-
24th August 2016, 08:15 AM
#11
Junior Member
Newbie Hubber
தேவர் மகன்- 1992 -தொடர்ச்சி
இசக்கிக்கு நடந்ததற்குப் பழி வாங்கும் விதமாக எதிரிகளின் குடிசைகளுக்கு தீ இடப்படுகிறது. தீயின் கனல் கதையில் தகித்துக்கொண்டிருக்கையில் மழை வருகிறது. மருத்துவமனையில் இசக்கியை காணப்போகும்போதே மழை தான். கண்மாய் வெடிவைத்துத் தகர்க்கப்படும் வரை மழை ஓயாமல் பெய்கிறது. மழையின் ஈரம் காயாத ஒரு இடத்தில் தான் கோவில் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் அதிகாரி வரும் காட்சி.
ஊர் பிரச்சனைகளை பேச மகனை ஊக்குவிக்கிறார், அதிகாரிகளின் பொறுப்பின்மையை நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டுகிறார் (பஞ்சாயத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டிய நிலை வரவில்லை அல்லவா), வீட்டுக்கு வர அழைப்பு விடுக்கிறார் ("காப்பிகீப்பி "). நல்லது செய்து முடித்த தலைவன். அதற்கு அடுத்து அவர் தோன்றும் காட்சியிலும் ஒரு தலைவன். தன் மக்களுக்கு நடந்த கொடுமையைக் கண்டு அதிர்ச்சியும், சோகமும் கவிய பார்க்கிறார். சொற்கள் இல்லை.
கொடுஞ்செயல் செய்தவனைப் பிடித்துக் கொடுத்த மகன் தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கினான். (அதற்குக் காரணம் பொறுப்பின் சுவடுகளே இல்லாத மூத்த மகன்). சுற்றி, அவதியிலிருந்து சற்று ஆசுவாசம் பெரும் ஊர்மக்கள். மகனருகே சென்று அவனை தொடும்போது முகத்தில் ஒரு பெருமிதம். இவ்வளவு மோசமான சம்பவம் நடந்த ஒரு நாளில், பெருமிதம் போன்ற நல்லுணர்ச்சிகளுக்கு இடம் உண்டா ? முரண் தான். ஆனால் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?
மகன் சாப்பிடவில்லை.
பசிக்கலையா ?
பிடிக்கலை
ஒரு கண நேரம் அந்த பெருமிதம் மறைந்து அவ்ர் முகத்தில் ஒரு தொய்வு ஏற்படும். 'அவசரப்பட்டு பெருமிதம் கொண்டுவிட்டோமா ? மகன் இந்தக் (காட்டுமிராண்டிப்பய) வாழ்க்கைச்சுழலை இன்னும் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை போலிருக்கிற்றதே' என்று.
ஒரு தாய் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் காட்டி, ஒரு குழந்தையைப் பறிகொடுத்த அவள், தன் இரண்டாவது குழந்தைக்காக சாப்பிடுவதை சொல்வார். "மத்தவங்களுக்கு உதவி செய்யணும்னா முதல்ல நாம் திராணியோட இருக்கணும்" (திராணியோடு என்பதை சொல்லும் போது மீசை முறுக்கு சரி செய்து கொள்ளப்படும்!). அவர் சொல்வதுக்கும் மேலே புரிந்துகொண்டதுபோல சக்தி கணக்குப்பிள்ளையைக் கூப்பிடுவான்.
ஒரு குழந்தை இழந்துவிட்ட, இரண்டாம் குழந்தைக்கு வாழ்வையும் , எல்லாவற்றைய்யும் தருவதற்காகவே போராடும் அவளைக் கண்டதும், ஒருவேளை சக்திக்கு தன் தந்தையின் நிலையும் கிட்டத்தட்ட அப்படித்தானே என்று தோன்றியிருக்காலாம். இது தான் தோன்றியது என்றெல்லாம் சொல்ல முடியாது. நல்ல திரைக்கதைகளில் இந்த அனுமானங்களுக்கு இடம் உண்டு. தேவரின் பேச்சுக்குப் பதிலாக சக்தி உதிர்க்கும் அர்த்தம் பொதிந்த சிரிப்பைக் கண்டால் எனக்குத் தோன்றியது இதுதான்.
பயணச்சீட்டை தள்ளிப்போட வேண்டும் என்று சக்தி பூசினாற்போல சொல்ல, இப்போது விட்டுவிட்டால் கிடைப்பது கஷ்டம் என்று கணக்குப்பிள்ளை சொல்வார். "கூடி வரும் நேரத்தில் கெடுக்காதே" என்பது போல தேவர் சமிக்ஞை செய்வதில் ஒரு வித்தியாசமான முக்கோணம் முடிவடைக்கிறது. சக்தி-கணக்கு-பெரியவர் மூன்று பேருக்கும் உள்ள தனித்தனி நெருக்கங்களை காண்பிக்கப்படுகின்றன.
முதல் விசாரணையில் "எதற்கு அழைக்கப்பட்டோம்" என்று ஐயாவுக்குத் தெரியாமல் கணக்குப்பிள்ளையைக் கேட்பான். அடுத்து ஒரு காட்சியில், கணக்குப்பிள்ளையிடம் இருந்து தன் மென்மையான இயல்பை மறைப்பார் பெரியவர். இம்முறை தன் பாசத்தின் தீவிரத்தை கணக்குப்பிள்ளையிடம் மட்டும் காண்பிப்பார்.
இணைகோடாக: விடொ கொர்லியோனுக்கு வலது கையாக (consigliori) இருப்பது டாம் ஹேகன். அநேக சமயங்களில் தன் மகன்களைவிட இந்த வளர்ப்பு மகன் டாம்'ஐ டான் விடோ நம்புவார்.
சக்தி, தந்தையின் செய்கையைப் பார்த்துவிட்டு வெளிப்படையாக, அந்த பயணச்சீட்டை 'கேன்சல்' செய்யச் செல்வான். "சொல்றாஹள்ள...கேன்சல் கேன்சல்" என்று தாழ்திறந்து பாசம் வெடிட்த்தோடும். புல்லாங்குழல் கரு-இசையை அழகாக ஒலிக்க, சக்தியின் கையைப் பற்றி தன் நெஞ்சருகே வைத்துக் கொள்வார். பெருமிதம் மட்டுமே தெரிந்த முக்கத்தில் முத்ன்முதலாக ஒரு நிறைவு தெரியும். சாந்தமான பெருமூச்சே தேவையானவற்றைப் பேசிவிடும்.
நெருப்புக்கு பதில் நீரால் அடித்தாகிவிட்டது. எதிராளிகளின் அடுத்த இடைஞ்சல் நிலத்தின் வழியாக. வேலியிட்டுப் பிரிக்கப்படுகிறது நிலம். மக்கள் முறையிடுகிறார்கள். கேட்கச்செல்லும் பெரிய தேவர் துணையுடன் அங்கு செல்ல வேண்டும் என்று நினைக்கும் கணக்குப்பிள்ளை கூட அதை தயங்கி தான் சொல்கிறார். சக்தியை மட்டும் அழைத்துக்கொண்டு அங்கு செல்கிறார் - அவருக்கு தேவையான போதுமான துணை.
நிலத்துக்கு சொந்தக்காரர்கள் நிலத்தை அடைத்து வேலிபோடுவதாக வக்கீல் சொல்லிக் கேட்டவுடன்.
"யார்ராவென்...நெலத்துக்கு சொந்தக்காரன்...இது எங்க நெலம்...நாங்க எலவசமா கொடுத்தது"
இதை சொல்லும்போதே சட்டத்தின் பலவீனமான பக்கத்தில் அவர் இருப்பது நமக்குத் தெரிகிறது. கௌரவம் மேல்நிலை வேண்டும் என்று அடம் பிடித்தாலும், சட்டம் கொடுக்கவிருப்பது ஒரு விதத்தில் கீழ்நிலை தான். இது அடுத்த காட்சியில் அவர் நிலையை புரிந்துகொள்வாதற்கு மிக அவசியமானது.
"இங்க செல்லையா ஒருத்தனுக்கு தான் சொந்தமா நெலம் இருக்கு....எலாய்....இந்த வேலிய நீ போடச்சொன்னியா ?"
"ம்ஹான்....கருக்கலோட கருக்கலா வந்து ஆவுகளே போட்றாஹய்யா" என்று சொல்லும் பெண்ணை அடக்குவார் செல்லையா.
"....கேனப்பய.....பாவம் அவன் என்ன செய்வான்... ஆட்டிவச்சபடி ஆடுறான்" என்று சக்தியிடம் சொல்வார். அதை உரக்கச் சொல்வதே அந்த வசனம் கேட்கும் எல்லோருக்கும் என்பதற்காக. அந்த பாவனை சக்தி முகத்தில் தெரியும்.
"ஏய் வக்கீய்ல்....இந்த வேலிய பிடுங்கி எறிய எம்புட்டு நேரமாகும்" என்று முரட்டுத்தனமாகக் கேட்பார். மரியாதை கெட்ட பதில் வரும். இதற்கு உடனடியாக வரும் எதிர்வினை ஒரு வட்டார வசவு. முழுவதுமாக சொல்லமாட்டார். தொண்டையிலிருந்து பாதி ஒலிக்கும். பொதுவில் கண்ணியம் காப்பது என்பது இயற்கையாக அவருக்கு வருகிறது. இது வேறொருவர் யோசித்திருந்தாலும் கூட கனக்கச்சிதமாக நிகழ்த்திக்காட்டுவது மிகக் கடினம். என் அபிப்ராயத்தில் இது திட்டமிடுதல் இல்லாமல் களத்தில் நிகழ்ந்ததாக தான் இருக்கவேண்டும். நேரொலியில்லாமல் இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. ஒரு பாத்திரத்தை முழுமையாக உள்வாங்குவதற்கு இதை விட சிறப்பான உதாரணங்கள் நான் பார்த்தவரை இல்லை.
பஞ்சாயத்தில் எதிரிகள் காலதாமதமாக வருவதை மகன் சுட்டிக்காட்ட, "அட போடா ...கவலைப்படவேண்டிய கடைசி அசௌகர்யம் இது..." என்பதுபோல கையை தட்டி விடுவார். அவர்கள் வந்ததும் தன் எதிர்பார்ப்பை மகனிடம் கண்கலால் தெரிவிக்க, சக்தி சின்னத்தேவரைக் கும்பிடுவான்.
"வைத்தியனுக்கு சீக்கு வந்தா இன்னொரு வைத்தியன் கிட்ட தான் பார்க்கணும்......இன்னிக்கு நீதி சொல்ற நெலமையில நான் இல்லையப்பு.....கேட்டுக்கிற இடத்துல இருக்கேன்"
என்ற ஒரு வரியில் பல தொனி-பாவனை மாற்றங்கள். தீர்ப்பு சொல்லும் நிலைமையான முதன்மை நிலையில் இல்லை என்பதைப் பற்றி ஒரு தயக்கம். தன்னை விட்டால் இவர்களில் யார் தீர்ப்பு என்று ஒன்றை சொல்லமுடியும் என்கிற இளக்காரம் எல்லாம் அந்த பாவனையிலும் அவர் தொனியில் இருக்கும் அசௌகரியத்திலும் தெரியும்.
ஊர்ப்பெரியவர் ஒருவர் மிகுந்த மரியாதையுடன் அவரை பேசச்சொல்ல எழுவார். கீழே அமர்ந்திருக்கும் எல்லோரும் எழ அவர்களை உட்காரச்சொல்லும்போது மிக உரிமையானவரை கடிந்துகொள்ளும் பாங்கும் பொறுமையின்மையும் தெரியும்.
ஒரு தேர்ந்த வழக்கறிஞன் வழக்கிற்கு வரும் முன் எவ்வாறு எதிர்தரப்பினரை தீர்ப்பு கூறுபவர்கள் கண்ணில் இறக்கிக் காட்டவே முயல்வர். அதை மிகக் கச்சிதமாக செய்வார். "எங்க பெரியதேவர் செத்து...கொள்ளிக்குடம் உடைக்கிறதுக்கு முன்னாடியே பாகப்பிரிவினை கேட்டவுக சின்னச்சாமி ஐயா....அப்புறம் என்னை வெட்டப் பார்த்தாக.. வெசம் வெச்சுக் கொல்லப்பார்த்தாக...ஹஹும் ஒண்ணும் நடக்கலை"
இதை சொல்லும்போது ஒரு இளைஞனின் வீம்பும், சண்டித்தனமும் தெரியும். அதை மறுத்துப் பேச முயலும் தம்பி மகனை "ஏலாய்....அப்பொல்லாம் நீ சின்னப்பய...உனக்கொண்ணும் தெரியாது வாயம்மூடிட்டு பேயாம இருக்கணும் தேரியும்ல" என்று அதட்டுவார் (முன்னே வரும் சக்தியை ஒரு கையால் தடுத்துவிட்டு).
தான் சொல்லவந்ததை சொல்லியாகிவிட்டதில் பிரச்சனைக்கு வருவார். "இப்பொ பிரச்சனை என்னன்னா...அந்த வேலிய புடுங்கி அங்குட்டு எரியணும்..அது பதிலா வேற எடம் வேண்ணாலும் நான் கொடுக்கறேம்பா..பணம் காசு வேண்ணாலும் கொடுக்கறேன் உம்..."
பிரச்சனையைத் தீர்க்கும் அணுகுமுறை மருந்துக்குக் கூட இல்லை. ஒரு கீழ்நோக்குப் பார்வை, எள்ளல் இவற்றின் மொத்த உருவமாக இருக்கிறார். மனிதர் அப்படிப்பட்டவர். அரசனின் கர்வம். இவனோடெல்லாம் பேசிக்கொண்டிருக்க வேண்டி இருக்கிறதே என்ற அலுப்பு, கோபம். இதைத் தான் 'மானம்' என்று கிடுக்கிப் பிடியாகப் பிடித்துக்கொண்டுவிட்ட மனோபாவம். இவை அவரை எங்கு இட்டுச் செல்கின்றன ?
நம்முயிர்க்கு மேலே மானம் மரியாதெ
மானமிழந்தாலே வாழத் தெரியாதே
பின் வருவதை முன் சொல்லும் விதமாக ஒரு பாடல் வரி. இதை ஏதோ வீரமரணம் போல சித்தரிக்கப்படுகிறது. இதில் 'மானம்' என்பது ஒவ்வொருவர் மதிப்பு சார்ந்தது. கடமை தவறியதால் தன் குலத்துக்கும், பதவிக்கும் இழுக்கு வந்துவிட்டதாக எண்ணி "கெடுக என் ஆயுள்" என்று சொல்லி வீழும் மன்னனன ஓரளவு புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் பெரிய தேவருக்கு நிகழ்வது அவர் மண்ணின் பொது மதிப்பீடு. ஒரு வகையில் காட்டுமிராண்டி மதிப்பீடு தான். பலம் படைத்தவன் பெரியவன். அடி கொடுத்துவிடுவது வெற்றி - வாங்கிக்கொள்வது தோல்வி என்று. இதன் நீட்சியே சொல்லடிக்கும் இருக்கும் அதே மதிப்பு. இதைத் தான் இந்தப் படம் சாடுகிறது. ஆனால் இந்த மரணத்துக்கு ஒரு கௌரவம் சேர்த்து.
தம்பி மகன் இவரை சரியான இடத்தில் மடக்க "ங்கொப்பனை விட நல்லாத்தேம்பு பேசற" என்று கோபத்துக்கும்-தோல்விக்கும் இடையிலும் லேசாக மிஞ்சியிருக்கும் ரசனையோடு சொல்வார். ஒரு இடத்தில் சக்தி துள்ளியெழ மிகுந்த சாந்தத்துடன் கட்டுப்படுத்துவார்: "பேயாம இரு...அப்புறம் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ?".
கூட்டத்திலிருந்து வித்தியாசமானவன் நீ என்று நினைத்துக்கொண்டாயே மகனே' என்பது அந்த அமைதியில் தெரியும்.
ஆனால் அடுத்ததாக தம்பி மகன் மரியாதை கெட்டத்தனமாக பேசிவிட்டதால் ஆடிப்போகிறார் பெரியதேவர். என் முன்னிலையில் அப்படி அவன் பேசலாயிற்று என்பது அதிர்ச்சி, கடுங்கோபம், பெருத்த அவமானம். இதுபோன்ற வீம்பான மதிப்பீடுகளை சாடும் விதமாக முன் பேசிய சக்தியும் அந்த கணத்தில் ஒரு 'காட்டுமிராண்டி'யைப் போல் வெடிக்கிறான். படிப்பும், 'பண்பட்ட' கலாசார பரிச்சயமும் அவன் மேல்தோல் கொஞ்சம் சுரண்டிவிட்டால் விலகிவிடுகின்றன. உள்ளிருக்கும் இயல்பு வெளிவருகிறது. பெரிய தேவர் எழுந்தவேகத்தில் நாற்காலியை விசிறியடிக்கிறார்.
பொறிபறக்க விழிகளிரண்டும்
புருவமாங்கே துடிக்க சினத்தின்
வெறி தலைக்க....
என்று பாஞ்சாலி சபதத்தில் சில வரிகள் வரும். அந்த உக்ரத்தை திரையில் காண வேண்டும் என்றால் இந்தக்கணம் தான் அதற்கு சரியான கணம்.
கோபத்தை கஷ்டப்பட்டுக் கட்டுக்குள் வைத்து கடைசி முறையாகக் எதிரியிடம் மறுமுறை கேட்க,
வரும் பதிலில் கூட்டமே பொங்கி எழும். "பஞ்சாயத்தாடா இது....பஞ்சாயத்தே கிடையாதுறா....இந்த கூட்டத்துல எனக்கு மரியாதையும் கிடையாது" என்றுவிட்டு வெளியேறுவார். அங்கிருந்து வீடுவரை நடந்து செல்லும்போது அவமானம், அங்கலாய்ப்பு,கோபம், பாசத்துடன் வரும் கோபம் என்று சகலத்தை ஓரிரு நிமிடங்களில் காட்டுவார். அவற்றை வார்த்தையில் அடக்க முயல்வதே வீண். ஒரு சூராவளி அடித்துச் சென்றார் போன்ற அனுபவம். tour-de-force.
"என்னப்பு பைத்தியக்காரனா இருக்கே...எனக்கெப்படி கோபம் வரும்...வெக்கம் மானம் ரோசம் இருந்தாத்தேன் கோபம் வரும்....அதல்லாந்தான் அந்த சின்னப்பய வாங்கிப்டானே" என்று சொல்லும் போது குரல் நடுங்கும், கண்ணீல் நீர் கோத்திருக்கும். அரை நொடியில் தலைவன் தன்னிலைக்கு வந்து மகனிடம், "பசங்களுக்கு புத்தி சொல்லி அனுப்பு", என்று விவேகமான தொனியில் சொல்லிவிட்டு "எலாய்" என்று கண்ணை விரித்துக் காட்டி ஒரு வழிகாட்டியின் தோரணையில் மிரட்டிவிட்டுப் போவார்.
வலியை முதல்முதலில் வெளிப்படுத்தும் போது ஒரு வித மூச்சுத்திணரல் போலவே ஒலிக்கும். மாரடைப்புக்கு முதல் அறிகுறியே இதுபோன்ற ஒரு கைவலி தான். பேத்திகள் சூழ, "அம்ம பாட்டு" கேட்டபடி தன் வலி மிகுந்த கடைசி கணங்களை கழிப்பார்.
ரத்தம் கக்கி வசனம் பேசி, கத்திக்குத்துடன் பாட்டு பாடி, மரணப்படுக்கையில் நாயக நாயகியரை சேர்த்து வைத்து, அல்லது இக்கட்டான சத்தியங்கள் வாங்கி, கதாநாயகன் திருக்கரங்களால் தலை திருகப்பட்டு என்று பல வகைகளை தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து மரணம் என்பது மரத்துப்போய்விட்ட நிலையில், இன்றளவும் நம் ஞாபகத்தில் இருக்கும் தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட உருக்கமான மரணங்களில் ஒன்று பெரிய தேவரின் மரணம். அதன் வெறுமையை நாமும் உணர்கிறோம்.
இன்று அதைப் பார்க்கையில் திரைக்கு அப்பாலும் அந்த வெறுமை இன்னும் பெரிதாகத் தெரிகிறது.
ஈக்வானிமஸ் சொன்னதை வழிமொழிகிறேன். சிவாஜியின் முற்றிலும் மாறுபட்ட நடிப்பு இது என்று சொல்வது முழு உண்மை அல்ல. இது சிவாஜியின் ப்ரத்யேக அடையாளங்கள் உள்ள வெளிப்பாடு தான். ஆழ்ந்த, பிரமிப்பூட்டும் கவனிப்பு, முயற்சியின் சுவடுகளே தெரியாத அனாயாசமான நடிப்பு, இதையெல்லாம் நிகழ்த்த முடிந்த அதிசயமான திறமை.
இதை மிகச்சரியாக வெளிக்கொணரக் கடைத்த களம் இந்தப் படம். இது பரவலாக கவனிக்கப்பட்டதில் மகிழ்ச்சி என்றாலும், இன்னும் ஆழமாக கவனிக்கப்படவேண்டியது.
அதை இயன்றவரை சொல்ல முயன்றிருக்கிறேன். முன்னொருமுறை சொன்னதுபோல நடிப்பு போன்ற நிகழ்த்தப்படும் கலைகளைப் பற்றி எழுதுவது வெறும் குறியீடாகத் தான் இருக்க முடியும். அதற்கு மேல் அதை கண்டு அதில் திளைப்பதற்கு ஊக்கியாக இருக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே எழுதுபவனுக்கு.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
24th August 2016 08:15 AM
# ADS
Circuit advertisement
Bookmarks