Results 1 to 10 of 138

Thread: Sivaji Ganesan School of Acting

Threaded View

  1. #38
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தேவர் மகன்- 1992 -தொடர்ச்சி

    என் குழந்தைகளிடத்தில் எனக்கு ஒரு பலவீனம் உண்டு. அவர்களுக்கு நான் அதிகமாக செல்லம் கொடுப்பதைத் தான் பார்க்கிறீர்களே....செவிசாய்க்க வேண்டிய நேரத்தில் அவர்கள் பேசுகிறார்கள். (I have a sentimental weakness for my children, and I spoil them as you can see; they talk when they should listen. )

    இது காட்ஃபாதரில் பெரியவர், விடோ கொர்லியோன், பேசும் மிக அழகான வசனம். தவறு செய்த மகன் சான்டினோவை வெளியாட்கள் முன்னிலையில் கடிந்து கொள்ளும் இடத்தில் வரும் வசனம். அம்மனிதரின் கோபம் அவர் ஸ்டைலை இழக்கச் செய்யவில்லை. வெளி மனிதர்கள் சென்றபின் "உன் மூளை பழுதாகிவிட்டதா ?" என்றே திட்டுவார். ஆனாலும் மிதமாகவே.

    பெரிய தேவர் அப்படி அல்ல. பெரிய தேவருக்கு சக்தி வந்ததிலிருந்தே ஏமாற்றம் தான். தெலுங்குப் பெண்தோழி, நகரத்துக்கு புலம்பெயர்ந்துவிட அவன் திட்டம் என்று. ஆனால் ஊரில் சக்தியால் பிரச்சனை கிளம்புகிறபோது கோபம்-ஏமாற்றத்துடன் சேர்ந்துகொள்கிறது.

    அழைக்கப்பட்ட சக்தி அவருக்கு முன் நிற்காமல் பக்கவாட்டில் நின்று, அப்பாவிக்கு பின் நிற்கும். கணக்குப்பிள்ளையிடம் "எதற்காக அழைத்திருக்கிறார்" என்று சைகையில் கேட்டுக்கொண்டிருப்பான். பெரிய தேவர் ஒரு சாய்வு நாற்காலியில் சாயாமல் அமர்ந்திருப்பார். கைபனியனுக்குமேல் துண்டு போர்த்தி. "முன்னால் வா" என்று வலது கையால் சைகை செய்வார், எதன் மீதும் குறிப்பாக பார்வையை செலுத்தாமல்.

    அவர் ஏன் கூப்பிட்டார் ? கோபமாக இருக்கிறா ? ஏன் ? இதுவரை நடந்தவற்றில் ஏதாவது அவரை கோபப்படுத்தியதா ? இவை சக்தி மனதில் மட்டும் இருக்கும் கேள்விகள் அல்ல. பார்வையாளர்கள் மனத்திலும். இந்த காட்சியில் ஓரிரு காமிரா கோணங்கள் இதை உணர்த்தும் வகையில் சக்தியின் நோக்கில் இருக்கும் (point of view shots)

    அதனால் பெரிய தேவர் மீதே முழுக்கவனமும். இங்கு அவர் கதைமாந்தர் மட்டுமல்ல கிட்டத்தட்ட கதைசொல்லி.

    "ஏன் போனீய ?" என்று கேட்கும்போது பார்வை நேராக யாருமில்லாத இடத்தில் பாயும்.

    "கோவில் கும்பிடத்தானேய்யா" என்று பொறுப்பில்லத பதில் வந்த மாத்திரத்தில் ("ஐயோ" என்பதுபோல வாயை தட்டிக் கொள்ளும் கணக்குப்பிள்ளை) பெரிய தேவர் முதல் முறையாக மகனைப் பார்த்து "தர்க்கம் பண்றீய ?" என்பார்.

    பானுவை காரணம் சொல்ல முயன்று, அது தவறை விட மோசமான காரணம் என்று சக்தி உணர்வதற்குள்
    "பானு....பானு கோவில் பாக்கணும்னா பூட்டை உடைக்கணுமா ?" என்று கேட்டுவிட்டு மகனை கூர்மையாகப் பார்ப்பார். அவன் கூறும் பதிலை அளந்துகொண்டு. ஒரு தலைவனுக்கான பொறுப்பின் சுவடே இல்லாமல் அவன் இசக்கியை பழி சொல்ல.....

    "ஓஹோ அப்பொ உங்க தலைமையில இசக்கி பூட்டை உடைச்சிறுக்கார். அப்பிடித்தானே ?" என்ற கேள்வியில் கடுங்கோபத்திலும் அவரிடமிருந்து பிரிக்கமுடியாதபடி கலந்திருக்கும் கிண்டல். சுட்டெரிக்கும் பார்வையில் தெளிவாகத் தெரியும் ஏமாற்றம். கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டதுபோலக் கூட இருக்கும்.

    சக்தி:"என் தப்புத்தேன் யா"
    கவனிக்கப்படவேண்டிய வசனம், பின்னர் ஒரு முறை படத்தில் வரும். அப்போது தான் சக்தி அதை மனமுணர்ந்து சொல்வான். அப்போது தான் அவன் தலைவன் ஆனது - சொக்காய் மாற்றிக்கொண்ட போது அல்ல.

    இம்முறை இது இப்போதைய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்லப்படும் வாய்வார்த்தை. அதை நன்கு உணர்ந்த பெரிய தேவர்:
    "அப்பா ...ஒத்துக்கிட்டாகப்பா....உங்க தப்பில்லையா...என் தப்பு..
    .....எலேய் அந்தப் பயகள எந்த வம்பு தும்புக்கும் போகாம இருக்கச் சொல்லு.........பஞ்சாயத்தில வேணா நான் மன்னிப்பு கேட்டுக்கிர்றேன்...என்ன பண்ண முடியும்"

    முதல் பாதியில் உத்தரவு பிறப்பிக்கும் தலைவனின் தொனி. இரண்டாவது பாதியில், வரவிருக்கும் அவமானத்தை இப்போதே அநுபவிப்பதுபோல கூனிக்குறுகும் தொனியும் உடல்மொழியும் (''என்ன செய்ய முடியும்' என்பது கையே பேசிவிடும்).

    "எசக்கி மன்னிப்பு கேட்கட்டும் ? எங்கே எசக்கி ?" என்று , நமக்குத் தெரிந்த அளவே தெரிந்த சக்தி கேட்க,

    "எலே....ஒண்ணும் தெரியாம திர்ரவென் !" என்று வெடிப்பார்.

    பானுவின் வருகையால் ஒரு பொய்யான இடைப்பட்ட அமைதி நிலவும். சக்தி கணக்குப்பிள்ளை பூசினாற்போல சொல்லும் அறிவுரையை எதிர்த்து வாதிட "அவுக சொல்றாஹல்ல ?.....கேட்டா கௌரவம் குறைஞ்சிரும் உங்களுக்கு..." என்றுவிட்டு...."போங்க" என்பார்.

    பானு வந்த நொடி அமைதிக்குப் பிறகும் அவள் குரல் சன்னமாகவே ஒலிக்கும். மறுமுறை சொல்லும்படி ஆகும். இம்முறை காலில் விழும்போதும் கண்டுகொள்ளவில்லை தான். ஆனால் இது முற்றிலும் வேறு மாதிரி தொனிக்கும் நிராகரிப்பு.

    உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு ஆதங்கத்தையும், கடுஞ்சினத்தையும், நெஞ்சறுக்கும் ஏமாற்றத்தையும் உணர்வடிவத்தில் (palpable) ஒரு நடிப்பு நான் பார்த்ததில்லை.


    பெரிய தேவர் ஒரே ஒரு முறை தான் மூக்குக்கண்ணாடி அணிந்து காணப்படுகிறார். 'போற்றிப் பாடடி' பாடலில். அவ்ர் இறந்தபின் அந்த கண்ணாடி காண்பிக்கப்படும். சக்தி உடைமாற்றிக்கொண்டு வரும் இடைவேளிக் காட்சியில். பெரியாருடன் பெரிய தேவர் இருக்கும் புகைப்படத்திற்கு முன் ஒரு பகவத் கீதை (!). அதன் மேல் அவர் கண்ணாடி. ஒரே படக்கட்டதுள் அவர் பார்வையைப் பற்றி சொல்கிறார்கள்.

    வெத வெதச்சதும் பழம் ச்சாப்டரணும்னு நெனைக்க முடியுமோ....இன்னிக்கு நான் வெதைக்கிறேன்.....நாளைக்கு நீ சாப்டுவ....அப்புறம் உன் மயென் ச்சப்டுவியான்....அப்புறம் அவன் மயென் ச்சப்டுவியான்.....இதெல்லாம் இருந்து பார்க்க நான் இருக்கமாட்டேய்ன்....ஆனா வெத நான் போட்டது....இதெல்லாம் என்ன பெருமையா..ஹான் ? கடமை.....ஒவ்வொருத்தன் கடமை.

    கீதையை மிக மேலோட்டமாக (என்னைப்போல!) படித்தவர்களுக்குக் கூட மேற்சொன்ன வார்த்தைகளின் மூலம் கீதையில் உயர்த்திச் சொல்லப்படும் 'பலனை எதிர்பாராத கடமையாற்றல்' என்று புலப்படும். இதை சமூக சிந்தனையுடன் எளிமையாக சொல்ல முடிந்ததுதான் பெரியாரின் தாக்கமோ என்றெல்லாம் யோசிக்கவைத்த அந்த ஒரு படக்கட்டம் எழுத்தாளர்-இயக்குனருக்கு வெற்றி.

    உபதேசம் சினிமாவின் மொழிக்கு அப்பார்ப்பட்டது. ஆனால் உபதேசக் காட்சிகள் தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கின்றான. உணர்ச்சியும், அறிவும் ஒன்றுபட இயங்கும் காட்சி பெரிய தேவரும் -சக்தியும் மழைக்கு இடையில் பேசும் காட்சி.

    பிராண்டோ வசனத்தை முணுமுணுப்பவர் என்று சொன்னபோது, 'நிஜத்தில் யாரும் முழு சொற்றொடர்களை, ஒரே தொனியிலோ, அதன் பொருளுக்கு ஏற்ற ஏற்ற-இறக்கத்துடன் பேசுவதில்லை' என்றாராம். மேடையில் தான் முழங்கவேண்டிய நிர்பந்தங்கள். சினிமா முணுமுணுப்பையும் உணர வல்லது.

    கோவில் கும்புடத்தான்னு பேசுநீயளே...இப்பொ இந்த ஊரோட நிலைமை உங்களுக்குப் புரிஞ்சதா ?

    இதைச் சொல்லும் போது அந்த நாற்காலியில் புரண்டு படுப்பார் பெரியதேவர். அந்த அசைவிற்குத் தோதாக வசன உச்சரிப்பின் தொனி மாறும். இதை நேரொலியில் பதிவுசெய்திருந்தார்கள் என்றால் (live-recording) இது மிக நுணுக்கமான கவனிப்பின் வெளிப்பாடு எனலாம். ஒருவேளை இது பின்னணியில் தனியாக பேசப்பட்டது (dubbing) என்றால் பிரமிப்பு ஏற்படுகிறது.

    சக்தி ஊரை விட்டுப் போகிறேன் என்றதும் சாய்வில் இருந்து உடனே முன்னால் வருவார். அதிர்ச்சியை மறைக்க ஒரு பொய்ச்சிரிப்பு. பொறுப்பு என்பது தான் இல்லை, பொறுப்பிற்கு அடித்தளமாக இருக்கும் வீரம் இருக்கிறதா என்பதை கிளரும் வகையில், சக்தியை கோழை என்பார். வீரத்தின் அடிக்கோல்கள் பிழையாக இருக்கிறதாக, வெளிநாட்டில் படித்த சக்தி சற்று காட்டமாகவே சொல்வான்.

    "...இந்த காட்டுமிராண்டிப்பய கூட்டத்துல் ங்கொப்பனும் ஒருத்தந்தேய்ங்கறத மறந்துறாத" என்று சொல்வார் நெற்றியைத் தடவியபடி.

    படத்தின் சாரமான வசனம் அதன்பிறகு தான்: "அப்படிப்பார்த்தா நானும் ஒருத்தந்தான்யா......ஆனா அத நெனச்சுப் பெருமப்பட முடியல". இதைத் தொடர்ந்தே உபதேசம் துவங்குகிறது. மரணத்தை வழக்கமாக வயசாளிகள் போல அல்லாமல், மிக யதார்த்தமாக எதிர்நோக்குவார் (போ....செத்துப்போ.....எல்லா பயபுள்ளையும் ஒரு நாளைக்கு போக வேண்டியது தேன்). கொஞ்சம் கடுமையாக பேசிவிட்டோமோ என்பதுபோல அடுத்த வரி சிறுபிள்ளையுடன் பேசுவதுபோன்ற எளிமையோடும், கனிவான தொனியிலும் வ்வரும் (வாழறது முக்கியந்தான்....இல்லைங்கல...).

    கனிவும், பகுத்தறியும் பேச்சும் சக்தியின் முரட்டுத்தனமான முன்தீர்மானத்துடன் மோதி மோதி தோற்பதைக் கண்டு சட்டையை கொத்தாக பிடித்து முறைக்கும் நிலை வரும். அது அத்துமீறலா, இதுவரை மரியாதையுடன் நடத்தியதால் அப்படித் தோன்றுகிறதா என்ற குழப்பமும்-கோபமும் கலந்த பிரமாதமான பாவனை கமல் முகத்தில்.

    அத்துமீறல்,உரிமை என்பது இவ்வுறவில் வயது சார்ந்தது என்பது ஒரு வலி கலந்த உண்மை. அந்தக் கணத்தில் அதை உணர்ந்துவிட்டதால் : "தாடியும், மீசையும் வச்சுகிட்டு...ஐயாவை நெஞ்சுநிமித்தி பேசுற வயசுல்ல" என்று காட்சியில் முதல்முறை தளர்வார் பெரிய தேவர்.

    உணர்ச்சி கூட சக்தியிடம் தோற்க கணக்குப்பிள்ளையை பொறுமையில்லாமல் கத்திக் கூப்பிடுவார்: "ஏய்...யார்ராவென்....எங்க கணக்குப்புள்ள"

    "டிக்கெட்ட ஒரு பத்து நாள் சென்டு எடுக்கட்டுங்களா ?"சக்தி, "ஏனய்யா இக்கட்டில் மாட்டி விடுகிறீர்" என்று சமிக்ஞை செய்வதை பார்த்துவிடும் பெரிய தேவர் "ஏம்ப்பு பத்து நாள் இருக்க மாட்டீயளா ?" என்று இருக்கமாக கேட்டுவிட்டு, தானே பதிலாக கையசைத்து கணக்குப்பிள்ளையை அனுப்புவார்.

    அனுப்பிவிட்டு சக்தியை அருகில் அழைத்து தன் மகனை அருகில் வைத்துப் பார்க்க விழைவதை நெகிழ்வாகச் சொல்வார். வெளியாள் முன்னிலையில் உக்ரமாக மகனை திட்ட மறுக்கும் டான் விடோ போல அல்லாமல், கணக்குப்பிள்ளையிடமிருந்து தேவர் மறைக்க நினைப்பது தன் மென்மையைத் தான்.

    "உங்களைத் தானே நம்பணும்....வேற யாரு இருக்கா இங்க நம்புறதுக்கு" என்கிறபோது முழுமையாக உடைந்து போன ஒரு பெரிய மனிதனை அவன் உள்பயங்களும் மனதை உருக்குவதைப் போல தெரியும்.

    என் ஞாபகத்தில் இந்தக் காட்சியில் பாத்திரக் கோண படக்கட்டங்கள் மிகக் குறைவு, அல்லது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. குழுவாகப் பாடும் 'ஆ' காரத்தை ஒரு இசைக்கருவி போல் பயன்படுத்தும் மேல்நாட்டு இசை உத்தியை இளையராஜா இந்தப் படத்தில் சில இடங்களில் கையாண்டிருப்பார். இந்தக் காட்சியில் குழு வயலின்களும், கம்பீரமாக ஒலிக்கும் அடிக்கட்டை பேஸ் வாத்தியங்களும் மிகச்சரியான இடங்களில் ஒலித்து (உம். ஊரை விட்டு வெளியே வர பெரிய தேவர் மறுக்கும்போது) காட்சியை மெருகேற்றும்.

    இதற்கு மேல், கிட்டத்தட்ட, பெரிய தேவரை புரிந்துகொள்ளுவதற்கு புதுத் தகவல்கள் படத்தில் இல்லை எனலாம். பாசம், கோபம், (மிகையான) மான/அவமான மதிப்பீடுகள், தலைமை குணங்கள் என்று எல்லாமே இக்காட்சியில் அடக்கம். இதற்குப் பிறகு நடப்பதெல்லாம் நமக்கு மிக நெருக்கமாகத் தெரிந்தவருக்கு நடப்பவை. கதையின் போக்குக்கும், பார்வையாளர்கள் பெரியவரின் உள்பயங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்வதற்கும் இந்தத் தன்னிலை-விளக்கக் காட்சி மிக முக்கியமானது.

    பல உணர்ச்சி நிலைகளும், நிலைத்தடுமாற்றங்களும் காண்பிக்கப்படும் மிகக் கடினமானக் காட்சி. நன்கு எழுதப்பட்டிருந்தாலும் வெகு சுலபமாக நம் சினிமாவின் வழக்கமான உணர்ச்சிச் சுழலில் சிக்கி ஒரு சாதாரண மிகையுணர்ச்சி/உபதேசக் காட்சியாக மாறிய்யிருக்கும்.மிக இயல்பாக வெளிவந்து மக்களை கவர்ந்திழுத்தற்கு பெருங்காரணம் சிவாஜியின் அசாத்தியத் திறமை தான்.

    ---To be continued.
    Last edited by Gopal.s; 30th September 2013 at 10:29 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •