Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் நடிகர் சங்கமாக ஆகவேண்டும்!” கொந்தளிப்பில் சிவாஜி ரசிகர்கள்

    எஸ்.கிருபாகரன்



    வருக்கு நிகராக நடிக்கக் கூடிய ஒரு நடிகர் அகில உலகிலும் இல்லை. ஒருவேளை, ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ முயற்சி செய்தால், இவரைப் போல நடிக்கக்கூடும்' என 60 களில், அந்த நடிகரின் நாடக விழாவில் பங்கேற்ற அண்ணா பேசினார். நடிகரின் திறமையை உயர்த்திக்காட்ட அண்ணா மிகைப்படுத்தி சொன்ன வார்த்தைகளை அந்த ஹாலிவுட் நடிகரே நேரில் கூறக் கேட்கும் அதிர்ஷ்டத்தை அடுத்த இரு ஆண்டுகளில் பெற்றார் அந்த நடிகர். அவர், நடிப்புப் பல்கலைக்கழகம் என இந்திய சினிமா கொண்டாடும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.

    1962 ம்ஆண்டு அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் சிறப்பு விருந்தினராக அமெரிக்கா சென்ற சிவாஜிகணேசனுக்கு அத்தனை இடங்களையும் சுற்றிப்பார்த்தபின் நடிப்பில் தன்னுடன் ஒப்பிடப்படும் உலகப் புகழ் நடிகர் மார்லன் பிராண்டோவை நேரில் பார்க்கும் ஆசை பிறந்தது. 'அக்ளி அமெரிக்கன்' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த பிராண்டோவுக்கு அந்தத் தகவல் போனபோது, ' அப்படி ஒரு சந்திப்பு நடந்தால் அவரைவிடவும் எனக்குத்தான் அதில் மகிழ்ச்சி” என உடனே சம்மதித்தார்.

    அரைமணிநேரத்திற்கும் மேலாக தனிமையில் பேசினர் இருவரும். சிவாஜியின் நடிப்பை வெகுவாக சிலாகித்துப்பேசிய பிராண்டோ, சிவாஜி கிளம்பிய சமயம் அவரைக் கட்டிப்பிடித்த பிராண்டோ, “ நான் அல்ல எந்த ஒருநடிகரை விஞ்சியும் நீங்கள் நடித்துவிடமுடியும். ஆனால் உங்களைப்போல் நடிப்பதுதான் எங்களுக்குச் சிரமம்” என்று சொல்லி நெகிழ்ந்தார். உலகப்புகழ் நடிகனால் இப்படி சிலாகிக்கப்பட்ட ஒரு நடிகருக்குதான் உள்ளுரில் ஒரு சிலை அமைக்க பல ஆண்டுகளாகப் பெரும்பாடுபடவேண்டியதிருக்கிறது என்பது வரலாற்றுச் சோகம்.
    நடிகர் திலகத்தின் நினைவுநாளில், தன் நடிப்பால் திரையுலகைக் கட்டி ஆண்ட அந்த மகாநடிகனுக்குத் தமிழ்த்திரையுலகமோ தமிழக அரசோ ஒரு சிலை அமைக்கும் பணியில் கூட உரிய மதிப்பளிக்கவில்லை எனக் கூடுதல் வருத்தத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவாஜி ரசிகர் நற்பணி மன்றத் தலைவர் கே.சந்திரசேகரன், “தன் நடிப்பினால் இந்தியாவை நிமிர்ந்து பார்க்க வைத்தவர் சிவாஜி. தமிழகத்தின் கலை அடையாளங்களில் தவிர்க்கமுடியாதவர். ஆனால் ஒரு சிலை விவகாரத்தில் அவருக்கு இழைக்கப்படும் அநீதி எங்களைப்போன்ற ரசிகர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்திவருகிறது” என்று பேசத் துவங்கினார்.

    “கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, சிவாஜியைக் கவுரவிக்கும்விதமாக சென்னை டிஜிபி அலுவலகம் அருகே, அவரது முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்பட்டது. இது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி நாகராஜன் என்பவர் வழக்குத் தொடுத்தார். கடந்த 10 வருடங்களில் அந்த சிலையால் எந்த விபத்து அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என நாங்கள் தெரிவித்த கருத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை; சிலையை அங்கிருந்து அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து அடையாறில் சிவாஜிக்குக் கட்டப்பட்டுவரும் மணிமண்டபத்தில் அதை வைக்கப்போவதாகத் தெரிவித்த அரசு மணிமண்டப பணிகள் முடியும் வரைகால அவகாசம் கேட்டுப்பெற்றது.
    இந்த நிலையில் அகற்றப்படும் சிலையை அதே பகுதியில் பொதுமக்கள் பார்வையில் படும் ஓரிடத்தில் வைக்க உத்தரவிடும்படி நீதிமன்றத்தில் மனு செய்தேன். விசாரணையில் சிலையை மணிமண்டபத்தில் வைக்கும் முந்தைய தீர்ப்பை உறுதி செய்துள்ளது நீதிமன்றம்” என்றவர் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசினார்.

    “தமிழகத்தில் சிலை வைக்கும் கலாசாரம் நீண்டகால வழக்கம். எம்.ஜி.ஆர் ,அண்ணா. காமராஜர், இன்னும் பல தேசியத் தலைவர்களை கவுரவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இவர்களுக்குச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவாஜிக்கு ஒரே ஒரு சிலை சென்னையில் மட்டும்தான் உள்ளது. ஆனால் அந்த ஒரு சிலையையும் அகற்ற நடக்கும் முயற்சிகள் வேதனையைத் தருகிறது.

    கடந்த பத்து வருடங்களில் அந்த சிலையால் எந்த விபத்துகளும் ஏற்பட்டதில்லை என்றாலும் நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்தோம். ஆனால் பொது இடத்திலிருந்து அகற்றுகிற சிலையைத் திரும்பவும் வேறொரு பொது இடத்தில் வைப்பதுதானே நடிப்புக்கு இலக்கமான ஒரு கலைஞனுக்குச் செய்கிற மரியாதை?!... அரசு அதை மணிமண்டபத்தில் வைப்பதாக முடிவெடுத்துள்ளது. மணிமண்டபம் என்பது ரசிகர்கள் மட்டுமே வந்துசெல்லும் இடம். அங்கு வைப்பது சிவாஜிக்குக் கவுரவம் செய்வதாக இருக்காது.
    மணிமண்டபத்தில் வைக்க அரசுக்கு வேறொரு சிலை கிடைக்காதா..தமிழகத்தில் பிறந்து நடிப்பில் உலகளாவிய புகழ்பெற்ற ஒரு கலைஞனுக்கு அவன் பிறந்தமாநிலத்தில் சிலைவைக்க வேண்டுகோள் வைப்பது என்பதே வெட்கக்கேடானது. தன் மூத்த கலைஞனுக்கு இழைக்கப்படும் அவமரியாதையை நடிகர் சங்கம் வேண்டுமென்றே கண்டும் காணாமலும் இருக்கிறது.
    எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் நடிகர் சங்கத்தில் அரசியலோ மதமோ மற்ற எந்தப்பிரச்னையும் இருந்ததில்லை. சிவாஜி அமெரிக்க அரசின் அழைப்பில் அமெரிக்கா சென்று வந்ததற்கு விமானநிலையத்திலிருந்து மாலை மரியாதையோடு அழைத்துவந்து நடிகர் சங்கம் சார்பாக பாராட்டுக்கூட்டம் நடத்தியவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் பாரத் விருது பெற்றதற்காக அதேநடிகர் சங்கம் சார்பாக மிகப்பெரிய பாராட்டுவிழா நடத்தியவர் சிவாஜி. இப்படி அன்றைக்கு கட்சிமாச்சர்யங்களின்றி நடிகர் சங்கம் இயங்கியது. ஆனால் இன்று அரசியல் கட்சியின் கிளை போல் சங்கத்தை ஆக்கிவிட்டனர். ஆளும் அரசை துதிபாடி ஆதாயம் பெறுவதுதான் சங்கத்தின் முதன்மைப் பணி என்றாகிவிட்டது. நடிகர்கள் ஆளுக்கொரு அரசியல் கட்சியில் இருப்பதால் சங்கத்தை தங்களின் அரசியல் நடவடிக்கைக்குப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதிமுகவின் 3 அணிகளில் எதை ஆதரிப்பது என்பதுதான் இப்போதைக்கு அவர்களின் ஆகப்பெரிய கவலை. அதனால் அவர்களுக்குத் தங்கள் முன்னோடிகளைப்பற்றிய அக்கறை துளியும் இல்லை. தமிழகத்தின் கலை அடையாளமான ஒரு கலைஞனின் சிலை விவகாரத்தில் இன்றுவரை அவரது ரசிகர்களாகிய நாங்கள்தான் சட்டப்போராட்டம் நடத்திவருகிறோம். இது அரசும் நடிகர்சங்கமும் வெட்கப்படவேண்டிய விஷயம்.

    முதலில் இந்த சங்கத்தின் பெயரே முரணானது. அன்றைக்குச் சென்னையை மையமாகக் கொண்டு எல்லா மொழிப்படங்களும் தயாரானபோது தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாக்கப்பட்டது. ஆனால் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தபின் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப்படங்கள் தனித்தனியே தயாரிக்கப்படத்துவங்கி மொழியின் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களில் தனித்தனியே நடிகர் சங்கங்களை உருவாக்கிக்கொண்டுவிட்டனர். அவை தங்கள் மொழித்தனித்துவத்துடன் இன்றளவும் இயங்கிவருகிறது. ஆனால் தமிழகத்தில் இன்றும் அபத்தமாக தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் தொடர்கிறார்கள். மலையாளத்தில் யாத்ரா மொழி என்ற படத்தில் சிவாஜி நடிக்கப்போனபோது, மலையாள நடிகர் சங்கமான 'அம்மா,' சிவாஜி, தங்கள் சங்கத்தில் உறுப்பினராகவில்லையென்றால் நடிக்க அனுமதிக்கமாட்டோம் என பிரச்னை கிளப்பினர். இத்தனைக்கும் படத்தில் கெஸ்ட் ரோல் தான் சிவாஜிக்கு. இப்படி மற்ற மாநிலங்களில் தனித்துவத்துடன் நடிகர் சங்கங்கள் செயல்பட்டுவருகின்றன.
    ஆனால், தமிழகத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் முரணான பெயரில் செயல்படுகிறது. அப்படித் தமிழ் நடிகர் சங்கமாக இருந்திருந்தால் சிவாஜி சிலைக்கு இந்த நிலை நேர்ந்திருக்காது. தலைமைப் பொறுப்பில் இருக்கும் தமிழர், சிவாஜியின் மதிப்பை உணர்ந்து அவருக்குக் கவுரவம் கிடைக்க பாடுபட்டிருப்பார். ஆனால் சிவாஜி, எம்.ஜி.ஆரால் அரும்பாடுபட்டு உருவாக்கிய சங்கத்தில் எந்த சிரமுமின்றி வந்து உட்கார்ந்துகொண்டவர்களுக்கு சிவாஜியைப்பற்றி நினைக்கவோ அவர்களின் பிரச்னைக்குக் குரல் கொடுக்கவோ நேரமில்லை.

    ஆந்திராவில் என்.டி.ஆர் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவரானாலும் அவருக்கான மரியாதையை அந்த மாநில அரசும் மக்களும் தரத்தவறவில்லை. கர்நாடகாவிலும் ராஜ்குமாருக்கு மணிமண்டபம் கட்ட அத்தனை அரசியல் கட்சிகளும் நடிகர்களும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தனர். அங்கு யாருக்கும் ராஜ்குமார் சிலையை அகற்றச் சொல்ல துணிச்சல் வரவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் கலைஞர்களை அரசியலோடு பொருத்திப்பார்க்கிற அவலம் இருக்கிறது.
    உடனே சில அறிவாளிகள் சிவாஜி நடித்துசம்பாதித்தாரே அவரது பிள்ளைகள் தங்கள் சொந்த செலவில் சிலை அமைக்கலாமே என்கிறார்கள்...விளையாட்டு மற்றும் மற்ற துறைகளில் பணியாற்றியவர்களும் அதன்மூலம் வருமானம் ஈட்டுகிறார்கள். தேசத்திற்கு தேடித்தரும் புகழுக்காக அவர்களுக்கு விருது கொடுத்தும், சிலை அமைத்தும் கவுரவிப்பார்கள். அதுபோலத்தானே இது. இந்த சிறுவிஷயத்தைக் கூட உணராமல், பேசுகிறார்கள்; சிலையை அகற்றக் கோரிக்கை வைக்கிறார்கள். காலம் முழுவதும் தன் நடிப்பாற்றலால் தமிழகத்திற்கு புகழ்சேர்த்த ஒருவரின் சிலை விவகாரத்தில் ஆயிரத்தெட்டு பிரச்னைகளை எழுப்புகிறார்கள். இதற்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் யாரும் முன்வராதது சோகம்.

    இப்போதும் நாங்கள் சிலையை அகற்றாதீர்கள் என்றெல்லாம் சவால் விடவில்லை. எடுக்கிற சிலையை மீண்டும் அதே இடத்தில் எங்கேயாவது வையுங்கள் என்றுதான் கேட்கிறோம். கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலை, கத்திபாரா நேரு சிலை, ஆலந்துார் அண்ணா சிலை ஆகியவை மெட்ரோ பாலத்திற்காக அப்புறப்படுத்தப்பட்டு அதே இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறின்றி அமைக்கப்பட்டது. அதைப்போலவே இந்த சிவாஜி சிலையை மக்கள் பார்வை படும் இடத்தில் வைக்கக் கோருகிறோம். சிவாஜி தன் காலம் முழுவதும் சாதி மத அடையாளங்களுமின்றி ஒரு கலைஞனாக மட்டுமே இருந்தவர். ஒருவேளை அதுதான் அவரது பலகீனமோ என்று இப்போது நினைக்கிறோம்.



    தன் சமூகத்தைச் சார்ந்த ஒரு தலைவர் அரசியலில் பேரும்புகழோடும் இருந்தபோதும் சிவாஜி அவருக்கு நேர் எதிராக அரசியல் செய்த காமராஜரின் புகழை வளர்க்க இறுதிக்காலம் வரை பாடுபட்டார். அந்தக்கட்சியின் வளர்ச்சிக்குத் தன் உடல், பொருள், ஆவி அத்தனையும் செலவிட்டார். அப்படிப்பட்ட நேர்மையாக வாழ்ந்து மறைந்த கலைஞனுக்கு அரசும் நடிகர் சங்கமும் செய்கிற கவுரவம் இதுதானா...கலைஞனையும் கலையையும் புறக்கணிக்கிற ஒரு சமூகம் முன்னேற்றமடையாது என்பதை அரசு உணரவேண்டும்.” என்று வேதனையான குரலில் சொல்லிமுடித்தார் கே. சந்திரசேகரன்.

    காலம் முழுவதும் தன் நடிப்பாற்றலினால் தமிழர்களை மகிழ்வித்த கலைஞனின் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்து கவுரவிப்போம்; மன்னிக்கவும் 'கவுரவம் பெறுவோம்!'


    cinemavikatan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •