-
1st May 2011, 11:54 AM
#11
Senior Member
Devoted Hubber
மஞ்சுளா நவநீதன்
ஒரு சகாப்தத்தின் முடிவு - சிவாஜி கணேசன் மறைவு
சிவாஜி கணேசன் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு என்பதில் சந்தேகம் இல்லை. எந்த சகாப்தம் என்பதைப் புரிந்து கொள்ள முயலுவோம். அவர் வெறும் நடிகர் என்பதற்கு மேலாக திராவிட இயக்கத்தின் நிகழ்கலைக் குறியீடு என்று சொல்ல வேண்டும். ஜெயகாந்தனின் குறுநாவல் 'கை விலங்கு ' 'காவல் தெய்வ 'மாய்ப் படமாக்கப் பட்ட போது மரம் ஏறும் கிராமணி வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்தார். அதைப் பற்றி எழுதிய போது ஜெய காந்தன் குறிப்பிட்டார். 'அவர் கிராமணியாய்ச் சிறப்பாக நடித்தாலும், அவ்வளவு கம்பீரத்தைக் காட்டியிருக்க வேண்டாமோ என்று எனக்குத் தோன்றியது. '. இது சிவாஜி கணேசன் பற்றிய மிக ஆழ்ந்த விமரிசனம். உண்மையில் திராவிட இயக்கம் கட்டுவித்த தமிழ்ப் பழமையைப் புதுப்பிக்கும் போக்கிற்கும், தமிழர் பெருமையைப் புதுப்பிக்கும் போக்கிற்கும் சிவாஜி கணேசனை விட வேறு யாரும் குரல் தந்திருக்க முடியாது. சிம்மக் குரலோன் என்ற பெயர் கூட அர்த்தம் பொதிந்தது தான்.
திராவிட இயக்கம் தமிழின் இயல்பான நளினத்தையும், கவித்துவத்தையும், இசை தோய்ந்த இயல்பையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, வீராவேசம் சேர்ந்த மேடைப் பேச்சுத் தமிழின் பாணியில் ஒற்றைப் பரிமாணம் கொண்ட ஒரு விதத் தமிழைக் கட்டுவிக்க முயன்றது. இந்த வகைத் தமிழின் மிகச் சிறப்பான வெளியீட்டாளராக சிவாஜி கணேசன் திகழ்ந்தார்.
ஹிட்லர் தம்முடைய ஜெர்மானியச் சிறப்புப் பிரசாரத்திற்கு இசைவாய் ரிச்சர்ட் வாக்னரின் வீரதீர இசையை மேற்கொண்டதாய்ச் சொல்வார்கள். 'பராசக்தி ' தொடங்கி சிவாஜியின் குரல் திராவிட இயக்கத்தின் பெருங்குரலின் குறியீடாய் உரக்க முழங்கிக் கொண்டே இருந்தது. வறுமை வாய்ப்பட்ட ஒரு இளைஞனின் கோபம் பெருத்த குரலில் 'பராசக்தி 'யில் வெளிப்பட்டதே தவிர, இறைஞ்சுதல் வெளிப் படவில்லை. அரசியல் ரீதியாய் சிவாஜி கணேசன் திராவிட இயக்கத்தை விட்டு நகர்ந்ததாய் ஒரு தோற்றம் கிடைத்தாலும் அவர் திராவிட இயக்கத்தின் குறியீடாய்த் தான் கடைசி வரையில் இருந்தார். இயல்பாகவே கம்பீரத்தைக் கோரிய கதாபாத்திரங்களை அவர் மேற்கொண்ட போது அவருடைய நடிப்பு மிக மிக உயர் தரத்தில் இருந்தது. 'முதல் மரியாதை ', 'தேவர் மகன் ', 'தங்கப் பதக்கம் ', 'தில்லானா மோகனாம்பாள் ' போன்ற படங்கள் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள். அவருடைய இயல்பான நடிப்பு வீச்சை கம்பீரத்திற்குச் சுருக்கி விட்டது திராவிட இயக்கத்தின் பாதிப்புக்காளான தமிழ்த் திரையுலகம்.
இந்தப் போக்கை மீறியும் 'நவராத்திரி 'யில் தொழு நோயாளியாகவும், 'திருவருட் செல்வரி 'ல் அப்பூதி அடிகளாகவும் அவர் நடித்தது விதி விலக்கு. 'வசந்த மாளிகை 'யில் துயரமும் கழிவிரக்கமும் ஏன் வெளிப்படவில்லை ? 'ராஜ ராஜ சோழனி 'ல் ராஜ ராஜ சோழனின் போராட்டங்களும் தடுமாற்றங்களும் ஏன் வெளிப்படவில்லை என்று நாம் கேட்டுக் கொண்டால் இது தான் விடையாகும்.
சிவாஜி கணேசனும் , எம் ஜி ஆரும் எதிரிடையானவர்கள் என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. சமூக தளத்தில் திராவிடக் கருத்தியலின் இரு முக்கியமான சரடுகளைப் பிரதிநிதித்துவப் படுத்தியதன் மூலம் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முழுமை செய்ததாகவே கொள்ள வேண்டும். தமிழ் இனத்தின் கம்பீரத்தினை, தமிழ் இனம் எட்ட வேண்டும் என்று திராவிட இயக்கங்கள் இலக்குப் படுத்தின பெருமிதத்தை சிவாஜி கணேசன் காட்டியது போல, தமிழ் இனத்தின் கதாநாயகப் பூசனைக்கு - ஆளுயர மாலை, இரண்டு மாடிக்கட்டடம் அளவிற்குக் கட்அவுட்- எம் ஜி ஆர் பாத்திரமானார். தமிழ் இனம் தம் பெருமையை சிவாஜி கணேசனாய் இனம் கண்டு கொண்டது. தம் வழிபாட்டுக்கு எம் ஜி ஆரை மேற்கொண்டது.
தமிழினத்தின் வழிபாட்டு உணர்வே இறுதியில் வென்றது என்பது பற்றி யாரும் சமூகவியல் ஆய்வு மேற்கொண்டால் நல்லது.
-
1st May 2011 11:54 AM
# ADS
Circuit advertisement
Bookmarks