Results 1 to 10 of 20

Thread: mana ottam

Threaded View

  1. #1
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like

    mana ottam

    மன ஓட்டம்

    போரின் உக்கிரம் அனைவரையும் தகித்தது. இதோ முடிந்துவிடும் என நினைக்கப்பட்ட போர் இன்னும் முடியாமல் இழுத்தடித்தது. பதினெட்டு மாதங்களாக முடியாமல் நடக்கும் போர் ஏன் இன்னும் முடியவில்லை என எல்லோர்க்கும் வியப்பை அளித்தது. அந்த ஜனகிமனாளனோடு போரிடும் இலங்கேசனின் வீரத்தை என்னவென்று சொல்ல, பகவானே வியக்கும் விதத்தில் போர் புரிந்தான் இலங்கேஸ்வரன். ரகுவீரனின் பாணங்களை சுலபமாக தடுத்து எதிர்பாணங்களால் தசரத மைந்தர்களையும், வானர சைன்யத்தையும் தகித்து கொண்டிருந்தான் அவன்.

    இறுதிப்போருக்காக இந்திரனின் திவ்ய தேரோடு வந்த மாதலி போர்க்களத்தில் தன திறமையை காட்டி ராகவனுக்கு தேரோட்டி கொண்டிருந்தான். அரக்கனின் வீரத்தை கண்ட மாதலி பகவானை பார்த்து, " சுவாமி, இது என்ன விளையாட்டு? பிரம்மாஸ்திரத்தை மறந்தீரா, அதை எய்து அவன் கதையை முடித்து லோகத்தை அவன் கொடுமையில் இருந்து காப்பாற்றுங்கள்," என வேண்டி கொண்டான்.

    பகவான் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்து அதன் திவ்ய மந்திரத்தை மனத்தால் தியானித்து, கோதண்டத்தில் பூட்டி நாணை காது வரை இழுத்து எய்த போது உலகமே ஆடியது, பிரளயகால நிலைமை உருவாகியது. காலம் முடிந்ததை அறிந்த இலங்கேசன் கரம் கூப்பி பாணத்தை மார்பில் ஏந்தி ஈசனடி புகுந்தான். மானிடரும், வானரரும், தேவரும், முனிவரும், கின்னரரும் களிநடம் புரிந்தனர். உலகை சூழ்ந்த இருள் மறைந்தது. இலங்கையின் அழுகுரலும், வானரரின் ஆனந்த நடனமும் ஓரங்கே ஒலித்தது.

    செயற்கரிய செயலை செய்த பகவான் போரின் களைப்பு தீர இளைய பெருமாளின் மடி மீது தலை வைத்து கண் அயர்ந்தார். கண் அயர்ந்து கிடந்தாலும் பகவானது அகம் போர்க்களம் முழுதும் வியாபித்து இருந்தது. ஒவ்வொரும் மூலையிலும் நடப்பதை கேட்டுக்கொண்டிருந்தார் பெருமாள்.

    இலங்கை நகரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த விபீஷணனின் மனம் பல கூறுகளாக பிரிந்து இருந்தது. அண்ணனின் அழிவுக்கு காரணமாக இருந்த தனக்கு அரச பதவியா என வருந்தியவன், மறுபுறம் இலங்கையை அழிவில் இருந்து மீட்டு மீண்டும் ஒரு சொர்கபுரி ஆக்க வேண்டும் என உறுதி பூண்டான். மலை மலையாக குவிந்து இருந்த உடல்களை கண்ட அவன் மனம் வருந்தியது. மகாவீரர்களை கொண்ட ராவண சைன்யம் அடியோடு அழிந்தது தன்னால் அன்றோ என நினைத்தவன், தன உதவி இல்லாவிடில் ராகவனால் அவ்வளவு சீக்கிரம் வென்றிருக்க முடியுமா என மனதில் பெருமிதத்தோடு எண்ணினான். பகவானின் முகத்தில் ஒரு புன்முறுவல் தோன்றியது.

    சுக்ரீவனை தோளில் வைத்து கூத்தாடிய வானர சேனை அவனது வெற்றியை கொண்டாடியது. சுக்ரீவனின் மாமனான சுஷேணன் அவனை புகழ்ந்து தள்ளினான். வாலியின் சகோதரனான அவனுக்கும் வாலியின் பலம தானே இருக்கும். நினைத்திருந்தால் அவனே தனித்து சீதையை மீட்டு இருப்பானே என்று ஏற்றி விட்டன். சுக்ரீவன் மனதிலும், எனது வானர சேனை உதவி இல்லாவிடில் இவ்வெற்றி கிடைத்திருக்குமா என இறுமாந்து நினைத்தான். பகவானின் முகத்தில் ஒரு புன்முறுவல் தோன்றியது.

    சுஷேணனின் புகழ்ச்சியை கேட்ட அங்கதனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. வாலியின் தம்பியாகிய சுக்ரீவனுக்கே இவ்வளவு வலிமை என்றால், வாலியின் ஒரே சந்ததியான தனக்கு இருக்கும் வலிமையை யாரும் மதிப்பதில்லை என பொருமிய அவன் மனம், மகா வீரர்களான வித்யுன்மாலி, வஜ்ரதம்ஷ்ட்ரன், முதலிய அரக்கர்களை வென்றதை நினைத்துபார்த்து. அனுமனை போல் இல்லாமல் தான் கடல் தாண்டி சென்றிருந்தால் இலங்கையை அழித்து ராவணனை கொன்று சீதையை மீட்டு வந்திருப்பேன் என தனக்குள் சொல்லி கொண்டதை கேட்ட பகவான் முகத்தில் ஒரு புன்முறுவல் தோன்றியது.

    கரடிகள் சூழ இருந்த ஜாம்பவான், போரை பற்றி அவர்களோடு பேசிக்கொண்டிருந்தான். முதிய வயதிலும் உக்கிர போர் புரிந்ததை சொன்ன ஜாம்பவான், தான் தசரத மைந்தர்களின் உயிரை காப்பாற்றி வெற்றியை தேடி தந்ததை விளக்கி கூறினான். தன்னுடைய யோசனையின் பேரில் அனுமன் சஞ்சீவி பர்வதத்தை கொண்டிராவிட்டால் ராம லக்ஷ்மனர்களின் உயிரும் போய் இருக்கும், போர் நிலைமை மாறி இருக்கும், என்று ஜாம்பவான் கூறியதை கேட்ட பகவான் முகத்தில் ஒரு புன்முறுவல் தோன்றியது.

    மணலில் ஒரு பாலம் கட்டிக்கொண்டிருந்த நளனை பார்த்த நீலன், அவன் கட்டிய சேதுபந்தனத்தை பற்றி பேசி கொண்டிருந்தான். கொந்தளிக்கும் கடலில் அவன் கட்டிய பாலத்தை நினைத்த நளனின் மனம் செருக்கு நிறைந்த பெருமிதத்தில் மிதந்தது. பகவான் முகத்தில் ஒரு புன்முறுவல் தோன்றியது.

    மாதலியின் மனமோ எங்கெங்கோ போய் விட்டது. இந்திரலோகத்தில் மற்றவர்களிடம் தான் சொல்லிய யோசனையின் பேரில் ராவணன் அழிக்கப்பட்டதை சொல்லி சொல்லி மாய்ந்து போனான். பகவான் முகத்தில் ஒரு புன்முறுவல் தோன்றியது.

    ஆதிசேஷன் மேல் படுத்திருக்கும் மகாவிஷ்ணு போல் இருக்கும் ராம லஷ்மனர்களின் தனுசுக்களான கோதண்டமும், வைஷ்ணவமும் தம்முடைய ஆற்றல்களை பற்றி பேசிக்கொண்டிருந்தன. தன்னுடைய ஆற்றலை கண்டு தானே இந்த உலகமே ராமனை கோதண்டராமன் என்று அழைக்கிறது. தன உதவி இல்லாவிடில் ராகவனால் அவ்வளவு அரக்கர்களை வென்றிருக்க முடியுமா என்றது. அதை கேட்ட வைஷ்ணவமோ, தானும் யாருக்கும் இளைத்தவர் இல்லை. மஹா வீரர்கள் பலரை என் உதவி கொண்டுதானே இளையபெருமாள் வென்றார் என்றது. கேட்டுகொண்டிருந்த பகவான் முகத்தில் ஒரு புன்முறுவல் தோன்றியது.

    இளையோன் மனத்திலும் பல பல எண்ணங்கள். அதிகாயன், மகாபர்ச்வான், அஹாம்பணன், முக்கியமாக இந்திரஜித் போன்றோரை வென்றது அவனுக்கு மிகவும் உசிதமாக இருந்தது. மனைவி ஊர்மிளையின் நினைவும் வந்தது. அவளிடம் தனது வீர பிரதாபங்களை சொல்ல முடிவெடுத்து கொண்டான். அண்ணல் முகத்தில் ஒரு பெரிய புன்முறுவல் தோன்றியது.

    அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த பகவானின் அகத்தில், ஒரு சிறிய வேதனை நிறைந்த அழுகுரல் கேட்டது. தூரத்தில் தனியாக முகத்தை தன் கால் முட்டிகளில் வைத்து அழுது கொண்டிருக்கும் ஆஞ்சநேயனின் குரல் தான் அது. ஹே ராமா, உனக்கு சேவை செய்து காலத்தை போக்கி வந்த எனக்கு, இனி அந்த பாக்கியம் கிடைக்குமா? நாட்டுக்கு திரும்பினால் என் சேவை உனக்கு தேவை படுமா. அற்ப வானரன் நான். இனி எப்படி உனக்கு சேவை செய்வேன் என்று அழுததை கேட்ட பகவானின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. National Anthem - jana gana mana - the full (complete) version
    By raagadevan in forum Indian History & Culture
    Replies: 1
    Last Post: 17th May 2017, 10:57 AM
  2. mana vaNdE (Pavalamani Pragasam)
    By RR in forum Hub Magazine Archive - 2008
    Replies: 5
    Last Post: 4th February 2008, 08:51 AM
  3. AR RAHMAN's JANA GANA MANA - 60 years of INDEPENDENCE
    By Kreedam in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 30
    Last Post: 31st August 2007, 10:04 AM
  4. MAHA SIVARATHRI AND SIVALAYA OTTAM
    By padmanabha in forum Miscellaneous Topics
    Replies: 4
    Last Post: 8th February 2007, 08:38 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •