இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - சம்பவம் 2
----------------------------------------------------------------------------------------------------------------------
இந்த பழமொழிக்கேற்ப நமது பொன்மனச்செம்மல் வாழ்வில் நடந்த மற்றொரு சுவையான சம்பவம்
அமெரிக்க இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன் அவர்களுக்கு, தான் இயக்கிய சில படங்களில் துணை நடிகராக நடித்த நமது மக்கள் திலகத்தை, ஜுபிடர் நிறுவன அதிபர் சோமு அவர்கள் "மந்திரி குமாரி" திரைப்படத்துக்காக கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தது பிடிக்க்காமல் அதை ஒரு கவுரவ குறைச்சலாக கருதினார்
அதனால் படபிடிப்பை வேண்டா வெறுப்பாக தொடங்கி நமது பொன்மனசெம்மலுக்கு எந்த அளவுக்கு தொந்தரவு கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு அவரை இம்சித்து, புண்படுத்தி, படத்தில் நடிக்க விடாமல் செய்ய பலவாறு இன்னல்கள் தந்தார்.
ஒரு நாள் சேர்வராயன் மலையில், சுடு பாறையில் ஷூட்டிங். எஸ். ஏ. நடராஜனுடன் நமது இதய தெய்வம் எம்.ஜீ.ஆர். அவர்கள் சண்டை போடும் காட்சி. எம்.ஜி ஆர். தன்னுடைய உடல் பளிச்சென்று தெரியும் அளவுக்கு மெல்லிய டாக்கா மஸ்லின் துணியில் சட்டை அணிந்த்திருந்தார் அந்த அனல் கொதிக்கும் சுடு பாறையில் "டாப் லைட்" வெளிச்சத்தில் எம்.ஜி.ஆரை மட்ட மல்லாக்க படுக்கச் சொல்லி, கேடயத்தை கொண்டு எஸ். ஏ. நடராஜனின் தாக்குதலை தடுக்குமாறு சொல்கிறார் டங்கன்.
சுடு பாறையில் மஸ்லின் துணியில் பட்ட வேர்வையுடன் உடல் புண்ணாகும் நிலை ஏற்பட்ட போதும் வேதனை தாங்க முடியாத நிலையிலும் டங்கன் சொன்னபடி செய்கிறார்.
காட்சி சரியாக வரவில்லை. என்று சொல்லியும், "மானிட்டர்" என்று சொல்லியும் அந்த சுடு பாறையில் எம்.ஜி.ஆரை புரட்டி வதைக்கிறார் டங்கன்.
வேண்டுமென்றே, எம்.ஜி.ஆரை வதைக்கின்ற செயலை யூனிட்டே வேதனையுடன் வேடிக்கை பார்க்கிறது. முடிந்தவரை அந்த சுடு பாறையில் எம்.ஜி. ஆரை வாட்டியெடுத்த பிறகு, படப்பிடிப்பை முடிக்கிறார் டங்கன்.
காட்சி முடிந்தவுடன், எம். ஜி. ஆர். எழுந்திருக்க முனைகிறார் அவரால் எழ முடியவில்லை. அந்த அளவிற்கு அவர் அணிந்திருந்த மஸ்லின் துணி சுடு பாறையில் இளகி உடலோடு உடல் ஒட்டிக் கொண்டது.
இந்த நிலையினை கண்ட சோமு பதறியடித்துக்கொண்டு தேங்காய் எண்ணையை பாட்டிலில் கொண்டு வருமாறு உதவியாளரிடம் சொல்லியவர், தானே எம்.ஜி.ஆர். உடல் மற்றும் பாறையில் எண்ணையை தடவி கொஞ்சம் கொஞ்சமாக துணியை உடலிலிருந்து பிரித்தெடுக்கிறார். துணி பட்ட இடத்தில் ஆங்காங்கே புண்ணாகியிருந்தது. வேதனை தாங்காது நமது வரலாற்று நாயகன் கண்ணீர் வடிக்கிறார்.
அதைகண்டு தானும் கண்ணீர் விட்ட சோமு அவர்கள், எம்.ஜி.ஆரின் தோளில் தட்டிக் கொடுத்துக் கொண்டே, "ராமச்சந்திரா ! கவலைப்படாதே. உன் உடலில் ஏற்பட்ட காயம் என்னாலேயே தாங்கி கொள்ள முடியவில்லை. இருந்தாலும் எல்லாம் ஒரு நன்மைக்கே. இன்று உன்னை காயப்படுத்தியவர்கள் எல்லாம் மனம் நொந்து உன் வாசலுக்கு வந்து கை கட்டி நிற்கும் காலம் கண்டிப்பாக வரும்" என்று கூறினார்.
ஜுபிடர் சோமு அவர்கள் அன்று தீர்க்கதரிசனமாக கூறிய வார்த்தைகள் 30 ஆண்டுகள் பின் நடந்தது. 1951ல் எம்.ஜி.ஆரை வதக்கி எடுத்த டங்கன் 1981ம் ஆண்டில், புரட்சி தலைவர் தமிழக முதல்வராக கோட்டையில் இருந்த சமயத்தில், வாடிய நிலையில் அவரது உதவியாளரிடம் முதல்வரை சந்திக்க வேண்டும் என்றும், உதவி கோரியும், தனது குறிப்புக்களை அவரிடம் அளிக்கிறார்.
உதவியாளரும், எல்லிஸ் ஆர். டங்கன் வந்திருக்கும் விஷயத்தை நம் மக்கள் தலைவரிடம் சொல்லுகிறார்.. தன்னை வாட்டி வதைத்தவர் வந்துள்ளார் - அவரை பார்க்க வேண்டாம் என்று எண்ணாமல், ஒரு காலத்தில் "வானளாவிய புகழுடன் வாழ்வாங்கு வாழ்ந்தவர்" நம்மை தேடி வந்துள்ளாரே, என்று நினைத்து, அவரை உடனே உள்ளே வரச் சொல்லுங்கள் என்றவர், தனது இருக்கையிலிருந்து எழுந்து தனது முதல்வர் அலுவலக அறையை விட்டு வெளியில் வந்து டங்கனை கட்டி தழுவி அறைக்குள் அழைத்து சென்று அமரச் செய்கிறார். தனக்கே உரிய உபசரிப்புடன் பழச்சாற்றினை அன்புடன் பருக கொடுத்து, தெம்பினை ஏற்படுத்திய நம் ஏழைப் பங்காளன், அவரின் நலமெல்லாம் விசாரித்த பின், "என்னால் உங்களுக்கு எதாவது காரியம் ஆக வேண்டுமா?" என்று கேட்டார். நமது புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். அவர்கள் அவ்வாறு கேட்டது, கூனி குறுகிப்போன டங்கனின் காதில் பழுக்க காய்ச்சிய கம்பியாய் நுழைகிறது.
"முதல்வரே! நான் தங்களுக்கு செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து, இந்த பாவியை இவ்வளவு தூரம் உபச்சாரம் செய்ததோடு, வேறு என்ன உதவி வேண்டும் என்று வேறு கேட்கிறீரே ! என அழுதார், டங்கன்.
நமது மனிதப்புனிதர் எம்.ஜி.ஆர். அவர்கள், அழாதீர் ! என்ன வேண்டும் ? என வினவினார்.
சொல்லவே வெட்கமாயிருக்கிறது. இருந்தாலும் வேறு வழி தெரியாமல் தான், தங்களை நாடி வந்திருக்கிறேன். என்று கண்ணீர் மல்க கூறினார்.
"இப்பொழுது நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும், எதையும் தயங்காமல் சொல்லுங்கள்"
இலண்டனில் வசதியாய் வாழ்ந்த நான், இப்போது வறுமை நிலைக்கு வந்து விட்டேன். எல்லா சொத்துக்களையும் விற்று விட்டேன். இனி இருப்பது ஊட்டியில் ஒரே ஒரு எஸ்டேட்தான். அதையாவது விற்கலாம் என்றால் அதற்கும் வழியில்லாமல், சில சட்ட சிக்கல்கள் இருக்கிறது. அதனால் தான் உங்களை தேடி வந்தேன்.
"அதை கேட்ட எம்.ஜி.ஆர். " அரை மணி நேரம் பொறுத்திருங்கள், ஆவன செய்கிறேன், என்றவர், பக்கத்திலிருந்த அறையில் தங்குமாறு ஏற்பாடு செய்கிறார்.
'டங்கன் அடுத்த அறையிலிருந்த போது அரை மணி நேரத்தில் எம்.ஜி.ஆரிடமிருந்து அழைப்பு வந்தது. அறைக்கு வந்த டங்கனிடம், "இந்த சூட்கேசில் உங்களுக்குத் தேவையான பணம் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் உங்கள்
எஸ்டேட்டேயையும் விற்பதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லியவர் மீண்டும் அறை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார் நமது மனித நேய பண்பாளர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
இன்னா செய்தாருக்கு இனியவை செய்து விட்டாரே என்று வராந்தாவில் நடந்தவாறே, முதல்வர் எம்.ஜி.ஆரின் அறையை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே ஆனந்தக் கண்ணீருடன் சென்றார் எல்லிஸ். ஆர். டங்கன்.

(எல்லிஸ் ஆர். டங்கன்)
================================================== ================================================== ==========
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
Bookmarks