-
26th November 2015, 09:10 PM
#11
Moderator
Diamond Hubber
அம்மா வேடங்களை கேட்டு வாங்கி நடிக்கிறேன்! - நடிகை பாலாம்பிகா பேட்டி
நாதஸ்வரம், பிரியமானவள், அக்னி பறவை, பாசமலர்கள் உள்பட பல சீரியல்களில் நடித்திருப்பவர் நடிகை பாலாம்பிகா. பெரும்பாலும் அம்மா வேடங்களாகவே நடித்து வரும் அவர், அம்மா வேடங்களே எனக்கு திருப்தியாக உள்ளதால், அம்மா வேடங்களை கேட்டு வாங்கி நடித்து வருகிறேன் என்கிறார்.
தினமலர் இணையதளத்திற்காக அவரை பேட்டி கண்டபோது, அவர் நமக்களித்த பதில்கள் இங்கே இடம்பெறுகிறது.
1991ல் பாலம் என்ற படத்தில் முரளிக்கு தங்கையாக நான் சினிமாவில் அறிமுகமானேன். முதல் படத்தில் தங்கையாக அறிமுகமானதால் அதன்பிறகு எனக்கு தங்கை வேடங்களாகவே வந்தன. நடிகனில் குஷ்புவுக்கு தங்கை, பாட்டாளி மகன் படத்தில் அர்ஜூன், திருமதி பழனிச்சாமியில் சத்யராஜ் இப்படி பல முன்னணி ஹீரோக்களுக்கு தங்கையாக நடித்து விட்டு, ஒளிப்பதிவாளர் அசோக்குமார் இயக்கிய தம்பிக்கு ஒரு பாட்டு படத்தில் ஹீரோயின் ஆனேன். அதையடுத்து என் ஆசை தங்கச்சி உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தேன். பின்னர் 2001ல் திருமணமாகி விட்டது. அதனால் 12 வருடங்களாக நடிப்பை விட்டு விலகியிருந்தேன்.
இந்நிலையில், 2013ல் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினேன். திருமுருகனின் நாதஸ்வரம் தொடரில்தான் ரீ-என்ட்ரி ஆனேன். அதன்பிறகு பிரியமானவள் உள்பட பல தொடர்களில் ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்கிறேன். இந்த வேடத்திற்கு நல்ல மரியாதை கிடைக்கிறது. சீரியல்களில் எனக்கு மகளாக நடிக்கும் பொண்ணுங்களே என்னை அம்மா என்றுதான் அழைக்கிறார்கள். இது பெரிய சந்தோசமாக உள்ளது. இதுதவிர அக்கா, அண்ணி வேடங்கள் கொடுத்தாலும் நடிப்பேன். ஆனால் சீரியல்களில் அக்கா அண்ணி கேரக்டர்கள் ரொம்ப கம்மி. அதேசமயம் அம்மா கேரக்டர் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும். இந்த வேடங்களுக்கு சீரியல்களில் அதிக முக்கியத்துவமும் உள்ளது. அதனால் அம்மா வேடங்களை கேட்டு வாங்கி நடித்து வருகிறேன்.
சீரியல்களில் எந்த அளவுக்கு ரீச் கிடைக்கிறது? என்று அவரைக்கேட்டால்,
நான் நாதஸ்வரம் தொடரில் ஒரு வில்லியாக நடித்தேன். கேங் லீடர் போன்ற ஒரு வேடம் கொடுத்தார் திருமுருகன். நான் ஆளை கடத்துவேன். ஏய் தூக்குடா அவளை என்று அதிரடி வசனம் பேசுவேன். நான் வில்லின்னா என்னாலே நம்ப முடியல. ஆனா என்னையும் வில்லியாக நடிக்க வைத்தார் டைரக்டர். இதே மாதிரி வேறு சில தொடர்களிலும் நெகடீவ் வேடங்களில் நடித்திருக்கிறேன். அந்த வகையில், சினிமாவை விட சின்னத்திரைதான் எனக்கு திருப்தி கொடுத்துள்ளது.
நான் சினிமாவில் நடிக்கிற காலத்தில் ஒரு படத்தில் நடித்தாலே ரீச். ஆனால் இப்போது அப்படியல்ல. 15 படங்களில் நடித்தால்தான் வெளியில் தெரிவோம். அதேசமயம், ஒரு மெகா சீரியலில் நடித்தாலே பெரிய ரீச் இப்போது கிடைத்து விடுகிறது. சீரியல்களில் நடிக்கிற எனது பெயர் எந்த நேயர்களுக்கும் தெரிவதில்லை. ஆனால் பிரியமானவள் கதாநாயகி அவந்திகாவின் பெயரை சொல்லி அவந்திகா அம்மா போறாங்க பாரு என்கிறார்கள். அந்த அளவுக்கு சீரியல் உடனே மக்கள் மனதில் பதிந்து விடுகிறது.
சீரியல் நடிகைகளெல்லாம் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களே. நீங்கள் எப்படி?
எனக்கு இப்போது சினிமாவில் நடிக்கிற ஆசை உள்ளது. அதனால் சில படங்களின் ஆடிசன்களில் கலந்து கொள்கிறேன். பாலாம்பிகா என்ற நடிகையை முன்பு தெரியும். ஆனால் இப்போது எனது உருவம் உடல்கட்டு யாருக்கும் தெரியாது என்பதால் சில கம்பெனிகளுக்கு நானே செல்கிறேன். சமீபத்தில் வெளியான குபேர ராசி படத்தைத் தொடர்ந்து ஆறாது சினம், ஒரு கனவு போல, மூன்று ரசிகர்கள், பாதை என 6 படங்களில் நடிக்கிறேன். இந்த படங்களிலும் அம்மா வேடங்களில்தான் நடிக்கிறேன். அந்த வகையில், சீரியல்களைப்போலவே சினிமாவிலும் அம்மா வேடங்களை கேட்டு வாங்கி நடிக்கிறேன்.
செண்டிமென்ட் நடிப்பில் என்னென்ன வித்தியாசம் காட்டி வருகிறீர்கள்?
அம்மா மகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் என்கிறபோது பிரச்னைகளுக்கேற்ப நடிப்பு மாறுபடும். மற்றபடி கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப ஹேர்ஸ்டைல், காஸ்டியூம் என மாற்றிக்கொள்வேன். குறிப்பாக, வசதி, ஏழ்மை, நடுத்தரம் என அதற்கேற்பவும் என்னை மாற்றிக்கொள்வேன். அப்படி நான் என்னை மாற்றிக்கொண்டு நடிக்கும்போது பர்பாமென்சும் மாறுபடும். அந்த வகையில், ஒவ்வொரு சீரியல்களிலும் எனது நடிப்பை கதைகளின் சூழலுக்கேற்ப மாற்றிக்கொண்டே வருகிறேன் என்று கூறும் பாலாம்பிகா, இப்போது சீரியல்களில் மாதம் 15 நாட்கள் பிசியாக இருக்கிறேன். அது தவிர, ஏதேனும் கடை திறப்பு விழா, கேம்ஸ் ஷோ, சமையல் ஷோ என வேறு சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறேன். ஆக, சினிமா-சின்னத்திரை என்று மீண்டும் கலைத்துறையில் பிசியாகி இருப்பது சந்தோசமாக உள்ளது. இது தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார்

நன்றி: தினமலர்
-
26th November 2015 09:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks