-
24th February 2016, 07:17 PM
#1
Junior Member
Devoted Hubber
திருடனுக்கு ஜே !
மாணிக்கம் ஒரு கை தேர்ந்த திருடன். சென்னை வளசரவாக்கத்தில் , அவன் இப்போது ஒரு வீட்டைக் குறி வைத்துக் கொண்டிருந்தான். அந்த பகுதியிலேயே அது ஒரு பெரிய பங்களா. வீட்டு வாசலில் செக்யூரிட்டி, தோட்டக்காரன், வேலைக்காரர்கள், மூணு பெரிய கார்கள். நல்ல பசையுள்ள பார்ட்டிதான் போல .
மாணிக்கத்துக்கு, அந்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு வேலைக்காரன், முத்து தான் இன்பார்மர்.
நேற்று தான் முத்து சொன்னான் மாணிக்கம் அண்ணே! எங்க எஜமானி அம்மா, அவங்க பையன் , அப்புறம் எஜமானி அம்மாவோட அண்ணா, மூணுபேரும் , இன்னிக்கு வைத்தீஸ்வரன் கோவில் போறாங்கண்ணே! நாளைக்கு தான் வராங்க. இன்னிக்கு ராவே நீங்க தேட்டை போட்டுடலாம். அம்மா அறை மாடியிலே தான். அங்கே தான் அவங்க நகை, ரொக்கம் எல்லாம் பீரோலே வெச்சிருக்காங்க.
அது சரி முத்து , வேறே யாராவது குடும்பத்திலே இருக்காங்களா, ஊருக்கு போகாமே?
வேறே யாரும் இல்லேண்ணே! மூணு பேரு மட்டும் தான். சின்ன குடும்பம் நானும் மத்த வேலைக்காரங்க எல்லோரும் அவுட் ஹௌஸ்லே இருப்போம் நீங்க வாங்கண்ணே, நான் அம்மா ரூம் கதவை திறந்து வெச்சிடறேன்..
சரி முத்து, அப்படியே செய். உனக்கும் ஒரு பங்கு உண்டு !
***
வேணு என்கிற ராபர்ட் வேணு:
மேற்சொன்ன அந்த வீட்டின் செல்ல மகன். ஒரே மகன். அவனுக்கு ஒரு 22 வயது இருக்கும். வேணுவின் அப்பா ராபர்ட் ஒரு வெள்ளைக்காரர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். அவர் இப்போது உயிருடன் இல்லை. இப்போது வேணு, அவனது அம்மா, ஒரு இந்திய பெண், தனது அண்ணனுடன் இந்த வீட்டில். சொத்துக்கு பஞ்சமேயில்லை, ஆனால்
வேணு ஒரு நோயாளி. அவனுக்கு சிறு வயது முதலே வயிற்று வலி, எப்போதும் ஓய்ச்சல், முட்டி வலி. நாளாக நாளாக நோயின் தீவிரம் அதிகமாகி கொண்டிருக்கிறது. முடி உதிர ஆரம்பித்து விட்டது, உடல் இளைக்க ஆரம்பித்து விட்டது.
பார்க்காத டாக்டர் இல்லை, எடுக்காத டெஸ்ட் இல்லை. என்னென்னமோ செய்து பார்த்தாகிவிட்டது. ஒன்றும் பிரயோசனமில்லை. கடந்த ஒரு வருடமாக வேணுவின் உடல் நிலை மோசமாகி கொண்டிருந்தது.
ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிந்தது. டாக்டர்களின் கணக்குப் படி, வேணுவின் உலக வாழ்க்கை மிஞ்சினால் ஒரு வருடம்.வேணுவின் தாய்க்கு, தெரிந்த ஒரே வழி! கடவுளிடம் முறையிடுவது தான். அதுதான் இப்போது மூவரும் கிளம்பி விட்டார்கள், சீர்காழி பக்கத்தில் இருக்கும் வைதீஸ்வரன் கோவிலுக்கு, பரிகாரம் பண்ண.
கூட வருவதாக இருந்த வேணு, கடைசி நிமிஷத்தில் உடல் நிலை காரணமாக போகவில்லை. இந்த விஷயம் திருடன் மாணிக்கத்திற்கு தெரியாது.
பங்களா : அன்று இரவு
இரவு மணி 2.00. பங்களா வாட்ச்மேன் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த நேரம்.
மாணிக்கம் அக்கம் பக்கம் பார்த்து மெதுவாக காம்பவுண்ட் சுவர் எகிறி குதித்தான். மெதுவாக வீட்டின் கதவை கள்ள சாவி போட்டு திறந்து மாடிக்குப் போனான். எஜமானி அறைக்குள் புகுந்தான். மெதுவாக இரும்பு பீரோவை திறக்க ஆரம்பித்தான்.
பக்கத்து அறையில், நோயின் தாக்கத்தால், தூங்காமல் விழித்திருந்த அந்த வீட்டு பையன் ராபர்ட் வேணு , அம்மாவின் அறையில் சத்தம் கேட்டு, எழுந்து , தட்டு தடுமாறி வந்தான்.
அம்மாவின் அறையில் திருடன்.
திருடன் திருடன் என்று சத்தம் போட்டபடியே , வேணு அறை வாசலில் வழி மறைத்து நின்றான். தப்பிக்க நினைத்த மாணிக்கம், ஓர் கத்தியை காட்டி சத்தம் போடாதே, கொன்னுடுவேன் என்று மிரட்டினான்.
வேணு தனது உடல் நோயை மறந்து, மாணிக்கத்தை நோக்கி முன்னேறினான். இளங்கன்று பயமறியாது.
சதக். மாணிக்கத்தின் கத்தி வேணுவின் வயிற்றில், பாய்ந்தது. ரத்தம் பீறிட்டது. அம்மா அலறியபடியே, வேணு கீழே சாய்ந்தான். சத்தம் கேட்டு மற்ற வேலைக்காரர்களும் ஓடி வந்தனர்.
மாணிக்கம், மற்ற வேலையாட்கள் வரு முன் தப்பி ஓடினான். வேலைக்காரர்கள் பிடி பிடி என பின்னாடியே ஓடினர். அதற்குள் விட்டான் மாணிக்கம் ஜுட்.
***
போலீஸ் ஸ்டேஷன்: அடுத்த நாள் காலை
இன்ஸ்பெக்டர் நேர்கொண்டான். அவர் திருடன் மாணிக்கத்தை வலை போட்டு தேடிக் கொண்டிருந்தார். மாணிக்கத்தால் குத்தப் பட்டு ஒரு பையன் ஆஸ்பத்திரியில். உயிருக்கு போராடிக் கொண்டு. பையன் குடும்பம் பணக்கார இடம் போல . அரசியல் செல்வாக்கு வேறே உள்ளவர்கள். மேலதிகாரிகள் குடைகிறார்கள். நேர்கொண்டான் எல்லோரையும் விரட்டிக்கொண்டிருந்தார்.
வேலைக்காரன் முத்து, இப்போது போலீஸ் கஸ்டடியில். நடந்தது எல்லாவற்றையும் உளறிக் கொட்டி விட்டான்.
அப்போது வந்தது போன் கால். சார், திருடன் மாணிக்கத்தை பிடிச்சிட்டோம். நேரே ஸ்டேஷனுக்கு வரோம்.
வெரி குட். கொண்டு வாங்க. ரெண்டு தட்டு தட்டி விசாரிப்போம்.
***
தனியார் ஹாஸ்பிடல்:
வேணு இப்போது ஐ.சி.யு வில். அவன் மூக்கில், கையில் குழாய்கள் செருகி . ஆழ்ந்த மயக்கத்தில் வேணு. அவனைச் சுற்றி டாக்டர்கள், நர்ஸ்கள். அந்த அறைக்கு வெளியே , வேணுவின் அம்மாவும், மாமாவும் , கவலை தோய்ந்த முகத்துடன், பிசைந்த கைகளுடன் காத்துக் கொண்டிருந்தனர். பெரிய டாக்டரை பார்த்தவுடன் அம்மா ஓடி வந்தாள்.
டாக்டர்! என் பையனுக்கு இப்போ எப்படி இருக்கு டாக்டர்?- ஒண்ணுமில்லையே! நோயினால் உலகத்தை விட்டு எப்படியும் விரைவில் போகப்போறான் என்று தெரிந்தும், பெத்த மனது தனது பையன் இப்போது பிழைக்க வேண்டுமென்று வேண்டியது.
ரொம்ப ரத்தம் போயிருக்கு. கிட்டத்தட்ட இரண்டு லிட்டர். ட்ரீட்மென்ட் பண்ணிண்டிருக்கோம் இப்போ எதுவும் சொல்ல முடியாது.. பாக்கலாம். தைரிமாயிருங்க டாக்டர் ஸ்டாண்டர்ட் பதில்.
என்ன அண்ணா ! வேணு பிழைப்பானா?. டாக்டர் இப்படி சொல்றாரே.-அம்மா கதறினாள்.
கவலைப்படாதே! கடவுள் நம்மை நிச்சயம் கைவிட மாட்டார்
***
போலீஸ் ஸ்டேஷன்:
மாணிக்கம் இப்போது போலீஸ் கஸ்டடியில். ரெண்டே தட்டு தான், மாணிக்கம் , தான் அந்த பங்களாவில் திருடப் போனதையும், யதேச்சையாக வேணுவை கத்தியால் குத்தியதையும் ஒப்புக்கொண்டு, ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிட்டான். எப்.ஐ.ஆர் ரெடி. இன்ஸ்பெக்டர் கையெழுத்திட வேண்டியது தான் பாக்கி.
அப்போது வாசலில் இரண்டு பெரிய கார்கள் வந்து நின்றன. வேணுவின் மாமா, அம்மா மற்றும் இரண்டு வக்கீல்கள் உள்ளே வந்தனர். இன்ஸ்பெக்டர் நேர்கொண்டான் எழுந்து வரவேற்றார். ஒரு வேளை வேணு இறந்து விட்டாரோ? கொலை கேஸ் ஆகி விட்டதோ? எண்ணங்கள் ஓடின அவர் மனதில்.
இன்ஸ்பெக்டர்!. அந்த மாணிக்கத்தை... ஆரம்பித்தார் மாமா.
சார், உங்க பையனுக்கு ஒண்ணும் ஆகலியே? இப்போ எப்படி இருக்கார்? நேர்கொண்டான். அவர் கவலை அவருக்கு.
ஒண்ணும் ஆகலை. நல்லா இருக்கான். அது விஷயமாக பேசத்தான் வந்திருக்கோம்.
சொல்லுங்க சார்! மாணிக்கம் இப்போ எங்க கஸ்டடியில் தான் இருக்கான். எல்லா குற்றத்தையும் ஒப்புக்கொண்டான். கேஸ் போட்டு குறைந்தது பத்து வருடமாவது ஜெயில் தண்டனை வாங்கிடலாம்.
பதறினார் மாமா. வேண்டாம்! வேண்டாம்! அதை சொல்லத்தான் ஓடோடி வந்தோம். அவன் பேரிலே இருக்கற கேசை வாபஸ் வாங்கி அவனை வெளியே விட்டுடுங்க. இதோ என் மருமான் கையெழுத்திட்ட லெட்டர். எவ்வளவு செலவானாலும், நாங்க கொடுக்கிறோம், கேசை க்ளோஸ் பண்ணிடுங்க.
நேர்கொண்டானுக்கு ஒன்றும் புரியவில்லை. யாராவது திருடனுக்கு வக்காலத்து வாங்குவாங்களா? . பெரிய இடத்து விஷயம் ! . நமக்கு எதுக்கு பொல்லாப்பு?
நேர்கொண்டான் சரி சார், அப்படியே ஆகட்டும். பிழைக்க தெரிந்தவர். கேஸ் க்ளோஸ் பண்ண ரூபாய் கைமாறியது. மாணிக்கம் விடுதலையாகி வெளியே வந்து விட்டான். என்ன நடக்கிறதென்றே புரியவில்லை அவனுக்கு.
வேணுவின் மாமா, மாணிக்கத்தை பார்த்து, தேங்க்ஸ் மாணிக்கம், உன்னால் தான் என் பையன் பிழைத்தான். உனக்கு நாங்க ரொம்ப கடமை பட்டிருக்கோம். ஒரு நாலு நாள் கழித்து வீட்டுக்கு வா. என் பையன் கையால் உனக்கு எங்கள் அன்பளிப்பாக ரூபாய் ஐந்து லட்சம் தருகிறோம். அதை வச்சு நல்லபடியாக இரு
மாணிக்கத்திற்கு தலை சுற்றியது. கத்தியால் குத்தியதற்கு காசா? இதிலே ஏதேனும் உள் குத்து இருக்குமோ? சரியான பைத்தியக்கார குடும்பமாக இருக்கிறதே? திரு திரு வென்று விழித்தான் திருடன்.
ஐயா! நான் பண்ணின காரியத்திற்கு எப்படி தம்பி முகத்திலே விழிக்கறது? அவரை கத்தியாலே குத்தி இருக்கேனே?
மாணிக்கம்! உன்னை பார்க்கணும்னு வேணு தான் சொன்னான். உனக்கு தெரியாது . எங்கள் வேதனை தீர்த்த தெய்வமப்பா நீ!. கட்டாயம் வா!
ஐயா! ரொம்ப நன்றிங்க! கட்டாயம் வரேனுங்க.. வருவதை விடுவானேன்? ஆனாலும் பயமாக இருந்தது. போலீஸ் ஸ்டேஷன்லேருந்து நம்பளை கூட்டிண்டு போய், கொன்னுடுவாங்களோ?
இன்ஸ்பெக்டர் நேர்கொண்டானுக்கும் ஒன்றும் புரியவில்லை. சரியான லூஸு குடும்பமாக இருக்கிறதே? என்ன நடக்குது இங்கே?
அவர் விழிப்பது பார்த்து மாமா சிரித்தார். இன்ஸ்பெக்டர் சார், அது பெரிய கதை. ஒண்ணும் குழப்பமில்லை. மாணிக்கத்தோட நீங்களும் வாங்க. வேணுவுக்கு உடல் நிலை சரியானதும் சொல்றேன் , நம்ம வீட்டிலே விருந்து. அங்கே வெச்சு எல்லா விஷயமும் சொல்றேன்
விடை பெற்றார்கள் வேணுவின் குடும்பத்தினர்.
***
பங்களா : நான்கு நாள் கழித்து
இந்த தடவை மாணிக்கம் சுவரேறி குதிக்காமல், வாசல் பெரிய கேட் வழியாக சென்றான். வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு வாட்ச்மன் அவனை துரத்தாமல் அவனுக்கு சலாம் போட, வீட்டிற்குள் சென்றான்.
வாங்க மாணிக்கம்! வாங்க வரவேற்றது வேணு சிரித்தபடி. அவன் வயிற்றில் பெரிய கட்டு.
சிறிது நேரத்தில், மாமாவும் அம்மாவும் அங்கே வந்தனர். மாணிக்கத்தை வரவேற்று அமர செய்தனர். இன்ஸ்பெக்டர் நேர்கொண்டானும் கொஞ்ச நேரத்தில் ஆஜர் ஆனார்.
வேணுவின் கையில் ஒரு பெட்டி. பெட்டியில் ரூ ஐந்து லட்சம். இந்தாங்க மாணிக்கம் என்று புன்சிரிப்புடன் மாணிக்கத்தின் கையில் கொடுத்தான். . தலை கால் புரியவில்லை மாணிக்கத்திற்கு. இங்கே நான் காண்பது கனவா அல்லது நனவா! நம்ப முடியவில்லை. கள்ள நோட்டா இருக்குமோ? பெட்டியை வாங்கிகொண்டான்.
இன்ஸ்பெக்டருக்கு அரிப்பு தாங்கவில்லை. என்னடா இது அதிசயம்? எப்படி ஒரு திருடனுக்கு இந்த வாழ்க்கை?
முடியாமல் கேட்டு விட்டார். திருடனுக்கு இவ்வளவு சன்மானம் தரீங்களே! ஆச்சரியமாக இருக்கு! ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?
சொல்றேன்! சொல்றேன்! ஆரம்பித்தார்.
வேணுவிற்கு வந்திருக்கும் நோய் ஒரு பரம்பரை நோய். ஹீமொக்ரோமடோசிஸ். (hemochromatosis - iron over load) . அதாவது உபரி இரும்பு நோய்.. உங்களுக்கு தெரியாது, அவன் அப்பா ஒரு ஐரோப்பியர். அவரது வம்சாவளி நோய். இது. வேணுவின் அம்மா தான் இங்கே இருக்கும் என் தங்கை.
மாமா தொடர்ந்தார். வேணுவிற்கு பிரச்னையே அவனது உடலில் உள்ள அதிகப்படியான இரும்பு சத்து தான். சர்க்கரை, கொழுப்பு மாதிரி இரும்புச்சத்தும் எல்லாருக்கும் அவசியம். நமது உடலில் உபரி இரும்பு வெளியேறி விடும், கழிவாக. ஆனால், வேணுவிற்கு அவனது உபரி இரும்பு சத்து வியாதியால், தேவைக்கதிகமான இரும்பும் அவனது உடலிலேயே தங்கி விடும்.
இதனால், நாளாவட்டத்தில், இந்த நோய், அவனது இரப்பை, முட்டிகளை பாதிக்க ஆரம்பித்து விட்டது. வைத்தியம் பார்க்காவிட்டால், மரணத்தில் கொண்டு விடும் கொடிய குறைபாடு.
நம்பவே முடியலியே. இன்னிக்கு இருக்கிற மருத்துவ வசதிக்கும், உங்கள் வசதிக்கும், ஏன் ட்ரீட்மென்ட் பண்ணலே? நேர்கொண்டான் சந்தேகம் கேட்டார்.
மாணிக்கம், ஈ உள்ளே போவது தெரியாமல், வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தான்.
மாமா தொடர்ந்தார். இந்த ஹீமொக்ரோமடோசிஸ் நோயைக் கண்டு பிடிப்பது கடினம். ஏனெனில் நோயின் அறிகுறிகள் எல்லா பொதுவான நோய்களுக்கும் உரியது. எவ்வளவோ டெஸ்ட் எடுத்தும், இந்த நோய்தான்னு கண்டு பிடிக்க முடியலே. வேணு கொஞ்சம் கொஞ்சமாக, உடலில் இரும்பு அதிகமாகி, துரு பிடித்து செத்துக் கொண்டிருந்தான்.
மாணிக்கத்தை பார்த்தார். இந்த நேரத்தில் தான் இறைவன் அனுப்பியது போல் நம்ம வீட்டிலே மாணிக்கம் திருட வந்தான்.
மாமா நிறுத்தினார். மாணிக்கத்தை பார்த்து சிரித்தார். வேணுவும் முறுவல் பூத்தான்.
மாணிக்கம் கத்தியால் வேணுவை குத்தினான். நிறைய ரத்தம் வேணுவின் உடலிலிருந்து வெளியேறியது. வேணு பிழைத்து விட்டான்.
நேர்கொண்டான் நெற்றியை சுருக்கினார். என்ன சொல்றீங்க! புரியலியே!
மாமா விளக்கினார். ஹீமொக்ரோமோடோசிஸ் நோய்க்கு ஒரே வைத்தியம், ரத்தத்தை உடலில் இருந்து வெளியேற்றுவது தான். கிட்டத்தட்ட 4 யுனிட் (2 லிட்டர்) ரத்தம் போனதும் , உபரி இரும்பு குறைந்து போய், வேணு குணமாகிவிட்டான். கோமா நிலைக்கு போக வேண்டியவன் விசுக்கென்று எழுந்து உட்கார்ந்து விட்டான். உடல் வலி குறைந்து விட்டது.
முதலில் டாக்டர்களுக்கே ஒன்றும் புரியவில்லை. பின்னர்தான் பல பரிசோதனைக்கு பிறகு உபரி இரும்பு நோய் இருப்பது தெரிந்தது. இப்போது வாரா வாரம் வேணுவின் ரத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுத்து, ஆறு மாதத்தில் பூரண குணமாகி விடுவான் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். மாணிக்கத்திற்கு தான் முழு நன்றி
அப்போது அங்கே வந்த வேணுவின் அம்மா சொன்னாள் கடவுள் தான் மாணிக்கம் ரூபத்தில் வந்து எங்க பிள்ளையை எங்களுக்கு திருப்பிக் கொடுத்திருக்கார். எங்க வேண்டுதல் எங்களை கைவிடலே. வைதீஸ்வரன் கோவிலுக்கு போய் வந்த நேரம் !
நேர்கொண்டானுக்கு சிரிப்புதான் வந்தது. எப்படியெல்லாம் படிச்சவங்களும் கூட நம்பறாங்க!.
எப்படியோ எல்லாம் சுபமாக முடிந்ததே. அது போதும். நேர்கொண்டான் விருந்து முடிந்தவுடன் விடை பெற்றார்.
ரத்த வங்கி (இரண்டு மாதத்திற்கு பின்)
ரத்த வங்கியின் வாசலில் கார் வந்து நின்றது. வண்டியிலிருந்து வேணு இறங்கினான். கூடவே அவனது மாமா, அம்மா. அடடே, கார் டிரைவர் நம்ம மாணிக்கம்! எல்லாரும் ரத்த தானம் கொடுக்க உள்ளே போனார்கள்.
வாங்க வாங்க வரவேற்றார், உள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் நேர்கொண்டான். இப்போதான் நான் ரத்தம் கொடுத்துட்டு வரேன். என்றார் பெருமையுடன்.
வேணுவிற்கு ஆச்சரியம். நீங்க எதுக்கு ரத்த தானம் கொடுத்தீங்க?
நேர்கொண்டான் நெளிந்தார். அதெல்லாம் ஒண்ணுமில்லே. எனக்கும் ஏதாவது நல்லது செய்யணும் போல இருந்தது. அதுவும் இல்லாமல் ரத்தம் கொடுக்கிறவங்களுக்கும் லாபம் இருக்கே. ஒரே கல்லிலே மூணு நாலு மாங்காய்.
மாணிக்கத்திற்கு புரியவில்லை. அதெப்படி கொடுக்கறவங்களுக்கு லாபம் ?
நேர்கொண்டானுக்கு இப்போ சான்ஸ்: விளக்கினார். இங்கே ரத்தம் எப்போ கொடுத்தாலும், ரத்த அழுத்தத்தை ப்ரீயா செக் பண்ணிடுவாங்க. அடிக்கடி ரத்த தானத்தால் இதய நோய் வரும் ஆபத்து குறையுமாமே! ரத்தத்தில் இருக்கும் உபரி இரும்பு குறையும்னு பெரிய ஐயாவே சொல்லிட்டார். மத்தவங்களுக்கு உதவி செய்தோம்னு ஒரு திருப்தி. உடம்பு வெயிட் கூட குறையுமாம்? புது ரத்தம் கூடுதாமே?
அடுக்கிக்கொண்டே போனார். வேணு இடை மறித்தான். இவ்வளவு விஷயம் ரத்த தானத்திலே இருக்கும்னு முன்னாடியே தெரியாம போச்சே. பரவாயில்லே, கடவுளே, என்னை நிறைய தானம் பண்ண வழி கொடுத்திட்டார். அந்த கடவுளுக்கு நன்றி
நேர்கொண்டான் விடை பெற்று வெளியே சென்றார். மற்றவர் வங்கியின் உள்ளே சென்றனர். மாணிக்கம் தான் அதில் முதல்.
முற்றும்...
************************************************** **********************
ரத்த தானம் செய்யும் நல்ல உள்ளங்களுக்கு இந்த கதை சமர்ப்பணம்
************************************************** **********************
ஹீமொக்ரோமோடோசிஸ் பற்றி தெரிந்து கொள்ள இந்த திரியில் பார்க்கவும்
http://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0001368/
Last edited by Muralidharan S; 24th February 2016 at 07:43 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th February 2016 07:17 PM
# ADS
Circuit advertisement
Bookmarks