(ஹுலூலே (Hulule) விமானநிலையம், மாலத்தீவு)

பேரிரைச்சலோடு தரையில் குறியிட்ட இடத்திற்க்கு வந்து நின்ற அந்த எமிரேட்ஸ்(Emirates) விமானத்திலிருந்து இறங்கிய ராகவனுக்கு எல்லாமே இன்னும் கனவு போல் இருந்தது. அலி பேயுடன் பேசிய பிறகு தனது ஓட்டல் அறையிலிருந்து இரவு முழுவதும் அட்மிரலுடன் பேசியதன் விளைவு மறு நாள் காலை அவர் டாக்டர் செரியனாக ஷார்ஜாவிற்க்கு சென்றது. அங்கு இருந்து ஒரு வாகனத்தில் துபாய் வந்த அவர் அகமத் காலித் என்ற பெயரில் மாலத்தீவு பாஸ்போர்ட்டில் அன்றிரவே மாலே செல்லும் 658 விமானத்தில் ஏறி விட்டார்.

டெர்மினலில் திவைஹி ராஜ்யாமிஹா (Maldive citizens) என்று போட்டிருந்த வரிசையில் நின்று பாஸ்போர்ட் சோதனையை கடந்து வெளியே வந்த அவர் அந்த டாக்குமென்டுகளை தயார் செய்த தேசிகனை மனதுக்குள் பாராட்டினார். டெர்மினலுக்கு வெளியே வ்ந்து படகுத்துறையில் தலைநகர் மாலே செல்லும் ஒரு தோணியில் ஏறி அமர்ந்தார். இந்த 15 வருடங்களில் மாலே நிறைய மாறிவிட்டது. மாலே நகரை சுற்றி கடலில் ஆழமில்லாத பகுதிகளில் மணலை போட்டு நிரப்பி நிலமாக்கி அவ்விடங்களில் வீடுகளை கட்டி மாலேவின் பரப்பளவையே பெரிதாக்கிவிட்டனர். ஆனால் அதே சமயம் இயற்கை அரண்களை அழிப்பதன் மூலம் கடல் கொந்தளிப்பினால் ஆபத்து நேரிடலாம் என்று எச்சரிக்கும் ஜியாலாஜிஸ்டுகளின் (geologist) வார்த்தைகள் இதுவரை சம்பந்தபட்ட காதுகளை இன்னும் எட்டவில்லை போல் தெரிகிறது.

-----------------------------------------------------------------------------------


(மாலே, மாலத்தீவு)

மரைன்ட்ரைவில் ஸ்டேட்பாங்க் முன் இருக்கும் ஜெட்டியில் இறங்கிய ராகவன் அங்கு நிற்கும் டாக்ஸிகளை புறக்கனித்து சாந்தனி மாகு(சாலை, தெரு) நோக்கி நடக்க ஆரம்பித்தார். சாந்தனி மாகுவில் அந்த உள்ளடங்கிய வீட்டின் 3வது மாடியிலுள்ள அந்த ஃப்ளாட்டை அடைந்து கதவை தட்டி உள்ளே நுழைந்தவரை புன்சிரிப்புடன் வரவேற்றார் அலி பே.

"ராகவன், நீங்க சொன்ன மாதிரி எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிட்டேன். உங்களுக்கு இன்னோரு விஷயம் சொல்லனும், அலிஃபுஷிய நாங்க கவனமா கண்கானிச்சுட்டு வரோம். நான் சொன்னா நீங்க கண்டிப்பா நம்ப மாட்டீங்க, ஹோசியார் கான் இப்போ இருக்கறது அலிஃபுஷில. எப்படி வந்தான், எப்போ வந்தான், யார் அவன அழைச்சிட்டு வந்தாங்கனு இன்னும் சரியா தெரியல. கிருஸ்துமஸ் லீவுக்காக இப்போ இங்க நிறையா டூரிஸ்டுங்க வராங்க. அதே மாதிரி எல்லா தீவுங்களுக்கும் சரக்கு ஏத்திட்டு வர தோணிகளும் ஜாஸ்தி. இதுல ஏதொ ஒண்ணுல யாரோ அவன ஏத்தி அலிஃபுஷில கொண்டு விட்டு இருக்கணும். உங்க வேலை இப்போ இவங்க ரெண்டு பேரையும் மூணாம் பேருக்கு தெரியாம நசுக்கணும்."

"அலிபே, நீங்க என்னை பத்தி தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க. நான் ஒன்னும் ஜேம்ஸ் பாண்ட் இல்ல. என்னால அப்படி நிறையா பேரோட சண்டை எல்லாம் போட முடியாது. ரகஸ்யமா காதும் காதும் வச்சா மாதிரி காரியம் முடிக்கிறது தான் என்னால முடிஞ்ச விஷயம். இவங்க என்ன தனியா இருப்பாங்கனு நினைச்சீங்களா? இதுக்கு நீங்க உங்க என்.எஸ்.எஸ் (N.S.S.) காரங்களை அனுப்பி அவங்கள பிடிக்கலாம்" என்று சற்று உஷ்ணமாக பேசினார் ராகவன்.

"நீங்க சொன்ன மாதிரி அவங்கள சுத்தி வளைச்சு பிடிக்கிறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, இந்த சுத்து வட்டாரத்திலேயே எங்க நாடு தான் சின்ன நாடு. எல்லாத்துக்கும் அண்டை நாடுகளை எதிர் பாக்குற நாடு. நாட்டு வளமே இங்க வர டூரிஸ்ட நம்பித்தான் இருக்கு. அதுவும் இன்னும் 3 நாளுல கிருஸ்துமஸ் வருது. இப்பத்தான் இங்க பீக் சீசன், இப்போ நாங்க எதாவது பண்ணா ஒரு பய இனிமே இங்க வர மாட்டான். அமெரிக்காவ உதவி கேட்டா அவன் ஒரு பெரிய படையவே அனுப்புவான் ஆனா அவ்வளவு சீக்கிரமா திரும்பி போக மாட்டான். ஆஃப்கானிஸ்தான் மாதிரி இங்கேயே இருப்பான். இதனால அண்டை அசல்ல இருக்குற எங்களுக்கு நிறைய உதவி பண்ணற இஸ்லாமிய நாடுகளோட வீண் சண்டை வரும். இதை எல்லாம் யோசிச்சு தான் நான் உங்க அரசாங்கத்தோட உதவிய நாடினேன். ரா க்கு துப்பு கொடுத்தது யார்ன்னு நினைக்கறீங்க".

இதை கேட்டு யோசனையில் ஆழ்ந்த ராகவன்," சரி அலி பே இப்படி செய்யலாம், ஆனா அதுக்கு எனக்கு கொஞ்சம் ஆள் பலம் தேவை. இது தான் என்னோட ப்ளான்" என்றார். அதை கேட்டு அகமும் முகமும் மலர்ந்த அலி பே ராகவனை கட்டிக்கொண்டார்.