Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வியட்நாம் வீடு - 1970

    எனது சிறு வயது முழுக்க நெய்வேலியில் கழிந்தது எனது எஸ்.எஸ்.எல்.சி வரை. இரு வேறு பட்ட நம்பிக்கைகளில் உழன்று வந்தேன். ஒரு புறம் பெரியாரின் ஈர்ப்பு. மறுபுறம் மார்க்சிடம். வீட்டில் பூணல் போட மறுத்து விட்டேன்.( எனது அம்மா ,அப்பா இருவருமே சற்று முற்போக்கு) எனது பேச்சுக்கள் வன்னியர் பேச்சு வழக்கு போலவே இருக்கும்.(கல்யாணமான புதிதில் என் மனைவி ஆச்சர்ய பட்டு கேட்ட கேள்வி- நீங்க பேசறது பிராமண பாஷையாகவே இல்லையே?)கடவுளிடம் முரண் படாமலும்,நம்பிக்கை கொள்ளாமலும்(Agnostic ) உள்ளவன். அதனால் எனக்கு என் உறவினர்களால் ப்ராமின்களை பற்றியும்,நண்பர்கள்,சூழ்நிலை,தேர்ந்த படிக்கும் வழக்கம்,கொள்கைகளின் பால் மற்றையோரையும் நன்கு அறிந்ததால் , இரு துருவங்களையும் நன்கு அறிந்தவன். அப்போது இரண்டே இரண்டு வேறு பட்ட கருத்துக்கள்தான் உலவி வந்தன. பிராமணர்கள் வேற்று கிரக வாசிகள் போலவும்,எல்லோரையும் அடிமை கொண்டு,பிரித்தாண்டு, சூழ்ச்சியிலேயே வாழும் கொடியவர் என்ற திராவிட ஹிட்லர் டைப் பிரச்சாரங்கள் ஒரு புறம். நம்பளாவெல்லாம் மூளையுள்ளவா. என்ன இருந்தாலும் ஒஸ்திதான் என்ற அசட்டு நம்பிக்கை மறுபுறம். பிராமணர்கள் கொஞ்சம் மிகையான தோரணை, நம்பிக்கைகள், அகந்தை, கொண்டு மற்றோருடன் இருந்து தனித்து தெரிந்த காலம். சில வீட்டில் பெரியோர்களை பார்க்கும் போது நிஜமாகவே வேற்று கிரக வாசிகள் போலவே நடந்து கொள்வார்கள்.நடை,உடை,பாவனை, தோரணை எல்லாவற்றிலும். இத்தனைக்கும் அவர்கள் வீட்டின் நிலவரம் சராசரிக்கும் கீழேதான் இருக்கும். அறிவில்,படிப்பில், சமூக அந்தஸ்தில்,பணத்தில்.

    அப்போது, சில கதைகளில் பிராமணர்களை அறிய வாய்ப்பிருந்தது (அதிக பட்ச எழுத்தாளர்கள்) ஆனால் படங்களில் அந்த சமூகம் பிரதிபலிக்க பட்ட விதம் காமெடிக்காக மட்டுமே. அதுவும் வஞ்ச மனம் கொண்ட காமெடியன் ஆக. எனக்கு சிரிப்பாக வரும். சராசரியான தமிழர்களை (வீட்டில் தமிழ் தவிர எதுவும் பேச மாட்டார்கள். மாறாக சில திராவிட தமிழ் ரத்தங்கள் வீட்டில் தெலுங்க,கன்னட பேச்சுக்களை ரசிக்கலாம்) இந்த மாதிரி ஒதுக்க என்ன காரணம் என்று யோசித்தால் மூளை வரளும்.

    இந்த சூழ்நிலையில் எழுபதில் வந்த படம் வியட்நாம் வீடு. இந்த படத்தை ஒரு நல்ல நடு முயற்சி என்று சொல்லலாம். Melodrama வில் இருந்து விலகாமல் , ஒரு ரியலிச படத்திற்கான அம்சங்களை கொண்டிருந்த படம். சமகால பிரச்சினைகளை பேசியது புதிய மீடியத்தில், சமூகத்தில் அந்நிய படுத்த பட்ட, மிகையான நம்பிக்கை,அகந்தை,கவுரவ மனப்பான்மை கொண்ட ஒரு சமூகத்தை மைய படுத்தி அவர்களின் சராசரி பிரச்சினைகளை பேசியது. ஓய்வு பெறவிருக்கும் ஒரு மேல் மத்யதர பிரைவேட் கம்பெனி ஊழியனை பேசியது.(கவர்மென்ட் ஊழியர் என்றால் வேலை பார்க்கும் போது வறுமையிலும்,retire ஆனதும் செழிப்பாகவும் இருப்பார்.பிரைவேட் என்றால் தலை கீழ் ) அவனின் சராசரி உடல் பிரச்சனையை பேசியது. சிறிது moral value வில் பிறழும் அவன் மகனை பற்றி பேசியது.பிறந்த குலத்தில் உள்ள அறிவு செருக்கை இழந்த படிக்காத அவன் மகன் பிரச்சினை பேசியது. பருவ வயதின் பால் பட்டு வழுவ இருந்த மகளை பேசியது. நன்கு சம்பாதித்தும் சேமிக்க தெரியா உயர் சம்பள காரர்களின் வயதான வாழ்க்கையை பேசியது. அவர்களின் positional importance வீட்டிலும்,வெளியிலும்,அலுவலகத்திலும் வதை படும் கொடுமை பேசியது. பிராமணர்களும் நம்மிடையே உள்ள ரத்தமும் ,சதையும் கொண்ட ,பிரச்சினைகளை அன்றாடம் சந்திக்கும் சராசரி மனிதர்களே என்று பேசியது. அந்த மனிதனின் மிகையான நம்பிக்கைகளும்,செருக்கும் சோதனைக்குள்ளான மிடில்-ஏஜ் ,ஓல்ட்-ஏஜ் crisis சமாசாரங்களை ,அறிவு-ஜீவி மேர்பூச்சற்ற நேர்மையான,வெளிப்படையான,பாவனைகள் களைந்த நல்ல முன் முயற்சிதான் வியட்நாம் வீடு.

    வியட்நாம் வீட்டின் கதை ஒன்றும் nerrative surprise கொண்டதல்ல. மிக சாதாரண அடுத்த வீட்டு கதை. Prestige பத்மநாபையர் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த தகப்பனை சிறு வயதில் இழந்து,தாயாரால் வறுமையில் வளர்க்க பட்டு,அத்தையால் ஆதரிக்க பட்டு ,அத்தை மகளையே மணந்து நல்வாழ்க்கை
    வாழும் ஒரு தனியார் நிறுவன உயர் நிலை ஊதியர்(B.P, இருதய நோய் உண்டு) நல்லொழுக்கம் ,நன்னடத்தை, பேணும்,மற்றோரை பேணும் படி கட்டாய படுத்தும், prestige என்பதை தன மந்திர சொல்லாக கொண்டு வாழ்பவர். அற்புதமான இவர் வாழ்வு, சரியான சேமிப்பில்லாமல், அலுவலகம் இவருக்கு ஓய்வு(retiement )கொடுத்து விட, தயாராய் இல்லாதவர் பிள்ளையை மலை போல் நம்புகிறார். ஆனால் நல்ல வேலையில் உள்ள மூத்தவன் மனைவி பேச்சால் தடம் புரண்டு, அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் அளவில் சென்று,குடும்ப பொறுப்பையும் ஏற்க மறுக்க, இளையவன் சரியான படிப்பு இல்லாமல் ,சாதாரண தொழிலாளி வேலைக்கு செல்லும் ஒரு பொறுப்பில்லா ஊதாரி. மகளோ ,ஒரு காதலில் மூழ்கி,ஓடி போகும் அளவு வரை சென்று ,சரியான நேரத்தில் ,தந்தையால் மீட்க படுகிறாள். இறுதியில் ,ஓரளவு குடும்பத்தில் அமைதி திரும்பி(புயலுக்கு பின்) ,அவர் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேரியும், அலுவலகம் அவரை மீண்டும் உயர் பணிக்கு கூப்பிட,ஆனந்த அதிர்ச்சியில் ,உயிர் துறக்கிறார். சாதாரண மேடை நாடக கதையல்லவா?

    இனி நம் கடவுள் தன் திருவிளையாடலால் இதை ஒரு cult படமாக்கி,பிரம்மாண்ட வெற்றி பெற வைத்த விந்தையை பார்க்கலாம்.
    முதலில் சொன்னால் ,இந்த மாதிரி பாத்திரங்களால்தான், NT , தனது தனித்தன்மையை நிரூபித்து, உலக நடிகர்களிலே முதல்வர் என்று புகழும் அளவு,உயர்ந்து இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் போற்ற படுகிறார்.(கமலும் இந்த பாத்திரத்தை மிக சிலாகிப்பார்).மற்ற நடிகர்கள்,தனது இயல்புடனே சிறிது மாற்றம் செய்து ,ஏற்ற பாத்திரத்தை தன் இயல்புக்கு மாற்றுவர். ஆனால் உலகத்திலேயே , கூடு விட்டு கூடு மாறி ஏற்று கொண்ட பாத்திரத்தில் தன்னை நுழைப்பவர் ,நம் NT ஒருவரே. அதனால் ,அவர் எடுக்கும் ரோல் மாடல்,Proto -type , அந்த genre type இல் ,ஒரு அதீத குண,மன நலன்களுடன், பல்வேறு மிகை இயல்பு கொண்ட பாத்திரங்களின் அசல் கலவையாக, அந்தந்த இனத்தையோ,மதத்தையோ,தொழிலையோ,குடும்ப பிரச்சினைகளையோ,மன-உடல் பிரச்சினைகளையோ பாத்திர வார்ப்பில் பிரதிபலிக்கும் போது அதீத கலவைகளின் வார்ப்பாக(சங்கராசார்யார்,டிவிஎஸ் ) இருக்கும். அதை stylised ஆக அவர் நடிக்கும் போது connoisseurs என்று சொல்ல படுபவர்கள் பரவசப்படுவார்கள் அல்லது சக நடிகர்கள் பாடம் கற்று கொள்வார்கள்.(Actors ' actor ) . இது ஒரே மனிதர் பல்வேறு கதாபாத்திரங்களை நடிக்கும் போது, வேறு பாடு காட்டவும், சிவாஜி என்ற கலைஞன், சிவாஜி என்ற கலைஞனை ஒவ்வொரு முறையும் தாண்டி,வேறு படுத்த மிக மிக அவசியம்.

    இதில் வரும் prestige பத்மநாபன் பாத்திரம் ஒரு wonder . தான் நடித்ததை திரும்ப நடிக்காத ஒரே மேதை NT மட்டுமே.(ஒரே மாதிரி ரோல் ஆக இருந்த போதும்)

    நீங்கள் ஒரு பிராமணரை (வெவ்வேறு வயது கொண்ட)அறுபதுகளில் observe செய்திருக்கீர்களா? செய்யா விட்டாலும் என்னோடு இப்போது பயணியுங்கள். முரண்பாடுகளின் மொத்த மூட்டைதான் அவர்கள். உலகத்திற்காக கிராப், லௌகீகம் காக்க குடுமி, அலுவலம் போக மேல் கோட் ,கீழே லௌகீகம் காக்க பஞ்ச-கச்சம், மேலாதிக்க மனம், ஆனால் பொருளாதாரத்தில் அன்றாடம் காய்ச்சிகள்,வேடிக்கையான சுத்தம், உடலை துடைத்து கொள்ளாமல் ஈரம் உடுத்தி மடி காப்பார்கள்.எல்லோரையும் ஒதுக்கி வைப்பார்கள் ஆசாரத்திற்கு. ஆனால் மிக சிறந்த தனி-மனித நேயம் மிக்கவர்கள்.வித்யாசமான பேச்சு வழக்கு.பேசும் பாணி. எல்லாம் அறிந்தது போல், எல்லாவற்றையும் பேசுவார்கள். வீட்டில் பேசுவது கூட அறிவுரை பாணியிலேயே இருக்கும்.சம்பந்தமில்லாத விருந்தாளியிடமும் அறிவுரை பாணிதான்.பேச்சில் ஒரு assertion , body -language ஒரு கண்டிப்பான ஒரு hand movements , side -on body swings ,வயதுக்கு மீறின ஒரு முதுமை,இயல்பான கோழைத்தனம், பிரச்சினைகளில் புலம்பும் மனம்,மற்றையோரை எல்லார் எதிரிலும்(பிரைவேட் ஆனா விஷயங்களிலும்)கண்டித்து தான் விரும்பியதை சொல்லும் அதீத ஸ்வாதீதம்,ஒரு confined -disciplin இதுதான் நான் பார்த்த பிராமணர்கள்.(தஞ்சாவூர்,திருநெல்வேலி,சென்னை ஆகிய இடங்களில்)

    மற்ற எல்லாப்படங்களிலும் நடிகர்திலகம் நடித்த காட்சிகளில் ஹை லைட் என்று சொல்லும் காட்சிகள் இருக்கும். வியட் நாம் வீட்டில் அத்தனை காட்சிகளும் highlight . மேக்-அப் மிக சிறப்பாக இருக்கும். புருவம்,காது மயிர் உட்பட அத்தனை தத்ரூபம்.வியட்நாம் வீடு சுந்தரம் என்ற பிராமண குலத்தை சேர்ந்த ஏழை இளைஜெர் மிக சிறப்பாக வசனத்தை (அன்றாடம் பிராமணர்கள் வீட்டில் உபயோகிக்கும் பேச்சுக்களையே ) கொடுத்திருப்பார்.

    சிவாஜியின் பிராமண பேச்சு அவ்வளவு அழகாக இருக்கும். அந்த modulations சாத்திரி என்று மனைவியை அழைக்கும் தொனியில் இருந்து எல்லாமே அருமை.(கண்ணதாசன் பாலக்காட்டு பாடலில் கோட்டை விட்டிருப்பார். இது பாலக்காடு பிராமணர் பேச்சு வழக்கு அல்ல.மனைவியும் புதியவள் அல்ல)ஆனால் பாடலின் அழகு கருதி (Puppet பாணி அற்புத நடன அசைவுகள்) மன்னித்து விடலாம்.

    இந்த படத்தில், பின்னால் வரும் காட்சிகளை விட ஆரம்ப காட்சிகள் மிக நன்றாக இருக்கும். நகைச்சுவை மிக இயல்பாக கதையுடன் ,பேச்சு வழக்கை ஒட்டி இருக்கும். ஆரம்ப கிரக பிரவேச காட்சி,ஆபீஸ் புறப்பட தயார் ஆகும் காட்சி, வீட்டுக்கு வந்த பெண்ணின் நண்பிகளை கலாய்க்கும் காட்சி, ஆபிசில் அக்கௌன்டன்ட் நந்த கோபாலை கண்டிக்கும் காட்சி ,வீட்டின் அன்றாட காட்சிகள்,முள் குத்தி கொண்டு வீடு வரும் காட்சி,சின்ன மகன் முரளியின் மேல் கம்ப்ளைன்ட் வந்ததும் படிப்பை நிறுத்தி விட்டு தொழிலாளியை வேலைக்கு அனுப்பும் காட்சி,Retire ஆகும் காட்சி(லாஜிக் உதைத்தாலும்),மனைவியுடன் குடும்ப நிலை விவாதிக்கும் காட்சி, கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டில் மதிப்பிழக்கும் காட்சிகள், மகன்களை இயலாமை வாட்ட கண்டிக்கும் காட்சிகள், retire ஆனா பிறகு ஆபிஸ் வரும் காட்சி,அறுவை சிகிச்சைக்கும் புறப்படும் காட்சி எல்லாம் பார்த்து அனுபவிக்க வேண்டிய அற்புதம். பார்வைக்கு பார்வை,நடைக்கு நடை பார்த்திராத ஒரு சிவாஜி.(உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் திலகமே)

    ஒரு பிராமண குலத்து உயர் குடும்ப(கஷ்டப்பட்டு முன்னேறிய) பாத்திரத்தை அவ்வளவு perfection உடன் மற்ற பிராமண நடிகர்கள் கூட செய்ததில்லை. இதில் அவர் easy chair ,ஊஞ்சல் ஆகியவற்றை மிக கவனமாய் உபயோகித்து மூட், pasture , கொண்டு வருவார்.

    இந்த படத்தில் inflexible preachy disciplinarian & ethical careerist ஆக வரும் பத்மநாபன் சாருக்கு பால்ய அரட்டை நண்பரகள் யாரும் இல்லாதது by design or default எப்படி இருந்த போதிலும் அருமையான விஷயம். அவருக்கு எல்லோரும் எதிர் நிலைதான். இரண்டே பேர் அவரிடம் நேர்மையாய் உள்ளவர்கள் அத்தை(நடு நிலை) அவரது சம்பந்தி justice ரங்கநாதன்(முழுக்க உடன்பாடு ஆனால் தள்ளி நின்று) . Open rebellions அவர் அக்கௌன்டன்ட் நந்த கோபால் ,அவரது மகன் முரளி,மருமகள் மாலா. தொழில் முறை நண்பர்கன் டாக்டர் ,சாஸ்திரிகள். மற்றபடி அவருடன் உடன் படாதவர்கள் மனைவி சாவித்திரி,மகன் ஸ்ரீதர்,மகள் அகிலா,ஆபிஸ் மேல் அதிகாரிகள், கீழ பணிபுரிவோர், அந்த தெரு ஆட்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் எதிர் வினை புரிவார்கள்.வேலையாள் முருகன் உட்பட.

    இதில் முரளிக்கு காந்தியின் மகன் நிலைதான். சாவித்திரி மகன்களுக்கு சிறிது இடம் கொடுக்கிறாளா அல்லது மௌன எதிர் வினையா?மாலா தந்தை,மாமா இவர்களை சேர்த்து எதிரியாக பாவிக்கிறாள் என்பது பூடகம்.மகள் அகிலாவோ அளவு மீறிய கட்டுப்பாட்டுக்கு எதிர் வினை புரிகிறாள்.(வலுவாகவே) நந்தகோபால் நல்ல திறமை சாலி.(அல்லது பத்மநாபன் சிபாரிசு செய்வாரா).ஆனால் பத்மநாபனின் british cum brahmin work culture உடன் உடன் பட மறுத்ததால் ,கீழ் நிலை ஊழியர்கள் எதிரில் அவமதிக்க படுகிறான்.அவன் எதிர் வினை மிக சரியானது. மேலதிகாரிகளுக்கும் காலத்தோடு மாறாத அவரை extend பண்ணாமல் retire பண்ணுவது ஒரு எதிர்வினை.

    காலத்தோட ஓட்ட ஒழுகாத பத்மநாபன் செயல். மேல் நிலை அடைந்தும் தன் பிடிவாத socio -cultural குணங்களை மட்டுமல்ல ,ஒரு விவசாய குடும்ப மனநிலையில் கூட்டு குடும்பம் பேணி, தனது inefficient finance planning (ஏதாவது எனக்கு தெரியாமல் சேத்து கீத்து வச்சுரிக்கியா-மனைவியிடம்) விளைத்த பிரச்சினையை ,ஒழுங்காக வாழக்கை நடத்தி வரும் மூத்த மகன் மேல் சுமத்தும் சராசரியாகவே உள்ளார்.சவடால் நிறைந்த prestige ,கவைக்குதவாமல் போனதில் ஆச்சர்யம் என்ன?

    Retirement scene குறையாக சொல்வோரிடத்தில், பத்மநாபனின் வேலையிலோ,நேர்மையிலோ,விசுவாசத்திலோ குறை காண இயலாத அவர் மேலதிகாரம்,அவரை காலத்துக்கு ஒவ்வாதவர் என்ற காரணத்தால் ,சிறிய சலுகையும் காட்டாமல் அனுப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் பார்த்தால் அந்த காட்சியில் புது சுவை தெரியும்.அதனால் இந்த படம் protogonist கோணத்திலேயே பயணித்தாலும் பூடகமாய் புரிந்து கொள்ள நிறைய உண்டு.. ஒரு நேர்மையான திரை கதையமைப்பே அதுதானே?அதுவும் real life characters வைத்து பின்ன பட்ட இந்த படத்தில்?மற்றோருக்கு spacing கொடுக்காமல் உறவிலோ , அதிகாரத்திலோ ,imposing ஆக உள்ளோர் ,இந்த அடியை ,தான் பலவீன படும் பொது ,பிறரை சார்ந்து உள்ள போது பட்டுத்தானே ஆக வேண்டும்?

    சிவாஜியின் நடிப்பு மூன்று வெவ்வேறு நிலைகளில் ஒரு தனித்து வேறுபட்ட கலாசார,சமூக ,பேச்சு வழக்கை கொண்டு இயங்கும். முற்பகுதி ( ஒய்வு பெரும் வரை) அவர் உச்சத்தில் இருந்து மற்றோருடன் ஆதிக்கம் செலுத்துவார். ஒரு டாமினன்ட்,assertive ,எள்ளலுடன் எல்லாவற்றையும் அணுகுவார். என்னை பொறுத்த வரை இந்த பகுதிதான் மிக மிக சிறந்தது. இந்த பகுதியில் அவர் பின்னால் பலவீனப்படப்போகும் போது இருக்க போகும் மனநிலையை உணர்த்துவது கண்ணாடி பீஸ் காலை கிழித்து அவர் பண்ணும் அதகளம். இரண்டாவது பகுதியில், எதிர்பாராத retirement அதிர்ச்சியில்,எப்படியாவது குடும்பத்தினர் உதவியுடன் சமாளிக்கலாம் அல்லது தன காலில் நிற்கலாம் என்று நம்பும் போது ,கண்ணெதிரேயே அவருடைய நிலை படி படியாக தாழும் நிலை. நிலைமையுடன் சமரசம் செய்ய முயன்று ,தோற்று ,புலம்பி ,சோர்வார். மூன்றாவது பகுதியில் சிறிது பொங்கி, நிலைமை படி படியாக சீரமையும் பகுதியில் ,வெளிப் படும் இயலாமை கோபம்,சாபம் கொடுக்கும் பாணி அறிவுரைகள் என்று போகும்.

    வியட்நாம் வீடு சுந்தரத்தின் வசனங்கள் சிவாஜிக்கு அப்படி ஒரு தீனி போடும்.non -repetitive situation based punchlines பிரமாதமாக இருக்கும்.(சற்றே பாலச்சந்தர் பாணி!!??) பேய்க்கு வாழ்க்கை பட்டால் என்று சொல்லும் போது இவ்வளவு நாள் ஜாடை மாடையாய் புள்ளெல திட்ற மாதிரி வைவாள். இப்போ நேரிடையாய், you must stand on your own legs ,every action there is a reaction , position -possession , prestige -justice , இவ கெடுத்தா எல்லாத்தையும் என்ற லைன்கள் popular மட்டுமல்ல. அன்றாடம் நான் கேட்டவை . நான் பார்த்த இரண்டு பள்ளி கூட வாத்தியார்கள் , என் தாத்தா மற்றும் அவர் நண்பர்கள்,எனக்கு தெரிந்த ஒரு பிரபலம் எல்லோரும் பத்மநாப ஐயர் சாயல் கொண்டு இருந்ததால், NT நடிப்பின் வாழ்க்கைக்கு உள்ள reach என்னை அதிசயிக்க செய்யும்.( வாசன் அவர்கள் இந்த நாடகத்தை,படத்தை பார்த்து அதிசயித்து அழுதாராம்.சிவாஜியை மீறிய உலக நடிகரே இல்லை என்று சொன்னார் )

    அவர் சம்பந்தி பிணங்கிய மகன்,மருமகளை வீட்டுக்கு அழைத்து வரும் காட்சியில் ஒடுங்கி படுத்திருப்பார். அந்த படுத்த நிலையில் எழுந்திருக்க முயன்று, சம்பந்தியை உபசரிக்க முயல்வார். இதற்கு ஈடான ஒரு நடிப்பை நான் எந்த உலக படத்திலும் கண்டதில்லை.

    உன்கண்ணில் நீர் வழிந்தால் காட்சி சிவாஜி-பத்மினி ,எப்படி இணைந்து எல்லா வயதிலும் இந்த chemistry தர முடிந்தது என்பது ஆச்சர்யம்.(உடனிருந்து காலமெல்லாம் மணம் பரப்பிய இதயமல்லவா).முதல் stanza முழுவதும் பழைய இனிய பரவச நாட்களை நினைவு படுத்தும் போது easy சேரில் மடிந்து மடியில் மனைவியை கிடத்தி வருடுவார். இரண்டாவது stanza எல்லோராலும் கை விட பட்டு மனைவியால் அரவணைக்க படும் ஆதங்கம் ஊஞ்சலில் மார்பில் சாய்வார். கடைசி stanza விரக்தியில்,பிள்ளை போல் மடியில் படுத்து தேம்புவார். சிவாஜியின் நடிப்பும்,பத்மினி reaction எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காது. கொழந்தேள்லாம் ஒம மேல ஆசையாதாண்டி இருக்கா. ஒனக்கொண்ணுன்னா துடிச்சி போறா. என்னைத்தாண்டி வெறுக்கிரா என்ற புலம்பல் ஒவ்வொரு ஆணின் மிடில்-ஏஜ் ,ஓல்ட்-ஏஜ் crisis வெளியீடு.அது நடிகர்திலகம் சொல்லும் விதம் மனதை கிண்டி காயப்படுத்தும். கடைசியில் என்ன பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிருப்பேன்,இவ கெடுத்தா எல்லாத்தையும் என்று மனைவியிடம் இயலாமை சீறல் ,நான் பல குடும்பங்களில் பார்த்த கேட்ட அனுபவம்.அவ்வளவு இயல்பாக தைக்கும்.

    இந்த படத்துக்கு துன்பியல் முடிவு தேவையில்லாத ஒட்டாத ஒன்று. surprise twist என்று பார்த்தாலும் ,அந்த காலகட்டத்தில்,அவரை சாகடிக்காமல் விட்டால் தான் ரசிகர்களுக்கு surprise .

    இந்த படத்துக்கு NT க்கு ஒத்திகை தேவையே இருந்திருக்காது. (பல முறை மேடையில் இதே ரோல்) .ஆனால் பத்மினி பிரமாதமாக காம்ப்ளிமென்ட் பண்ணி ,நடிப்புக்கு சரியான ஜோடி என்பதை உணர்த்தி விடுவார். (ஆனால் முரளி favourite ஜி.சகுந்தலாவின் மேடை நடிப்பு இதை விட பிரமாதம் என்போர் உண்டு). முக்கியமாய் தன அம்மாவிடம் ,தன மகன்களை குறை சொல்லிய பிரின்சிபாலை பொரிந்து கட்டும் இடம்.ஒரு தாயின் மனநிலையை அழகாக பிரதிபலிப்பார். எல்லோரும் நன்கு பண்ணியிருப்பார்கள்.(தங்கவேலு,நாகேஷ் உறுத்தல்.ஆனால் வியாபார தேவை போலும்).

    மாதவன் ஒரு நல்ல creative இயக்குனர் என்று சொல்ல முடியா விட்டாலும், ஒரு நல்ல executive இயக்குனர். எல்லா genre படத்தையும் நன்கு பண்ணியுள்ளார்.(குறிப்பிட வியட்நாம் வீடு,ஞான ஒளி,பட்டிக்காடா பட்டணமா,தங்க பதக்கம்,பாட்டும் பரதமும், ராஜபார்ட் ரங்கதுரை).ஸ்ரீதர் உதவியாளராய் இருந்தவர். தேவராஜ்-மோகன் போன்ற நல்ல உதவியாளர்களை கொண்டவர்.

    கே.வீ.மகாதேவன் இந்த படத்திற்கு பலம். எந்த படம் என்றாலும் நன்றாக பண்ண கூடியவர்.

    இந்த மாதிரி பாவனைகள் அற்ற,நேரடியான, நேர்மையான கதை சொல்லும் படங்களை பார்ப்பதில் உள்ள சுவையே தனி. ஆனால் அதற்கு regress ஆகும் கலை மனம் வேண்டும் .பழைய ஓவியங்கள்,இலக்கியங்கள், கதைகள்,சரித்திரம் எல்லாம் ரசிக்க இந்த வகை தயாரிப்பு ரசிகனுக்கோ,வாசகனுக்கோ மிக அவசியம்.நாம் நம் இளைய தலைமுறையை சரியான aesthetic sense இல் வளர்ப்பதே இல்லை.

    வியட்நாம் வீடு- நடிப்பில் ஒரு வடக்கு நோக்கி.வழிகாட்டி.(கமல் பாணியில் மலையாளத்தில்) .எந்த கமர்சியல் compromise இன்றி மாபெரும் வெற்றி பெற்ற NT படங்களில் ஒன்று.(அவர் ஸ்டார் ஆக இருந்தும் நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறார்.)
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Likes Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •