Results 1 to 10 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    2500 வது பதிவு

    தங்கமலை ரகசியம்




    அழகாபுரி என்றொரு பேரரசு.அதன் அரசன் ஆதித்தன் .அந்த ராஜ்யத்தின் பாத்தியதைக்கு உட்பட்ட ஒரு சிற்றரசு தான மங்களாபுரி.மங்களாபுரியின் இளவரசியின் பெயர் நந்தினி.ஒரு பேரரசை தன் இஷ்டம் போல் ஆள வேண்டும் என்ற பேராசையுடன் வாழ்ந்து வருபவள்தான் இந்த நந்தினி.
    பேரரசரான ஆதித்தன் தனக்கு திருமணம் முடிக்க விரும்பி மங்களாபுரிக்கு வருகை புரிகிறார்.
    மங்களாபுரி இளவரசி தன் விருப்பம் நிறைவேறப்போகிறது என்று ஆசையுயுடன் ஆடிப்பாடிக்கொண்டிருக்கிறாள்.
    அப்பொழுது குறி(ஜோதிடம்) சொல்லும் பெண்ணொருத்தி அந்த இடத்திற்கு வருகிறாள்.அரசகுமாரிக்கு ஜோதிடம் சொல்வதாக கூறுகிறாள்.தான் அரசியாகும் ஆசையில் இருக்கும் நந்தினி குறி சொல்லும் பெண்ணிடம் ஒரு நாடகத்தை நடத்துகிறாள்.அதாவது,தன் தோழி குமுதா என்பவளைஇளவரசி போல் அலங்காரம் செய்து இவள்தான் இளவரசி என்று கூறுகிறாள்.தோழியின் கையை பார்த்து இவளுக்கு அரசியாகும் ஜாதக அமைப்பு இருப்பதாகக்கூற நந்தினியும் தோழிகளும் எள்ளி நகையாடுகின்றனர்.அவர்களின் நகைப்பை பொருட்படுத்தாத குறி சொல்பவள்,தன் வாக்கு தப்பாது அது முற்றிலும் உண்மை என்று கூறி சென்று விடுகிறாள்.
    இந்தசமயத்தில்,
    மங்களாபுரிக்கு வந்திருக்கும் ஆதித்த மன்னன் யாருக்கும் தெரியாமல் இளவரசியை பார்த்துவிட்டு வரலாம் என்ற எண்ணத்தில் அந்த இடத்திற்கு வந்து சேர்கிறார். குறி சொல்லிக்கொண்டிருக்கும் பெண்ணின் வாக்கை கேட்டும்,கையை காட்டிக் கொண்டிருக்கும் பெண்ணையும் பார்த்துவிட்டுஅவளே இளவரசி,
    அவளைப் பார்த்தாகி விட்டது என்ற மகிழ்ச்சியில்அத்துடன் திரும்பி விடுகிறார்.
    திருமண நாள்.
    நந்தினி தன் பணிப்பெண் குமுதாமற்றும் தோழிகளுடன் மகிழ்ச்சியுடன் நின்றிருக்கிறாள்.
    ஆதித்தன் மாலை சூடும் நேரத்தில் தான் உண்மையான இளவரசி நந்தினி என்பதை அறிகிறான்.சற்றே அதிர்ச்சியடைந்தாலும் தன் மனதில் குமுதாவே நிறைந்திருப்பதால் அவளுக்கே மாலையைச் சூட்டுகிறான். இதனால் நந்தினி ஆவேசமடைகிறாள்.குமுதாவைப் பார்த்து"நான் அமர வேண்டிய சிம்மாசனத்திலே உன்னை ஒரு நாளும் உட்கார விட மாட்டேன் "என்று கோபத்துடன் கூறுகிறாள்.

    சிறிது காலம் சென்றதும் ஆதித்தனுக்கும் குமுதாவுக்கும் குந்தை பிறக்கிறது.அந்த குழந்தைக்கு விக்கிரமன் என்று பெயர் சூட்டுகின்றனர்.
    மன்னன் ஆதித்தன் விக்கிரமனுக்கு இளவரசுப்பட்டம் சூட்டவிரும்புகிறார்.அந்த விழாவிற்கு நந்தினியையும் அழைக்குமாறு அரசியான குமுதாகூறுகிறார்.நந்தினியும் விழாவில் கலந்து கொள்வதுடன் அரண்மனையிலேயே தங்கவும் செய்கிறாள்.ஆனால் உள்ளுக்குள் துவேஷம் கொண்டே, பழி வாங்க சந்தர்ப்பம் தேடி காத்துக்கிடக்கிறாள்.இவையெதுவும் தெரியாத குமுதாவும் அவளுடன் நட்புறவுடனும்பாசத்துடனும் பழகி வருகிறாள்.
    சமயம் பார்த்து பழி வாங்க காத்துக்கிடக்கும் நந்தினி ஒரு சந்தர்ப்பத்தில் தன் தோழி சுந்தரியின் மூலம் குழந்தை விக்கிரமனை கடத்திச் சென்று காட்டில் விட்டுவிடுகிறார்கள்.

    இந்த நேரத்தில் தோழி சுந்தரியின் அண்ணன் மகேந்திரன் நந்தினிக்கு அறிமுகம் ஆகிறான்.அவன் மந்திர தந்திரங்களில் வல்லவன்.நந்தினியும் அவனைக் கொண்டு காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என்று சந்தோசமடைகிறாள்.
    குழந்தை காணாமல் போனாலும் உயிருடன் இருப்பதாக அரண்மனை ஜோதிடர்கள் மூலம் ஆதித்தனுக்கு கூறுகின்றனர்.
    மகேந்திரனின் மாய வித்தைகள் மூலம் சில காரியங்களை அரங்கேற்றிக்கொள்ள நந்தினி தலைப்படுகிறாள்.மகேந்திரனோ தனக்கு நந்தினி மாலையிட்டால் அந்தக் காரியங்களுக்கு உடன்படுவதாகக் கூற நந்தினியும் அவனுக்கு இசைகிறாள்.
    நந்தினியின் சதித்திட்டத்தின்படி, குழந்தை விக்கிரமன் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள வேண்டி ஆதித்தன் தன் மனைவியுடன் தனியாக யாருக்கும் தெரியாமல் சாமியார் வேடமிட்ட மகேந்திரனை நாடிச் செல்கிறான்.மாய குளிகையை பாலில் கலந்து கொடுத்து ஆதித்தனையும் குமுதாவையும் குடிக்கச் சொல்லி மகேந்திரன் கூற,இருவரும் அவ்வாறே செய்கின்றனர்.அந்த மாய குளிகைகள் சாப்பிட்ட எவரையும் எந்த உருவத்திற்கும் மாற்றமுடியும்.ஆதித்தனை முத்துமாலையாய் மகேந்திரன் மாற்றி விடுகிறான்.அதன்பின் மறைவிலிருந்து வெளிப்படும் நந்தினியின் சதியை பார்த்து குமுதா அலறுகிறாள்.குமுதாவை பிச்சைக்காரியாய் நந்தினி மாற்றி விடுகிறாள். முத்துமாலையை எடுத்துக்கொண்டு அழுது புலம்பியபடி பிச்சைக்காரி கோலத்தில் குமுதா வெளியேறுகிறாள்.அதன்பின் அதே மருந்தை தான் அருந்தி மகேந்திரன் மன்னன் ஆதித்தனாக தன்னை மாற்றிக் கொள்கிறான்.

    அரண்மனைக்கு ஆதித்தன் உருவத்தில் செல்லும் மகேந்திரன்
    அரசி மலையிலிருந்து விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடுகிறான்.நந்தினியின் கட்டளைப்படி அவளை அரசியாக்குகிறான்.

    காட்டில் விடப்பட்ட குழந்தை விக்கிரமன் யானைக் கூட்டத்தோடு பழகி யானைக்கூட்டத்தின் ஆதரவிலே வளர்ந்து வருகிறார்.

    சில காலம் கழித்து...
    ஆதித்தன் உருவத்தில் வாழ்ந்து வரும் மகேந்திரன தன் மகள் அமுதாவோடும் பரிவாரங்களுடனும் காட்டிற்கு வருகிறான்.அங்கே காட்டுவாசி போல் வாழ்ந்து வரும் வளர்ந்த பெரியவரான விக்கிரமனை பார்க்கிறாள்.சிறு வயதில் இருந்தே காட்டில் வளர்ந்து விட்டபடியால் விக்கிரமனுக்கு பேசத் தெரியாது.காட்டுவாசி போல் தோற்றம் கொண்டிருந்தாலும் அவரை அமுதாவிற்கு பிடித்துப்போக அரண்மனைக்கு அழைத்து வருகிறாள்.அங்கு விக்கிரமனுக்கு கஜேந்திரன் என்று பெயர் வைத்து கல்வி மற்றும் கலைகளை கற்றுத் தருகிறாள்.இயற்கையிலேயே ராஜ வம்சத்தில் பிறந்த விக்கிரமன் முகத்தில் இப்போது ராஜ களை குடி கொள்கிறது.அமுதா விக்கிரமன் மனம் ஒத்துப் போகிறார்கள்.தந்தை ஆத்தனுக்கு (மகேந்திரன்) இது கௌரவப்பிரச்சினை ஆகிறது.விக்கிரமனை சொல்லால் அவமானப்படுத்த விக்கிரமன் காட்டிற்கே சென்று விடுகிறான்.
    அரண்மனையிலிருந்து தப்பிஅமுதா காட்டிற்கு சென்றுவிக்கிரமனிடம் சேர்ந்து கொள்கிறாள்.
    தான் ஏன் இப்படி காட்டில் வளர்ந்தோம்,தன் தாய் தந்தையர் என்னவாயினர்?என்ற கேள்விகள் விக்கிரமனை உந்தித்தள்ள அதற்கான விடை தேடி கண்டுபிடிக்க வேண்டும்என்ற எண்ணத்தில் இருவரும் நாட்டிற்குள் வருகின்றனர்.
    இதே வேளையில் தனியாக இருக்கும் குமுதாவிடம் இருந்து கள்வர்கள் அந்த முத்துமாலையை அபகரித்து சென்றுவிடுகின்றனர்.அதனால் அவள் பைத்தியம் போல் முத்துமாலை.,முத்துமாலை என்று அழுது புலம்பியபடியே தெருக்களில் சுற்றித் திரிகிறாள்.இதைப் பார்க்கும் பாக்கியமும்? விக்கிரமனுக்கும் அமுதாவிற்கும் கிடைக்கிறது.அவள் மேல் பரிதாபப்பட்டு அவளிடம் கருணை கொள்கின்றர்.பின் வந்த வேலையின் முதல் கட்டமாய் ஒரு கடைக்குச் சென்று அமுதா ததன் நகைககளை விற்று பணமாக்குகிறாள்.அந்தக் கடையில் அப்போதுதான் சற்று நேரத்திற்கு முன் குமுதாவிடம் திருடிய முத்துமாலையை கள்வர்கள் விற்றுச் சென்றுள்ளனர்.அந்த முத்துமாலையை அங்கே விக்கிரமன் பார்த்து ஆசைப்பட அமுதா அதை வாங்கி அவர் கழுத்தில் கழுத்தில் அணிவிக்கிறாள்.
    தெருவில் முத்துமாலையை அணிந்து நடந்து வரும் விக்கிரமனை பார்க்கும் குமுதா அந்த முத்துமாலையை எடுக்க விக்கிரமனை பின் தொடர்கிறாள்.

    பின்னர் இரவாகிபட்டபடியால் ஒரு சத்திரத்தில் அவர்கள் இருவரும் தங்குகின்றனர்.சத்திரத்தில் விக்கிரமன் உறங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் குமுதா முத்துமாலையை எடுக்க முயற்சிக்க விழித்துக்கொள்ளும் விக்கிரமன் இருட்டில் அடையாளம் தெரியாமல் கள்வரோ என்று நினைத்து சப்தமிட ,
    சத்திரத்து காவலர்களும் ஓடி வர,
    அதனால் பயந்து குமுதா மூர்ச்சையாகிறாள்.அவளைப் பார்த்தால் திருட வந்தவள் போல் தெரியவில்லை என்று நினைப்பதுடன்
    அவள் மேல் பரிவு கொண்டு உறங்க வைத்து துணைக்கு அமுதாவையும் இருக்க வைக்கிறார்.

    அந்த சத்திரம் உஜ்ஜியினி மகாராஜா விக்கிரமாதித்தன் தங்கிய சத்திரம்.விக்கிரமனின் தேஜஸ் அந்த சத்திரத்து தலைவனிடம் மதிப்பை ஏற்படுத்துகிறது.விக்கிரமாதித்தன் தங்கிய அறையை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறான் .நடு இரவில் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கும் விக்கிரமனை ஏதோ சத்தம் எழுப்பி விடுகிறது.ஏதோ பேச்சுக்குரல் போல் இருக்கவே எங்கே இருந்து இந்த பேச்சுக்குரல் வருகிறது என்று பார்க்க அவரை அந்தக் காட்சி பெரிதும் ஆச்சரியப்படுத்துகின்றது.அது என்னவெனில்,கட்டிலின் நான்கு கால்களின் முனையிலே இருக்கும் பதுமைகள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் காட்சி தான் அது.அதை விட ஆச்சரியம் அந்தப் பதுமைகள் பேசிய தகவல்கள்.விக்கிரமன் எந்த. உண்மைகளை தேடி வந்தாரோ அந்த ரகசியங்களைஅந்த பதுமைகள் தங்களுக்குள் பேசிக்கொண்டன.பைத்தியம் போல் அலைந்து கொண்டிருக்கும் அந்த மூதாட்டி தான் தன் தாயென்றும்,அவர் கழுத்தில் அணிந்திருக்கும் அந்த முத்துமாலைதான் தன் தகப்பனென்றும் கூறுவதுடன் அவற்றிக்கெல்லாம் விமோசனத்தையும்அந்த பதுமைகள் கூறுகின்றன.அந்த ரகசியங்கள்தான் "தங்கமலை ரகசியம்"
    என்றும் கூறுகின்றன.வரும் பௌர்ணமிக்குள் விமோசனத்திற்குண்டான வழிமுறைகளை முடிக்க வேண்டும் அப்படி முடிக்க இயலவில்லையென்றால் காலம் காலமாக அவர்கள் அப்படியே இருந்து விட வேண்டியதுதான்
    என்றும் பதுமைகள் கூற விக்ரமன்
    அதிர்ச்சி அடைகிறார்.

    இதற்கிடையில் நந்தினி ஆதித்தனாக நடித்துக்கொண்டிருக்கும் மன்னன் மகேந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.இவர்களின் சதிகள் மகேந்திரனின் தங்கை சுந்தரியின் மூலம் மந்திரி அறிந்து கொள்கிறார்.சில சாதுர்யமான காரியங்களின் மூலம் மகேந்திரனின் உண்மை உருவத்தை உலகிற்கு காட்டி விடுகிறார்.அவர்களை சிறையில் தள்ளுகிறார்.மகேந்திரன் சிறையில் இருந்து தப்பி விடுகிறான்.

    தங்கமலை ரகசியத்தின் படி பச்சைமலை பவளமலை முத்துமலைஆகிய மூன்று மலைகளை கடந்து இறுதியில் தங்கமலையை அடையவேண்டும்.
    ஒவ்வொரு மலைக்கும் ஒவ்வொரு உபாயங்களை கையாண்டு ஜெயித்தால் மட்டுமே அடுத்த மலைக்கு செல்ல முடியும்.

    முதலில் பச்சைமலை.அங்கு சாந்தம் என்ற உபாயத்தை கையாண்டு அங்கு தோன்றும் அரக்கனை சாந்தமாய் அடிபணியவைத்து அடுத்த மலைக்கான வழியை விக்கிரமன் தெரிந்து கொள்கிறார்.
    இரண்டாவது பவளமலை.அங்குதானம் என்ற உபாயம்.அங்கு தோன்றும் தேவகன்னியர் விக்கிரமனின் அழகையும் வயதையும் தானமாக பெற்று அடுத்த மலைக்கு வழி காட்டுகின்றனர்.இந்த உபாயத்தினால் விக்கிரன் வயோதிகத்தை அடைந்து விடுகிறார்.
    மூன்றாவது முத்துமலை..இங்கு குமுதா பேதம் என்ற உபாயத்தைக்கொண்டு அடுத்த மலைக்கு வழி கேட்டு அதை விக்கிரமனிடம் கூறுகிறாள்.அந்த மலையின் ரகசியத்தை சொன்னால் சொல்பவர்கள் கல்லாக மாறி விடுவர்.அதன்படி விக்கிரமனிடம் ரகசியத்தை சொன்னதும் அமுதா கல்லாகி விடுகிறாள்.அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தாக்கினாலும் அனைத்தையும் தாங்கிக்கொண்டு தாயையும்,தாரத்தையும் தூக்கிக் கொண்டு கடைசி மலைக்கு முதுமை தோற்றத்துடன்விக்கிரமன் செல்கிறார்.

    தங்கமலை
    இங்கு வந்ததும் கல்லால் ஆன உடம்பும் மனித தலையும் கொண்ட யோகியை பார்க்கிறார்.யோகியின் இந்த நிலைமைக்கு காரணமும் மகேந்திரன்தான்.யோகியை வணங்கும் விக்கிரமனுக்கு வழி காட்டுகிறார் அவர்.அங்கிருக்கும் மந்திரக்கோலை எடுத்துவந்தால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று யோகி சொல்லஅதை எடுக்க செல்லுகிறார் விக்கிரமன்.இந்த நேரத்தில் அங்கு வந்து விடுகிறான் மகேந்திரன்.விக்கிரமனும் மகேந்திரனும் கடும் சண்டைபுரிகின்றனர். இறுதியில் வாய்மையே வெல்லும் என்பதற்கேற்றவாறு விக்கிரமன் அந்த மந்திரக்கோலை தொட்டு சுய உருவம் அடைந்ததுடன் மகேந்திரனையும் வெல்கிறார்.அந்த மந்திரக்கோலை கொண்டு யோகியை மானிட உருவத்திற்கு மாற்ற,யோகி அந்தக்கோலை வாங்கி ,
    முத்துமாலையை ஆதித்தனாகவும்,
    பிச்சைக்காரி உருவத்தில் இருக்கும் குமுதாவை பழைய தோற்றத்திற்கும்,
    கல்லாய் மாறிய அமுதாவை உண்மைத்தோற்றத்திற்கும் மாற்றுகிறார்.பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததில் அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

    *****************சு பம்**********************

    விக்கிரமன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர்திலகம்.
    " நான் அதிகம் பேசாது நடித்த படம்"என்று நடிகர்திலகம் கருத்து தெரிவித்த படம். நடிகர்திலகம் தோன்றும் அந்த ஆரம்ப வன காட்சிகள் டார்ஜான் படத்தை நினைவு படுத்தும்.நடிகர்திலகம் தோன்றும் ஆரம்ப வனக்காட்சிகளை பார்க்கும்போது படம் முழுவதும் அதே டார்ஜான் கதை அமைப்பிலேயே அமைந்திருக்கலாமே என்றுநினைக்கத் தோன்றும்.


    படம் ஓடும் நேரம் 3மணி 11விநாடிகள்.நடிகர்திலகத்தின் உருவத்தை நாம் திரையில் பார்க்கும்போது 1மணி 4 விநாடிகள் கடந்திருக்கும்.1மணி 41 விநாடிகள் கடந்தபின்புதான் அவர் பேசும் காட்சியே வரும்.அப்பொழுதும் ஒன்று இரண்டு வார்த்தைகள் தான்.
    சரியாக1மணி 50விநாடிகள் 25 நொடிகள் கடந்தபின்புதான் சிங்கத்தின் குரலே ஒலிக்க ஆரம்பிக்கும.ஆனாலும் இந்தப்படத்தில் பேசி நடித்த காட்சிகளைக் காட்டிலும் பேசாமல் நடித்த காட்சிகளில் அவருடைய நடிப்பு மலைக்க வைக்கிறது..காட்டுவாசியாய் அவரின் கோலம் கச்சிதம்.அமுதைப் பொழியும் நிலவே பாடலைத் தொடர்ந்து வரும் சண்டைக்காட்சியில் ராட்சஸத்தனமாய் அவர் நடித்திருக்கும் நடிப்பு பிரமிப்புதான்.அரண்மனையில் சிரித்துக்கொண்டே அவர் செய்யும் ரகளைகள் எல்லாம் அட்டகாசமான நடிப்பு.
    காட்டுவாசித் தோற்றத்தில் இருந்து மாறியபின் அவர் முகத்தில் இருக்கும் தேஜஸ் பெரும் சக்கரவர்த்திகளுக்கு கூட இருந்திருக்குமா?என்று யோசிக்கும் வைக்கும் தோற்றம் அவரிடத்திலே காணப்படும்.

    முதுமை தோற்றத்திற்கு மாறியபின்பு அந்த தோற்றத்திற்கேற்றவாறு குரலையும் நடையும் வேறுபடுத்தி விடுவார்.நம் கண்களையே நம்மால் நம்ப முடியாத நடிப்பு அது.

    பராசக்தி மனோகரா தூக்குத்தூக்கி போன்ற படங்களில் நடித்துஉச்சாணிக்கொம்புக்கு அவர் புகழ் பெற்ற பின்னரும் இது போன்ற படங்களில் துணிந்து நடித்திருப்பது,
    நடிப்பு அவருக்கு அடிமை என்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றது.

    பத்துக்கும் மேலான பாடல்கள் இருந்தாலும் எப்பொழுதும் அழியாத பாடலாய் "அமுதைப் பொழியும் நிலவே" இருக்கும்.




  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •