Results 1 to 5 of 5

Thread: Iyalvathu karavel

Threaded View

  1. #1
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like

    Iyalvathu karavel

    இயல்வது கரவேல்


    காலை ஆறு மணிக்கு எல்லாம் 6th மெயின் ரோட் களை கட்ட ஆரம்பித்து விட்டது. ரோஜா மெடிகல்ஸ் இன்னும் திறக்க படவில்லை. அந்த ஐப்பசி குளிரில் உடம்பு முழுவதும் கோணி சுற்றிகொண்டு அதன் வாசலில் இரண்டு மூன்று பேர் படுத்து கொண்டு இருந்தனர். சூரிய வெளிச்சம் இன்னும் சரியாக வரவில்லை. வானத்தை பார்த்தால் இன்றும் மழை வரும் போல் இருந்தது. செல்வம் காய்கறி மண்டியில் மெதுவாக கூட்டம் சேர ஆரம்பித்தது. சில வீட்டு வாசலில் இப்போது தான் சளக் சளக் என்று சாணி தெளித்து கோலம் போட ஆரம்பித்தனர். நாயர் டீ கடையில் மும்முரமாக வியாபாரம் ஆகி கொண்டிருந்தது. அருகில் இருந்த சினிமா பேனரில் கமலஹாசன் தான் சங்கர்லால் ஆக ரங்காவில் ஓடுவதை தெரிவித்து கொண்டு இருந்தார். ஸ்வஸ்திக் சைக்கிள் மார்ட் திறந்து சாமி படங்களுக்கு தீபம் காட்டி கொண்டு இருந்தார் அண்ணாச்சி.

    லொடக் லொடக் என்று சத்தத்துடன் சைக்கிளில் வந்த வரது, அண்ணாச்சியை பார்த்து, " அண்ணாச்சி, இந்த பாண்டி பயலோட தினமும் ரோதனையா போச்சு. என் பொண்ணு சைக்கிள அவன் கிட்ட கொடுத்து ஓவரால் பண்ண சொல்லி நாலு நாள் ஆச்சு. இதோ அதோன்னு தான் சொல்றான தவிர கொடுக்க மாட்டேங்கறான். இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பேசலாம்ன்னு வந்தா இன்னும் கடையே தொறக்கல;" என்று புலம்பியவனை பார்த்து முறைத்த அண்ணாச்சி. " ஏம்லே, இப்போ இம்புட்டு பேசறீரே, சைக்கிள அந்த குடிகார பய கிட்ட என்வே கொடுத்தீரு, என் கிட்ட கொடுத்து இருக்கலாம்ல, இப்போ வந்து என் கிட்ட குய்யோ முறையோ அழுதா நான் என்ன செய்யறதாம். அந்த குடிகார பய எப்போ வந்து கட தொரப்பானு ஆருக்கும் தெரியாது. அவன் கடை வாசல ஒரு சின்ன பையன் படுத்து இருப்பான். அவன ஒதைச்சு கேளும் வே", என்றார்.

    படுத்து ஏதோ கனவு கண்டு கொண்டு இருந்த மணி யாரோ காட்டு கூச்சல் போடுவது கேட்டு வாரி சுருட்டி கொண்டு எழுந்தான். ராத்திரி சாப்பிடாத மயக்கம் இன்னும் இருந்தது. மலங்க மலங்க முழித்த அவனுக்கு மெதுவாக வரது கத்துவது புரிந்தது. மாமா எப்போ வருவார்ன்னு அவருக்கே தெரியாது. இதை வரதுவிடம் சொல்ல, அதற்கு அவர் திட்டியது மிகவும் வலித்தது. சே, என்ன வாழ்க்கை இது, பொறந்தா ஏழையா மட்டும் பொறக்கவே கூடாது. பேசாமல் ஊருக்கு ஓடி விடலாமா என்று கூட தோணியது. அதோடு, ஊரில் அம்மாவின் வாடிய, ஒட்டிய, கவலையால் களையிழந்த முகமும், தங்கையின் ஏக்கமான பார்வையும் தோன்ற எண்ணத்தை உடனே மாற்றி கொண்டான் மணி. மெதுவாக நாயர் கடை பக்கத்தில் இருந்த குழாயில் பல் விளக்கி, முகம் துலக்கியவனுக்கு பசி வயிற்றை கிள்ளியது. நேற்றிரவு மாமா காசு கொடுக்காமல் போனதால் எதுவுமே சாப்பிட முடியாமல் போனது. மெதுவாக திரும்பி கடைக்கு வந்து மாமாவுக்காக காத்திருந்தான் மணி.

    __________________________________________________ __________________________________________________ __________________________________

    ரமணி, ரமணி கண்ணா, என்று யாரோ மிருதுவாக காதருகில் கூப்பிடுவது கேட்டது. அப்படி கூப்பிட அம்மாவால் தான் முடியும். படுக்கைக்கு வந்து, கன்னத்தோடு கன்னம் வைத்து ரமணி என்று அம்மா கூப்பிடுவதற்க்க்காகவே அவன் படுக்கையில் படுத்து கிடப்பான். அம்மாவின் மஞ்சள் பூசிய கலையான முகமும், அந்த காலை வேளையிலும் குளித்து ரெக்சோனா சோப்பின் வாசனையும் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். வேண்டுமென்றே எழுந்திருக்க அடம் பிடிக்கும் அவனை எழுப்ப இப்போது அப்பா வருவார். அவனை உப்பு மூட்டை மாதிரி தூக்கி கொண்டு போவார். சில நாட்கள் அவனை தனது காலில் ஏற்றி கொண்டு இருவரும் நடந்து போவார்கள். அம்மா அதற்குள் அவனது ஸ்கூல் சாமான்களை தயார் செய்து பூஸ்டுடன் காத்து கொண்டிருப்பாள். சமையல் மாமி டிபனுடன் காத்து கொண்டிருக்க சில வேளை அவன் அப்பாவுடனும், அம்மாவுடனும் வெளியே தோட்டத்தில் சாப்பிடுவார்கள். அப்பா பேப்பர் படித்து கொண்டே உலகத்தில் நடப்பதை அவனுக்கு கதை சொல்வது போல் சொல்லி கொண்டிருப்பார். அவனுக்கு அவர்களது தோட்டத்தை மிகவும் பிடிக்கும். வித விதமான பூச்செடிகள், மரங்கள் என்று எங்கே பார்த்தாலும் பூத்து குலுங்கி கொண்டிருக்கும். தோட்டக்காரர் எப்போதும் எதையாவது செய்து கொண்டே இருப்பார். அம்மாவும் அவரை எதையாவது கேட்டு கொண்டே இருப்பார்கள். அவன் குளித்து வருவதற்குள் அப்பா தனது ஆபிசுக்கு போக தயாராகி விடுவார். டை கட்டி கொண்டு கோட்டு சூட்டுடன் அப்பாவை பார்க்க அழகாக இருக்கும். அப்பாவை கொண்டு விட்டு விட்டு கார் அவனை ஸ்கூலுக்கு அழைத்து போக தயாராக இருக்கும். ஸ்கூல் போகும் வழியில் 6th மெயின் ரோடில் கும்பலாக பஸ்சுக்கு நிற்கும் கும்பலை பார்க்க அவனுக்கு பாவமாக இருக்கும்.

    __________________________________________________ __________________________________________________ __________________________________

    பசியோடு உட்கார்ந்து இருந்த மணியை பார்க்க அண்ணாச்சிக்கு பாவமாக இருந்தது. கும்பகோணத்தில் இருந்து ஏழ்மை காரணமாக மாமனிடம் வேளை செய்ய வந்தவன் என்றும், ஆறாம் வகுப்போடு பள்ளி படிப்பு நின்றது என்றும் அவர் கேள்வி பட்டார். அவனை பார்த்து, " தம்பி, பாண்டி இன்னும் வரலியா? காலைல எதாச்சும் சாப்டியா", என்று கேட்டார். தரையை பார்த்தபடியே, " இன்னும் இல்லீங்க, அண்ணாச்சி, மாமா இதோ வந்திடும்," என்றான் மணி. " இந்தா, பாண்டி வரும் போது வரட்டும், நீயும் டீ குடிச்சுட்டு, எனக்கும் ஒண்ணு வாங்கியா, அப்படியே நீயும் சாப்டுட்டு எனக்கும் எதாச்சும் கொண்டு வா," என்றார். அவரை வெறித்து பார்த்த மணி, " நான் உங்களுக்கு மட்டும் வாங்கி வரேன் அண்ணாச்சி, எனக்கு சும்மா எதுவும் வேணாம், " என்றான் வீம்பாக. " அட போக்கத்தவனே, உனக்கு யாரு சும்மா தரதா சொன்னா, மொதல்ல போயி வாங்கியா, பேந்து இங்க இருக்குற சைக்கிள எல்லாம் நல்ல தொடச்சு வை. உங்க மாமன் வரத்துக்குள்ளாற முடிச்சு வை, வந்து கண்டான்னா காச்சு மூச்சுன்னு கத்துவான்.

    சைக்கிள்களை எல்லாம் துடைத்து விட்டு, அண்ணாச்சி தந்த காசில் ஒரு டீயும் பொறையும் வாங்கி தின்று கொண்டிருந்த மணியின் கண்ணில் பட்டான் அவனது மாமனும், பாண்டியன் சைக்கிள் மார்ட் ஒனருமான பாண்டி. கலைந்த தலை, ரத்த சிவப்பான கண்கள், அதிகமான குடியால், உப்பிய முகம். கருணை கொஞ்சம் கூட இல்லாத முகம். வரும் போதே அவன் டீ கடையில் இருப்பதை பார்த்துவிட்டு இன்னும் கோபமாக வந்தான் பாண்டி.

    __________________________________________________ __________________________________________________ ___________________________________

    காரிலிருந்து இறங்கியவனை வாரி அனைத்து கொண்டாள் அம்மா. அவனது ஸ்கூல் பையை வாங்கி கொண்டு அவனை அழைத்து சென்றவள் ஒரு தட்டில் டிபனை போட்டு அவனது ஸ்கூல் பற்றி விசாரித்தாள். அவன் ஸ்கூலில் நடந்ததை சொல்ல சில விஷயங்களுக்கு விழுந்து விழுந்து சிரித்தாள். அம்மா சிரித்தால் ரொம்ப அழகாக இருக்கும். டிபன் சாப்பிட்டு விட்டு டாமியுடன் விளையாட கிளம்பிவிட்டான் அவன். புசு புசுவென்று தலை எது வால் எது என்று தெரியாமல் இருக்கும் நாய் அது. அவனது கிளாசில் அவனை தவிர இன்னும் இரண்டு பேரின் வீட்டில் மட்டும் தான் இந்த மாதிரி நாய் இருந்தது. அவர்களும் சில சமயங்களில் அவர்களது நாய்களை அழைத்து கொண்டு அவனது வீட்டிற்க்கு வந்து விளையாடுவார்கள். அந்த பெரிய தோட்டத்தில் அவர்கள் ஒளிந்து விளையாட நிறைய இடம் இருந்தது. அப்படி விளையாடி கொண்டிருந்தவன் ஒரு கல் தடுக்கி கீழே விழ ரத்தம்..........

    __________________________________________________ __________________________________________________ ____________________________________

    காயத்தில் இருந்து ரத்தம் கொட்டி கொண்டு இருந்தது. பொறி கலங்கி உட்கார்ந்து இருந்தான் மணி. பக்கத்தில் பாண்டி, "கூறு கேட்ட மூதி, உன்னிய வச்சு வேல வாங்குறதுக்கு நாலு இடத்துல பிச்சை வாங்கி பொழக்கலாம்டா, வீல்ல பெண்ட் எடுக்க சொன்னா வழக்கம் போல கனவு காண ஆரம்பிச்சுட்டயா, இப்போ ஸ்பானர்ல தான் அடி வாங்குன, மறுபடி பகல் கனவு கண்ட மவனே உனக்கு சங்கு தான், " என்று கத்துவது தூரத்தில் கேட்டது. ஒன்றும் பேசாமல் மறுபடியும் சைக்கிள் வீல் முன்னாடி அமர்ந்து பெண்ட் பார்க்க ஆரம்பித்தான். மனத்தில் ரமணியும் அவன் அம்மாவும் அப்பாவும் வீடும், டாமியும் வந்து போனார்கள்.

    அவனால் முடிந்தது கனவு காண்பது மட்டுமே.
    niraive kaanum manam vendum
    iraivaa nee adhai thara vendum

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •