-
3rd April 2014, 11:28 AM
#11
Junior Member
Newbie Hubber
முரளி,
அருமை.தொடருங்கள். உங்களுடன் மதுரையில் சிறு வயதை கழித்த உணர்வை தரும் இதம்.(உங்களோடு தற்போது நட்பாக இருப்பது இதமா என்பது வேறு விஷயம்)
-
3rd April 2014 11:28 AM
# ADS
Circuit advertisement
-
5th April 2014, 01:16 AM
#12
கிருஷ்ணாஜி,
உங்கள் அனுபவங்களை எளிமையாக ஆனால் அதே நேரத்தில் சுவையாக எழுதுகிறீர்கள். தொடருங்கள்.
கோபால் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி!
அந்த நாள் ஞாபகம்
இப்படியாக 1969 முடிந்து 1970 ஆரம்பித்தது. நாட்கள் செல்ல செல்ல இந்த ஆசையும் அதிகரித்தது. பொங்கலன்று (ஜனவரி 14 ) எங்க மாமா ரிலீஸ். இந்த படத்தையாவது முதல் நாள் பார்க்க வேண்டும் என்று நானும் என் கஸினும் முடிவு செய்தோம். எங்களுக்கு வசதியாக எங்க மாமா தங்கம் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. ஆசியாவின் மிகப பெரிய அரங்கமானதால் டிக்கெட் கிடைப்பதில் பிரச்சனை இல்லை. வீட்டில் ஒரு வாரத்திற்கு முன்பே சொல்லி, சொல்லி ஒரு சின்ன வாக்குறுதி வாங்கினோம். முதல் நாள் இரவு மறுபடியும் தடை. "பொங்கலன்னிக்கு சினிமா தியேட்டருக்கு போய் உட்காருவாங்களா? வேண்டாம்". மறுபடியும் பேசி, பேசி ஒரு வழியாக நைட் ஷோ போகலாம் என்று முடிவானது. பொங்கலை விட டைம் எப்போது நைட் ஆகும் என்பதிலேயே இருந்தது. ஒரு வழியாக போய் டிக்கெட் வாங்கி உள்ளே நுழையும் வரை நம்பிக்கை இல்லை.
தியேட்டருக்குள் நுழைந்து காலை உள்ளே வைத்தால் ஏதோ குவியலுக்குள் கால் வைப்பது போல தோன்றியது. குனிந்து பார்த்தால் காகித குவியல். ஒரு வழியாக உள்ளே போய் உட்கார்ந்தோம். படம் ஆரம்பித்த போது பயங்கர த்ரில் மனதில். பொதுவாக முதலில் படத்தில் டைட்டில் வரும். பிறகு நடிகர் திலகத்தை காட்டுவார்கள். ஆனால் எங்க மாமா படத்தில் முதலில் நடிகர் திலகம் வருவார். அதன் பிறகே டைட்டில் ஓட ஆரம்பிக்கும் அவர் முகத்தை திரையில் காண்பித்தவுடன் திரையே தெரியாத அளவுக்கு பேப்பர்மாரி பொழிந்தது. கைதட்டல் காதை கிழித்தது. ஒரு விதமான பிரமிப்புடன் இதை பார்த்துக் கொண்டிருந்தோம். நான் தன்னந்தனி காட்டு ராஜா. சொர்க்கம் பக்கத்தில் பாடல்களில் வரும் ஸ்டைல்களுக்கு ஆரவாரம் என்றால், செல்லக்கிளிகளாம் பள்ளியிலே பாடலில் அந்த இந்த இளமையான க்ளோஸ் அப் காட்சிக்கு செம அப்ளாஸ்.
என்னங்க சொல்லுங்க பாட்டுக்கு மறுபடியும் அலப்பறை. ஆனால் மொத்த தியேட்டரும் ஆர்ப்பரித்தது எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் பாடலில் நடிகர் திலகம் கண்களில் கண்ணீரை அடக்கி கொண்டு பாடும் அந்த நடிப்புக்கே. இது தவிர அன்றைய சூழலை ஒட்டி எழுதப்பட்ட சில வசனங்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. சண்டைக் காட்சிகளுக்கும் அது போல ஆரவாரம். மொத்தத்தில் படம் முடிந்து வரும் போது எதோ பெரிதாக சாதித்து விட்டது போல ஒரு பீலிங்.
அடுத்து விளையாட்டு பிள்ளை பிப் 6 வெள்ளிக்கிழமை ரிலீஸ். எனவே மறு நாள் நைட் ஷோ தான் பார்க்க முடிந்தது. வியட்நாம் வீடு ஏப்ரல் 11 அன்று ரிலீஸ். எக்ஸாம் நேரம். முதல் வாரம் தான் பார்த்தேன். அடுத்த படம் எதிரொலி ஜூன் 27 சனிக்கிழமை ரிலீஸ், அதே தங்கத்தில். அதற்கு நைசாக பேசி பெர்மிஷன் வாங்கி முதல் நாள் ஈவினிங் ஷோ பார்த்தோம். ஆனால் படமே சீரியஸ் கதை என்பதால் பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாட முடியவில்லை. உங்க நல்ல மனதுக்கு ஒரு குறையுமில்லே பாடலுக்கு மட்டுமே ஆரவாரமான கைதட்டல்.
அடுத்த படம் ராமன் எத்தனை ராமனடி ஆகஸ்ட் 15 நியூசினிமாவில் வெளியானது. ஆனால் முதல் நாள் பார்க்க முடியவில்லை. மூன்றாவது நாள் திங்களன்று [என் நினைவு சரியாக இருக்குமானால் அன்று கோகுலாஷ்டமி அதனால் ஸ்கூல் லீவ்] பார்த்தேன். மூன்றாவது நாள் பார்க்கும் போதே முதல் நாள் போல தியேட்டர் சூழ்நிலை நிலவியது. சாப்பாட்டு ராமன் விஜயகுமாராக மாறும் சீன் தொட்டு அரங்கமே அதிர ஆரம்பித்தது. சத்ரபதி சிவாஜியாக நடிகர் திலகம் வசனம் பேசும் போது உச்சக்கட்ட அலப்பறை. அதிலும் "நான் அரசியல் தெரியாதவனா? அரசு வித்தைகள் புரியாதவனா?" என்ற வரிகளை பேசும் போது தியேட்டரில் எழுந்த உணர்ச்சிமயமான வாழ்க கோஷங்களும் (வேறு சில கோஷங்களும் எழுந்தன) இன்றும் நினைவில் நிற்கிறது.
இந்த நேரத்தில் முதன் முறையாக அந்த வருடம் அக்டோபர் 1 நடிகர் திலகத்தின் 42-வது பிறந்த நாளை மிக பெரிய அளவில் கொண்டாடுவது என்று அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றம் முடிவு செய்து, இரண்டு நாள் மாநாடாக அக்டோபர் 1 மற்றும் 2 தேதிகளில் சென்னையில் நடை பெற்றது. லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டு செய்திகள் எல்லா ரசிகர்களுக்கும் மிக பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. இதன் பின்னால் தீபாவளி திருநாள் அக்டோபர் 29 அன்று. ரசிகர்களுக்கு மேலும் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்க இரண்டு படங்கள் எங்கிருந்தோ வந்தாள் மற்றும் சொர்க்கம் ரிலீஸ்.
இந்த சமயத்தில் முதன் முறையாக மதுரையில் மன்றம் மூலமாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் டிக்கெட்கள் முதல் நாள் அனைத்து காட்சிகளுக்கும் வழங்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ரிசர்வேஷன் போன்ற வசதிகள் இல்லாமல் இருந்த அன்றைய காலக்கட்டத்தில் டிக்கெட் விலையை விட ஒரு ரூபாய் மட்டுமே அதிகமாக கொடுக்க வேண்டும் என்பதால் ரசிகர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாய் அமைந்தது. மன்றத்தில் உறுப்பினராக இல்லாதவர்களுக்கும் இந்த டிக்கெட் வழங்கப்படும் என்ற செய்தி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. காரணம் நாங்கள் மன்ற உறுப்பினர்கள் இல்லை. இப்படி டிக்கெட் கிடைக்கும் என்பதால் ஓபனிங் ஷோ பார்க்கும் வாய்ப்பும் ஆசையும் அதிகரித்தது. ஆனால் தீபாவளியன்று காலையில் சினிமா போக அனுமதி கிடைக்காது. மாலைக் காட்சி மட்டுமே சாத்தியம். வெளியாகும் இரண்டு படங்களில் எதை பார்ப்பது என்ற Dilemna. கடைசியில் சொர்க்கம் போவது என்று முடிவானது. சென்ட்ரல் சினிமாவில் மாலை காட்சி டிக்கெட்டும் வாங்கியாகி விட்டது. என் கஸின் ஸ்ரீதேவியில் எங்கிருந்தோ வந்தாள் ஓபனிங் ஷோவிற்கும் டிக்கெட் வாங்கி விட்டான். காலையில் ஆரப்பாளையத்தில் எங்கள் வீட்டில் தீபாவளி கொண்டாடும் போதும் மனதில் எங்கிருந்தோ வந்தாள் ஓபனிங் ஷோ பற்றிய நினைவே. மாலை தாத்தா வீடு வந்து அவனை பார்த்து படம் எப்படியிருக்கிறது என்று தான் முதலில் கேட்டேன். இரண்டு படமும் டாப் [அந்த காலக்கட்டத்தில் சூப்பர் என்ற தூய தமிழ் வார்த்தை அகராதியில் இடம் பெற்றிருக்கவில்லை] என்ற மகிழ்ச்சியான செய்தியை அவன் எனக்கு சொன்னான்
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th April 2014, 12:01 AM
#13
அந்த நாள் ஞாபகம் iv
மாலை தியேட்டருக்கு போகிறோம். சென்ட்ரல் சினிமா வாசலில் திருவிழா கூட்டம். மன்ற டோக்கன் வைத்திருப்பவர்கள் பின் பக்க வாசல் வழியாக வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அங்கே சென்றால் அதை விட கூட்டம். பெண்கள் செல்லும் வழி வேறு. அந்த சின்ன சந்தில் குவிந்த ரசிகர்களை உள்ளே அனுமதிக்க ஒரு சரியான ஏற்பாடு செய்யப்படாததால், ஒரு குழப்பமான சூழ்நிலை. நேரம் ஆக ஆக கூட்டம் பொறுமையை இழக்க, போலீஸ் ரசிகர்களை கட்டுப்படுத்த லாட்டி வீச, ரசிகர்கள் மிகுந்த கோபம் அடைந்தார்கள். அதற்கு காரணம் இருந்தது. சேலம் மாநாடு வெற்றிகரமாய் நடந்து முடிந்த பிறகு, சென்னையில் சாந்தி தியேட்டரின் மீது தாக்குதல் நடந்தது. அந்த நேரத்தில் போலீஸ் அதை கண்டும் காணாமல் நடந்து கொண்டது.[இதை பற்றி ஏற்கனவே நடிகர் திலகத்தின் அரசியல் பயணத்தில் எழுதியிருக்கிறேன்]. கொந்தளித்த ரசிகர்களை நடிகர் திலகம் அமைதிப்படுத்தியிருந்தார். எனவே போலீஸ் லாட்டி வீச ஆரம்பித்தவுடன் ரசிகர்கள் ஒன்று திரண்டு போலீசை சுற்றி வளைத்து "உங்களுக்கு கணேசன் ரசிகர்கள்னா இளிச்சவாயங்களா தெரியுதா?" என்று தகராறு செய்ய ஆரம்பிக்க நிலைமை ரசாபாசம் ஆவதற்குள் உள்ளே அனுமதித்து விட்டார்கள்.
படம் ஆரம்பிக்கும் முன் எங்கிருந்தோ வந்தாள் படத்தை பற்றிய செய்திகளை [அங்கே வந்திருந்த பெரும்பாலோர் பார்த்து விட்டவர்கள். காரணம் ஷோக்கள் நடந்த விதம் அப்படி. சொர்க்கம் 4 காட்சிகள். எங்கிருந்தோ வந்தாள் 5 காட்சிகள்.காலை 9 மணி அல்லது பகல் 12 மணி காட்சி ev பார்த்து விட்டு மாலை இங்கே வந்து விட்டார்கள்] அவர்கள் சொல்ல சொல்ல எதிர்பார்ப்பு எகிறியது. இங்கே படம் ஆரம்பிக்க டைட்டிலுக்கு முன்பே முதல் காட்சி. அதில் நடிகர் திலகம் தோன்ற தியேட்டரில் ரணகளம். பொன்மகள் வந்தாள் பாட்டு ஸினெல்லாம் பார்க்கவே முடியவில்லை. சீட் மேல் ஏறிக்கொண்டு டான்ஸ். ஒவ்வொரு ஸ்டைலுக்கும் அலப்பறை. ஒரு முத்தாரத்தில் பாடலில் வரும் நடைக்கும், "நீலவானம் மெல்ல மெல்ல சிவந்து போனதேன்" வரிகளில் கண்கள் சிவந்த நடிகர் திலகத்தின் க்ளோஸ் அப் ஷாட்க்கும் செம கிளாப்ஸ். நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் இடம் பெற்ற மிக சிறந்த சண்டை காட்சிகளில் ஒன்று சொர்க்கம் படத்தில் வந்த ஓடும் ரயிலில் நடக்கும் சண்டை. அந்த நேரத்தில் தியேட்டரே இரண்டு பட்டது. [சில பல உணர்ச்சிவசமான முழக்கங்கள்]. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். படம் முடிந்தது. ரொம்ப சந்தோஷமாக வெளியே வந்தோம்.
அடுத்த மூன்று நாட்களில் ஞாயிறன்று மாட்னி எங்கிருந்தோ வந்தாள் பார்த்தேன். இந்த படங்கள் வெளிவந்து ஒரு மாதத்திற்குள்ளாக நவம்பர் 27 வெள்ளி அன்று பாதுகாப்பு தங்கம் தியேட்டரில் வெளியானது. அதை வழக்கம் போல் மூன்றாவது நாள் பார்த்தேன்.
1970-ல் முதல் நாள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. ஆகவே அடுத்த வருஷம் ஓபனிங் ஷோ பார்த்து விடலாம் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் விதி சதி செய்தது.1971 -ல் முதல் படம் இரு துருவம். பொங்கலன்று நியூசினிமாவில் வெளியானது. பொங்கல் என்பதால் போக முடியவில்லை. மூன்றாவது நாள் தியேட்டர் விஜயம். அடுத்த படம் தங்கைக்காக. பிப் 6 அன்று ஸ்ரீதேவியில் ரிலீஸ். உடல் நிலை சரியில்லாததால் போக முடியவில்லை. மூன்று வாரங்களுக்கு பிறகே பார்க்க முடிந்தது. அந்த வருடத்தின் மூன்றாவது படம் அருணோதயம். மார்ச் 5 வெள்ளியன்று நியூசினிமாவில் வெளியானது. அன்று தமிழக சட்டசபைக்கும் இந்திய நாடாளுமன்றத்திற்கும் பொதுத் தேர்தல். எனவே போகவில்லை. ஞாயிறன்று சென்றேன். அந்த மாதத்திலே 26ந் தேதி ஸ்ரீதேவியில் குலமா குணமா ரிலீஸ். ஆனால் பரீட்சை. பதினைந்து நாட்களுக்கு பிறகே பார்க்க முடிந்தது. லீவ் விட்டவுடன் ஒரே நாளில் அதாவது ஏப்ரல் 14 அன்று இரண்டு படங்கள் வெளியாகியும் எதுவுமே பார்க்க முடியவில்லை. சுமதி என் சுந்தரி அலங்கார் தியேட்டரிலும், பிராப்தம் (சென்ட்ரல் சினிமா) இரண்டு படங்களையும் முதல் வாரத்தில் பார்த்தேன்.
இப்படியிருக்க நடிகர் திலகத்தின் 150-வது படம் சவாலே சமாளி ஸ்ரீதேவியில் ஜூலை 3 சனிக்கிழமை வெளியாகிறது. ஓபனிங் ஷோ பார்க்கவேண்டும் என்று மிகுந்த முயற்சி எடுத்தும் ஸ்கூல் இருந்ததால் போக முடியவில்லை. முதல் வாரம் பார்த்தேன். அடுத்த படம் தேனும் பாலும் அதே மாதம் (ஜூலை) 22 அன்று சிந்தாமணியில் வெளியானது. இந்த படம் வெகு நாட்களாக தயாரிப்பில் இருந்ததால் பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லை. நான் ரிலீஸ் தியேட்டரில் படம் பார்க்கவில்லை. ஷிப்டிங் தியேட்டரில் தான் பார்த்தேன். அடுத்த மாதம் ஆகஸ்ட் 14 சனியன்று மூன்று தெய்வங்கள் ஸ்ரீமீனாட்சியில் ரிலீஸ். இரண்டாவது நாள் பார்த்தோம். அந்த வருடத்தின் கடைசி படம் பாபு அக்டோபர் 18 தீபாவளியன்று ஸ்ரீதேவியில் வெளியானது. இந்த முயற்சியும் தோல்வி அடைய சில நாட்கள் சென்ற பிறகே பாபு பார்க்க முடிந்தது. மொத்தத்தில் 1971-ல் ஓபனிங் டே அன்று கூட பார்க்க முடியவில்லை என்கிறபோது ஓபனிங் ஷோ எங்கே பார்ப்பது.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th April 2014, 06:45 PM
#14
Senior Member
Senior Hubber
முரளி சார் நீங்கள் சொன்ன ஒவ்வொரு தியேட்டரிலும் (ஸ்ரீதேவி வீட்டுக்குப் பக்கம் உள்ள தியேட்டர்- கொல்லைப் புற வாசலிலிருந்து எட்டிப் பார்த்தால் தியேட்டர் தெரியும்.. ) நீங்கள் சொன்ன வருடங்களிலேயே அந்தந்த தியேட்டருக்கு வீட்டில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்..ரொம்ப குட்டிப் பையனாய் இருந்தேன் அப்போது!! நியூசினிமா ராமன் எத்தனை ராமனடி.. நினைவிருக்கிறது..எ.வ.. கூட்ட நெரிசலில் வீட்டில் கூட்டிச் சென்றார்கள் - தீபாவளிக்கு மறு நாள் என நினைவு..சவாலே சமாளியும் ஸ்ரீதேவி தான்!!(ஏழு வயதுப்பையன் துறு துறுவென ஒல்லிஒல்லியாய் நீங்கள் பார்த்திருப்பீர்களேயானால் அது நான் தான்
)
-
10th April 2014, 09:47 PM
#15
சின்ன கண்ணன், நன்றி பல. <Dig> நீங்கள் இருந்தது கிருஷ்ணராயர் தெப்பக்குள தெருவா? இல்லை இரட்டை தெருவா? சேதுபதி ஹை ஸ்கூல்? 71-ல் ஏழு வயதா? ஓகே. உங்களைப் பார்த்திருக்கலாம். 70-களின் இறுதியிலும் அதே ஏரியாவில்தான் இருந்தீர்களா? <end Dig>
அன்புடன்
-
12th April 2014, 12:15 AM
#16
அந்த நாள் ஞாபகம் - V
மருத்துவர்கள் (Physiatrist), obsessive compulsive disorder என்று ஒரு நிலைமையை குறிப்பிடுவார்கள் அதாவது ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப செய்து கொண்டிருப்பதை இப்படி குறிப்பிடுவார்கள். எனக்கு அதற்கு நேர்மாறான நிலை. ஒன்றை செய்ய வேண்டும் என்று பல முறை முயற்சித்தும் முடியாத நிலைமை. கிட்டத்தட்ட ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று ஒரு obsession மனதுக்குள் உருக் கொண்டு விட்டது. 1972 பிறக்கிறது. பாலாஜி நடிகர் திலகத்தை வைத்து ராஜா படம் தயாரித்துக் கொண்டிருக்கிறார். அது ஜானி மேரா நாம் என்ற இந்தி படத்தின் ரீமேக். அந்த படம் மதுரையில் வெளியானது. தேவ் ஆனந்த், ஹேமமாலினி நடித்த அந்த படத்தை பார்த்தேன். ரசிக்கும்படியாக இருந்தது. ராஜா 1971 வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. முதல் காட்சி நடிகர் திலகம் டென்னிஸ் ராக்கெட்டை எடுத்துக் கொண்டு ஹோட்டல் ரூமுக்கு வந்து ஜெஜெ-வை சந்திக்கும் காட்சி படமாக்கப்பட்டது. நடிகர் திலகம் டென்னிஸ் ராக்கெட்டுடன் ஸ்டைலாக நிற்கும் போஸ் பத்திரிகைகளில் வெளியானது. தொடர்ந்து படப்பிடிப்பு பற்றி பல செய்திகள். இது எல்லாம் படத்தை பற்றிய எதிர்பார்புகளை தூண்டி விட்டு கொண்டிருந்தன. படம் வெளியாவதற்கு பத்து நாட்கள் முன் படத்தின் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு வெளியானது.
அந்த நேரத்தில் மதுரையில் டவுன் ஹால் ரோட்டில் உள்ள தாஜ் ஹோட்டலில் ஜுக் பாக்ஸ் வைக்கப்பட்டது. இது பற்றி அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதில் சேகரித்து வைத்திருக்க கூடிய பாடல்களில் நமக்கு தேவையான பாடலை பணம் கொடுத்து கேட்கலாம். அன்றைய காலத்தில் இருபத்தஞ்சு காசுகள் கொடுத்தால் போதும். அதை சாதாரணமாக ஹோட்டலுக்கு சாப்பிட வருபவர்கள் பயன் படுத்துவார்கள்.
ஆனால் ராஜா பட பாடல்கள் அதில் இருக்கிறது என்று தெரிந்தவுடன் ரசிகர் கூட்டம் படையெடுக்க ஆரம்பித்து விட்டது. ஆனால் இவர்கள் சாப்பிட செல்லாமல் பாட்டை மட்டும் கேட்க செல்ல ஆரம்பித்தனர். முதலில் வருமானம் என்று நினைத்து அனுமதித்த ஹோட்டல் நிர்வாகம், குவிய ஆரம்பித்த கூட்டத்தையும் பார்த்து விட்டு, அவர்கள் திரும்ப திரும்ப இந்த ஒரு பட பாடல்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்ததால் ஜுக் பாக்ஸ் ரிப்பேர் என்று போர்டு எழுதி மாட்டி விட்டார்கள்.
சென்ட்ரல் சினிமாவில் ராஜா வெளியாவதாக இருந்தது. அப்போது ஓடிக் கொண்டிருந்த படத்தின் இடைவேளையில் ராஜா படத்தின் பாடல்களும் சில வசனங்களும் ஒலிப்பரப்பட, அதை கேட்பதற்காக சென்ட்ரல் சினிமா அருகில் இருக்கும் சின்ன சந்தில் இடைவேளை நேரத்தில் ஏகப்பட்ட கூட்டம். என் கஸினின் நண்பன் வீடு தியேட்டர் அருகில் இருந்தது. நாங்கள் அங்கே சென்று கேட்டோம். ஆனால் தெளிவாக காதில் விழவில்லை. ஆனால் அதுவே மேலும் ஆவலை கிளப்பி விட்டது. படம் எப்படியும் ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தோம். வீட்டில் ஒரு வழியாக அனுமதி வாங்கினோம். நாள் நெருங்க நெருங்க டென்ஷன். இந்த நேரத்தில் மதுரை ஸ்ரீதேவியில் 89 நாட்கள் ஓடிய பாபு பொங்கலன்று வெளியான அகத்தியருக்காக மாற்றப்பட்டபோது ரசிகர்கள் மிகுந்த கோபமும் வருத்தமும் அடைந்தார்கள். சென்னையில் ஜனவரி 25 அன்று பாபு 100 நாட்களை கடக்கிறது. ரசிகர்கள் அதை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள்.
ராஜா போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விட்டன. ஒரே கலரில் பாண்ட் ஷர்ட் அணிந்து கழுத்தில் ஸ்கார்ப் கட்டிய நடிகர் திலகம். வாவ்! ஜனவரி 26 புதன்கிழமை. ஸ்கூலில் நெருங்கிய நண்பர்களிடம் ஓபனிங் ஷோ போவது பற்றி பெருமையுடன் சொல்லியாகி விட்டது.[எங்க மாமா ஓபனிங் டே பார்த்ததையே ஒரு இமாலய சாதனையாக சொல்லியாகி விட்டது. முதல் நாள் சிவாஜி, எம்.ஜி.ஆர் படம் பார்ப்பது என்பது ஒரு பெரிய விஷயமாக இருந்த அந்த காலக்கட்டத்தில், நான் ஒரு ஹீரோ போல் பார்க்கப்பட்டேன்].
முதல் நாள் இரவெல்லாம் சரியாக தூங்கவில்லை. காலையில் வெகு சீக்கிரமாகவே எழுந்து விட்டேன். குளித்து ரெடியாகி கிளம்பி விட்டோம். காலை 8 மணிக்கெல்லாம் தியேட்டர் பக்கம் போயாகி விட்டது. கஸினின் Friend வீட்டுக்கு போய் விட்டோம். காலை 9 மணிக்கு தியேட்டருக்கு கிளம்பி விட்டோம். மெயின் கேட்டில் பயங்கர கூட்டம் என்பதால் பின் பக்க கேட் வழியாக போகலாம் என்று அங்கே போய் விட்டோம். சொர்க்கம் போல் அவ்வளவு பிரச்சனைகள் இல்லை. உள்ளே சென்று டிக்கெட்டை வாங்கி கொண்டு அரங்கத்தில் நுழைந்த போது அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே, விவரிக்க முடியாத சிறு வயது சந்தோஷங்களில் ஒன்று.
10.30 மணிக்கு பெல் அடிக்கிறது. விளம்பரங்களோ, இந்தியன் நியூஸ் ரிவியு குறிப்பாக தமிழக அரசின் செய்தி துறை செய்திகள் எதுவும் இல்லாமல் எடுத்தவுடன் படம். சுஜாதா சினி ஆர்ட்ஸ் எம்ப்ளம் அப்படியே முன்பக்கமாக திரும்ப பின்னணியில் பல்வேறு கலர்கள் பளிச்சிட[ஏற்கனவே எங்கிருந்தோ வந்தாளிலேயே இது வந்திருந்தாலும்] அதகளம் ஆரம்பமானது. இது ஒரு மூவி மேக்கர்ஸ் கவுன்சில் சித்திரம் என்ற கார்ட் முதலில் வந்தது.[இந்த அமைப்பு பாலாஜி, ஸ்ரீதர், திருலோக்சந்தர், மாதவன், முக்தா ஸ்ரீநிவாசன் போன்றவர் சேர்ந்து உருவாக்கியது].
அது வரை தமிழ் படங்களில் பார்க்காத டைட்டில். எழுத்துகளின் பின்னணியில் வித விதமான டிசைன்கள், கலர்கள். [அது நாள் வரை டைட்டில்களை சாதாரணமாக பார்த்த ரசிகர் கூட்டம் இந்த படத்தின் டைட்டில்களுக்காகவே மீண்டும் மீண்டும் பார்த்தனர்]. நடிகர் திலகத்தின் பெயர் காண்பித்த போது திரையே தெரியாத அளவிற்கு பேப்பர்மாரி. என் தலையில் ஒரு கூடை பேப்பர். சில டிசைன்கள் மிக பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தியது. மெல்லிசை மன்னரின் பெயர் வரும் போது ஒரு வளையம் மற்றொரு வளையத்திலிருந்து வெளியேறுவது போல அமைக்கப்பட்டிருந்தது அதில் ஒன்று. டைட்டில் முடிய படம் ஆரம்பிக்கிறது
முதலில் சிறுவர்களாக இருக்கும் சகோதரர்கள் போட்டியில் பங்கு பெறுவது இடம் பெறும் அதைப் பற்றி விலாவாரியாக எழுத தேவையில்லை. காரணம் அனைவருக்கும் கதை தெரியும் மேலும் இந்த படத்தை பற்றி மிக விளக்கமாக சாரதா இந்த திரியிலே எழுதியிருக்கிறார். நான் சொல்ல வந்தது என்னவென்றல் இந்தி படம் பார்த்த எங்களை போன்றவர்களுக்கு நடிகர் திலகம் திரையில் தோன்றுவதற்கு சிறிது நேரம் ஆகும் என்று தெரியும். ஆனால் அது தெரியாத ரசிகர்கள் எப்படி ரீயாக்ட் பண்ணுவார்கள் என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் இயக்குனர் சி.வி.ஆர் அந்த எண்ணமே தோன்ற விடாமல் விறுவிறுப்பாக கொண்டு செல்வார். மூத்த மகன் பெரியவனாகி பாலாஜியாவது, விஸ்வம் சிங்கப்பூரிலிருந்து வைரங்களோடு கிளம்பியிருப்பான் என்று சொல்வது, மனோகர் வருவது, காரில் ஏறப்போகும் அவரிடம் சிவப்பு விக் அணிந்த கையாள் உதடே அசையாமல் போலீஸ் அந்த காரிலே உன்னை பாலோ பண்ணுது என்று சொல்லிவிட்டு போவது, மனோகர் டென்னிஸ் ராக்கெட்டை கிளப்-ல் மாற்றுவது, மது விலக்கு சட்டதின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு மேஜர் அவரை மடக்குவது என்று படு சுவராஸ்யமாக படம் போக, செல்லில் அடைக்கப்படும் மனோகர் சிகரெட்டை பற்ற வைக்க லைட்டரை தேட, கோட் அணிந்த ஒரு கை லைட்டரோடு நீள, தியேட்டரில் இடி மின்னல் பிரளயம். சேரில் உட்கார்ந்திருந்த மொத்த மக்களும் இப்போது அதன் மேல் ஏறி நிற்க, அடுத்த சில நிமிடங்களுக்கு யாருமே படத்தில் என்ன நடந்தது என்று பார்க்க முடியவில்லை என்பது தான் உண்மை. நடிகர் திலகத்தின் அறிமுக காட்சி அதற்கு முன்பு அவ்வளவு அமர்க்களமாக அமைந்ததில்லை. அந்த காட்சியின் தொடர்ச்சியாக இரண்டு மூன்று ஜெயில் காட்சிகள் வரும். அடுத்து சின்ன சண்டை காட்சி. மறுபடியும் இங்கே அதகளம்.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
13th April 2014, 10:21 AM
#17
Senior Member
Senior Hubber
இரண்டு நாட்கள் ஏனெனத் தெரியவில்லை..இந்தப் பக்கமும், ப்ரைவேட் மெஸேஜூம் ஓபனே ஆகவில்லை..எனில் இன்று திறக்கமுடிந்ததும் எழுதுகிறேன்..தாமதமான பதிலுக்கு மன்னிக்க முரளி சார்..
கி.தெ..மேலத் தெரு.. ஒரு வேதபாடசாலை இருந்தது..அதற்கு எதிர் வீடு..வே.பா மறைந்து அங்கு ஒரு டாக்டர்வீடும்,ப்ரஸ்ஸீம் தோன்றிப் பலகாலம் ஆகிவிட்டன(82)..படித்தது மங்கையர்க்கரசி, செய்ண்ட்மேரிஸ்..மதுரையை முழுமையாக விட்டது 87ன் இறுதியில்..

Originally Posted by
Murali Srinivas
சின்ன கண்ணன், நன்றி பல. <Dig> நீங்கள் இருந்தது கிருஷ்ணராயர் தெப்பக்குள தெருவா? இல்லை இரட்டை தெருவா? சேதுபதி ஹை ஸ்கூல்? 71-ல் ஏழு வயதா? ஓகே. உங்களைப் பார்த்திருக்கலாம். 70-களின் இறுதியிலும் அதே ஏரியாவில்தான் இருந்தீர்களா? <end Dig>
அன்புடன்
-
15th April 2014, 02:07 PM
#18
Senior Member
Senior Hubber
எந்தப் படமுமே ஓப்பனிங்க் ஷோ எனப் போனதுகிடையாது..வீட்டில் அட்லீஸ்ட் ஒரு வாரமாவது எடுக்கும்..அம்மா அக்காக்கள் சூழத்தான் செல்வது வழக்கம்..வெகு சின்னவயது ராஜா வந்த சமயத்தில்.. ரிக்*ஷாவோ குதிரை வண்டியோ கட்டிக் கொண்டு போய் ஒரு வார நாளில் (சனி ஞாயிறென்றால் கூட்டம் அம்முமே) பார்த்தோம் என நினைக்கிறேன்..இருந்தாலும் என் நல்ல மனசுக்கு உதாரணமாக அந்த வயதிலேயே- படத்தில் பத்மா கன்னா இறந்து போவது வேதனையாக இருந்தது..! 
பின் பாடல்கள்.. நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன் என்று வீட்டுக்கு வந்தவுடன் பாடியது - பாரேன் இந்தக் கற்பூர புத்தியெல்லாம் பாடத்துல காட்டு என அக்காவோ அம்மாவோ சொன்னது நினைவில்..
ம்ம் அடுத்த இஷ்யூ எப்போ எழுதுவீங்க முரளிசார்?
-
15th April 2014, 10:41 PM
#19
சின்ன கண்ணன்,
தகவல்களுக்கு நன்றி. 70-களின் இறுதியில் நீங்கள் அதே தெருவில்தான் இருந்தீர்கள் என சொல்லும் போது நீங்கள் என்னையும் நான் உங்களையும் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது, யாரென்று தெரியாமலே. காரணம் அந்த ஒர்க் ஷாப் ரோட்டில் எனக்கு நிறைய நண்பர்கள். தினந்தோறும் அங்கே வருவேன்.
இதோ நீங்கள் கேட்ட அடுத்த பகுதி.
அன்புடன்
-
15th April 2014, 10:51 PM
#20
அந்த நாள் ஞாபகம்
அதன் பிறகு ஒவ்வொரு காட்சிக்கும் விசில் பறக்கிறது. ஒவ்வொரு ஸ்டைல் போஸிற்கும் ஆரவாரம். ஹோட்டல் ரூமில் டென்னிஸ் ராக்கெட்-ஐ கொடுக்க செல்லும் போது வரும் கிண்டல், நீ வர வேண்டும் பாடலில் வரும் விளையாட்டுகள், ஏர்போர்ட்-ல் போலீஸ் அழைத்து செல்ல அங்கே வைத்து தான் சிவாஜி ஒரு ரகசிய போலீஸ் அதிகாரி என்பது தெரிய வரும் அழகான ட்விஸ்ட் இவை எல்லாமே ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. மேஜர் கொடுக்கும் சிகரெட் லைட்டர் கேமரா, மைக்ரோபோன் போன்றவை அன்று ஒரு புதுமையாக இருந்தது.
விமானத்தில் கொச்சி செல்லும் போது வருவார் இரண்டாவது சந்திரபாபு. அவர் பேசும் ஒரு வசனத்திற்கு மட்டும் பலத்த எதிர்ப்பு கூக்குரல்கள் எழுந்தன [நீரும் நெருப்பும்]. கொச்சி ஏர்போர்டில் போலீஸ், டைரியை சோதனையிட அதில் இருக்கும் நீளமான சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டே நடிகர் திலகம் போலீசிற்கு ஆஃபர் செய்யும் இடம் செம கிளாப்ஸ்.
நான் முன்பே சொன்னது போல படம் விறு விறு. ஆகவே சிவாஜியை கட்டி வைத்து பாலாஜி கேள்வி கேட்கும் இடம், மயிலாப்பூரில் சென்று செக் பண்ணுவது என்று படம் படு ஸ்பீட். இந்த நேரத்தில் பின்னணி இசை பற்றி குறிப்பிட வேண்டும். அதுவரை தமிழ் சினிமாவில் வராத முறையில் கார்கள் செல்லும் போது இசை+ பின்னணி குரல் ஒலித்த விதம் ரசிகர்ளை வெகுவாகவே கவர்ந்தது. மெல்லிசை மன்னர் பிரமாதப்படுத்தியிருந்தார்
ஆனால் தியேட்டரே எழுந்து ஆடியது ரந்தாவா சண்டைக்காட்சியின் போதுதான். அதிலும் நடிகர் திலகம் கதவில் சாய்ந்து நின்று கொண்டு சிகரெட்டை கடைசி பப் எடுத்துவிட்டு கீழே போட்டு நசுக்கி விட்டு "நான் எப்பவும் கடன் வச்சுகிறதிலே" என்று ஆரம்பிக்கும் போது சேரில் எழுந்து நிற்க ஆரம்பித்த மக்கள் சண்டை முடிந்து தான் கீழே இறங்கினார்கள்.
அதன் பிறகு சிவாஜி ரங்கராவ் சந்திப்பு பிறகு பத்மா கண்ணாவின் கண்களை கொண்டு வா டான்ஸ் எல்லாம் கொஞ்சம் அமைதி. மறுபடியும் கவர்ச்சி வில்லன் கண்ணனோடு சண்டை காட்சி வர சூடு பிடித்தது. அதிலும் கண்ணன் மாற்று முகாமை சேர்ந்தவர் என்பதால் சூடு + கோஷங்கள் அதிகமாகவே ஒலித்தது. அது முடிந்து கல்யாண பொண்ணு பாடல். மறுபடியும் ஸ்டாண்ட் அப் ஆன் த பெஞ்ச். பெரியவர்களுக்கே மறைக்கும். எனக்கு சுத்தம். நான் என் கஸினிடம் "என்ன இது ஆ ஊ -ன்னா சேர் மேல ஏறிறாங்க" என்று கேட்க அவன் ரொம்ப சிம்பிளா "ஓபனிங் ஷோ-ன்னா அப்படிதான் இருக்கும்" என்றான். பாட்டோடு இன்டெர்வல். வெளியில் வருகிறோம். அடுத்த ஷோவிற்கு அப்போதே வரிசை நிற்கிறது. படம் ஓஹோ என்று இங்கிருந்து சொல்ல வெளியே சர வெடிகள் தெருவையே ஒரு வழி ஆக்கியது.
இடைவேளை முடிந்து மீண்டும் படம் ஆரம்பித்தது. நடிகர் திலகத்தை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்று ஜெஜெ சொல்வதற்கு ஏற்ப பாலாஜி செயல்படுவார். பிறகு அந்த கோவில் நகைகளை கொள்ளை அடிக்கும் திட்டத்தை பாலாஜி போடுவார். சிறிது நேரத்திற்கு சிவாஜி இல்லாமலே காட்சிகள் ஓடும். கங்கையிலே ஒடமில்லையோ பாடல் காட்சியில் எல்லாம் தியேட்டர் அமைதியாகவே இருந்தது. அந்த காட்சியின் முடிவில் போலீஸ் யூனிபார்ம் அணிந்து நடிகர் திலகம் தோன்றிய போது மறுபடியும் தியேட்டரில் பயங்கர ஆரவாரம்.
இதன் பிறகு தான் கதையின் முக்கிய திருப்பமாக மனோகர் வந்து பாலாஜியை சந்திக்கும் காட்சி. உண்மைகளை ஒவ்வொன்றாக மனோகர் உடைத்து கடைசியாக "பாபு, இந்திய மாப்-லே தெற்கு கூர்மையா இருக்கு. தெற்கே இருக்கும் போலிஸாருக்கும் அறிவு கூர்மை" என்று சொல்லும் காட்சியில் பலத்த கைதட்டல். சிவாஜி - பாலாஜி சண்டை, பிறகு பாலாஜியை மேஜரிடம் கூட்டிக் கொண்டு போய் நம்ம சந்தர் என்று அறிமுகப்படுத்துவது, ரங்கராவ் போட்டோவை பார்த்து விட்டு ராஜா இவன்கிட்டே தீர்க்க வேண்டிய பழைய கணக்கு ஒண்ணு இருக்கு" என்று மேஜர் சொன்னவுடன் நடிகர் திலகம் போட்டோவை குத்தும் காட்சிக்கும் ஒரே அப்ளாஸ்.
இதற்கு பிறகு படம் பயங்கர ஸ்பீட். இரண்டில் ஒன்று பாட்டில் ஒவ்வொரு கதவு, ஒவ்வொரு ஜன்னல் வழியாகவும் நடிகர் திலகம் உள்ளே நுழைய பார்க்க அது ஆரவாரமாக வரவேற்கப்பட்டது. அடுத்து கிளைமாக்ஸ். தமிழ் பட வரலாற்றிலே ராஜாவில் வந்தது போல அவ்வளவு நீண்ட கிளைமாக்ஸ் (கிட்டத்தட்ட 20- 25 நிமிடங்கள்) இடம் பெற்ற படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் (இன்று பார்த்தால் கூட) இருக்கும். பணடரிபாயை மனோகர் சாட்டையால் அடிக்க நடிகர் திலகம் கர்சிஃபை பல்லில் கடித்தபடி தொடர்ந்து சிரிப்பார். கண்களில் கண்ணீர் கட்டி நிற்கும். அதை அடக்கி கொண்டு அவர் சிரிக்க சிரிக்க இங்கே தியேட்டரில் ரசிகர்களின் உணர்ச்சி அணை உடைத்து பாய்ந்தது.
படம் முடிய ரசிகர்களுக்கு பயங்கர சந்தோஷம். ஒரே சுரத்தில் அனைவரும் படம் பிடித்திருப்பதாக சொல்ல, வெளியே வருகிறோம். பின் பக்க கேட் வழியாக வர வேண்டும். அந்த இடத்தில் சர வெடிகளை தொடர்ந்து கொளுத்த, நடிகர் திலகத்தை வாழ்த்தி கோஷங்கள், கைதட்டல், டான்ஸ், ஆரவாரம் என்று கூட்டம் மேலமாசி வீதி முழுக்க ஆடிப்பாடிக்கொண்டே போனது. ஒரு பகுதியினர் முன்பக்க கேட் பக்கம் வந்து அதே போல கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அந்த மூன்று மணி நேர நினைவுகளை அசை போட்டுக்கொண்டே நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.
என்னைப் பொருத்த வரை நான் முதலில் சொன்னது போல என்றென்றும் மனதில் சேகரித்து வைத்திருக்கும் சில சிறு வயது சந்தோஷங்களில் ஒன்று இந்த அனுபவம். நண்பர் tacinema மூலமாக அதை மீண்டும் இங்கே நினைவு கூற ஒரு வாய்ப்பு கிடைத்தது. இது போல மனதில் உள்ள வேறு சில அனுபவங்களை சந்தர்ப்பம் வரும் போது பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks