-
20th October 2013, 08:56 PM
#11
Senior Member
Diamond Hubber
இயக்குனர் வரிசை.
பி.மாதவன் பி.ஏ.
என்னுடைய நெ.1 இயக்குனர். காரணம் நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமா? 'ஞான ஒளி' யை நம்முள் பாய்ச்சிய, மா தவம் செய்து நாம் பெற்ற மாதவன் ஆயிற்றே!
அன்னை இல்லத்து நாயகனை வைத்து முதன் முதலில் 'அன்னை இல்லம்' இயக்கி வெற்றிக் கனியைப் பறிக்க ஆரம்பித்தவர். 'மடி மீது தலை வைத்து படுத்து விடியும் வரை' தூங்க ஆசைப்பட்ட ஜோடிப் புறாக்களைக் காட்டி கார்த்திக் சார் போன்றோரை தூங்க விடாமல் பண்ணிய பெருமைக்குச் சொந்தக்காரர். 'நீலவானம்' படைத்து தேவிகாவை நீண்ட நாட்களுக்கு மறக்க முடியாத பாத்திரப் படைப்பைக் கொடுத்தவர். ஓஹோஹோ....ஓடும் எண்ணங்களே!
வெரைட்டி வேந்தன். பல்வேறு வேடங்களை நடிக மன்னனுக்குத் தந்து அவரை பட்டை உரித்து வேலை வாங்கியவர். நடிகர் திலகத்தை சக்கையாய் சாறாகப் பிழிந்தது மூன்று பேர். ஒன்று பீம்சிங் அய்யா. இரண்டாவது ஏ.சி.டி. மூன்றாவது இந்த மாமனிதர்.
சொந்த பட கம்பனி அருண் பிரசாத் மூவீஸ். தயாரிப்பு அவரே! பாலமுருகன், மாதவன், பி.என்.சுந்தரம் கூட்டணி என்றால் களேபரம்தான்.
'யாரை நம்பியும் நான் பொறந்தவன் இல்லே.. நடிகர் திலகத்தை மட்டுமே நம்பிப் பிறந்தவன்' என்று 'எங்க ஊர் ராஜா' (அருண் பிரசாத் மூவீஸ்) ஸ்ரீ விஜய ரகுநாத சேதுபதியை இளமையில் இருந்து முதுமை வரை அங்கம் அங்கமாக துடிக்க வைத்த சாதனையாளர்.
அன்னை இல்லத்தை மட்டுமல்ல 'வியட்நாம் வீட்டை'யும் விவரமாகக் கட்டிய மேஸ்திரி.
இரண்டு வீட்டுக்கும் சொந்தக்காரரை மிகவும் கவர்ந்த மனிதர். 'நீ என்னை நம்பிப் பிறந்ததால் நான் உன்னை நம்பி பொறுப்பை ஒப்படைக்கிறேன்' என்று நடிகர் திலகம் இவரிடம் தன் சொந்தப் படங்களின் இயக்கத்தை இன்முகத்துடன் அளித்தார். வியட்நாம் வீட்டில் ரிட்டையர்மென்ட் காட்சியை வைத்து ரிட்டையர்ட் ஆகாமல் நம் நெஞ்சில் உட்கார்ந்தவர். 'எங்க ஊர் ராஜா' வில் அப்பா, மகன் என்று தலைவரை மாறுபட்ட கோணங்களில் காட்டியவர் உலகத் திரையுலகிற்கே பிரஸ்டிஜ் தந்த பத்மநாபனை பசுமரத்தாணி போல எல்லோருடைய உள்மனதிலும் பதிய வைத்தார். 'பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா' வை காட்டிய பாலக்காட்டில்லா மாதவன்.
அப்படியே இப்படி வந்தீர்களென்றால் டமாலென்று தடாலடியாக 'ராமன் எத்தனை ராமனடி' (அருண் பிரசாத் மூவீஸ்) என்று பல ராமன்களைக் காட்டி அசத்திவிடுவார். சி.வி.ஆருக்கு போட்டி போல நடிகர் திலகம் விஜயகுமாரை அழகான மச்சம் வைத்த மன்மதனாகக் காட்டி கொள்ளை அழகால் மனசைக் கொள்ளை கொள்ள வைப்பார்.
ஒரே படத்தில் ஒரே கேரக்டரே பல்வேறு குணாதிசியங்கள் கொண்ட பாத்திரமாக நடிகர் திலகம் பரிமளிப்பதை இவர் இயக்கத்தில் நாம் காணலாம். இது இவருடைய ஸ்பெஷாலிட்டி.
பாருங்கள்...
பிரஸ்டீஜாரை அப்பாவி இளைஞனாக, கண்டிப்பான ஆபீஸ் பொது மேலாளராக, பொறுப்பான குடும்பத் தலைவராக, வேலை ஒய்வு பெற்றபின் வேறு பரிமாணம் கொண்டவராக பல்வேறு உணர்ச்சி வசப்பட்ட நிலைகளில் காண்பிக்க இவரை விட்டால் ஆளில்லையோ?!
ரா.எ.ராமனடியை எடுத்துக் கொள்ளுங்கள். முறுக்கு மாலை ராமன், நொறுக்குத்தீனி ராமன், ஆயா மேல் அன்பு கொண்ட ராமன், காக்கா வலிப்பு ராமன், காதலிக்கும் ராமன், சவால் விடும் ராமன், சம்பாதிக்கும் ராமன், நடிகனாகும் ராமன், அழகனாகும் ராமன், பழி வாங்க வரும் ராமன், காதலில் தோற்று ஏமாறும் ராமன், காதலியை இன்னொருவன் மனைவியாய் பார்த்து பரிதவித்து பரிதாபப்படும் ராமன், (வீர 'சத்ரபதி' சிவாஜி ராமன் வேறு), காதலியின் குழந்தையை தன் மகளாய் வளர்க்கும் ராமன், மகளுக்காக கொலைகாரனாகும் ராமன், ஜெயிலுக்குப் போகும் ராமன் என்று எத்தனை வார்ப்புகள் ஒரே பாத்திரத்தில்! ஆச்சரியமாக இல்லை!
வெறி! வெறி! வெறி! ஒரே படத்தில் நடிகர் திலகத்தின் அத்தனை திறமையையும் காட்டி விட வேண்டும் என்ற கொலை வெறி! அதன் விளைவு?...
கொள்ளை கொள்ளையாய் வெற்றிகள். வெள்ளி விழாக்கள். அருண் பிரசாத்தை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். சிக்கனத்தில் மன்னன். முதலீடு ரொம்ப கம்மி. பிரம்மாண்ட செட்டுக்கள் இருக்காது. கலர்ப்படமும் அவ்வளவாக இருக்காது. கஞ்சப் பேர்வழி. குறைந்த செலவில் நிறைந்த வெண்மை! அதுதான் பெரிய முதலீடு ஒன்று இருக்கிறதே!
நடிகர் திலகம் என்ற முதலீடு.
அந்த முதலையை மட்டுமே மூலதனமாக வைத்து மூச்சு முட்ட சம்பாதித்த புத்திசாலி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். திகட்டாத 'தேனும் பாலும்' என்றும் தந்தவர்.
ஏற்கனவே கொன்னுக்கிட்டுருந்த மனுஷன் 1972 இல் அடிமுடி தெரியாத விஸ்வரூபம் எடுத்தாரே பார்க்கலாம். அடுத்தடுத்து. என்னுடைய 'ஞான ஒளி'. உடனேயே 'பட்டிக்காடா பட்டணமா?'(அருண் பிரசாத் மூவீஸ்)
அதே போலதான். ஒளியில் ஒருத்தருக்கே எத்தனை விதமான பாத்திர சுமைகள்! முன் பாதியில் ஆண்டனியின் பலதரப்பட்ட பரிணாமங்கள், பின் பாதியில் அருணின் அலப்பரைகள். எல்லோர் மனதிலும் 'ஞான ஒளி' ஆழமாய்ப் ஊடுருவியது. ஒருவன் மனதில் மட்டும் ஆலவிருட்சமாய் வேரூன்றியது. அவனிக்கு அவன் ஆண்டனி. (வாசு)தேவனுக்கோ அவன் தேவன். என்னைப் பாருங்கள். ஓநாயையும் குள்ள நரியையும் ஒருங்கே கையாண்டு ஞானத்தால் ஒளியை வெற்றித் திக்குகளில் பரப்பிய என் டைரக்டரை பாருங்கள். ஜேயார் மூவீசை ஜே ஜேவென்று ஜெயமாக்கி ஜோராக்கிய என் இயக்குனரைப் பாருங்கள்.
பட்டிக்காடா பட்டணமா? கருப்பு வெள்ளைப் படங்களில் முறியடிக்கப்படாத, முறியடிக்க முடியாத வசூல் சாதனை. பட்டிக்காட்டில் மட்டுமல்ல. பட்டணத்திலும்தான். சோழவந்தான் மூக்கையன் கொடி சேர,சோழ, பாண்டிய நாட்டிலும் மட்டுமல்ல... எட்டுத் திக்கிலும் பறந்தது. இதிலும் பாருங்கள் முன் பாதியில் கிராமத்து மூக்கையன். பின் பாதியில் நவநாகரீக ஹிப்பி முகேஷ். என்ன ஒரு கையாடல்! என்ன ஒரு இயக்க ஆளுமை!
இந்தக் காலத்தில் சொல்வதென்றால் சொல்லி அடித்த கில்லி. சொல்லாமலும் பல கில்லிகளை அடித்த மாதவன்.
ஒரு ரங்கதுரை ராஜபார்ட்டுக்கு அளித்த மறக்க முடியா வேடங்கள். அனைவரயும் இதயம் கனக்கச் செய்து அனுப்பிய உன்னத இயக்கம். இதிலும் ஒரு மனிதனுக்கு எத்தனை வேடங்கள் தந்து சவால் விட்டார் இயக்குனர்? சளைத்தானா மன்னவன்? நடிப்பால் நம் மனதைத் துளைத்தானே! 'அம்மம்மா! தம்பி என்று நம்பி' இயக்குனர் பொறுப்பை மாதவன் வசம் ஒப்படைத்தாரோ' ராஜபார்ட் ரங்கதுரை'!
விட்டாரா! காவல் துறை அதிகாரிகளின் காவல் தெய்வமாக எஸ்.பி.சௌத்ரியை படைத்து 'தங்கப் பதக்கம்' வாங்கிக் கொடுத்தாரே! ஒரு நடிகர் திலகம், மற்றும் ஒரு விரைப்பு காக்கி உடுப்பு, ஒரு வீடு செட், ஸ்ரீகாந்த், விஜயா, பிரமிளா,வி.கே.ஆர், சோ (அவ்வளவுதான் வேறு எதுவுமே கிடையாது) இதை மட்டும் வைத்து 'தங்கப்பதக்கம்' இயக்கிக் கொடுத்து உலகம் கண்ட வசூல்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டு ஏப்பம் விடச் செய்தாரே!
'வசூல் சக்கரவர்த்தி' நடிகர் திலகம் என்றால் 'வசூல் இயக்குனர்' மாதவனல்லவோ!
பொதுவாகவே இவர் படங்கள் ஜனரஞ்சகமாகவே இருக்கும். கொஞ்சம் கூட போரடிக்காது. ஆனால் நடிகர் திலகத்தின் மீது பெரும்பான்மையான பாரத்தை ஏற்றி வைத்து விடுவார். இவர் படத்தில் ஆதி அந்தம் எல்லாமே நடிகர் திலகம்தான். மாதவன் படம் என்று சொல்வதை விட நடிகர் திலகத்தின் படம் என்று சொல்ல வைப்பார். அதில்தான் அவருக்கும் பெருமை. மினிமம் கியாரண்டி எல்லாம் இல்லை. மேக்ஸிமம் கியாரண்டிதான். அதுவும் வசூல் பிரளயம்தான். கலெக்ஷன் சுனாமிதான்.
நான் இயக்குனர்களின் நடிகன் என்பவர் நடிகர் திலகம். ஆனால் மாதவன் நடிகர் திலகத்தின் இயக்குனர்.
மறுபடி ஒரு மாறுபட்ட இயக்கம். ஆத்திகத்துக்கும், நாத்திகத்துக்கும் நடக்கும் போரட்ட களம். ஜாலியான இயக்கம். வியக்க வைக்கும் கிளைமாக்ஸ். மனிதனை தெய்வமாக்கி நம் தெய்வத்தை நடிகனாக்கி 'மனிதனும் தெய்வமாகலாம்' என்று சொன்ன இயக்குனர்.
'இப்படிக்கூட ஒரு நடிப்பை நடிக்க முடியுமா! என்று வியப்பு மேலிட, நடிப்பு மன்னவனிடம் மறுபடி நாம் நாம் மயங்கி எங்கள் 'மன்னவன் வந்தானடி' என்று சந்தோஷக் கூக்குரலிட படு ஜாலியாக இயக்கி, துட்டுகளை கட்டு கட்டாய் மறுபடியும் ஜேயார் மூவிஸை அள்ளச் செய்த 'மன்னவன் வந்தானடி'. (இதில் கூட பாருங்கள்... முன் பாதியில் கோமாளி மன்னவன்... பின் பாதியில் கோடீஸ்வர சந்திர மோகன்)
'பாட்டும் பரதமும்' (அருண் பிரசாத் மூவீஸ்) கொடுத்து பரமனின் கால் நரம்புகளையும் நடிக்க வைத்து இயக்கிய சாதனை, இதிலும் முன் பாதியில் பிசினஸ்மேன் மற்றும் பரதக் கலைஞன். பின் பாதியில் பரதத் தந்தை, கிடார் சுமந்த மகன்)
தலையில் ரிப்பன் கட்டுடன் படம் முழுக்க மலைகளின் வழியே குதிரை சவாரி செய்து வில்லனைப் பழி வாங்க துடித்த செங்கோடன் கண்ட 'சித்ரா பௌர்ணமி',
தம்மாத்துண்டு மீசை வைத்து தமாஷாக கலகலக்க வைத்த 'ஹிட்லர் உமாநாத்' என்று
அத்தனை உள்ளங்களையும் அள்ளிய எங்கள் மாதவன்.
ஆமாம். இயக்கத்திலும், வெற்றியிலும், வெள்ளி விழாக்கள் தந்ததிலும், எளிமையிலும், அடக்கத்திலும் ஈடு இணையில்லா மாதவன்.
நடிகர் திலத்தின் மனம் கவர்ந்த
மாபெரும் இயக்குனர் மேதை
பி.மாதவன் பி.ஏ.
(மாதவன் அருண் பிரசாத் மூவிஸில் தயாரித்த 'பொண்ணுக்குத் தங்க மனசு' ஒரு வெள்ளி விழாப் படம். நடிகர் விஜயகுமாரை அறிமுகப்படுத்தியவர். (விஜயகுமாருக்கு பி.டி.ரட்சகன் குரல்) சங்கர் சலீம் சைமன், என் கேள்விக்கென்ன பதில்? என்று ரஜனி படங்களையும் இவர் இயக்கியதுண்டு. இயக்கிய சில முக்கிய படங்கள் தெய்வத் தாய், குழந்தைக்காக, மாணிக்கத் தொட்டில், கண்ணே பாப்பா மற்றும் சில சில ஹிந்தி படங்கள்)
Last edited by vasudevan31355; 20th October 2013 at 09:14 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
20th October 2013 08:56 PM
# ADS
Circuit advertisement
Bookmarks