Page 36 of 401 FirstFirst ... 2634353637384686136 ... LastLast
Results 351 to 360 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #351
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    4000 ஆவது சிறப்புப் பதிவு

    ஹிட்லர் உமாநாத் (26.01.1982) ஒரு முழுமை அலசல் (5 பாகங்கள்)

    பாகம் 1



    1982-ஆம் வருடம் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று வெளி வந்த படம்.!? அதற்கு முந்தைய வருடம்

    மோகன புன்னகை
    சத்திய சுந்தரம்
    அமர காவியம்
    கல் தூண்
    லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
    மாடி வீட்டு ஏழை
    கீழ் வானம் சிவக்கும்

    என்று 7 படங்களைத் தந்திருந்தார் நடிகர் திலகம். இதில் டாக்டர் பாலகிருஷ்ணா தயாரித்த 'சத்திய சுந்தரம்', மேஜர் முதலில் இயக்கிய 'கல்தூண்', முக்தாவின் 'கீழ்வானம் சிவக்கும்' மூன்றும் மிகப் பெரிய ஹிட். விஸ்வநாதன் கம்பைன்ஸ் கோபியின் 'அமரகாவியம்', கலைஞரின் 'மாடிவீட்டு ஏழை' இரண்டும் சுமாராகப் போன நிலையில் ஸ்ரீதரின் 'மோகனப் புன்னகை' நம்மை அவ்வளவாக புன்னகைக்க விட வில்லை. புஷ்பாராஜன் (அதான் சார்... நடிகை புஷ்பலதாவும், அவர் கணவர் நடிகர் ஏ.வி.எம்.ராஜனும்) தயாரித்த 'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு' பி,சி சென்டர்களில் வசூலை வாரிக் குவித்தது.

    ஆக நடிகர் திலகத்தின் வெற்றிக்கொடி 1952 இலும் சரி... 1981-இலும் சரி... அதற்குப் பிறகும் சரி... தமிழ்த்திரையுலக வானில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டே இருந்தது. அவரின் வெற்றியோட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது. (அது என்றைக்கு நின்றது?)

    இந்த நிலையில் 'ஹிட்லர் உமாநாத்' வெளிவந்தது. 1981 தீபாவளி வெளியீடாக வந்து வசூல் பிரளயம் நடத்திய டாக்டர் துவாரகநாத்தைத் தொடர்ந்து ('கீழ்வானம் சிவக்கும்' 26.10.1981) கிட்டத்தட்ட 3 மாதங்கள் கழித்து ஹிட்லர் வந்தார்.

    ஹிட்லர் என்றாலே விசேஷம்தானே! 1976 க்குப் பிறகு, அதாவது 'சித்ரா பவுர்ணமி' இயக்கிய பிறகு 5 வருட இடைவெளிக்குப் மேல் இயக்குனர் மாதவன் இயக்கத்தில் வெளிவந்த விசேஷம், அடுத்தது நமது தலைவர் இதுவரை வைக்காத ஹிட்லர் மீசை வைத்து வித்தியாசமான கெட்-அப்பில் நடித்த விஷேசம், மகேந்திரனின் கதைக்கு மௌலி திரைக்கதை அமைத்து வசனம் எழுதிய விசேஷம், PVT புரடக்ஷன்ஸ் ('துணிவே துணை' புகழ்) தயாரிப்பில் நடிகர் திலகம் நடித்த படம் என்று விசேஷம், சுருளிராஜனின் தலைவர் புகழ் பாடும் வில்லுப்பாட்டு என்று சில விசேஷங்கள்.

    சரி! நம் ஹிட்லர் உமாநாத்தின் கதை என்னவென்று பார்க்கலாம்.

    ஊட்டியில் வசிக்கும் உமாநாத் (நடிகர் திலகம்) தன் முறைப்பெண் லட்சுமியை (கே.ஆர்.விஜயா) மணந்து வாழ்க்கையை நடத்த கஷ்டப்பட்டு பல வித கூலி வேலைகள் செய்கிறார். உமாநாத் ஒரு அப்பாவி, அதிக படிப்பறிவில்லாதவர் என்று பலரும் அவரை ஏய்க்கிறார்கள். முட்டாள், கோழை என்று கேலி பேசுகிறார்கள். ஆனால் உமாநாத்திற்கு அதைப் பற்றி கவலைப்படக் கூடத் தெரியாது. உமாநாத்தின் சொத்து அவரது அருமை மனைவியும், அவர் மகளும், (பேபி சாரதாப்ரீதா. பின்னாட்களில் சில படங்களில் கதாநாயகியாகத் தலைகாட்டி பின் காணாமல் போனவர்) அவர் ஹிட்லர் மீசையும் மட்டுமே.

    லட்சுமி ஓரளவிற்குப் படித்த அறிவாளி. சுய கௌரவம் கொண்ட துணிச்சல்காரியும்கூட. கணவனை கேலி பேசும் கூட்டத்தை அலட்சியப்படுத்தி கணவன் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று நினைக்கிறாள். தன் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையிடம் சென்று கணவனுக்காக உதவி கேட்கிறாள். 'முட்டாளை என்னை மீறி மணந்து கொண்டாயே' என்று அவள் தந்தை உதவி செய்ய மறுக்கிறார். தன் கணவனை பெரிய ஆளாக்கித் தீருவேன் என்று லட்சுமி சபதமெடுத்து தன்னுடைய பள்ளி வாத்தியார் (வி.எஸ்.ராகவன்) செய்த உதவி மூலம் கணவனை சென்னைக்கு அழைத்து செல்கிறாள். வாத்தியார் சென்னையில் தன் நண்பன் மானேஜராக வேலை செய்யும் கம்பெனி ஒன்றில் உமாநாத்தை சேர்க்க ஒரு சிபாரிசுக் கடிதத்தையும் லட்சுமியிடம் கொடுத்தனுப்புகிறார்.

    கம்பெனியின் சேர்மன் ஜாபரி (என்.எஸ். ராம்ஜி) ஒரு ஜென்டில்மேன். வேலை தேடி வரும் உமாநாத்தை காக்க வைத்து, அவர் பொறுமையை டெஸ்ட் செய்து, உமாநாத் அதில் வெற்றி பெற்ற பின் அவரை தினக்கூலியாக பணியில் அமர்த்திக் கொள்கிறார். உமாநாத்தும் தன் வேலைகளைப் பொறுப்பாகப் பார்க்கிறார். தன்னுடைய படிப்பறிவின் மூலமும், திறமை மூலமும் கணவன் செய்யும் வேலைகளுக்கு வழிகாட்டியாக செயல்படுகிறாள் லட்சுமி. தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கணவனுக்கு ஊட்டி அவர் நிலையைப் படிப்படியாக உயர வைக்கிறாள் அவள். கம்பெனி பற்றிய விஷயங்களை அக்கறையோடு ஆர்வத்துடன் கற்றுத் தெளிகிறார் உமாநாத்.

    லட்சுமியின் துணையோடு தன் நியாயமான உழைப்பையும் கொடுத்து தினக்கூலியில் இருந்து ஆபீஸ் பியூனாக இருந்த உமாநாத் இப்போது ஹெட் பியூனாகிறார். தன் உண்மையான உழைப்பால் சேர்மன் ஜாபாரியின் அன்புக்குப் பாத்திரமாகிறார் உமாநாத். பின் மற்றவர்கள் பொறாமைப்பட அசிஸ்டன்ட் மானேஜராகவும் பிரமோட் செய்யப்படுகிறார். ஒரு கட்டத்தில் தொழிலாளர் சிலரின் பொறுப்பற்ற தன்மையினால் பேக்டரி இழுத்து மூடப்படும் நிலைக்கு நஷ்டத்தில் தள்ளப்பட, லட்சுமியின் சொல்படி கம்பனியை நஷ்டத்திலிருந்து தான் காப்பாற்றுவதாக சேர்மன் ஜாபரியிடம் கூறுகிறார் உமாநாத். கம்பெனியின் நஷ்டத்திற்கு காரணமானவர்களைப் பற்றியும் எடுத்துரைக்கிறார். சொன்னபடி ராப்பகலாக உழைத்து, மற்றவர்களையும் உழைக்க வைத்து கம்பெனியை நஷ்டத்திலிருந்து காப்பாற்றியும் விடுகிறார். இதனால் அவருக்கு ஒர்க் மானேஜராக பதவி உயர்வு கிட்டுகிறது.

    சுயநலப் பேய்களான தொழிற்சங்க தலைவர்களின் முகமூடியை தொழிலாளர்களிடம் தோலுரித்துக் காட்டுகிறார் உமாநாத். அது மட்டுமல்லாமல் தொழிலார்களின் குறையை அவர்களுடன் நேரிடையாகவே கலந்து பேசி அவர்களுக்குத் தேவையான போனஸ், மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தந்து அவர்களின் நன்மதிப்பையும் பெறுகிறார். இப்போது அவர் மேனஜிங் டைரக்டர்.

    நடப்பு சேர்மன் ஜாபரி ரிடைர்ட் ஆகும் தருணம் வருகிறது. போர்டு ஆப் டைரக்டர்ஸ் முடிவின் படியும், ஜாபாரியின் ஆதரவுடனும் கம்பெனிக்கு சேர்மனாகவே ஆகி விடுகிறார் உமாநாத்.

    இப்போது கம்பெனிதான் உமாநாத். உமாநாத்தான் கம்பெனி. ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் கம்பெனி, பிசினஸ் என்று அதிலேயே மூழ்கி விடுகிறார் உமாநாத். இப்படியே காலங்கள் உருண்டோட மகள் சியாமளா (புதுமுகம் சரோஜா) வளர்ந்து பெரியவளாகிறாள். குடும்பத்தைக் கூட கவனிக்க நேரமில்லாமல் பிசினஸ், பிசினஸ் என்று ஓடிக்கொண்டே இருப்பதால் மகளை கவனிக்க முடியாமல் மகளின் வெறுப்புக்கு ஆளாகிறார். லட்சுமிக்கும் தன் கணவர் முன்னை மாதிரி இல்லையே என்ற பெரிய மனக்குறை.

    ஒய்வு பெற்ற பழைய சேர்மன் ஜாபரி உமாநாத்தைப் பார்க்க ஒருநாள் ஆபீஸ் வருகிறார். தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் குதிரை ரேஸில் விட்டு விட்டு ஒரு வேளை சாப்பாட்டுக்கு திண்டாடுவதாகக் கூறும் அவர் உமாநாத்திடம் கம்பெனியில் தன் மகன் மதுவிற்கு ('கல்தூண்' சதீஷ்) ஒரு வேலை போட்டுத் தருமாறு கேட்கிறார். பொறுப்பற்றுத் திரியும் அவனை நல்வழிப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறார்.

    உமாநாத் அவர் மேல் உள்ள மரியாதையின் காரணமாகவும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது ஜாபாரிதான் என்ற நன்றி உணர்ச்சியின் காரணமாகவும் அவர் மகனுக்கு கடைநிலை ஊழியராக வேலை போட்டுத் தருகிறார். (ஏனென்றால் அவன் பொறுப்பானவனாக வரவேண்டும் என்ற காரணத்திற்காக) ஆனால் மதுவோ திமிர் பிடித்தவன். தன் தந்தையால் முன்னுக்கு வந்த உமாநாத்தின் வளர்ச்சி பொறுக்காமல் உமாநாத்தின் பழைய எதிரிகளுடன் (சத்யராஜ்) கைகோர்த்து யூனியன் லீடராகி, அவருக்கு பிரச்சனைகள் தர ஆரம்பிக்கிறான். அதுமட்டுமல்ல. மது உமாநாத்தின் மகள் சியாமளாவை காதலிக்க அவளும் மதுவை விரும்புகிறாள்.

    குடும்பத்தை கவனிக்க நேரமில்லாத உமாநாத் ஒருமுறை மகள் சியாமளா காலேஜ் முடிந்து லேட்டாக தன்னுடைய தோழியின் அண்ணனுடன் வீட்டுக்கு காரில் வந்து இறங்குவதைப் பார்த்து கண்டிக்கிறார். அவரை எடுத்தெறிந்து பேசும் மகள் தூக்க மாத்திரைகளை எடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறாள். அதைத் தடுக்கும் உமாநாத் மகளின் செய்கை கண்டு நிலை குலைந்து போகிறார்.

    ஆபீஸ் வேலைகள் ஒருபுறம், கணவனின் அன்புக்காக ஏங்கும் மனைவி லட்சுமி ஒருபுறம், அடங்காத மகளின் திமிர்த்தனம் ஒருபுறம், ஆபீஸ் எதிரிகள் ஒருபுறம், தனக்குத் தொல்லை கொடுக்கும் மது ஒருபுறம், சாஞ்சா சாயுற பக்கமே சாயுற செம்மறி ஆட்டுக் கூட்ட, கேட்பார் பேச்சை கேட்கும் தொழிலாளிகள் ஒருபுறம் என்று பல சிக்கல்களுக்கிடையே மாட்டி நிம்மதி இழந்து தவிக்கிறார் உமாநாத். ஆனால் நம்பிக்கையையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் மட்டும் அவர் விடவே இல்லை.

    இறுதியில் உச்சக்கட்டமான அதிர்ச்சி உமாநாத்துக்கு. மகள் சியாமளா உமாநாத்துக்குத் தெரியாமலேயே மதுவை கோவிலில் வைத்து மணந்து கொள்கிறாள். தாய் லட்சுமியும் இந்தத் திருமணத்தில் கலந்து கொள்கிறாள். உமாநாத்துக்கு எல்லை மீறப் போன இந்த விஷயத்தை தெரியப்படுத்த லட்சுமி எவ்வளவோ போராடுகிறாள். ஆனால் சதா ஆபீஸ் வேலையில் மூழ்கியிருக்கும் உமாநாத் இந்த விஷயத்தைக் கேள்விப்பட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார் வேலைப்பளுவின் காரணமாக.

    பின்னர் உமாநாத்துக்கு விஷயம் தெரியவர, கல்யாணத்தை தன்னிச்சையாக முன்னின்று நடத்திய தன் மனைவி லட்சுமியை கடுமையாகக் கோபிக்கிறார். விஷயம் விபரீதமாகப் போனது உமாநாத்திற்கு மட்டுமே தெரியும்.(ஒருமுறை மது தன்னை அவமானப் படுத்தும்போது அவனை அடித்துவிடும் உமாநாத் அவனை ஹாஸ்பிட்டலில் கொண்டு சேர்க்க அவன் வயிற்றில் கட்டி வளர்வது அப்போது டாக்டர்கள் மூலமாக அவருக்குத் தெரிய வரும்) ஆமாம். மது வயிற்றில் ஒரு கட்டி வளர்கிறது. அவன் ஒரு கேன்சர் பேஷன்ட். தன் மகள் கூடிய விரைவில் விதவையாகப் போகும் அவலத்தை நினைத்து மனைவியிடம் கூறிக் கதறுகிறார் உமாநாத். அதனால்தான் அந்த திருமணத்திற்கு தான் சம்மதம் தரவில்லையென்றும் எடுத்துரைக்கிறார் அவர்.

    லட்சுமி இதைக் கேட்டு துடித்துப் போகிறாள். உமாநாத் எல்லாவற்றையும் மறந்து விட்டு, ஆபீஸ் வேலைகளையும் துறந்து விட்டு, மதுவை ஹாஸ்பிட்டலில் சேர்த்து, வெளிநாட்டில் உள்ள புற்றுநோய் சிகிச்சை நிபுணர்களை வரவழைத்து, இரவு,பகல் அவன் கூடவே இருந்து, மதுவை கவனித்து, அவன் உயிரை காப்பாற்றி, தன் மகளுக்கு மாங்கல்ய பலத்தைத் தருகிறார். மதுவும் தன்னை உயிர் பிழைக்க வைத்த உமாநாத்தின் அன்பால் திருந்துகிறான். மகளும் அப்பாவை புரிந்து கொண்டு அன்பு செலுத்துகிறாள்.

    இப்போது இன்னொரு அதிர்ச்சி செய்தி வருகிறது. உமாநாத் கம்பெனிக்காக வாங்கிய புது சரக்குக் கப்பல் சிங்கப்பூரிலிருந்து வரும் போது மூழ்கி விட்டது என்பதுதான் அது.

    இப்போதுதான் பெருத்த அடியிலிருந்து மீண்ட உமாநாத்திற்கு அதற்குள் மேலும் ஒரு அடி. உமாநாத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொள்கிறார். அதைப் பார்த்து மனைவி லட்சுமி பதறுகிறாள். உள்ளே துப்பாக்கி வெடிக்கும் சத்தமும் கேட்கிறது. ஆனால் சிறிது நேரத்தில் கதவு திறக்க உமாநாத் ஹிட்லர் போல இறுதி முடிவெடுக்க தான் ஒன்றும் கோழையில்லை என்று சொல்வதைப் போல ஹிட்லரின் புகைப்படத்தை சுட்டுத் தள்ளி விட்டு வெளியே வருகிறார்.

    கப்பல் மூழ்கியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு கம்பெனியை இழுத்து மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும் என்று தொழிலாலர்களிடையே செய்தி பரவுகிறது. உமாநாத்துக்கு ஏற்பட்ட இந்தப் பேரிடியை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு தொழிலாளர்களைத் தூண்டி விடுகின்றனர் உமாநாத்தின் பழைய விரோதிகள். தொழிலாளிகள் உமாநாத்தை தாக்க வீட்டுக்குக் கிளம்ப, உமாநாத் தான் தொழிலாளிகளுக்காக தன் குடும்பத்தையே மறந்து உழைத்ததை அவர்களுக்கு நினைவு படுத்துகிறார். கம்பெனியின் வளர்ச்சிக்காக தான் பட்ட துன்பங்களைக் கூறுகிறார்.

    கவிழ்ந்து போன கப்பலை தான் வாங்கவில்லை என்றும், கப்பலை வெள்ளோட்டம் பார்த்த பின்தான் அதை வாங்க ஒப்பந்தம் செய்ய இருந்ததாகவும், அதற்குள் கப்பல் மூழ்கி விட்டதால் ஒரு நஷ்டமும் கம்பெனிக்கு இல்லை என்றும் தொழிலாளிகள் வயிற்றில் பால் வார்க்கிறார். உமாநாத்தின் சாதுர்யமான புத்திசாலித்தனத்தைக் கண்டு அனைவரும் வியக்கின்றனர். தொழிலாளர் கூட்டம் மீண்டும் உமாநாத் புகழ் பாடுகிறது. தொழிலாள விரோதிகளை விரட்டுகிறது.

    உமாநாத் ஹிட்லர் போல தைரியமாக தனக்கு வந்த அத்தனை பிரச்சனைகளையும் தன் மனோதிடத்தால் நேர் கொண்டு போராடி அத்தனைகளிலும் வெற்றி வாகை சூடுகிறார். அடால்ப் ஹிட்லர் போல இறுதியில் நம் உமாநாத்திற்குத் தோல்வி இல்லை. ஹிட்லர் போல கொடுங்கோலனும் இல்லை. ஹிட்லர் மீசையை மட்டுமே வைத்த உமாநாத் ஹிட்லரின் குணங்களைக் கொண்டிருக்கவில்லை. ஹிட்லரின் கண்டிப்பு மட்டுமே உமாநாத்திடம் இருந்தது. ஆனால் நல்லது நடக்க மாத்திரமே அது பயன்பட்டது. அதனால் நம் உமாநாத் ஹிட்லரையே வென்றவராகிறார்.

    குடும்பத்தை சரிவர கவனிக்காத மன உறுத்தல் இருந்த உமாநாத் இறுதியாக தன் வாழ்நாளை தன் குடும்பத்தினருடன் கழிக்க முடிவெடுத்து கம்பெனியிலிருந்து ஒய்வு பெறுகிறார். இப்போது பழைய ஊட்டி உமாநாத்தாக அவரைப் பார்க்க முடிகிறது. பாசமுள்ள உமாநாத்தாக அவரை பார்க்க முடிகிறது. நிம்மதியான உமாநாத்தாக அவரை பார்க்க முடிகிறது. சந்தோஷமான உமாநாத்தாக திரும்பவும் தன் மனைவியுடன் ஊட்டிக்கே கலகலப்புடன் திரும்புகிறார் அவர்.

    முடிவு சுபமே!

    இந்த ஹிட்லர் உமாநாத் முன்னேற்றத்திற்கான ஒரு பாடம்.
    Last edited by vasudevan31355; 21st November 2013 at 12:55 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #352
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பாகம் 2

    இனி ஹிட்லர் உமாநாத்தாய் கொடி நாட்டியவர் பற்றி



    அப்பாவி உமாநாத்தாய் ஹிட்லர் மீசை, கழுத்தில் தொங்கும் மப்ளர், கையில் குடை, ஊட்டி கோட் சகிதம் நடிகர் திலகம் ஓஹோ! வெகு வித்தியாசமான பாத்திரம். உருவ அமைப்பும் கூட. படத் தொடக்கத்திலிருந்து இறுதிக் காட்சி வரை நடிப்பில் செய்யும் சாகசங்கள் வழக்கம் போல ஏன் வழக்கத்தை விடவும் அதிகமாக நம்மை ஆச்சர்யத்தில் மூழ்க வைக்கின்றன.

    ஏழை அப்பாவியாய் ஒன்றும் தெரியாமல் அனைவரின் கேலிப் பேச்சுக்கு ஆளாகும் போதும் சரி... மனைவியின் அறிவுரைகளை அடக்கத்துடன் கேட்டு அதன்படி நடக்கும் போதும் சரி... படிப்படியாய் ஆபீஸில் பதவி உயர்வு நிலைகளை சாதுர்யமான புத்திசாலித்தனத்தால் அடையும் போதும் சரி... தன்னை வாழ வைத்த தன் முதலாளியிடம் வைத்திருக்கும் அன்பு கலந்த மரியாதையிலும் சரி... பிரச்னைகளை அழகாக சந்தித்து எதிர் கொள்ளும் போதும் சரி... மகளிடம், மனைவியிடம் கண்டிப்பும், பாசமும் காட்டும் போதும் சரி... தொழிலாளர்களிடையே சுமூகமாக அதே சமயம் கண்டிப்பாக நடந்து கொள்ளும் விதத்திலும் சரி!

    அத்தனை பரிமாணங்களிலும் ஒவ்வொரு காட்சியிலும் வைடூரியம் போல் ஜொலிக்கிறார் நடிகர் திலகம்.

    ஊட்டியில் அவர் வயிற்றுப் பிழைப்புக்காக கூலி வேலைகள் செய்வதும், அதில் கூட சரியாகக் கூலி கொடுக்கப்படாமல் ஏமாற்றப்பட்டு அவர் புலம்புவதும் பரிதாபம்.

    வேலை கேட்டு செல்லும் போது ஆபீஸில் முதலாளி இவரை வேண்டுமென்றே பொறுமைசாலிதானா என்று சோதிக்க வெளியே அமரச் செய்து நாள் முழுக்க காக்க வைக்க, கல்லுளி மங்கன் மாதிரி விடாப்பிடியாக அடுத்தநாள் கூட சேரில் அமர்ந்திருந்து வேலையைப் பெறுவது இந்த ஆள் சாதாரண மனிதர் அல்ல... இவர் உறுதியான தன்னம்பிக்கையால் எதையும் சாதிக்கவல்ல ஹிட்லர் என்பதை ஆரம்பத்திலேயே அழுத்தமாக நமக்கு புரிய வைத்து விடுகிறது.

    தினக்கூலியாக, பியூனாக, ஹெட் பியூனாக, அசிஸ்டன்ட் மேனஜராக, ஒர்க் மேனஜராக, மேனஜிங் டைரக்டராக, கம்பெனியின் சேர்மேனாக ஹிட்லர் படிப்படியாக உழைப்பாலும், அறிவாலும், திறமையாலும் முன்னேறுவது நடிகர் திலகத்தின் அனுபவ முத்திரைகள் மூலம் கன்டின்யூட்டி கெடாமல் கலக்கலாக காட்டப்பட்டு இருக்கிறது.



    தன் மனைவியை சில காலிப்பயல்கள் வம்புக்கிழுத்து கையைப் பிடித்து இழுக்க, அப்பாவி ஹிட்லராக எதுவும் செய்ய இயலாதவராய் 'வேண்டாண்ணா விட்டுடுங்கண்ணா'... என்று கெஞ்சும் போதும், ரோட்டில் போகும் யாரோ ஒரு நல்லவர் இவர் மனைவியைக் காலிப் பயல்களிடமிருந்து காப்பாற்றி 'மனைவியைக் காப்பாற்ற முடியாத நீயெல்லாம் ஒரு மனுஷனா?' என்று மானத்தை வாங்க, கைகளைப் பிசைந்தபடி ஒன்றும் பேச முடியாதவராய் வெட்கித் தலை குனிவதும், பின் இவருடைய கையாலாகாத தனத்தை எண்ணி வீட்டில் மனம் குமுறி மனைவி கொட்டித் தீர்த்தவுடன் தாங்க மாட்டாமல் தன் இயலாமையை நினைத்து, மண்ணெண்ணையை தன் மேலே ஊற்றி கொள்ளிக் கட்டையால் தன்னை எரித்துக் கொள்ள முற்படும்போதும் பரிதாப அலைகளில் நம்மை மூழ்கடித்து விடுகிறார் இந்த நடிப்புக் கடல்.

    அதே சமயம் மனைவியின் அறிவுரையினால் வெகுண்டெழுந்து, அதே காலிகளை மொத்தோ மொத்தென்று மொத்தி துவம்சம் செய்து, மனைவியையும் விளக்குமாறால் விட்டு அவர்களை சாத்தச் சொல்வது வீரமான விவேகம்.

    முதலாளியின் மனதை தன் அறிவால் கொஞ்சம் கொஞ்சமாக கவர் செய்து அவர் மனதில் மட்டுமல்ல நம் மனதிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்து விடுவார். முதலாளியின் உதவியாளர் முதலாளிக்குத் தெரியாமல் வெளியே போய்விட, உள்ளே போர்டு மீட்டிங் நடக்கும் போது சேர்மன் சில பைல்களை மேனேஜரை எடுத்து வரச் சொல்ல, மேனேஜர் இல்லாததால் இவர் மனைவி சொல்லித்தந்தபடி பைல்களை நம்பர் போட்டு மனப்பாடம் செய்து அதன்படி கொண்டு சென்று கொடுப்பது அருமை! பின் மீட்டிங் முடிந்து வரும் முதலாளி மானேஜருக்குப் பதிலாக ஹிட்லர்தான் பைலைக் கொண்டு வந்தார் என்று கண்டு பிடித்துவிட "எல்லாமே என் சம்சாரம் லட்சுமிதாங்க சொல்லிக் கொடுத்துச்சி" என்று முதலாளி திட்டுவாரோ என்னவோ என்று பயந்து அழுகையின் நுனிக்கு வருவது இன்னும் அருமை.

    டைம் கிடைக்கும் போதெல்லாம் மனைவி விஜயாவிடம் "நான் free" என்று அசடு வழியச் சொல்லி விட்டு படுக்கையறைக்குள் நுழைவது "இதுவா அப்பாவி.... காரிய அப்பாவி" என்று நம்மை நினைக்க வைக்கும்.

    ஹெட் பியூனாக இருந்தவர் திடீரென்று ஒரு நாள் அசிஸ்டன்ட் மேனேஜர் சத்யராஜின் சீட்டில் அமர்ந்து கொள்ள, ஆபீஸ் ஊழியர்கள் அனைவரும் இவரை லூஸ் என்று திட்டி எழுந்திருக்க சொல்ல, ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் அமர்ந்திருக்கும் பிடிவாதத்தனம் அமர்க்களம். பின் முதலாளி வந்து 'இனி உமாநாத்தான் அசிஸ்டன்ட் மேனேஜர்' என்று அனைவரிடமும் ஊர்ஜிதப்படுத்தி சென்றவுடன் முதலாளி இவருக்கு தரும் சலுகைகளை பொறுக்கமாட்டாமல் ஆபீஸ் சிப்பந்திகள் 'முதலாளி ஒழிக' என்று கோஷம் போட, அதுவரை பொறுமையாய் இருந்தவர் அவர்களிடம் சீறுவாறே பார்க்கலாம் ஒரு சீறு.

    ("மரியாதையா எல்லாரும் போய் உங்க சீட்ல உக்காருங்க... சலசலப்பு கேட்டுச்சு அறுத்துருவேன் எல்லாரையும். இது அசிஸ்டன்ட் மேனேஜர் உமாநாத் உத்தரவு. கோ டு யுவர் சீட்")

    தன்னை என்னென்னவோ சொல்லி சீண்டும் அந்தக் கூட்டத்தின் மீது அதுவரை கோபப்படாமல் பொறுமையாக இருந்தவர் 'முதலாளி ஒழிக' கோஷம் கேட்டவுடன் சண்டமாருதமாய் பொங்கி எழுவது அவருடைய முதலாளி பக்தியை அழகாக வெளிப்படுத்தும். அதே சமயம் தான் ஒரு அதிகாரி. தனக்குக் கீழ் உள்ளவர்கள் தன் சொல்லுக்குக் கட்டுப்படவேண்டும் என்ற அதிகாரமும் கொடிகட்டும்.

    ஒரு சமயம் பைல்களை இவர் அசிஸ்டன்ட் மேனஜராகப் பார்க்கும் போது 'நம்மோடு வேலை செய்த பியூன்தானே' என்று சுருளிராஜன் அலட்சியமாய் பைலை மேசையில் திமிராகப் போட, ஒன்றும் பேசாமல் கைகளை சொடுக்கி, பார்வையாலேயே சுருளியை மிரட்டி, மீண்டும் பைலை எடுக்க வைத்து மரியாதையாக தரச் செய்வது கம்பீரமான மௌன அதிகாரம்.

    பின் வயதானவுடன் இன்னும் கம்பீரம் மெருகேறியிருக்கும். சேர்மன் அல்லவா! உடைகள் பிரமாதப் படுத்தும்.

    மகளை, மனைவியைக் கவனியாமல் கம்பெனி, ஆபீஸ், வெளிநாடு, மீட்டிங் என்று ஓடிக் கொண்டே இருப்பவர் ஒரு முறை ஜாகிங் செய்தபடி ஓடிக் கொண்டே இருக்க, அவருடைய அசிஸ்டன்ட் அன்றைய புரோக்ராம்களை ஓடியபடியே இவரிடம் சொல்லிக் கொண்டு பின்னாலேயே ஓடி வர, கணவனைக் காண்பதற்குக் கூட பெர்மிஷன் கேட்டு காத்திருக்கும் மனைவி விஜயா தற்செயலாக அங்கு வந்து விட மனைவியிடம், "லட்சுமி! ஓடி ஓடி சம்பாதிக்கணும்னு சொல்லுவியே! இப்ப நான் சம்பாதிச்சிகிட்டே ஓடறேன்." என்று நின்றபடி ஜாகிங்கிலேயே லேசான புன்னகையுடன் சொல்வது கொள்ளை அழகு!

    படம் முழுவதும் ஹிட்லராக நடிகர் திலகம் புகுந்து விளையாடி இருந்தாலும்,படத்தின் உயிர்நாடியான, மிக முக்கியமான முத்தாய்ப்பான, மூன்று காட்சிகளில் நம் நாடி நரம்புகளை அவர் தன் துடிப்பான நடிப்பால் துடிக்க வைக்கும் அதிசயங்களைப் பற்றி கூறப் போகிறேன்.

    முதலாவது (மகளை கண்டிக்கும் காட்சி)



    குடும்பத்தைக் கவனிக்க நேரமில்லாமல் முழுநேர ஆபீஸ் வேலைகளிலேயே மூழ்கியிருப்பவர் ஒரு சமயம் விமானம் மூன்று மணி நேரம் லேட் என்று வீட்டுக்கு வந்து விடுவார். (அதுவரை மனைவியான கே.ஆர்.விஜயா இவர் குடும்பத்தை சரிவர கவனிப்பதில்லை என்று பல தடவை இவரிடம் மனக்குறை பட்டுக் கொண்டிருப்பார்.) இரவு நேரம் ஆகியிருக்கும். மகள் யாரோ ஒருவருடன் காலேஜில் இருந்து லேட்டாக காரில் வந்து இறங்குவதை கவனித்து விடுவார். 'இதையெல்லாம் கண்டிக்கிறதில்லையா?' (அவ்வளவு அழகாக இந்த வார்த்தையை உச்சரிப்பார்) என்று மனைவியைக் கடிந்து கொள்வார். பெண் மாடிக்கு வந்ததும் 'ஏன் லேட்? என்று கண்டிப்புடன் கேட்க, அதற்கு மகள் அலட்சியமாய் பதில் சொல்லி இவரை அவமானப்படுத்திவிட, மகளை கோபத்தில் ஒரு அறை அறைந்தும் விடுவார். அப்பா அடித்ததைத் தாங்க மாட்டாமல் மகள் ரூமிற்கு சென்று தூக்க மாத்திரைகளை விழுங்க முயற்சிக்க, விஜயா ஓடோடி சென்று அதைத் தடுத்து இவருக்குக் குரல் கொடுத்து அலற, அப்படியே நிலை குலைந்து ஒடிந்து போவார் நடிகர் திலகம். படுக்கையில் விழுந்தபடி மகள் அழுது கொண்டிருக்க, அதே படுக்கையில் மண்டியிட்டபடியே மகளிடம் வந்து,"பாப்பா! அப்பா மேலே உனக்கு அவ்வளவு ஆத்திரமா?" என்று வெதும்பியபடியே கேட்பார். உடனே கே.ஆர்.விஜயா 'எனக்குன்னு ஒட்டிகிட்டு இருக்கிறது இது ஒண்ணுதான்... உங்க கோபம் கண்டிப்பு இதையெல்லாம் உங்க பேக்டிரியோட நிறுத்திக்கோங்க... என் மகளைக் கொன்னுடாதீங்க'... என்று கத்துவார்.

    உடனே விஜயா அருகில் வந்து அதிர்ந்து "லட்சுமி! நீயுமா? (என்னைப் புரிஞ்சுக்கல?!) என்று மட்டும் உதடுகள் மனசு இரண்டும் துடிக்க கைகளால் நெஞ்சைத் தொட்டு பரிதாபமாகக் கேட்பார். அப்படியே மீண்டும் மகளிடம் வருவார். "பாப்பா! தூக்க மாத்திரையை சாப்பிட்டு அப்பாவை பழி வாங்கப் பார்க்குறியா? நான் என்ன பாப்பா கேட்டுட்டேன்?... பெத்த அப்பன் இல்லையா? ( குரல் அதிகமாக உடைய ஆரம்பிக்கும்) ஒரு வார்த்தை கண்டிக்கக் கூடாதா? ஒரு அடி அடிக்கக் கூடாதா உன்னை" என்று அழுகையும், ஆத்திரமுமாய் பொங்க ஆரம்பிப்பார்.

    "நான் என்னவோ நினச்சுகிட்டு ஓடிக்கிட்டே இருக்கேன்...ஓடிக்கிட்டே இருக்கேன்....(இரண்டு முறை சொல்லுவார்) எங்க ரெண்டு பேருக்கும் இருக்கிறது நீ ஒருத்திதானே பாப்பா! நீயும்...( 'போயிட்டீனா' என்பதை சொல்லாமல் கைகளால் அம்சமாகக் காண்பிப்பார். "நான் எதுக்கு இருக்கணும்?"... இதையும் சொல்லாமல் கைகள் மட்டுமே முத்திரைகள் பதிக்கும்.) பாதிப் பாதி வார்த்தைகள் மட்டுமே உச்சரித்து மீதியை சொல்லாமல் கைகளை சைகைகளாலேயே சரித்திரம் படைக்க வைப்பார்.) உடம்பெல்லாம் மகள் எடுத்த தற்கொலை முடிவைக் கண்டு பதறிய நிலையிலேயே இருக்கும்.

    மகளிடம் 'இது போல செய்ய மாட்டேன்' என்று சத்தியம் செய்து தருமாறு அழுதபடியே கேட்பார். "பாப்பா! அப்பா பாப்பா! அப்பாடா!"என்று அவர் தன் தந்தை ஸ்தானத்தை, உரிமையை மகளுக்கு அன்பால் உணர்த்தி (அப்பா பாவமில்லையா?) கெஞ்சி அழுவதைப் பார்க்கும் போது நெஞ்சு விம்மி கண்ணீர் விடாதவர்களே இருக்க முடியாது. ரெண்டு படுத்தி விடுவார் இந்தக் காட்சியில். (மகளாக நடிக்கும் சாதனாவும் 'அப்பா வேதனைப்படுகிறார்... தப்பு செய்து விட்டோமே' என்று தவறை உணர்ந்து கவிழ்ந்து படுத்தபடியே நடிகர் திலகத்திடம் சத்தியம் செய்து கொடுத்து பின் 'அப்பா' என்று அழுதபடியே அணைத்துக் கொள்வது நம் நெஞ்சை என்னவோ செய்யும் காட்சி).

    ஒரு தந்தையின் கண்டிப்பு, கோபம், மகள் சாகத் துணிந்தவுடன் அப்படியே அந்தக் கோபம் மாறி ஏற்படும் பயம், படபடப்பு, தந்தை என்ற உரிமை கூட தனக்கு இல்லையே என்ற தவிப்பு , 'இனி கண்டிப்பதால் புண்ணியமில்லை... இனி உன்னை ஒன்றும் கேட்க மாட்டேன்... கேட்பதற்கு நான் யார்?' என்ற விரக்தி, வேதனை, இனி தற்கொலைக்கு முயலக் கூடாது என்று மகளிடம் கெஞ்சல், பதற்றம், நான் உனக்கு அப்பா இல்லையா என்ற பந்ததத்தை உணர்த்தும் உரிமை, இருக்கிற ஒரு மகளும் போய் விட்டால் என்ன செய்வது? என்ற பெரும் அச்சம், மனைவி கூட புரிந்து கொள்ளாமல் பேசுகிறாளே என்ற வருத்தம் அத்தனையையும் ஒரே நிமிடத்தில் நம் மனதில் ஆழமாகப் புதைத்து அழ வைக்க இந்த மனிதரை விட்டால் வேறு யாராவது பிறந்திருக்கிறார்களா காட்டி விடுங்கள் பார்ப்போம்.

    இரண்டாவது (மகளின் திருமணத்தை எண்ணி மனைவியிடம் குமுறும் காட்சி)



    மகள் கோவிலில் தன் இஷ்டத்திற்கு திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்க, அதைத் தெரிவிக்க விஜயா இவரிடம் பலமுறை முயல, மனைவி செய்யும் போனுக்குக் கூட பதில் சொல்ல முடியாத பிஸியில் கப்பல் வாங்கும் வேலையில் மும்முரமாக இருக்க, இவர் இல்லாத சூழ்நிலையில் கே.ஆர்.விஜயா மகளின் கல்யாணத்தை முடித்து விட, கடைசியாக செய்தி கேள்விப்பட்டு நடிகர் திலகம் கோவிலுக்கு ஓட, அங்கு எல்லாம் முடிந்து போய் யாருமில்லாமல் இருக்க, இடிந்து போய் வீடு வந்து உட்கார்ந்திருப்பார். கே.ஆர்.விஜயா மகளின் கல்யாணம் முடித்து விட்டு வருவார். அப்போது விஜயாவிடம் தன் மனக்குமுறலைக் கொட்டுமிடம் இருக்கிறதே....

    நடிகர் திலகம் அமைதியாக ஆரம்பிப்பார். (கல்யாணமெல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா?)

    விஜயா நடுங்கிக் கொண்டே "நீங்க இல்லைங்கிற குறைதான்"...

    அதற்கு இவர் "குறையா!? பெருமையா இல்ல! (மகளின் திருமண விஷயத்தில் மகளுடன் சேர்ந்து மனைவி கூடதன்னை ஏமாற்றி விட்டாளே என்ற ஆதங்கம், குறை, அவமானம் அவ்வளவும் முகத்தில் பிடுங்கித் தின்னும்)

    "கல்யாணத்துக்கு வந்தவங்களெல்லாம் கேட்டிருப்பாங்களே! இந்தப் பொண்ணோட அப்பன் எங்கேன்னு? நீ என்ன சொன்னே? பொண்ணப் பெத்த அப்பன் செத்துப் போயிட்டான்னு சொன்னியா? இல்ல வீட்டை விட்டே ஓடிட்டான்னு சொன்னியா?" (குரல் கம்மிக்கொண்டே வரும்)

    அடுத்த நிமிடமே குரல் அப்படியே கர்ஜனையாய் மாறும்.

    "நான் ஏண்டி ஓடறேன்!"?

    மறுபடி குரல் பல பாகங்களாக உடைந்து சிதறும்.

    "என் பொண்டாட்டி நல்லா இருக்கணும்கிறதுக்காக... என் பொண்ணு நல்லா இருக்கணும்கிறதுக்காக நான் பட்ட கஷ்டம் என் குடும்பம் படக் கூடாதுங்கிறதுக்காக ராத்திரி பகலா ஓட்றேன்... நாய் மாதிரி... நாய் மாதிரி... ராத்திரி பகலா ஓட்றேன்... உனக்கே... உனக்கே தெரியும்''.

    (உடலில் எந்த அசைவையும் காட்ட மாட்டார். அழுகை கொப்பளிக்கும். முகத்தில் மட்டுமே வசனங்களுக்கேற்ற பாவங்கள் பாவமாய் பரவும். இதுவரை பட்ட வேதனைகளை நினைவு கூர்ந்து இவர் அழுது கதறும் போது கல் மனங்களெல்லாம் கரையத் துவங்கும். பரிதாபங்களை அப்படியே அள்ளிக் கொள்வார்.)

    தொடர்வதைப் பாருங்கள்....

    "அது இருக்கட்டும்....பெத்த அப்பன் வர்றதுக்குள்ள அவ கழுத்துல தாலி கட்ட வச்சியே! அவ்வளவு என்னடி அவசரம் உனக்கு? (கொஞ்சம் நிறுத்தி திரும்ப சொல்லுவார்) அவ்வளவு என்னடியம்மா அவசரம்னு கேக்குறேன்?"

    அடடா! திலகமே! அந்த கேட்கும் தொனி இருக்கிறதே! இரண்டாவது முறை "அவ்வளவு என்னடியம்மா அவசரம்னு கேக்குறேன்?" என்னும் போது லேசாக வார்த்தைகளை இழுத்தபடி, கை விரல்களை மூடி முன்பின் ஆட்டியவாறு கேள்வி கேட்கும் பாணி, அந்தத் தொனி இருக்கிறதே! விண்ணை எல்லாம் பிளந்த அதிசயம். எவராலும் ஈடு செய்ய முடியாத அதிசயம்.

    அழுத ரகளை முடிந்த பின் பாய்வார் பாருங்கள் மனைவி மீது. அழுகை ஆத்திரமாகவும்,கோபமாகவும் சட்டென்று மாறிப் போகும்.

    "என்னைவிட நீ பெரிய அறிவாளி! என்னை விட மேதை! (முடிந்தவுடன் 'ஆங்' என்று அற்புதமாக ஒரு நக்கல் ராகம் போடுவார். கை விரல்கள் அப்படியே நர்த்தனம் புரியும்.)

    ஆள்காட்டி விரலை நீட்டி ஆட்டியபடி மனைவியிடம் கூறுவார்.

    "உனக்கு superiority complex டி...(இவரை விட மனைவி அதிகம் படித்தவளல்லவா!) அதனால்தான் சமயம் கிடைக்கும் போதெல்லாம் என்னை கேவலப்படுத்தினே! (ஆணித்தரமாக திரும்பவும் கூறுவார்). சமயம் கிடைக்கும் போதெல்லாம் நிச்சயமா நிச்சயமா நீ என்னை கேவலப்படுத்தியிருக்கே!"

    (குரல் மாடுலேஷனில் ஜெகஜால ஜாலங்கள் அற்புதமாக நடக்கும். குரல் உள்ளே போய் போய் உடைந்து உடைந்து திரும்ப வெளியே வரும். உணர்ச்சிகள் பொங்க உதடுகள் துடிக்கும். கேவலப்பட்டதாக உள்ளம் குமுறும். தெய்வ மகனில் தகப்பனும் மகனும் கையை நீட்டி டாக்டரிடம் ஆட்காட்டி விரலால் மூன்று முறை உதறுவார்களே! அதைப் போல அல்லாமல் வேறு மாதிரி பாணியில் 'நிச்சயமா நிச்சயமா' என்ற வார்த்தைகளின் போது ஆட்காட்டி விரல் அசைவுகளை அற்புதமாகக் காண்பித்து அக்கிரமம் புரிவார்)

    "எம் பொண்ணு இன்னும் கொஞ்ச நாள்ல விதவையா வந்து நிக்கப் போறாடி.... அந்தப் பய வயித்துல கட்டிடி" என்று தலையில் இரு கைகளையும் மாறி மாறி வைத்துக் கொண்டும், பின்பு அடித்துக் கொண்டும் அழும் அழுகை வெகு வித்தியாசம்.

    மூன்றாவது (தொழிலாளர்களிடம் உரையாடும் இறுதிக் காட்சி)



    கிளைமாக்ஸில் தொழிலாளிகள் நடிகர் திலகத்தின் வீட்டை முற்றுகையிட்டு கப்பல் வாங்கி மூழ்கிப் போனதால் கம்பெனி மூடப் போவதாக நம்பி அவரைத் தாக்க வரும் போது அவர்களிடம் உரையாடும் கட்டம்.

    இதில் என்ன விசேஷம் என்றால் ஒரிஜினல் ஹிட்லரின் மானரிசங்கள் சிலவற்றை அற்புதமாகப் பிரதிபலிப்பார். நீள் கோட்டுடன் கையை கோட்டின் உள்ளே மார்புப் பகுதியில் விட்டிருப்பது, கையை நீட்டியபடி பேசும் அற்புத ஹிட்லரின் போஸ், (பி.என். சுந்தரம் அனுபவித்து தூள் பரத்தியிருப்பார்) "யாரைக் கேட்டு கப்பல் வாங்கினே?" என்ற ஒரு தொழிலாளியின் கேள்விக்கு "யாரைக் கேட்டு கப்பல் வாங்கணும்?" என்று குதித்து குதித்து நடக்கும் ஹிட்லரின் ஸ்டைல், சமயத்தில் பின் பக்கம் கட்டியபடி கைகளை ஆட்டும் அற்புதம், இரு கைகளை ஒன்றன் மேல் ஒன்று வைத்தபடி வயிற்றுப் பகுதியில் சேர்த்து வைத்திருக்கும் போஸ் என்று ஏக ரகளைகளை படு கம்பீரமாக செய்வார்.

    இன்னும் எவ்வளவோ!

    இந்தக் கேரக்டரை நடிகர் திலகம் கையாண்டிருக்கும் பாங்கு வியப்புக்குரியது. பொதுவாகவே ஹிட்லர் மீசை என்பது நகைச்சுவைக்காகத்தான் தமிழ் சினிமாவிலும், ஏன் மற்ற மொழிப் படங்களிலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. நாகேஷ், ஏ.வீரப்பன், தேங்காய் சீனிவாசன், விகே.ஆர் போன்ற காமெடி நடிகர்கள் ஹிட்லர் போல மேசை வைத்துக் கொண்டு நகைச்சுவைக் காட்சிகளை செய்வார்கள். பார்த்தவுடன் சிரிப்பைத்தான் வரவழைக்கும் ஹிட்லர் மீசை.

    ஆனால் நடிக தெய்வத்திற்கு மட்டும் அந்த மீசை படு கம்பீரமாக அமர்ந்து பொருந்துகிறதே! கொஞ்சம் ஏமாந்தாலும் கேலிக் கூத்தாகிவிடும் மேக்-அப். கொஞ்சம் கூட பயமில்லாமல் உன்னத நடிக மேதை என்ற மமதைகள் சிறிதும் இல்லாமல் அதுவும் ஆரம்பக் காட்சிகளில் அனைவராலும் கேவலமாக இழிவு படுத்தப்படும் பாத்திரமாக இருந்தும் அந்தப் பாத்திரத்தின் தன்மை புரிந்து அதை தன் அற்புதமான பங்களிப்பால் மெருகேற்றி நகைச்சுவை வருவதற்குப் பதிலாக அந்த கேரக்டரின் மேல் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தி, பின் ஒரு நன்மதிப்பையும் ஏற்படுத்தி, தகரத் தகட்டை தங்கமாக்கிக் காட்ட உலகிலே இவர் ஒருவர் தானே! ஆரம்பம் முதல் இறுதி வரை இந்த கேரக்டரை அதன் தன்மை சிறிதும் குறையாமல், படிப்படியாக காட்சித் தொடர்பு கொஞ்சமும் கெடாமல் அவ்வளவு அற்புதமாக கையாண்டிருப்பார்.

    அடால்ப் ஹிட்லருக்கும் இந்த உமாநாத்துக்கும் கொஞ்சமும் குணத்தில் சம்பந்தமில்லை. அந்த ஹிட்லர் யூதர்களை இரக்கமில்லாமல் கொன்று குவித்தவன். நம் ஹிட்லரோ நாதியற்ற தொழிலாளிகளுக்கு வாழ்வு கொடுப்பவர். அந்த ஹிட்லர் அசகாய வீரனாக உருவெடுத்து கோழையாக தற்கொலை புரிந்து மாண்டான். நம் ஹிட்லரோ கோழையாக வாழ்வைத் துவங்கி வீரனாகவே இறுதி வரை கம்பீரமாக வாழ்ந்தவர். அந்த ஹிட்லர் தோல்வியால் துவண்டு தற்கொலை முடிவை எடுத்த ஒரு கோழை என்று நம் ஹிட்லர் அந்தக் கோழையின் புகைப்படத்தை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிட்டு வரும்போதே அவனைவிட உமாநாத் எல்லா வகையிலும் உயர்ந்த, பிரச்னைகளை face செய்யக் கூடிய தைரியசாலி என்று புரிந்து விடும்.

    இந்த அற்புதமான ரோலில் வேறு எந்த ஒரு பயலையும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.

    அது நம் நடிப்பின் இறைவனால் மட்டுமே முடிந்த ஒன்று.
    Last edited by vasudevan31355; 21st November 2013 at 01:05 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #353
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பாகம் 3

    படத்தின் இதர பங்களிப்பாளர்கள்



    மனைவியாக கே.ஆர்.விஜயா வழக்கம் போல பொருத்தமாகவே செய்திருக்கிறார். காலிப் பயல்கள் தன் கையைப் பிடித்து இழுத்து கலாட்டா செய்தும் தன் கணவன் தன்னைக் காப்பாற்ற முயற்சி செய்யவில்லையே என்ற காட்சியில் ஜொலிக்கிறார். கணவன் ஆபீஸ், கம்பெனி என்றே அலையும் போது கணவனின் அன்புக்காக ஏங்குவது யதார்த்தம். உறுத்தாத அளவான நடிப்பு.

    மகளாக சரோஜா என்ற புதுமுகம் அறிமுகம். பின்னால் இவர் (சாதனா என்று தன் பெயர் மாற்றிக் கொண்டார்) சிங்கத்துடன் சேர்ந்த சிறு முயல் இவர். தற்கொலைக் காட்சியில் திலகத்திடம் சத்தியம் செய்து கொடுக்கும் காட்சியில் அருமையாக செய்திருப்பார். மருமகன் மற்றும் ஜாபரியின் மகனாக 'கல்தூண் 'சதீஷ். நாடக பாணி மாறவில்லை. சொல்வதற்கு ஒன்றுமில்லை. பின்னாளில் கொடி நாட்டிய சத்யராஜ் ஆரம்ப காலங்களில் துண்டு துக்கடா வேடங்களில் நடித்த போது வந்த படம். அசிஸ்டன்ட் மேனேஜர் என்ற உப்பு சப்பில்லாத வில்லன் பாத்திரம் இவருக்கு. டப்பிங் வாய்ஸ் வேறு. சோபிக்கவில்லை. பார்க்கும் போது பரிதாபமே மிஞ்சுகிறது.

    சேர்மேன் ஜாபாரியாக வரும் என்.எஸ். ராம்ஜி அருமையாகப் பண்ணியிருக்கிறார். பாந்தமான பாத்திரம். (இவ்வளவு நல்ல நடிகரை வேறு எங்கும் அதிகமாகப் பார்த்ததில்லையே! 'கீழ்வானம் சிவக்கும்' படத்தில் ஒரு காட்சியில் வருவார். இவருக்கெல்லாம் நல்ல சான்ஸ் கொடுத்திருக்கலாமே!) மற்றும் எஸ்.ராமாராவ்,பீலி சிவம், கௌரவ வேடத்தில் டாக்டராக மேஜர் சுந்தர்ராஜன், வி.எஸ்.ராகவன், 'காத்தாடி' ராமமூர்த்தி ஆகியோரும் உண்டு. (மாதவன் படத்தில் காத்தாடி இல்லாமலா! நண்பேன்டா!)

    இசை எம்.எஸ்.விஸ்வநாதன். பார்மிலிருந்து நழுவுக் கொண்டிருக்கும் வேளையில் வந்த படம். சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை. சுசீலாவின் 'நம்பிக்கையே மனிதனது சாதனம் மட்டுமே சற்று நம்பிக்கை. வாணி ஜெயராம் குரலில் ஒலிக்கும் 'சிலை வண்ணம் யாரோ!' சுமார் ராகமே! 'பாரத விலாஸி'ல் வருவது போல மனசாட்சியுடன் நடிகர் திலகம் பாடும் பாடல் (சார்! உங்களைத்தான் சார்!) ஒன்று உண்டு. அது சக்கை போடு போட்ட பாடல். இது?!!!....

    ஒளிப்பதிவு மாதவனின் மனம் கவர்ந்த பி.என்.சுந்தரம். அருமை. ஹிட்லராக சில புதிய கோணங்களில் நடிகர் திலகத்தைக் காட்டியிருப்பார்.

    கதை 'தங்கப்பதக்கம்'மகேந்திரன். அப்பாவி ஒருவன் தன் கடினமான உழைப்பால் உயர்ந்து வாழ்க்கையில் சாதித்துக் காட்டிய கதை. மௌலி நல்ல வசனங்களைத் தந்து திரைக்கதை அமைத்திருப்பார். ("ஒரு பூனையை பத்தடி துரத்தினா அது திருப்பிகிட்டு துரத்தினவன் மேலே பாயும். கேவலம் ஒரு சிட்டுக் குருவி கூட மனுஷன் கையிலே
    பிடி பட்டுட்டா அவன் கையைப் கொத்திட்டு அது பறக்கப் பார்க்கும்") மௌலியின் பங்கு மகத்தானது.

    தயாரிப்பு பி.வி.தொளசிராமன். (PVT Productions) சேலத்தை சேர்ந்தவர்.

    இயக்கம் என் மனம் கவர்ந்த மாதவன்.நேர்த்தியான இயக்கம். இருந்தாலும் இவருடைய அனுபவத்திற்கு இன்னும் சிரத்தை எடுத்திருக்கலாம். நடிகர் திலகத்தின் பிரமாதமான ஒத்துழைப்பு இருந்தும் சில காட்சிகளில் போதிய அழுத்தம் இல்லை. நடிகர் திலகத்தின் பங்களிப்பு மட்டுமே போதும் என்பது போல அலட்சியம் சில காட்சிகளில் தெரிகிறது. மாதவன் டயர்ட் ஆனதும் தெரிகிறது. ரிடையர்ட் ஆகப் போகும் நிலைமையும் புரிகிறது. ஆனால் குறை சொல்வதற்கு இல்லை. (அனுபவமும் பேசுகிறது) வழக்கம் போல நடிகர் திலகத்தை வாட்டி வதைத்திருப்பார். இன்னும் கொஞ்சம் மனது வைத்திருந்தால் மிக மிக ஆழமாக ஹிட்லரை இவர் நம் நெஞ்சில் புதைத்திருக்க முடியும்.

    இன்னொன்று. 80க்கு மேல் வந்த பல நடிகர் திலகத்தின் படங்களில் சிக்கனமே கையாளப்பட்டது. (பாலாஜி போன்ற ஒரு சிலர் தவிர. அவர் கூட செலவை வெகுவாக சுருக்கிக் கொண்டார்). நடிகர் திலகத்துடன் பல இளம்தலைமுறை நடிகர்கள் சேர்ந்து பங்கு பெற்றனர். சந்தோஷமான விஷயம்தான். ஆனால் பாலையா, எம்.ஆர்.ராதா, சுப்பையா, ரங்காராவ், சாவித்திரி, பானுமதி போன்ற ஜாம்பாவன்களுடன் நடிகர் திலகம் போட்டியிட்டு நடித்ததால் பல படங்கள் வெற்றியடைந்தன. நடிகர் திலகத்தின் மாபெரும் திறமையையும் அகிலம் உணர்ந்தது. ஆனால் பின்னாட்களில் அப்படிப்பட்ட ஜாம்பவான்கள் நடிகர் திலகத்துடன் இல்லாதது ஒரு பெரியகுறையே! அதிகம் பரிச்சயம் இல்லாத பெயரே தெரியாத அனுபவம் இல்லாத இளம் நடிக நடிகைகள், முன் மாதிரி மனதில் பதியாத இசை, சிக்கன செலவு, எல்லாவற்றுக்கும் மேல் நடிகர் திலகத்தின் புற்றீசல் போன்ற புதிய படங்களின் வெளியீடுகளால் நம் படங்களே நமக்குப் போட்டியான சோதனை என்று பல வேதனைகள் வாட்டியெடுத்த நிலையில் இது போன்ற நல்ல படங்கள் அடிபட்டுப் போனது துரதிருஷ்டமே!

    ரஜினி நடித்து நல்ல வெற்றி பெற்ற 'நல்லவனுக்கு நல்லவன்' (22 October 1984) படம் நமது ஹிட்லர் உமாநாத்தை அப்படியே தழுவி இருக்கும். அதுவும் இடைவேளைக்கு பிறகு அப்படியே அட்டை காப்பி. நல்ல செலவு செய்து, மசாலாவை வெகுவாக தடவி, ஏவி எம் நிறுவனம் இளையராஜாவின் இசையில் (பாடல்கள் சூப்பர் ஹிட்) இப்படத்தைத் தயாரித்து விளம்பரங்களை விவரமாக அளித்து 1984 தீபாவளிக்கு வெளியிட்டு நல்ல காசு பார்த்தது.
    Last edited by vasudevan31355; 21st November 2013 at 01:07 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #354
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பாகம் 4

    புகழ் பெற்ற சுருளிராஜன் வில்லுப்பாட்டு



    காமெடிக்கு சுருளிராஜன். ('மறைந்த கலைஞர்' என்று டைட்டில் போடுவார்கள்). படம் வரும் போது அவர் உயிருடன் இல்லை. படத்தில் இவர் பாடும் வில்லுப்பாட்டு மிக பிரசித்தம். இன்றளவில் கூட அந்த நடிகர் திலகம் புகழ் பாடும் வில்லுப்பாட்டை பலர் ரசிப்பதை நான் பார்த்திருக்கிறேன். (வில்லுப்பாட்டு எழுதி அமைத்தவர் திரு.சுப்பு ஆறுமுகம் அவர்கள்). மேலும் இலங்கை வானொலியில் அந்த நாட்களில் இந்த வில்லுப்பாட்டை ஒருநாள்கூட ஒளிபரப்பாமல் இருக்கவே மாட்டார்கள். கோவில் விசேஷங்களிலும், கல்யாண வைபவங்கள், இதர விசேஷங்களிலும் நான் இந்த வில்லுப் பாட்டை பலமுறை கேட்டதுண்டு.

    வில்லுப்பாட்டு பற்றி சில வரிகள்.

    தன் முதலாளி உமாநாத்தைக் காக்கா பிடிக்க சுருளிராஜன் உமாநாத்தின் புகழை வில்லடித்துப் பாடுவது போல காட்சி அமைப்பு. ஆனால் உண்மை அர்த்தம் என்ன தெரியுமா? நடிகர் திலகத்தின் புகழ்தான் இந்த வில்லுப் பாட்டில் பாடப்படும் ஹிட்லர் உமாநாத்தின் பெயரை சாக்காக வைத்துக் கொண்டு.

    நம் ரசிகர்கள்கொண்டாடி மகிழும் வில்லுப்பாட்டு இது. நடிகர் திலகம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உயர்ந்ததை ஹிட்லர் உமாநாத் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உயர்ந்ததோடு ஒப்பிட்டு இப்பாடலை வடிவமைத்திருப்பார்கள் சுருளியின் இடையிடை காமெடி பஞ்ச்களோடு (அண்ணே! புல்லரிக்குதுண்ணே!... போர்வையிருந்தா போர்த்திக்கோடா... கன்னுக் குட்டி மேஞ்சிடப் போகுது!) சேர்த்து. இதில் சில வரிகளை தருகிறேன். கவனியுங்கள்.

    சுருளி கடவுளை வேண்டி துவக்கி வில்லடித்துக் கொண்டே பாடும் ஆரம்ப வரிகள்.



    பூப்பறிச்சு மாலை கட்டி... (ஆமடி தங்கம்)
    பூசை பண்ணி வந்திருக்கேன்... (ஆமாஞ் சொல்லு)
    காப்பாற்ற வரணுமய்யா... (ஆமடி தங்கம்)
    கணேசனே சரணமய்யா... (ஆமாஞ் சொல்லு)

    இந்த இடத்தில் கணேசன் யாரென்று தெரிகிறதா?

    ஒரு டீயை இரண்டாக்கி
    உறிஞ்சி நாங்க குடிச்சதிலே
    ஒருத்தன் மட்டும் ஒசந்தானே!
    இன்னொருத்தன் அசந்தானே!

    (இதில் மூன்றாவது வரியையும் நான்காவது வரியையும் நன்றாகப் படித்து புரியும் சக்தி உடையவர்கள் புரிந்து கொள்ளுங்கள்)

    ஹிட்லர் மீசையுடன் பிறந்தார் எங்க ஹீரோ
    இங்கிலிஷும் பேசிடுவார் ஆரீராரோ
    (நடிகர் திலகம் பைல்களைப் பார்த்தவாறு வில்லுப் பாட்டைக் கேட்டுக் கொண்டிருப்பார்)
    வாய் தொறந்தா வசனமல்லோ எங்க ஹீரோ
    அந்த வசனமே கவிதையல்லோ ஆரீராரோ

    என்னைக்கும் வாடாத பாசமலரு
    பெத்த அன்னைக்கு உத்தம புத்திரன் இவரு
    இந்த ஊரில் இதுதான் ஒசந்த மாளிகை ஆமா(ம்)
    ஹிட்லர் மீசை குடியிருக்கும் வசந்த மாளிகை

    பட்டிக்காடா பட்டணமா எங்க நாட்டிலே
    ஆமா(ம்) சத்தியமா இவருதானே தர்மராஜா
    பத்தே அவதாரம் பகவானுக்கு ஆமா(ம்)
    பத்துக்கு மேல் அவதாரம் நம்மாளுக்கு (சபாஷ்!)
    வேஷம் நம்மாளுக்கு

    (அமர்க்களமாக இல்லை!)

    பறப்பதுலே பைலட்டு பிரேம்நாத்து
    நீதியை நிறுப்பதில ஜஸ்டிஸ் கோபிநாத்து
    மேதையிலே இவரு ஒரு சாக்ரடீசு
    ஆமா(ம்) மீசையிலே ஹிட்லரு உமாநாத்து

    இப்படியாக இப்பாடல் நடிகர் திலகத்தின் புகழ் பாடியே வளரும். பிரபல ராகங்களின் பெயர்களில் நடிகர் திலகத்தின் நடிப்பு வில்லுப்பாட்டின் மூலம் பெருமைப் படுத்தப்படும்.

    அழுதிடுவார் அது ஆரபி ராகம்...
    கர்ஜனை செய்வார் இது கல்யாணி ராகம்...
    சிரிச்சிடுவார் அது செஞ்சுருட்டி
    சிணுங்கிடுவார் இது சிந்து பைரவி...
    சீட்டியடிப்பார் அது நாட்டைக்குறிஞ்சி
    சத்தமிடுவார் அது சங்கராபரணம்

    நடையழகு இது ரூபக தாளம்
    நாடித்துடிப்பினிலே ஆதிதாளம்
    அப்படியே படம் பிடிக்க கேமரா இல்ல
    அம்புட்டையும் சொல்ல நானு கம்பனுமில்ல

    மகராசன் கோட்டையிலே கோயில் வாசலு (நடிகர் திலகத்தின் 'அன்னை இல்ல' வாசலின் முன் உள்ள விநாயகர் கோயில்!?)

    நமக்குப் பெருமை பிடிபடாது.

    (இந்த வில்லுப்பாட்டில் திரு.சுப்பு ஆறுமுகம் அவர்களின் வில்லுப்பாட்டுக் குழுவினரும் சுருளிராஜனுடன் இணைந்து நடித்திருப்பார்கள். மலேஷியா வாசுதேவன் சுருளிராஜனின் குரலில் அருமையாக சுருளிராஜனுக்குப் பின்னணி பாடியிருப்பார்).

    ஆனால் ஒரு குறை. இன்னும் முழுமையாக கவனம் செலுத்தி இப்பாடலைத் தந்திருந்தால் அற்புதமான தலைவரைப் பற்றிய முழுமையான சாதனை வில்லுப் பாட்டாக இது அமைந்திருக்கும். இடையில் சில சொதப்பல் வரிகள், காமெடி வசனங்கள் என்று இடையிடையே அடிக்கடி ட்ராக் மாறுவதால் நமக்கு இந்த வில்லுப் பாட்டு முழு திருப்தி இல்லாததால் கொஞ்சம் ஏமாற்றமே!

    என்றாலும் மறக்க முடியாத ஜனரஞ்சகமான சூப்பர் ஹிட் வில்லுப்பாட்டு. அனைவராலும் விரும்பப்பட்ட ஒன்று.
    Last edited by vasudevan31355; 21st November 2013 at 01:09 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #355
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பாகம் 5



    படத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள்

    இந்தப்படம் 1982 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று அதாவது ஜனவரி 26 அன்று வெளியீடு என்று விளம்பரம் வந்தது. ஆனால் City, NSC ஏரியாக்களில் சொன்னபடி ஏனோ ரிலீஸ் ஆகவில்லை. ஆரம்பமே குழப்பம். பதினேழு நாட்கள் கழித்து பிப்ரவரி 12 ஆம் தேதிதான் இப்படம் சென்னையிலும், மற்ற இடங்களிலும் ரிலீஸ் ஆனது. (தகவலுக்கு நன்றி பம்மலார் சார்) குறிப்பிட்ட தேதிக்கு ரிலீஸ் ஆக முடியாமல் போனதால் அதற்கு முன்னாலேயே

    ஊருக்கு ஒரு பிள்ளை (5.02.1982)
    வா கண்ணா வா (6.02.1982)

    என்று இரு படங்கள் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆகி வேறு ஓடிக்கொண்டிருக்கின்றன.

    ஹிட்லர் உமாநாத்திற்கு நல்ல ரிசல்ட் இருந்தும் மேற்கூறிய படங்கள் ரன்னிங்கில் இருக்கும் போது எப்படி வெற்றி ரிசல்ட்டை எதிர்பார்க்க முடியும்?

    ஆனால் ஒரு அதிசயம் பாருங்கள். ஹிட்லர் சொன்னபடி திடீரென்று எங்கள் ஊர் கடலூரில் நியூசினிமாவில் 26.01.1982 அன்றே வருகை புரிந்து விட்டார். ஆக ஹிட்லரை முதலில் தரிசித்தது தென் ஆற்காடைப் பொறுத்தவரை கடலூர்காரர்களே! எவ்வளவு பெருமை தெரியுமா எங்களுக்கு! முதல் காட்சி சும்மா அதம் பறந்தது. ரிலீஸ் ஆன 10 நாட்களுக்குள் பிப்ரவரி 5-ஆம் தேதி கமலம் தியேட்டரில் 'ஊருக்கு ஒரு பிள்ளை' ரிலீஸ் ஆகிறது. அடுத்த நாள் 6 ஆம் தேதி வேறு கமர் தியேட்டரில் 'வா கண்ணா வா' ரிலீஸ் ஆகிறது. இந்த இரண்டு படங்கள் உடனே அடுத்தடுத்து ரிலீஸ் ஆன நிலையில் 'ஹிட்லர் உமாநாத்' நல்ல படம் என்று பெயரெடுத்தும் நம் படங்களின் அணிவகுப்புகளின் போட்டிகளால் சரியான வெற்றியைப் பெறத் தவறியது. (ஒரே ஊரில் ஓரே நேரத்தில் மூன்று நடிகர் திலகத்தின் படங்கள். அதுவும் புத்தம் புது ரிலீஸ் படங்கள். எங்கு போய் முட்டிக் கொள்வது? கார்த்திக் சார்! வாங்க!) கடலூரில் பதினைந்து நாட்களே ஓட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது 'ஹிட்லர் உமாநாத்'

    (இந்த லட்சணத்தில் இதே பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி என் அற்புதப் படமான 'கருடா சௌக்கியமா' (25.02.1982) வேறு 'வா கண்ணா வா' (6.02.1982) விற்குப் பின் வெளியானது. (சரியாகப் பத்தொன்பது நாள் கழித்து).... ஆக கணக்குப் படி பார்த்தால் ஒரே மாதத்தில் 4 புதுப் படங்கள். அட ராமா! இதையும் சாதனை லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.)

    பின் சென்னையில் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடியது ஹிட்லர் உமாநாத்.

    அலசல் முடிவுரை



    படம் சுமாராகப் போனால் என்ன? (எவ்வளவோ நல்ல படங்கள் சுமாராகப் போனதுண்டு). இந்த 'ஹிட்லர் உமாநாத்' அருமையான நல்ல படம். நடிகர் திலகத்திடம் அதுவரை காணாத பல புதிய பரிணாமங்களை 'ஹிட்லர் உமாநாத்'என்ற வித்தியாசமான வேடத்தின் மூலம் நாம் காண முடிந்தது. மீண்டும் நடிகர் திலகத்தை வியக்க முடிந்தது. நன்கு ரசிக்க முடிந்தது.

    பொத்தம் பொதுவாக நடிகர் திலகத்தின் 200 படங்களுக்கு மேல் எதுவுமே சரியில்லை...நான் பார்ப்பதில்லை...விரும்புவதில்லை என்ற குருட்டுக் கருத்துக்கள் கண்மூடித்தனமாக சில, பலரிடம் பரவிக்கிடக்கின்றன. அவர் பழைய படங்களில் பங்களித்ததைப் போல புது படங்களில் பங்களிக்கவில்லை... பரிமளிக்கவில்லை என்று கூறுவோர் அதை தயவு செய்து தவிர்க்க வேண்டுகிறேன். எனக்கும் சில படங்கள் அறவே பிடிக்காதுதான். ஆனால் எல்லா படங்களும் அப்படி இல்லை. இரண்டாவது ஒரு காரணம் இப்படி சொல்பவர்கள் இந்த மாதிரிப் படங்களை மேற்கூறிய காரணங்களை மனதில் வைத்து இரண்டாவது முறை பார்க்காமலேயே தாங்களாகவே ஒரு முடிவு கட்டி விடுகிறார்கள். எல்லாப் படங்களிலுமே தெய்வ மகன், உயர்ந்த மனிதன், தேவர் மகன், தில்லானா மோகனாம்பாள், முதல் மரியாதை போன்ற விஷயங்களை எதிர்பார்க்க முடியாது. அதில் கூட இல்லாத சில புது விஷயங்களை, தனது 200 ஆவது படங்களுக்கு மேலுள்ள படங்களில் காட்டி, பல சாதனைகளை நடிப்பில் நமக்கு செய்து காட்டி விட்டுத்தான் சென்றிருக்கிறார். அதை வெளிக்கொணரத்தான் கருடா சௌக்கியமா, துணை, தாம்பத்யம், இப்போது ஹிட்லர் உமாநாத் என்று மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறேன்.

    பாருங்கள். படியுங்கள். தங்கள் மேலான அபிப்பிராயத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    ஹிட்லரின் ஐ மீன் உமாநாத்தின் கம்பீரமான நினைவுகளோடு தற்சமயம் விடை பெறுகிறேன்.

    நன்றி!

    அன்புடன்
    நெய்வேலி வாசுதேவன்
    Last edited by vasudevan31355; 21st November 2013 at 01:12 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #356
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #357
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நகம்லாம் கடிச்சு கடிச்சு தீர்ந்து போய்டுச்சு..என்ன வரப் போகுதோ..எங்க மெட்ராஸ் க்ருபா

  9. #358
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Vasudevan Sir
    Congrats on your 4000th post & Birthday wishes too.

  10. #359
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    உண்மை உணரும் நேரம் - 1
    அதிலும் குறிப்பாக நமது நடிகர் திலகம் பற்றிய செய்திகள் என்றால் நிச்சயம் அடித்து சொல்லலாம் அது தவறாகவே இருக்கும்.
    முரளி சார்,

    சரியான தகவலை தேதி விபரங்களோடு குறிப்பிட்டிருக்கிறீர்கள். நன்றி.

    தாங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல, பெரும்பான்மையான பத்திரிகைகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், நடிகர்திலகத்தைப் பற்றி தவறான தகவல்களைச் சொல்வது என்பது அல்வா சாப்பிடுவது மாதிரி. முதலில் இதுமாதிரி எழுதினாலோ, பேசினாலோ யாரும் கேட்பதில்லை என்ற தைரியமும் அவர்களுக்கு உள்ளது.

    இதுமாதிரி எழுதும்போது நம்மில் சிலர் அந்தப் பத்திரிகைக்கோ அல்லது தவறாகப் பேசுபவர்களுக்கோ நம்முடைய மறுப்பை, எதிர்ப்பைத் தெரிவித்து கடிதமாக எழுதினால் அதன்பிறகு கொஞ்சம் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கும் - குறைந்தபட்சம் எதிர்ப்பு வரும் என்ற சிறிது பயமாவது இருக்கும் என்பது எனது தாழ்மையான விருப்பம், வேண்டுகோள்.

    இதுமாதிரி பல நிகழ்வுகளில் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையால் எதிர்ப்பு, மறுப்பு தெரிவித்து கடிதங்கள் எழுதி அது வெளியிடப்பட்டிருக்கிறது. எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாகத்தான் திருவிளையாடல், சரஸ்வதி சபதம் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. ஒரு பொது நிகழ்ச்சியில் வைரமுத்து நடிகர்திலகத்தைப்ப்ற்றி ஒரு தவறான தகவலைக் குறிப்பிட்டார். அநிகழ்ச்சிக்கு சென்றிருந்த தென்சென்னை மாவட்ட சிவாஜி சமூகநலப்பேரவைத் தலைவர் சீனிவாசன் அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியவுடன், வைரமுத்துவே வருத்தம் தெரிவித்து கடித்தம் எழுதினார். இதுபோல பல நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.

    நம்மிடம் பதிலடி கொடுப்பதற்கு, தாங்கள், வாசு சார், பம்மலார், ராகவேந்திரன் சார், கார்த்திக் சார், கோபால் சார் என்று ஏராளமான தகவல் களஞ்சியங்கள் இருக்கும்போது என்ன கவலை?

    தங்களுடைய தகவலின் அடிப்படையில் குமுதத்திற்கு உடனே நானும் கடிதம் எழுதுகிறேன்.

    என்னுடைய மனதில் பட்டதை எழுதியுள்ளேன். உடன்பாடு இருப்பின் ஏற்றுக்கொள்ளுங்கள். நன்றி.
    Last edited by KCSHEKAR; 21st November 2013 at 11:21 AM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #360
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Murali sir,

    As you rightly pointed out, when it comes to Nadigar Thilagam, there are people who will blindly go the extent of saying even veerapandiya kattabomman is a failure those days like how they said about Karnan AT THE SAME TIME, they will compare one lousiest film of any other actor and will say it bombarded the box office. But when we check the records, the film that they pointed out would have had only a normal run. This is how these vested interest guys fuming with the heights of inferiority complex pass comment. We are used to it and TRUTH WILL EMERGE OUT like KARNAN one day.

    This Major Dasan every Tom,Dick& Harry knows where he belongs to what his interests and intention are ! WHEN IT COMES TO COMMENT ABOUT NADIGAR THILAGAM, MOST OF THE TIME HE CHOOSES & PREFERS TO BE A NEGATIVE BLUFFER, A NEGATIVE LIER but when it comes to other actors HE CHOOSES & PREFERS TO BE A POSITIVE BLUFFER & POSITIVE LIER.

    MAJOR DASAN ...A NAME TO BE IGNORED..! HE DOESNT STAND TO OUR STATUS !

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •