-
6th March 2017, 06:10 PM
#11
Junior Member
Devoted Hubber
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 166– சுதாங்கன்.

`தெய்வ மகன்’ படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சம்பவத்தை அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர் நினைவுக் கூர்ந்தார். `நடிகர் திலகம் `தெய்வ மகன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம். மூன்று வேடங்கள் என்பதால் ஒப்பனையை மாற்றி மாற்றி போட்டுக்கொண்டு ராப்பகலாக நடித்தார். அப்போது சென்னை ரோட்டரி கிளப்பைச் சேர்ந்த சில பெரிய மனிதர்கள் சிவாஜியை காண வந்தார்கள். ஏழைப்புற்று நோயாளிகளுக்கு உதவுவதற்கு நன்கொடை திரட்டும் முயற்சியில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த முடிவு செய்திருந்தனர். அதில் ஓர் அங்கமாக 'வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சிவாஜி கணேசன் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டனர்.
'கட்டபொம்மன்' நாடகம் நடந்து பல வருடங்கள் ஆயிற்று. படமாக வந்தும் சில வருடங்கள் ஆயிற்று. இப்போது திடீரென்று அதில் நடிக்க வேண்டுமென்றால்……! ஆனால், சிவாஜி அந்த சவாலை ஏற்றுக்கொண்டார். `தெய்வ மகன்’ படப்பிடிப்பு நடக்கும்போதே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எல்லாம் கட்டபொம்மன் வசனத்தை மறுபடியும் படித்து ஒத்திகை பார்த்துக்கொண்டார். கலை நிகழ்ச்சி நடக்கும் நாளும் வந்தது. சங்கிலியால் பிணைக்கப்பட்ட சிவாஜியை ஆறு வீரர்கள் இழுத்து வந்தார்கள். பானர்மேனுடனான வாக்குவாதம் ஆரம்பமானது. இடியும் மின்னலுமாக வசனமழை பொழிந்தார். வீரம், அந்த சபையில் மீண்டும் உயிர்த்தது. சிவாஜியின் ஒவ்வொரு பாகமும் துடித்தெழுந்து ஆர்ப்பரித்தது. சிம்மத்தின் கர்ஜனை முடிந்த சில விநாடிகள் அரங்கத்தில் அமைதி நிலவியது. அதன்பிறகு சுயநினைவு வந்த மக்கள் கரகோஷம் செய்தனர்.
இந்த அற்புதம் நடந்தபோது நானும் அங்கிருந்தேன். ஒப்பனை அறைக்கு வந்த சிவாஜி வாயே திறக்கவில்லை. அவசர அவசரமாக உடை அலங்காரத்தை கலைத்தவர் வெண் கதருக்குள் புகுந்தார். பெரிய மனிதர்கள் ஒப்பனை அறைக்கு வந்து பாராட்டினார்கள். மேடைக்கு வரும்படி அழைத்தனர். சிவாஜி யாரிடமும் எதுவும் பேசாமல், வெறுமனே இரு கைகூப்பி வணங்கிவிட்டு, துண்டால் வாயைப் பொத்தியபடி விடுவிடுவென்று என்னை அழைத்துக்கொண்டு காரில் ஏறி அமர்ந்தார். எனக்கு அவர் நடந்து கொண்ட விதம் லேசான உறுத்தலை ஏற்படுத்தியது. `பாராட்ட வந்தவர்களிடம் இரண்டு வார்த்தை பேசியிருந்தால் என்ன?’ என்று கேட்டேன். அதுவரை தும்பைப்பூ போன்ற வெள்ளைக் கதர் துண்டால் வாயைப் போர்த்தி கொண்டு இருந்தவர் துண்டை வாயிலிருந்து எடுத்து எனக்குப் பிரித்துக் காட்டினார். உதடு வழியே ரத்த வழிந்து கொண்டிருந்தது. நான் அதிர்ந்து போனேன். அவர் நிதானமாகச் சொன்னார்– `யாராவது என்னை இந்த நிலையில் பார்த்தால் காசநோய்க்காரன் என்று சொல்லி ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு போயிருப்பார்கள். அதனால்தான் அவசர அவசரமாக புறப்பட்டு விட்டேன். 'கட்டபொம்மன்' நாடகத்தை முழு நாடகமாக நடிக்கும்போது மக்கள் உணர்ச்சிப்படிகளில் படிப்படியாக ஏறி உச்சத்துக்கு வருவார்கள். பானர்மேனோடு நடக்கும் உச்சபட்ச காட்சியை நல்ல முறையில் உள்வாங்கும் நிலைக்குத் தயாராகியிருப்பார்கள். ஆனால், இன்று நடந்தது கிளைமாக்ஸ் காட்சி மட்டும்தான். எந்தவித உந்துதலும் அஸ்திவாரமும் இல்லாத நிலை. அந்த ஒரு காட்சியில் முழு நாடகத்தையும் அவர்கள்முன் கொண்டு வந்த நிறுத்த வேண்டும், உணர வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் என் லிமிட்டை தாண்டிவிட்டேன். இதற்கு முன் சில சமயங்களிலும் இப்படி ஆகியிருக்கிறது. அதனால்தான் நடித்து முடித்ததும் யாரும் பார்க்கும் முன் அறைக்கு ஓடிவந்துவிட்டேன்.’ எவ்வளவு சிரத்தை பாருங்கள். நன்கொடைக்காக நடத்தப்பட்டும் கலை இரவு நிகழ்ச்சிதானே என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. எந்த மேடையாக இருந்தாலும் நடிப்பு என்றால் நூறு சதவீத ஈடுபாட்டுடன் நடிப்பார். அதனால்தானே அவரை நடிகர் திலகம் என்று அழைக்கிறோம்' என்றார் திருலோகசந்தர்.
(தொடரும்).
-
6th March 2017 06:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks