Results 1 to 10 of 123

Thread: அந்த நாள் ஞாபகம்...

Hybrid View

  1. #1
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அந்த நாள் ஞாபகம் - V

    மருத்துவர்கள் (Physiatrist), obsessive compulsive disorder என்று ஒரு நிலைமையை குறிப்பிடுவார்கள் அதாவது ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப செய்து கொண்டிருப்பதை இப்படி குறிப்பிடுவார்கள். எனக்கு அதற்கு நேர்மாறான நிலை. ஒன்றை செய்ய வேண்டும் என்று பல முறை முயற்சித்தும் முடியாத நிலைமை. கிட்டத்தட்ட ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று ஒரு obsession மனதுக்குள் உருக் கொண்டு விட்டது. 1972 பிறக்கிறது. பாலாஜி நடிகர் திலகத்தை வைத்து ராஜா படம் தயாரித்துக் கொண்டிருக்கிறார். அது ஜானி மேரா நாம் என்ற இந்தி படத்தின் ரீமேக். அந்த படம் மதுரையில் வெளியானது. தேவ் ஆனந்த், ஹேமமாலினி நடித்த அந்த படத்தை பார்த்தேன். ரசிக்கும்படியாக இருந்தது. ராஜா 1971 வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. முதல் காட்சி நடிகர் திலகம் டென்னிஸ் ராக்கெட்டை எடுத்துக் கொண்டு ஹோட்டல் ரூமுக்கு வந்து ஜெஜெ-வை சந்திக்கும் காட்சி படமாக்கப்பட்டது. நடிகர் திலகம் டென்னிஸ் ராக்கெட்டுடன் ஸ்டைலாக நிற்கும் போஸ் பத்திரிகைகளில் வெளியானது. தொடர்ந்து படப்பிடிப்பு பற்றி பல செய்திகள். இது எல்லாம் படத்தை பற்றிய எதிர்பார்புகளை தூண்டி விட்டு கொண்டிருந்தன. படம் வெளியாவதற்கு பத்து நாட்கள் முன் படத்தின் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு வெளியானது.

    அந்த நேரத்தில் மதுரையில் டவுன் ஹால் ரோட்டில் உள்ள தாஜ் ஹோட்டலில் ஜுக் பாக்ஸ் வைக்கப்பட்டது. இது பற்றி அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதில் சேகரித்து வைத்திருக்க கூடிய பாடல்களில் நமக்கு தேவையான பாடலை பணம் கொடுத்து கேட்கலாம். அன்றைய காலத்தில் இருபத்தஞ்சு காசுகள் கொடுத்தால் போதும். அதை சாதாரணமாக ஹோட்டலுக்கு சாப்பிட வருபவர்கள் பயன் படுத்துவார்கள்.

    ஆனால் ராஜா பட பாடல்கள் அதில் இருக்கிறது என்று தெரிந்தவுடன் ரசிகர் கூட்டம் படையெடுக்க ஆரம்பித்து விட்டது. ஆனால் இவர்கள் சாப்பிட செல்லாமல் பாட்டை மட்டும் கேட்க செல்ல ஆரம்பித்தனர். முதலில் வருமானம் என்று நினைத்து அனுமதித்த ஹோட்டல் நிர்வாகம், குவிய ஆரம்பித்த கூட்டத்தையும் பார்த்து விட்டு, அவர்கள் திரும்ப திரும்ப இந்த ஒரு பட பாடல்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்ததால் ஜுக் பாக்ஸ் ரிப்பேர் என்று போர்டு எழுதி மாட்டி விட்டார்கள்.

    சென்ட்ரல் சினிமாவில் ராஜா வெளியாவதாக இருந்தது. அப்போது ஓடிக் கொண்டிருந்த படத்தின் இடைவேளையில் ராஜா படத்தின் பாடல்களும் சில வசனங்களும் ஒலிப்பரப்பட, அதை கேட்பதற்காக சென்ட்ரல் சினிமா அருகில் இருக்கும் சின்ன சந்தில் இடைவேளை நேரத்தில் ஏகப்பட்ட கூட்டம். என் கஸினின் நண்பன் வீடு தியேட்டர் அருகில் இருந்தது. நாங்கள் அங்கே சென்று கேட்டோம். ஆனால் தெளிவாக காதில் விழவில்லை. ஆனால் அதுவே மேலும் ஆவலை கிளப்பி விட்டது. படம் எப்படியும் ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தோம். வீட்டில் ஒரு வழியாக அனுமதி வாங்கினோம். நாள் நெருங்க நெருங்க டென்ஷன். இந்த நேரத்தில் மதுரை ஸ்ரீதேவியில் 89 நாட்கள் ஓடிய பாபு பொங்கலன்று வெளியான அகத்தியருக்காக மாற்றப்பட்டபோது ரசிகர்கள் மிகுந்த கோபமும் வருத்தமும் அடைந்தார்கள். சென்னையில் ஜனவரி 25 அன்று பாபு 100 நாட்களை கடக்கிறது. ரசிகர்கள் அதை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள்.

    ராஜா போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விட்டன. ஒரே கலரில் பாண்ட் ஷர்ட் அணிந்து கழுத்தில் ஸ்கார்ப் கட்டிய நடிகர் திலகம். வாவ்! ஜனவரி 26 புதன்கிழமை. ஸ்கூலில் நெருங்கிய நண்பர்களிடம் ஓபனிங் ஷோ போவது பற்றி பெருமையுடன் சொல்லியாகி விட்டது.[எங்க மாமா ஓபனிங் டே பார்த்ததையே ஒரு இமாலய சாதனையாக சொல்லியாகி விட்டது. முதல் நாள் சிவாஜி, எம்.ஜி.ஆர் படம் பார்ப்பது என்பது ஒரு பெரிய விஷயமாக இருந்த அந்த காலக்கட்டத்தில், நான் ஒரு ஹீரோ போல் பார்க்கப்பட்டேன்].

    முதல் நாள் இரவெல்லாம் சரியாக தூங்கவில்லை. காலையில் வெகு சீக்கிரமாகவே எழுந்து விட்டேன். குளித்து ரெடியாகி கிளம்பி விட்டோம். காலை 8 மணிக்கெல்லாம் தியேட்டர் பக்கம் போயாகி விட்டது. கஸினின் Friend வீட்டுக்கு போய் விட்டோம். காலை 9 மணிக்கு தியேட்டருக்கு கிளம்பி விட்டோம். மெயின் கேட்டில் பயங்கர கூட்டம் என்பதால் பின் பக்க கேட் வழியாக போகலாம் என்று அங்கே போய் விட்டோம். சொர்க்கம் போல் அவ்வளவு பிரச்சனைகள் இல்லை. உள்ளே சென்று டிக்கெட்டை வாங்கி கொண்டு அரங்கத்தில் நுழைந்த போது அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே, விவரிக்க முடியாத சிறு வயது சந்தோஷங்களில் ஒன்று.

    10.30 மணிக்கு பெல் அடிக்கிறது. விளம்பரங்களோ, இந்தியன் நியூஸ் ரிவியு குறிப்பாக தமிழக அரசின் செய்தி துறை செய்திகள் எதுவும் இல்லாமல் எடுத்தவுடன் படம். சுஜாதா சினி ஆர்ட்ஸ் எம்ப்ளம் அப்படியே முன்பக்கமாக திரும்ப பின்னணியில் பல்வேறு கலர்கள் பளிச்சிட[ஏற்கனவே எங்கிருந்தோ வந்தாளிலேயே இது வந்திருந்தாலும்] அதகளம் ஆரம்பமானது. இது ஒரு மூவி மேக்கர்ஸ் கவுன்சில் சித்திரம் என்ற கார்ட் முதலில் வந்தது.[இந்த அமைப்பு பாலாஜி, ஸ்ரீதர், திருலோக்சந்தர், மாதவன், முக்தா ஸ்ரீநிவாசன் போன்றவர் சேர்ந்து உருவாக்கியது].

    அது வரை தமிழ் படங்களில் பார்க்காத டைட்டில். எழுத்துகளின் பின்னணியில் வித விதமான டிசைன்கள், கலர்கள். [அது நாள் வரை டைட்டில்களை சாதாரணமாக பார்த்த ரசிகர் கூட்டம் இந்த படத்தின் டைட்டில்களுக்காகவே மீண்டும் மீண்டும் பார்த்தனர்]. நடிகர் திலகத்தின் பெயர் காண்பித்த போது திரையே தெரியாத அளவிற்கு பேப்பர்மாரி. என் தலையில் ஒரு கூடை பேப்பர். சில டிசைன்கள் மிக பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தியது. மெல்லிசை மன்னரின் பெயர் வரும் போது ஒரு வளையம் மற்றொரு வளையத்திலிருந்து வெளியேறுவது போல அமைக்கப்பட்டிருந்தது அதில் ஒன்று. டைட்டில் முடிய படம் ஆரம்பிக்கிறது

    முதலில் சிறுவர்களாக இருக்கும் சகோதரர்கள் போட்டியில் பங்கு பெறுவது இடம் பெறும் அதைப் பற்றி விலாவாரியாக எழுத தேவையில்லை. காரணம் அனைவருக்கும் கதை தெரியும் மேலும் இந்த படத்தை பற்றி மிக விளக்கமாக சாரதா இந்த திரியிலே எழுதியிருக்கிறார். நான் சொல்ல வந்தது என்னவென்றல் இந்தி படம் பார்த்த எங்களை போன்றவர்களுக்கு நடிகர் திலகம் திரையில் தோன்றுவதற்கு சிறிது நேரம் ஆகும் என்று தெரியும். ஆனால் அது தெரியாத ரசிகர்கள் எப்படி ரீயாக்ட் பண்ணுவார்கள் என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் இயக்குனர் சி.வி.ஆர் அந்த எண்ணமே தோன்ற விடாமல் விறுவிறுப்பாக கொண்டு செல்வார். மூத்த மகன் பெரியவனாகி பாலாஜியாவது, விஸ்வம் சிங்கப்பூரிலிருந்து வைரங்களோடு கிளம்பியிருப்பான் என்று சொல்வது, மனோகர் வருவது, காரில் ஏறப்போகும் அவரிடம் சிவப்பு விக் அணிந்த கையாள் உதடே அசையாமல் போலீஸ் அந்த காரிலே உன்னை பாலோ பண்ணுது என்று சொல்லிவிட்டு போவது, மனோகர் டென்னிஸ் ராக்கெட்டை கிளப்-ல் மாற்றுவது, மது விலக்கு சட்டதின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு மேஜர் அவரை மடக்குவது என்று படு சுவராஸ்யமாக படம் போக, செல்லில் அடைக்கப்படும் மனோகர் சிகரெட்டை பற்ற வைக்க லைட்டரை தேட, கோட் அணிந்த ஒரு கை லைட்டரோடு நீள, தியேட்டரில் இடி மின்னல் பிரளயம். சேரில் உட்கார்ந்திருந்த மொத்த மக்களும் இப்போது அதன் மேல் ஏறி நிற்க, அடுத்த சில நிமிடங்களுக்கு யாருமே படத்தில் என்ன நடந்தது என்று பார்க்க முடியவில்லை என்பது தான் உண்மை. நடிகர் திலகத்தின் அறிமுக காட்சி அதற்கு முன்பு அவ்வளவு அமர்க்களமாக அமைந்ததில்லை. அந்த காட்சியின் தொடர்ச்சியாக இரண்டு மூன்று ஜெயில் காட்சிகள் வரும். அடுத்து சின்ன சண்டை காட்சி. மறுபடியும் இங்கே அதகளம்.

    (தொடரும்)

    அன்புடன்

  2. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •