால்களை கயிற்றால் பிணைத்து கண்காணிக்கும் குழந்தை பெற்ற 'பச்சை உடம்புக்கா(ரி)ர பொசஸிவ் மனைவியாக.

பாரிஸில் கணவனிடம் மாட்டிக் கொண்டு தப்ப முடியாமல் '47 நாட்கள்' சித்ரவதை அனுபவிக்கும் சிவசங்கரியின் ஜெயபிரதாவை அவனுடன் ஒரு ஹோட்டலில் கண்டு, அவள் நிலைமை புரிந்து, அவனறியாமல் நைஸாக சுண்டு விரல் நீட்டி, அவளிடம் சைகை காட்டி, ஜெயப்பிரதாவை பாத்ரூம் வரச் சொல்லி, அந்தப் பெண்ணின் கதை கேட்டு, பரிதாபப்பட்டு, அவள் தாய்நாடு திரும்ப டாகடர் சரத்பாபு (நிஜ வாழ்க்கையில் ஒரிஜினல் கணவர்) மூலம் உதவி செய்யும் மனிதாபிமானமுள்ள, வாயில் சிகரெட் புகைய, ஜீன்ஸும், ஷர்ட்டும், தொப்பியுமாக கலக்கும் தமிழ் பேசும் நடுத்தர வயதுப் பெண்மணியாக.
இப்படி பலதரப்பட்ட வேடங்களில் சிறப்பாக நடித்து, ஆரம்பத்தில் லூஸுத்தனமான ரோல்களில் நடித்தாலும் அதிலும் வித்யாசம் காட்டி, தெலுங்கிலும் கொடி கட்டிப் பறந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை ரமாபிரபாவை மறக்க முடியுமா?
Last edited by vasudevan31355; 3rd November 2015 at 09:51 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
3rd November 2015 09:38 PM
# ADS
Circuit advertisement
Bookmarks